செவ்வாய், 31 டிசம்பர், 2019

உயர் பாவை - 16 - சதாரா மாலதி

எல்லே! இளங்கிளியே


திருப்பாவையாகிறது இப்பாட்டிறே என்று சொல்லப்பட்ட ஏற்றம் பெற்றது இந்தப் பாசுரம்.
'அடியார்தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல்' என்றபடிக்கும் 'பேராளன் பேரோதும் பெரியாரை ஒரு போதும் பிரிகிலேனே' என்ற படிக்கும் 'அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்றபடிக்கும் அடியாரில்லாமல் ஆண்டவனில்லை என்பதால் எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும் அதெல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டு பெரியவர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு ஆண்டாள் கடைசி ஆழ்வாரை அழைக்க வந்துள்ளாள். கீழ்ப்பாட்டின் நம்மாழ்வாரும் கெளஸ்துப மணியின் அம்சம் என்று சொல்லப் படுகிறார். இங்கு அழைக்கப்படும் திருமங்கைஆழ்வார் பகவானின் அம்சம் என்று சொல்லப் படுகிறார்.


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ 
சில்லென்றழையேன் மின் நங்கை மீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாயறிதும் 
வல்லீர்கள் நீங்களே  நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய் 
எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய்

இத்தனை பாடல்களிலும் சம்பாஷணை வரிகளுக்கு இடையில் இருந்தது. இந்தப்பாடல் நேரிடையாக சம்பாஷணையாகவே இருக்கிறது.


இவர்களெல்லாம் குளிரில் விரைத்து உடல் வெளிரி உதடு கருத்து வாடியிருக்க [கொஞ்சம் அலைச்சலா?] உள்ளேயிருப்பவள் பசுகு பசுகு வென்று ஸ்வெட்டர் ஷால் கனத்த போர்வை வெதுவெதுப்பு கூடிய அறை இப்படி வசதியோடு படுத்திருப்பதைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அவள் கிளர்ந்த மேனியோடு சிவந்த உதடுகளோடு கிளி போல இருக்கிறாள்.


என்னம்மா பச்சைக்கிளியே இன்னமும் தூக்கமா? என்று கேட்டார்கள். [எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ] அதோடு மட்டுமில்லை. கீழ்ப்பாட்டில் பங்கயக் கண்ணனைப் பாடியது கேட்டு உள்ளிருக்கும் பெண் தனக்குத் தெரிந்த பங்கயக்கண்ணன் கீர்த்தனையை வார்த்தை யோசித்து கிளியின் குரலில் சன்னமாகப் பாடிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்கள் அழைத்தது பாட்டைத் தடுக்கியது. கிளியே என்று அழைத்தது வேறு இவள் பாட்டைக் கேலிசெய்தது போலிருந்தது இவளுக்கு. சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள் என்னை. நீங்களெல்லாம் பூரணைகள் தாம் தெரியும் இதோ வருகிறேன் என்றாள். 

[சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்] இதேது! நாங்கள் பாட்டுக்கு வாசலில் நின்று கூவிக் கொண்டிருக்கிறோம். நீ எங்களுக்கு ceremon படிக்கிறாய். கெட்டிக்காரிதான். நீ இப்படித்தான் என்பது எங்களுக்கு வெகுகாலமாகவே தெரியும். உனக்கு வாய் அதிகம் என்பது இப்போதைய விஷயமல்ல. என்றார்கள். [வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்].


'நீங்களெல்லாம் தான் கெட்டிக்காரர்கள். நான் என்ன கெட்டிக்காரத்தனம் செய்து விட்டேன்? என்னை வாயாடி என்று வேறு சொல்கிறீர்கள். உங்கள் யாருக்கும் வாயே கிடையாது என்பது போல' என்று படபடவென்று ஆரம்பித்தவள் சடாரென்று தன் நிலை உணர்கிறாள். 

[வல்லீர்கள் நீங்களே] தன் குறிக்கோள் தன் முயற்சி இன்று கூட்டமாகக் கிளம்பி எடுத்துக் கொள்ளவிருக்கிற பெரிய காரியம் அதில் இருக்கிற சிக்கல்கள் எல்லாவற்றையும் யோசித்தபின் வந்திருக்கிற கூட்டம் அறம் சார்ந்தது பகவானையும் விட பாகவதர்கள் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டபின் தணிந்து 'சரி, நானே தான் கெட்டிக்காரி, நானே தான் வாயாடி, இருந்துவிட்டுப் போகிறேன், இப்போது என்ன செய்ய வேண்டும் நான்?' என்று கேட்டாள். [நானே தான் ஆயிடுக] 'சீக்கிரம் வா, நீ என்ன தனிப்பானை வைத்து பொங்கல் போடுகிறாயா? என்று கேட்டார்கள். [ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை] 'அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் உங்களோடு தான் எப்போதும். எல்லாரும் வந்தாயிற்றா?' என்று கேட்டாள். 'ஆயிற்று, உனக்கு சந்தேகமிருந்தால் வந்தவர்களையெல்லாம் எண்ணிவிடு. பஞ்சலட்சம் பேரும் இருக்கிறார்களா என்று பார்த்து விடேன். அவர்களும் உன்னை அருகிலிருந்து தொட்டாற்போல் சந்தித்து மகிழ்ந்தது போலிருக்கும். உனக்கும் திருப்தியாயிருக்கும்.' என்றார்கள். [எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்].


வலிய யானையாகிய குவலயாபீடத்தைக் கம்சன் ஏவ அதை மதுராபுரியில் தோற்கடித்துக் கொன்றவனும் பகைவரின் பகையை மறக்க வைக்கவல்ல மாயம் செய்பவனுமான கண்ணனைப் பாடிக்கொண்டு சென்றடைவோம் வா என்றார்கள். [வல்லானை....இத்யாதி] இவ்வளவு தான் பாட்டு.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனாய சம்பவாமியுகேயுகே என்று தன்னிலையில் பகவத் கீதையில் சொல்லிக்கொண்டதை ஆண்டாள் படர்க்கையில் 'வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை' என்கிறாள்.


மாயன் என்றதில் சாது பரித்ராணம் சொல்லப்பட்டது. சாது என்பவன் கையாலாகாதவனில்லை. எல்லாம் தெரிந்தவன் ஆனால் பொறுத்துப் போகிறவன். அக்ரூரர், கோபிகள் போன்ற மிகச்சிறந்த சாதுக்கள். பக்தர்கள், பகவானை நம்பியவர்கள். அவனிடம் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு விரும்பத்தக்க அனுபவங்களைக் கொடுத்து தன் மாயையால் அவர்களை மயங்க வைக்கிறான், அவர்களை லாகிரியில் ஆழ்த்துகிறான், கண்ணன். 

வல்லானைக் கொன்றான் என்பதில் துஷ்டநிக்ரஹம் சொல்லப்பட்டது. மாற்றாரை மாற்றழிக்க வல்லான் என்பதில் தர்ம ஸம்ஸ்தாபனம் சொல்லப்பட்டது. கோபாலர்கள் இவன் பேச்சைக் கேட்குமளவு convince செய்து வைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். கூடியவரை பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து பிறகே களத்தில் இறங்குவது அவன் பழக்கம்.


திருப்பாவையாவது இப்பாட்டிறே என்று சொன்னது இந்த அவதார சாரத்தைச் சொன்னதற்கல்ல. பகவான் கிடக்கிறான் அவனை யார் கண்டது? [கண்டவர் விண்டிலர். கேள்வியை வைத்து இவ்வளவு பூசிக் கொள்கிறீர்களே! கண்முன்னால் இருப்பவன் பாகவதன் தானே?]

பாகவதனைப் பார். அவனுடைய மேன்மை தெரிவிக்கும் பாட்டு இது. 'நானே தானாயிடுக' என்று சொல்லும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்? பகவானை முழுக்க நம்பின பாகவதனுக்குத் தான் அகந்தை சுத்தமாக அழிந்து அந்த தன்னடக்கம் வரும்.


பாகவதன் தன் மேலில்லாத குற்றத்தைப் பிறர் இட்டுச்சொன்னால் தன் பாப பலன் என்று சாந்தத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இராமன் காட்டுக்குப் போனதற்கு மந்தரை காரணம், கைகேயி காரணம், தசரதன் காரணம், தந்தை சொன்னதைக் கேட்ட இராமனே கூட காரணம் ஆனால் பரதன் அதைத் தன் மேலிட்டுச் சொல்லிக்கண்டான். 'மத் பாபமேவ அத்ர நிமித்த மாஸீத்' என்று என்னைத் தவிர வேறு யாரும் இந்தக் கொடுமைக்குக் காரணமில்லை. நான் ஒருத்தன் என் அம்மாவுக்குப் பிள்ளையாய்ப் பிறந்திராமல் போயிருந்தால் இந்த வரம் கேட்கப் பட்டிருக்குமா என் தாயால்? நான் தான் பாபி. என்னால் இராமன் காட்டுக்குப் போனான்' என்று உருகினான். தன் குற்றத்தை யார் மேல் போடலாம் என்று பார்க்கும் உலகில் பழிகளைப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பது பாகவத லட்சணம். பகவான் அவர்களுக்குள் இருக்கிறான் என்பதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாட்சியம் அந்தத் தன்னடக்கமும் பொறுமையும் சகிப்புத் தன்மையும். அதை இந்தப் பெண் செய்து காட்டி விட்டாள். எனவே திருப்பாவையாகிறது இப்பாட்டிறே!


பெரியவர்களுக்கு இது தெரிந்திருந்தது. பாகவதனை விலக்கிவிட்டு பகவானை அணுகுவது மிக சிரமம் என்று புரிந்திருந்தனர். உடையவரை விலக்கி ஸ்ரீரங்க பெருமாள் தரிசனம் தனக்கு வேண்டாம் என்றார் கூரத்தாழ்வார்.


பாகவதனை எதிர்த்து பகவானை ப்ரீதி செய்யமுடியாது. பரதன் இராமனைத் திருப்பிக்கூட்டிப்போகவந்தபோது இலட்சுமணன் பரதனைப் படையோடு வருவதாக சந்தேகித்துச் சில கடுமையான வார்த்தைகளைச் சொன்னான். பரதனைத் தூற்றியது இராமனுக்குச் சுருக்கென்றது. 'பரதனை இவ்வளவு வெறுக்குமளவுக்கு உனக்கு ராஜ்யத்தில் ஆசையிருக்கிறதா? சொல்லிவிடேன், அவனைக் கேட்டு அதை உனக்கு வாங்கித்தருகிறேன்' என்றான் இராமன். லட்சுமணன் துடித்துப் போய் அதோடு நிறுத்திக் கொண்டான்.


சீதையும் அனுமானிடம் மனம் விட்டுச் சொல்லிக்கொண்டாள். இராமனை விட்டு மானை ஆசைப்பட்டு பகவத அபசாரப் பட்டேன். அது மன்னிக்கப் படுகிற குற்றம். லட்சுமணனைத் தகாத வார்த்தை சொல்லி பாகவத அபசாரப் பட்டேன் அது மன்னிக்கப் பட முடியாத குற்றம் அதை மனதில் வைத்து தான் எனக்கு இந்த பத்து மாத தண்டனை போலிருக்கிறது என்றாள்.


அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் [பெரியதிருமொழி-2-6-10] என்று தன்னடக்கத்தின் எல்லை நிலத்தில் நின்று பாடிய திருமங்கை ஆழ்வாரைப் பாசுரம் குறித்தது. 'அவன்பின் கெண்டை ஒண்கண் மிளிரக் கிளி போல்மிழற்றி நடந்து' என்றும் 'மென்கிளி போல் மிக மிழற்றும்' என்றும் நிறைய கிளிக்குறிப்பு வைத்ததால் இவர் கிளி. சுகர் என்ற கிழக்கிளி ஏற்கனவே இருப்பதால் இவர் இளங்கிளி. [வான்மீகி கோகிலம் என்றது போல].


இச்சை ஒன்று பொது லட்சிய பூர்த்திக்கு என்று ஆசைகாட்டிவிட்டு ஆண்டாள் இவ்வளவு தூரம் equip செய்து கொள்ள வேண்டியிருப்பதைச் செயல்பாடு மூலம் விளக்கி பெரிய கூட்டத்தோடு கண்ணன் மாளிகை நோக்கிப் போகிறாள். 


ஸ்ரீமதே சடகோபாய நம: என்று பத்தாவது குரு எழுப்பிக்கொள்ளப் பட்டார்.


ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை உள்ளீடாகவும் [software] பஞ்ச பூதங்களை உடைய மண்ணை உடலாகவும்* [hardware] கொண்ட உயிர் என்ற ஜீவன் ஐந்து நிலைகளையுடைய பரமனை முழுக்கத் தெரிந்துகொண்டு அர்ச்சை நிலையில் [அது தான் கடைசி access என்பதால்] அடையப்போகிறது., அது மிக improbable என்பதைத் தெரிந்து வைத்திருந்தும்.

*மண் எப்படி பஞ்ச பூதத்துக்கும் அடக்கமாகிறது என்றால், ஆகாசம் தான் முதல் பூதம். அதில் ஓசை என்ற புலன் மட்டும் இயங்குகிறது. ஆகாசத்தைக் கேட்கலாம். ஓசையோடு ஸ்பரிசம் சேர்ந்து காற்று வந்தது. இரண்டாவது பூதம் அது. காற்றை தொடமுடியும் கேட்கமுடியும். காற்றோடு உருவம் சேர்ந்து நெருப்பு ஆயிற்று. நெருப்பைப் பார்க்கலாம் தொடலாம் கேட்கலாம். இது மூன்றாவது பூதம். நெருப்போடு சுவை சேர்ந்து நீராயிற்று. நீரைச்சுவைக்கலாம், பார்க்கலாம், தொடலாம், கேட்கலாம். நாலாவது பூதமிது. நீரோடு மணம் சேர்ந்து மண் ஆயிற்று. மண்ணை முகரலாம், சுவைக்கலாம், பார்க்கலாம், தொடலாம், கேட்கலாம். இது ஐந்து புலந்திறனை அடக்கிய ஐந்தாவது பூதம். ஒரே சமயத்தில் சுற்றுவதாகவும் சுற்றாததாகவும் தென்படுவது இந்த மண். இதில் தான் பஞ்சபூதம் அடங்கி பஞ்ச பூதமும் முளைக்கின்றன. உயிரின் உடல் இந்த மண்ணினால் ஆனது முண்ணுக்கே திரும்பிப் போவது. ஜீவன் என்பான் ஸத்வத்தோடு மனத்தைக் கலந்து சத்வ அஹங்காரமும் ரஜத்தோடு புத்தியைக் கலந்து ராஜஸ அஹங்காரமும் தமஸ்ஸோடு உடம்பென்ற ஐம்புலனைக் கலந்து சோம்பல் அஹங்காரத்தையும் [திமிர்] பெறுகிறான். எல்லாவற்றிலும் விகிதக் கலப்பு சரியாகும்போது அகங்காரங்கள் குறைந்து ஜீவனின் அருமை பளிச்சிடுகிறது. பிரயத்தனங்களால் மானுடம் சிறக்கிறது. அதையே 16வது பாட்டு முதல் 'நெறி' என்கிற வழிமுறைக்கு ஆண்டாள் இட்டுப் போகிறாள். பிழைப்பேனா? இப்போது தான் அரைக்கிணறு தாண்டியிருக்கிறேன். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக