உயர் பாவை - 28 - சதாரா மாலதி

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா…


பகைவரை வெற்றி காணும் சிறப்புடையவனே! கோவிந்தனே! என்று ஆரம்பிக்கிறது பாசுரம். பகைவரைத்தான் வெல்லுவார்கள் அதிலென்ன சிறப்பு இருக்கிறது? பகைவனுக்குத் தோற்றால் துப்புவார்களே! கூடவே ஒரு கோவிந்தா போடுவது எதற்கு? கோவிந்தன் எளியவன். மாட்டிடையன் பசுமேய்ப்பவன் என்று பொருள். அவனா பகைவனை வென்றெடுப்பவன்? இல்லை. கோவிந்தப் பட்டம் அவன் பெற்றது பகைவரை ஜெயித்ததற்கு அல்ல. அன்பரிடம் தோற்றதற்கு. தோல்விச்சிறப்புடையவன் தான் கோவிந்தன். ஊடலில் தோற்றாரே வென்றார் என்பது போல நண்பரிடம் அவன் தோற்றுத் தோற்று வெற்றி காண்பவன். 


என் அன்பான பசு மேய்ப்பானே! என்னை ஜெயிக்க நான் என்ன பகையா உனக்கு? உன்னால் என்னிடம் ஜெயிக்க முடியாது. நீ தோற்கத்தான் போகிறாய். என்றாள் ஆண்டாள். நீ கொடுத்த பொருட்களையெல்லாம் அள்ளிக் கொண்டு சங்கு, பறை, பல்லாண்டிசைப்பார், விளக்கு, கொடி, விதானம் எல்லாம் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன் என்று நினைத்தாயா? உன்னைப் பாடிப் பறைகொண்டதற்கு அடையாளமாக நாடடங்க கொண்டாடும்படி எனக்குப் பரிசில் வேண்டும். எனக்குச் சூடகம் என்ற தலையணி வேண்டும், தோள்வளை என்ற வங்கி வேண்டும் தோடு வேண்டும் செவிப்பூ வேண்டும் பாடகம் என்ற பாத அணி வேண்டும் இன்னும் நிறைய அணிகலன்கள் வேண்டும். அதெல்லாம் நீ அணிவிக்க நான் அணிவேன் என் புத்தாடையை நீ தர நான் உடுத்துவேன் அதன்பிறகு நெய் முழுக சமைக்கப்பட்ட பால் சோற்றை நெய்யொழுகி முழங்கை வழியே வழியும்படி உன் சன்னிதியில் உன்னைப்பார்த்தவாறே சேர்ந்திருந்து மகிழ்ந்து சாப்பிட்டுக் குளிர்ந்து திருப்தியடைவேன் என்றாள் ஆண்டாள். இவ்வளவு தான் பாடல். 



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் 
நாடும் புகழும் பரிசினால் நன்றாக 
சூடகமே தோள் வளையே, தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


ஸ்ரீராமன் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளும்போது 'அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி' என்கிறபடி அயோத்திவாசிகள் எல்லாரையும் தன்னுடன் அழைத்துப்போனான். ஆனால் அனுமன் போக மறுத்துவிட்டான். 'நான் கட்டளையிடுகிறேன். நீ வந்து தான் ஆக வேண்டும்' என்றான் இராமன். அப்போது அனுமன் என்ன சொன்னான் தெரியுமா? 'பக்திஸ்ச நியதா வீர!பாவோ தாத்யத்ர கச்சதி' என்று முகத்தில் அடித்தாற்போல பதிலைச்சொன்னான். 'உன்னுடைய இந்த இராம விக்ரஹத்தில் என் பக்தி மிக உண்டு. உன் வைகுந்த மற்றும் வேறு வடிவங்களில் மனசு செல்லாது எனக்கு. வீரா! [உன் வீரத்தை என்னிடம் வைத்துக்கொள்ளாதே!]' என்றான். சொல்லின் செல்வன் பேச்சுக்குக் கேட்கவேண்டுமா? வீரா என்று அனுமன் அழைத்தது அன்பரை வெல்லமுடியாத பலவீனமுடைய இராமனைக் கேலி செய்ய. என் கிட்டே உன் வீரம் செல்லுமா? உன் வீரத்தை இராவண கும்பகர்ணரிடம் வைத்துக்கொள் என்று அர்த்தம் அந்த வீர! என்ற வார்த்தைக்கு. பூலோகத்தில் இருந்து இராமன் வசித்த மண்ணை முகரவும் இராம நாமம் கேட்டு மயிர்க்கூச்செறியவும் இராமன் ஆராதித்த அரங்கநாதனை சேவித்திருக்கவும் முடிவுசெய்த அனுமனை இராமனாலேயே மனம் மாற்ற முடியவில்லை. தன்னைவிரோதித்த கெளரவர்களை அழித்த கிருஷ்ணன் தன்னிடம் அன்பாயிருந்த பாண்டவர்களுக்குத் தோற்றுத்தான் பொய் பேசியும் கபடம் செய்தும் சபதம் மீறியும் கெட்ட பெயர் எடுத்தான். நண்பர் அன்புக்குத் தோற்று தேர்ப்பாகன் ஆனான். 'நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத் தொடர்ந்தாரணம் முழங்க பஞ்சவர்க்குத்தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே! நாராயணா என்னா நாவென்ன நாவே!' என்றபடி கழுத்தில் ஓலை கட்டிக்கொண்டு ஒரு பூனைக்குட்டி போல தூது நடந்தான். இராமன் சுக்ரீவன் அன்புக்குத் தோற்று விதியல்லாத வழியில் வாலிவதம் செய்து பலர் வாயில் விழும்படி சர்ச்சையில் மாட்டிக்கொண்டான். இதெல்லாம் அவன் தோற்றுச்செய்த செய்கைகள் அல்லவே? அன்பர்களையும் தோழர்களையும் அவன் ஜெயித்ததாகச் சரித்திரமேயில்லையே! 


காதலில் தோற்று மீண்டும் இன்னொரு பதிவு செய்யப்போகும் கண்ணனே! நீ கூடாரை மட்டுமே வெல்பவன் என்ற சிறப்புடைய அந்தச்சிறப்புக்காகவே கூட மாட்டோம் என்று விலக்காத பசுக்கூட்டங்களைக் காப்பாற்றி மேய்க்கும் தொழில் ஏற்ற கோவிந்தன் ஆனதல்லவா கிருஷ்ணாவதாரம்? என்பது தொனிக்க ஆண்டாள் 'கூடாரை [மட்டும்] வெல்லும்சீர்க்கோவிந்தா!' என்றாள். 


பக்தர்களுக்குப் பகவான் செய்யும் நன்மை நாட்டிலுள்ளார் போற்றும்படி அபரிமிதமாக இருக்கும். இராவணனால் அனுப்பப்பட்ட இரு ஒற்றர்கள் [சுக சாரணர்] இக்கரைக்கு வந்து வானரப்படையின் வலிமையைக் கண்டுகொண்டு இராவணனிடம் போய்ச்சொல்லும்போது 'உன் முடி சித்திக்கிற தெய்வத்துக்கும் முடிகொடுக்கும் பெருமை பெற்ற இராமன் உன் தம்பி விபீஷணனுக்கு லங்காராஜ்ய பட்டாபிஷேகம் செய்தாகிவிட்டது. இனி நீ கெட்டாய்!' என்று இராவணன் உயிருடன் இருக்கும்போதே தைரியமாகச் சொல்லி இராமனைப் புகழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவு விமரிசையானது பகவான் தன் அடைக்கலத்துக்குச் செய்யும் பரிசில். நாடு புகழும் பரிசில் அது. எதிரித்தரப்பு ஒற்றனே புகழ்ந்திருந்தால் நாடு புகழக் கேட்பானேன்!


அப்படித்தான் சத்யபாமை மடியில் கிருஷ்ணன் தலை வைத்துப் படுத்திருந்தான். அதே இடத்தில் திரெளபதி மடியில் அர்ச்சுனன் தலை அழுந்தப்படுத்திருந்தபடி தன் காலை கிருஷ்னண் கால் மேல் வாகாகப் போட்டு அனுபவித்துப் பேசிக்கொண்டிருந்தான். அந்த சமயம் சஞ்சயன் அங்கு வர உள்ளிருக்கும் அன்னியோன்னியத்தைக் கலைக்காமல் இருந்தபடி சஞ்சயனை உள்ளே வரப் பணித்தான் கிருஷ்ணன். அர்ச்சுனனிடம் சொல்லவும் சொன்னான். 'இங்குள்ள உறவைப் போய்ச் சொல்லட்டும் துரியோதனனிடம். அவன் தெரிந்து கொள்ளட்டும் தனக்கு வரப்போகிற தோல்வியை' என்று பிரகடனம் செய்தான் கிருஷ்ணன், அன்பனுக்குத் தான் தரும் 'நாடு புகழும் பரிசை'. சுதாமாவுக்குக் கொடுத்த பரிசு நாடறியும் அல்லவா? 


அப்படி நாட்டார் புகழும்படி எனக்குப் பரிசாக கைவளை, தோள்வளை, தோடு, புறங்காதின் சிறு தோடு, கால் கொலுசு, மற்றும் பல அணிகளைத்தா. நீ உடுத்துக் கழித்த பீதகவாடை தா. இவ்வளவு நாளும் உன்னைப்பிரிந்து நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றிருந்த வைராக்கியம் விடுத்து இன்று அணிவோம் உடுப்போம் சாப்பிடுவோம் என்றிருக்கிறேன். என்பது ஆண்டாள் வெளிப்பாடு. 


கூடார் என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பகவானை அறியாதவர்கள், அறிந்தும் பயப்படுகிறவர்கள், அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள், அறிந்தும் பகவானை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள் என்று கூடார் நான்கு வகைப்படுவர். அவர்கள் அனைவரையும் ஜெயித்து விடுகிறான் பகவான். பக்தர்களிடம் மட்டும் தோற்கிறான். 


நாட்டார்கொண்டாடும்படி தன்னைத்தோற்றுவித்த பக்தனுக்கு விரும்பிப் பரிசு வழங்குகிறான். அனுமானுக்கு இந்திரன் தந்த முத்துமாலையைப் பிராட்டி பரிந்துரைக்க இராமன் பூட்டினாற்போல. அப்படி ஒரு பரிசிலை பிரம்மாலங்காரம் போல தனக்கு செய்விக்கும்படி ஆண்டாள் வேண்டிக்கொள்கிறாள். [நகைக்கடை ஆசை பரம் வரை பாய்கிறது. This is passion, I say, Real passion for everything] கைவளை, தோள்வளை, தோடு, கர்ணபூஷணம், கால்கொலுசு இன்னும் பலப்பல. பிறகு கூறை வேண்டும், திருப்பரியட்டமாய் அவன் உடுத்திக் களைந்தது. பின் நெய்ப்பொங்கலைச்சொன்னாள். நம்பி திருவழுதி வளநாடு தாசர் கேட்டார் 'நெய் படாதோ?' என்று. பட்டர் பதில் சொன்னார். 'இவர்கள் வாயில் சோறு தொங்கினாலன்றோ நெய் தொங்குவதற்கு? பிரிந்து பட்ட துயர் தீர கூடித் தொட்டிருக்கை தான் நோக்கமே தவிர பாலோ சோறோ நெய்யோ சுவையோ இவர்களின் புத்திக்கு எட்டாது' என்றார். 


இளித்தவாயன் தான் சொன்னதெல்லாம் செய்ய சரியானவன் என்பதால் கோவிந்தனைக் கூப்பிட்டாள். 'இட்டமான பசுக்க'ளை மேய்ப்பவன். கன்று மேய்த்தினிதுகந்த என்றபடி காலிமேய்க்கவல்லாய் என்றபடி பேசாத ஜந்துக்களைக்காப்பாற்றும் நீர்மை எல்லாருக்கும் பரவசமாகும்படி கண்ணன் எடுத்த யுக்தி. [ஜாலிக்கு அது ஒரு சாக்கு] பசு மேய்க்க ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அதன் பின்னால் போனால் போதும். அப்படியே பசு மேய்க்கப்போனதாக முக்கிய சந்தர்ப்பங்களில் சாக்கும் சொல்லலாம். குழலும் ஊதலாம். முக்கியமானவர்களைச்சந்திக்கலாம். எனவே 'ஆவி காத்திராதே உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும்படி' ஒரு பறை என்ற சாக்கு கோபாலரைத்தொட்டு எனக்குக்கிடைத்தது என்றாள் ஆண்டாள், உன்னைப்பாடிப்பறை கொண்டு என்ற வரிகளில். அதனால் வந்த சன்மானம் நான் சூடிக்கொடுத்த மாலைகள் போல உயர்ந்து இருக்க வேண்டும். வாழ்வர் வாழ்வெய்தி என்றாற்போல பலப்பலவே யாபரணம்; 'காரை பூணும், கண்ணாடி காணூம்தன் கையில் வளை குலுக்கும்' என்றாற்போல் நான் அலங்கரித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கண்ணாடிக்கிணற்றில் பார்த்துக்கொள்ள அலங்காரம் வேண்டும். வரிவளையால் குறைவிலமே, மேகலையால் குறைவிலமே எண்ணில் பலகலனும் ஏலுமாடையும்.... என குறைவின்றி ஆடையுடன் எனை அலங்கரி உன் கையால் தொட்டு. இவ்வளவு நாளும் சீதை நகைகளைத் துணிக்கிழிசலில் கட்டி விசிறியெறிந்ததைப்போல எதுவும் அணியாமல் இருந்தேன். இன்று நீ அணிவித்து அணியப்போகிறேன் என்றாள்.

கீழ்ப் பாசுரத்தில் சாருப்யம் என்ற பகவத் சாம்யம் சொல்லப்பட்டது. அதன்பின் விரஜை என்கிற தேவலோக நதியில் 500 அப்சரஸ்கள் ஜீவனை நீராட்டி பஞ்சாலாங்க்ருதம் என்கிற விதத்தில் மாலை, மை, மணத்தூள், ஆடை, ஆபரணம் கொண்டு அலங்கரித்து அக்கரை சேர்வித்து ஷாட்குண்யன்னம் என்கிற பரமான்னத்தைப் புசிக்க வைக்கிறார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. சாயுஜ்யம் சேர்கிற உயிர்களுக்கு இது பெருமாளாலேயே செய்யப்படும் என்பது எதிர்பார்ப்பு. ஜீவனுக்கு பரமன் உணவாகவும் பரமனுக்கு ஜீவன் உணவாகவும் ஒருவருக்கொருவர் போக்கியமாவார்கள். லோகாயதமான கூடலும் இதுவே.


கோயில்களில் உத்சவங்களை நடத்தி எல்லாரையும் வரவழைப்பது இந்தக் கூடியிருந்து குளிர்ந்து அனுபவத்தைக் கோடி காட்டவே. அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: மோட்சத்தில் முக்தனான ஜீவன் தான் பகவானுக்கு அன்னம் போக்யப்பொருள் என்றும், பகவான் தனக்கு அன்னம்போக்யப்பொருள் என்றும்சொல்லிக்கொள்கிறான். முக்தஆத்துமாவினால் எல்லாக் கைங்கர்யமும் செய்வித்துக்கொள்வது பகவானுக்கு சுகமாகவும் பகவானால் எல்லாம் பெருமைப்படுத்தப்படுவது முக்தனுக்கு சுகம் எனவும் சொல்லப்படுகிறது. இதுவே ஆண்பெண் உறவின் இரகசியமும் அல்லவா? இதில் அநுயோகம் என்ற அந்தர்யாம்யாராதனம்நடந்தது என்றும் கொள்ளத்தகும். 'உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு, தொடுத்த துழாய் மலர்சூடுமித்தொண்டர்களோம்.... 


நெய்யிடை நல்லதோர் சோறும் கையடைக்காயும் கழுத்துக்குப்பூணும்காதுக்குக்குண்டலமும்....' என்றபடி சாயுஜ்யம் அனுபவித்ததையே கூடியிருந்து குளிர்ந்து என்று சொன்னாள் ஆண்டாள். 
தத்துவார்த்தமாக பறை என்ற புருஷார்த்தத்தோடு, சூடகம் கேட்டது காப்பு என்ற பகவத் கவசம் என்றும், தோள்வளை என்றது துவாதச முத்திரை எனப்படும் திருவிலச்சினை [திலகம் அல்லது நாமக்குறி] என்றும் தோடு என்றது திருமந்திரம் என்றும் செவிப்பூ என்றது த்வயம் என்ற ராமமந்த்ரம் என்றும் பாடகம் என்றது பகவத்கீதை [நடைக்கு இலக்கணம் - காலிலணிவது] என்றும் தத்துவப்படும். 


கிருஷ்ணாம்ருத நீராட்டம் என்றார்களே ஆரம்பம் முதல் .. அது முடிந்து முழு சாயுஜ்யம் கிடைத்து ஆண்டாள் தன் லட்சியத்தில் வெற்றி பெற்றாள். 


ஒவ்வொருபாசுரமும் அடுத்த கட்டத்துக்குப்போனதை வைத்து முதல் கட்டம் நல்லபடி முடிந்ததை சூசகமாகப்புரிந்து கொள்கிறோம். கீழ்ப் பாசுரத்தில் பறை முதலிய பொருட்களைக் கேட்டாள். அடுத்து ஆடை அலங்காரத்தைக்கேட்டதை வைத்து முன்னால் கேட்டதெல்லாம் கிடைத்து விட்டது என்றறிந்தோம். அதே போல் தான் இந்தப்பாசுரமும். 


கதை முடியவில்லை. இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது ஆண்டாளுக்கு. 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை