திருப்பாவை திவ்ய பிரவாகம் - 29 - கண்ணன் ரங்காச்சாரி

27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் 
நாடும் புகழும் பரிசினால் நன்றாக 
சூடகமே தோள் வளையே, தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கண்ணன் சொல்கிறான். நம் போல் ஒரு ஈஸ்வரன் உண்டான பின் தான் நம் பாஞ்சஜன்யம் போன்ற சங்கும் உண்டாக முடியும். 'போல்வன சங்கங்கள் என்ற பல சங்குகளைக் கேட்டீர்களே.
உங்கள் நோன்புக்கு உதவிடும் வண்ணம், நம் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச் சங்கையும், ஆநிரை மேய்க்கும் போது அவை இல்லம் திரும்பிட யாம் ஊதும் சங்கையும், யாம் உலகமளந்த போது ஜாம்பவான் ஊதிய ஜெயச் சங்கையும், பெரும் பறையான, நாம் லங்கையை அழித்த போது ஜெயம் சாற்றிய சங்கையும், திருவரையில் குடக் கூத்தாடிய போதில் ஊதிய சங்கையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பல்லாண்டு பாடப் பெரியாழ்வாரையும், நம்மோடு உம்மை இணைத்துக் காப்பிட்டுப் பாடிட நம்மாழ்வாரையும், கோல விளக்காய் நப்பின்னை பிராட்டியையும், கொடிக்கு பெரிய திருவடியையும், விதானமான மேல்கூரைக்கு நம் அனந்தாழ்வானையும் எடுத்த்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் உங்களுக்கு யாம் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டோ என்று கேட்டான்.


கோபியர்கள் சொன்னார்கள், நோன்புக்கு நீ சொன்னவை போதும் கண்ணா. நோற்ற பின் உன்னிடம் பெரும் சில அந்தரங்க சத்தான விஷயங்களும் உண்டு, அதையெல்லாம் நீ தந்தருள வேணுமென இப்பாடலில் விளிக்கிறார்கள்.

'கூடாரை வெல்லும்' - கண்ணன் சொன்னான் 'எளியவரும் இயல்பினன்' என்று என்னை நீங்கள் சொல்லிடவும், என்ன வேணுமோ கேளுங்கள் என்று நாம் சொல்லப்போக, நம்மையும் நம்முடைய சர்வஸ்த்துவத்தையும் உமதாக்கிக்கொண்டு, உங்களை எளிதாக வென்றிடலாம் என்றிருந்தவனை, உங்கள் அன்பினால் தோற்கடித்து விட்டீர்கள்.

ப்ரதி கூலர்களை (எதிரிகளை) வெல்லக் கூடியவன் அனுகூலர்களிடத்தில் (அன்புடன் இருப்பவரிடம்), தோற்றுப்போய் தாசனாகிக் கிடப்பான் என்ற சித்தாந்தம்.

பரசு ராமர் 21 தலைமுறை க்ஷத்ரியர்களை வென்றவர், க்ஷத்ரிய புத்திரனானவன் எம்மாத்திரம் என்ற இறுமாப்போடு, எம்பெருமானைத் தோற்கடிக்க வந்தவர், தன்னுடைய வில்லை அவரிடம் கொடுத்து விட்டு, நானோர் அந்தணன் என்று சொல்லி நமஸ்கரித்துப் போனார்.

'ஒரு காலும் கூடேன்' என்ற ராவணனை வெட்டி மாய்த்தவன், விபீஷணனின் அன்பால் தோற்றுப்போய் அவனுக்கு அபிஷேகப் பிரதானம் செய்வித்தவன்.

கிருஷ்ணன் காலிலே வணங்க மாட்டேன் என்ற துரியோதனனைக் கொன்றவன், நீ சொன்னதெல்லாம் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு, இரவு பகலல்லாது உழைத்துத் தேரையும் ஒட்டி நின்றான்.

அஞ்ஞானிகளையே, ஞானிகளாக்கிடும் கருணை, ஞானிகளுக்கு என்னவெல்லாம் செய்யும்.

'கோவிந்தா' - கன்று மேய்த்துக் கழித்தவன். 'நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து, பெண்களோடே கலந்து வந்தால், மாதா பிதாக்கள் தாழ்ந்து வந்ததென்' (கோபியர்களோடு சென்று நாலு இரண்டு நாட்கள் சல்லாபித்து வீட்டுக்கு வந்தவனை) என்று கேட்டிடவும், பசு மேய்க்கப் போனேன் என்ற பொய் உரைத்திடும் 'கோக்களின்' அன்பன்.

'உன் தன்னைப் பாடி' - உன்னைப் பாடுவதினாலேயே நன்மை பெற்றோம் என்னும் வகையில் பாடி, நாங்கள் தோற்கக் கூடாது என்பதற்காக உன்னைப் பாடி, எங்கள் ஆவியைக் கையில் பிடித்துக் கொண்டு உன்னை எண்ணிப் பாடி, 'பறை கொண்டு' யாம் வேண்டுவனவற்றைக் கண்ணனிடமிருந்து பெற்றுக் கொண்டு.

'யாம் பெரும் சம்மானம்' - பிராட்டிக்கு பெருமாள் செய்ததைப் போல, நாங்களும் அவனுடைய சன்மானத்தைப் பெற வேண்டும். பிராட்டிக்கு தன் தோளின் மாலையை இட்டு நில் என்று சொல்லி அவள் காலைப் பிடித்தது அவளும் பதிலுக்கு இவன் காலைப் பிடித்தது.

அவள் அவர் காலைப் பிடித்தது கைப் பிடித்தவர் என்பதால்; அவர் அவள் காலைப் பிடித்தது அவளுடைய அன்புக்கு ஆளுமைப் பட்டதால். அவன் பற்றிய பாராட்டுக்கள் அவனுடைய ஸ்வரூப ஏற்றங்களால்; இவள் பற்றியது இவளுடைய அன்பும் ஈர்க்கும் குணங்கள் பற்றியது. வெளி முற்றத்திலே அவனோடு, நேருக்கு நேர் சம்பாஷிக்கும் பாக்கியம் பெற்றது கோபியர்க்கு 'சம்மானம்' என்கிறார் பராசர பட்டர்.

'பதி சம்மானிதா சீதா' - 'பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார்'. என்று கூரத்தாழ்வானும் பட்டரும் பணித்தனர். கடினப்பட்டு உழைப்பவனுக்கு சம்பளம் போன்றது சன்மானம். குளிரிலும் பனியிலும் வேதனை கொண்ட கோபியருக்கு கண்ணன் அருளும் அன்னியோன்னியம் தான் சம்மானம்.

'நாடு புகழும் பரிசினால் நன்றாக' - பெற்றோரிடமும் ஊராரிடமும் பெற்ற அவமானங்களை மறந்திட அவர்கள் பாராட்டினைப் பெற வேண்டும். 'பாரோர் புகழ' என்னும் படியாய் மாற வேண்டும்.

கண்ணனின் திருவாயிலில் காண வந்த சஞ்சயனை 'நம் இருப்பு கண்டு உகப்பானும், உகவாதார் மண்ணுண்ணும்படி இவ்விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன், புகுற விடுங்கள்' என்றானாம். ஒருவருடைய இயற்கைத் தகுதிகளும் திறமையும் மற்றவர்களால் பாராட்டு பெறுவது தான் பரிசாகும். கண்ணனுடைய பாராட்டையே பெற்ற சஞ்சயன் எவ்வளவு உயர்ந்தவன். ஒருவனுடைய கூடாரத்தில் இருந்து கொண்டே, எதிரிகளின் பராக்கிரமங்களை பேசிடும் தைரியம் கொண்டவன்.

'நன்றாக' - கண்ணனுடைய திவ்ய அனுக்ரஹத்தோடே பெறுதல். வாழ்த்துப் பெறுதல் அவனுடைய ஸ்வரூபம். வாழ்த்து அளித்தல் கோபியர் ஸ்வரூபம்.

'சூடகமே' - கையில் அணியக்கூடிய ஆபரணம். ஈர்ப்பினால் கண்ணன் பக்தர்களின் கையைத் தலை மேல் வைத்துக் கொள்வதில் ஆனந்திப்பானாம்.

'தோள்வளையே' கையில் வளையைப் பூட்டிய உடனே, பக்தர்களை கண்ணன் அணைக்க முற்படும் போதில் அவனுடைய தோளில் உரசிடும் ஆபரணம் 'தோள் வளை'. நோன்பிருந்து மெலியும் காலத்தில் அணிந்திராத தோள் வளையை, மகிழ்ச்சியினால் பூரித்து இப்போது அணிய விழைகிறார்கள்.

'தோடே, செவிப் பூவே' கர்ண பூஷணமான, கண்ணன் காதுகளுக்கு அணியும் ஆபரணம் தோடும், புஷ்பங்களும்.' 'கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்'. கண்ணனுடைய காதுகளில், தோட்டையும் புஷ்பங்களையும் கண்டவர்கள், கண்ணனுடைய இரண்டு தோள்களையும், அவன் அணைத்திட்ட பக்தர்களின் தோள்கள் இரண்டையும், சேர்த்து நான்கு தோள்களைக் காண்கிறார்கள்.

'பாடகமே' - அணைத்துத் தோற்றவர்கள், நெகிழ்ச்சியால் ஒருவர் காலை ஒருவர் பற்றிடுகையில் உரசிடும் காலுக்கு அணியும் கொலுசு போன்ற ஆபரணம். சூடகமே - பாடகமே, கையையும் காலையும் ஒருவருக்கொருவர் பிடித்து இடைப்பட்ட காரியங்களை நடத்திக் கொள்ளுதல். ஆபரணங்கள் மகிழ்ச்சிகளை இரட்டிப்பாக்க உதவும் சாதனங்கள்.

'என்றனையப் பல் கலனும் யாம் அணிவோம்' - பலப் பல ஆபரணங்களோடு அவனையும் ஒரு ஆபரணமாக்கி அணிவது.' யாம் அணிவோம்', என்பதால் நாங்களணிவதனால் இன்னும் விசேஷமாக மிளிரும் ஆபரணங்களோடு சேர்ந்து மிளிர்வோம் என்பதாம். 'நிறை புகழ் ஆய்ச்சியர்' என்றும் 'அணியிழை ஆய்ச்சியர்' என்றும் பேசப் பெற வேண்டும் என்று விழைகிறார்கள்.

'ஆடையுடுப்போம்' - எங்கோ தூரத்தில் இருந்து கொண்டே திரௌபதிக்கு ஆடை கொடுத்தவனான கோவிந்தன் அருகில் இருக்கும் போது ஆடை கொடுப்பான் என்பதால், அவனுடைய வேர்வை சுமந்த திருப் பரிவட்டத்தை இடையை மறைக்க ஆடையாய் வேண்டுகிறார்கள். 'பீதக வாடை உடுத்து', என்னும் அவன் உடுத்திக் களைந்த ஆடைகளை உடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இவர்கள்.

'அதன் பின்னே பால் சோறு' - ஆடை அணிகலன்கள் அணிந்து அதற்குப் பின்னே பால் சோறு. நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சபதம் கொண்டவர்கள், நெய்யையும் பாலையும் கொண்ட பாற்சோறு பற்றி பேசுகிறார்கள். இவர்கள் நோன்பிற்க்காக தவிர்த்த காரணத்தால், ஆயர் பாடியில் நெய்யையும் பாலையும் கொள்வாரில்லை. நீர் கலக்காது, முழுதும் பாலினால் செய்த சோறு. பாலும், சோற்றுக்கு மூடி கவிழ்த்தது போல நெய்யும் மிகுந்து கலந்திருப்பதால் சோற்றைத் தேட வேண்டியிருந்ததாம்.

'முழங்கை வழி வாற' - மனத்திலே பக்தி பெருகி முழங்கை வழியாக வழிகை. மனம் நிறைந்திருக்கும் போதில் வயிறு பசிப்பதில்லை.

'கூடி இருந்து' - பிரிந்து பட்ட துயரங்கள் எல்லாம் தீரக், கூடி இருத்தல். 'அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம்அன்னம் நாத:' என்று ஒருவொருடொருவர் அன்போடும் அரவணைப்போடுமிருத்தல்.

'சோச்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபச்சிதா' - என்ற கூடியிருந்து பரம்பொருளைச் சிந்தித்து மகிழ்தல் என்னும் சித்தாந்தம் இப்பாடலில் விவரிக்கப் படுகிறது.

'குளிர்ந்து' - பிரிவினால் ஏற்பட்ட வெம்மை நீங்கிக் கூடியதால் குளிர்ந்த மனம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை