சனி, 11 ஜனவரி, 2020

உயர் பாவை - 27 - சதாரா மாலதி

மாலே!...

என் மேல் மயக்கம் கொண்டவனே! என்று அழைத்தாள் ஆண்டாள். உனக்கு எப்படித்தெரியும்? நான் சொல்லவேயில்லையே என்றான் கண்ணன். சொன்னால் தானா? பார்த்தாலே தெரிகிறதே! கண்ணாடி போல் உன் உருவத்து மணிஒளியில் தகதகவென்று பித்துப்பிடித்த காதல், மால் வடிவில் மறைக்கப்பட முடியாமல் தெரிகிறதே!மணிவண்ணா! என்றாள். இவ்வளவு நாளும் என் காதல் ஒருதலைக்காதலோ என்று நினைத்தேன். ஒரு முயற்சியும் நீ எடுக்கவில்லையே என்று சந்தேகப்பட்டேன். உனக்கிருந்த தடைகள் இப்போது தான் தெரிய வந்தன. என்னைப்போலவே உனக்கும் வெளியில் வர இருந்த தயக்கங்களும் கூச்சங்களும் நிபந்தனைகளும் நம்மைப்பிரித்தன என்று தெரிந்து கொண்டேன். உனக்கிருக்கிற அன்பு என் அன்பில் துளியும் குறைவில்லை என்று தெரிந்துகொண்டேன் என்பதை மாலே! என்கிற விளியிலேயே அறிவித்து விட்டாள். 

அன்பே உருவான பரமே! அபரிமிதமான அன்புடையவனே மாலே! நீலரத்னம் போன்ற வடிவையுடையவனே! மார்கழி நீராட்டத்துக்காக முன்னோர்கள் செய்யும் கிரியைகளுக்கு வேண்டும் உபகரணங்கள் என்னவென்று கேட்பாயாகில் அவை பின்வருமாறு. ஒரு சிறு ஆலிலைக்குள் உலகமெல்லாம் அடக்கிப்படுக்கும் சாகஸம் அறிந்த பரமே! உன்னால் ஆகாதது ஏதுமில்லை. பூமி முழுதும் நடுங்கும்படி ஒலிக்கக்கூடிய பால் போன்ற நிறமுடையதான ஸ்ரீபாஞ்சசன்னியம் போன்ற சங்கங்களையும் புகழுடைய மிகப்பெரிய பறைமேளங்களையும் திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் மங்கள தீபங்களையும் கொடிகளையும் மேற்கட்டிவிதானங்களையும் அளித்தருள வேண்டும். இது தான் பாசுரத்தின் பொருள். 


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
பாலண்ண வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே 
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே 
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே 
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலினிலையாய் அருளேலோர் எம்பாவாய்

சரணாகத வத்சலன் என்றபடி எல்லாருக்கும் புகலிடம் ஆவது இராமாவதாரத்தின் உள்ளீடு. மால் என்றபடி அத்தனை பேரையும் அபரிமிதமாக நேசித்தது கிருஷ்ணாவதாரத்தின் உள்ளீடு. வ்யாமோஹம் என்கிற கட்டுக்கடங்காத காதலே கிருஷ்ணாவதாரத்து சாரம். மாலாகி இருப்பவனை மறுக்கமுடியாதபடி மணிவண்ணன் வேறு. காதலிக்க இன்னொரு பெரிய தகுதி இந்த வடிவழகு. கடூரமான மனம் கொண்டு விரக்தியாய் மறுக்க நினைக்கிறவர்களையும் காலைக்கட்டிக்கொண்டு சிறைப்பிடிக்கிறது இந்த அழகு. 

மாலாய்ப்பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை என்றபடி பைத்தியமாய்க் காதலிக்கும் பரத்தை ஜீவன் கண்டு கொண்டது. 

மோஹமே ஸ்வரூபமானவனே! முந்தானையில் முடிந்து கொள்ளலாம்படி கையடக்கமாய் அமூல்யமாய் இருப்பவனே! என்றாள் ஆண்டாள். [மணி என்ற வார்த்தை பகவானை இப்படித்தான் ஒப்பு நோக்க வைக்கிறது. மணியை உடையவர் மதிக்கப்படுவர். மணி கிடைத்தால் பாக்கியம். கிடைக்காமல் போனால் துயரம். மணி கைப்பட்டால் செல்வம் எல்லாம் தாமே வரும். அவனுடைய மோஹ வடிவம் மணி போல் உள்ளிருப்பதை வெளிக்காட்டும் அவன் தேகத்தில் தெரிகிறது] 

இப்படிப்பட்ட பித்துப்பிடித்த காதல் பக்தி என்று அடையாளப்படுகிறது ஆன்மீகத்தில். பக்தி என்பதை நாம் சுலபமாக உச்சரிக்கிறோம். நமக்கு பக்தி இருப்பதாகவும் இல்லாததாகவும் சொல்லிக்கொள்கிறோம் அந்த பக்தி எது என்பதை அறியாமலே. இல்லை என்பவர் மனதிலும் பக்தியிருக்கிறது அந்த உணர்வுக்கான படிகளை அவர்களறியாமல் மேலெடுத்து வந்திருப்பார்களேயானால். இருப்பதாகச் சொல்லும் பலருக்கு பக்தி முதலிரு படிகளைக் கூட தாண்டவில்லை என்பது விசித்திரமான உண்மை. 

பக்தி என்பதற்கு முதல் படி பிறப்பு. தப்பாகச் சொல்லவில்லை. பிறப்பினால் யாருக்கும் உயர்வில்லை செயல்களால் தான் உயர்வு என்பதை எல்லாரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம். வைணவத்திலும் ஆழ்வார் வரிசையைப்பார்த்தாலே தெரியும். குலசேகரர் அரசர், திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்டவர், எல்லாக்குலமும் எல்லா அந்தஸ்தும் உண்டு ஆழ்வாருக்குள். ஆனால் அதைத் தொட்டு வித்தியாசமில்லை. கருவிலே வந்த திரு என்கிறபடி நமக்கு முதல் வெகுமதியாக நாம் மதிக்கக்கூடிய பெற்றோரோடும் நமக்கு ரோல்மாடலாகக்கூடிய முன்னோர்களையும் முன் படைத்துப் பிறப்பது நம்மில் சிலருக்கே வாய்த்த ஒரு சிறப்பு. அதை ஜாயமான கடாட்சம் என்கிறார்கள். எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின்றி சூழலில் இணக்கமின்றி பின்பற்ற ஆளின்றி பிறக்கின்றன. அப்படியில்லாமல் பின்பற்ற ஒரு பற்றுகோலோடு பிறப்பது முதல்படி. அதன்பின் சத்வகுணம். குறிப்பிட்டவனுக்கு இயல்பாகவே அமைந்த அறம் சார்ந்த பண்புகள் இரண்டாவது படி. எப்போதும் சோம்பலுக்கு இடம் தராமல் அராஜகத்தை நம்பாமல் அமைதியை இறுதி நன்மையாக விரும்பும் தன்மையைக்கொள்வதே ஸத்வகுணம். மூன்றாவது அத்வேஷம். சத்வகுணம் தலையெடுத்த உடனேயே அறம் விரும்பிகளை எதிரிடாத நல்ல குணம் அமைந்து விடும். த்வேஷம் என்கிற விரோதம் அறம் விரும்பிகள் மேல் மட்டுமில்லை ஏதாவது ஒரு வகையில் எதிராளி அறம் விரும்பியாக இருக்கக்கூடும் என்று benefit of doubt கொடுத்து வெளிப்படையாக தர்ம விரோதியாக இருப்பவனைக்கூட த்வேஷிக்காமல் இருத்தல் அத்வேஷம். அப்படியிருக்க வெளிப்படையாக தர்மாதிக்கங்களில் இருப்பவர்களை அயோக்கியராக இருப்பரோ என்று சந்தேகித்து வாய்க்கு வந்ததைச் சொல்லாமலிருப்பதும் அத்வேஷம். சிலர் சொல்வார்கள், நான்கோயிலுக்கெல்லாம்போவதில்லை, கோயிலுக்குப் போகிறவன் ஆதாயத்துக்குப் போகிறான் கொள்ளையடிக்கப் போகிறான் என்கிற மாதிரி சொல்வார்கள். தனிமனித இழிவுக்கெல்லாம் நிறுவனம் பொறுப்பில்லை. தீர அறியாமல் த்வேஷம் செய்யாமல் இருக்கும் பண்பு சத்வகுணத்தினால் இயல்பாக வரும். நான்காவது ஆபிமுக்யம். ஆபிமுக்யம் என்பது ஒருவனுக்கு மனமுகந்து வரும் priority வரிசை. ஒருவனுக்கு உறவு சார்ந்த கடமையும் புலன் சார்ந்த செயலும் மனம் சார்ந்த பிடித்தமும் இழுக்கும்போது அவன் அறம் சார்ந்த கடமையை முதல் மூன்றையும் தாண்டி முன்னெடுப்பானேயாகில் அவனுக்கு ஆபிமுக்கியம் வந்துவிட்டது. [ஒரு மாலையில் புதுவருடக்கொண்டாட்டமும் உறவு விருந்தும் ஒரு கேளிக்கையும் போகக் கட்டாயம் வாய்த்த போது எல்லாம் விட்டு ஒரு சமூக சேவை செய்தாலோ திருப்பாவை கட்டுரை வாசித்து அசைபோட்டாலோ ஆபிமுக்கியம்] அடுத்த கட்டம் நல்லவர் அறிமுகம். நல்லவரை அடையாளம் கண்டுகொள்வதே ஒரு பெரிய வரம் சில பேருக்கு மட்டும் தான் நல்லவர் நல்லவராகக் கண்ணுக்குப் படுவர். தீயவர்களுக்கு நல்லவரைக்கண்டவுடன் பிடிக்காமல் போய் விடும். அப்படி சத்சங்கம் கிடைப்பது ஐந்தாவது படி. அவர்களெல்லாம் ஒத்த மனசுள்ளவர்களாய் முதல் ஐந்து படிகளை ஒன்றாகக் கடந்து நின்றவர்களாய் இருப்பார்கள். இந்த நிலையில் சத்சங்கத்திலிருந்து ஒரு கனவான் தன் organisational skill காரணமாக தலைவனாக அறியப்படுவான். அந்தப்படி ஆசார்யசமாஸ்ரயணம். அதன் பின் கண்டெடுக்கப்பட்ட ஆசார்யனுக்கு குறிப்பிட்டவன் நெருக்கமாவான். அந்த 7ம்படி ஆசார்ய கடாட்சம். ஆசார்யன் எது உன்னதமான பொருள் என்பதை அடையாளம் காட்டுவான் அது பகவத் ஞானம். 9ம் படி பகவத் கடாட்சம். 10ம் படியில் பரபக்தி ஏற்படும் மேற்படி சேதனனுக்கு. பரபக்தி அதிகமாகி காதல் போல இயக்கமெல்லாம் ஆக்கிரமித்துப் பரிமளிக்கிறதும் ஜீவ பரம இரு முனைகளிலும் சமமாக இருப்பதும் மால். அது ஆண்பெண் உறவில் ஏற்படும் தன்னிலை மறந்த ஐக்கியபாவத்தை ஒத்தது.

அதையே மாலே! என்று விளித்தாள் ஆண்டாள். 

உன்னை அர்த்தித்து வந்தேன் என்று சொன்னதும் கிருஷ்ணன் நான் எப்படி உனதாக முடியும்? நான் தர்ம சாஸ்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறவன். பலரின் joint property. நிறைய விதி சார்ந்த விஷயங்களைப் பின்பற்றி நான் சாம்ராஜ்யத்தை நடத்துகிறேன். எல்லா விதியாலும் என்னைக் கிட்டுகிறவர்களையே நான் ஏற்கமுடியும் என்கிறது போலப் பேசாமல் இருக்க போன பாட்டிலேயே நெடுமாலே என்கிற வார்த்தையால் தம்தமக்குள் இருந்த மனஸ் சம்பந்தத்தைச்சொல்லி உன் பிரியம் என்னவாயிற்று என்றாள். அதை இன்னொருமுறை ஞாபகப்படுத்த மாலே என்பதை விளியாக்கினாள். இதற்கு முன்பெல்லாம் கிருஷ்ணனிடம் பரிமாற்றம் ஊர்ஜிதமாகவில்லை. கோபிகையாகக் கற்பனை செய்துகொண்ட இவளை வரவழைப்பான். போனால் எதிர்விழி கொடுத்துப்பேச மாட்டான். இவளிருக்குமிடம் வருவான், 'உன்னைவிட்டு இனி பிரியேன் பிரியில் தரியேன்' என்பான் அடுத்த நிமிடம் மறைந்துவிடுவான். 'சொல்லாதொழியீர், சொன்ன போதாக வாரீர்' என்றபடி இவளை அழவைப்பதே அவன் வேலை. அப்படி இவளுடைய அன்பைப்பெருக்கடித்து இப்படி ஓடி வரும்படி செய்து விட்டான். இப்போது கிட்டத்தில் பார்க்கும்போது தான் தெரிகிறது அவன் இவளுக்காகக் காத்திருப்பதும் கண்ணிலேயே அன்பைத் தேக்கியிருப்பதும். 

ஜீவனின் அன்பு அணு என்றால் பரமன் ஜீவத்தின் மேல் செலுத்தும் அன்பு விபு. சீதா ஒரு மாதம் தான் ஜீவித்து இருப்பேன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினாள் அனுமனிடம். அதைக்கேட்ட இராமன் சொன்னான். ஒருமாதம் காத்திருப்பாளாமா? என்னால் ஒரு நொடி இருக்க முடியாது போலிருக்கிறதே! என்று புலம்பினான். 

இவ்வளவு நாளும் வீணாகிவிட்டது ஆண்டாளுக்கு.அந்தப்பக்கத்தை அறிந்துகொள்ளாமல். 'இராவணன் பின்னே பிறந்த நம்மை ரகுகுலத்திலே பிறந்தார் கைக்கொள்ளுவரோ! என்றிருந்தான் விபீஷணன். 'இராவணனை ஆசைப்படுகிற நமக்கு இராவணன் பின்னே பிறந்தவன் சித்திக்கப்பெறுமோ! என்றிருந்தான் இராமன். அப்படி 'நாராயணனை நமக்குக் கிடைக்குமோ என்பது ஆண்டாள் நினைவு. யதுகுலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப்புகுகிறதோ என்பது அவன் நினைவு. ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தது கம்சனுக்குப்பயந்து மட்டுமல்ல. வேறு சில காரணத்துக்கும் அல்லவா? 

நம்மாழ்வார் பக்தி பெருக்கெடுத்துச் சொன்னார். தாகத்தினால் தபிக்கும் ஒருவன் ஒரு குளத்தைக்கண்டால் அதிலுள்ள தண்ணீர் பூராவும் குடிக்க ஆசைப்படுவதைப்போல 'வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில்' என்று நினைத்தாராம். ஆனால் நேரில் வந்ததும் 'என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்' என்று முடித்தார். அவன் பிச்சாய் இருந்து நம்மையும் அவனிடம் பிச்சாக்கிவிடுகிறான். காதலில் ஆண் பெண்ணுக்கு நேர்வதும் இதே! யார் முதலில் என்பது போட்டிக்குரிய விஷயமாகும். 

காதலுக்குத் தோற்காத விரக்தியாளர்களை வடிவழகில் தோற்பிக்க எடுத்துக்கொண்ட பேர் மணிவண்ணன். பீஷ்மன் வீரத்தில் இணையாகி காதலில் சிக்காமல் சண்டையிட கண்ணன் சக்ராயுதத்துடன் பீஷ்மனை நோக்கி பாரதப்போரில் நடந்து வந்து அந்தத் தோற்றத்தில் மயங்கி ஆயுதம் கீழே போட்டு 'லோக நாத! உன்னை நான் அடி பணிகிறேன்' என்று பீஷ்மனைச் சொல்ல வைத்தான். அவன் மணிவண்ணன். பனிமலராள் வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன் என்றபடி அந்த வடிவுக்காகத்தான் தாமரையாள் மயங்கி வந்தாள். 

கீதையில் மாமேஹம் சரணம் வ்ரஜ என்று சொல்லிக்கொண்டதில் 'மாம்' ஆண்டாள் வார்த்தையில் மால் ஆயிற்று. 'அர்ஜுனா! நான் யார் தெரியுமா? என்னைக் கேவலம் சாரதி என்று நினைக்காதே நான் சர்வ்க்ஞன் சர்வசக்தன் அந்தப்பரமன் என்பது தொனிக்க 'அஹம்' என்றான். அந்த அஹம் என்ற வார்த்தையின் முழுப்பொருளை அவனுடைய அகடிதகடினா [அடாவடி] சாமர்த்தியத்தை ஆலினிலையாய் என்ற வார்த்தையில் அடக்கினாள் ஆண்டாள். நீ சாக்கு போக்கு சொல்லாதே உன்னால் எதுவும் முடியும் என்பது எனக்குத் தெரியும் என்பது அந்த விளியின் பொருள். மாலாய் ஆலிலை வளர்ந்து என்பது பெரிய திருமொழி. அதை அப்படியே இங்கு நீர்மைக்கும் உன்னதத்துக்கும் குறிப்பாக வைத்து விட்டாள் ஆண்டாள்.

'அருளாதொழியுமே ஆலிலை மேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்.... என்றபடி வடபத்ர சாயி,வடதள சாயியைக் கேட்காமல் வேறு யாரை அருளக்கேட்பது? 

அதென்ன மார்கழி நோன்பு? கேள்விப்படாததாக இருக்கிறதே என்று கண்ணன் புருவம் நெரித்தான். 'ஜ்யோதிஷ்டா ஹோமாதி விதிகள் போல பிரசித்தமோ? மார்கழி நோன்பு என்பது?' என்று கேட்டான். 'பிரயோசனம் வேண்டி நான் நோன்பு செய்யவில்லை. என்னைப்போய் விதி கேட்கிறாயே! 'என்றாள் ஆண்டாள். 'அப்படியானால் முமூட்சுக்களின் தியான விதி போல பிரசித்தமா அந்த நோன்பு?' என்று கேட்டான் கண்ணன். 'நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இருக்கிறவர்களுக்கு எந்த நீதி சாஸ்திரங்கள் விதி சொல்லியிருக்கின்றன? பெரியவர்களின் வசனமும் நடைமுறை ஞானமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை அல்லவா?' என்றாள் ஆண்டாள். சிஷ்டாசாரமே ஸ்திர விதி. 'யாதொன்றை யாதொன்றை சிரேஷ்டர்கள் ஆச்ரயித்தார்களோ யாதொரு அளவு செய்தார்களோ அவ்வளவும் லோகம் அநுவர்த்திக்கும்' என்று நீ தானே தேர்த்தட்டில் நின்று சொன்னாய்? சாஸ்த்ரம் விதித்திருந்தாலும் அனுஷ்டானத்தில் இல்லாத ஒன்றைத் தவிர்க்க வேண்டுமென்றல்லவோ சொல்லியிருக்கிறது?' என்று கேட்டாள் ஆண்டாள். Rules ஐ விட convention பெரிதல்லவா? சிஷ்டாசாரம் என்று மேலயார் [பூர்வர்கள்] செய்திருந்தால் அது விதிக்கு ஒப்பாகுமே என்றாள் ஆண்டாள். 

அந்த விரதத்துக்கு சங்கு வேண்டும், [பாலைத்திரட்டினாற்போல பல சங்கு] எங்கும் த்வனிக்க பறைமேளம் வேண்டும், மங்கள தீபம் வேண்டும், திருப்பல்லாண்டு பாடிக்கொண்டு போவார் வேண்டும், திருக்கொடி வேண்டும், மேல்கட்டி [பந்தல் உபகரணங்கள்] வேண்டும் என்றாள். அதாவது உனக்கு இருப்பவை எல்லாம் வேண்டும். தன் கொண்டை, கிளி சூடிக்கொடுத்த மாலை, இத்யாதி எதையும் தந்ததாகத் தெரியவில்லை. அவன் அடையாளங்களை எல்லாம் உரிமையுடன் கேட்கிறாள். 

பெருமாள்திருப்பள்ளியெழுச்சிக்கு சங்குவேண்டும். புறப்பாட்டுக்குப்பறை வேண்டும். புறப்படும்போது திருப்பல்லாண்டுக்கு அரையர் வேண்டும். அவர்களின் முகம் தெரிய விளக்கு வேண்டும். நெடுந்தூரத்திலேயே சிலர் கண்டு உகக்கும்படி கொடி அசைய வேண்டும். பனி தலை மேல் விழாமல் மேற்கட்டி வேண்டும்....என்ற ஆண்டாள் 'மாரிமலை' பாசுரத்தில் ஹ்ருத்யாகத்துக்கு அழைத்தது போல இங்கு பாஹ்யாகம் என்ற இன்னொரு பூஜாவிதியைக் குறித்து அதற்குப் பெருமாளை அழைக்கிறாள் என்பதும் ஐதீகம். சங்கூதுவது மந்தஸனம் என்றும் பறையடித்தல் திருமஞ்சனம் என்றும் பல்லாண்டிசைப்பது அலங்காரம் என்றும் விளக்கேற்றுவது நைவேத்தியம் என்றும் கருடக் கொடி வருவது புனர்மந்த்ராசனம் என்றும் மேற்கட்டியாக ஆதிசேஷன் வருவது பள்ளியறை பூஜை என்பதாகவும் அர்த்தப்படும். 

உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள்... போலவே உன் பறையே, உன் பல்லாண்டிசைப்பாரே, உன் விளக்கே, உன் கொடியே, உன் விதானமே என்று எல்லாவற்றுக்கும் உனது போலவே எனக்கும் என்று பொருள் கொண்டால் 'பகவத் சாம்யம்' கேட்கிறாள் என்கிற கூற்று புரியும். உன்னிடம் இருப்பதெல்லாம் எனதாக வேண்டும். உனக்கும் சுலபமல்லவா? Delegate your powers, decentralise them என்கிறபடி. அல்லது உனக்கும் எனக்கும் ஒரே தன்மை வேண்டும். அதல்லவோ ஐக்கியம்? என்கிறபடி.

ஒப்பில்லாத இந்தப் பாசுரத்தைக்கேட்டு கண்ணன் பாஞ்சசன்னியத்தை அனுப்பிவைத்தான், கோகுலத்தில் பறைகரங்கக் குரவையாடியபோது அரையில் கட்டியிருந்த பறையைக் கொடுத்தனுப்பினான். பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான்.

எல்லாவற்றோடும் பரமனுக்குச் சமமாகியது ஜீவன். அடுத்து சாயுஜ்யம் பெற காத்திருக்கிறது 'கூடாரை' பாசுரத்தில். 

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக