புதன், 8 ஜனவரி, 2020

உயர் பாவை - 25 - சதாரா மாலதி

அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி 


கண்ணனைக் காணும் வரை அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்தார்கள். கண்டபின்பு அவனுக்குப் பரிந்தார்கள். இப்போது வேலை மெனக்கெட்டு என்றெல்லாமோ கண்ணனுக்கு நடந்த அசம்பாவிதங்களை இன்று நினைத்து அதற்குக் கவலைப்பட்டு வயிறு இறுக்கிக் கொண்டு பல்லாண்டு பாடுகிறார்கள். 'கதே ஜலே சேது பந்தம்' செய்கிறார்கள். கதையில் வந்த வெள்ளத்துக்கு நிஜத்தில் பாலம் கட்டுவது. எப்போதோ நடந்த விபத்துக்கு இன்று பரிகாரம் செய்கிறார்கள்.


அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி 
சென்றங்குத் தென் இலங்கைச் செற்றாய் திறல் போற்றி 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி 
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் 
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பரமனுக்கு எல்லா மங்களமும் உண்டாகவேண்டுமென்று ஆதங்கப்பட்டு உரத்த வெளிப்பாடு செய்வது தான் மங்களாசாஸனம் செய்வது. தமிழில் போற்றி சொல்வது. பகவான் சர்வசக்தன், சர்வக்ஞன், அமங்களமென்பதே இல்லாதவன் அப்படியிருக்க அவனுக்குச் சிறியரான நாம் மங்களாசாஸனம் செய்வது என்பது பொருத்தமா? என்றால் பொருத்தமே. பெரியதொரு அன்பின் காரணமாக அது நேர்கிறது.


எல்லா உயிருக்கும் சரீர குணங்களும் ஆத்ம குணங்களும் உண்டு. அப்படியே பரமனுக்கும் உண்டு. கருப்பு, சிவப்பு, உயரம் பருமன் என்பதெல்லாம் ஜீவனுக்கு சரீர குணங்கள். நல்லவன், கெட்டவன், அறிவாளி, ஆத்திரக்காரன் என்பதெல்லாம் ஆத்மகுணங்கள். பரமனுக்கும் ரூபம், செளந்தர்யம், லாவண்யங்களாதி சரீர குணங்களும் ஞானம், சக்தி வாத்சல்யாதி ஆத்ம குணங்களும் உண்டு. 


ஞானிகள் தெளிந்த நேரத்தில் பரமனின் ஸ்வரூப குணங்களை அனுபவித்து ரட்சகம் கேட்பார்கள். அதே ஞானிகள் அவன் ரூப குணங்களைப் பார்த்து மயங்கும்போது அவனுடைய சக்திகளை மறந்து இந்த அழகிய திருமேனிக்கு என்ன தீங்கு வருமோ என்று பல்லாண்டு பாடுவார்கள். ஏனெனில் அவனுக்குக் குறையொழிந்ததேல் நமக்குக் குறையொழிந்தது. அப்படித்தான் தண்டகாரண்ய ரிஷிகள் இராமனுக்கு மங்களாசாஸனம் பாடியது. பெரியாழ்வார் கருடாரூரருக்குப் பல்லாண்டு பாடியது.


பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்றபேர் என்றபடி மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடிசென்னி திருக்காப்பு என்றது. 'அஹம் வேத்மி மஹாத்மானம்' என்று தனக்கு இராமனின் பெருமை முழுக்கத்தெரியும் என்று சொல்லிக்கொண்ட விஸ்வாமித்திரர் தாடகை வரும் சப்தம் கேட்டதும் 'ஸ்வஸ்தி ராகவ' என்று பதறினார் [பார்த்து, பார்த்து, செளக்கியமாக இருப்பா, என்கிறது போல]. புத்ரகாமேஷ்டி பண்ணி பிள்ளை பெற்ற தசரதன் எல்லா அற்புதங்களையும் கண்ணால் பார்த்திருப்பினும் பரசுராமன் வழிமறித்தபோது 'நான் வருகிறேன் சண்டைக்கு என் பிள்ளையை விட்டுவிடு' என்று அபயம் கேட்டிருக்கிறான். வசுதேவரும் சங்குசக்கரத்துடன் பிறந்த பிள்ளையை மறைத்துக்கொள், திவ்யாயுதங்களை வெளியில் பாமரருக்குக் காட்டாதே என்றார். ஜடாயு மரணத்தறுவாயில் ராகவனுக்கு 'ஆயுஷ்மான் பவ' என்று ஆசி வழங்கியிருக்கிறார். இதெல்லாம் அபரிமிதமான அன்பின் விளைவாகச் செய்யப்பட்ட செயல்கள்.


அப்படித்தான் இங்கு கண்ணன் அத்தாணி மண்டபத்துக்கு பத்தடி தூரம் இந்தப்பெண்களுக்காக நடந்து வரவும் அவன் தமக்காக வருந்தி நடந்ததைத் தாங்கமுடியாமல் மங்களாசாஸனம் என்ற போற்றி பாடினார்கள். வெண்ணையுண்டு வளர்ந்த மேனியாதலால் பாதங்கள் சிவந்து போய்விட்டன. அப்படி வருந்திய பாதங்களைப் பார்த்துச் சொன்னார்கள், அன்று நடந்தது இரண்டடிகள் இன்று பத்தடி நடக்கவைத்து விட்டோம். உலகை அளக்க வைத்த தேவர்களைப் போல நாங்களும் செய்துவிட்டோமே! நடந்தகால் நொந்தவோ! இசையவோர் மூவடி வேண்டிச் சென்று அழகுக்கு இலக்காக்கி உருக்கினாய் அது முடியாதபோது அம்புக்கு இலக்காக்கி ஒடித்தாய். பரற்பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே! எவ்வாறு நடந்தனை! எம்மிராமா! ஓ! புலியை அதன் குகைக்குப் போய்க் கொல்வது போல சென்றவாறே கர தூஷண விராதன் ஆதி அரக்கரை அழித்து ஜலவேலி தாண்டி ஊரரண் கடந்து இலங்கை செற்றவனே! தீமனத்தரக்கர் திறலழித்தவனே! பிறந்த எழு திங்களில் அறிகையின்றி ஆயுதம் பிடிக்கும் திறலின்றி [கள்ளச்சகடத்தை நாங்கள் நினைத்து வயிறெரியும் படி வருந்தி] உதைத்து அழித்தாயே! இராமன் கையில் வில் பிடித்த தழும்பு. கண்ணன் காலில் சாடுதத்த தழும்பு. பெற்ற தாயும் உதவாத சமயத்தில் பச்சைக்குழந்தையாய் செய்த வீரம், திருக்காலாண்ட பெருமாளின் புகழ் தான் என்னே! கன்றையும் விளங்காயையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடித்து இரு அசுரர்களை ஒன்றாக மாளச்செய்த கழலின் பெருமை என்ன! முதல் அடியில் உலகளந்த ஓரடி இருந்தபடியே மலர்ந்த ஒற்றை அடி சிறப்பிக்கப்பட்டது. அடுத்த அடியில் பல அடிகள் வைத்து இலங்கை பாழாளாகப் பொருதது சொல்லப்பட்டது. அந்த காலடிகளின் திறல் என்று சிறப்பிக்கப்பட்டது. சகடம் உதைத்தது புகழ் ஏனெனில் பச்சைக்குழந்தையாகச் செய்தது அதுவும் அதே காலடியால். இப்போது கன்றின் இரு கால்களைச்சேர்த்துப் பிடித்துக்கொண்டு ஒரு சுழற்று சுழற்றி விளங்காய் இருந்த மரத்தின்மீது வீசி எறிந்தபோது வீச்சின் வேகத்தில் ஒரு கால் மேலே தூக்கிப் பாதத்தின் உள்சிவப்பு தெரிந்தது அந்தக் காட்சியில். எனவே கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்றார்கள். கன்றை எறிதடியாக்கி விளங்காயை விழச்செய்ததில் கழலுக்கு என்ன சம்பந்தம் பாருங்கள். கன்றில் ஆவேசித்த அசுரனையும் விளங்காயில் ஆவேசித்த அசுரனும் ஒக்க விழும்படி சுழட்டின கையோடு அனுசரணையாக தூக்கிய பாதமானதே [குஞ்சிதபாதம்] அந்தக் கழலணிந்த பாதத்துக்கு ஒரு போற்றி.


மாரீசன் சூர்ப்பணகை போலத் தப்பவிடாமல் வத்ஸாசுரனை எறிந்து விளங்காய் அசுரனைக் கொன்ற கழலுக்குப்போற்றி. [இரு அசுரர்களுமாக உன் மேல் விழுந்திருந்தால் நீ என்ன ஆகியிருப்பாய்? என்று அஞ்சி வயிறுபிடிக்கிறார்கள்] கோவர்த்தனத்தை 7 வயதில் 7 நாள் களைப்பின்றி ஒற்றை விரலால் தாங்கி நின்றது பலம் காரணமாக அல்ல. குணம் காரணமாக. ஒரு தாயாருக்கு 10மாத வித்தியாசத்தில் இரு குழந்தைகளாயின. சிறியதைத் தாய் எடுத்துச் சீராட்ட சவலைக்குழந்தை தன் தாயைக் கை ஓயும் மட்டும் அடித்தது. தாய் மூத்த குழந்தையைப் பொறுத்துக் கொள்வது போல குணம் கொண்டு கண்ணன் கோவர்த்தனம் எடுத்தான். இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கிடு என்று சொன்னது கண்ணன். இந்திரன் பட்டினி காரணமாகக் கோகுலத்தில் கல்மழைபொழிவித்தான். அவனை எதுவும் செய்யாமல் மலையைக் குடையாகப்பிடித்து இடையர்களைக் காப்பாற்றினான் கண்ணன்.


அதுவல்லவா குணம்? பொன்றச்சகடம் என்றதில் எப்படி முடிந்த முடிவாக அசுரர்களை வதைத்தது புலப்பட்டதோ [இராமாவதாரத்தில் மாரீசனைக் குற்றுயிராக்கி அனுப்பினது தப்பாயிற்று என்று புரிந்து கிருஷ்ணாவதாரத்தில் வெட்டு ஒன்று துண்டிரண்டாக எல்லாம் முடித்ததை] அப்படி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்பதிலும் சிறப்பான அழுத்தம் இருக்கிறது. எல்லாம் இவனே செய்தான் என்றால் கண்ணேறு விழும் என்று இதெல்லாம் இவன் வேல் செய்தது என்று வேலின் மீது வெற்றிகளை ஏற்றுகிறார்கள். சக்ரவர்த்தி வில் பிடித்தான் இராமனும் கோதண்டம் ஏந்தினான். 


நந்தகோபன் வேல் பிடித்தான் [கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்] கிருஷ்ணனும் வேல் பிடித்தான். தந்தை எடுத்ததே மகனுக்கும் பழக்கம். வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்றது போல அந்த வேலுக்கு ஒரு போற்றி சொன்னர்கள். என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கு என்றார்கள். இதிலும் விசேஷமான பொடி வைத்திருக்கிறார்கள். உனக்கு அடிமை செய்வதல்லால் வேறு பலன் வேண்டாம் என்று பறை கொள்ள வந்திருக்கிறோம். பறையோடு உன்னை எங்களுக்குக் கொடுத்து இரங்கு என்பது பொருள். 


உன்னுடைய விக்கிரமமொன்றழியாமலெல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் எழுதிக்கொண்டேன் என்றது போல என்றென்றுன் சேவகமே ஏத்தினோம் என்றார்கள். ஒன்று நூறும் ஆயிரம் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வான் என்றது போல அவன் செய்த தொண்டூழியங்கள் பெரிதல்லவே! அர்ச்சுனன் சொன்ன இடத்தில் தேரை நிறுத்திய சாரதி இவர்கள் சொன்னபடி அத்தாணி மண்டபம் வந்து உட்கார்ந்தானே! அதற்குத்தானே பல்லாண்டு பாடினார்கள்! 


இன்னமும் அன்று அவன் அமரருக்கு நோவு தீர்க்கச் செய்ததை இவர்கள் ஞாபகப் படுத்தியது இன்று இவர்களின் நோவுக்கு அவன் இரங்கவேண்டும் என்ற உத்தேசத்தில் தான். அன்றையும் இன்றையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி தங்கள் பக்கத்து நியாயம் இன்னமும் அதிகமாகவே இருப்பதாக எடுத்துச் சொல்கிறார்கள். மஹாபலியை ஆண்ட அன்று, எங்களை ஆண்டுகொள்ளவா இன்று, தேவர்க்காக நீ நோவு பட்ட அன்று உனக்காக நாங்கள் நோவு பட்ட இன்று என்று பிரித்துக் காட்டுகிறார்கள். 


மிக உயர்ந்த போற்றி பாடல் என்ற தொண்டூழியம் ஆத்மார்த்தமாக கோபிகைகளால் வைக்கப்பட்டது, ஆண்டாள் கைங்கர்யத்தின் அடுத்த படிக்கு போகிறாள். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக