16
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாழ் திறவாய்.
ஆயர் சிறுமியோர் உமக்கு, அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்.
வாயினால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்
16-ம் பாடலில், 6 - ம் பாடல் முதல் 15-ம் பாடல் வரை பத்து வித குணங்களைக் கொண்ட பெண்களைத் துயிலெழுப்பி, எல்லாக் கோபியர்களும், கண்ணன் உறங்கிடும் நந்தகோபர் திருமாளிகைக்கு முன்னர் திரண்டு நிற்கிறார்கள்.
செய்யாதன செய்யோம் என்று நோன்பின் துவக்கத்தில் சபதம் கொண்ட கோபியர்கள், கண்ணன் உறங்கிடும் திருமாளிகைக்குள் ஒன்று சேர நுழைந்திட விழையாமல், ஜெய விஜய துவார பாலர்களை ஒப்ப நின்றிருக்கும் வாயிற் காவலர்களையும், கோவிலின் தர்ம கர்த்தர்களையும், கண்ணனை துயிலெழுப்ப அனுமதி கோரி நிற்கிறார்கள்.
'நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே' - கண்ணனுடைய தந்தையாகவும், உயிர்க்காவலனாகவும், நொடியும் மாறாது இருக்கும் காரணத்தால் நந்தகோபன், நாயகன் என்றழைக்கப் பெறுகிறான்.
காவலர்களாகட்டும், நந்தகோபரே தாம் ஆகட்டும், நமக்கும் கண்ணனுக்கும் இடைப்பட்ட ஆச்சார்ய ஸ்வரூபிகள். 'தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்', 'அடிகள் அடிகள் நினையும் அடியவர்கள் தம் அடியான்' என்னும்படியாய் ஆச்சார்ய பக்தி பிரதானமான வைஷ்ணவக் கைங்கர்யம் ஆனதினால், நந்தகோபன், நாதன் என்றழைக்கப் பெறுகிறான்.
கண்ணன் கொலுவிருக்கும் கோயில் நந்தகோபனுடைய கோயில் என்றழைக்கப் படுகிறது. ஏனெனில் அவன் லோக நாதனுக்கே தந்தை, நாதன். கம்சாதி ராக்ஷஸக் கணங்களிலிருந்து 'காப்பாருமில்லை' என்று கிருஷ்ணனை எண்ணி அவனடியார்கள் வயிறெரிந்து வருந்தும் சமயம் அன்னார் வயிற்றெரிச்சலைச் சமன் செய்பவன் ஆனதால், அவனுக்கு உண்டான அந்தஸ்து.
'கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்'. - கோகுலத்தில் எல்லாமே மாட மாளிகைகள். மற்றவர் இல்லங்களிலிருந்து, ராஜனான தன்னுடைய இல்லத்தை
வேறுபடுத்திக் காட்டும் வகையில் அங்கங்கு கொடிகளைப் பறக்க விட்டிருந்தான்.
தண்ணீர்ப் பந்தலை அடையாளம் காட்டும் வகையில் கொடிகள் நட்டுக் கிடப்பதைப் போன்று, நீர்மைக் கருணைக் கண்ணன் வசிக்குமிடமதால், கொடிகள் தோன்றின.
கண்ணன், இரவில் பெண்கள் புகக் கூடும் என்பதால் காவலர்களின் அனுமதி பெறுதலுக்காக நியமித்திருப்பான் என்று கோபியர்கள் நினைக்கிறார்கள்.
'மணிக் கதவம்' மணிகளால் இழைக்கப் பட்ட கதவுகள் யாரும் உள்ளில் நுழைந்தாலேயே, சப்தமிட்டுக் காட்டிக் கொடுக்கும்.
'தாள் திறவாய்' நன்மைகள் தழைத்தோங்கும் யுகம். நந்தகோபன் மல்லரை மாய்க்க வல்ல பெரு வீரன். பிள்ளைகள் ஆண்புலிகள். இருந்தும் திருமாளிகைக்குத் தாழ் எதற்கு?
அதற்கு பதில் சொன்னார்கள். நந்தகோபன் பரம சாது. குழந்தைகள் சிறுபிள்ளைகள். கம்சனாதிகள் பரம சத்ருவாகி கிளம்பும் புல் பூண்டு கூட விஷமமாக இருப்பதானால் தான், நள்ளிரவில் யாராவது எழுப்பி உள்ளே நுழையக் கூடாது என்று கதவுக்குத் 'தாழ்' இட்டிருந்தார்கள். கதவின் தாழ்ப்பாளைத் திறந்திட கோபியர்கள் கோருகிறார்கள்.
பெண்களுக்குப் பயப்பட வேண்டுமோ என்ன, என்று கோபியர்கள் வினவிடவும், சூர்ப்பனகையும் பூதனையும் பெண்கள் தானே என்று காவலர்கள் பதிலளிக்கிறார்கள்.
'ஆயர்சிறுமியோருமுக்கு' - நாங்கள் ஒன்றுமறியாத ஆயர் சிறுமிகள் தாமே என்று உரைக்கிறார்கள். சூர்ப்பனகை போன்றோ, பூதனை போன்றோ நாங்கள் தனித்து வரவில்லையே. ஐந்து லக்ஷம் குடிகளிலிருந்து வந்தோம் அல்லவா? அதற்கு காவலன் 'சிறுமிகள் என்பதால் ஆபத்தில்லை என்ற பொருளல்லவே. கம்சன் அனுப்பிய அரக்கன் கன்று வடிவில் தானே வந்தான்' என்கிறான்.
'அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்' - நாங்கள் நோன்பிருக்க வந்திருக்கிறோம். முன்னரே கண்ணன் இதுபற்றி எங்களிடம் பேசியதால். தங்களைக் கையும் காலும் பிடித்து பேசிய படியால் மாயன். எங்களை இருந்த இடத்திலே இருக்க ஒண்ணாத படி செய்யும் பேரழகனானதால் 'மணி வண்ணன்'. எங்களிடம் கண்டிப்பாய் நோன்பிருக்க ஒத்துக் கொண்டதால் 'வாய் நேர்ந்தான்' 'நமே மோகம் வசே பவேத்' சொன்ன வண்ணம் செய்பவன் அவன்.
'தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்' - அவனன்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளமும் மனமும் தூயவர்களாய் வந்திருக்கிறோம். 'ஹனுமான் விலலா பவ' என்னும் வகையில் எங்கள் தூய்மையை, மனத்தைத் திறந்து தான் காட்ட இயலும். அவனைத் துயிலெழுப்பவது தவிர வேறெதுவும் எங்கள் நோக்கமில்லை. அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடுவது தான் எங்கள் நோக்கம்.
சமயா போதிதச் ஸ்ரீமான் ஸுகஸுப்த: பரந்தப - அவன் உறங்கிடும் அழகைப் பிராட்டி கண்டு உகந்த வகையில், நாங்களும் காண வந்திருக்கிறோம்.
'வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா' - எங்களுடைய நோக்கத்தை அறியாமல் ஏதாவது பேசி எங்கள் மனத்தை துன்புறுத்தாதே அம்மா என்று காவலர்களிடத்தில் இறைஞ்சுகிறார்கள்.
'நேய நிலைக் கதவம் நீக்கேலோரெம்பாவாய்' - அன்போடு கதவைத் திறந்து எங்களை உள்ளே சென்றிட அனுமதிப்பாய். கதவு கூட உன்னை விட அன்பானதாயிருக்கும் என்பதும் ஒரு குறிப்பு. எங்களால் திறக்க முடியாத வலிமையான கதவானதால் நீயே திறந்திடுவாய் என்று பணிக்கிறார்கள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்