வெள்ளி, 10 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 27 - கண்ணன் ரங்காச்சாரி

25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் 
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர 
தரிக்கிலானாகித், தான் தீங்கு நினைந்த 
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் 
நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை 
அருந்தித்து வந்தோம் பறை தருகியாகில் 
திருத்தக்கச் செல்வமும் சேவகம் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


'பெண்களே, நாம் பிறந்ததே கண்ணனுக்கு மங்களாசாசனம் செய்வதற்கே' என்று ஒருத்தி கூற, இந்தக் குளிரிலே உங்கள் உடல் பற்றிப் பாராமல் வந்தீர்களே. 'நீங்கள் வேண்டுவது வெறும் பறை மட்டும் தானோ. வேறெதுவும் உண்டோ', எனக் கண்ணன் வினவுகிறான்.


'உன்னுடைய கீர்த்திமைகளைப் பாடிக் கொண்டே வந்ததனால், எங்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை, நாங்கள் பறை என்ற காரணம் ஏற்படுத்திக் கொண்டு வந்ததே உன்னை அர்ச்சிக்கத் தான்', என்கிறார்கள்.


'நீங்கள் சொன்னதைச் செய்யாமல் விடுவேனோ?. உங்களுக்கு எவ்வளவு கடினங்கள் உண்டாயிருக்கும் இல்லையோ' என்றான் கண்ணன்.


எங்கள் கூட்டத்தில் நோன்பிருந்து சிலருடைய கோரிக்கைகள் பலிக்குமானால் கூட அதை எங்கள் எல்லோருடைய வெற்றியாகக் கொண்டாடுவோம் என்கிறார்கள்.


'ஒருத்தி மகனாய்ப் பிறந்து' - 'எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பன்' என்று சர்வ லோஹங்களின் சர்வ பூதங்களுக்கும், முந்தைத் தந்தையாய் இருப்பவனை, 'மணி வயிறு வாய்த்தனையோ' என்னும் வகையில், கண்ணனைப் போல நன் மகன் வேண்டி பல கோடி உயிர்கள் தவமிருக்க, மகன் ஒருவருக்கும் இல்லாத மாமேனியன், 'தேவகி புத்திரன்' என்ற முத்திரையோடு ஒருத்திக்குப் பறை தருமாப் போலே பிறந்தான்.


தயரதன் மக்கள் வேண்டித் தவம் செய்து நான்கு மக்களைப் பெற்றெடுத்தான். வசுதேவன், தேவகி, நந்தகோபன், யசோதை, என்ற நான்கு பேரின் தவத்தால் பிறந்த மாமணியன் கண்ணன்.


தந்தை சொல் ஏற்று நாட்டைத் துறந்து கானகம் சென்று, தன் ராஜ ஸ்வரூபங்களையும். லக்ஷ்ணங்களையும் வெளிக் காட்டாமல் மறைத்துக்கொண்டு வாழ்ந்தான் ராமன். கம்சன், கண்டிட்டால் துயர் தருவான் என்று, வசுதேவர் இறைஞ்சிக் கேட்டதால், தன்னுடைய சங்குச் சக்கரங்களை மறைத்துக் கொண்டு, சாதாரண மனிதக் குழந்தை போலே அவதரித்தான் மாயக் கண்ணன்.


'ஓரிரவில்' - நாய்களின் குடல், நறுமணம் மிக்க உயர்ந்த நெய்யை ஏற்காதென்னும் வகையில், கொடியன் கம்சன் மாளிகையில், ஓரிரவு கூடத் தங்க விரும்பாதவன் கண்ணன்.


'நம் பிறவி அவனை அகற்றும் 
அவன் பிறவி அணுகைக்கு உடலாம்
அவன் பிறவி நமக்கென்று கோல 
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் 
காலில் விலங்கு பட்டது படும்.'


"நம்முடைய பிறவியும் உடலும் அவனைப் பற்றி அணுகுவதற்கான கருவியாம். நமக்காகத் தான், அவன் பிறப்பதற்காக வேண்டி தவமிருக்கிறோம். எப்படி அவன் பிறந்ததும் அவனுடைய பெற்றோர்கள் காலில் கம்ஸன் இட்ட விலங்குகள் விலகியதோ, அதே போலே நம்முடைய பல பிறப்பில் நம்முடனேயே தொடர்ந்திருக்கும் சம்சார விலங்குகள் அவன் நம்மோடு பிறப்பதால் விலகிப் போகும்".


'ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ' - ஒரு அன்னைக்கு அவதார ரசத்தையும், இன்னொரு அன்னைக்கு லீலா ரசத்தையும் அருளிட்ட வினோதன். ஒருத்தி கண்ணனைப் பிரதிஷ்டை செய்திட்டாள். ஒருத்தி அவனுக்கு ஜீர்ணோத்தாரணம் (கும்பாபிஷேகம்) செய்திட்டாள். மணிவயிற்றால் பெற்ற தேவகி புலம்பியழுதாளாம்.


'கன்றின் பின் எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன். அநேக ஜகங்களுக்கும் கர்த்தாவானவனை தாம்பால் கட்டியும் அடிக்கும்படி நியமிக்கலாயிற்றே' - கன்றின் பின் மேய்ப்பதற்காகவா என் பிள்ளையைப் பெற்றேன். தாம்பினால் யசோதை கட்டிடவும் அடிக்கவும் ஆகிப் போனதே.


'ஒளித்து வளர' - கம்ச ராக்ஷதாதிகளின், கண்களில் படக் கூடாது என்பதால், ரஹஸ்ய அறைகளில் வைத்து வளர்ந்த சிசு. கள்ளர்கள் மறைந்து கிடப்பது சகஜம். ஜகத் ரக்ஷகன் மறைந்து வளர வேண்டியிருப்பதை எண்ணி கோபியர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். பக்தர்கள் பல்லாண்டு பாடி அனுபவிக்கப் பட வேண்டிய வஸ்துவை அந்தர்யாமியாய் மறைக்க வேண்டியுள்ளதே.


'தரிக்கிலானாகித்' - கண்ணனின் பிறப்பு பற்றி நாரதாதிகள் சொல்லக் கேட்டதும் பொறுக்க முடியாத கம்ஸன். சிம்ஹத்தோடே போட்டியிட வந்த நரியைப் போன்ற கம்சன். தன ஆன்மாவுக்குள் இருப்பவன் தான் மாயக் கண்ணன் என்று அறிந்திடாதவன்.


'தான் தீங்கு நினைத்த' - அளவிலாத தீய மதியினன் கம்சன். வாரி அணைத்துக் கொஞ்சவேண்டிய மருமகனை, வன்மம் கொண்டாடும் தீய மதியன். கிருஷ்ணனை முடிக்க வேண்டும் என்றத் தீங்கினை எண்ணித் தானே தீங்குப் பட்டவன்.


'கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன்' - கண்ணனை வதம் செய்ய அசூராதிகளை ஏவி விட்டு, வில் வித்தைக்கு அழைப்புக்கு கொடுத்து, கண்ணனை தீர்த்துக் கட்டிடும் கருத்தைச் சுமந்த கம்சன்.


'வயிற்றில் நெருப்பென்ன நின்ற' - கிருஷ்ணன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே கோவத்திலும் பயத்திலும் வயிறு எரியுமாம் கம்சனனுக்கு. எதிரியின் போர் என்றோ நடக்கக் கிடந்தும், அவன் பற்றிய எண்ணம் வயிற்றில் நெருப்பை வாரிக் கொட்டிக் கிடக்கும். கண்ணனை வேண்டி நிற்போருடைய வாழ்த்துக்களெல்லாம் கம்சன் வயிற்றில் நெருப்பாகிக் கனன்றது. தேவகியின் வயிற்றில் நீரை வார்த்துக் கம்சனின் வயிற்றில் நெருப்பை வார்த்தான் கண்ணன்.


'நெடுமாலே' - கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் யார் இவர் - அச்சோ ஒரு வர அழகியவா' என்னும் வகையில் உயர்ந்து நின்ற திருமாலன். திரு விக்ரமனாய் அம்பரம் ஊட அறுத்து ஓங்கி வளர்ந்த நெடு மால்.


'உன்னை அருந்தித்து வந்தோம்' - நான் கம்சனை வதைத்த கதையை விட்டிடுங்கள். நான் உங்களுக்கு இப்பொழுது செய்ய வேண்டியது என்ன எனக் கேட்டானாம் கண்ணன்.


கண்ணா உன்னிடம் எங்களுக்கு வேண்டுவது ஒன்றுமில்லை, உன் பக்கத்தில் வந்து கிடப்பது அல்லாமல். இதற்கு முன்னே, 'பறை கொள்வான் இன்று யாம் வந்தோம்' - பறை கொள்வதற்காக வந்தோம் என்று சொன்ன கோபியர்கள், கண்ணனுடைய நெருக்கம் கிடைக்கவும் தேவைகள் அற்றவர் ஆயினர். உன்னைப் பல்லாண்டு பாடத் தான் வந்தோம் என்றுரைக்கிறார்கள்.


கண்ணனைக் கண்டு பொருளுதவி கொள்ளலாம் என்று வந்த குசேலருக்கு, கண்ணனின் பிரம்மாண்ட வாசத்தையும், அளவில்லா அவன் அன்பு உபசரிப்பையும் கண்ட பின், எல்லாம் மறந்து போய் நிற்கக் கண்ணனின் சமீபம் ஏற்படுத்திய திவ்ய சுகத்தில் எல்லாம் மறந்து போய் நெகிழ்ந்து கிடந்தார்.


பணப் பெட்டகமே நம் கை வசமான பின் கையில் பணமும் நாணயங்களையும் சுமக்கத் தான் தேவை உண்டோ எவர்க்கும்.


'பறை தருகியால்' - உன்னிடம் அடைக்கலமென்னும் பறை எங்களுக்குத் தருவாயென்றால்...... நாமும் யாரிடமும் 'எனக்கு உதவுங்கள்', என்று ஆணையிட்டுக் கேட்டிடாமல். 'முடிந்தால், சௌகரியமானால் தருவீர்களா' என்று முடிவெடுப்பதைத் தருபவரிடம் விட்டு விட்டால், அவரும் மறுப்பரோ?


'திருத்தக்க செல்வமும்' - பிராட்டியின் தொடர்ந்த தயா கடாக்ஷம் என்ற நீங்காத செல்வம். மற்ற செல்வங்கள் அழியக் கூடியவை. 


எம்பெருமாட்டியின் திருஷ்டி கடாக்ஷம் ஒன்று தான் பரிபூரணமானது.


'சேவகமும்' - வந்த பெரும் செல்வத்தைக் காக்க வல்ல வீரம் தான் சேவகம். பெண்களின் விரோதிகளை அழிக்க வல்ல பேராண்மை. கண்ணா உனக்குத் திருப்பணி என்றென்றும் செய்யும் மனோ பாவமும் என்பது அடியேன் கருத்து.


'யாம் பாடி' - என்றென்றும் உனக்குப் பல்லாண்டு பாடிக் கிடக்கும் கைங்கர்யத்தை 'வருத்தமும் தீர்ந்து' கண்ணா உன்னை இத்தனை நாள் பிரிந்திருந்த ஏக்கமும் வருத்தமும் தீர்ந்து
'மகிழ்ந்தேலோர் எம்பாவாய்' - மகிழ்ந்திருப்போம் வாரீர்.


யாரையும் ஆசீர்வதிக்க நாச்சியார் அருளிச் செய்த 'திருத்தக்கச் செல்வமும் சேவகம் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்'. என்ற திவ்ய வரிகளைப் ப்ரயோகிக்கலாம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக