ஒருத்தி மகனாய்ப்பிறந்து
தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் வளர்ந்து என்று சொல்லாமல் பெற்றதொருத்தி வளர்த்ததொருத்தி என்று ஏன் மறைத்து மறைத்துப் பேசுகிறார்கள்? ஒளிந்து வளர்ந்த அதே சூழலை மனசில் வைத்து இப்போதும் ஏதாவதொரு கம்சன் 'ஓஹோ கண்ணன் தேவகிக்குப் பிறந்து பின் யசோதையிடம் தான் வளர்கிறானா' என்று தெரிந்துகொண்டு google searchல் தேடிக் கண்டு பிடித்துக் குழந்தையாக இருக்கச்செய்தே கொன்றுவிடுவானோ என்று அஞ்சுகிறமாதிரி பூடகமாய் ஒருத்தி ஒருத்தி என்கிறார்கள். அது தான் காரணமா? இருக்கமுடியாது. பெற்றவள் தேவகி.
அவள் தன் திருமண நாளன்று அண்ணன் திருமண உலாவில் சாரத்தியம் செய்ய அசரீரி கேட்ட துர்ப்பாக்கியவதி. அன்று ஆரம்பித்தது அவளது துயர். அவள் பட்ட துன்பம் இன்னொரு பெண் பட்டிருக்கமுடியாது. அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி இல்லை. பின் அண்ணனே எதிரியாக அவள் சிறைச்சாலையில் குடும்பம் நடத்தினாள். அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி இல்லை. புத்திரகாமேஷ்டி செய்து நாலு புத்திரர்களைப்பெற்ற மூன்று தாயர் போலின்றி ஒரே கோபாலரத்தினத்தைத் தான் ஒருத்தியே தரித்தாள். அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தியில்லை. பிரபஞ்சத்துக்கே காரணபூதனும் அதைக் காக்கவும் போரவும் நியமிக்கவும் கடமைப்பட்டவனுமான ஒருவனைத் தான் காத்துப் போர நியமிக்கக் கருவில் தாங்கினாள். அவள் ஒருத்திஅவளைப்போல் இன்னொருத்தியில்லை. அப்படி அவன் ஒருவனைப் பெற தன் கண்முன் ஆறு குழந்தைகளைக் கல்லிடைமோதி அண்ணன் கொன்று குவித்த காட்சியைச் சகித்தாள். அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி உண்டா சொல்லுங்கள். எந்தப் பெண்ணுக்கும் கிடைக்கும் சாதாரண பேறுகால போஷணையுமின்றி சிறைச்சாலையில் ஒரு விளக்கின்றி ஒரு பால்பழமின்றி மங்கலப் பொருட்களின்றி பிரசவித்தாள். பிள்ளையை வரவேற்க சுத்தம் செய்யப்பட்ட அறையில்லை, கோலமில்லை, சூடாக வென்னீரில்லை, மங்களம் சொல்ல உறவினரில்லை, சோபனம் பாடப் பெண்களில்லை, மானிடக்குழந்தைக்கும் கிடைக்கும் எந்த உபச்சாரமுமில்லாமல் கண்ணனைப் பெற்ற அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி யில்லை. கர்மவச்யன் பட்டதைக் க்ருபாவச்யன் பட்டான், கர்ப்பத்திலிருந்து விழுந்த குழந்தை நாளெல்லாம் தூங்கும் அலுத்துக்களைத்திருக்கும் கண்ணனோ உடனே ஒரு பிரயாணம் மேற்கொண்டு கோகுலம் கிளம்பினான். பிறந்த குழந்தையை உடனே வழி அனுப்பிவைத்த தாய் தேவகி. அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தியைக் கண்டார்களா? காலப்பரிமாணமில்லாத வஸ்துவை ஒரு குரூரமான இரவில் மழையிருட்டில் கடவுள் என்று அறிந்தபின்னும் சங்கு சக்கரத்தை மறைத்துக் கொள் என்று கட்டளையிட்டு அனுப்பிவைத்தாளே அவள் ஒருத்தி. இதெல்லாம் இன்னொரு பெண்ணுக்கு நடந்ததுண்டா? தேவகி ஒருத்தி தான். அவளைப்போல் இன்னொருத்தியில்லை. அதனால் ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்றார்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தேவகியை ஒருத்தி என்றது சரிதானே?
பெற்றவளைப் போலவே வளர்த்தவளும் ஒருத்தி. ஞாலத்தில் புத்திரனைப்பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை என்று சொல்லிக்கொண்டவள். கட்டவும் அடிக்கவும் கோல் கொண்டு ஆட்டிவைக்கவும் கடவுளை வத்திருந்த அவள் 'பெருங்குடிப்பிறந்து பெரும்பிள்ளை பெற்ற யசோதை' என்று கொண்டாடப்பட்டாள். அங்கு அவதாரரசம் இங்கு லீலாரசம். அங்கு திருப்பிரதிஷ்டை இங்கு ஜீரணோத்தாரணம். 'யசோதா, உன்பிள்ளையைக்கூப்பிட்டுக்கொள், உருக வைத்த குடத்தொடு வெண்ணை உறிஞ்சி உடைத்திட்டுப்போந்து நின்றான்' என்று அயல் பெண்கள் முறையிட 'அஞ்சனவண்ணா, அயலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் காகுத்த நம்பி, வருக இங்கே' என்று துடித்தவள். குச்சியைக்கொடுத்து மாடு மேய்க்க அனுப்பிவிட்டு 'கன்றின்பின் எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன்?' என்று கதறினவள். 'கண்ணா, நாளை தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலஞ்செய்திங்கேயிரு' என்று இறைஞ்சியவள். நாவழித்து வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்றபடி மாயம் எல்லாவற்றுக்கும் சாட்சியானவள்.
இடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளும் மங்கை இறுத்திடும்
ஒடுங்கிப்புல்லில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கில்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
[எனக்குத் தெம்பில்லைம்மா ரொம்ப படுத்தறான்]
என்று தாய்மையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தும் புலம்பியும் தீர்த்தவள். தொல்லையின்பத்து இறுதி கண்டவள் அவளும் ஒருத்தியல்லாமல் என்ன? ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பாக்கியவதி அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி கிடையாது. அதனால் ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்ததை அது பொறுக்காத கம்சன் துன்பம் தந்ததை அவன் கெட்ட எண்ணத்தை முற்றிலும் முறியடித்து அவன் வயிற்றில் மரணபயமாக கண்ணன் உறைந்ததைப் புகழ்ந்து பாடினார்கள் ஆண்டாளும் அவள் தோழிமார்களும்.
நாட்டார் செய்வதெல்லாம் செய்யப் பெறாதே கள்ளர் பட்ட பாடு பட்டான் ஒளித்து வளர்ந்தவன். அவதரித்தபின்னும் அந்தர்யாமி பட்ட பாடு அது. நிலவறைகளில் [underground] வளர்ந்தான். லோபாமுத்திரை காவேரியாகி தலக்காவேரியில் பிறந்து ஒளிந்து குப்தவாகினியாகி குடகில் வெளிப்பட்ட மாதிரி.
அந்தியம்போது அங்கே நில்லேல் வானிடைத்தெய்வம் காண என்று தேவர்கள் பார்க்கும்படி கண்ணனை நிற்கவிடவும் சம்மதிக்க மாட்டாள் யசோதை. போய்ப்பாடுடைய உன் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன்கடியன் காப்பருமில்லை கடல்வண்ணா உன்னை என்று தாயைப்புலம்பவிடும்படி கம்சன் நலிந்தான். எத்தனை அசுரர்கள்! எத்தனை ஆபத்துகள்! கண்ணனுக்கு! தனியே போயெங்கும் திரிதி என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்? ஏதுமோர் அச்சமில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயம்பூ வண்ணம் கொண்டாய் என்று யசோதையை வயிறெரிய விட்டு கம்சன் பகையுடன் கண்ணன் வளர்ந்தான். தாயின் வயிற்று நெருப்பை கம்சன் வயிற்றுக்கு மாற்றினான்.
பெண்களே மிக வருந்தி வந்தீர்கள் பல்லாண்டு பாடினீர்கள். நாம் பிறந்ததும் வளர்ந்ததும் சொன்னீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான் கண்ணன்.
உன்னை அர்த்தித்து வந்தோம் நெடு மாலே என்றார்கள். உன்னையன்றியும் இன்னொன்று வேண்டி நாங்கள் வந்திருப்போம் என்று நினைத்தாயா? இவ்வளவு நாளும் உன் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாமலிருந்தது. இப்போது நன்றாகத்தெரிந்து விட்டது. உனக்கு எம் மேலான வ்யாமோஹத்தை ஒரே பார்வையில் புரிந்து கொண்டோம் என்பது விளங்க நெடுமாலே என்றார்கள். [மால் என்றால் அபரிமிதமான காதல். மயக்கம் சேர்ந்த மறைக்கமுடியாத பித்துப்போன்ற பெரிய காதல். ஜொள் என்று இப்போது புதிய அகராதியில் சேர்ந்திருக்கும் தமிழ் வார்த்தையின் இலக்கணமே இந்த 'மால்' தான். மீதி விளக்கம் மாலே மணிவண்ணா வில் தொடரும்] கண்ணன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு சுதாரித்தான்.
நெடுமாலே! திரு விரும்பத்தக்க செல்வமும் தொண்டூழியம் என்ற கைங்கர்யமும் கொள்ளவென்று வந்தோம். நீ மனது வைத்து பறையோடு உன்னையும் சேர்த்துத் தருவாயாகில் எங்கள் வருத்தம் தீர்ந்து போகும். என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத்தந்த கற்பகம் என்றபடி காதலின் மகோன்னதமான ரசாயனம் இருக்கிறதே ஒருவருக்கொருவர் நீ நான் மறந்து ஒன்றாகுதல் அதை அடைய வந்தோம். ஏற்கனவே நெடுமாலான உன்னை அர்த்தித்து பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் என்றார்கள்.
வழியெல்லாம் மிக வருந்தினீர்களோ என்ற கண்ணன் கேள்விக்கு இல்லை உன் ஐஸ்வர்யத்தையும் ஆண்மையையும் பாடிக்கொண்டு வந்தோம். அதில் வருத்தமே தெரியவில்லை என்று சொன்னார்கள்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித், தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
அருந்தித்து வந்தோம் பறை தருகியாகில்
திருத்தக்கச் செல்வமும் சேவகம் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
இங்கே ஒரு முக்கியமான திருப்பம். ஆண்டாளின் திருப்பாவை ஒரு மிகப்பெரிய மாஜிக் ஷோ. கிட்டத்தட்ட 'ஸர்க்கராமா' [multi projectorfilm] என்று புரிந்து வைத்திருப்பீர்கள். இவ்வளவு நாளும் நடந்த இருபத்தைந்து பாசுரப் பொழிப்புரையிலும் ஒரு சின்ன வரியை miss பண்ணியிருந்தாலும் புரிதலில் சறுக்கல் நேருமளவுக்குத் திட்பமும் சொன்னதைச்சொல்லல் இன்மையும் கவனித்திருப்பீர்கள். அதில் என் சாமர்த்தியம் எதுவும் இல்லை. கவிதையைச் செய்தவளின் சாமர்த்தியம். எப்படியெனில் காலத்தை விழுங்கி செயல்படுவதுடன் பலபேரா ஆண்டாள் ஒருத்தியா, கூட்டத்தில் நாம் உண்டா, கூட்டத்தில் இனி பிறக்கப்போகிற பிற்கால சந்ததியும் உண்டா, நிகழ்வு நடப்பது பூமியிலா வைகுந்தத்திலா, அங்கும் ஜீவ பரம சந்திப்பில் யத்தனம் உண்டா என்று பல கேள்விகள் வைக்கக் கூடியது திருப்பாவை. எல்லா கற்பிதத்துக்கும் ஆம் ஆம் என்று ஆமோதிப்பு வரும் திருப்பாவை வரிகளில். பரம் என்ற பொருளின் தன்மை சொல்லி ஜீவன் என்ற வஸ்துவைப் பத்து படிகளில் எழுப்பி ஆச்சாரியனிடம் ஞானஸ்நானம் செய்வித்து பிராட்டி மூலம் அருள்வித்து தொண்டில் ஈடுபடுத்தித் தொண்டின் கடைசிப் படியான 'தொண்டுக்காகத் தொண்டு' தத்வத்ரயம் என்ற நிலையை அடைவித்து நிறுத்தியாயிற்று இங்கு. தொண்டுக்காகத் தொண்டு என்றால் என்ன அர்த்தமெனில் எந்தப்பிரயோசனத்தையும் கருதாமல் சேவையை அதில் இருக்கும் சந்தோஷத்துக்காக மட்டும் செய்வது. எப்படியெனில் ஒரு பெண் தன் கணவனை அந்தஸ்துக்காகவோ அறிவுக்காகவோ குணத்துக்காகவோ நேசிக்காமல் அவனுக்காகவே அவனை நேசிப்பது. காதலின் ஒரு கட்டத்தில் இது நேர்ந்து விடும். முதல் சந்திப்பில் பண்பு, அன்பு அந்தஸ்து, அறிவு எல்லாம் பரவசம் ஏற்படுத்தும். காதலில் கலந்தபின் அவன் என்னவாகிப்போனாலும் அவனுக்காகவே அவனை மிக விரும்புகிற கட்டம் வந்து விடும். அது வந்துவிட்டது 'உன்னை அர்த்தித்து வந்தேன்' என்ற வரியில். இனிமேல் ரஸானுபவத்துக்காக மட்டுமின்றி ஆண்டாளின் ஆன்ம விருப்பத்தை கெளரவிக்கும் விதமாக ஆண்டாள் ஒருத்தியே நிற்பதாகக் கற்பனை செய்வோம். உண்மையில் ஆண்டாள் கவிதை செய்தது அப்படித்தான். வீட்டின் உக்கிராண அறைக்குள் இருந்த ஒரு பெண்ணெழுதித் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டது தானே திருப்பாவை! அஞ்சு லட்சம் பேர் கோபிகள் எல்லாம் பொய் அல்லவா? இப்போது நிற்கிறவள் ஆண்டாள். 25 படிகளில் ஸ்புடம் போடப்பட்டு பரிபக்குவமாக நிற்கிறாள். காதலின் உன்னதமான கட்டத்தை அடைந்தும் விட்டாள். இப்போது அவளும் அவனும் ஒன்று. திருமணச் சடங்கில் சிலர் வழக்கப்படி 'அம்மாங்கோலம்' செய்வதுண்டு. பெண்ணுக்கு ஆண் வேஷமும் மணப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். romance ல் கூட ஆடை மாற்றிக்கொள்வது மிகப்பெரிய sensation என்று சொல்லப்படுகிறது. அந்த இருவரும் சமம், அல்லது ஒருவர் இன்னொருவராக மாறினோம் என்கிற நிலை அடுத்த பாசுரத்தில் சொல்லப்படப்போகிறது. ஆன்மீக ரூபமாக அதை பகவத்சாம்யம் என்று சொல்கிறார்கள். அதாவது பரமனோடு ஜீவன் சமத்துவம் கோருவது. எனவே இனி கூட்டம் இல்லை. ஆண்டாள் கண்ணன் அவ்வளவே தான் அடுத்த ஐந்து பாட்டிலுமென்று அறிக.
அதற்கு முன் கீதை வரி ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். 'தத்வத்ரயம்' என்ற 'ஒருத்தி' பாசுரக் கருத்துக்கு விளக்கமாக.
சதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுன!
ஆர்த்தோ ஜிக்ஞாசு:அர்த்தார்த்தீ ஞானீச பர்தர்ஷப!
இழந்த ஐஸ்வர்த்தை விரும்பியும், புதிய ஐஸ்வர்யத்தை விரும்பியும் தன் ஆத்மானுபவத்தை விரும்பியும் பகவானான என்னையே பற்றி என்னிடம் கைங்கர்யத்தை விரும்பும் ஞானி என்றும் என்னை பஜிப்பவர் நான்கு வகைப்படுவர்.
இது அர்த்தம். இந்த நாலாவது வகை தான் தத்வத்ரயம். இப்படி சர்வேஸ்வரனை விரும்பிப்பெறுகிறவர்களுக்கு எல்லா புருஷார்த்தங்களும் அதிலேயே அடங்கியுள்ளன. மற்றவர்களுக்கு அவரவர் விரும்பிய பலனே கிடைக்கும். பகவதனுபவ ஆனந்தத்தில் மட்டும் எல்லா அனுபவங்களும் அடங்கியிருக்கும். கடலில் குளம்படி போலவும் நூறில் ஒன்று போலவும் மற்றெல்லா ஆனந்தமும் அறம் சார்ந்த இந்த ஆனந்தத்தில் அடங்கிவிடும்.
உன்னை அர்த்தித்து வந்தேன் உன்னைத்தவிர எதுவும் வேண்டாம் என்று நின்று அவனுக்காகவே அவனை நேசித்துத் தான் அவனாகும் நிலைக்கு வந்து விட்டாள் ஆண்டாள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - திண்ணை ஜனவரி 2005