26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலண்ண வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோர் எம்பாவாய்
கண்ணன் எம்பெருமான் கிண்டல் காரன். போன பாட்டிலே சொன்னீர்கள் 'அருந்தித்து வந்தோம் பறை தருகியாகில்'. என்னை வேண்டி இருப்பவர்கள் என் அருகாமையைத் தவிர வேறொன்றும் வேண்டிலர்கள். நீங்கள் சொல்வதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
'பறை என்பது ஏது?. அதற்கு மூலாதாரம் என்ன?. அதைப் பெற்றிட என்னவெல்லாம் தேவை?. அதனுடைய எண்ணிக்கை என்னவோ? சொல்லுங்களேன்' என்று விளிக்கவும்.
'உன் திருமுகத்தை நேருக்கு நேர் காண வேண்டும். உன் திவ்ய நாமங்களை வாயாறச் சொல்ல வேணும். அதற்கு வழி காட்டிடும் ஒரு பாவை நோன்பினை, எங்கள் குலப் பெரியவர்கள், உன்னோடு அன்னியோன்னியம் கொள்வதற்கு ஒரு கருவியாய் உபதேசித்ததனால், இந்த நோன்பினில் ஈடு பட்டுள்ளோம். இந்த நோன்பினுக்கான அங்கங்களையும் நீ தான் தந்தருள வேண்டும்.
இதற்கு முன்னே இந்த ஆயர் சிறுமிகள் அவன் மேல் எங்களுக்கு ஆசை என்று புலம்பிக் கிடந்தார்கள். நேரில் கண்ணனைக் கண்ட மாத்திரத்திலே, கடலை போன்று கையில் பிடிக்க மாட்டாது என்று எண்ணியிருந்த கண்ணனின் நெருக்கம் இப்போது கைகளுக்குள் வந்ததே என்ற பெருமித உந்தலால் 'மாலே' என்று விளிக்கிறார்கள்.
'மாலே' - நாங்கள் உன்னைத் துயிலெழுப்ப வந்த போதில் நீ விழிக்காமையால், ஏன் இந்தப் பிடிவாதமா என்னும் வியப்பின் படியால், நாராயணனே, பையத் துயின்ற பரமனே, நமக்கே பறை தருவான், தேவாதி தேவனே என்று உன் பெரும் குணங்களைப் பாடிக் கிடந்தோம்.
எங்களின் சொல் படி வாத்சல்யத்தோடு எழுந்தருளி, எம் கோரிக்கைகள் கேட்டுக் கிடக்கும் உன்னை, உன் சரணாகத வாத்சல்யத்தைக் குறித்திடும் 'மாம்' (நானே), என்னும் மஹாபாரதத்தில், பகவத் கீதையின் சர்ம ஸ்லோகச் சொல்லாலே விளிக்கிறோம்.
'மணிவண்ணா' எல்லாம் வல்லவனான போதிலும், சேலைக்குள் முடிந்து வைத்துக் கொள்ளும் வகையில் சௌலப்யமானவன் (எளிமையானவன்) . தாமரை மலரிலிருந்து நீங்கி இவனிடம் வந்த பிராட்டியாரை 'பனி மலராள் வந்திருக்கும் மார்பன் நீல மேனி மணி வண்ணன்' என்பார்கள்.
கண்ணன் சொல்கிறான். யசோதையும் கூட 'எனக்கென்றும் இனியானை என் மணி வண்ணனை' என்று உங்களைப் போல் தான் சொல்லுவாள் என்கிறான். என்னைப் பாடிக் கிடப்பது நிற்க!. நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லுங்களேன்.
'மார்கழி நீராடுவான்' - கண்ணா உன்னோடு சேர்ந்து மார்கழி நீராட வந்திருக்கிறோம். கண்ணன் கேட்கிறான் 'இதற்கான விதி முறைகள் எங்கே உளதோ?'. ஆய்ச்சியர் சொல்கிறார்கள் 'கண்ணா நீ ஒரு நாத்தீகனைப் போல பேசிடலாமோ?.
'மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்' - வ்யாஸனும், மனுவும், ப்ரஹ்மாதிகளும் கூட அவர்களுக்கும் பூர்வாச்சாரியார்களைக் கொண்டு தானே பேசினார்கள். கண்ணா நீ சொன்னாயே 'யாதொன்றை சீலர்கள் பிரயோகித்தார்களோ, யாதொருவளவு செய்தார்களோ, அந்த அளவு லோகம் அனுவர்த்திக்கும் (கடைப் பிடிக்கும் ) என்ற கற்பவரின் ப்ரமாணங்களாய் சொன்ன நீயே மறந்து விட்டாயோ?'. எம் பூர்வர்கள் செய்த விதத்திலேயே நாங்களும் கடைப்பற்றி, உன் பறை நாடி வந்துள்ளோம்.
'ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்யமே' - பாரதப் போரிலே நீ முழங்கிய சங்கின் ஓசை கேட்டு துரியோதனாதிகள் நடுங்கிய வண்ணம் எங்கள் நோன்பினை எதிர்க்கும் கூட்டம் நடுங்கட்டும். பாலைத் திரட்டிச் செய்தது போன்ற வெண் சங்கு. 'ச கோஷத ஆர்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதய நிவ்ய தாரயத்' - ஜகத்தையெல்லாம் வாழும்படி த்வனிக்கைக்கு ஆதாரமான சங்கு.
'சாலப் பெரும்பறையே' - எங்களுக்குப் பறை தரும் பெரும்பறையே, எழுச்சிக்கு சங்கு ஊதியதைப் போலே புறப்பாட்டுக்கு சங்கு ஊத வேண்டாமோ
'பல்லாண்டு இசைப்பாரே' - பல்லாண்டு பாடுவோரும் கூட வேண்டும். கொட்டிக் கொண்டு புறப்படும் போதில் காப்பிடுவோரும் வேண்டும்.
'கோல விளக்கே' பாடுவார்கள், காப்பிடுவார்கள், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் நோக்கும் வண்ணம் ஒளி பரப்பும் விளக்கே
'கொடியே' - கிட்டத்திலிருப்பவர்களை அடையாளம் காட்டும் விளக்கைப் போலே, தொலைவில் உள்ளவர்களை அறியும் வண்ணம் யாரும் கொடி தாங்கிட வேண்டும்.
'விதானமே' - புறப்படுகையில் பனி வீழாது காக்க தலை மேலே அணிந்த சீலையைப் போலே, நீராடும் போதில் மேலணியும் வஸ்திரம் வேண்டும்.
'பறை' - பாரோரை மகிழ வைக்கக் குடக் கூத்தாடின போதில் திருவரையில் ஒலித்த பறை; திருப்பல்லாண்டு பாடிட பெரியாழ்வாரையும், விளக்குக்கு நப்பின்னைப் பிராட்டியையும், கொடிக்கு புள்ளரையனான பெரிய திருவடியையும், உன்னை எப்போதும் பிரியாத மேலாப்பான அனந்தாழ்வானையும், எங்கள் நோன்புக்கு உடன் இருக்க வேண்டுகிறோம்.
'ஆலினிலையாய்' ஆலிலை மேல் ஒரு பாலகனாகக் காண ஆசைப் படுகிறார்கள். வட பத்ர சாயியில், கண்ணனை 'பண்டொரு நாள் ஆலின் இலை வளர்ந்த சிறு கனவு இவன்' என்றனுபவித்ததை ஆண்டாள் வழியாய் ஆயர் சிறுமிகள் கோருகிறார்கள்.
'மாலே மணி வண்ணா' - 'மாம் (நானே)' என்ற சித்தாந்தத்தை அடக்கிய சொல் 'மாலே'. 'ஆலினிலையாய்' - அஹம் (எல்லாவற்றுக்கும் அடங்கிக் கிடப்பவன்) என்பதை அடக்கிய சொல்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்