செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 81

நான்காவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்


(ஸதீதேவி தந்தையின் யாகத்திற்குப் போகவேண்டுமென்றும், ருத்ரன் வேண்டாமென்று காரணம் சொல்லித் தடுத்தல்.)


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் தக்ஷர் மாப்பிள்ளையான ருத்ரனிடத்தில் பகைமை கொண்டதற்குக் காரணம் சொன்னேன். இனி, அவர் புதல்வியாகிய ஸதீ ப்ராணன்களை விட்டதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேட்பாயாக. இப்படி மாப்பிள்ளையான ருத்ரனும் மாமனாரான தக்ஷப்ரஜாபதி இவர்கள் ஸர்வகாலமும் ஒருவர்மேல் ஒருவர் பகைமை கொண்டு அது மாறாமல் பிடிவாதத்துடன் இருக்கையில், அப்படியே நெடுங்காலம் கடந்தது. பிறகு ஒரு காலத்தில் பிரும்மதேவன் தக்ஷரை ப்ரஜாபதிகள் அனைவரிலும் தலைவராக ஏற்படுத்தி அபிஷேகம் செய்தான். அப்பொழுது அவர்க்கு நாமெல்லோரிலும் மேன்மையுற்றோமென்னும் கர்வம் உண்டாயிற்று. அவர், ப்ரஹ்ம நிஷ்டையில் மிக்க ஊக்கமுடையவனான ருத்ரனையும் அவனைப் பின்தொடர்ந்தவர்களையும் அவமதித்து “யஜ்ஞத்தில் இவர்களுக்கு பாகம் கொடுக்கலாகாது” என்று ஸங்கல்பித்துக்கொண்டு “வாஜபேயம்” என்னும் யாகம் செய்து “ப்ருஹஸ்பதிஸவம்” என்னும் மற்றொரு சிறந்த யாகம் செய்யத் தொடங்கினார். அவர் அந்த ப்ருஹஸ்பதிஸவம் செய்யத் தொடங்கி நடத்துகையில், அந்த வேள்விக்கு ப்ரஹ்மரிஷிகளும், தேவரிஷிகளும், பித்ருதேவதைகளும், தேவதைகளும் அவ்விடம் வந்தார்கள். அவரவர்களுடைய மனைவிகளும், ப்ரயாணகாலங்களில் செய்ய வேண்டிய மங்கள கார்யங்களையெல்லாம் பண்ணிக்கொண்டு ஸர்வ அலங்காரங்களையும் அணிந்து அவரவரது கணவர்களுடன் அவ்விடம் வந்து பேரானந்தத்துடன் உட்கார்ந்தார்கள். அப்பொழுது தக்ஷரது பெண்ணாகிய ஸதீதேவி அங்கனம் பேசிக்கொண்டு ஆகாச மார்க்கமாய்ப் போகின்ற தேவதைகளின் வார்த்தையால் தன் தந்தை யஜ்ஞ மஹோத்ஸவம் (யாகம்) நடத்துவதைக் கேட்டு ஸமஸ்த திக்குக்களினின்றும் (அனைத்து இடங்களிலிருந்தும்) புறப்பட்டு விமானங்களில் ஏறிக்கொண்டு கழுத்தில் ஸ்வர்ணமயமான அலங்காரங்களை அணிந்து பளபளவென்று ஜொலிக்கின்ற காதணியுடையவரும், சிறந்த ஆடைகளை உடுத்தவரும் சஞ்சலமான கண்கள் அமைந்தவருமாகிக் காதலருடன் தனது மாளிகையின் அருகாமையில் போகின்ற கந்தர்வ மடந்தையர்களைக் கண்டு தானும் போகவேண்டுமென்கிற மனவிருப்பம் உண்டாகப்பெற்றவளாகித் தன் கணவனான பூதநாதனை (ருத்ரனை)ப் பார்த்து இங்ஙனம் மொழிந்தாள்.


ஸதீ சொல்லுகிறாள்:- வாராய், நல்லியற்கையுடையவரே! உலகங்களுக்கெல்லாம் க்ஷேமத்தை விளைவிப்பவரே! தங்கள் மாமனாராகிய தக்ஷப்ரஜாபதி யஜ்ஞ மஹோத்ஸவம் (யாகம்) நடத்துகிறாராம். அதற்காக தேவதைகள் அனைவரும் போகின்றார்கள். தங்களுக்கு விருப்பம் உள்ளதாயின், நாமும் போகலாம். அந்த யாக மஹோத்ஸவத்தில் எனது உடன் பிறந்தவர்கள் தமது கணவர்களுடன் தாய் தந்தை முதலிய நண்பர்களைக் காண விரும்பி வருவார்களென்பது நிச்சயம். அம்மஹோத்ஸவத்தில் நானும் தங்களுடன் சென்று எமது தந்தை முதலியவர் கொடுக்கிற ஆடை ஆபரணம் முதலிய பரிசுகளைப் பெற விரும்புகின்றேன். உலகங்களுக்கு ஸந்தோஷம் விளைவிப்பவரே! நான் நெடுநாளாய் எனது தாய் தந்தை முதலியவர்களைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் உண்டாகப் பெற்றிருக்கின்றேன். எனது உடன் பிறந்தவர்கள் எல்லாரும் தமது கணவர்களால் அழைத்துக்கொண்டு வரப்பெற்று அவ்விடம் வந்திருப்பார்கள். அவர்கள் தமது கணவர்களால் வெகுமதி செய்யப் பெற்றிருப்பதுபோல் நானும் தங்களால் வெகுமதி செய்யப் பெறுவேனாக. என்னை அவ்விடத்திற்குத் தாங்கள் அழைத்துக்கொண்டு செல்வீராயின், எனக்கு அதுவே பெரிய வெகுமதியாம். அன்றியும் அந்த மஹோத்ஸவத்திற்காக என் தாயோடு கூடப் பிறந்தவர்கள் அனைவரும் வந்திருப்பார்கள். என் தாய் நெடுநாளாக என்னைப்பார்க்க நேராமையால் மனவருத்தமுற்றிருப்பாள். அவள் என்னிடத்தில் மிகுதியும் ப்ரேமத்தினால் மனம் உருகப்பெற்றவள். அவர்கள் எல்லோரையும் நான் பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றேன். மற்றும், யஜ்ஞத்தில் மஹர்ஷிகள் உயர எடுத்து நிற்கவைக்கின்ற யஜ்ஞத்வஜமான (யாகக்கொடியான) யூபஸ்தம்பத்தையும் (யூபஸ்தம்பம் என்பது யாகத்தில் பலியாகக் கொடுக்கப்படும் மிருகத்தை கட்டி வைக்கும் கம்பம்) நான் பார்க்க ஆசைப்படுகின்றேன். 


“ஆ! அந்த யாகத்தில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? நீ போய்ப் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறாயே” என்னில், வாஸ்தவமே (உண்மையே). தங்களுக்கு அவ்விடத்தில் போய்ப் பார்க்கவேண்டிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. கர்மத்தினால் விளையும் உத்பத்தியில்லாதவனாகிய பரமாத்மாவான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸங்கல்பத்தினால் உண்டாக்கப்பட்டதும், ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையுடைய ப்ரக்ருதியின் பரிணாமமும் பலவகைப்பட்ட ஆச்சர்யமான ஸந்நிவேசங்களை (சுற்றுச்சூழல்களை) உடையதுமாகிய ஜகத்தே (இந்த உலகமே) தங்களுக்கு ஆச்சர்யமாய்த் தோற்றுகிறது. ஜ்ஞானியாகிய தங்களுக்கு இதுவே ஆச்சர்யமன்றி இதைக்காட்டிலும் மேலான ஆச்சர்யத்தை விளைவிப்பது மற்றொன்றும் இல்லை. ஆயினும், நான் பெண்பிள்ளை. ஸ்த்ரீகள் இயற்கையாகவே மனோதிடம் இல்லாதவரென்பது வெளிச்சமே. அதிலும் நான் பராவர (உயர்ந்த, தாழ்ந்த) தத்வங்களை அறிந்தவளல்லேன். ஆகையால் நான் பிறந்த அகத்திற்குப் போய் அங்குள்ள பந்துக்களைப் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறேன். என் விருப்பத்தை நிறைவேற்றுவீராக. 


வாராய் அப்பனே! என் தந்தையோடு எவ்வித ஸம்பந்தமுமில்லாத பிறருடைய பெண்டிர்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டு கணவர்களை ஸஹாயமாகப் பெற்றுக் கூட்டம் கூட்டமாய் என் தந்தையினுடைய யாக மஹோத்ஸவத்திற்குப் போகின்றார்கள் பாரும். வாராய் நீலகண்டனே! இவர்கள் கலஹம்ஸங்கள் (ஆண் அன்னங்கள்) போல் வெளுத்திருக்கின்ற விமானங்களில் ஏறிக்கொண்டு போகின்றார்களே. அது தங்களுக்குப் புலப்படவில்லையா? அவ்விமானங்களால் ஆகாயமெல்லாம் அலங்காரமுற்றாற் போலிருக்கின்றதே. இது தங்களுக்குத் தெரியவில்லையா? வாராய் தேவச்ரேஷ்டனே! தந்தையின் க்ருஹத்தில் மஹோத்ஸவத்தைக் கேட்டுப் புதல்வியின் சரீரம் எங்கனம் பார்க்கப் போகாதிருக்கும்? நான் போகவேண்டாமென்றிருப்பினும், என் சரீரம் போகாதிருக்கப் பொறுக்குமோ? “ஆயினும், அவர்கள் நம்மை அழைக்காதிருக்கையில், நாம் அவ்விடம் போவது யுக்தமோ (சரியோ)?” என்னில், போவது யுக்தமே (சரியே). எப்படியென்னில், நண்பன், கணவன், ஆசார்யன், தந்தை ஆகிய இவர்களின் க்ருஹத்தில் ஒரு விசேஷம் நடக்குமாயின், அவர் அழையாதிருப்பினும், அங்குப் போவது பெரியோர்களின் நடத்தையேயன்றி நான் புதிதாகச் சொல்லும் வார்த்தையன்று. வாராய் தேவனே ! ஆகையால் எனக்கு அருள்புரிவாயாக. தாங்கள் கருணையுடைய தன்மையனல்லவா? அத்தகைய தாங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும். தாங்கள் என்னிடத்தில் பெரிய கண்ணோக்கம் கொண்டு என்னை உங்கள் திருமேனியின் பாதியில் வைத்துக் கொண்டீர்கள் அல்லவா. அதைப் பற்றியல்லவோ தங்களுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்னும் பேர் உலகமெங்கும் புகழடைந்திருக்கின்றது. அப்படி அருள்செய்த தாங்கள் இப்பொழுது நான் வேண்டுவதற்காக என்னை அனுக்ரஹித்து என் விருப்பத்தை நிறைவேற்றுவீராக.


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- கைலாஸநாதனாகிய ருத்ரன் இங்ஙனம் அன்பிற்கிடமான மனைவியின் வார்த்தையைக் கேட்டு, அவளுக்கு ப்ரீதியைச் செய்யும் தன்மையுள்ள நண்பனாயினும், தக்ஷர், ப்ரஜாபதிகளின் முன்னிலையில் மர்மங்களை அறுக்கும்படியாக நிந்தித்து மொழிந்த வார்த்தைகளாகிற பாணங்களை (சொல்லம்புகளை) மனதில் நினைத்து சற்றே சிரித்துக்கொண்டே இங்ஙனம் மறுமொழி கூறினான்.


சங்கரன் சொல்கிறான்:- வாராய் மங்கள ஸ்வபாவுமுடையவளே! பந்துக்கள் அழைக்காதிருப்பினும் அவ்விடம் போகவேண்டுமென்று நீ மொழிந்தது அழகியதே. அவர்கள் தேஹாத்மாபிமானம் (இந்த சரீரமே ஆத்மா என்ற எண்ணம்) தலையெடுக்கப்பெற்று அதனால் எங்குமில்லாத மதமும் கோபமும் கொண்டு குணங்களையும் தோஷமாக நினைத்து அவமதி செய்யாதிருப்பார்களாயின், அவர்கள் அழையாதிருப்பினும் நாம் போகவேண்டியது யுக்தமே (சரிதான்). வித்யை, தவம், தனம், சரீரம், வயது, குலம் ஆகிய இந்த ஆறும் ஸத்புருஷர்களிடத்தில் இருக்குமாயின் குணங்களே. இவையே அஸத்துக்களிடத்தில் (கெட்டவர்களிடத்தில்) சேருமாயின் அத்தனையும் தோஷங்களேயாம். ஆகவே அந்த ஆறும் அஸத்துக்களிடத்தில் தோஷங்களாகி அவர்களுக்கு விவேகத்தை அடியோடு பாழ் செய்து விடுகின்றன. விவேகம் பாழாகையில், “நான் வித்வான், நான் தவம் செய்தவன், நான் தனிகன்” என்று கர்வம் நிரம்பவும் உண்டாகின்றது. அதனால் கண்கெட்டுப் போகின்றது! அத்தகையோர் பெரியோர்களின் மஹிமையை உள்ளபடி அறியப்பெறுகிறதில்லை. இது உனக்கும் நன்றாகத் தெரிந்திருக்குமல்லவா? ஆகையால் இப்படிப்பட்டவர்கள் வீட்டிற்கு பந்துக்களென்கிற எண்ணத்துடன் போகலாகாது. “தக்ஷர் வித்யை, தவம் முதலிய குணங்களுடையவர்.  ஆகையால் அவர் உன்னிடத்தில் எப்படி தோஷம் நினைப்பார்? தாங்களும் அத்தகைய வித்யாதி குணங்களுடையவரே. ஆகையால் தாங்களும் அப்படி நினைக்கமாட்டீர்” என்று எண்ணுகின்றனயோ? அப்படியில்லை. அவர் இயற்கையில் அஸத்தாகையால் அவருடைய வித்யாதி குணங்கள் தோஷங்களேயாகி அவருக்கு கர்வத்தை விளைவித்து விவேகத்தைப் போக்கின. ஆகையால் அவர் “நாம் வித்வான், நாம் தாபஸர், நாம் தனிகர், நமக்கு சரீரம் அழகாயிருக்கின்றது, திடமாயிருக்கின்றது, நாம் நல்ல வயதுடையவர், நாம் நற்குலத்தில் பிறந்தவர்” என்று கர்வம் கொண்டு பிறருடைய பெருமையைப் பொறாமல் அவரிடத்தில் தோஷத்தையே ஏறிடும் தன்மையராயிருக்கின்றார். அப்படிப்பட்ட அவரை நாம் பந்துவாக நினைத்துப் போவது யுக்தமன்று (சரியன்று). எவர் வக்ரபுத்தி (கோணலான புத்தி) உடையவராகிப் புருவங்களை நெறித்துக்கொண்டு கோபம் வழியப்பெற்ற கண்களுடன், தமது க்ருஹத்திற்கு வந்தவர்களை வக்ரமாகப் (மாறுபட்ட கண்ணோட்டத்துடன்) பார்க்கின்றார்களோ, அவர்களோடு ஸஹவாஸம் வைத்துக்கொள்வது (சேர்ந்து இருப்பது) நலமன்று. அவர்களை பந்துக்களாக நினைத்து எப்படி அவர்களது வீட்டிற்குப் போகலாம்? உன் தந்தையாகிய தக்ஷர் இத்தகையரே. ஆகையால் நாம் அவ்விடம் போவது யுக்தமன்று (சரியன்று). வக்ரபுத்திகளான பந்துக்களின் கொடிய வசனங்களால் மர்மங்களில் அடியுண்டவன் மனவருத்தமுற்று இரவும் பகலும் பரிதவிப்பான். சத்ருக்களின் (பகைவர்களின்) கூரான பாணங்களால் சரீரமெல்லாம் பிளக்கப் பெறுவானாயினும் அவ்வளவு வருந்தமாட்டான். பந்துக்களாயிருப்பவர் (உறவினராயிருப்பவர்) வக்ரபுத்திகளாகிக் (கோணலான புத்தியால்) கொடிய வார்த்தைகளைப் பேசுவார்களாயின், அவை மனத்தை பிளந்து பெரிய வேதனையை விளைவிக்கும். கடின வார்த்தைகளைப் பொறுக்க முடியாதாகையால் அவர் வீட்டிற்குப் போகலாகாது. “நீ வரவேண்டாம். நான் போகிறேன்” என்னில், உனக்கும் அவமதியே நேருமன்றி வெகுமதி நேராது. 


அழகிய புருவங்களுடையவளே! தக்ஷர் ப்ரஜாபதியாயிருக்கையாகிற மேலான அதிகாரம் பெற்றவர். மேன்மையுடையவர். “அவர்க்குப் பெண்களெல்லோரிலும் நீ மிகவும் ப்ரீதிக்கிடமானவள் என்பது எனக்குத் தெரியும். இது நிச்சயமே ஆயினும், என் ஸம்பந்தம் இருப்பதால் உன் பிதா உனக்கு வெகுமதி செய்யமாட்டார். ஏனென்னில், என்னோடு ஸம்பந்தம் நேரிட்டதைப்பற்றி உன் தந்தையாகிய தக்ஷப்ரஜாபதி பரிதபிக்கின்றார். “ஆமாம், நீ ஏன் தக்ஷரை அவமதித்தாய். அதைப் பற்றியல்லவோ அவர் உன்னை வெறுக்கிறார்” என்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. ப்ரக்ருதி புருஷர்களின் உண்மையை, ஸாக்ஷாத்கரித்தவர்களான (எல்லாம் ப்ரஹ்மஸ்வரூபமே என்றும் பரப்ரஹ்மத்திற்கு உட்படாதது ஒன்றுமேயில்லை என்றும் நிச்சயித்துப் பரப்ரஹ்மத்தின் மஹிமையை அறிந்தவர்களான) பெரியோர்களின் புண்யமான புகழ் முதலிய ஸம்ருத்திகளைக் கண்டு அற்பர்கள் (அறிவு குறைந்தவர்கள், தாழ்ந்தவர்கள்) பரிதவித்து அவருடைய மேன்மையைத் தாங்கள் வருந்தியும் பெறமுடியாமையால் இந்த்ரியங்கள் வருந்திக் கலங்கப்பெற்று அந்தப் பெரியோர்களை வீணாகவே வெறுக்கிறார்கள். அஸுரர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெருமையைப் பொறாதவராகி அவனை வெறுப்பது போல்,  மூர்க்கர்களும் அஜ்ஞர்களும் (அறிவற்றவர்களும்) துரத்ருஷ்டமுடையவரும் (கேடான பாக்கியம் உடையவரும்) பெரியோர்களோடு ஒக்கப்பெறாமல் (சேர்ந்து இருக்க தகுதியற்றவராய்) வீணாகவே அவர்களை வெறுக்கிறார்கள். “தக்ஷர் உன்னால் கௌரவிக்கத் தகுந்தவரல்லவா? அவரை நமஸ்காரம் முதலியவற்றால் கௌரவிக்காமல் அவமதித்தாயல்லவா? ஆகையால் அவர் உன்னை வெறுப்பது யுக்தமே” என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள். 


அழகான இடையுடையவளே! சரீரம் வேறு ஆத்மா வேறு போன்ற பகுத்தறியும் தன்மையுடைய பேரறிஞர் ஒருவர்க்கொருவர் எழுந்து எதிர்கொள்வது, வணக்கமாயிருப்பது, தண்டன் ஸமர்ப்பிப்பது (தரையில்விழுந்து வணங்குவது) முதலிய மரியாதைகளை நடத்திக்கொள்வார்கள் (அவர்கள் மனது, வாக்கு, கருமம் ஆகிய இவை மூன்றிலும் ஒத்திருப்பவர். அவர் மனத்தில் நினைப்பதும் வாயால் சொல்லுவதும் சரீரத்தினால் செய்வதும் ஒன்றோடொன்று மாறாதிருக்கும். அஸத்துக்கள் (அறிவற்றவர்கள்) மனத்தில் ஒன்று நினைப்பார்கள். வாயால் ஒன்று மொழிவார்கள். கார்யத்தில் ஒன்று செய்வார்கள்). பேரறிஞர்களும் அறிவிலா மூடர்களும் ஒன்று சேருவார்களாயின், அறிஞராயிருப்பவர் அந்தர்யாமியான பரமபுருஷனுக்கு மாத்ரம் மனத்தினால் மாத்ரமே மரியாதை செய்வார்கள். தேஹாபிமானியாகிய (சரீரத்தையே போற்றுபவர்கள்) மூடனுக்கு மனோ, வாக், காயங்கள் (மனம், சொல், உடல்) மூன்றாலும் மரியாதை செய்யமாட்டார்கள். ஆகையால் தேஹாத்மாபிமானியாகிய (இந்த சரீரமே ஆத்மா என்ற எண்ணம் உடைய) தக்ஷன் வரும்பொழுது நான் அந்தர்யாமியான ஸர்வேச்வரனை உத்தேசித்து மானஸிகமாய் எழுந்து எதிர்கொள்வது முதலிய மரியாதைகளை நடத்தினேன். அந்த க்ரமத்தில் நான் தவறவில்லை. தேஹமே ஆத்மா என்று நினைப்பவனாகையால், அவனுக்கு நான் மனோவாக்காயங்கள் (மனம், சொல், உடல்) மூன்றில் ஒன்றாலும் மரியாதை செய்யவில்லை. “ஆயினும், அந்தர்யாமியான பரமபுருஷனைக் குறித்து மனத்தினால் மாத்ரம் நமஸ்காரம் முதலிய மரியாதைகள் செய்வதேன்? மனோவாக்காயங்கள்(மனம், சொல், உடல்) மூன்றாலும் செய்யவேண்டாமோ?” என்னில் சொல்லுகிறேன் கேட்பாயாக. ரஜஸ் தமோ குணங்கள் தீண்டப்பெறாமல் (கேவல) ஸத்வகுணம் மட்டுமே தலையெடுக்கப்பெற்றுப் பரிசுத்தமாயிருக்கின்ற மனத்தை வாஸுதேவமென்று சொல்லுவார்கள். அம்மனத்தில் வஸுதேவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தோன்றும். அம்மனத்தில் வாஸுதேவன் நித்யவாஸம் செய்வான். அது ஸத்வகுணமே முக்யமாகப் பெற்று வெளிச்சமுற்றிருக்கும். அவ்வாஸுதேவன் மற்ற இந்த்ரியங்களுக்கு விஷயமாகாமல் அத்தகைய மனத்திற்கே விஷயமாவான். ஆகையால் அந்த பகவானை அம்மனத்தினால் நமஸ்கரிப்பது யுக்தமே. எனவே, நான் அவனை மனத்தினால் மாத்ரமே நமஸ்காரம் செய்தேன். மற்றும், அந்தர்யாமியைக் குறித்து மனோவாக்காயங்கள் (மனம், சொல், உடல்) மூன்றாலும் மரியாதை நடத்துவோமாயின், அறிவில்லாத மூடர்கள் அந்த மர்மத்தை அறியாமல் அந்த தேஹாத்மாபிமானிக்கே (இந்த சரீரமே ஆத்மா என்ற எண்ணம் உடையவனுக்கே) மரியாதை நடத்தினானென்று நினைத்துத் தாமும் அங்ஙனம் செய்து அழிந்து போவார்கள். ஆகையால் அவன் உனக்குத் தந்தையாயினும் உனக்கு தேஹத்தை (சரீரத்தை) விளைவித்தவனாயினும், எனக்கு பகைவனாகிய அந்த தக்ஷனை நீ பார்க்கலாகாது. அவன் அதற்கு உரியவனல்லன். எவரெவர் அவனைப் பின்தொடர்ந்திருப்பார்களோ, அவர்களையும் நீ  கண்ணெடுத்தும் பார்க்கலாகாது. அழகிய துடைகளுடையவளே! அந்த தக்ஷன் ப்ரஜாபதிகள் செய்த ஸத்ரயாகக்தில் நிரபராதியான என்னை துருக்திகளால் (கொடிய வார்த்தைகளால்) அவமதித்தானல்லவா? அப்படிப்பட்டவனை நீ கண்ணெடுத்துப் பார்ப்பதும் யுக்தமன்று (சரியன்று). அப்படி என் வார்த்தையை மீறி நீ போவாயாயின், உனக்கு க்ஷேமம் கிடைக்காது. அன்றியும், அவமதியே நேரும். “பந்துக்களிடத்தில் உண்டாகும் பரிபவம் பரிபவமே (அவமரியாதை அவமரியாதையே) அன்று” என்று நினைக்கிறாயோ? அப்படி அன்று. எல்லாவிதங்களிலும் மேன்மையுற்ற ஒருவன் பந்துக்களால் பரிபவம் (அவமரியாதை) நேரப் பெறுவானாயின், அது அவனுக்கு அந்த க்ஷணமே மரணத்தை விளைவிப்பதாகும். (அனைவராலும் கௌரவிக்கப் பெற்ற ஒருவன் பந்துக்களால் அவமதிக்கப் பெறுவானாயின், அவன் அதைப் பொறுக்கமுடியாமல் உடனே ப்ராணனை விடுவான்). 


மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக