செவ்வாய், 31 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 17 - கண்ணன் ரங்காச்சாரி

15


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ 
சில்லென்றழையேன் மின் நங்கை மீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாயறிதும் 
வல்லீர்கள் நீங்களே  நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய் 
எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய்  


15 ம் பாடலில், எல்லாப் பெண்களையும் ஓன்று சேரத், திரளாய் காண வேண்டியிருப்பவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். இதன் கீழ் சொன்ன பத்துப் பாடல்களில் சொன்ன துயிலெழுப்பும் உக்திக்கு இறுதியான பாசுரம்.    


'எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ' - உள்ளிருந்தவளின்  பசுமையும், இனிய குரலும், இளமையும் மிகுந்த இளங்கிளியைப் போன்றவள். கிளியை பசுமைக்கும், இனிய குரலுக்கும் உவமையாக்கலாம். ஆனால், இவளுடைய இளமையையும் சேர்த்துச் சொல்லும் வகையில் 'இளங்கிளியே' என்றழைக்கப் பெறுகிறாள். 'எல்லே' என்பது ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல். நோன்பிருப்பதால் உடலில் பசுமை இன்னும் மிகுந்து வாய் சிவந்திருப்பதால் கிளியின் நினைவு வருகிறது.     


விடிந்த போதிலும் கிருஷ்ணானுபவத்தைக்  கொள்ளாமல் உறங்குகிறாயே. கிருஷ்ண விரஹத்தாலும், உள்ளிருப்பவளின் பார்வைக் கடாக்ஷம் கிடைக்கப் பெறாததினாலும், வருத்தத்துடன் பாடும் எங்கள் குரல் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே.


'சில்லென்றழையேன் மின்' - காதுகளில் குளிர்ச்சி பரவும் வண்ணம் இன்னும் இனிமையாய் என்னை அழைக்கக் கூடாதா என்கிறாள் உள்ளிருப்பவள். திருவாய் மொழி பாடாமல் போனால் எம்பெருமான் எழுந்தருள்வது எப்படி நிச்சயம் அன்றோ, அது போல வெளியிருந்து அழைப்பவர்களின் குரலில், உள்ளிருப்பவள் இன்னும் கரிசனை எதிர்பார்க்கிறாள்.                                                                 


'நங்கை மீர் போதருகின்றேன்' - தன்னை இளங்கிளி என்றழைத்த வெளியில் நின்றவர்களால் நெகிழ்ந்து போய், உள்ளிருப்பவள் 'பெண்களே நீங்கள் பூரணமானவர்கள்' நீங்கள் எத்தனை பேசியும் வாய் திறமாவல் இருந்த நான்  உடனே கிளம்புகிறேன் என்று புறப்படுகிறாள்.   


'வல்லையுன் கட்டுரைகள்' - எங்களைக் குறைசொல்லும் உன் பேரில் குற்றமில்லை என்பது உண்மையோ? என்கிறாள் உள்ளிருந்தவள் என்பது வெளியில் இருந்தவர்கள் கூற்று.  


'பண்டே உன் வாய்கள்' - கிருஷ்ண அனுபவத்தில் லயித்திருக்கும் என்னை வாயாடி என்பது நியாயமோ?, என்கிறாள் உள்ளவள். 


'வல்லீர்கள் நீங்கள் நானே தான் ஆயிடுக' - நீங்களெல்லாம் பேச்சில் வல்லவர்கள். நீங்கள் சொல்லும் குறைகள் எனக்கே போகட்டும். எப்படி பரதாழ்வான், கைகேயியின் குறையைக் கூடத் தன்னுடையதாய் எண்ணி ஏற்றுக் கொண்டானோ, அப்படியே நானும் ஏற்றுக் கொள்கிறேன். 'மத் பாப மேவாத்ர நிமித்த மாஸீத்' - பிறர் குற்றத்தையும் தனதென்று ஏற்பதே, வைஷ்ணவ லக்ஷணம்.


'ஒல்லை நீ போதாய்' - உன்னை ஒரு நிமிடம் கூட நாங்கள் விலக்க விரும்பாததால், எங்களோடு உடனே சேர்ந்திடு. 'சாது கோஷ்டியில் கொள்ளப் படுவாரே' என்னுமாப் போலே உள்ளே இருப்பவளை உடனே கோஷ்டியில் சேரப் பணிக்கிறார்கள்.


'உனக்கென்ன வேறுடையை' - எங்கள் குழுவில் கலப்பதல்லால் வேறு எதுவும் உனக்குப் பணியுமுண்டோ? இப்படிக் குழுவினர் கேட்டவுடன், உள்ளிருந்தவள், 'எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்' எனையன்றி எல்லோரும் பாவைக் களத்துக்குப் போய் விட்டார்களோ? எனக் கேட்டவளிடம், போனவர்களின் பெயரையும் எண்ணிக்கையும் நீயே கணக்கிட்டுப் பார் என்று தோழிமார்கள் சொல்கிறார்கள்.


'வல் ஆனை கொன்றானை' - வலிய குவலயா பீடத்தைக் கொன்று நமக்கு ஜீவப் பாதுகாவல் தந்தவனை, காவி மலர் வீதி வந்தவரான, எம்பெருமானை சேவிப்பதற்காக, வீதிக்கு வந்த நம் பெண்களை, மதம் பிடித்த யானையிடமிருந்து காத்தவனை, 'வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கோலேந்திழையர் மனத்தை', வேழத்தைக் கொன்று மங்கையர் மனத்தைக் கொள்ளை கொண்ட,
  
'மாற்றாரை மாற்றழிக்கும் வல்லானை' - எதிரிகளை நசித்து ஒழிக்கும் வல்லவனை - குவலயா பீடம் என்ற யானையின் கொம்பைப் பிடுங்கி, சாணூர முஷ்டிகர் என்னும் மல்லரைக் கொன்று, உயர்ந்த பீடத்திலிருந்து கம்சனை மயிரைப் பிடித்திழுத்துக் கொன்று பராக்கிரமங்கள் செய்தவனை.


'மாயனை' - எதிரிகளை நசுக்கி அழிப்பவன், நம் அன்புக்குத் தோற்றுப் போவதாய் நடித்து, நம்மைத் தன்னிடம் தோற்கச் செய்யும் மாயவனை 'பாடேலோரெம்பாவாய்' - பாட வார மாட்டாயோ.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக