திங்கள், 30 டிசம்பர், 2019

உயர் பாவை - 15 - சதாரா மாலதி

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்


தான் முன்னதாக எழுந்திருந்து எல்லாரையும் எழுப்பி வழிநடத்திப் போவதாக முதல்நாளே வாக்கு கொடுத்திருந்த ஒரு பெண் இன்னமும் வீட்டுக்குள் படுத்திருக்கிறாள். அவளை எழுப்பி அழைத்துக் கொள்ளப் பாடுகிறார்கள் இந்தப் பாசுரத்தில். 6 முதல் 15 திருப்பாவைகளில் சொல்லப்பட்ட பத்து ஆசாரியர்களில் ஓரிருவர் மட்டுமே திட்டு வாங்காமல் சமாளிக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் கல்லூரி ஆசிரியர்களைப் போல ஏகமாய் வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள்.


இங்கு கூப்பிடப்படும் பெண் நாவீறுடையவள். [சரியான வாயாடி. வெளியே வந்தால் பிய்த்து உதறுவாள் இவர்களை] இவர் நம்மாழ்வார் என்று அடையாளப் படுகிறார். நாலாயிரத்தில் கால்பங்கைத் தாமே ஆக்கிரமித்து எழுதித் தள்ளியவர் நம்மாழ்வார். திருவாய்மொழி [1102பாசுரங்கள்] வெகு பிரசித்தம். இவருடைய மொழியும் வெகு சிக்கலானது. அழகானதும் கூட.


உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் 
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் 
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணனை பாடேலோரெம்பாவாய்


ஊர்ப் பெண்கள் எல்லாரும் திரண்டு இவள் வாசல் முன் நின்று 'எத்தனை நேரமாகக் காத்திருப்பது? இன்னுமா எழுந்திருக்கவில்லை?' என்று கேட்டார்கள்.


உள்ளிருப்பவள் 'பொழுது விடிந்ததா?' என்று கேட்டாள்.


காலை மலரெல்லாம் பூத்து இரவு மலர்களெல்லாம் வாடின என்று அசிரத்தையாய் சொன்னார்கள். பின்னே எத்தனை பேருடைய ஒரே பல்லவிக்கு அநுபல்லவி படிப்பது?


என் வீட்டைப் பார்த்ததும் உங்கள் முகம் மலர்ந்ததையும் நான் வாசலில் நிற்காததால் உங்கள் வாய் அடைத்ததையும் சொல்கிறீர்களா? என்று கேட்டாள் உள்ளிருப்பவள். வாயிருந்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் போலிருக்கிறது என்று முணுமுணுத்துக் கொண்டு உரக்க 'அதெல்லாமில்லை குளத்தில் தாமரை செங்கழுநீர் போன்ற காலை மலர்கல் மலர்ந்தன. அல்லி ஆம்பல் போன்ற இரவு மலர்கள் கூம்பின' என்றார்கள். 


உள்ளிருப்பவள் 'இரவெல்லாம் வயலெங்குமுலாவி மொக்குகளை மலர்த்துவதும் மலர்களை மூடுவிப்பதும் அல்லவோ உங்களுக்குக் காரியம்?' என்றாள். எப்படியும் இராத் தூக்கம் கிடையாது. ஐந்து லட்சம் பேருமாகப் பூவையெல்லாம் ஒரு வழி பண்ணியிருப்பீர்கள் என்கிறபடி.


அதைக் கேட்ட இவர்கள் 'கட்டும் காவலுமாய் உள்ள தோட்டத்தில் குளங்கள் உள்ளன. அங்கும் அந்தந்தப் பூவெல்லாம் அவ்வப்படி மலர்ந்தும் கூம்பியும் இருக்கின்றன. அங்கு நாங்கள் எப்படிப் புகுந்திருக்க முடியும்?' என்றார்கள். அதாவது திறந்த குளங்களில் இதைப் போன்ற காரியங்களை இவர்கள் செய்வதுண்டு என்று தெரிகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்று தோழிக்கு இது தெரிந்திருக்கிறது. 'அங்கும் நீங்கள் புகுந்து கொள்ள கேட்பானேன்? எல்லாருக்கும் மரமேறத்தெரியும் மதிலேறத் தெரியும். கட்டுக் காவல் உள்ள குளங்களுக்கும் நீங்கள் போயிருப்பீர்கள்' என்றாள்.


ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது வெளியில் நிற்பவர்களுக்கு. 'போ,போ உள்ளே, போய் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி'யைப் போய்ப் பார். [உள்ளே உங்க வீட்டிலேயேயும் புழக்கடை இருக்கில்லே? அங்கே குளம் இருக்கில்லே அது முழுக்க செங்கழுநீரும் நீராம்பலும் இருக்கில்லே அதெல்லாம் மலர்ந்திருக்கா கூம்பியிருக்கா பாரேன் நீயே உன் கண்ணாலே பார்] அங்கு நாங்களா வந்தோம்? 'அங்கும் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்' என்றார்கள்.
[இப்படி ஒரு சம்பாஷணை இருந்திராவிடில் திடாரென்று உங்கள் எங்கள் என்று இதுவரை உபயோகப் படுத்தாத பதங்களை ஆண்டாள் பிரயோகிக்க வேறென்ன காரணமிருக்க முடியும்?]


அப்புறம் இன்னொரு அடையாளமும் சொல்கிறார்கள். 'செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்.' நம் தெருவில் எப்போதும் தாமதமாக எழுந்திருப்பாரே அந்த காவி ஆடை சன்னியாசியும் எழுந்து வெள்ளை வெளேரென்று பல்தேய்த்து தம் ஆராதனையிடத்தைச் சாவியிட்டுத் திறக்கப் போய்க் கொண்டிருக்கிறார் என்றார்கள். சிறு பெண்களானதால் காவி என்று சொல்ல வரவில்லை. செங்கல் பொடியை எடுத்து வெள்ளைக் கூரையில் புரட்டினாற்போல ஒரு உடை போட்டிருப்பாரே, ஒரு தவசிப் பெரியவர், அவருக்குக்கூட வெளேரென்று பல் இருக்குமே அவர் விடுவிடுவென்று சாவியும் கையுமாகப் போகிறார். அவர்களுடைய திருக்கோயிலுக்குப் போகிறார் போலும். என்றார்கள். அடுத்து ஞாபகம் வந்துவிட்டது. இவள் முதல்நாள் பேசியதும் இப்போது இவர்களுக்கே கேள்வி வைப்பதும்.


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் என்றார்கள். மனஸ் வாக்கு செயல் எல்லாம் வேறு வேறாயிருக்கும் துராத்மாக்களுக்கு. மூன்றும் ஒரே மாதிரியிருக்கும் மஹாத்மாக்களுக்கு. 'பாம்பணையாற்கும் தன் பாம்பு போல நாவிரண்டுளவாயிற்று' என்றபடி கண்ணன் சம்பந்தத்தால் உனக்கும் இரட்டை நாக்கு. சொன்னபடி செய்யவில்லையே என்று துளியாவது வெட்கம் இருக்கிறதா உனக்கு என்றார்கள். எதைக் கேட்டாலும் நல்லா வாயாடுவாயே! இப்போ எங்கே போச்சு வாய்? என்றார்கள்.


போகட்டும் அந்த நாவீறுடைமைக்காகத்தானே உன் வாசலில் வந்து நிற்கிறோம். கண்ணபிரான் எந்தமாதிரி மறுத்தாலும் வாதிட்டு பேற்றை வாங்கித்தரப்போகிறவள் நீ தானே எங்களுக்கு?
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாடு என்றார்கள். 'நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே' என்று யசோதைப் பிராட்டி அழைத்தபடி சங்கும் சக்கரமும் எப்போதும் கையிலுண்டு கண்ணனுக்கு. நண்பர்களுக்கு மட்டும் தெரியும் எல்லார் கண்ணுக்கும் தெரியாது. சங்கு சக்கரம் ஏந்தி அதனால் தடக்கையனானான். 'கூராழி வெண்சங்கு ஏந்தி ஒருநாள் காண வாராயே' என்றபடி சதா ஆண்டாளுக்கு சங்கின் மீது ஒரு கண். உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளல் கடல் வண்ணன் கைத்தலத்தே என்று வயிறெரிவாள். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்றெல்லாம் அடுக்கி அடுக்கி கேட்டது சங்கிடமல்லவா? 'சுடராழியும் பல்லாண்டு, அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு' என்றவரின் மகளாயிற்றே! ராமகமல பத்ராட்ச என்றபடி அரவிந்த லோசனனைப் பங்கய்க்கண்ணன் என்ற வார்த்தையால் சிறப்பித்தாள் ஆண்டாள்.


ஸ்ரீநாதமுநயே நம: என்றதும் அடுத்த ஆச்சாரியர் எழுந்தருளினார்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக