சனி, 28 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 79

நான்காவது ஸ்கந்தம் - முதல் அத்தியாயம்

(ஸ்வாயம்புவ மனுவின் புதல்விகளுடைய ஸந்ததியைக் கூறுதல்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:– வாராய் விதுரனே! நீ ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தையும், அவனுடைய வம்சத்தையும் வினவினாய். அதில் ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தைக் கூறி அவனுடைய வம்சத்தைச் சொல்லுவதாகத் தொடங்கி முதலில் தேவஹூதியின் சரித்திரத்தை ஆரம்பித்துக் கபில சரித்ரம் வரையில் சொன்னேன். இனி மனுவின் வம்சத்தைப் பற்றியே சொல்லுகிறேன். கேட்பாயாக.

மனுவுக்குச் சதரூபை என்ற மனைவி இருந்தாள். அந்தச் சதரூபைக்கு ஆஹூதியென்றும் தேவஹூதியென்றும் ப்ரஸூதியென்றும் பேர்பெற்ற மூன்று பெண்கள் பிறந்தார்களென்று முன்னமே கூறினேன். அம்மூவரில் தேவஹூதியின் சரித்திரத்தை உனக்கு விரிவாகச் சொன்னேன். அம்மனுவிற்கு ப்ரியவ்ரதனென்றும் உத்தானபாதனென்றும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருப்பினும், மேலும் மகன்கள் வேண்டுமென்ற விருப்பத்தினால், தன் மகளாகிய ஆஹூதியை “இவளுக்குப் பிறக்கும் குழந்தையை எனக்குப் புதல்வனாகக் கொடுக்க வேண்டும்” என்னும் ஏற்பாட்டுடன் தன் மனைவியாகிய சதரூபையின் சம்மதம் பெற்று ருசி என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அவர் ஆஹூதியை மனைவியாகப் பெற்றுக் கடுமையான தவம் செய்து பகவானை ஆராதித்து வந்தான். அதன் பயனாக ஆஹூதியிடத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஆண் குழந்தையான யக்ஞன் என்பவன் ஸாக்ஷாத் விஷ்ணுவின் அம்சமாகவும், பெண் குழந்தையான தக்ஷினை என்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாகவும் பிறந்தார்கள்.


பிறகு ஸ்வாயம்புவ மனு தன் மகளான ஆஹூதிக்கு குழந்தை பிறந்ததைக் கேட்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்து முன்புதான் செய்த ஏற்பாட்டின்படி, மிகுந்த அழகுடைய அந்த ஆண் குழந்தையை மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தான். அதன்படியே ருசியும் தக்ஷிணையென்கிற அந்தப் பெண்ணை தனது மகளாகப் பாராட்டி வளர்த்து வந்தார்.

அந்த ருசியின் மகளாகிய தக்ஷிணை வளர்ந்து திருமணப் பருவத்தினை அடைந்தாள்.  ஸ்வாயம்புவ மனுவின் புதல்வனாகிய யக்ஞனை மணம்புரிய தக்ஷிணை விரும்பினாள். அதனையறிந்த யக்ஞன் தக்ஷினையின் விருப்பமறிந்து அவளை மணம் புரிந்து கொண்டான். (அவர்களிருவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்தவராகையால் உடன் தோன்றல்களாயினும், ஸ்ரீமஹாவிஷ்ணுவும், ஸ்ரீமஹாலக்ஷ்மியுமே அங்ஙனம் பிறந்தார்களாகையால் அவர்கள் ஒருவரையொருவர் மணம்புரிவதில் தவறில்லை). அந்த தக்ஷிணையும் யஜ்ஞனைக் கணவனாகப் பெற்று மிகுந்த சந்தோஷமடைந்தாள். யஜ்ஞனும் தக்ஷிணையைப் மனைவியாகப் பெற்ற ஸந்தோஷம் அடைந்து அவளிடத்தில் பன்னிரண்டு மகன்களைப் பெற்றான். அவர்கள் தோஷன், ப்ரதோஷன், ஸந்தோஷன், புத்ரன், சாந்தி, இடஸ்பதி, இத்மன், கவி, விபு, வஹ்னி, ஸுதேவன், ரோசனன் என்னும் பேருடையவர். அவர்கள் துஷிதரென்னும் பேர்பூண்டு தேவர்களானார்கள். ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் அவர்கள் துஷிதர்கள் என்னும் தேவர்களாக இருந்தனர். மரீசி முதலியவர்கள் சப்த ரிஷிகளாக இருந்தனர். விஷ்ணுவின் அம்சமாகிய யஜ்ஞன் இந்திரனாக இருந்தான். ஸ்வாயம்புவ மனுவின் மகன்களாகிய ப்ரியவ்ரதனும் உத்தானபாதனும் மகா வீரர்கள். அவர்களுடைய புதல்வர்களும், பேரன்மார்களும், கொள்ளுபேரன்மார்களும் அவர்களுடைய வம்சங்களுமே மன்வந்தரம் முழுவதும் வ்யாபித்து உலகங்களைப் பரிபாலனம் செய்தார்கள். இங்ஙனம் ஆஹூதியின் ஸந்ததியைச் சொன்னேன். ஸ்வாயம்புவ மனு தன் மகளாகிய தேவஹூதியைக் கர்த்தமருக்குக் திருமணம் செய்து கொடுத்தான். 

இனி ப்ரஸூதியின் சரித்திரத்தைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.

மஹானுபாவனாகிய மனு ப்ரஸூதியென்னும் மகளை ப்ரஹ்மபுத்ரராகிய தக்ஷனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அந்த ப்ரஸூதியின் பரம்பரையே பெரியதாகி வளர்ந்து மூன்று லோகங்களிலும் நிரம்பிற்று.

இனி கர்த்தம புத்ரிகளின் ஸந்தியைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.

கர்த்தமருடைய மகளாகிய கலையென்பவள் மரீசி மஹர்ஷியினை மணந்தாள். அவள் கச்யபனென்றும் பூர்ணனென்றும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவ்விருவருடைய வம்சங்களால் இந்த ஜகத்து முழுவதும் நிறைந்ததாயிற்று. 

வாராய் நல்லியற்கையுடையவர்களில் சிறந்தவனே! அந்த மரீசியின் மகன்களில் ஒருவனாகிய பூர்ணனுக்கு விரஜன், விச்வகன் என்று இரண்டு பிள்ளைகளையும் தேவகுல்யையென்கிற ஓர் பெண்ணையும் பெற்றான். (த்ரிவிக்ரமாவதார காலத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தை ப்ரஹ்மதேவன் விளக்கும்பொழுது பெருகின ஜலம் கங்கையென்னும் நதியாய்ப் பாய்ந்ததல்லவா? அந்த கங்காநதியே இந்த தேவகுல்யையென்பவள்)

கர்த்தமருடைய இரண்டாம் மகளாகிய அனஸூயை என்பவள் அத்ரி மஹர்ஷியின் மனைவி. அவள் தத்தன், துர்வாசர், ஸோமன் என்று மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அம்மூவரும் சிறந்த புகழுடையவர். அவர்களில் தத்தன் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம். துர்வாசர் ருத்ரனுடைய அம்சம். ஸோமன் ப்ரஹ்மாவின் அம்சம்.

ஸ்ரீ விதுரர் சொல்லுகிறார்:– வாரீர் மைத்ரேய மஹர்ஷியே! உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் இந்த மூன்று தேவச்ரேஷ்டர்களுமாகிய ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரன் ஆகியோர் என்ன கார்யத்திற்காக அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் பிறந்தார்கள்? இதை எனக்கு விளக்கமாக கூற வேண்டுகிறேன்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:– பரப்ரஹ்மத்தை அறிந்தவர்களில் தலைவராகிய அத்ரிமஹர்ஷி ப்ரஹ்மதேவனால் உலகத்தைப் படைக்கும்படி தூண்டப்பெற்றுத் தன் மனைவியாகிய அனஸூயையுடன் தவம்செய்வதற்காக ருக்ஷமென்னும் குலபர்வதத்திற்குப் போனார். பூங்கொத்துகள் நிறைந்த பலாசக்காடுகளும் அசோக வனங்களும் அமைந்திருப்பதும் “நிர்விந்த்யை” என்னும் நதியின் ஜலப்ரவாஹ சப்தங்களால் நான்கு புறங்களிலும் பரவி ஒலித்தது. அந்த ருக்ஷபர்வதத்தில் அம்முனிவர் ப்ராணாயாமத்தினால் மனத்தை அடக்கிக் குளிர் வெய்யில் முதலியவற்றை எல்லாம் வென்று காற்றையே ஆகாரமாகக் கொண்டு ஒற்றைக் காலால் பூமியை ஊன்றிக் கொண்டு நூறு வர்ஷங்கள் வரையிலும் தவம் செய்தார். “எவன் ஜகத்காரணனோ, அந்தப் பரமபுருஷனையே நான் சரணம் அடைகின்றேன். அவன் எனக்குத் தன்னைப் போன்ற புதல்வனைக் கொடுப்பானாக” என்று நினைத்துக் கொண்டு தவம் செய்தார். அம்முனிவர் செய்யும் தவம் ப்ராணாயாமம் என்கிற எரிபொருளால் மேலும் எரிக்கப்பட்டு, ஒளியுடன் அனைத்து உலகங்களையும் தவிக்கச் செய்வதைக் கண்ட ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும், அப்ஸர பெண்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், ஸித்தர்கள் வித்யாதரர்கள், நாகர்கள் முதலியவர்கள் புகழ்ந்து பாடிக்கொண்டு அவ்வத்ரி மஹர்ஷியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அந்த ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்கள் தன்னெதிரே நிற்பதைக் கண்ட அம்முனிவர் ஒற்றைக் காலால் நின்று கொண்டே தேவச்ரேஷ்டர்களான அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு பூமியில் தண்டம்போல் விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து பூஜைக்குரிய புஷ்பம் முதலியவற்றைக் கையில் ஏந்திக்கொண்டு அருகில் நின்று ஸ்தோத்ரம் செய்தார். அப்பொழுது ருத்ரன் வ்ருஷப வாகனத்தின்மேலும், ப்ரஹ்மா ஹம்ஸ வாகனத்தின் மேலும், ஸ்ரீமஹாவிஷ்ணு கருட வாகனத்தின் மேலும் வீற்றிருந்தார்கள். அம்முனிவர் அந்த வ்ருஷபம் முதலிய வாகனங்களாலும் அவரவர்க்கு உடைய (கமண்டலு, சுதர்சன சக்கரம், திரிசூலம்) அடையாளங்களைக் கொண்டு இவரிவர் இன்னின்னவரென்று தெரிந்து கொண்டார். மற்றும், அவர்கள் கருணை பொழிகின்ற கண்ணோக்கத்தினாலும் முறுவல் படிந்த முகத்தினாலும் தனக்கு அனுக்ரஹம் செய்ய வந்திருப்பதையும் அறிந்து கொண்டார். அம்முனிவர் அந்த ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களின் தேஜஸ்ஸினால் தடைப்பட்ட கண்களை மூடிக் கொண்டு தேவச்ரேஷ்டர்களான அவர்களிடத்தில் மனத்தை நிலைநிறுத்திக் கைகளைக் குவித்துக் கொண்டு இனிய உரையுடன் ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினார்.

அத்ரி மஹர்ஷி சொல்லுகிறார்:– ஜகத்தின் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்காக யுகங்கள் தோறும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொருவராக ஏற்றுக் கொண்டு தேஹங்களை க்ரஹித்துவிளங்கும் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களல்லவோ நீங்கள்? அத்தகையரான உங்களுக்கு நமஸ்காரம். அனைவரிலும் மேன்மையுற்ற ஒரு பகவானையே நான் பலவகை உபசாரங்களால் ஆராதித்து, தன்னைப் போன்ற புதல்வனைக் கொடுக்கும்படி என் மனத்தில் நினைத்துக்கொண்டு உபாஸித்தேன். நீங்கள் ப்ராணிகளின் கண்களுக்குப் புலப்படாதவர்களன்றி, அவர்களுடைய மனத்தினாலும் க்ரஹிக்க முடியாதவர். அப்படிப்பட்ட நீங்கள் மூவரும் எப்படி இங்கு வந்தீர்கள்? அதற்குக் காரணம் என்னவோ? தெரியவில்லை. அதை எனக்குச் சொல்வீர்களாக. என் மீது அருள் புரிவீர்களாக. நீங்கள் மூவரும் இங்கு வந்தமையால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது.

ஸ்ரீமைத்தேயர் சொல்லுகிறார்:– வாராய் ப்ரபுவான விதுரனே! இங்ஙனம் அவ்வத்ரிமஹர்ஷி மொழிந்த வசனத்தைக் கேட்டு தேவச்ரேஷ்டர்களான அந்த ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்கள் மூவரும் அம்முனிவரைப் பார்த்துச்சிரித்து இனிய உரையுடன் இங்ஙனம் மறுமொழி கூறினார்கள்.

முத்தேவர்களும் சொல்லுகிறார்கள்:– வாராய் முனிவனே! நீ எங்ஙனம் நினைத்தாயோ, அது அப்படியே ஆகுமேயன்றி மாறாது. நீ ஸத்ய ஸங்கல்பன். “ஆனால் நான் ஒருவனை த்யானிக்கையில் நீங்கள் மூவரும் வந்ததற்குக் காரணம் என்ன?” எனில், சொல்லுகிறோம். கேட்பாயாக.

வாராய் அந்தணர் தலைவனே! நீங்கள் உண்மையாக எந்த ஜகதீச்வரனை த்யானம் செய்தீர்களோ அந்த ஜகதீசன்தான் நாங்கள். வாராய் முனிவனே! எங்கள் மூவருடைய அம்சங்களால் உனக்கு மூன்று புதல்வர்கள் பிறப்பார்கள். அம்மூவரும் உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பார்கள். மற்றும் அவர் உன் புகழைப் பரவச் செய்யப்போகிறார்கள். உனக்கு க்ஷேமம் உண்டாகுக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:– இங்ஙனம் அந்த ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்கள் அம்முனிவர்க்கு விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவரால் நன்கு பூஜிக்கப்பெற்று, அந்த அத்ரியும் அவர் பத்னியாகிய அனஸூயையும் பார்த்துக் கொண்டிருக்கையில் புறப்பட்டுப் போனார்கள். பிறகு ப்ரஹ்மாவின் அம்சத்தினால் ஸோமனும் விஷ்ணுவின் அம்சத்தினால் தத்தனும், ருத்ரனுடைய அம்சத்தினால் துர்வாசரும் பிறந்தார்கள். 

இனி அங்கிரஸ முனியின் ஸந்ததியைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.

அங்கிரஸின் மனைவியான ச்ரத்தையென்பவள். இவள் கர்த்தமருடைய மூன்றாவது மகள். ச்ரத்தா என்பவள் ஸினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்னும் நான்கு பெண்களைப் பெற்றாள். (“ஸினீவாலி” தேய்பிறை சதுர்தசிக்கும், “குஹூ” அமாவாசைக்கும், “ராகா” பௌர்ணமிக்கும், “அனுமதி” வளர்பிறை சதுர்த்தசிக்கும் அதிதேவதைகள் ஆவர்).

அந்த அங்கிரஸ முனிவர்க்கு உசத்யரென்றும் ப்ருஹஸ்பதியென்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவ்விருவரும் ஜ்ஞானாதி குணங்களெல்லாம் அமைந்தவர்; பரப்ரஹ்மத்தில் நிஷ்டையுடையவர்; அவ்விருவரும் “ஸ்வாரோசிஷ” மன்வந்தரத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்கள்.

புலஸ்த்ய மஹர்ஷியின் மனைவி ஹவிர்புக் என்னும் பேருடையவள். இவள் கர்த்தமருடைய நான்காவது மகள். அம்முனிவர் தன் மனைவியாகிய அந்த ஹவிர்ப்புக் என்பவளிடத்தில் ஒரு மகனைப் பெற்றார். அவரே அகஸ்தியர். இந்த அகஸ்தியர் மறுபிறவியில் ஜாடராக்னியாய் பிறக்கப்போகிறார். அந்தப் புலத்ய மஹர்ஷிக்கு மற்றொரு புதல்வனும் உண்டு. அவன் விச்ரவஸ் என்னும் பேருடையவன். அவன் பெருந்தவமுடையவனாய் இருந்தான். அந்த விச்ரவஸ்ஸின் மனைவியான இலபிலைக்கு ஓர் பிள்ளை பிறந்தான். அவனே யக்ஷர்களுக்கு தலைவனான குபேரன்.
அந்த விச்ரவஸ்ஸுக்குக் கைகஸியென்ற மற்றொரு மனைவியிடத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

புலஹருடைய மனைவி ரதி என்பவள். இவள் கர்த்தமருடைய ஐந்தாவது மகள். சிறந்த பதிவ்ரதை. அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். வாராய் மஹாமதியான விதுரனே! புலஹருடைய மனைவியான ரதிக்கு கர்மச்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

க்ரதுவின் மனைவி க்ரியை என்னும் பேருடையவள். இவள் கர்த்தமருடைய ஆறாவது மகள். அவள் அறுபதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் வால்கில்யர்கள் என்னும் பேர்பெற்றவர்கள்; ப்ரஹ்மதேஜஸ்ஸினால் ப்ரகாசிப்பவர்கள்; மஹர்ஷிகள்; வானப்ரஸ்தாச்ரமத்தில் இருப்பவர்கள். 

வஸிஷ்டருடைய மனைவி ஊர்ஜை (அருந்ததி) என்னும் பேருடையவள். இவள் கர்த்தமருடைய ஒன்பதாவது மகள். வாராய் பரந்தபனே! வஸிஷ்ட மஹர்ஷிக்கு இந்த அருந்ததியிடத்தில் ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன், வஸூப்ருத்யானன் த்யுமான் என்னும் பேருடையவர். இவர்களில் சித்ரகேது என்பவர் முதல்வர். அவ்வேழு பேர்களும் ப்ரஹ்ம ரிஷிகள்; பரிசுத்தமான ஆசாரமுடையவர்கள்; சக்தி முதலியவர்கள் அவ்வஸிஷ்ட மஹர்ஷிக்கே மற்றொரு பார்யையிடத்தில் பிறந்தவர். எல்லோரும் மஹா தேஜஸ்விகள். 

அதர்வ மஹரிஷியின் மனைவி சாந்தையென்னும் பேருடையவள். இவளுக்குச் சித்தியென்ற மற்றொரு பேரும் உண்டு. அவளுக்கு த்ருதவ்ரதரென்றும் தத்யஞ்சரென்றும் அச்வசிரஸ் என்றும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

இதற்குமேல் ப்ருகுவின் வம்சத்தைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.

ப்ருகுவின் மனைவி க்யாதி என்னும் பேருடையவள். இவள் கர்த்தமருடைய ஏழாவது மகள். ப்ருகுவின் மனைவியான க்யாதிக்கு தாதாவென்றும் விதாதாவென்றும் இரண்டு பிள்ளைகளும்  ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாகி பகவானிடத்தில் மிகுந்த விருப்பமுடையவளுமாகிய லக்ஷ்மி என்கிற பெண்ணும் பிறந்தார்கள். 

மேரு என்பவர்க்கு ஆயதி என்றும் நியதி என்றும் இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் ஆயதியை தாதாவுக்கும் நியதியை விதாதாவுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். அந்த தாதாவுக்கு ஆயதியிடத்தில் ம்ருகண்டு என்னும் புதல்வனும், விதாதாவுக்கு நியதியிடத்தில் ப்ராணனென்னும் புதல்வனும் பிறந்தார்கள். ம்ருகண்டுவுக்கு மார்க்கண்டேயர் என்ற மகனும், ப்ராணருக்கு வேதசிரஸ் என்னும் முனிவரும் பிறந்தார்கள். ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகனுக்கு உசனஸ் என்கிற அசுரகுருவாகிய சுக்ராசார்யர் பிறந்தார். ப்ருகு வம்சத்தில் பிறந்தவனாகையால் அவன் பார்க்கவென்று பேர் பெற்றான். 

வாராய் விதுரனே! மரீசி முதலிய இந்த ஒன்பது மஹர்ஷிகளும் தமது வம்ச பரம்பரைகளால் உலகங்களைப் பரவச் செய்தார்கள். இங்ஙனம் கர்த்தம ப்ரஜாபதியுடைய பெண்களின் பரம்பரையை மொழிந்தேன். இதை ச்ரத்தையுடன் கேட்பானாயின் அவன் உடனே பாபங்களெல்லாம் தீரப் பெறுவான். 

இங்ஙனம் மனுவின் இரண்டாம் புதல்வியாகிய தேவஹூதியின் வம்சத்தைச் சொன்னேன். அம்மனுவின் மூன்றாம் புதல்வியாகிய ப்ரஸூதியின் வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக.

ப்ரஹ்மாவின் புதல்வராகிய தக்ஷப்ரஜாபதி ப்ரஸூதியை மணம் புரிந்தார். அந்த ப்ரஸூதியிடத்தில் அவர் பதினாறு பெண்களைப் பெற்றார். அவர்கள் எல்லோரும் மிகுந்த ஸெளந்தர்யம் உடையவர். பெருமை பெற்ற அந்த தக்ஷர் அப்பெண்களின் அபிப்ராயத்தை அறிந்து அவர்களின் பதின்மூன்று பேர்களை தர்ம தேவதைக்கும், மற்ற மூன்று பேர்களில் ஒருத்தியை அக்னிக்கும், மற்றொருத்தியை ஒருவரையொருவர் பிரியாதிருக்கும் தன்மையுள்ள பித்ரு தேவதைகளுக்கும், மற்றொருத்தியை ஜ்ஞானோபதேசத்தினால் ஸம்ஸாரத்தினின்று விடுவிப்பவனாகிய ருத்ரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களின் தர்மதேவனுடைய மனைவிகள் பதின்மூவரும் ச்ரத்தை, மைத்ரி, தயை, சாந்தி, துஷ்டி, புஷ்டி, க்ரியை, உந்நதி, புத்தி, மேதை, திதிக்ஷை, ஹ்ரீ, மூர்த்தி என்னும்பேருடையவர். அவர்களின் ச்ரத்தைக்கு ச்ருதனென்றும், மைத்ரிக்கு ப்ரஸாதனென்றும், தயைக்கு அபயனென்றும், சாந்திக்கு ஸுகனென்றும், துஷ்டிக்கு முதனென்றும், க்ரியைக்குயோகனென்றும், உந்நதிக்கு தர்ப்பனென்றும், புத்திக்கு அர்த்தனென்றும், மேதைக்கு ஸ்ம்ருதியென்றும், திதிக்ஷைக்கு க்ஷேமனென்றும், ஹ்ரிக்கு ப்ரச்யனென்றும் பிள்ளைகள் பிறந்தார்கள்.

மூர்த்தியென்பவள் ஸமஸ்த நற்குணங்களுக்கும் கொள்கலனான நரனென்றும் நாராயணனென்றும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் பிறந்தபொழுது இவ்வுலகமெல்லாம் மிகுந்த ஸுகம் உண்டாகப்பெற்று மிகுந்த ஆனந்தம் அடைந்தது. ஸமஸ்த ப்ராணிகளின் மனங்களும், திசைகளும், காற்றும், நதிகளும், ஸமுத்ரங்களும் தெளிவுபெற்றன. ஆகாயத்தில் தேவதைகள் வாத்யங்களை முழங்கினார்கள். மற்றும் புஷ்ப வர்ஷங்களைப் பெய்தார்கள். அந்தப் பூமழைகள் பூமியில் விழுந்தன. முனிவர்கள் ஸந்தோஷத்துடன் ஸ்தோத்ரம் செய்தார்கள். கந்தர்வர்களும், கின்னரர்களும் பாடினார்கள். தேவ ஸ்த்ரீகள் நர்த்தனம் செய்தார்கள். இங்ஙனம் மேலான மங்களம் உண்டாயிற்று. அந்த நர நாராயணர்களைப் பார்க்க விரும்பி ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த தேவதைகளும் அவ்விடம் வந்து ஸமீபத்தில் நாற்புறத்திலும் சூழ்ந்து நின்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.

தேவதைகள் சொல்லுகிறார்கள்:– நீ இந்த ஜகத்தை எல்லாம் உன் மாயையால் உன்னிடத்திலேயே படைத்தாய். ஆயினும் அவற்றின் தோஷங்கள் உன்னிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. ஆகாயத்தில் வெளுப்பு கறுப்பு முதலிய பற்பல நிறங்கள் தெரிந்தாலும், வெவ்வேறான அந்த நிறங்களால் ஆகாயத்திற்கு எவ்வித விகாரமும் உண்டாகிறதில்லை. அங்ஙனமே இந்த ப்ரபஞ்சமெல்லாம் உன்னிடத்தில் உண்டானவை ஆயினும், அவற்றின் தோஷங்கள் எவையும் உன்னைத் தீண்டுகிறதில்லை. தேவ மனுஷ்யாதி சரீரங்களெல்லாம் கர்மத்தினால் விளைகின்றன. அவை ப்ரக்ருதியின் பரிணாமங்கள். அவை ஜீவாத்மாக்களுக்கு இயற்கையில் ஏற்பட்டவையல்ல.

ஆகாயத்தில் வெண்மை கருமை முதலிய நிறங்கள் மேகத்தின் ஸம்பந்தத்தினால் தெரிகின்றனவன்றி அவை ஆகாயத்திற்கு இயற்கையில் ஏற்பட்டவையல்ல. அங்ஙனமே தேவ மனுஷ்யாதி பேதங்கள் ஆத்மாக்களுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்பட்டவையே அன்றி இயற்கையில் ஏற்பட்டவையல்ல. ஆகாயம் ஒருவாறாயிருப்பினும் பலவகை நிறங்களையுடைய மேகங்களின் ஸம்பந்தத்தினால் பலவாறாகத் தோன்றுவதுபோல், ஆத்மாக்களும் ஜ்ஞானமே வடிவமாயிருக்கப் பெற்றவராகையால் ஒருபடிப்பட்டவராயினும் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளைகின்ற தேவ மனுஷ்யாதி தேஹ பேதத்தினால் விளைகின்ற வெவ்வேறு உருவங்களை உடையவர்போல் தோன்றுகிறார்கள். அங்ஙனம் தோன்றுவதும் அஜ்ஞானிகளுக்கேயன்றி ஜ்ஞானிகளுக்குத் தோன்றமாட்டார்கள். அங்ஙனம் ப்ரமிக்கின்ற அஜ்ஞானிகளுக்கு ஆத்மஸ்வரூபத்தின் உண்மையையும் உன்னுடைய உண்மையையும் அறிவிக்கும் பொருட்டு தர்மதேவனுடைய இல்லத்தில் ரிஷி உருவத்துடன் இப்பொழுது நீ அவதரித்துள்ளாய். அப்படிப்பட்ட பரமபுருஷனாகிய உனக்கு நமஸ்காரம்.

ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்தும் பொருட்டு எவ்விதமான மாற்றமும், சிக்கல்களும் உருவாகக் கூடாது என்பதற்காகவே, தேவர்களாகிய எங்களை சத்வகுணம் வாயிலாகப் படைத்தருளினார். அவரது உண்மைத் தத்துவத்தைச் சாஸ்த்ரங்கள் மூலமாகத்தான் நாங்களும் அனுமானிக்க முடியும். உன் மகிமை எவர்க்கும் நேரே புலப்படாது. உன்னுடைய சக்திகள் பலவாறாகப் பிரிந்து ஆச்சர்யங்களுமாயிருக்கும். அவற்றை எல்லாம் சாஸ்த்ரங்களால் அறிய வேண்டுமன்றி வேறுவிதத்தில் அறிய முடியாது.  கருணை வெள்ளம் நிறைந்ததும், ஸ்ரீமஹாலக்ஷ்மி நித்யவாஸம் புரியும், மிகவும் அழகாயிருப்பதான தாமரை மலரை விடவும் அழகானவை. அத்திருக் கண்களைக் கொண்டு கருணையோடு உன் கண்களால் எங்களை நோக்குவாயாக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:– அன்பனே விதுரா! பகவானுடைய கருணையமைந்த கண்ணோக்கம் பெற்ற தேவதைகள் இங்ஙனம் ஸ்தோத்ரம் செய்கையில், மஹானுபாவர்களான அந்த நர நாராயணர்கள் கந்தமாதன பர்வதத்திற்குப் புறப்பட்டுப் போனார்கள். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமாகிய அந்த நர நாராயணர்களே பூமியின் பாரத்தைப் போக்கும் பொருட்டு யதுகுல ச்ரேஷ்டர்களான ஸ்ரீக்ருஷ்ணனாகவும், அர்ஜுனனுமாகவும் இவ்வுலகத்தில் அவதரித்தார்கள். 

இங்ஙனம் தர்மதேவனுடைய பத்னிகளும் தக்ஷருடைய புதல்விகளுமான ச்ரத்தை முதலிய பதின்மூவரின் ஸந்ததியை மொழிந்தேன். தக்ஷருடைய பதினான்காம் புதல்வியைச் சொல்லுகிறேன். அவள் அக்னியின் மனைவி ஸ்வாஹாதேவி. அவள் அவனுக்கு மிகவும் பிரியமாயிருந்தாள். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் பாவகன், பவமானன், சுசி என்றும் பேருடையவர். அம்மூவரும்  வேள்விகளில் ஹோமம் செய்யப்படும் பொருள்களையே புசிப்பார்கள். அம்மூவரே த்ரேதாக்னிகளுக்கு விருப்பமான தேவதைகளானார்கள். அவர்களிடத்தினின்று நாற்பத்தைந்து அக்னிகள் உண்டானார்கள். அவர்களோடு பித்ருக்கள் மூவரும் பிதாமஹன் ஒருவனும் சேர்ந்து நாற்பத்தொன்பது அக்னிகளென்று கூறப்படுகின்றார்கள். 

வைதிகர்கள் யக்ஞங்களிலும் வேதோக்தமான மற்ற கர்மங்களிலும் எந்த அக்னிகளின் பேர்களைச்சொல்லி ஆக்னேயமென்ற யாகங்களை நடத்துகிறார்களோ, அவர்களே இந்த நாற்பத்தொன்பது அக்னிகளாவர். பித்ரு தேவதைகள் அக்னிஷ்வாத்தர்களென்றும், பர்ஹிஷதர்களென்றும் ஸோமபர்களென்றும், ஆஜ்யபர்களென்றும் நால்வகைப்படுவர். அக்னிஷ்வாத்தர்களைக் குறித்து அக்னியில் ஹோமம் செய்கிறதில்லை. ஆகையால் அவர்கள் அனக்னிகளென்று ப்ரஸித்தி பெற்றவர். அவர்கள் அந்தனர்களின் திருக்கரங்களில் இடப்படும் ஆஹூதியை உண்பவர்கள். பர்ஹிஷதர்களைக் குறித்து அக்னியில் ஹோமம் செய்வதுண்டு. ஆகையால் அவர்கள் ஸாக்னிகளென்று கூறப்படுவார்கள். அவர்கள் அக்னியில் ஹோமம் செய்யப்படும் அவியுணவை உண்பவர்கள். 

இந்தப் பித்ரு தேவதைகளின் மனைவி “ஸ்வதை” என்பவள். இவள் தக்ஷருடைய பதினைந்தாம் புதல்வியாவாள். அந்த ஸ்வதை பித்ரு தேவதைகளிடத்தினின்று வயுனா, தாரிணி என்னும் இரண்டு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் வேதமோதும் திறமை அமைந்தவர்கள்; திரண்ட கருத்தான ஆன்ம ஞானத்தையும் உணர்ந்தவர்கள். தான் பெற்ற ஆன்ம ஞானத்தைப் பிறருக்கும் எடுத்துக் கூறுபவர்கள் ஆதலால் இவர்களுக்கு சந்ததி இல்லை. ருத்ரனுடைய மனைவி ஸதிதேவி என்னும் பெயருடையவள். இவள் தக்ஷருடைய பதினாறாம் புதல்வி. தன் கணவரான பரமசிவனுக்கு தொண்டு புரிவதிலேயே ஈடுபட்டிருந்ததால், தன் நற்குணங்களுக்கும், நற்சீலங்களுக்குமேற்ற ஒரு புத்திரனைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் என்ன எனில், சொல்லுகிறேன் கேட்பாயாக.

அந்த ஸதியின் தந்தையாகிய தக்ஷர் குற்றத்தையும் குணமாகக் கொள்ளும் ருத்ரன் விஷயத்தில் கோபத்தினால் பகைமை கொண்டதால், அதைப் பொறுக்க முடியாமல் அவள் இளம் பருவத்திலேயே யோகத்தீயில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாள். ஆகையால் அவளுக்குப் புதல்வன் உண்டாகவில்லை.

முதல் அத்தியாயம் முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக