ஶ்ரீமத் பாகவதம் - 87


நான்காவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(த்ருவன் பகவானை ஸ்தோத்ரம் செய்து அவனால் வரம் கொடுக்கப்பெற்றுப் பட்டணத்திற்கு (நகரத்திற்கு) வந்து தகப்பன் கொடுத்த ராஜ்யத்தை ஆளுதல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் பகவான் கூறிய வசனத்தைக் கேட்டு தேவதைகள் பயம் நீங்கப்பெற்று, த்ரிவிக்ரமாவதாரம் செய்து உலகங்களை இந்த்ரனுக்கு மீட்டுக் கொடுத்த மஹோபகாரனான (பெரிய நன்மைகளைச் செய்பவனான) அந்த பகவானுக்கு நமஸ்காரம் செய்து தேவலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அப்பால், ஆயிரம் தலையனாகிய பகவானும் தன் ப்ருத்யனாகிய த்ருவனைப் பார்க்க விரும்பிக் கருடன்மேல் ஏறிக் கொண்டு மதுவனத்திற்கு வந்தான். அந்த த்ருவன் பக்தியோகம் நன்கு நிறைவேறப்பெற்ற புத்தியால் தன்னுடைய ஹ்ருதய புண்டரீகத்தில் ஸாக்ஷாத்கரிக்கப்பெற்ற பகவான் திடீரென்று மின்னல் மறைந்தாற்போல் மறைந்தமை கண்டு கண்ணைத் திறந்து பார்க்கையில் அந்த பகவான் ஹ்ருதயத்தில் தோற்றினபடியே வெளியில் திகழ்ந்து நிற்கக் கண்டான். அங்கனம் பகவானை நேரே ஸாக்ஷாத்கரித்தமையால் (பார்த்தமையால்) பரபரப்புண்டாகப் பெற்ற அந்த த்ருவன் தனது உடலை பூமியில் தடிபோல் சாய்த்து நமஸ்காரம் செய்தான். அவன் அந்த பகவானைப் பார்த்தவுடனே அவனைக் கண்களால் பானம் செய்பவன்போல் (அருந்துபவன், குடிப்பவன் போல்) கண்ணாரக் கண்டான். முகத்தினால் முத்தமிடுபவன் போலும் புஜங்களால் கட்டியணைப்பவன் போலும் அவனை நமஸ்கரித்தான். அவன் அந்த பகவானுடைய குணங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென்று (துதிக்க வேண்டுமென்று) விரும்பியும் துதிக்கத் தெரியாமல் வெறுமனேயிருந்தான். ஸமஸ்த லோகங்களுடைய ஹ்ருதயத்திலும் வஸிப்பவனாகையால் பகவான் அந்த த்ருவனுடைய ஹ்ருதயத்திலும் வஸிப்பவனே. ஆகையால் அந்த பரமபுருஷன் அவனுடைய அபிப்ராயத்தை அறிந்து கருணை கூர்ந்து ப்ரணவஸ்வரூபமான தன் சங்கத்தினால் (சங்கினால்) அந்த த்ருவனைக் கபோலத்தில் (கன்னத்தில்) ஸ்பர்சித்தான் (தொட்டான்). அந்த த்ருவன் அங்கனம் சங்கத்தினால் ஸ்பர்சிக்கப் பெற்றவுடனே, அந்த தேவதேவனுடைய அனுக்ரஹத்தினால் வேதாந்தங்களெல்லாம் நிறைந்த வாக்குகளைப் பெற்றான். நினைத்தபடி வாயார வல்லனானான்; மற்றும், ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை உள்ளபடி அறிந்தான். அவனுக்கு சாஸ்வதமான ஸ்தானத்தைப் பெறும் பாக்யமும் ஸித்தமாயிற்று. நிரவதிகமான (எல்லையற்ற) பக்திபாவமும் உண்டாயிற்று. அத்தகையனான அந்த த்ருவன் பரபரப்பில்லாதவனாகி ஜகத்து முழுவதும் ப்ரஸித்தமான பெரும் புகழுடைய பகவானை ஸ்தோத்ரம் செய்தான் (துதித்தான்).

த்ருவன் சொல்லுகிறான்:- பகவானே! நான் உன்னை ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென்ற விருப்பம் உண்டாகப் பெற்றும், துதிசெய்வதற்குரிய வாக்கு நேரப்பெறாதிருந்தேன். அங்கனம் கார்யத்திற்கு உபயோகப்படாமல் உறங்குவது போன்றிருந்த என் வாகிந்தரியத்திற்குள் (வக்கிற்குள்) நீ உன் ஸங்கல்பரூப ஜ்ஞானத்தினால் புகுந்து அதைக் கிளப்பியெழுப்பினாய். நீ, சேராதவைகளைச் சேர்ப்பிக்கை முதலிய ஸர்வ சக்திகளும் அமைந்தவன். அத்தகையனான உனக்கு இது யுக்தமே (தகுமே). ஹஸ்தம் (கை), பாதம் (கால்), ச்ரவணம் (காது), த்வக்கு (தோல்) முதலியவற்றையும் மற்ற ப்ராணன்களையும் நீயே அவற்றுள் புகுந்து எழுப்புகின்றாய். நீ உட்புகாத பக்ஷத்தில் அவை தத்தமது கார்யங்களைச் செய்யவல்லவையாக மாட்டாது. அவையும் உனக்குச் சரீரங்களே. நீ ஜ்ஞானாதி குணங்களெல்லாம் நிறைந்தவன். பரமபுருஷன். அத்தகையனான உனக்கு நமஸ்காரம். வாராய் பகவானே இதோ புலப்படுகின்ற ஜகத்தையெல்லாம், பலவாறாகப் பரிணமிக்கும் (மாறும்) திறமையுடைய ஸத்வாதி குணங்கள் அமைந்ததும் உன்னுடைய சக்திபோல் உன்னை விட்டுப் பிரியாதிருப்பதுமாகிய மாயையென்னும் ப்ரக்ருதியால் ஸ்ருஷ்டித்துக் கார்யமாயும் காரணமாயுமுள்ள ஸத்வாதி குணமயமான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) ஸகல (எல்லா) பதார்த்தங்களிலும் (பொருள்களிலும்) ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, அக்னியானது தான் ஒருபடிப்பட்டிருப்பினும் நீண்டும் குறுகியும் பலவாறாயிருக்கையால் பலவகைப்பட்ட காஷ்டங்களில் (குச்சிகளில்) பற்றிப் பலவாறு தோற்றுவதுபோல், நீ ஒருவனாயிருந்தும் உன் சரீரமான வஸ்துக்கள் பலவாறாயிருக்கையால் பலவாறு தோற்றுகின்றனை. காஷ்டங்கள் (குச்சிகள்) நெடுமை குறுமை முதலிய பல தன்மைகளுக்கு இடமாயிருப்பினும், அவை அவற்றில் பற்றின அக்னிக்கு எங்கனம் ஸம்பந்திக்கிறதில்லையோ, அங்கனமே உனக்குச் சரீரமான வஸ்துக்களின் தோஷங்கள் அவற்றில் உட்புகுந்திருக்கிற உன்னிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. நீ எப்பொழுதும் உன் ஸ்வரூபம் மாறப்பெறாதவன். பகவானே! ப்ரஹ்மதேவன் முதலில் இந்த ஜகத்தைப்படைக்க விரும்பி இன்னவிதமாகப் படைக்கவேண்டுமென்று தெரியப்பெறாமல் உறங்கினவன்போல் ஒன்றுமறியாமல் கிடந்து உன்னைச் சரணம் அடைகையில், அவனுக்கு நீ ஜ்ஞானம் கொடுத்தாய். அப்பால் அவன் உறங்கியெழுந்தவன்போல் நீ கொடுத்த ஜ்ஞானத்தினால் இந்த ஜகத்தையெல்லாம் உள்ளபடி அறிந்தான். இந்த வஸ்துவை இன்ன விதமாகப்படைக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டு அப்பால் இந்த ஜகத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்தான் (படைத்தான்). தாபத்ரயத்தினால் (ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்கிற முன்று வகையான துன்பங்களால்) -- உலகில் மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை 

1. ஆத்யாத்மிகம் - சரீரத்தைப் பற்றி வரும் தலை வலி, ஜலதோஷம் முதலிய நோய்களும், மனதைப் பற்றி வரும் காமம், கோபம், பயம் முதலியவையும்; 

2. ஆதிபெளதிகம் - மிருகம், பறவை, மனிதன் முதலியவற்றால் வருவன; 

3. ஆதிதைவிகம் - குளிர், வெப்பம், காற்று, மழை முதலியவற்றால் தெய்வீகமாக வருவன;

முதலிய துன்பங்களால் வருந்தினவர்க்கு பந்துவாயிருப்பவனே! மோக்ஷத்தை ஸாதித்துக் கொடுப்பதாகிய உன்பாத மூலத்தை நீ செய்த உபகாரம் (நன்மையை) அறிந்த நான் எங்கனம் மறப்பேன்? மஹோபகாரகனான உன்னை அடையாதவர்கள் க்ருதக்னர்களே (செய்த நன்மையை மறந்தவர்களே). தன்னைப் பற்றினாருடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால் கல்பவ்ருக்ஷம் போன்றவனும் பிறத்தலும் சாதலுமான ஸம்ஸாரபந்தத்தை அழித்து மஹாநந்தரூபமான மோக்ஷத்தைக் கொடுப்பவனுமாகிய உன்னை எவர் என்னைப்போல் தர்ம அர்த்த காமங்களாகிற வேறு காரணத்தினால் பணிகின்றார்களோ, அவர்கள் உன் மாயையால் மதிமயங்கப்பெற்ற மூடர்களே நிச்சயம். ஏனென்னில், மோக்ஷங்கொடுப்பவனாகிய உன்னை வேறு காமங்களுக்காகப் (விருப்பங்களுக்காகப்) பணிவது யுக்தமோ (ஸரியோ)? யுக்தமன்று (ஸரியன்று). பகவானுடைய லோகமாகிய (இருப்பிடமாகிய) பரமபதத்தை நினைத்தால், மற்ற லோகங்களெல்லாம் நரகங்களே, அத்தகைய நரகானுபவத்தை எவன் விரும்புவான்? ஸ்ரோத்ரம் (காது) முதலிய இந்திரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கையால் உண்டாவதும் சவம் (பிணம்) போன்ற சரீரத்தினால் அனுபவிக்கத்தக்கதுமாகிய ஸம்ஸார ஸுகத்தையன்றோ அவர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் அவர்கள் அறிவில்லாத மூடர்களே. “ஸ்வர்க்கம் ஸுகமாயன்றோ இருக்கும். ஆகையால் அந்த ஸ்வர்க்காதி ஸுகத்திற்காக பஜிக்கிறவர்களை (பூஜிக்கிறவர்களை) நிந்தித்து (பழித்து) விருப்பமில்லாமல் பஜிக்கிறவர்களைப் புகழ்கின்றனையே” என்னில், அந்த ஸ்வர்க்கஸுகம் மோக்ஷ ஸுகத்தைப் பார்க்கில் மிகவும் அற்பமாயிருக்கும்; மற்றும், அது சீக்ரத்தில் அழியும் தன்மையது. மோக்ஷஸுகம் ஒருநாளும் அழிவில்லாதது. அதன் பெருமையைச் சொல்லிவிட முடியாது. ஆகையால் அந்த மோக்ஷத்தைக் கொடுக்கும் ப்ரபுவான பகவானைப் பணிந்து எவர்கள் அற்பமாயும் அஸ்திரமாயுமுள்ள ஸ்வர்க்காதி ஸுகங்களை விரும்புகிறார்களோ, அவர்கள் அறிவிலா மூடர்களென்பதில் ஸந்தேஹமென்ன? 

ஸகல ஜகந்தாதனே! ப்ராணிகளுக்கு உன்னுடைய பாதாரவிந்தங்களைப் பணிவதனாலும் அங்கனம் உன் பாதாரவிந்தங்களைப் பணிகிற பாகவதர்களின் கதைகளைக் கேட்பதனாலும் உண்டாகக்கூடிய ஸுகம், ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட அபஹதபாப்மத்வம் (பாபமற்றிருக்கை) முதலிய எட்டு குணங்கள் தோன்றப்பெற்ற சுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய அனுபவத்திலும் (கைவல்யத்திலும்) உண்டாகாது. அந்தகமென்னும் கத்தியினால் அடிக்கப்பட்டதாகிய விமானத்தினின்று விழுகிற ஸ்வர்க்கிகளுக்கு (ஸ்வர்க்க ஸுகத்தை அனுபவிக்கும் ப்ராணிகளுக்கு) இந்த ஸுகத்தில் சிறிதுபாகமும் உண்டாகாது. 

வாராய் அனந்தனே! (அளவிறந்த (அளவற்ற) ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையவனே!) ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவனும் எல்லாமறிந்திருக்கை, மஹாநந்த ஸ்வரூபனாயிருக்கை முதலிய எல்லையில்லாத கல்யாண குண ஸமூஹங்களுக்கு இருப்பிடமுமாகிய உன்னிடத்தில் இடைவீடின்றி எப்பொழுதும் பக்திசெய்பவர்களும் நிர்மலமான மனதுடையவர்களும் கோபமில்லாமை முதலிய ஆத்ம குணங்களெல்லாம் அமைந்தவர்களுமான பெரியோர்களோடு ஸஹவாஸம் உண்டாகும்படி அருள்புரிவாயாக. ஏனென்னில், அம்மஹானுபாவர்கள் உன் குணங்களையும் உன் கதைகளையுமே அனுஸந்தித்துப் பொழுது போக்குவார்கள். ஆகையால் அவர்களோடு ஸஹவாஸம் உண்டாகப் பெறுவேனாயின், உன் கல்யாண குணங்களை வெளியிடுகின்ற உன் கதைகளாகிற அம்ருதத்தைப் பானம் செய்து (அருந்தி) மனக்களிப்புற்று ஸம்ஸார தாபங்களெல்லாம் (உலக இன்பங்களெல்லாம்) துலையப்பெற்றுச் சீக்ரத்தில் பெருப்பெரிய துக்கங்களை உட்கொண்டிருப்பதும் பொறுக்க முடியாததுமாகிய ஸம்ஸாரமாகிற ஸாகரத்தைக் (பிறவிக்கடலைக்) கடப்பேன். ஆகையால் உன் பக்தர்களான அத்தகைய பெரியோர்களோடு எனக்கு ஸஹவாஸம் (சேர்ந்திருக்கை) உண்டாகும்படி அருள்புரிவாயாக. மற்றும், ஸத்புருஷர்களோடு (நல்லவர்களோடு) ஸஹவாஸம் (சேர்க்கை) நேருமாயின், அது உன் கதைகளைக் கேட்பது முதலியவற்றின் மூலமாய் மோக்ஷ ஸுகத்திற்கு ஸாதனமாயிருக்கை மாத்ரமேயன்றி, ஜீவிக்கும் (வாழும்) நாளிலும் தேஹத்தைப் (உடலைப்) பற்றியும் அதைத் தொடர்ந்த மற்றவைகளைப் பற்றியும் விளையக்கூடிய ஸுகதுக்கங்களில் மனம் செல்லவொட்டாமல் தடுத்து மஹாநந்தத்தைக் (பேரானந்ததைக்) கொடுக்கும். 

ஜகதீசனே! தாமரையுந்தியனே! (பத்மநாபா!) உன் பாதாரவிந்தங்களின் பரிமளத்தில் விருப்புற்ற மனமுடைய பாகவதர்களோடு எவர்கள் ஸஹவாஸம் செய்யப்பெறுவார்களோ, அவர்கள் மரணத்தை அடையும் தன்மையதாயினும் மிகவும் ப்ரீதிக்கிடமாயிருப்பதான தேஹத்தையும் அந்த தேஹத்தைத் தொடர்ந்த பிள்ளை, பெண்டிர், நண்பன், தனம், மனை முதலியவற்றையும் நினைக்கமாட்டார்கள். அவற்றில் அபிமானம் (தன்னுடையது என்ற எண்ணம்) வைக்கமாட்டார்கள். எல்லாவற்றிலும் மேன்மையுற்றவனே! ஸ்தூலமாயும் (பெயர், உருவம் முதலியவற்றோடு கூடியதாயும்) ஸூக்ஷ்மமாயுமுள்ள (பெயர், உருவம் அற்றதாயும் உள்ள) சேதனாசேதனங்களைக் (ஜீவன் மற்றும் ஜடப்பொருள்களைக்) காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவனே (வேறானவனாயிருப்பவனே)! கர்மத்தினால் விளையும் உற்பத்தியில்லாதவனே! மஹத்து முதல் ப்ருதிவி (பூமி) வரையிலுமுள்ள தத்வங்கள் அடங்கினதும் சேதனாசேதன ஸ்வரூபமாயிருப்பதும் திர்யக் ஜந்துக்களான (விலங்குகளான) பசுக்கள் மிருகங்கள் இவைகளும், ஸ்தாவரங்களும், அண்டஜங்களான (முட்டையிலிருந்து உண்டாகும்) பக்ஷி முதலியவைகளும் ஸர்ப்பங்களும் தேவதைகளும் தைத்யர்களும் (அஸுரர்களும்) மனுஷ்யர்களும் மற்றுமுள்ள பற்பல ஜந்துக்களும் அடங்கப்பெற்றுப் பலவாறு பிரிந்திருப்பதான இந்த ப்ரஹ்மாண்டம் முழுவதும் உன்னுடைய ஸ்தூலரூபம் என்பதை அறிவேனன்றி மற்றைய விசேஷங்கள் எவையும் எனக்குத் தெரியாது. இந்த ஸ்தூல ரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) உன் திவ்யமங்கள விக்ரஹமாகிற ஸூக்ஷ்ம ரூபத்தையும் நீ எனக்குக் காட்டக் கண்டறிந்தேன். அந்த ஸூக்ஷ்ம ரூபத்தில் தேவ, திர்யக் (விலங்கு), மனுஷ்யாதிகளோடு ஒத்திருக்கிறதென்கிற வசனம் பொருந்தாது. அது அப்ராக்ருதமாய் இருப்பதாகையால் ப்ராக்ருதமான பூதங்களோடு (ஜீவராசிகளோடு) ஒக்கச் சொல்லலாகாது. நீ சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் ப்ரளயகாலத்தில் வயிற்றில் வைத்துக்கொண்டு தன்னைத்தான் அனுபவிக்கும் தன்மையனாகி ஆதிசேஷனொருவனை ஸஹாயமாகக்கொண்டு அவன் மடியில்படுத்து யோகநித்ரை செய்கின்றாய். பரமபுருஷா! அங்கனம் சயனித்த உன் நாபியாகிற ஸமுத்ரத்தில் முளைந்த ப்ரபஞ்சமாகிற ஸ்வர்ணமயமான தாமரை மலரின் மத்யத்தில் (நடுவில்) மஹாதேஜஸ்வியான ப்ரஹ்மதேவன் உண்டாகின்றான். அத்தகையனான உனக்கு நமஸ்காரம். நீ திவ்யமங்கள விக்ரஹங்களை அங்கீகரிப்பதற்கு உன் ஸங்கல்பமே காரணமன்றிக் கர்மம் காரணமன்று. நீ யஜ்ஞங்களால் (யாகங்களால்) ஆராதிக்கப்படுபவன். அந்த யஜ்ஞங்களுக்குப் பலன் கொடுப்பவனும் நீயே. நீ ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் (வேறாயிருப்பவன்). இப்படிப்பட்ட நீ ஜகத்தைப் பாதுகாப்பதற்காகப் பற்பல திவ்யமங்கள விக்ரஹங்களை அங்கீகரிக்கின்றாய். எவ்வகையிலும் தடைபடாத ஸங்கல்பரூப ஜ்ஞானத்தினால் எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கின்றாய் (அறிகின்றாய்). ஆகையால் ஸமஸ்த (எல்லா) லோகங்களுக்கும் வேண்டிய இஷ்டங்களைக் கொடுப்பதும் அதிஷ்டங்களைப் போக்குவதுமாகிய ஜகத்ரக்ஷணத்தை (உலகைக் காப்பாற்றுவதை) நீ ஒருவனே நடத்துகின்றாய். நீ ஸமஸ்த (எல்லா) வஸ்துக்களிலும் (பொருள்களிலும்) நிறைந்திருப்பவன். ஆகையால் அவற்றிற்கு நடத்தவேண்டிய யோக (இல்லாதவற்றைத் தருவது) க்ஷேமங்களை (இருப்பவற்றைக் காப்பது) எல்லாம் அறிந்து நடத்துகின்றாய். அங்கனம் ஸமஸ்த (எல்லா) வஸ்துக்களிலும் (பொருள்களிலும்) நீ நிறைந்திருப்பினும் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவன். ஆனதுபற்றியே, நீ அவற்றைச் சரீரமாகக் கொண்டிருப்பினும் ஜீவனைப் போல் ஜ்ஞான ஸங்கோசம் (அறிவில் குறைபாடு) உண்டாகப் பெறுகிறதில்லை. ஆகையால் ஸர்வ தேசங்களிலும் அந்தந்த ப்ராணிகளுக்கு நிறைவேற்ற வேண்டிய இஷ்டங்களையும் போக்கவேண்டிய அநிஷ்டங்களையும் அறிந்து அவற்றை நடத்துகின்றாய். இங்ஙனம் நீ ஸமஸ்த வஸ்துக்களிலும் நிறைந்திருப்பினும் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதிருக்கின்றமையால் நித்யமுக்தனென்று கூறப்படுகின்றீர். ஆகையால் அசேதனமான ப்ரக்ருதியைக் காட்டிலும் சேதனர்களைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன். அசேதனமான (ஜடப்பொருள்களான) மஹத்து முதலிய தத்வங்கள் ப்ருதிவி (பூமி) முதலிய தத்வங்களில் வ்யாபித்திருப்பினும் அவற்றின் தோஷங்களுக்குத் தாம் இடமாயிருக்கின்றன, நீ அத்தகையவனில்லை. சேதனர்களான ஜீவாத்மாக்கள் தேவ மனுஷ்யாதி சரீரங்களில் வ்யாபித்திருக்கின்றனர். வாஸ்தவத்தில் (உண்மையில்) அவர்களுக்கு அந்த தேவ மனுஷ்யாதி சரீர தோஷங்கள் ஸம்பந்திக்கிறதில்லை. ஆயினும் அவர்கள் அஹங்கார மமகாரங்களால் வருந்துகிறார்களாகையால் நித்ய முக்தராகமாட்டார்கள். நீயொருவனே நித்யமுக்தன். அதற்குக் காரணமென்னென்னில், கர்மத்திற்குட்படாமையே. ஜீவாத்மாக்கள் கர்மத்திற்குட்பட்டவர். அங்கனம் கர்மத்திற்குட்படாமைக்குக் காரணமென்னென்னில், என்றும் ஜ்ஞான ஸங்கோசம் (அறிவில் குறைவு) உண்டாகப்பெறாமையே. ஜீவாத்மாக்களோவென்றால், குவிதலும் மலர்தலுமான ஜ்ஞானமுடையவர். நீ எப்பொழுதும் விகாரங்களுக்கிடமாகாத (மாறுபடாத) ஸ்வரூப (இயற்கை நிலை), ஸ்வபாவங்களை (குணங்களை) உடையவன். ஜீவாத்மாக்கள் ஸ்வபாவத்தினால் (தம்முடைய ஜ்ஞானத்தில்) விகாரமடையும் (ஏற்றத்தாழ்வுகள் அடையும்) தன்மையர். பரமபதத்திலுள்ள நித்யர்களும் முக்தர்களும் உன்னைப் போலவே கர்மத்திற்கு உட்படாமல் என்றும் ஜ்ஞானஸங்கோசமின்றிப் (அறிவுக்குறைவின்றி) பரிசுத்தராயிருப்பவர்களே. ஆயினும், நீ அவர்களுக்கும் அந்தராத்மாவாகையால் அவர்களைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் (வேறாயிருப்பவன்). நீயே ஜகத்காரணனான பரமபுருஷன்; ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கும் அவற்றின் கார்யமான ஸமஸ்த லோகங்களுக்கும் நியாமகனாயிருப்பவன் (நியமிப்பவன்). ஆகையால் உனக்கு மேற்பட்டவன் எவனுமே இல்லை. நீயே ஸர்வஸ்மாத்பரன் (எல்லாவற்றையும் விட மேம்பட்டவன்). வேறு வஸ்துக்களில் சேரக்கூடாதவைகளான ஜ்ஞானாதி சக்திகள் பற்பலவும் க்ரமமாக உன்னிடத்தில் ப்ரகாசிக்கின்றன. முதலில் உலகங்களைப் படைக்கின்றாய். இந்த சக்தி மற்ற எந்த வஸ்துவிலும் உண்டாகக் கூடியதன்று. பிறகு, படைத்த உலகங்களில் உட்புகுந்து நியமிக்கின்றாய். இந்த சக்தியும் அத்தகையதே. அவற்றையெல்லாம் பாதுகாக்கின்றாய். இந்த சக்தியும் உன்னைத் தவிர மற்ற எந்த வஸ்துவிலும் ஸம்பவிக்கக் கூடியதன்று. பிறகு அவ்வுலகங்களையெல்லாம் ஸம்ஹரிக்கின்றாய். இங்ஙனம் பற்பல வகைப்பட்டவைகளும் வேறு வஸ்துக்களில் ஸம்பவிக்கக் கூடாதவைகளுமான சக்திகள் உன்னிடத்தில் ஒவ்வொன்றாக வெளியாகின்றன. உன்னிடத்தில் எல்லா சக்திகளும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் மாறாமலே இருக்கின்றன. ஆயினும் க்ரமத்தில் வெளியாகின்றன. ஆகையால் நீ சேதனாசேதனங்களில் உட்புகுந்திருப்பினும் உன்சக்தியின் மஹிமையால் அவற்றின் தோஷங்கள் உன்னிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. ப்ரபஞ்சத்திற்கெல்லாம் உத்பத்தி காரணமாயிருப்பவனும் அங்கனம் ப்ரபஞ்சத்தைப் படைக்கும் பொழுது மற்றொரு ஸஹாயமுமின்றித் தானொருவனே ஸமஸ்த (எல்லா) காரணங்களுமாயிருப்பவனும் எவ்வகை விகாரங்களும் தீண்டப் பெறாதவனாகி ஸ்வரூபத்தினால் மாறும் தன்மையுள்ள அசேதனமான ப்ரக்ருதியைக் காட்டிலும் ஸ்வபாவத்தினால் மாறும் தன்மையுள்ள சேதனனான ஜீவனைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவனும் (வேறாயிருப்பவனும்), நித்ய ஜ்ஞானாந்தஸ்வரூபனும் (எப்பொழுதும் எல்லையற்ற ஜ்ஞானம் (அறிவு) மற்றும் ஆனந்தமே (இன்பமே) தனது இயற்கை நிலையாயிருப்பவனும்), தேசகாலவஸ்து பரிச்சேதங்கள் அற்றவனும் (இடத்தாலும், காலத்தாலும், பொருளினாலும் வரையறுக்கப்படாதவனும் – அதாவது இந்த இடத்தில் உள்ளான், வேறு இடத்தில் இல்லை; நேற்று இருந்தான் இன்று இல்லை; இந்தப் பொருளில் உள் புகுந்துள்ளான் மற்றொரு பொருளில் இல்லை; என்கிற வரையறை இன்றி எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும், எல்லாப் பொருள்களிலும் எப்பொழுதும் இருப்பவன்)  ஆனது பற்றியே நித்யமுக்தர்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறுபட்டவனும்) பரப்ரஹ்மமென்று கூறப்படுபவனுமாகிய உன்னை நான் சரணம் அடைகின்றேன். 

பகவானே! நீ தன்னைப் பற்றினாருடைய விருப்பங்களையெல்லாம் அவ்வப்படியே நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையன். உன்னுடைய உருவம் ஸ்வயம்புருஷார்த்தமாயிருக்கும். காண்போர்க்கு மஹாநந்தத்தைக் கொடுக்குமாகையால் உன் திவ்யமங்கள விக்ரஹமே அனைவராலும் ப்ரார்த்திக்கக் கூடியதாயிருக்கும். ஆகையால் நீ புருஷார்த்த மூர்த்தியென்று கூறப்படுவாய். ஸ்வாமீ! இத்தகையனான உன் பாதாரவிந்தங்களைத் தங்கள் விருப்பங்களுக்குத் தகுந்தபடி பணிகின்றவர்களும் தர்ம அர்த்த காமங்களில் நிலைநின்றவர்களும் தீனர்களுமான (புகலற்றவர்களான) என்னைப் போன்றவர்களையும், முதலீற்றுப் பசு தன் கன்றைப் பாதுகாப்பதுபோல், நீ அனுக்ரஹிக்கும் தன்மையனாகையால் பாதுகாக்கின்றாய்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- திடமான ஸங்கல்பமுடையவனும் சிறந்த மதியுடையவனுமாகிய த்ருவனால் துதி செய்யப்பெற்ற பகவான் பக்தர்களிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனாகையால் அவனுடைய ஸ்தோத்ரத்தை அபிநந்தனம் செய்து (பாராட்டி, வரவேற்று, மகிழ்ந்து) இங்கனம் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் ராஜகுமாரனே! நீ மனத்தில் விரும்பியிருப்பதை நான் அறிவேன். நீ நினைத்திருப்பது மற்றவர்க்குக் கிடைக்கக்கூடியதன்று. ஆயினும், நீ வ்ரதங்களில் நன்கு நிலைநின்று அவற்றைக் குறைவற அனுஷ்டித்தபடியாலும் என்னையே சரணம் அடைந்தமையாகிற வ்ரதம் திடமாயிருக்கப் பெற்றவனாகையாலும் அதை உனக்கு அப்படியே நிறைவேற்றிக் கொடுக்கின்றேன். நல்லியற்கையுடைய த்ருவனே! சாச்வதமான வாஸத்தையுடையதும் ஒளியுடன் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதும் மற்றெவர்க்கும் நேராததும் தேஜஸ்ஸையுடைய ஸுர்யாதி க்ரஹங்களும் அச்வினி முதலிய நக்ஷத்ரங்களும் ஸாதாரண நக்ஷத்ரங்களும் தொடரப் பெற்றுத் திகழ்வதுமான ஒர் ஸ்தானத்தை உனக்குக் கொடுக்கின்றேன். புணையில் மாடுகள் கட்டுண்டிருப்பதுபோல், இந்த ஸ்தானத்தில் மற்ற நக்ஷத்ரங்களெல்லாம் ஸம்பந்தித்திருக்கும். அவாந்தர கல்பவாஸிகளுக்குப் பின்பும் (ஒரு கல்பம் முடிந்ததும், அதாவது, நான்முகனின் ஒரு பகல் முடிந்ததும் – அதாவது 1000 சதுர்யுகங்கள் – 432,00,00,000 மனித வருடங்கள் முடிந்ததும் “க்ருதகம்” என்று சொல்லப்படுகிற பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று லோகங்களும் அங்குள்ள பொருள்களும் அழிந்துவிடுகின்றன. இதற்கு நைமித்திக ப்ரளயம் என்று பெயர். நான்முகனின் இரவும் 1000 சதுர்யுகங்களாகும். நான்முகன் இரவு முடிந்து விழிக்கும்போது மேற்சொன்ன மூன்று லோகங்களும் மீண்டும் உண்டாகின்றன.) இந்த ஸ்தானம் நிலை நின்றிருக்கும். மூன்று லோகங்கள் அழிந்தாலும் இந்த ஸ்தானம் அழியாது. தர்மன் அக்னி கஸ்யபர் சுக்ரன் இவர்களும் ஸப்தரிஷிகளும் நக்ஷத்ர ரூபர்களாகி இந்த ஸ்தானத்தை ப்ரதக்ஷிணம் செய்து கொண்டிருப்பார்கள். உன் தந்தையாகிய உத்தானபாதன் உனக்கு பூமியைக் கொடுத்துவிட்டு தான் காட்டுக்குப் போகையில், நீ ராஜ்யத்தைப் பெற்று இருபத்தாறாயிரம் வருஷங்கள் இந்திரியங்களை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுத்து வர்ணாச்ரம தர்மங்களை எவரும் தவறாதபடி பூமியைப் பாதுகாப்பாய். உன் ப்ராதாவான உத்தமன் வேட்டையாடுவதற்காக வனத்திற்குச் சென்று அங்குக் காணாது போகையில், அவனிடத்தில் மிகுந்த மனவிருப்பமுடைய அவன் மாதாவான ஸுருசி அவனைத் தேடுவதற்காக வனம் சென்று அங்குக் காட்டுத்தீயில் ப்ரவேசித்து முடியப்போகின்றாள். (இதை நீ நினைக்காமல் போயினும், என் பக்தனாகிய உன் விஷயத்தில் த்ரோஹம் செய்தமையால் இங்கனம் நடக்கப்போகின்றது.) மற்றும், நீ யஜ்ஞங்களால் (யாகக்களால்) ஆராதிக்கப்படும் தன்மையனான என்னை தக்ஷிணைகள் நிரம்பப்பெற்ற பற்பல யாகங்களால் ஆராதித்து இந்த ராஜ்யத்தில் திடமான ஸங்கல்பங்களால் ஏற்பட்டவைகளான விருப்பங்களையெல்லாம் அனுபவித்து, அதன் பிறகு என்னை நினைக்கப்போகின்றாய். அப்பால், ஸப்தரிஷிகள் வரையிலுமுள்ள ஸமஸ்த லோகங்களாலும் (எல்லா உலகங்களாலும்) நமஸ்கரிக்கப் பெற்றதும், எனது அனுக்ரஹத்தினால் ஏற்பட்டதும் ஸப்தரிஷிகளுக்கு மேல் இருப்பதும், மனத்தை அடக்கி என்னை த்யானிக்கும் தன்மையுடையவன் எந்த இடம் சென்றால் மீளவும் ஸம்ஸாரத்தை அடையாமல் அதினின்று வைகுண்ட லோகத்திற்கே போவானோ அத்தகையதுமான முன் சொன்ன ஸ்தானத்தை அடையப்போகின்றாய்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் த்ருவனால் ஆராதிக்கப்பட்ட புட்கொடியனான (கருடன் என்ற பறவையை (புள்) கொடியாக உடைய) பகவான் பாலனான அந்த த்ருவனுக்குக் கடைசியில் தன்பதவி நேரும்படி வரம் அளித்து, அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் கருட வாஹனத்தின்மேல் ஏறிக்கொண்டு தன் ஸ்தானமாகிய வைகுண்டலோகத்திற்குப் போனான். அந்த த்ருவனும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதஸேவையால் எற்பட்டதும் தான் தவம் செய்யத் தொடங்கும் பொழுது ஸங்கல்பித்த பலன் கைகூடினமையால் உண்டானதுமான “நாம் ஸங்கல்பித்த கார்யத்தை முடித்தோம்” என்கிற ஸந்தோஷத்தை அடைந்தும் அவ்வளவு மனக்களிப்பில்லாதவனாகவே பட்டணத்திற்குப் போனான்.

விதுரர் சொல்லுகிறார்:- ஆச்சர்ய சக்தியுடையவனாகிய பகவானால் கொடுக்கப்பெற்றதும் பிறர்க்கு எவ்வகையிலும் கிடைக்கக்கூடாததும் அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பூஜித்த புண்ய மஹிமையால் ஸம்பாதிக்கப்பட்டதுமாகிய ஸ்தானத்தை அதே ஜன்மத்தில் அடையும்படி நேரப்பெற்ற பின்பும், ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த அந்த த்ருவன் தன்னை ப்ரயோஜனம் கைகூடப் பெறாதவனாகவே நினைத்தானென்றீர். அதற்குக் காரணம் என்ன?

மைத்ரேயர் சொல்லுகிறார்:- மாற்றாந்தாயான (பிறருடைய தாயான) ஸுருசியின் துர்ப்பாஷணங்களாகிற (கொடிய வார்த்தைகளாகிற) பாணங்களால் (அம்புகளால்) ஹ்ருதயத்தில் அடியுண்டு வருந்தி அந்த துர்ப்பாஷணங்களை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்து, மோக்ஷம் கொடுக்க வல்லவனான பகவானிடத்தில் மோக்ஷத்தை விரும்பாமலே ஏமார்ந்து போனான். அப்பால் அவன் அதை நினைத்து “இங்ஙனம் மதிமயங்கி மோக்ஷத்தை விரும்பாமல் கெட்டேனே” என்று பச்சாத்தாபம் (பிறகு வருத்தம் அடைதல்) அடைந்தான். அவன் தன்னை வெறுத்த விதம் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

த்ருவன் சொல்லுகிறான்:- ஊர்த்வரேதஸ்ஸுக்களான (ஜிதேந்த்ரியர்களான) ஸனந்தாதிகள் அனேக ஜன்மங்களில் செய்த அப்யாஸத்தினால் (பழக்கத்தினால், பயிற்சியினால்) விளையக்கூடிய ஸமாதியினால் எந்த பகவானுடைய ஸ்வரூபத்தை ஸாக்ஷத்கரித்தார்களோ (நேரில் பார்த்தார்களோ), அப்படிப்பட்ட பகவானுடைய பாதாரவிந்தங்களின் நீழலில் ஆறு மாதங்கள் வரையில் ஒதுங்கியிருந்தும் தேஹாத்மாபிமானம் (இந்த சரீரமே ஆத்மா என்ற தவறான எண்ணம்) ஸ்வதந்த்ராத்மாபிமானம் (நான் பகவானுக்குட்பட்டவனன்று, நானே தன்னிச்சையாகச் செயல்படவல்லவன் என்ற தவறான எண்ணம்) இவைகளால் மதிமயங்கி அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களின் நீழலினின்று வெகுதூரம் ஒதுங்கப்பெற்றேன். ஆ! என்னுடைய தேஹாத்மாபிமானத்தின் கடுமையைக் கண்டீர்களா? “இப்படியும் உண்டோ” என்று சோகிக்க (வருத்தப்பட) வேண்டியதாயன்றோ இது இருக்கின்றது? என்னுடைய தௌர்ஜன்யத்தை (பாக்யமில்லாத தன்மையை) என்னென்று சொல்லுவேன்? இதென்ன வருத்தம்? ஏனென்னில், கர்ப்பம் ஜன்மம் ஜரை மரணம் இவை முதலிய பலவகை துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தினின்று உண்டாகும் பயத்தை வேரோடு அறுக்கும் திறமையுடையவனாகிய பகவானுடைய பாதமூலத்தை நான் ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றும் நச்வரமான (அழியக்கூடிய) ஸம்ஸாரிக பலனையே வேண்டினேனன்றி, மஹாநந்தரூபமான மோக்ஷத்தை விரும்பாமல் போனேனே. இதென்ன மதிகேடோ? அவரவருடைய யோகங்கள் முடிந்த பின்பு ஸ்வர்க்கத்தினின்று கீழ்விழுகிறவர்களும் ஆனதுபற்றியே பிறருடைய ஸம்ருத்தியைப் பொறுக்க மாட்டாதவர்களுமாகிய தேவதைகள் என்புத்தியை ஸம்ஸார ஸுகங்களில் விருப்பம் உண்டாகச் செய்து பாழாக்கினார்கள். நான் மிகவும் துர்ப்புத்தியுடையவன். ஏனென்னில், நாரதர் மொழிந்த வார்த்தையைக் கேளாமல் பிடிவாதத்துடன் வீண் விருப்பங்கொண்டேன். உறங்குகிறவன் தன்னைக் காட்டிலும் வெவ்வேறு வஸ்துக்களைக் கனவில் காண்பதுபோல், நான் எத்தகையர்க்கும் கடக்க முடியாத பகவானுடைய மாயையால் மதிமயங்கப்பெற்று தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபம் தெரியாமல் ஆத்மாவல்லாத தேஹத்தையே ஆத்மாவாகவும் தன்னை ஸ்வதந்த்ரனாகவும் ப்ரமித்து, பரப்ரஹ்மத்தைக் காட்டில் வேறொரு ஸ்வதந்த்ர வஸ்து இல்லாதிருப்பினும், ப்ராதாவைச் (உடன் பிறந்தவனை) சத்ருவாக (பகைவனாக) நினைத்து அந்நினைவாகிற வ்யாதியினால் வருந்துகின்றேன். பகவானுடைய அனுக்ரஹம் எளிதில் பெறக்கூடியது அன்று. எவ்வளவு வருத்தினாலும் அவனுடைய அருள் பெறுவது அரிதே. அத்தகையனான அவன் அருள் செய்வானாயின் ஸம்ஸார துக்கத்தைப் போக்கி மஹாநந்த ரூபமான மோக்ஷத்தையும் கொடுக்க வல்லவன். ஸமஸ்த வஸ்துக்களிலும் அவன் அந்தராத்மாவாயிருப்பவன். அப்படிப்பட்ட அந்த பகவானை நான் தவத்தினால் அருள்புரியச் செய்தும் ஸம்ஸாரத்தையே வேண்டிக்கொண்டேன். ஆ! இதென்ன வருத்தம்? இப்படியும் ஓர் மதிகேடுண்டோ? ஆகையால் நான் பாக்யமற்றவன். தௌர்ப்பாக்யத்திற்கே (பாக்கியம் இன்மைக்கே) இருப்பிடம். தனமற்றவனும் (பணமில்லாதவனும்) புண்யமில்லாதவனுமாகிய ஓர் மனிதன் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவான ஓர் மஹாராஜனிடம் சென்று உமி நூக்குகளை (தவிடு) வேண்டிப்பெறுவதுபோல், ஸ்வாராஜ்யமென்கிற (பகவானை அனுபவிப்பதாகிய) மோக்ஷத்தைக் கொடுக்கும் திறமையுடையவனான பகவானிடத்தில் நான் துரபிமானத்தையே (வீணான தற்பெருமையையே) வேண்டிப் பெற்றேன். இதைக் காட்டிலும் மற்றொரு தௌர்ப்பாக்யம் உண்டோ?

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! அந்த ராஜகுமாரன் இங்கனம் தன்னைத்தானே வெறுத்துக் கொண்டான். “கிடைக்க முடியாத பதவியைப் பெற்றும் அவன் ஏன் இங்கனம் வெறுத்துக் கொள்கின்றான்?” என்று நீ சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். மோக்ஷ பூமியைக் கொடுக்கும் தன்மையனான பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணியும் தன்மையரான உன்னைப்போன்றவர், இந்த பகவானுக்குச் சேஷப்பட்டிருக்கையைத் (அடிமைப்பட்டிருக்கையைத்) தவிர மற்ற எந்த ப்ரயோஜனத்தையும் தமக்கு வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். ஏனென்னில் அவர்கள் தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டே மனத்தில் ஸம்ருத்தி உண்டாகப் பெற்றிருக்கும் தன்மையர். தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டே நிறைவாளராய் (திருப்தியடைந்தவராய்) இருப்பார்களன்றி அதற்குமேல் விரும்பமாட்டார்கள். ஆகையால் அவன் அத்தகைய பதவியைப் பெற்றும், மோக்ஷத்தை வேண்டாது போனோமேயென்று வெறுத்துக் கொண்டான். உத்தானபாதராஜன் தன் புதல்வனாகிய த்ருவன் திரும்பி வருவதாகக் கேட்டும், இறந்து போனவன் பிழைத்து வந்தாற்போல் நினைத்து அதை நம்பவேயில்லை. “பாக்யஹீனனான எனக்கு இப்படிப்பட்ட மங்களம் எப்படி நேரும்” என்று அதை அவன் நம்பாமலேயிருந்தான். அப்பால் “சீக்ரத்தில் உன் புதல்வன் திரும்பி வருவான்” என்று தேவரிஷியாகிய நாரதர் மொழிந்த வார்த்தையை நினைத்து “அவன் வரக்கூடும். இவர்கள் சொல்லுவது வாஸ்தவமாகவே இருக்கலாம்” என்று நம்பிக்கை உண்டாகப்பெற்று மிகுந்த ஸந்தோஷம் அடைந்து அந்த ஸந்தோஷ வேகத்தினால் மனம் திடமாகப் பெற்று, அந்த ஸமாசாரத்தை (விஷயத்தை) மொழிந்த ப்ருத்யனுக்குப் (சேவகனுக்கு) பெருவிலையுள்ள ஓர் முத்துமாலையை எடுத்து மிகுந்த ப்ரீதியுடன் கொடுத்தான். அம்மன்னவன் சிறந்த குதிரைகள் பூட்டப்பெற்றதும் ஸ்வர்ணமயமான அலங்காரங்களால் விளங்குவதுமான ரதத்தில் ஏறிக்கொண்டு குலத்தில் வயது சென்றவர்களான ப்ராஹ்மணர்களும் அத்தகையரான மந்திரிகளும் பந்துக்களும் சூழ்ந்து வரப்பெற்றுப் பெரிய ஸ்வஸ்திவாசன (நல்வாழ்த்து) கோஷத்தோடும் சங்கம் துந்துபி முதலிய வாத்யகோஷங்களோடும் கூடிப் புதல்வனைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பத்தினால் மிக்க விரைவுடன் பட்டணத்தினின்று புறப்பட்டான். இம்மன்னவனுடைய பட்டமஹிஷிகளான ஸுநீதி ஸுருசி என்கிற இருவர்களும் ஸுருசியின் புதல்வனான உத்தமனுடன் ஸ்வர்ணத்தினால் அலங்காரம் செய்யப்பெற்ற பல்லக்கின்மேல் ஏறிக்கொண்டு த்ருவனை எதிர்கொண்டார்கள். அம்மன்னவன் பட்டணத்தின் அருகாமையிலுள்ள உபவனத்தின் ஸமீபத்தில் வருகின்ற அந்த த்ருவனைக் கண்டு வேகமாக ரதத்தினின்று இறங்கி ப்ரேமத்தினால் மெய்மறந்தவனாகி அப்புதல்வனுடைய அருகே சென்றான். அவன் நெடுநாளாய் “நான் என் புதல்வனை எப்பொழுது பார்க்கப் பெறுவேன்? என்று அதையே பெரிய ஆவலுடன் சிந்தித்துக் கொண்டிருந்தானாகையால் பெருமூச்செறிந்து கொண்டு, பகவானுடைய பாதாரவிந்தங்கள் படுதலால் ஸம்ஸாரத்திற்கு ஹேதுவான பாபங்களெல்லாம் தொலையப்பெற்று மிகவும் பரிசுத்தனாய் இருக்கின்றவனும் தன் சரீரத்தினின்று பிறந்தவனும் ஆனதுபற்றியே ப்ரீதிக்கிடமாய் இருப்பவனுமாகிய அந்த பாலனை இரண்டு புஜங்களாலும் (கைகளாலும்) கட்டியணைத்தான். பெரியமனோரதத்துடன் பாரித்துக் கொண்டிருந்த அவ்வரசன் தன் விருப்பம் கைகூடப்பெற்று மனக்களிப்புற்றிருக்கின்ற (ஸந்தோஷப்பட்டிருக்கின்ற) அந்த த்ருவனை அங்கனம் அணைத்து உச்சிமுகர்ந்து ஸந்தோஷத்தினால் குளிர்ந்திருக்கின்ற கண்ணீர்களால் அவனைத் தழும்ப நனைத்தான். நல்லோர்களில் தலைவனாகிய அந்த த்ருவன் தந்தையான உத்தானபாதனுடைய பாதங்களை வணங்கி அவனால் பற்பலவாறு ஆசீர்வாதங்களும் ஸம்பாஷணமும் ஸத்காரமும் செய்யப் பெற்றுத் தாய்மார்களான ஸுருசி ஸுநீதிகளை நமஸ்கரித்தான். ஸுருசி தன் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கின்ற பாலனாகிய அந்த த்ருவனை எடுத்து அணைத்துக் கண்ணீர்களால் தழ தழத்த உரையுடன் “பல்லாண்டுகள் க்ஷேமமாய் இருப்பாயாக” என்று மொழிந்தாள். மைத்ரி (நட்பு) முதலிய குணங்களால் பகவான் எவனிடத்தில் அருள் புரிவானோ அவனிடத்தில், தண்ணீர் பள்ளம் உள்ள இடத்திற்கு ஓடுவதுபோல், ஸமஸ்த பூதங்களும் வணக்கமுறுகின்றன. ஆகையால் மைத்ரி முதலிய குணங்கள் நிறைந்தவனும் பகவானால் அருள்புரியப் பெற்றவனுமாகிய அந்த த்ருவனிடத்தில், ஸுருசி மனவுருக்கத்துடன் இருந்தமை நேரக்கூடியதேயன்றி நேராததன்று. ஆகையால் “அவனிடத்தில் பெரும் பொறாமையுடன் மனம் கலங்கப் பெற்றிருந்த ஸுருசி அவனைக் கண்டு ப்ரீதியுடன் வாரி அணைத்தெடுத்து ஆனந்த நீர் பெருக்கி ஆசீர்வதித்தாள்” என்பது எங்கனம் பொருந்துமென்று சங்கிக்க வேண்டாம். ப்ராதாக்களான (உடன் பிறந்தவர்களான) உத்தமன் த்ருவன் இருவரும் ப்ரீதியினால் தழதழப்புற்று ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தமையால் (தழுவிக்கொண்டமையால்) மயிர்க்கூச்சல் உண்டாகப் பெற்று ஆனந்தத்தினால் அடிக்கடி கண்ணீர்களைப் பெருக்கினார்கள். இந்த த்ருவனுடைய தாயான ஸுநீதி இவனை அணைத்துக்கொண்டு அந்தப் புதல்வனுடைய அங்கங்களின் ஸ்பர்சத்தினால் ஸுகித்தவளாகி மனவருத்தத்தைத் துறந்தாள். வாராய் வீரனான விதுரனே! வீரனைப் பெற்றவளான ஸுநீதியின் ஸ்தனங்கள் அவளது குளிர்ந்த கண்ணீர்களால் நனைந்து பாலைப் பெருக்கின. அப்பொழுது ஜனங்கள் உத்தானபாதனைக் கொண்டாடின. “வாராய் மன்னவனே! உன் மனவருத்தங்களைத் தீர்ப்பவனாகிய உன் புதல்வன் இத்தனை நாள் காணாது போயிருந்து இப்பொழுது உன் பாக்யத்தினால் உனக்கு அகப்பட்டான். இவன் பூமண்டலத்தைப் பாதுகாப்பான். நீ தரித்துக் கொண்டிருக்கிற பூபாரத்தைத் (ராஜ்யத்தினை) தான் ஏற்றுக்கொண்டு உனக்கு ஸுகத்தை விளைவிப்பான். பக்தர்களின் துக்கங்களைப் போக்கும் தன்மையனான பகவானை நீ ஜன்மாந்தரத்தில் (பூர்வஜன்மத்தில்) நன்றாக ஆராதித்தாய். எந்த பகவானை த்யானிப்பவர், எப்படிப்பட்டவர்க்கும் தமது ப்ரயத்னங்களால் வெல்லமுடியாத ஸம்ஸாரத்தை வென்று ஸுகமாயிருக்கின்றார்களோ அப்படிப்பட்ட பகவானுடைய அனுக்ரஹம் உண்டாயிருப்பின், எந்த விருப்பம்தான் கைகூடாது? எல்லாம் கைகூடும். ஆகையால் நீ ஜன்மாந்தரத்தில் (முன் ஜன்மங்களில்) பகவானை ஆராதித்து அவனுடைய அனுக்ரஹம் பெற்றிருக்கவேண்டும். இல்லாவிடின், இது எப்படி நேரும்? காணாதுபோன உன் புதல்வன் இங்கனம் வந்து சேர்ந்தது பகவானுடைய அனுக்ரஹமே என்று ஜனங்கள் அம்மன்னவனைப் புகழ்ந்தார்கள். இங்கனம் ஜனங்களால் புகழப்பெற்ற அம்மன்னவன் த்ருவனையும் அவனது ப்ராதாவான உத்தமனையும் யானையின் மேல் ஏற்றிக்கொண்டு ஜனங்களால் துதி செய்யப்பெற்றவனாகிப் பட்டணத்திற்குள் ப்ரவேசித்தான். அப்பொழுது அந்தப் பட்டணத்தில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மகர தோரணங்களும் காயும் பூவும் அமைந்த வாழை மரங்களும் அத்தகைய இளம் பாக்கு மரங்களும் கட்டியிருந்தன. மாந்தளிர்களும் புதிய வஸ்த்ரங்களும் பூமாலைகளும் முத்துமாலைகளும் தொங்கவிட்டிருந்தன. பூர்ண கும்பங்களும் தீபங்களும் வைத்திருந்தன. ப்ராகாரங்களும் உப்பரிகைகளும் ஸவர்ண அலங்காரங்கள் செய்யப் பெற்றிருந்தமையால் அந்நகரம் மிகவும் அழகாயிருந்தது. உப்பரிகைகளின் சிகரங்கள் தேவவிமானங்கள் போல் ப்ரகாசித்தன. அதனால் அந்தப் பட்டணம் மிகுந்த சோபை (அழகு) உண்டாகப்பெற்று ஸகல ஸம்ருத்திகளும் அமைந்திருந்தது. நாற்சந்தி வீதிகளும் ராஜமார்க்கமும் ப்ராகாரத்தின் மேல் இயற்றப்பெற்ற உப்பரிகைகளும் சிறிய சிறிய வீதிகளும் எல்லாம் விளக்கிச் சந்தனத் தண்ணீர் தெளித்துப் பொரிகளும் அக்ஷதைகளும் புஷ்பங்களும் பழங்களும் அரிசிகளும் பலிகளும் இடப்பெற்றிருந்தன. இங்கனம் அலங்காரம் செய்யப்பெற்ற அந்நகரத்தில் உத்தானபாதமன்னவன் புதல்வனுடன் ப்ரவேசித்தான். ஆங்காங்கு உப்பரிகைகளின் மேல் ஏறியிருக்கின்ற பட்டணத்து மடந்தையர் வழியில் யானையின்மேல் எறிக் கொண்டு வருகின்ற த்ருவனைக் கண்டு அவன் மேல் வெள்ளைக் கடுகுகளையும் அக்ஷதைகளையும் தயிர் ஜலம் அருகம்புல் புஷ்பம் பழம் இவைகளையும் இறைத்து பரீதியின் மிகுதியால் பற்பல ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். அவர்கள் தூயமனத்தரும் மிகுந்த வாத்ஸல்யமுடையவருமாகையால் அவருடைய ஆசீர்வாதங்களெல்லாம் தடைபடாமல் அப்படியே நிறைவேறக் கூடியவைகளாய் இருந்தன. த்ருவன் அந்தப் பட்டணத்து மாதரார் மணிகள் பாடுகின்ற அழகான பாட்டுகளைக் கேட்டுக் கொண்டே தந்தையின் க்ருஹத்திற்குள் ப்ரவேசித்தான். விலையுயர்ந்த மேலான ரத்னங்கள் ராசி ராசியாக் குவிக்கப் பெற்றிருப்பதும் சிறந்த ரத்னங்களால் இயற்றினதும் மேன்மையுடையதுமான அம்மாளிகையில் தந்தையால் மிகவும் ஆதரிக்கப் பெற்று ஸ்வர்க்கத்தில் தேவன் போல் வஸித்திருந்தான். அம்மாளிகையில் யானையின் தந்தங்களால் இயற்றப் பெற்று நிர்மலமாயிருக்கையால் (அழுக்கற்று இருப்பதால்) பால் நுரை போல் ப்ரகாசிப்பவைகளும் ஸ்வர்ண அலங்காரம் செய்யப் பெற்றவைகளுமான கட்டில்களும், பால் நுரை போல் வெளுத்து நிர்மலமாகி மென்மையும் அமைந்து விளங்குகின்ற படுக்கைகளும் ஸ்வர்ணமயமான பற்பல கருவிகளும் விலையுயர்ந்த ஆஸனங்களும் வெள்ளியால் இயற்றின பலவகை அலங்காரங்களும் நிறைந்திருந்தன. மற்றும், அம்மாளிகையில் ஸ்படிக ரத்னங்களால் இயற்றினவைகளும் இந்த்ரநீல ரத்னங்கள் இழைக்கப் பெற்றவைகளுமான சுவறுகளில் ப்ரதிபலிக்கின்ற மாதரார்மணிகள் மங்களத்தின் பொருட்டுச் சுவறுகளில் ஏற்றி வைத்திருக்கிற தீபங்கள் போல் ப்ரகாசித்தனர். அம்மாளிகையைச் சேர்ந்த உத்யான வனங்களில் கல்பவ்ருக்ஷங்கள் பலவும் ப்ரகாசித்துக் கொண்டிருந்தன. அந்த வ்ருக்ஷங்களில் பக்ஷிகள் ஆணும் பெண்ணுமாய்க் கூவிக் கொண்டிருந்தன. வண்டுகளும் தேன்களைப் பருகி மதித்துப் பாடிக் கொண்டிருந்தன. மற்றும் அம்மாளிகையில் வைடூர்யமணிகளால் இயற்றின படிக்கட்டு உடையவைகளும் தாமரை நெய்தல் ஆம்பல் இவை அழியாதிருப்பவைகளும் ஹம்ஸம் நீர்க்காகம் சக்ரவாகம் ஸராஸம் இவை முதலிய நீர்ப்பறவைகள் கூட்டங் கூட்டமாய் ஒலிக்கப் பெற்றவைகளுமான நடை வாவிகள் பலவும் விளங்கின. இங்கனம் அழகான உத்யான வனங்கள் அமைந்து மற்றும் பற்பல அலங்காரங்களும் செய்யப்பெற்று விளக்கொளிபோல் திகழ்கின்ற மாதரார்களோடு (பெண்மணிகளோடு) கூடின அம்மாளிகையில் த்ருவன் ஸுகமாக வஸித்துக் கொண்டிருந்தான். இப்படி சில வருஷங்கள் சென்றபின்பு, த்ருவன் யௌவனப் பருவம் (வாலிப பருவம்) நிறைந்திருப்பதையும் மந்த்ரிகளுக்கு ஸம்மதனாயிருப்பதையும், அவனிடத்தில் ப்ரஜைகளெல்லாம் அனுராகமுற்றியிருப்பதையும் கண்டு அவ்வுத்தானபாத மன்னவன் அவனை பூமண்டலத்திற்கெல்லாம் பதியாகும்படி ராஜ்யத்தில் அபிஷேகம் செய்தான். அப்பால் அவ்வரசன் தான் வயது சென்றிருப்பதை ஆலோசித்து மோக்ஷ கதியை ஆராய விரும்பி ஸம்ஸாரத்தில் விரக்தனாகி வனத்திற்குப் போனான். 

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை