திங்கள், 30 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 16 - கண்ணன் ரங்காச்சாரி

14


உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் 
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் 
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணனை பாடேலோரெம்பாவாய்


14 - ம் பாட்டிலே, நோன்பிருக்கும் கோபியர்களை நிர்வகிக்கும் பெண்ணொருத்தி, மற்றவர்களை எல்லாம் அடுத்த நாள் விடியலில் எழுப்பிடுவேன் என்று சொல்லி இன்று பொழுது விடிந்தும் தூங்குகின்றாள், தோழியர்கள் அவளைத் துயில் எழுப்பிகிறார்கள்.


'உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் ' - உங்கள் வீட்டின் தோட்டத்துப் பின் புறத்தில் உள்ள நீர் நிலையில், செங்கழுநீர் மலர்ந்திருக்கிறது. இரவில் மலரக் கூடிய ஆம்பல் வாய் கூம்பிக் கிடக்கிறது.


உள்ளே இருப்பவள் சொல்கிறாள். உங்களில் ஒருத்திக்கு, என் வீடு வாசலில் வந்ததும் மகிழ்ச்சியால் அவளுடைய கண்கள் அழகாய் பூத்ததும், உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லாததனால், அவள் முகம் கூம்பியதையும் கண்டு, செங்கழுநீர் மலர்ந்ததாகவும், ஆம்பல் வாய் கூம்பினதாகவும் சொல்லுகிறீர்கள்.


உங்களுக்கு இரவெல்லாம் கண் விழித்து எல்லாத் தோட்டங்களிலும், வயல்களிலும் நுழைந்து, மலராத பூக்களை மலர வைப்பதும், இரவில் மலர்ந்த பூக்களின் வாய் மொட்டுக்களைக் கூம்ப வைப்பதும் தானா உங்கள் வேலை?.


உறங்கியவள், தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திலேயே சென்று மலர்ந்த / கூம்பிய செங்கழுநீர் / ஆம்பல் பூக்களைச் சென்று கண்டு நிரூபணம் கொள்ளட்டும் என்பதனால் 'உங்கள் புழக்கடை' என்று விளிக்கப் பட்டிருக்கிறது.


அன்னவளுடைய புழக்கடையில், சூரியன் உதித்த பிறகும், மேலே வளர்ந்து பரந்த மரங்களால் நிழல் சூழ்ந்திருப்பதனால், ஓரளவாவது சூரியனுடைய வெம்மை அல்லாமல், மலர்ந்திருக்க முடியாது என்பது உட் கருத்து.


'செங்கல் பொடிக் கூரை வெண் பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்'
இதற்கு இரண்டு விதமான பொருட்கள் உண்டு. காவி அணிந்தவர்களைப் பற்றிப் பேசுவதான இரு வித வியாக்கியானங்கள் உண்டு.


இரவெல்லாம் போகத்தில் கிடந்து, வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பைச் சுவைத்து, விடியலில் முழிப்பு பெற்று, நன்றாகப் பற்கள் விலக்கி, காவியாடைகள் அணிந்து, திருக்கோயில் சென்றிடும் போலி வேடதாரிகள் பற்றியும், (தாமஸப் ப்ரக்ருதிகள் என்பார் எம்பார் ஸ்வாமிகள்), அதுவன்றி
'பரமாத்ம நியோ ரக்தோ விரக்தோ பரமாத்மனி' என்னும் வகையில், பக்திச் சக்தராய், மற்ற விஷயங்களில் விரக்தியும் துறவும் பூண்டு, காஷாய வஸ்திரங்கள் தரித்து, சாத்வீகாரன சந்நியாசிகள், நித்யானுஷ்டானங்களும், தத்தம் விக்ரஹ மூர்த்திகளுக்கு திருவாரதனமும் முடித்து, தங்கள் தொடர்புள்ள கோயில்களுக்கு செல்வதாகவும் குறிக்கும்.


'சங்கிடுவான்' என்பதற்குச் சாவிக் குச்சி நுழைத்து, தங்கள் பாத்தியதை உள்ள கோயில் திருக் கதவுகளைத் திறந்திடவும், சங்கு ஊதிப் பொழுது விடிந்ததை அறிவிக்கவும், என்ற பொருளுமுண்டு.


'எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்' - உள்ளே கிடப்பவள், கோபியர் கூட்டத்தின் நிர்வாஹை. முதல் நாள், மற்றவர் எல்லோரையும் தான் வந்து தூக்கம் விழிக்கச் செய்வேன் என்று சொன்னவள், மற்றவர்கள் விழித்தும் உறங்கிக் கிடக்கிறாள். 'தர்மஸ்ய: ப்ரமாணம் வேதாச்ச' - தருமங்களின் ப்ரமாணம் வேதமே, என்னும் வகையில் வழி நடத்த வேண்டியவள் தூங்கிக் கிடக்கிறாள். 'ஒரு காலும் பிரிகிலேன்' என்று சொன்னதற்கு பொருள் இது தானா.


ஹ்ருதயம் சொல்லாததை வாய் மட்டும் சொன்னாலே, நிறைவேற்றுதல் கடினம். கிருஷ்ணனோடு சேர்ந்திருப்பவளே!, பொய் சொல்லுதல் முறையோ.


'நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்' - எங்ளைப் போல சாதாரணப் பெண்களுக்கு உள்ள நாக்கு உனக்கில்லை. 'ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம்' என்னும் வகையில் சொல்லினிமை மிகுந்தவள் நீ. உனக்கு நாணமில்லை. உன்னால் நாங்கள் உன் வாயிலில் காத்துக் கிடந்து நாணம் பெற வேண்டியதாயிற்று.


இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள், மற்றவர்களை நோக்கி, என்னை இத்தனை வசை பாடியும், என் வாசல் அருகில் நிற்கும் உங்களுக்கு, நான் செய்ய வேண்டியது தான் என்ன?


'சங்கோடு சக்கிரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடலோரம்பாவாய்' - பெண்களுக்கு தன்னையே எழுதி கொடுத்து, அவர்களைத் தோக்கடிக்கச் செய்யும் தாமரைக் கண்கள்.

வலிமை, ஆக்ரமிப்புக்குப் பேர் போன சங்கும் சக்கரமும் ஏந்தி வலிமையும், அகலமும் கொண்ட திருக்கைகளுடைய எம்பிரானை, சந்திர சூர்யாதிகள் ஓன்று சேர்த்து 'ஆங்கு மலரும் குவியும்' என்னுமாப்போலே திருக்கண்கள் கொண்டவனை, உன் இனிய குரலினால் பாடி துயிலெழுப்ப வந்திடாயோ, என்று தோழியர் விளிக்கிறார்கள்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக