28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன் தன்னைப்
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் நாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய், பறையேலோர் எம்பாவாய்
முதல் பாட்டில் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று சொன்ன, ப்ராப்ய - அடைவதற்கு எளியவன், ப்ரபாவ - அடைவது நிச்சயம், என்ற சித்தாந்தங்களை விரிவாக 28, 29 ம் பாசுரங்களில் பேசுகிறார்கள்.
நோன்பு செய்வதற்கு என்னுடைய பறை (சங்கு நாதம்) தேவை தான். அது ஓன்று தான் உங்கள் குறிக்கோளோ?, என்று கண்ணன் வினவிடமும், கோபியர்கள் பதிலுரைக்கிறார்கள்.
ஊராரின் ஒப்புதலை நோன்புக்குப் பெறுவதற்காக நாங்கள் சொன்ன ஒரு காரணம் தான் 'பறையே' அன்றி, உன் திருவடி சம்பந்தமும், கைங்கர்யமும் தான் நாங்கள் புருஷார்த்த சித்தி பெற முக்கியக் கருவிகள். இதை நாங்கள் அடைய நீயே கருவியாக வேண்டும் என்று பணிக்கிறார்கள் கோபியர்கள்.
கறவைகள் பின் சென்று - இடை விடாது உன் பேரைப் பாடி தியானித்து, அர்த்த ஞானங்கள் ஏற்பட்டு, கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளைத் தவறாது பின் பற்றி, எதன் மேலும், யார் மேலும் பகைமை அகற்றி, மனத்தால் சுதந்திரர்கள் ஆகி, பொருட்களிலிருந்து மனதை விடுவித்து ஆத்மப் ப்ரணவமாக்கி, ஆத்ம யோகம் கை வந்து, அந்தர்யாமிகளாகி (மனத்தளவால் மட்டுமே வாழ்ந்திடும் பக்குவம்), பெருமாளின் ஸ்வரூபங்களை காதினால் கேட்டும் மனநம் செய்தும், அவனை எப்போதும் அர்ச்சித்துக் கிடக்கும் நிரந்தரர்களாகி, இப்படிப்பட்ட விரிவான வழி முறைகளால் உன்னைப் பெறுவதைத் தான் சாத்திரங்கள் பேசுகிறது.
இவற்றைப் பின் பற்றிட ஆச்சார்யர்களைத் தேடிப் போக வழி இல்லாமையினால், பசுக்களையே நாங்கள் ஆச்சார்யர்களாய் வரித்திருக்கிறோம். வசிட்டர் போன்ற மகா முனிகளுக்கு சாதாரண மனிதர்களின் ஒப்பீட்டில் ஞானம் மிகுந்து கிடப்பதை போலே, எங்களுடன் ஒப்பிட்டால், பசுக்களுக்கு ஞானம் மிக அதிகம், என்கிறார்கள் கோபியர்கள். அதனால் தான் நாங்கள் பசுக்களின் பின் சென்று கிடக்கிறோம்.
'கானம் சேர்ந்துண்போம்' - பசுக்கள் உலவுகின்ற புள்/நீர் நிலைகள் மிகுந்த, நைமிசாரண்யம், தண்டகாரண்யம், பத்ரிகாஸ்ரமம் போன்ற கானகங்களில் எப்படி சாதுக்கள் ஒதுக்கி இருக்கின்றனரோ, அது போலவே நாங்களும் ஒதுங்கி, பசுக்கள் புல் உணவைப் புசிக்கும் போதில், கிடைத்ததை நாங்களும் உண்டு களிப்போம்.
'அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து' - விதுராதிகள் போல பிறப்பாலும் எங்களுக்கு ஞானம் இல்லை. வளர்ந்தும் ஞானம் பெற வில்லை. தாங்கள் செய்யும் எந்தச் செயலாலும் கர்ம ஞான பக்தி வரவில்லை என்கிறார்கள். எங்களை யாரும் அறிவுடையவர்கள் என்று கூறிட்டால் அவர்கள் அறிவு ஹீனர்கள்.
'உன்தன்னைப் பிறவிப் பெரும்தனைப் புண்ணியம் நாமுடையோம் ' - பிறப்பாலோ வளர்ந்த காரணத்தாலோ நாங்கள் அறிவிலிகள் ஆனாலும் எங்களுக்கு எதுவும் குறைவில்லை. எங்களின் பெருமையும் ஐஸ்வர்யமும் கண்ணா நீ எங்கள் குலத்தில் எங்களுக்குச் சமனாகப் பிறந்தது தான். எங்களின் பேறும், உபாயமும் நீ ஒருவனே தான். 'உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே'
'ஞானிகள் எனக்கு மிகவும் அன்யோன்ய மானவர்கள்' என்று பின்னர் கீதையில் சொல்லப் போகும் நீ எப்படி அறிவில்லாத எங்களோடு ஒட்டிப் பிறந்தாய். பொதுவாக ஊரார், இருப்பவர்களிடம் சென்று உறவு கொள்வார்கள். நீ எப்படி ஞானம் துளியும் இல்லாத எங்களைத் தேடி வந்து சஜாதியானாய் அவதரித்தது தான் எங்கள் ஏற்றம்.
வெளிப் பொருட்களை வேண்டினால் நீ கண்டிப்பாகக் கொடுப்பாய். உன்னையே நீ எங்களுக்குக் கொடுப்பதை விட உயர்ந்தது ஏதுமுண்டோ.
ஸ்வ கத சுவீகாரம் (சித்த சாதனம்) என்பது நாம் சென்று ஒன்றைப் பற்றுவது. பர கத ஸ்வாகதம் என்பது நாம் விரும்பிய பொருளோ நபரோ தாமே நம்மிடம் வந்து சேர்வது. அதை அடைய பெற்ற எங்களை விட பாக்கியர்கள் யாரிருக்க முடியும்.
'குறை ஒன்றுமில்லாத கோவிந்தா' - நீ எந்தக் குறையும் அற்றவன். எங்கள் அறிவில்லாத குறைகளை நிரப்பிடும் வல்லவன். எங்களிடம் உள்ள அறிவிலிப் பள்ளத்தை நிரப்பிடும் மேடு நீ.
'கடை யாவும் கழி கோலும், கையிலே பிடித்த கண்ணிக் கயிறும், கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும், மறித்துத் திரிகிற போதில் திருவடிகளில் கிடந்து ஆர்பரிக்கிற கழல்கள் சதங்கைகளும், குளிர் முத்தின் கோடலுமாய் நிற்கிற, உபாய வேஷத்தை 'கோவிந்தா' என்கிறார்கள்.
'உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' - கண்ணா உன்னோடு ஏற்பட்ட உறவு நாங்களே வேண்டாம் என்றாலும் அழியாதது. நீ வேண்டினாலும் அழிக்க முடியாதது. 'நான் உன்னை அன்றி இலேன் கண்டாய். நீ என்றி இலை'.
நீ கோவர்த்தன மலையை எங்களுக்காகத் தாங்கி நின்ற போது, எங்களுக்குச் சந்தேகம் வந்தது 'இது வேறு யாரோ?' என்று. நீ உடனே சொன்னாய். 'நான் பந்துவாய்ப் பிறந்தேன் உங்களுக்கு, வேறொன்றும் நினையாமல் கொள்ளுங்கோள்' . நீ கோவிந்தன் நாம் கோபிகைகள், நம் உறவை எப்படி பிரிக்க இயலும்.
'அறியாத பிள்ளைகளோம்' - எங்கள் பால்யத்தினால் சொல்லுவது அறிந்திலோம்; அளவுக்கு அதிகமான ப்ரேமையினால் சொல்லுவது அறிந்திலோம், எங்களால, பிறப்பினாலே, உன்னாலே அறிவிழந்தோம். 'அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றது' என்ற நாச்சியார் திருமொழியாய், கண்ணனின் அழகால் என் மகள் பித்தாகி விட்டாள், அதனால் அறிவிழந்தோம்.
'அன்பினால் உன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே' மிகவும் உரிமையோடு 'வா' 'போ' என்ற ஏக வசனத்தாலும், ஏசியும் பேசியதனாலும் கோபிக்காதே. ஒரே படுக்கையில் படுத்துக் கிடக்கும் போதில் ஒருவருக்கொருவர் கை இடித்தது, கால் இடித்தது என்பார்களோ. வைகுண்ட வாசனான உன்னை எத்தனை முறை பெயர் சொல்லிக் கூட்டிருப்போம்.
'இறைவா நீ தாராய் பறை ஏலோர்' எங்கள் தவறுகளை மன்னித்து யாம் வேண்டும் பறையையும், உனக்கு நாங்கள் செய்ய வந்த கைங்கர்ய பாக்கியத்தையும் தந்திடுவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்