சனி, 11 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 85

நான்காவது ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்


(ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவிர்ப்பவித்தலும், தக்ஷாதிகள் (தக்ஷன் முதலியவர்கள்) அவனை ஸ்தோத்ரம் செய்தலும், அவன் தக்ஷரை கொண்டு யாகத்தை நடப்பித்தலும்.) 


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் ப்ரஹ்மதேவனால் ப்ரார்த்திக்கப்பெற்ற ருத்ரர் மனக்களிப்புற்றான் (மனம் இன்புற்றான், ஸந்தோஷப்பட்டான்). வாராய் மஹாபாஹுவாகிய விதுரனே! அந்த வ்ருஷபத்வஜன் (காளையை கொடியாக உடையவன்) சிரித்து ப்ரஹ்மதேவனைப் பார்த்து நான் சொல்லுகின்றேன், கேட்பாயாக என்று அவனை அழைத்து இங்கனம் மொழிந்தான்.


ருத்ரன் சொல்லுகிறான்:- வாராய் ப்ரஹ்மதேவனே! நீ மேன்மையுடைய எங்களெல்லோர்க்கும் மேலானவன். தேவதேவனான பகவானுடைய மாயையால் மதிமயங்கப்பெற்று மூர்க்கர்களாயிருக்கின்ற (முட்டாள்களாயிருக்கின்ற) இந்த பாலர்களின் (சிறுவர்களின்) அபராதத்தை நான் சொல்லவில்லை. நான் அதை மனத்திலும் நினைக்கவில்லை. ஆனால், அபராதம் செய்த ஸமயத்தில் அதற்கு தண்டனை செய்தேனன்றி மற்றொன்றும் இல்லை. தக்ஷிணாக்னியில் தலை பஸ்மமாகப் (சாம்பலாகப்) பெற்ற தக்ஷப்ரஜாபதிக்கு ஆட்டின் முகம் போன்ற முகமுடைய தலை உண்டாகட்டும். மித்ரனுக்கும் தக்ஷனைப் போலவே தலை உண்டாகட்டும். பகனும் போன கண்கள் உண்டாகப்பெற்று யாகத்தில் தனக்கு நேரும் ஹவிர்பாகத்தைக் கண்களால் கண்டுகளிக்கட்டும். பூஷனும் பற்கள் முளைக்கப்பெற்று யஜமானன் கொடுக்கின்ற பிஷ்டத்தை (மாவு) அந்தப் பற்களால் புஜிப்பானாக. யாகத்தில் மிகுந்ததை எனக்கு பாகமாகக்கொடுக்க ஒப்புக்கொண்ட தேவதைகள் எல்லாரும் அடிபட்டு முறிந்த அங்கங்களெல்லாம் நன்கு நேரப் பெற்று ஆரோக்யம் அடைவார்களாக, அத்வர்யுக்களும் (யஜுர் வேதப்படி யாகம் செய்பவர்களும்) ருத்விக்குகளும் (யஜமானருக்காக யாகம் செய்பவர்களும்) அஸ்விதேவதைகளின் புஜங்களாலும் பூஷதேவதையின் ஹஸ்தங்களாலும் புஜங்களும் ஹஸ்தங்களும் உண்டாகப் பெறுவார்களாக. ப்ருகு, ஆட்டின் தாடிபோன்ற தாடிமீசைகள் முளைக்கப்பெறுவானாக.


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அப்பா! விதுரனே! அப்பொழுது மங்களஸ்வபாவனான ருத்ரன் இங்கனம் மொழிந்ததைக் கேட்டு ஸமஸ்த பூதங்களும் மனக்களிப்புற்று (மனம் இன்புற்று, ஸந்தோஷப்பட்டு) “நல்லது நல்லது” என்று மொழிந்தன. பிறகு ருத்ரனைப் பார்த்து “நீயே நேரில் வந்திருந்து கார்யங்களையெல்லாம் நடத்தவேண்டும்” என்று ப்ரார்த்தித்து இந்த்ரன் முதலிய தேவதைகளும், ப்ருகு ஹோமம் செய்த தக்ஷிணாக்னியினின்று தோற்றின ருபுதேவதைகளும் ருத்ரனோடும் ப்ரஹ்மதேவனோடும் கூடி மீளவும் அந்த யாகபூமிக்கு வந்து சேர்ந்தார்கள். 




மஹானுபாவனாகிய ருத்ரன் மொழிந்தபடியே அவரவர்க்கு அந்தந்த அங்கங்கள் உண்டாயின. பிறகு யாகபசுவின் தலையை தக்ஷனுடைய சரீரத்தில் ஒட்டவைத்தார்கள் அங்கனம் வைத்தவுடனே அவன் ருத்ரனால் வீக்ஷணம் செய்யப் பெற்று (பார்க்கப்பட்டு), உறங்கினவன் எழுந்திருப்பது போல் எழுந்திருந்து எதிரில் நிற்கின்ற ருத்ரனையும் பார்த்தான். முன்பு ருத்ரனிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) மனம் கலங்கப்பெற்றிருந்த தக்ஷப்ரஜாபதி அந்த ருத்ரனுடைய கண்ணோக்கத்தினால், சரத்காலத்து மடுபோல், மனம் தெளியப் பெற்றான். அந்த தக்ஷனுக்கு ருத்ரனை ஸ்தோத்ரம் செய்ய வேண்டுமென்னும் புத்தி உண்டாயிற்று. ஆயினும், அவன் பரலோகம் அடைந்த புதல்வியாகிய ஸதீயை ப்ரேமத்தினால் (அன்பினால்) நினைத்துக் கொண்டு சோகத்தினால் கண்ணீர் தளும்பப்பெற்று ஸ்தோத்ரம் செய்ய வல்லமையற்றிருந்தான். ப்ரேமத்தினால் (அன்பினால்) தழதழத்த அந்த தக்ஷன் மிகவும் ப்ரயாஸப்பட்டு மனத்தை அடக்கி ஸ்வாதீனப்படுத்திக் கொண்டு ஸ்தோத்ரம் செய்யும் திறமையமைந்த மதியுடையவனாகையால் ருத்ரனை ப்ரீதி அமைந்த பாவத்துடன் ஸ்தோத்ரம் செய்தான்.


தக்ஷர் சொல்லுகிறார்:- நான் உன்னை அவமதித்தேன். ஆயினும் நீ என்னை உபேக்ஷிக்காமல் அந்த அபராதத்திற்குத் தகுந்த தண்டனை செய்து என்னைப் புனிதமாக்கினாய், அற்ப ப்ராஹ்மணர்களிடத்திலும் உனக்கும் ஸ்ரீமாஹாவிஷ்ணுவுக்கும் அவஜ்ஞை (அவமரியாதை) கிடையாது. தமது வர்ணாஸ்ரம தர்மங்களைத் தவறாமல் விதிப்படி நடத்தும் ப்ராஹ்மணோத்தமர்களிடத்தில் உங்களிருவர்க்கும் எப்படி அவஜ்ஞை (அவமரியாதை) உண்டாகும்? உண்டாகாது. வாராய் மஹானுபாவனே! நீ என் விஷயத்தில் பெரிய அனுக்ரஹம் செய்தாய். நீ செய்த சிக்ஷையை (தண்டணையை) நான் சிக்ஷையாகவே (தண்டணையாகவே) பாவிக்கவில்லை. இது ஓர் பெரிய அனுக்ரஹமென்றே நினைக்கின்றேன். நீ ப்ரஹ்மஸ்வரூபனாகி ஸ்ருஷ்டியின் (படைப்பின்) ஆரம்பத்தில் ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையைத்தானும் அனுபவித்துப் பிறர்க்கும் உபதேசித்து அதை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு வித்யை, தவம், வ்ரதம் ஆகிய இவற்றை ஆசரிக்கும் (செய்யும்) தன்மையரான ப்ராஹ்மணர்களை முகத்தினின்று ஸ்ருஷ்டித்தாய். எல்லாரிலும் மேன்மையுடையவனே! ஆகையால் ப்ராஹ்மணர்களை ஸமஸ்த ஆபத்துக்களிலும் பசு மேய்க்கிறவன் போல் பாதுகாக்கின்றவன். வழிதப்பி போகின்ற பசுக்களைத் தடியால் அடித்து வழியில் திருப்பிக் கொண்டு வருவதுபோல், அபராதம் செய்தவர்களைச் சிக்ஷித்து (தண்டித்து) நல்வழியில் தவறாமல் நடக்கச் செய்கின்றாய். நான் தத்வத்ருஷ்டியில்லாதவன் (தத்வங்களை அறியாதவன்). ஆகையால் நான் உன்னைப் பொருள் செய்யாமை மாத்ரமேயன்றி ஸபையில் துர்ப்பாஷணங்களாகிற (கெட்ட வார்த்தைகளாகிற) பாணங்களால் உன்னை அடித்தேன். நீ மிகவும் பூஜிக்கத் தகுந்தவன். அப்படிப்பட்ட உன்னை நிந்தித்தமையால்தான் அதோ லோகங்களான (கீழ் உலகங்களான) நரகங்களில் விழப்பெற்றேன். அங்கனம் நரகங்களில் விழுகின்ற என்னை, எனது அபராதத்தைச் சிறிதும் பாராமல் உன் கருணையமைந்த கண்ணோக்கத்தினால் பாதுகாத்தாய். நீ செய்த உபகாரத்தையே நினைத்து நீ ஸந்தோஷம் அடைவாயாக. அந்த உபகாரத்திற்கு நான் பதில் செய்ய வல்லனல்லேன்.


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த தக்ஷப்ரஜாபதி ருத்ரனை இங்கனம் ஸ்தோத்ரம் செய்து பொறுத்து அருள்புரியும்படி வேண்டி அந்த ருத்ரனாலும், ப்ரஹ்மதேவனாலும் அனுமதி செய்யப்பெற்று உபாத்யாயர்களோடும் (வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களோடும்) ருத்விக்குகளோடும் (யஜமானருக்காக யாகம் செய்பவர்களோடும்) கூடி யாக கார்யத்தை நடத்தினான். யாகத்தின் இடையில் விச்சேதம் (இடையூறு) ஏற்பட்டதற்கு பரிஹாரத்திற்காகவும் வீரர்களான ப்ரமதகணங்களின் (முன்னோடி படைகளின்) ஸம்பந்தத்தினால் வந்த தோஷத்தின் சுத்திக்காகவும் தாமஸனான வீரபத்ரனுடைய ஸம்பந்தத்தினால் வந்த தோஷத்தினுடைய பரிஹாரத்திற்காகவும் ஸ்ரீமஹாவிஷ்ணுவை தேவதையாக உத்தேசித்து மூன்று கபாலங்களில் பக்வம் செய்த புரோடாசமென்னும் (வெந்த மாவினாலான பண்டம்) ஹவிஸ்ஸை (அக்னியில் ஹோமம் செய்யும் பொருள்) அக்னியில் ஹோமம் செய்தார்கள். வாராய் விதுரனே! ஹோமம் செய்வதற்காக ஹவிஸ்ஸை (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளை) எடுத்துக் கொண்டிருக்கிற அத்வர்யு (யஜுர் வேதப்படி யாகம் செய்பவர்) உத்தேச்ய (யாகத்திற்குரிய) தேவதையான விஷ்ணுவை நிர்மலமான (சுத்தமான) புத்தியால் த்யானம் செய்தான்.


அப்பொழுது யஜமானனாகிய தக்ஷனும் அங்கனமே அந்த விஷ்ணுவை த்யானம் செய்தான். அப்பொழுது அவர்கள் த்யானம் செய்த ப்ரகாரமாகவே அம்மஹாவிஷ்ணு ஆவிர்ப்பவித்தான் (தோன்றினான்). பத்துத் திசைகளையும் விளங்கச் செய்கின்ற தன் தேஹகாந்தியால் (சரீரத்தின் ஒளியால்) யாக ஸபையிலுள்ளவர்களின் கண்களை மழுங்கச் செய்பவனாகி, ப்ருஹத்தென்றும் ரதந்தரமென்னும் ப்ரஸித்தமான ஸாம ஸ்தோத்ரங்களைச் சிறகுகளாக உடைய கருடப் பறவையின் மேல் ஏறிக்கொண்டு அவ்விடம் வந்தான். அவன் கறுத்த நிறமும் பீதாம்பரமும் பொன்னால் இயற்றின அரை நூல் மாலையும் ஸுர்யன் போல் ஜ்வலிக்கின்ற கிரீடமும் அமையப்பெற்று வண்டுகள் போல் கறுத்த முன்னெற்றி மயிர்களால் அலங்காரமுற்று அழகாயிருக்கின்ற முகமுடையவனுமாயிருந்தான். மற்றும், அவன் சங்கு சக்கரம் தாமரைமலர் பாணம் தனுஸ் கதை கத்தி கேடயம் ஆகிய இவ்வாயுதங்களோடு கூடி ப்ருத்யர்களைப் (அடிமையாய் பக்தி செய்பவர்களைப், சேவகர்களைப்) பாதுகாப்பதில் விரைகின்றவைகளும் ஸ்வர்ணமயமான தோள்வளை முதலிய ஆபரணங்களால் விளங்குகின்றவைகளுமான புஜங்களால் திகழ்பவனாகி, புஷ்பங்கள் நிறைந்த கிளைகளுடன் கூடின கர்ணிகார வ்ருக்ஷம்போல் (மரத்தைப்போல்) ப்ரகாசித்தான். மார்பில் மடந்தையர் மணியான மஹாலக்ஷ்மியும் வனமாலையென்னும் பூமாலையும் அமைந்து அழகான புன்னகையோடு கூடின கடைக்கண்ணோக்கத்தினால் ஜகத்தையெல்லாம் மனக்களிப்புறச் (இன்புறச், ஸந்தோஷமடையச்) செய்யும் தன்மையன். அம்மஹானுபாவனுக்கு இரண்டு பக்கங்களிலும் விசிறியும் சாமரமும் வீசிக்கொண்டிருந்தார்கள். அவன் அந்தச் சாமரம் விசிறி இவைகளால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ராஜஹம்ஸங்கள் உலாவப்பெற்றவன் போல் தோற்றினான். அவன் சந்த்ரன் போல் ப்ரகாசிக்கின்ற வெண்கொற்றக் குடையால் மிகவும் விளக்கமுற்றிருந்தான். ப்ரஹ்மதேவனும் இந்த்ரனும் ருத்ரனும் முதலாகப் பெற்ற தேவதைகளும் மற்றுமுள்ள ஸித்த சாரணாதிகளும் மஹர்ஷிகளும் ப்ராஹ்மணர்களும் ஆகிய அனைவரும் அங்கனம் அருகாமையில் வந்த அந்த பகவானைக் கண்டு கூட்டங் கூட்டமாய் விரைவுடன் எழுந்து நமஸ்காரம் செய்தார்கள். அவர்கள் எல்லாரும் அந்த பகவானுடைய தேஜஸ்ஸினால் ஒளி மழுங்கவும் வாய் தழதழக்கவும் பெற்று பயந்து அவனுடைய மஹிமையை நினைத்துக் கலங்கின மனமுடையவராகிச் சிரஸ்ஸில் (தலையில்) அஞ்சலி செய்து (கைகளைக் கூப்பி) அம்மஹானுபாவனை ஸ்தோத்ரம் செய்தார்கள். ப்ரஹ்ம ருத்ராதிகள் அனைவரும் அந்த பகவானுடைய மஹிமையை எட்டிப்பிடிக்க முடியாத மனக்கருத்துடையவர்களே. ஆயினும், அவர்கள் தம்மை அனுக்ரஹிக்கும் பொருட்டு அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் புலப்படுகின்ற அந்த பகவானைத் தமது மதிக்கு (புத்திக்கு) எட்டினவளவு ஸ்தோத்ரம் செய்தார்கள். (அவன் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் கரையற்ற மஹிமையுடையவன். அப்படிப்பட்ட அந்த பகவானை அவர்கள் வாக்கினாலும் மனத்தினாலும் துதிசெய்யத் துடங்கினார்களே. ஆ! இதென்ன ஆச்சர்யம்). தக்ஷர் தான் பூஜைக்காகக் கொடுக்கத் தகுந்த புஷ்பாதிகளை அங்கீகரித்து அவற்றுடன் ப்ரகாசிப்பவனும் அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயங்களில் சிறந்தவனுமாகிய அம்மஹாவிஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்தார். அவன், தன்னை ஆராதிக்கும் பொருட்டுத் தொடங்கின யாகத்தின் அங்கங்களான ப்ரயாஜாதி (ப்ரயாஜ என்பது ஒரு முக்யமான யாகச் செயல்) கர்மங்களைக் காட்டிலும் மேலாகி அந்த யாகத்தைத் தானே நிறைவேற்றுகின்றவன்; யாகத்தில்கொடுக்கும் ஹவிர்ப்பாகங்களை இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர்யாமியாயும் தானே நேராகவும் நின்று புஜிக்கின்றவன். யாகத்தின் பலனைக் கொடுப்பவன்; ஆகையால் யஜ்ஞேஸ்வரனென்று கூறப்படுகின்றவன்; ப்ரஜாபதிகளான மரீசி முதலியவர்க்கும் அவர்களுக்கு ப்ரபுவான ப்ரஹ்மாதிகளுக்கும் ரக்ஷகன். அவர்களைப் படைத்தவனும் அவனே; அவ்வப்பொழுது அவர்களுக்கு ஹிதங்களை உபதேசிப்பவன். இத்தகையனும் ஸுநந்தன், நந்தன் முதலிய ப்ருத்யர்களால் (சேவகர்களால்) சூழப்பட்டவனுமாகிய பகவானைக் கண்டு தக்ஷப்ரஜாபதி அஞ்சலி ஹஸ்தராய் (கூப்பிய கைகளையுடையவராய்) ஸ்தோத்ரம் செய்து கொண்டு மன ஆக்கத்துடன் அவனைச் சரணமடைந்தார்.


தக்ஷர் சொல்லுகிறார்:- நீ பாப ஸம்பந்தமில்லாமல் பரிசுத்தமான ஸ்வரூபமுடையவன்; உனக்குக் கர்ம ஸம்பந்தம் கிடையாது. நீ ஜீவனைப் போல் புண்ய பாபரூபமான கர்மத்திற்கு உட்பட்டவனல்லன். ஆகையால் நீ ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் விளையும் தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாமல் அந்த ப்ரக்ருதியை அண்டவொட்டாமல் தடுத்து ஜ்ஞானாந்தமயமான தன் ஸ்வரூபத்தில் நிலை நின்றிருப்பவன். ப்ரக்ருதியின் பரிணாமங்களான உள்ளிந்த்ரியமான மனதும் வெளியிந்திரியங்களான கண் காது மூக்கு முதலியவற்றும் ஆகிய இவற்றின் வ்யாபாரங்கள் எப்பொழுதும் இல்லாதவன். நீ இந்திரியங்களின் உதவியின்றியே எல்லாவற்றையும் எப்பொழுதும் ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) திறமையுடையவன்; ஆனத்தமயமான தன் ஸ்வரூபத்தையே அனுபவித்துக் கொண்டிருப்பவன். உன்னோடு ஒத்தவனாவது உனக்கு மேற்பட்டவனாவது எவனுமே இல்லை. நீ ஜ்ஞானஸ்வரூபன். இங்கனம் நீ பரிசுத்தனாயிருப்பது மாத்ரமேயன்றி உன்னை அடைந்தவர்களுக்கும் சுத்தியை (தூய்மையை) விளைத்து அசுத்திக்கிடமான (தூய்மையற்ற) ஸம்ஸார பயத்தினின்று அவர்களை விடுவித்துப் பாதுகாக்கின்றாய். நீ இந்த ஸ்வரூப ஸ்வபாவங்கள் என்றும் மாறாதிருக்கப் பெற்றவன். நீ எந்த மாயையென்னும் ப்ரக்ருதியால் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கின்றனையோ, அம்மாயையைக் கொண்டே தேவ மனுஷ்யாதி சரீரங்களைப் படை த்து அவற்றில் ஜீவன் மூலமாய் உள் புகுந்து தான் ஸ்வதந்தரனாயிருந்தும் அம்மாயையில் கர்மவச்யன்போல் (புண்ய பாப கர்மங்கட்கு உட்பட்டவன் போல்) இருக்கின்றாய். இதுவே நீ ஸர்வசக்தியென்பதற்குப் போதுமான த்ருஷ்டாந்தம் (உதாரணம்). உன் சக்தியின் மேன்மையை என்னென்று சொல்லுவேன்.


ருத்விக்குகள் (யஜமானருக்காக யாகம் செய்பவர்கள்) சொல்லுகிறார்கள்:- புண்ய பாபங்களென்ற மலங்களற்றவனே! நாங்கள் நந்தியின் சாபத்தினால் கேவலமான யாகாதி கர்மங்களை அனுஷ்டிப்பதில் துராக்ரஹங்கொண்ட (முட்டாள்தனமான பிடிவாதமுடைய) மனமுடையவராயிருக்கின்றோம். நாங்கள் உன்னுடைய உண்மையை அறியப் பெற்றிலோம். வாராய் பகவானே! ஸத்வ ரஜஸ் தமோ குணங்களை அனுஸரித்து வேதங்களால் விதிக்கப்பெற்றதும் தேவதைகளின் அனுக்ரஹத்தை விளைவிப்பதுமாகிய இந்த யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்கள் மாத்ரமே எங்களுக்குத் தெரியும். இந்த யாகம் முதலிய கர்மங்களுக்குப் பலன் கொடுக்கும் பொருட்டு இந்த்ராதி தேவதைகளில் நீ மறைந்து நிற்கின்றாயென்று நாங்கள் கேள்விப்படுகின்றோம்.


ஸபையிலுள்ளவர்கள் சொல்லுகிறார்கள்:- வாராய் சரணம் கொடுக்கும் தன்மையுள்ள மஹானுபாவனே! ஸம்ஸார மார்க்கத்தில் உழல்கின்ற அறிவிலா மனிதர்கள் காமத்தினால் பீடிக்கப்பட்டு வருந்துகின்றார்கள். இவர்கள், கல்பவ்ருக்ஷத்தின் நிழல்போல் சிரமங்களை எல்லாம் போக்கும்படியான உன் பாதமூலத்தை எப்பொழுது சரணம் அடைந்து வாழப்போகின்றார்கள்? “ஸம்ஸாரத்தில் அப்படி என்ன வருத்தம்” என்னில், சொல்லுகிறோம். கேட்பாயாக. 


இந்த ஸம்ஸார மார்க்கத்தில் இளைப்பாரும் இடம் சிறிதும் அகப்படாது. இதில் ஜன்ம ஜரா மரணாதியான (பிறப்பு, கிழத்தனம், இறப்பு போன்ற) க்லேசங்களாகிற (துன்பங்களாகிற) புதர்கள் பலவும் அடர்ந்திருக்கையால் எடுத்த அடி வைக்க முடியாதிருக்கும். இதில் அந்தகனாகிற (யமன், மரணம் என்கிற) வேடன் இந்த அறிவிலா மூடர்களாகிற மிருகங்களை அடிப்பதற்குச் சுற்றி உலாவிக் கொண்டிருப்பான். இங்கு சப்தாதி விஷயங்களாகிற கானல் (கானல் என்பது வெய்யில் நேரத்தில் நீர் போல் தெரியும் ஒரு ப்ரதிபலிப்பு) ஓடிக்கொண்டிருக்கும். நானென்கிற துரபிமானத்திற்கிடமான (வீண் பெருமைக்கிடமான) தேஹமும் (உடலும்) என்னுடையதென்கிற வீண் பெருமைக்கிடமான க்ருஹ (வீடு), க்ஷேத்ர (நிலம்), புத்ராதிகளும் சுமக்க முடியாத பெரும் பாரங்களாயிருக்கும். ஸுகதுக்கங்கள் முதலியவை இடரி விழும் பள்ளங்கள் போல் பெரிய ஆபத்திற்கிடமாயிருக்கும். இதில் துர்ஜனங்களாகிற புலி கரடி ஸிம்ஹம் முதலிய கொடிய மிருகங்கள் உலாவிக் கொண்டிருக்கும். அதனால் பெரும்பயத்தை விளைவிக்கும். மற்றும், இதில் சோகமாகிற காட்டுத்தீ புகமுடியாமல் படர்ந்தெரியும். இப்படிப்பட்ட ஸம்ஸாரமார்க்கத்தில் திரிகின்ற அறிவிலா மூடர்கள் உன் பாதாரவிந்தங்களைப் பணிந்து எப்பொழுது வாழப் போகிறார்களோ?


ருத்ரன் சொல்லுகிறான்:- வாராய் வரதனே! விரும்பின விருப்பங்களையெல்லாம் கொடுக்கும் தன்மையனே! இவ்வுலகத்தில் பிள்ளை பெண்டிர் முதலியதும் வீடு வாசல் நிலம் நீர் முதலியதுமான தந்தமது விருப்பங்களெல்லாம் கைகூடும் பொருட்டு அனைவராலும் ஆராதிக்கத் தகுந்ததும் ஸம்ஸாரத்தில் விருப்பமின்றி மோக்ஷத்தையே விரும்புகின்ற பெரியோர்களால் மிகுந்த ப்ரேமத்துடன் பூஜிக்கத்தகுந்ததும் மென்மை நன்மணம் முதலிய குணங்களெல்லாம் அமைத்து செவ்வி மலர்போல் சிரத்தில் சூடுவதற்கு தகுந்ததுமாகிய உன் பாதாரவிந்தங்களில் நிலைநின்ற மனமுடையவனாகிய என்னை அறிவில்லாத மூடர்கள் ஆசாரஹீனனென்று (நல்லொழுக்கமற்றவனென்று) பிதற்றுகிறார்கள். ஆயினும் நான் அதை ஒரு பொருளாக நினைக்கவேயில்லை. ஏனென்னில், நீ பிறர்களை அனுக்ரஹிக்கும் தன்மையனாகையால், உன்னைப் பணிகின்ற நமக்கும் பிறரிடம் அனுக்ரஹம் செய்கையே தகுமென்று நினைத்து அங்கனம் பழிக்கின்ற மூடர்களையும் நான் நிக்ரஹிக்காமல் (தண்டிக்காமல்) வெறுமனே இருக்கின்றேன்.


ப்ருகு சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த ப்ராணிகளும் எவ்விதத்திலும் கடக்க முடியாததாகிய மாயையினால் ஜ்ஞானம் மறையப்பெற்றுத் தமஸ்ஸென்று சொல்லப்படுகிற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியின் பரிணாமமாகிய சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவாத்மாக்களுக்குள் அந்தராத்மாவாயிருக்கின்ற உனது உண்மையை இன்னும் அறியாமல் ஜன்ம ஜரா மரணாதி ரூபமான (பிறப்பு, கிழத்தனம், இறப்பு போன்றவற்றையுடைய) ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்கள். நீ சரணம் அடைந்தவர் விஷயத்தில் மிகவும் ப்ரீதிக்கிடமான பந்துவாயிருப்பவன். அப்படிப்பட்ட நீ எங்கள் விஷயத்தில் அனுக்ரஹம் செய்வாயாக. நாங்கள் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜ்ஞானம் மறையப்பெற்று உன் பாதாரவிந்தங்களைப் பணியாமல் உன் மஹிமையைச் சிறிதும் அறியாமல் உன் திருவுள்ளத்திற்கு இணங்காத கார்யங்களையே செய்துகொண்டு பொழுது போக்குகின்றோம். நீயோவென்னில், அபராதங்களைப் பொறுப்பதே இயற்கையாயிருப்பவன். ஆகையால் நீ எங்கள் அபராதத்தைப் பொறுத்தருள்வாயாக.


ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாராய் பகவானே! வாக்குக்கும் மனத்திற்கும் கோசரமாகாத (எட்டாத, அறியப்படாத) உன் ஸ்வரூபத்தை எத்தகைய ஜீவனும் இந்திரியங்களால் ஸாக்ஷாத்கரிக்க (அறிய) வல்லனாக மாட்டான். உலகத்திலுள்ள வஸ்துக்களில் ஒன்றோடொன்றுக்குள்ள பேதத்தை இந்த்ரியங்களால் அறியலாமாயினும், உன் ஸ்வரூபத்தை அவ்விந்த்ரியங்களால் ஸாக்ஷாத்கரிக்க (அறிய) முடியாது. ஏனென்னில், இந்த ஜீவன் இந்திரியங்களுக்கும் ஸப்தாதி விஷயங்களுக்கும், அவ்விரண்டுக்கும் காரணமான ஸத்வாதி குணங்களுக்கும் இருப்பிடம். ப்ரக்ருதி ஸம்பந்தமுடையவனாகையால் ஜ்ஞான ஸங்கோசம் (குறைவு) உடையவன்; நீயோ வென்றால், ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹாதிகளைக் (சரீரம், இந்த்ரியங்கள் போன்றவற்றைக்) காட்டிலும் அவற்றோடு ஸம்பந்தித்திருக்கிற (சேர்ந்திருக்கிற) ஜீவனைக் காட்டிலும் மிக்க விலக்ஷணமாயிருப்பவன் (வேறுபட்டவனாயிருப்பவன்). ப்ராக்ருதமான (ப்ரக்ருதியிலிருந்து உண்டான) சக்ஷஸ்ஸு (கண்) முதலிய இந்திரியங்கள் ப்ராக்ருத (ப்ரக்ருதியிலிருந்து உண்டான) வஸ்துவை க்ரஹிக்குமேயன்றி (அறியுமேயன்றி) அப்ராக்ருதனான (ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற) உன் ஸ்வரூபத்தை க்ரஹிக்க (அறிய) வல்லவையன்று.


இந்த்ரன் சொல்லுகிறான்:- வாராய் அச்சுதனே! ஆச்ரிதர்களைக் (பக்தியோடு சரணடைந்தவர்களை) கைவிடாதவனே! இந்த உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹம் உலகங்களுக்கெல்லாம் ஸுகத்தை விளைவிக்கும் தன்மையது; ஆகையால் மனத்திற்கும் கண்களுக்கும் ஆனந்தம் கொடுக்கின்றது. நீ தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டே இந்த உருவத்தைக் கொண்டாய். அதர்மத்தை அடக்காமல் தர்மத்தை நிலைநிறுத்த முடியாது ஆகையால் அதர்மத்தை அழிப்பதற்காகவும் நீ இந்த உருவம் கொண்டாய். ஆகையால், தேவதைகளுக்கு த்வேஷிகளான (எதிரிகளான, வெறுப்பவர்களான) அஸுரர்களை அழிக்கும் பொருட்டு தண்டங்கள் போல் நீண்ட எட்டு புஜங்களுடையவனாகி அவ்வெட்டு புஜங்களிலும் எட்டு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு விளங்குகின்றாய்.


ருத்விக்குகளின் பத்னிகள் சொல்லுகிறார்கள்:- ஜகதீசனே! உன்னை ஆராதிக்கும் பொருட்டு தக்ஷப்ரஜாபதி இந்த யாகம் செய்யத் துடங்கினார். அது இப்பொழுது தக்ஷரிடம் கோபம் கொண்ட பசுபதியால் இடையில் பாழ் (நாசம்) செய்யப்பெற்றது. நீ யஜ்ஞத்தையே (யாகத்தையே) சரீரமாகவுடையவன். அப்படிப்பட்ட நீ எங்களுடைய இந்த யாகத்தை உன் தாமரைக் கண்களால் நோக்கிப் புனிதம் செய்வாயாக. இந்த யாகபூமி வீரபத்ரனுடைய விபரீதத்தினால் உத்ஸவங்களெல்லாம் தொலையப் பெற்று மயானம்போல் பார்க்க வழங்காதிருக்கின்றது. இதை உன் திருக்கண் தாமரைகளால் கோக்கி அருள்வாயாக.


ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- வாராய் பகவானே! உன்னுடைய இந்த நடத்தை மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. நீ ஜீவனைப்போல் கர்மத்திற்கு உட்படாதவனாயினும், அதனால் ப்ரக்ருதி ஸம்பந்தமற்றவனாயினும், தானே புண்ய பாபங்கள் போன்ற கர்மங்களை ஆசரிக்கின்றாய் (செய்கின்றாய்). ஆயினும் அவற்றின் பலன்களால் நீ தீண்டப் பெறுகிறதில்லை. ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகள் ஐச்வர்யத்திற்காக எவனைப் பணிகின்றார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீமஹாலக்ஷ்மி உன்னைப் பணிந்து கொண்டிருப்பினும். நீ அவளை நினையாதிருக்கின்றாய். நீ எல்லாம் அடையப்பெற்றவனாகையால் அவளுடைய ஸம்பந்தத்தால் ஆகவேண்டியது உனக்கு ஒன்றுமே இல்லை.


ஸித்தர்கள் சொல்லுகிறார்கள்:- வாராய் பகவானே! இந்த எங்கள் மனதாகிற யானை ஆத்யாத்மிகம் முதலிய ஸம்ஸார தாபங்களாகிற காட்டுத்தீக்களால் தவிக்கப் பெற்று தாஹத்தினால் வருந்தி உன்கதையாகிற மேலான அம்ருதத்தில் முழுகி அதினின்று மீண்டு வாராமலேயிருக்கின்றது; ஸம்ஸார தாபமாகிற காட்டுத்தீயினால் விளையும் வருத்தத்தை நினைக்கிறதேயில்லை; பரப்ரஹ்மத்தை அடைந்தாற்போல் ஸுகித்திருக்கின்றது.


தக்ஷபத்னியாகிய யஜமானி சொல்லுகிறாள்:- வாராய் ஜகதீசனே! உன் வரவு நல்வரவாகவேணும். வாராய் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாயிருப்பவனே! எங்கள் மேல் அருள்புரிவாயாக. உனக்கு நமஸ்காரம். ப்ரபூ! தலையில்லாத முண்டமாயிருக்கும் புருஷன் கை கால் முதலிய அவயவங்கள் அழகாயிருப்பினும், எப்படி விளங்கமாட்டானோ, அங்கனமே நீ இல்லாமல், கேவலம் ப்ரயாஜம் (ப்ரயாஜம் என்பது ஒரு முக்யமான யாகச் செயல்) முதலிய அங்கங்களால் (யாகத்தின் பல்வேறு பிரிவுகளால்) அழகியதாயிருப்பினும், யாகம் விளக்கமுறாதிருக்கின்றது. ஆகையால் உனது அன்பிற்கிடமான ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் கூடி நீ எங்களைப் பாதுகாப்பாயாக.


லோகபாலர்கள் சொல்லுகிறார்கள்:- நீ வாக்குக்கும் மனத்திற்கும் விஷயமாகாத ஸ்வரூப (இயற்கையான நிலை), ஸ்வபாவங்களை (குணங்களை) உடையவன். அப்படிப்பட்ட நீ எங்களுடைய மாம்ஸமயமான (தசைப்பிண்டத்தாலான) கண்களுக்கு எங்கனம் புலப்பட்டாய். உன்னுடைய ஸௌலப்ய (எளிதில் அடையப்படக்கூடிய) குணத்திற்கு இதுவே நிதர்சனம் (உதாரணம், சாஷி). கண்ணுக்குப் புலப்படக்கூடாத நீ எங்கள் கண்ணுக்குப் புலப்பட்டாயே. இதற்குக் காரணம் எங்களிடத்தில் ஒன்றும் இல்லை. கேவலம் உன்னுடைய ஸங்கல்பத்தினால் தான் புலப்பட்டாய். அங்கனம் நீ ஸங்கல்பித்ததற்குக் காரணம் உன்னுடைய ஸௌலப்ய குணமே. ப்ராணிகள் தேஹத்தில் நானென்கிற துரபிமானமும் (வீண் பெருமையும்), அதைச் சேர்ந்த வஸ்துக்களில் என்னுடையதென்கிற வீண் பெருமையும் மாறாதிருக்கின்றார்களே. அவர்கள் தேஹத்தையே (சரீரத்தையே) ஆத்மாவாக ப்ரமிப்பதற்குக் (மயங்குவதற்குக்) காரணம் உன்னுடைய மாயையே. மஹாநந்தஸ்வரூபனே எல்லையில்லாத பெருமையுடையவனே! விபுவாயிருப்பவனே! ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணானாயிருக்கின்ற (வேறுபட்டவனாயிருக்கிற) நீ, ப்ருதிவி முதலிய பஞ்ச பூதங்களால் ஏற்படுகின்ற தேஹத்தில் (சரீரத்தில்) இருந்து கொண்டு அந்த சரீரத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஜீவன்போல் தோற்றுகின்றாய். இங்ஙனம் தோன்றுவதும் உன்னுடைய மாயையின் கார்யமே.


யோகீஸ்வரர்கள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! சேதனா சேதன ரூபமான ப்ரபஞ்சத்தில் உள் புகுந்து தன் ஸ்வரூப (இயற்கையான நிலை), ஸ்வபாவங்களுக்கு (குணங்களுக்கு) சிறிதும் மாறுபாடின்றி அவற்றைத் தரித்துக் (தாங்கிக்) கொண்டிருப்பவனும் சேதனாசேதனங்களைக் (ஜீவர்கள் மற்றும் ஜடப்பொருள்களைக்) காட்டில் விலக்ஷணனாயிருப்பவனுமாகிய (வேறுபட்டவனாயிருக்கிற) உன்னை எவன் தன்னைக்காட்டிலும் வேறாக நினைக்கமாட்டானோ; உன்னைத் தனக்கு அந்தராத்மாவாகவும், தன்னை உனக்கு உட்பட்டவனாகவும் உனக்குச் சரீரமாகவும் நினைப்பானோ, அவனே தத்வதர்சியென்று ( தத்வத்தை அறிந்தவனென்று) கூறப்படுவான். அவனைக்காட்டிலும் உனக்கு ப்ரீதிக்கிடமானவன் (அன்புக்குரியவன்) மற்றெவனுமே இல்லை. உன்னைத் தன்னில் வேறுபட்டவனன்றென்று தெரிந்துகொள்ளாமற்போயினும் உன்னை ஸ்வாமியாகவும் தன்னை உனக்கு ப்ருத்யனாகவும் (சேவகனாகவும், பணிபவனாகவும்) பாவித்து உன்னைப் பணிவர்களாயின், அவர்களிடத்திலும் நீ அனுக்ரஹம் செய்வாயாக. வாஸ்தவத்தில் அவர்கள் அறிவிலா மூடர்களே. ஆயினும், நீ வாத்ஸல்ய (தாய் குழந்தையிடம் காட்டும் அன்பு, பரிவு) குணமுடையவனாகையால், அவர்கள் உன்னைத் தவிர மற்றெதையும் நினைக்காமல் உன்னிடத்தில் மாறாத பக்தியுடையவராயிருப்பதைக் கண்டு அவர்களை அனுக்ரஹிப்பதே உனக்குத் தகும். நீ ஜகத்தைப் படைப்பது வளர்ப்பது அழிப்பது ஆகிய இவற்றை நடத்தும் பொருட்டு உன் ஸங்கல்பத்தினால் ப்ரஹ்மருத்ராதிகளாகவும் தேவமனுஷ்யாதிகளாகவும் பசுபக்ஷ்யாதிகளாகவும் (விலங்கு, பறவைகளாகவும்) மரம் கொடி செடி முதலியவைகளாகவும் பரிணமிக்கின்ற (மாறுபாடடைகின்ற) ஸத்வாதி குணங்களையுடையதான உன் மாயையால்ஆத்மாவிடத்தில் தேவமனுஷ்யாதி பேதபுத்தி (வேறான புத்தி) விளையப்பெற்று தேஹாத்மாபிமானிகளாய் (சரீரமே ஆத்மா என்று நினைப்பவர்களாய்) இருக்கின்ற ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாகி அவர்களைச் சரீரமாகக் கொண்டு அந்த தேவ மனுஷ்யாதி நாமங்களுக்குத் தானே பொருளாயிருப்பினும், அன்யதாஜ்ஞான (ஒரு பொருளின் குணத்தில் மாறான அறிவு; உதாரணம்: வெளுப்பான சங்கை மஞ்சளாகப் பார்ப்பது), விபரீத ஜ்ஞானாதிரூபமான (ஒரு பொருளையே வேறாகப் பார்ப்பது; உதாரணம்: கயிற்றைப் பாம்பு என்று பார்ப்பது) ப்ரமமும் (மயக்கமும்) அவற்றிற்கு ஹேதுவான ரஜஸ்ஸு தமஸ்ஸு முதலிய குணங்களும் தன்னிடத்தில் தீண்டப் பெறாதிருக்கின்ற உனக்கு நமஸ்காரம். நாங்கள் வெறுமனே நமஸ்காரம் செய்ய வல்லரேயன்றி உன் குணங்களை எடுத்துரைக்க வல்லரல்லோம்.


வேத ஸ்வரூபமான ப்ரஹ்மம் சொல்லுகிறது:- நீ ஸத்வ ரஜஸ் தமோகுணங்களும் மற்றுமுள்ள ஹேய குணங்களும் தீண்டப் பெறாதவன்; வேதங்களை வெளியிட்டு தர்ம அர்த்த காமாதியான புருஷார்த்தங்களைப் பிறப்பித்தவன். நீயே ஜகத்காரண வஸ்து. நீ ஸர்வஜ்ஞன்; ஸர்வ சக்தி; முதலில் ப்ரஹ்மாவுக்கு வேதங்களை உபதேசித்தவன். நீ வாத்ஸல்யம் (தாய் குழந்தையிடம் காட்டும் அன்பு, பரிவு) முதலிய கல்யாண குணங்களுக்கெல்லாம் இருப்பிடம். உன் ஸ்வரூப (இயற்கை நிலை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண (குணங்கள்), விபூதிகளின் (சொத்துக்களின், ஐச்வர்யங்களின்) அவதியை (எல்லையை) நான் அறியேன். மற்ற ப்ரஹ்மாதிகளும் அறியார். நானே அறியவல்லனல்லேனாயின், என் மூலமாய் அறியவேண்டியவர்களான ப்ரஹ்மாதிகள் எங்கனம் அறியப்போகின்றார்கள்?


அக்னி சொல்லுகிறான்:- உன்னுடைய தேஜஸ்ஸினால் நான் மிகவும் விளங்குகின்ற ஒளியுடையவனாயிருக்கின்றேன். நான் யாகங்களில் நெய்யால் நனைக்கப்பெற்ற ஹவிஸ்ஸை (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளை) இந்த்ராதி தேவதைகளுக்குக் கொண்டு போய்க் கொடுப்பதும் உன்னுடைய சக்தியே. யாகத்தில் வரிக்கப்படுகிற (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்படும்) இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் இருந்து அந்த யாக அக்னியில் ஹோமம் செய்யும் பொருளை அங்கீகரிப்பவன் நீயே; ஐந்து வகைப்பட்ட அக்னிகளைச் சரீரமாகவுடையவன். ஐந்து யஜுஸ்ஸுக்களால் (யஜுர் வேத மந்த்ரங்களால்) நன்கு பூஜிக்கப்படுகின்றவன்: நீ யஜ்ஞஸ்வரூபன் (யாகமே வடிவானவன்). அப்படிப்பட்ட உன்னை எப்பொழுதும் நமஸ்கரிக்கின்றேன்.


தேவதைகள் சொல்லுகிறார்கள்:- நீ ஸமஸ்த ஜகத்திற்கும் உபாதானகாரணமாய் இருப்பவன். நீயே பரமபுருஷன். நீ முன்பு படைத்த ஜகத்தையெல்லாம் முன் கல்பத்தின் முடிவில் உதரத்தில் (வயிற்றில்) வைத்துக்கொண்டு மஹா ஜலத்தில் ஆதிசேஷனாகிற படுக்கையின்மேல் படுத்துக்கொண்டிருந்தனை. ஜனோலோக (பூமிக்கு மேலுள்ள ஒரு லோகம்) வாஸிகளான ஸித்தர்கள் தமது ஹ்ருதயங்களில் உனது தத்வ ஜ்ஞான மார்க்கத்தை விசாரிக்கின்றார்கள். (நீ யோக பரிசுத்தமான மனத்தினால் அறியத் தகுந்தவன்). அப்படிப்பட்ட நீ இப்பொழுது எங்கள் கண்ணெதிரில் உலாவுகின்றாய். வாக்குக்கும் மனத்திற்கும் கோசரமாகாத (எட்டாத) நீ ஸௌலப்யத்தின் (எளிமையின்) மிகுதியால் எங்களுக்கு ப்ரத்யக்ஷமானாய். நீ உன் ப்ருத்யர்களைப் (அடிமையாய் பக்தி செய்பவர்களைப், சேவகர்களைப்) பாதுகாக்கும் தன்மையன். ஆகையால் எங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இங்கனம் புலப்பட்டாய்.


கந்தர்வர்கள் சொல்லுகிறார்கள்:- அளவற்ற மஹிமையுடையவனே! ஜகத்தையெல்லாம் உள்ளும் புறமும் வ்யாபித்திருப்பவனே! தேவனே! (எல்லாரிலும் மேன்மையுற்று விளங்கும் தன்மையனே) மரீசி முதலியவர்களும் ப்ரஹ்மா இந்திரன் முதலியவர்களும் ருத்ரன் முதலியவர்களுமான இந்த தேவகணங்களெல்லாம் உன்னுடைய அம்சங்களே. இந்த ப்ரஹ்மாண்டம் (universe, ப்ரபஞ்சம்) முழுவதும் உனக்கு விளையாட்டின் கருவியாயிருக்கின்றது. அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். நாங்கள் உனக்குப் பணிவிடை செய்வோமாக.


வித்யாதரர்கள் சொல்லுகிறார்கள்:- ஜீவன் புருஷார்த்தங்களை ஸாதித்துக் கொடுப்பதாகிய மனுஷ்ய தேஹம் உன் ஸங்கல்பத்தினால் உண்டாகப்பெற்று அந்த தேஹத்திலும் அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும் “நான்” “என்னுடையது” என்னும் துர்புத்தியைச் செய்து (விவேகமற்ற புத்தியுடன்) சப்தாதிவிஷய ஸுகங்கள் நினைத்தபடி நேரப் பெறாமல் வருந்தி, லோக மர்யாதைகளையும் வேத மர்யாதைகளையும் உல்லங்கனம் செய்து (மீறி) மனம் போனபடியெல்லாம் போகின்ற தன் புத்ராதிகளால் அவமதிக்கப் பெற்று ப்ரக்ருதியின் பரிணாமங்களான (மாறுபாடுகளான) சப்தாதி விஷயங்களில் விருப்பம் மாறப்பெறாதிருப்பானாயினும், உன்னுடைய கதைகளாகிற அம்ருதத்தை ஆதரித்து வருவானாயின், அஹங்கார மமகாரங்களைத் (நான் எனது என்ற எண்ணங்களைத்) துறந்து மோக்ஷத்தையும் பெறுவான். அம்ருதம் போன்ற உன் கதையின் மஹிமை இப்படிப்பட்டது. இதென்ன ஆச்சர்யம்! மோக்ஷத்தை ஸுகமாக ஸாதித்துக் கொடுக்கும் உபாயம் இதைக் காட்டிலும் மற்றொன்றும் இல்லை.


ப்ராஹ்மணர்கள் சொல்லுகிறார்கள்:- ஜகதீசனே! யாகமும் நீயே. புரோடாசம் (வெந்த மாவினாலான பண்டம்) முதலிய ஹவிஸ்ஸும் (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளை) நீயே. மூன்று வகைப்பட்ட அக்னிகளும் நீயே. மந்த்ரங்களும் நீயே. ஸமித்துக்களும் (அக்னியில் மந்த்ரத்துடன் இடப்படும் பலாஸ மரக் குச்சிகள்) தர்ப்பங்களும் யாக பாத்ரங்களும் நீயே. இந்த யாக ஸபையிலுள்ளவர்களும் நீயே. ருத்விக்குகளும் நீயே. யஜமானனும் யஜமான பத்னியுமாகிய தம்பதிகளும் நீயே. யாகத்தில் உத்தேச்யமான தேவதையும் (யாரைக்குறித்து யாகம் செய்கிறோமோ அந்த தேவதை) நீயே. அக்னிஹோத்ரமென்கிற ஹோமமும் நீயே. ஸ்வதையும் (பித்ருக்களுக்கு அளிக்கப்படுவதும்) நீயே. ஸோமலதையும் (ஸோமம் என்ற கொடி - இதன் சாறு யாகத்தின் முடிவில் பருகப்படும் ஸோம பானம்) ஆஜ்யமும் (நெய்யும்) நீயே. யாக பசுவும் நீயே. ஆகையால் நீ யஜ்ஞ ஸ்வரூபன் (யாகமே உருவானவன்). முன்பு கல்பத்தின் ஆரம்பத்தில் நீ ஸ்வேதவராஹ ரூபியாய், மேன்மையுடைய ஓர் யானையானது தாமரைக்கொடியை எடுத்துக்கொண்டு வருவதுபோல், பூமியைப் பாதாளத்தினின்று உன் கோரைப் பல்லால் பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்தாய். அந்த உன் செயலைக் கண்டு மனக்களிப்புற்ற (மனதில் இன்பமுற்ற, ஸந்தோஷமடைந்த) யோகிகளால் புகழப்பெற்றாய். 


வேத ஸ்வரூபனே! அங்கனம் யாகம் செய்வதற்கிடமான பூமியை உத்தரணம் (மேலே கொண்டுவந்த) நீயே யஜ்ஞ ஸ்வரூபன் (யாகமே உருவானவன்). உனது ஆராதன ரூபமாகையால் சிறப்புற்றதான யாகமென்னும் கர்மத்தை நாங்கள் ஆசரிக்கத் (செய்யத்) தொடங்கி இடையில் அந்த ஸத்கார்யம் (நல்ல செயல்) நஷ்டமாகப் பெற்றோம். அது நிறைவேறும் பொருட்டு நாங்கள் உன் தர்சனத்தை விரும்பிக் கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட எங்கள் விஷயத்தில் நீ அருள் புரிவாயாக, யஜ்ஞேசனே! உன்னுடைய நாமத்தைச் சொன்ன மாத்ரத்தில் யஜ்ஞத்தினுடைய (யாகத்தினுடைய) விக்னங்களெல்லாம் (தடைகளெல்லாம்) பறந்துபோகும். செய்த அப்படிப்பட்ட பல நாமங்களையுடைய உனக்கு நமஸ்காரம்.


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் மங்கள ஸ்வபாவமுடைய விதுரனே! இங்ஙனம் ஜகத்காரண வஸ்துவாகிய பகவானை அவரவர் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டிருக்கையில், கார்யங்களைச் செய்வதில் ஸமர்த்தராகிய தக்ஷப்ரஜாபதி ருத்ரனால் தடைபட்டிருந்த யாகத்தை நடத்தினார். ஸர்வர்க்கும் (எல்லோருக்கும்) அந்தராத்மாவாகையால் இந்த்ராதி தேவதைகள் மூலமாய் அவரவர்க்குக் கொடுக்கும் ஹவிர்ப்பாகங்களையெல்லாம் (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளையெல்லாம்) தானே புசிப்பவனாயினும் (உண்பவனாயினும்), தனக்குக் கொடுத்த த்ரிகபாலபுரோடாசமென்னும் (த்ரி-மூன்று; கபால–சிறிய ஓட்டு சில்; புரோடாசம்-வெந்த மாவினாலான பண்டம்; நெருப்பில் இட்டு நன்றாக சூடாக்கப்பட்ட மூன்று சிறிய ஓட்டு சில்களின் மேல் புரோடாசத்தை வைத்து அதன் மேல் நெருப்பு தணல்களை இட்டு ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட - பண்படுத்தப்பட்ட) ஹவிஸ்ஸினால் (அக்னியில் ஹோமம் செய்யும் பொருளினால்) மனக்களிப்புற்றவனாக (மனம் இன்புற்றவனாக, ஸந்தோஷப்பட்டவனாக) தக்ஷரை அழைத்து இங்கனம் மொழிந்தான்.


ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஹேயஸம்பந்தம் (விடத்தக்க கீழானவற்றுடனான சேர்க்கை) இல்லாதவனென்றும், ஸமஸ்த கல்யாண குண ஸ்வரூபனென்றும் உங்களால் துதிசெய்யப் பெற்ற நானும், என்னால் உள் புகப்பெற்றவனும் ஸ்ருஷ்டி (படைப்பு) முதலிய கார்யங்களுக்கு வேண்டிய ஜ்ஞானமெல்லாம் கொடுக்கப்பெற்றவனும் எனக்கு உட்பட்டவனுமாகிய ப்ரஹ்மதேவனும், அத்தகையனான ருத்ரனும் ஆகிய நாங்கள் மூவரும் உலகங்களைப் பாதுகாப்பது அவற்றைப் படைப்பது அவற்றை அழிப்பது ஆகிய இந்தச் செயல்களை நடத்திக்கொண்டு வருகின்றோம். நான் ப்ரஹ்மதேவனைப் படைத்து அவனுக்கு அந்தர்யாமியாயிருந்து உலகங்களைப் படைக்கின்றேன். அவ்வுலகங்களை நான் நேராகவும் பிறர் மூலமாகவும் பாதுகாக்கின்றேன். கடைசியில் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயிருந்து அவற்றையெல்லாம் ஸம்ஹரிக்கின்றேன். எனக்கு நானே ப்ரபுவாயிருப்பவன். எனக்கு மேற்பட்டவன் ஒருவனும் இல்லை. நானே ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாயிருந்து அவர்களை நியமித்துக் கொண்டிருக்கின்றேன். ஜீவாத்மாக்களுக்குள் புகுந்திருப்பினும், எனக்கு அந்த தேவமனுஷ்யாதி நாம (பெயர்), ரூப (உருவ) ஸம்பந்தம் கிடையாது. நான் அவர்களுக்கு அந்தராத்மாவாகி அவர்களை நியமித்துக் கொண்டிருப்பவனே. ஆயினும் அவர்களுக்கு தேஹ (சரீர) ஸம்பந்தத்தினால் விளையும் ஸுகதுக்கங்கள் எவையும் என்னைத் தீண்டமாட்டாது. நாம (பெயர்), ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) இடமில்லாத ஸூக்ஷ்ம சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய காரணவஸ்துவும் நானே. நான் என்றும் ஸங்கோசமில்லாமல் (குறைவில்லாமல்) மலர்கின்ற ஜ்ஞானமுடையவன். ஆகையால் நான் எல்லாவற்றையும் அறியும் திறமையுடையவன். ஸமஸ்த (எல்லா) சக்திகளும் அமையப்பெற்றவன், ப்ரக்ருதியின் ஸ்வபாவமான ஜடத்வமும் (அறிவற்றிருத்தலும்) பரிணாமமும் (மாறுபாடுகளும்) எனக்குக் கிடையாது. ஜீவனுக்குள்ள ஜ்ஞான ஸங்கோசமும் (அறிவின் குறைபாடும்) துக்கம் முதலியவைகளும் எனக்குக் கிடையாது. 


வாராய் அந்தணர் தலைவனே! தக்ஷ ப்ரஜாபதீ! ஸத்வ ரஜஸ் தமோகுண மயமாகி எனக்குச் சரீரமுமாகிய ப்ரக்ருதியில் நான் ஜீவன் மூலமாய் ஸங்கல்பத்தினால் ப்ரவேசித்து (உள் நுழைந்து), ப்ரஹ்மாவின் மூலமாய் ஜகத்தைப் படைப்பதும். நேரே பாதுகாப்பதும், ருத்ரன் மூலமாய் ஸம்ஹரிப்பதும் செய்கின்றேனாகையால், அந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (பாதுகாப்பு), ஸம்ஹாரங்களைப் (அழித்தல்) பற்றி முறையே ப்ரஹ்மாவென்றும் விஷ்ணுவென்றும் ருத்ரனென்றும் மூன்று வகையான ஸம்ஜ்ஞைகளை (பெயர்களை) நானே பெறுகின்றேன். ஆகையால் ஸ்தூல சேதனா சேதன ஸ்வரூபமான ஜகத்தாகிற (பெயர், உருவங்களுடன் கூடிய தேவ, மனுஷ்ய, விலங்கு, தாவரம் என்கிற சரீரங்களையுடைய ஜீவர்களுடன் கூடிய நாம் பார்க்கும் இந்த உலகமாகிற) கார்ய வஸ்துவும் நானே. ஸூக்ஷ்ம சேதனாசேதன ஸ்வரூபமான (பெயர், உருவங்களற்ற, ஜீவனென்றும் ஜடப்பொருளென்றும் பிரித்து அறியமுடியாத, நம் கண்ணால் காண முடியாத, ஜீவாத்மாக்களும் ப்ரக்ருதியும் கூடிய) காரணவஸ்துவும் நானே. என்னையொழிந்த வஸ்து எதுவுமே இல்லை. எனக்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமான வஸ்து உண்டென்னும் நினைவு ப்ராந்தியே (பொய்யான எண்ணம்). ஸ்தூலமாயும் ஸூக்ஷ்மமாயுமுள்ள சேதனாசேதனங்களுக்கு நியாமகனும் அவற்றிற்குள் புகுந்து அந்தராத்மாவாகி அவற்றின் தோஷங்களால் தீண்டப் பெறாதவனும் தன்னைப் போன்ற மற்றொரு வஸ்துவில்லாதவனும் தனக்கு மேற்பட்ட வஸ்து எதுவுமில்லாதவனும் நிர்தோஷனும் (குற்றமற்றவனும்) ஸ்வரூபத்தினாலும் குணங்களாலும் மிகுந்த மேன்மையுடையவனும் ஸமஸ்த (எல்லா) கல்யாண குணங்களுக்கும் (நற்குணங்களுக்கும்) இடமான ஸ்வரூபமுடையவனுமாகிய என்னிடத்தில், ப்ரஹ்மருத்ராதியான பூதங்களெல்லாம் நிலைநின்றிருக்கின்றன. என்னுடைய ஸம்பந்தமில்லையாயின் அவற்றிற்கு ஸத்தையே (இருப்பே) நேராது. ஆகையால் ஸமஸ்த பூதங்களும் நானே. தேஹத்தையே ஆத்மாவாக நினைக்கின்ற அறிவிலா மூடர்களே அத்தகைய பூதங்களை எனக்கு உட்பட்டவைகள் அன்று என்றும், என்னைக் காட்டிலும் வேறுபட்டவைகளென்றும் ஸ்வதந்த்ரங்களென்றும் ப்ரமிப்பார்கள். தேஹாத்மப்ரமம் (சரீரத்தையே ஆத்மாவாக நினைக்கின்ற பொய்யான எண்ணம்) ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானுக்குக் கட்டுப்படாதவர்கள், தன்னிச்சையாக செயல்படக்கூடியவர்கள் என்ற பொய்யான எண்ணம்) ஆகிய இவையே “பூதங்கள் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவை” என்று ப்ரமிப்பதற்குக் (கலக்கமடைவதற்குக்) காரணமாகின்றன. 


தேஹத்தையே (சரீரத்தையே) ஆத்மாவாக ப்ரமிக்கின்ற (நினைத்துக் கலக்கமடைகிற) புருஷன் தன்னை விட்டுப் பிரிந்திருக்கமாட்டாத கை கால் முதலிய அவயவங்களில் சிலவற்றைத் தன்னுடையதென்றும் பிறனுடையதென்றும் எப்படி நினைக்கமாட்டானோ, அப்படியே என்னிடத்தில் மனப் பற்றுடையவன் பூதங்கள் என்னை விட்டுத் தனியேயிருப்பவையென்றும் எனக்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமாயிருப்பவையென்றும் நினைக்கமாட்டான். வாராய் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டனாகிய தக்ஷனே! என்னுடைய ஸங்கல்பத்தினால் என்றும் ஒருவகைப்பட்ட நிலைமையுடையவர்களும் ஸர்வ பூதங்களும் (எல்லா ஜீவராசிகளும்) தாங்களேயென்னும்படி தமது அன்பிற்கிடமாயிருக்கப் பெற்றவர்களுமாகிய ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்கள் மூவரில் ஒருவர்க்கொருவர் வேறுபட்டவரென்று எவன் பேதம் பாராட்டாதிருப்பானோ, அவன் மனது சாந்தமாயிருக்கப்பெற்று மோக்ஷம்பெறுவான்.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் பகவானால் மொழியப் பெற்ற தக்ஷப்ரஜாபதி தான் செய்யத் துவங்கின யாகத்தினால் பகவானை ஆராதித்து வானவர்களையும் ப்ராஹ்மணர்களையும் அவரவர்க்குரியபடி பூஜித்தார். மற்றும், அந்த தக்ஷப்ரஜாபதி மன ஊக்கத்துடன் ருத்ரனுக்கு ஏற்பட்ட பாகத்தைக் கொடுத்து அவனையும் பூஜித்துக் கடைசியில் செய்ய வேண்டிய அவஸானேஷ்டியென்னும் (யாகத்தின் முடிவில் செய்யப்படும் செயல்) கர்மத்தையும் நடத்தி ஸோமபானம் செய்த (ஸோமம் என்ற ஒருவகை கொடியின் சாற்றை யாகத்தின் முடிவில் பருகிய) தேவர்களையும் அது செய்யப் பெறாத மற்ற தேவர்களையும் ஆராதித்தார். பிறகு ருத்விக்குகளோடு அவப்ருதஸ்னானம் (யாகத்தின் முடிவில் நீரில் அமிழ்ந்து நீராடுதல்) செய்தார். தமது ப்ரபாவத்தினால் யாகஸித்தி கைகூடப் பெற்ற (யாகம் முழுமையாக முடியப்பெற்ற) அந்த தக்ஷருக்கு மேன்மேலும் தர்மத்தில் புத்தி செல்லும்படி அனுக்ரஹித்து அந்த தேவதைகள் ஸ்வர்க்க லோகம் போய்ச் சேர்ந்தார்கள். இங்கனம் தக்ஷருடைய புதல்வியாகிய ஸதீதேவி முன் தேஹத்தைத் துறந்து (உடலை விட்டு) ஹிமவத் பர்வதத்தினுடைய (பனி மலையான இமய மலையினுடைய) பத்னியான மேனை என்பவளிடமிருந்து பிறந்தாளென்று பராசராதிகள் (பராசரர் முதலிய முனிவர்கள்) சொல்லக் கேட்டிருக்கின்றோம். மீளவும், இரண்டாவது ஜன்மத்திலும் பார்வதியானவள் வேறொருவனிடத்தில் மனம் செல்லப் பெறாதவளாகித் தன்னையே சிந்தித்துக் கொண்டிருப்பவனும் மிகுந்த அன்பிற்கிடமுமாகிய ருத்ரனையே பர்த்தாவாக (கணவனாக) அடைத்தாள். எங்கனம் சேதனாசேதன ரூபமான சக்திகள் ப்ரளய காலத்தில் பரமபுருஷனிடத்தில் மறைகின்றனவோ, அங்கனமே அவள் அந்த ருத்ரனையே கணவனாகப் பெற்றாள். தக்ஷருடைய யாகத்தை த்வம்ஸம் செய்த (அழித்த) மஹானுபாவனாகிய ருத்ரனைப் பற்றின இந்த வருத்தாந்தத்தை, ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும் பகவத்பக்தருமாகிய உத்தவரிடத்தில் நான் கேட்டேன். ஸர்வேச்வரனான பரமபுருஷனையே பணியும் தன்மையுள்ள ருத்ரனுடையதான இந்தச் சரித்ரம் யசஸ்ஸையும் (புகழையும்) ஆயுளையும் வளர்க்கும் தன்மையது; பரிசுத்தமாயிருக்கும்; ஆகையால் எப்படிப்பட்ட பாப ஸமூஹங்களையும் (கூட்டங்களையும்) போக்கும் திறமையுடையது. வாராய் கௌரவ ச்ரேஷ்டனே! இப்படிப்பட்ட இந்த வ்ருத்தாந்தத்தைக்கேட்டு எவன் கேட்டபடியே பிறர்க்குச் சொல்வானோ, அவன் ஸர்வகாலத்திலும் பகவத்பக்தி நிஷ்டனாகி (நிலை நின்றவனாகி) பகவானை அடைவதற்குத் தடையான பாபங்களெல்லாம் தொலையப் பெறுவான். 


ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக