உயர் பாவை - 14 - சதாரா மாலதி

புள்ளின் வாய்க்கீண்டானை


காலம் மிகவும் அருமையானது. அருகிக்கொண்டே வருவது. கட்வாங்கர் என்று ஒரு ரிஷி இருந்தார். அவர் போர்வீரரும் கூட தேவர்களுக்காக போரில் ஈடுபட்டு அசுரர்களை அழித்துவந்தார். ஒரு பெரிய போரை முடித்தபின் அயர்ந்து உட்கார்ந்து [நாம் மிச்சமிருக்கிற internet hours balanceஐப் பார்ப்பது போல log on செய்து] ஆயுள் மிச்சம் இன்னும் எவ்வளவு? அந்த நேரம் என் வழிக்கு ஏதாவது செய்யப் போகிறேன் என்று பார்த்தார். மிச்சம் ஒரே ஒரு முகூர்த்தமிருந்தது. ஒரு முகூர்த்தமென்பது ஒரு நாழிகை. 65ஐ 24ல் வகுத்தால் வரக் கூடிய அளவு மணித்தியாலங்கள். 


பரீக்ஷித்துக்கு ஏழு நாள் அவகாசம் கிடைத்தது. 


கிடைத்த காலத்தை வீணாக்காமல் செலவு செய்யவேண்டும்.பூவுலகின் தார்மிக சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும். எங்கும் கிடைக்காத [பூலோக] சொர்க்கங்கள் இங்குண்டு. அவற்றுள் சில, மகான்களின் அனுபவச்சிதறல்களும் அவர்களின் படைப்புகளும். அவற்றை நம் அனுபவமாக நாம் காண்பதற்குப் பல காலம் நாம் ஜீவிக்க வேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாதபடி பெரியவர்கள் அனுபவத்தை நாம் அவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்வதன் மூலம் பெறமுடியும் என்று பூர்வாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி காலத்தின் அருமையை உணர்ந்த ஆண்டாள் இன்னொரு பெண்ணை எழுப்புவது இந்தப் பாசுரம்.

புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனை 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் 
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடாதே 
பள்ளிக் கிடத்தியோ பாவை நீ நன்னாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய் 

இந்தக் கோபிகை கண்ணழகு மிக்கவள். [கண் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நினைவிருக்கும். ஞான வீறுபாடு கொண்டவள்] கிருஷ்ணன் பரமரசிகன். இவளிடம் அதீத ஈடுபாடு கொண்டவனாதலால் இவள் கூட்டத்தில் இருப்பது மிக அவசியம் என்று இவளை அழைக்க வந்திருக்கிறார்கள்.

பறவையுருக்கொண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லாங்குகளுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்துப் போட்டவனுமான எம்பிரானுடைய வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று எல்லாப் பெண்பிள்ளைகளும் நோன்புக்காகக் குறித்த இடத்திற்குள் புகுந்தனர். சுக்கிரன் மேலெழுந்து குரு அஸ்தமித்தது. மேலும் பறவைகளும் இரை தேடச் சிதறிச் செல்கின்றன. [பொழுது விடிந்தது] பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! இயல்பான இனிய ஸ்த்ரீத்துவத்தைப் பெற்றவளே! கிருஷ்ணனும் நாமும் கூடவிருக்கிற இந்த நல்ல நாளில் நீ தனியிருந்து கிருஷ்ண குணங்களை அனுபவிக்கையாகிய கபடத்தை விட்டு எங்களோடு கலந்துகொள்ளவேண்டும். மிகக் குளிர்ச்சியாயிருக்கும் கிருஷ்ண ரச நீரில் ஆட வராமல் படுக்கையில் கிடப்பாயோ! ஆச்சரியம் இது.


இவ்வளவு தான் பொருள்.


மனத்துக்கினியான் இராமன் குறிப்பைக் கேட்ட அயலகத்துப் பெண் ஒருத்தி 'இங்கு யாரோ ராமகதை சொன்னாற்போலிருந்ததே' என்றதற்கு 'இராமகதை கிருஷ்ணகதை பாஞ்சராத்ரத்தோடு குறையின்றி சொன்னோம்' என்று பதில் இறுப்பது போல ஒரு ராமகாரியமும் ஒரு கண்ணன் செயலுமாகச் சொன்னார்கள். [பாஞ்சராத்ரம் என்பது பாற்கடல் வைபவம் பற்றிப் பேசும் ஒரு பிரிவு - 6வது பாசுரத்தில் சொல்லப் பட்டது]


கண்ணன் மீது கறுவி அவனைக் கொல்லுமாறு கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன் கொக்கின் உருவங்கொண்டு யமுனைக்கரையில் நின்றான். கண்ணனை விழுங்கிவிட்டான். அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்பு போல எரிக்கவும் அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தினான். கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளாலும் பற்றி விரித்துக் கிழித்துப்போட்டான். அதுவே புள்ளின் வாய் கீண்டது. கீண்டது என்றால் வகிர்ந்தது, நெடுக்காகப் பிளந்தது.


கீழ்ப்பாட்டில் 'மனத்துக்கினியான்' சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றதற்கும் இங்கே பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்ததற்கும் ஒரே வரலாறு தான். இராவண வதம் தான் அது. அதை ஏன் அடுத்தடுத்துத் திருப்பிச்சொல்கிறார்கள்? முதலில் சொன்ன இராவண வதத்துக்கும் இப்போது சொல்லப் படுகிற இராவணவதத்துக்கும் என்ன வித்தியாசம்?


அங்கு மனத்துக்கினியான் செய்ததெல்லாம் மென் செயல்கள். தண்ணீர் போல சிலீரென்று ஒரு குணம்அவனுக்கு. கோபமே வராது. சுக்ரீவனுக்குச் சீற்றம் வந்தபோது [அவனுக்காக] வாலியை எய்தான். சுக்ரீவன் அழுதபோது கூடவே தானும் [வாலியின் உடல்மேல்] அழுதான். பெரிய அந்தஸ்து உடைய இராவணனைத் தனக்கு மிகப் பெரிய கொடுமையைச்செய்தவனாயிருந்தும் ஒரே அம்பால் முடித்துவிடாமல் படையைக்கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து [கோன்போலுமென்றெழுந்து கிளர்ந்து வந்த மானத்தையழித்து - என்றபடி] இன்று போய் நாளை வா என்று நேரமும் தவணையும் கொடுத்துக் கடைசியில் கொன்றான். அந்த மென் தன்மை பெண்கள் மனதில் இடம் பிடித்ததை வைத்து மனத்துக்கினியான் செயலாக இராவணவதம் படிப்படியாக நிறைவேற்றப் பட்டது சொல்லப் பட்டது. இங்கு அதே செயல் வேறு விதத்தில் சொல்லப் படுகிறது. 


அரக்கர்குலத்தில் ஒரு பொல்லா அரக்கன் இருந்தான் ஒரு நல்ல அரக்கனும் இருந்தான். [விபீஷணஸ்ய தர்மாத்மா - என்றபடி] செழிப்பான ஒரு செடியில் சில இலைகளில் பூச்சி வந்தால் செடியை அழிப்பார்களா? பூச்சி வந்த இலைகளை மட்டும் கிள்ளிக் களைந்து பின்பு செடிக்கு உரமிட்டு நீர்விட்டு வளர விடுவதில்லையா? அந்தக் கருணையைச் செய்தான் இராமன். இராவணனை அவன் கூட்டத்தோடு அழித்து அரக்கர்குலம் பட்டுப் போகாதபடி விபீஷண பட்டாபிஷேகம் செய்து வந்தான், அதைச் சொல்ல முன்பாட்டில் விட்டுப் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது ஆண்டாளுக்கு. இப்போது சொல்லிவிட்டாள். ஆனாலும் சில சரிதைகளே ஆண்டாளுக்கு மிகப் பிடித்தமோ என்று நினைக்கும்படி repeat செய்வது நிறைய நேருகிறது. [உதாரணம் - கேசிவதம், உலகளந்த வரலாறு இத்யாதி] அதெல்லாம் படைப்பாளியின் மனப்பள்ளம் சார்ந்தவை.


'பொல்லா' என்கிற விகுதிக்குக் காரணம் இவர்கள் வாயால் சொல்லமுடியாதபடி இராவணன் செய்த பொல்லாத்தனம். பிறன் மனை இழுத்தது. பிரியவே முடியாத ஜோடியைப் பிரித்தது.


'புள்ளின் வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்' என்றதற்கு அடி இவர்களின் பிரயாண கட்டுச்சோறு எப்போதும் நாமஸ்மரணையாக இருக்கை. வீர பத்னிகளாகையாலே செய்யப்பட்ட வீரச்செயல்களைக் கொண்டாடுகிறார்கள். சாதாரண பெண்கள் தங்கள் கணவன்மாரை 'இருக்கிற வம்பெல்லாம் உங்களுக்கெதற்கு?' என்பார்களில்லையா? பாதேயம் புண்டரீகாட்ச நாமசங்கீர்த்தனம் என்று சொன்னபடி பாடிக்கொண்டே பெண்கள் எல்லாரும் நோன்பு செய்யுமிடம் போய்ச் சேர்ந்தாயிற்று. பொழுது விடிந்துவிட்டது. விடிவெள்ளி எழுந்து வியாழன் மறைந்தது. பறவைகள் இரைதேடப் பரவின. அழகிய கண்களை யுடையவளே! 

போது அரிக்கண் - புஷ்பம் போலவும் மான் போலவும் கண்,
(1) போதரி கண் - புஷ்பத்துக்கு விரோதியான கண் 
(2) போதரிக் கண் - பூவுக்குள் ஒரு வண்டிருந்தாற்போல் குறுகுறுக்கும் கண் 
(3) நெடுங்கணிளமான் இவள். 


அனைத்துலகுடைய அரவிந்த லோசனன் அவன். இருவர் கண்ணுக்கும் இலக்காகி நாங்கள் கடைத்தேற வேண்டும். எங்கள் பேற்றுக்கு உடலென்றிருந்தோம் இவளுடைய செளந்தரியம், இப்போது என்னவென்றால் அதுவே எங்கள் தாமதத்துக்கு உடலாகிறதே! அழகியென்கிற அகந்தையில் தான் குளிர்ந்த கிருஷ்ண ரசத்து நீராட்டத்துக்கு வராமலிருக்கிறாயா?


படுக்கையில் என்ன செய்கிறாய்? அங்கு போராய் விளைந்து கிடக்கிறது. இங்கு உதிர்நெல் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயா? சேர்ந்து அநுபவத்துக்கு வாக்கு தந்து விட்டு தான் மட்டும் தனி நோன்பு பிடிக்கிறாயா? கள்ளம் அல்லவா அது? கபடம் விடு.


குள்ளக்குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ என்று கடிந்து எழுப்பிக் கொண்டு போனார்கள்.


ஸ்ரீவத்ஸம் என்ற மரு திருப்பாணாழ்வார் ஆயிற்று. அவரை அழைத்த அடையாளத்துக்கு அவருடைய 'என் கண்ணினுள்ளன'' என் அமுதினைக் கண்ட கண்கள்' போன்ற சொல்லாடல்கள் முன்வைக்கப் படுகின்றன.


ஸ்ரீபுண்டரீகாட்சாய நம: என்ற ஆச்சாரியர் எழுப்பிக்கொள்ளப்பட்டார்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை