13
'கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்' - கண்ணனுடைய விசேஷங்களை, உனக்குள் மட்டும்
எண்ணிக் கிடப்பதான , கள்ளத்தை விலக்கி வைத்து, எங்களோடு கலந்திடுவாய் பெண்ணே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவை நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
13 -ம் பாடலில், மிக போதை தருகின்ற அழகான கண்களைக் கொண்ட பெண்ணொருத்தி, 'என்னைக் கண்ணனே வந்து பார்க்கும் போது பார்க்கட்டும்' என்று கிடக்கிறாள். அவளைத் துயில் எழுப்புவதாய் குறிப்பு.
'புள்ளின் வாய்க் கீண்டானை, பொல்லா அரக்கனை' - பள்ளத்தில் மேய்ந்திடும் பறவை உருவம் கொண்டு வந்தவன் பகாசுரன். மிகவும் பொல்லாதவனான ராவணனைப் போன்றவன் தான் இவனும். இருவரும் வேடம் அணிந்து எதிரிகளைத் தாக்க வந்தவர்கள். அரக்கர்களுக்குள்ளும் நல்லவன் விபீஷண ஆழ்வான்.
நம்முடைய உடலைத் தாக்கிடும் விஷத்தைக் கிள்ளி எறிவதைப் போலே, பகாசுரனை இரு கூறாகப் பிளந்தவனை என்ற கிருஷ்ண வ்ருத்தாந்தம் பேசப் பெறுகிறது. பொல்லாத அரக்கன் இராவணனனின் தலைகளைச் வெட்டி எறிந்த ராம வ்ருத்தாந்தமும் பேசப் படுகிறது.
'கீர்த்திமை பாடிப் போய்' - 'சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய' - எதிரிகளும், எளிதாய் எடுத்துக் கொள்ள முடியாத வீரர்கள், அவாதாரிகள். 'ரஞ்சனீ யஸ்ய விக்ரமை' - விரும்பாதவர்களும் கண்டு வியக்கும் வீரம். அப்படியென்னில், விரும்பிடும் கோபியர்க்கு எவ்வளவு வியப்பு உண்டாகும்.
எம்பெருமானின் வீரம் ராவணனின் இலக்காகவும், சூர்ப்பனகையின் காமத்துக்கு இலக்காகவும், விபீஷணாழ்வான் பக்திக்கு இலக்காகவும், கோபியர்கள் விரஹத்திற்கு இலக்காகவும் ஆனதாம்.
கண்ணனுடைய பிரிவாற்றாமையால் நலிந்து கிடக்கும் கோபியர்கள், பிரிவினால் மெலிந்து கிடந்த சீதாப் பிராட்டியை மீட்டவன் என்பதால், ராமனையும் நினைவு கூறுகிறார்கள்.
'பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார்' - மழை வேண்டி இந்த்ராணியையும், திருமண ப்ரப்தத்துக்காக ரதி தேவியையும் வேண்டி நோன்பிருக்க, பாவைக் களமான நோன்பிருக்கும் இடத்துக்குச் சென்று விட்டார்கள்.
'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' - குருவான ப்ரஹஸ்பதி உறங்கியவுடன், சுக்ர பகவான் வானத்தில் தெரிய ஆரம்பிப்பான். சுக்கிரன் உதயம் மற்றும் மறைந்திடும் நேரம், சூரியனோடு கிட்டத் திட்ட ஒட்டியே இருக்கும். குருவின் அருளால், அறிவு பூரணம் பெரும்போதில் சுக்ர தசை வாழ்வில் தொடங்கிடும்.
உள்ளே இருந்தவள் சொல்லுகிறாள். 'நீங்கள் எல்லோரும் பக்தி பரவசத்தில் அமிழ்ந்து கிடக்கும் படியால் நக்ஷத்திரங்கள் கூட உங்களுக்குக் குருவும், வெள்ளியுமாகத் தோன்றுகிறது. நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால், என்பதைப்போல. விடிந்ததற்கு வேறு அடையாளங்கள் உண்டோ?
'புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்' - பறவைகள் கண் விழித்து, கூட்டுக்குள்ளேயே கலந்து பேசி, பின்னர் இரை தேடும் வகையில் வானெங்கும் பரவி சத்தமிடத் துவங்கி விட்டன. மான் போலவும், மலரில் வந்து வண்டு உறங்குவது போலவும் தோன்றிடும், போதை தரும் கண்களைக் கொண்டவளே. உன் கண், உனக்கு அழகு மட்டும் இல்லாமல், உனக்கு எதிரி கூட. கண்களின் அழகினிலேயே நீ அமிழ்ந்து கிடப்பதால், விழிப்பு வரவில்லை உனக்கு.
உன் அழகுக் கண்களினால் அந்த அரவிந்த லோசனனை (தாமரைக் கண்ணானை), தோற்கடித்து அவன் கண்களில் நீரை வர வழித்திடாதே.
'குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ' - சூரியனுடைய வெப்பம் வந்து சூடாக்கும் முன்னர், குளிர்ந்த தண்ணீரில், மூழ்கிக் கிடந்து நீராடி, விரஹத் தாபத்தை தணிக்காமல், படுத்தே கிடக்கிறாயே. என்றோ கிருஷ்ணன் படுத்த படுக்கை என்று அதையே முகர்ந்து பார்த்துக் கிடக்கிறாயே.
'பாவாய் நீ' கண்ணனுடைய அன்புக்கு மிகவும் பாத்திரமானவளே
'நன்னாளால்' நீ விரைவில் எழுந்திருந்தால் இன்று நன்னாள். சிறிது நேரம் தாண்டினாலும் கூட, உன் வீட்டு வாசலில் நாங்கள் காத்துக் கிடப்பதை ஊரார் அனுமதிப்பார்களா?
'கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்' - கண்ணனுடைய விசேஷங்களை, உனக்குள் மட்டும்
எண்ணிக் கிடப்பதான , கள்ளத்தை விலக்கி வைத்து, எங்களோடு கலந்திடுவாய் பெண்ணே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்