ஶ்ரீமத் பாகவதம் - 80

நான்காவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்


(ருத்ரனுக்கும் தக்ஷப்ரஜாபதிக்கும் த்வேஷம் உண்டானதின் காரணத்தைக் கூறுதல்)


ஸ்ரீவிதுரர் சொல்லுகிறார்:- தக்ஷர் பெண்களிடத்தில் மிகுந்த ப்ரேமம் உடையவர். ருத்ரனும் சீலமுடையவர்களில் சிறந்தவர். அப்படியிருக்க, அவர் தன் மகளாகிய ஸதிதேவியை அவமரியாதை செய்து, நல்லொழுக்கம் கொண்டு ருத்ரனிடத்தில் எந்தக் காரணத்தினால் பகைமை கொண்டார்? ருத்ரன் சகலவிதமான அசையும்-அசையா ஜீவராசிகளுக்கும் பிதாவைப் போன்றவர். ருத்ரன் எந்த ப்ராணிகளிடத்திலும் பகைமை இல்லாதவர்; அமைதியே வடிவானவர்; தன்னிலையிலேயே மனம் ஈடுபட்டு மகிழ்பவர். அப்படிப்பட்ட ருத்ரனிடம் தக்ஷப்ரஜாபதி ஏன் பகைமை கொண்டார்? வாரீர் அந்தணர் தலைவரே! மாப்பிள்ளையான ருத்ரனுக்கும், மாமனாரான தக்ஷருக்கும் எந்தக் காரணத்தினால் பகைமை உண்டாயிற்றோ, அதை எனக்கு மொழிவீராக. ஸதியென்பவள் அந்த பகைமையைப் பற்றியல்லவோ திரும்ப பெறமுடியாத தன் உயிரையே துறந்தாள்? ஆகையால் அந்த பகைமை அற்பமாயிராது. அதன் காரணத்தை எனக்குச் சொல்லுவீராக. 

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! முன்பு மரீசி முதலிய ப்ரஜாபதிகள் ஸத்ரயாகம் செய்யும்பொழுது, மஹர்ஷிகள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் அக்னிதேவர்கள் ஆகிய அனைவரும் தங்கள் பரிவாரங்களுடன் அவ்விடம் வந்து கூடினார்கள். மகிமைமிக்க பெரியோர்கள் நிறைந்திருந்த அந்த யாகம் நடந்த இடத்திற்கு தக்ஷப்ரஜாபதியும் வந்தார்.


அவனுடைய ஒளி அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தது. அதனால் அனைவரும் (ப்ரஹ்மதேவனும் ருத்ரனும் தவிர) தம்முடைய ஆஸனங்களில் இருந்து எழுந்து நின்றார்கள்.

தக்ஷனுடைய தேஜஸ்ஸினால் அந்த ஸபை முழுவதும் இருள் நீங்கி வெளிச்சம் உண்டாகப் பெற்றது. அந்த தக்ஷப்ரஜாபதி ஸபையிலுள்ள பெரியோர்களால் நன்கு பூஜிக்கப்பெற்று லோகங்களுக்கெல்லாம் குருவாகிய ப்ரஹ்மதேவனை நமஸ்கரித்து அவருடைய அனுமதிபெற்று இருக்கையில் அமர்ந்தான். தக்ஷன் இருக்கையில் அமர்வதற்கு முன்பே வந்து உட்கார்ந்திருக்கின்ற ருத்ரனைப் பார்த்து, தான் வரும்பொழுது எழுந்து நின்று தனக்கு மரியாதைகள் செய்யாததைக் கண்ட தக்ஷன், அந்த ருத்ரனைக் கண்களால் எரித்துவிடுவான்போல் பார்த்துக் கொண்டு பேசலானான்.


தக்ஷன் சொல்லுகிறார்:- வாரீர் மஹர்ஷிகளே அக்னி தேவதைகளோடும் மற்றுமுள்ள தேவதைகளோடும் கூடியிருக்கின்ற நீங்கள் சான்றோர்களது ஒழுக்கத்தைப்பற்றி நான் எடுத்துக் கூறுகின்ற எனது கருத்தைக் கேட்பீர்களாக. நான் அறியாமையினாலோ, பொறாமையினாலோ கூறுவதாக எண்ண வேண்டாம். இந்த ருத்ரன் லோக பாலகர்கள் அனைவருடைய தூய்மையான புகழை பாழ் செய்கின்றவன்; வெட்கமில்லாதவன். இவன் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட தர்மங்களை அனுஷ்டிக்காமல் துறக்கிறான்; ஸத்புருஷர்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்ற அறநெறி இவனால் மாசுபடுத்தப்பட்டது.


இந்த ருத்ரன் எனக்குச் சிஷ்யனாக வேண்டும். ஏனெனில் இவன் ப்ராஹ்மணர்களையும், அக்னியையும் சாட்சியாக வைத்துக் கொண்டு ஸாவித்ரியை (தேவமாதாவான காயத்ரி) தேவியைப் போன்ற மான்விழியாளான என் மகளாகிய ஸதியை மணம் புரிந்தான். ஆகவே ஒருவிதத்தில் எனது மகன்; சீடன் போன்றவன். இவன் சீடனாய் இருந்தும் என்னை அவமதிக்கின்றான். குரங்கின் கண்போன்ற கண்களையுடைய இவன் இளமான்கண்போன்ற கண்களையுடைய எனது மகளை திருமணம் செய்துகொண்டு, எதிர்கொண்டு வந்து மரியாதை செய்து கௌரவித்திருக்க வேண்டும். கேவலம் வாயால் செய்யக்கூடிய மரியாதைகூட செய்யவில்லை. 

விருப்பமின்றி ஒருவன் நான்காம் வருணத்தவனுக்கு வேதத்தை உபதேசிப்பதுபோல் நானும் இஷ்டமில்லாமலேயே இந்தக் குரங்குக் கண்ணனுக்குக் எனது மகளைக் கொடுத்தேன். இவன் அதைச் சிறிதும் நினைக்காமல் என்னை அவமதிக்கின்றான். இவனோ நற்செயல்கள் அற்றவன்; தூய்மையற்றவன்; அகங்காரம் பிடித்தவன்; உலக மரியாதைகளை மதிக்காதவன். 

இவன் பூதங்கள், பிரேதங்கள் நிறைந்த பயங்கரமான பூத கணங்களால் சூழப்பட்டு தலைவிரி கோலமாய் ஆடையின்றி ஆடிப்பாடி திரிகின்றான். திகம்பரனாய் சில சமயம் சிரிக்கிறான்; சிலசமயம் அழுகிறான்; கூத்தாடுகிறான் மற்றும் சிதையிலுள்ள அசுத்தமான சாம்பலை உடல் முழுக்க பூசிக்கொள்கிறான். மனிதர்களின் எலும்புகளையே மாலையாகக் கொண்டு அணிகிறான்.  பெயரளவில்தான் இவன் சிவன் (மங்களமானவன்) உண்மையில் அசிவன் (மங்களமற்றவன்) இவன் பித்தன். ஆகவே, பித்தர்களே இவனுக்குப் பிடித்தமானவர்கள். தமோ குணம் நிறைந்த ப்ரமதகணங்களுக்கு தலைவனாய் இருக்கிறான். ஆசார விதிகளைப் பின்பற்றாத, தீய எண்ணம் படைத்த பிசாசுகளுக்குத் தலைவனான இவனுக்கு என் மகளை ப்ரஹ்மாவின் தூண்டுதலால் கொடுத்தேன். இந்த ப்ரஹ்மதேவன் என்னை பரிந்துரை செய்யாத பக்ஷத்தில் நான் என் பெண்ணை இந்த அமங்களனுக்குக் கொடுத்திருக்க மாட்டேன். ஆ! இதென்ன வருத்தம்? இப்படிப்பட்ட பாபியோடு ஸம்பந்தம் செய்யும்படி நேர்ந்ததே!

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த தக்ஷப்ரஜாபதி பலவாறு நிந்தித்த போதும் அனைத்தையும் ஏற்று பரமேச்வரன் அமைதி காத்தார். இதனால் தக்ஷனது கோபம் மேலும் அதிகமாகியது. அவன் கையில் தண்ணீரை எடுத்து அவனுக்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தார்.

தக்ஷன் சொல்லுகிறார்:- இந்த ருத்ரன் தேவர்களில் மிகவும் தாழ்ந்தவன். இந்த்ரன் உபேந்த்ரன் முதலிய தேவதைகளோடு ஹவிர்ப்பாகம் பெறுதற்கு உரியவனல்லன். ஆகையால் இவன் இன்றுமுதல் யாகங்களில் ஹவிர்ப்பாகத்தை இழப்பானாக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! அந்த தக்ஷனை வேள்விச் சாலையில் உள்ள பெரியோர்களால் தடுத்தபோதும், கோபம் அதிகமாகி ருத்ரனுக்கு இவ்வாறு சாபம்கொடுத்து அந்த யாகபூமியினின்று வெளியே வந்து தனது இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது ருத்ரனைப் பின்சென்ற பூதகணங்களில் தலைவனாகிய நந்திதேவன் தக்ஷனுடைய சாபவசனத்தைக் கேட்டு கோபத்தினால் கண்கள் சிவக்கப் பெற்று, தக்ஷனுக்கும் அவன் பேசிய நிந்தனைகளைக் கேட்டு, தக்ஷனுக்கு சாபமளித்தார். அவர் இன்னொரு கொடூரமான சாபத்தை அந்தணர்க்கும் அளித்தார்.

நந்தி சொல்லுகிறான்:- எவன் தேஹாதிகளைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் உண்மையை அறியாதவனும் பரப்ரஹ்மத்திற்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமான வஸ்துவும் உண்டென்று பேதபுத்தி உடையவனுமாகி, தனக்கு த்ரோஹம் செய்தவர்க்கும், ப்ரதி த்ரோஹம் செய்யாதவனும் பகவானுடைய அம்சாவதாரமுமாகிய ருத்ரனை மிகவும் நிக்ருஷ்டனாக நினைத்து த்ரோஹம் செய்தானோ அந்த தக்ஷன், ப்ரக்ருதி புருஷன் ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறியாமல் ஞானம் அற்றவனாக ஆகட்டும். 

வேதங்களில் கர்மங்களைப் பற்றி புகழ்ச்சியாகக் கூறும் வாக்கியங்களை மட்டும் கேட்டு இன்புற்று, சிற்றின்பத்தில் ஆசை கொண்டு பொய்யான நெறிமுறைகள் கொண்ட இல்லற வாழ்க்கையில் மூழ்கி, அற்பங்களும் அஸ்திரங்களுமான பலன்களை விளைக்கும் தன்மையுடைய கர்மங்களை அறிஞரும் மயங்கும்படி புகழ்கின்ற அர்த்தவாதங்களால் புத்திகெட்டு அத்தகைய கர்மங்களை நடத்திக்கொண்டு உலகத்தினின்று மீட்சியைப் பெறாதிருப்பானாக. மற்றும் அந்த தக்ஷன், ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதான உடலையே ஆத்மாவென்று நினைக்கும் தன்மையுடையதான புத்தியால் ஜீவாத்ம பரமாத்மாக்களின் ஸ்வரூப நிலைமையை மறந்து பசுப் போன்று மிகுதியும் பெண்களிடத்தில் ஆசை மிகுந்தவனாகி விரைவிலேயே ஆட்டின் தலையைப் போன்ற முகமுடையவன் ஆவானாக. 

இவ்வாறு ருத்ரனை அவமதித்த இந்த தக்ஷனை அனுஸரித்து இவன் இட்ட சாபத்தை எவரெவர் அனுமதித்தார்களோ அவர்கள் அத்தனைபேரும் உண்ண வேண்டியது எது? தள்ள வேண்டியது எது? என்னும் வேறுபாடின்றி கிடைத்ததை உண்பவரும் பிழைப்பிற்காகவே வேதாத்யயனம், தவம், விரதங்ககளை ஆசரிப்பவரும் ஆத்ம ஸ்வரூபத்தின் ஆராய்ச்சியில் கண் வைப்பதின்றிப் பணம் உடல் முதலியவற்றில் அடிமைகளாக இவ்வுலகில் பிச்சையெடுத்து உண்பவர்களாகத் திரியட்டும்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் ப்ராஹ்மணகுலம் முழுவதற்குமே சாபம் கொடுக்கின்ற அந்த நந்தியின் வசனத்தைக் கேட்டு ப்ருகு, ப்ரஹ்ம தண்டம் போல் எவ்விதத்திலும் தடுக்கமுடியாத சாபத்தை இங்ஙனம் பதிலுக்குக் கொடுத்தார்.

ப்ருகு சொல்லுகிறார்:- ருத்ரனுடைய விரதத்தை ஆதரிக்கின்றவர்களும், அவர்களது வழியைப் பின்பற்றுபவர்களும், அவர்கள் எல்லோரும் வேதத்தில் கூறப்பட்ட கர்மங்களை ஆதரித்துக் கொண்டு கடமைகளைக் கைவிட்டு நாத்திகர்களாக ஆகட்டும். பராவர தத்வங்களைப் பற்றின அறிவில்லாதவர்களும் ஜடை சாம்பல் எலும்பு இவைகளை தரித்துக் கொண்டு எலும்பு மாலையணிந்து, கள் - சாராயம் முதலியவற்றை தெய்வமாகக் கொண்டு பூஜிப்பதாகிய சிவ தீக்ஷையில் ப்ரவேசித்துப் பாழாவார்களாக. நீங்கள் வெளி வேடதாரிகளாக தர்மத்தைக் கைப்பற்றியிருப்பவர்; மற்றும் வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் புருஷர்களுக்கு அனேகமாயிரம் பெற்றோர்களைக் காட்டிலும் மேலான ப்ரேமத்துடன் இதைச் செய், இதைச் செய்யாதே போன்ற க்ஷேமங்களை விளைப்பதான வேதத்தையும் அத்தகைய வேதத்தை போற்றிக் காக்கும் அந்தணர்களையும்  நிந்தனை செய்ததால் நீங்கள் பாஷண்ட தர்மத்தையே (வெளிவேடதாரிகளாக) கைப்பற்றிப் பாழடைவீர்களாக.

வேதத்திற்கு என்ன விசேஷம்? அதை நிந்தித்தால் தோஷம் ஏன்? என்னில் சொல்லுகிறேன். இந்த வேதமே தொன்றுதொட்டு உலகிற்கு நன்மை பயக்கும் மார்க்கமாம். யஜ்ஞாதி கர்மங்களையும் பகவானுடைய உபாஸனங்களையும் அறிவித்து ஸ்வர்க்க மோக்ஷங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் ஸாதனமாயிருக்கும். இந்த வேதத்திற்கு முதலுமில்லை, முடிவும் இல்லை. இந்த வேதத்தில் விதிக்கப்பட்ட தர்மங்களையே ரிஷிகளும் மற்றவர்களும் அனுஷ்டித்தார்கள். சைவ ஆகமங்களைப் போல் பாஷண்டர்களால் ஆதரிக்கப்படுவதன்று. சிஷ்டர்கள் ஆதரிக்கும்படியான மேன்மையுடையது. பரப்ரஹ்மத்தை அறிவதற்கு இந்த வேதமே முக்ய ப்ரமாணமாயிருக்கும். இந்த வேதத்தை ஸ்ரீஜனார்த்தனனே ஆதியில் ப்ரஹ்மதேவன் மூலமாய் வெளியிட்டான். ஆகையால் இவ்வேதம் எவ்வகை தோஷங்களும் தீண்டப் பெறாமல் ஸமஸ்த நன்மைகளையும் விளைவிக்க வல்லதாயிருக்கும். ஆனது பற்றியே மற்ற ப்ரமாணங்களைக் காட்டிலும் மேலானது. புருஷனால் நிர்மிக்கப்படாததாகி நித்யமாய் இருக்கின்றமையால் பரிசுத்தமுமாயிருக்கும்; சான்றோர்கள் கைக்கொண்டதும் இதுவே. இப்படிப்பட்ட வேதத்தை நிந்திக்கின்றீர்கள் ஆகையால் நீங்கள் பாஷண்ட தர்மத்தில் தாமஸர்களான பூதங்களுக்குத் தலைவனாகிய ருத்ரனே தேவதையாகையால் அதில் ப்ரவேசித்தவர் நசிக்க வேண்டுமேயன்றிக் கடைத்தேற வழியில்லை. நீங்கள் அத்தகைய பாஷண்டதர்மத்திலேயே நிலை நின்றிருப்பீர்களாக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் நல்லியற்கை உடைய விதுரனே! அந்த ப்ருகு மஹர்ஷி இவ்வாறு சாப வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில், ருத்ர பகவான் (ஒருவருக்கொருவர் சபித்துக் கொண்டதைக் கண்டு) தனது பரிவாரங்களுடன் சிறிது மனவருத்தமுற்றவன் போல் அவ்விடத்தினின்று புறப்பட்டுப் போனான். வில்லாளிகளில் சிறந்த விதுரனே! புருஷ ச்ரேஷ்டனான ஸ்ரீமஹா விஷ்ணுவையே ஆராத்ய தேவதையாகப் பெற்றதும் ஆயிரமாண்டுகள் நடத்தி முடிக்கத்தக்கதுமாகிய ஸத்ரயாகத்தை அந்த ப்ரஜாபதிகள் செய்து முடித்துக் கங்கை யமுனை ஆகிய நதிகள் கலக்குமிடமாகிய ப்ரயாகக்ஷேத்ரத்தில் அவப்ருத ஸ்னானம் செய்து, மனமகிழ்ச்சியோடு தங்கள் இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

(இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று)

2 கருத்துகள்

  1. தக்ஷன் சொல்லுகிறார் என்ற முதல் பாராவில் கடைசியாக உள்ள வார்த்தையில் பிழை உள்ளது.

    மாசுமடுத்தப்பட்டது (தவறான வார்த்தை)
    மாசுபடுத்தப்பட்டது (சரியான வார்த்தை) திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பிழை திருத்தம் செய்யப்பட்டது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை