புதன், 1 ஜனவரி, 2020

உயர் பாவை - 17 - சதாரா மாலதி

ஆசாரியனின்றி ஆத்மசேமமில்லையா?


16வது பாசுரத்தில் புதியதொரு விஷயத்தை விரித்துப் பேசுகிறாள் ஆண்டாள். இவ்வளவு நாளும் ஐந்து லட்சம் கோபிகைகளை எழுப்பின லட்சணத்துக்கு 10 பெண்களை 10 ஆச்சாரியர்களையும் 10 ஆழ்வார்களையும் உருவகித்து எழுப்பினார்களே அதனால் ஆசார்யரை எழுப்பி முடித்ததாகாதா?

இல்லை. முனைவர்கள் 'வழிகாட்டி' என்று ஒருவரைப் பேரிட்டு வைத்திருக்க வேண்டும் என்ற விதியிருக்கிறதே அதைப் போல ஒவ்வொருவருக்கும் ஒரு ஆச்சாரியன் பிரத்யேகமாக வேண்டும். அது அடிப்படைத்தகுதி. ஜீவன் அது பாட்டுக்கு போயிற்று முயற்சி செய்தது சேமம் அடைந்தது என்றில்லாமல் இன்னொரு பெரிய வலிய துணை தேவைப் படுகிறது என்று சொல்லும்போது விரக்தி மேலிடும். குருவை எப்படி கண்டுபிடிப்பது குருவின் அடையாளம் என்ன நாம் அவரைக் கண்டுபிடித்தாலும் அவர் நம்மை ஏற்பாரா அவர் என்ன எதிர்பார்ப்பார் நம்மிடம் என்பதெல்லாம் இம்சிக்கும் கேள்விகள். வேறு வழியேயில்லை. பிடி ஒரு குருவை என்கிறது மதம். [பயங்கரவில்லங்கம்]


இந்த பாசுரம் ஆசாரியனை எப்படி சம்பந்தப் படுத்துகிறது என்று பார்ப்போம்.

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய 
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாழ் திறவாய்.
ஆயர் சிறுமியோர் உமக்கு, அறை பறை 
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்.
வாயினால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்


ஆண்டாளும் கூட்டமும் நந்தகோபன் திருமாளிகைக்குப் போய் அங்கே கோயில் காப்பான் வாசல்காப்பான் இவர்களின் அனுமதியைப் பெற்று உள்ளே போக இருக்கிறார்கள். கீழ் இரண்டாம் பாட்டில் 'செய்யாதன செய்யோம்' என்று பிரதிக்ஞை செய்தது செயல்வடிவாயிற்று இது தான் முறை. இந்த கோபிகளின் நடைமுறைத் தெளிவு ஞானவான்களாகிய சனகசநந்தனாதிகளிடமும் பார்க்கக் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களைத் தடுத்த துவாரபாலகர்களைச் சபித்திருக்கிறார்கள். நாமே பெரிய அதிகாரிகளைச் சந்திக்கும்போது குறுக்கிடும் கீழ்நிலை ஊழியர்களிடம் ஒரு புன்னகையாவது தந்தால் காரியம் சாத்தியப்படுவது எந்த விதத்திலாவது ஸ்திரப்படும். நிறைய பேர் PA விடம் முறைத்துவிட்டு உள்ளே Executive காதைக் கடித்து வருவார்கள். அவர்கள் திரும்பிப் போன அடுத்த நிமிடம் உள்ளே பார்க்க நேர்ந்தால் PA, Boss கையில் போட்டுக் கொடுப்பதை கவனித்து அதிர்ந்து போகக்கூடும். இதெல்லாம் சர்வ சாதாரணமான logic.


நாயகனான நந்தகோபனுடைய கோயில் காப்பவனே! [வாசலில் நிற்கும் முதல் காவலாளி அனுமதி செய்து சைகை செய்கிறான். உள்ளே கொடிமரம் அருகில் இன்னொரு காவலாளி நிற்கிறான்] கொடியும் தோரணமும் ஆடுகின்ற திருவாசல் காப்பவனே! மணியிழைத்த கதவைக் கொஞ்சம் திறந்து விடுகிறாயா? என்றார்கள். நாயகன் முழுவேழுலகுக்கும், தொல்லைவானவர் தம் நாயகன். 

நம்முடைய நாயகனே.... என்றென்றபடி தலைமைத்துவம் கண்ணனிடம் இருக்க நாயகனாக நந்தகோபனைச் சொல்வது சரியா? எனில் சரியே. மிக உயர்ந்த நாகரத்தினத்தை உங்களுக்கு ஒரு மகான் கொடுத்திருப்பாரேல் அந்த ரத்தினத்தால் உங்களுக்குப் பெருஞ்செல்வம் வந்திருந்தால் அதன் மீது வைத்த அன்பைப்போல் பல மடங்கு அதை உபகரித்த மகான் மீது உங்களுக்கு வருவது இயற்கையல்லவா? அருமையான கண்ணனை நமக்கு அளித்து அவனைப் பாதுகாக்க ஒரு கோயிலும் ஒரு காவலும் இரு காவலாளியும் வைத்திருக்கும் நந்தகோபனை நம் தலைவனாகக் கொள்ளத் தடையில்லையே! பகவானை யார் நமக்கு வெளிக்காட்டுகிறானோ அவனே நமக்குத் தலைவன். ஆச்சாரியன். கடவுளுண்மையைக் கட்டிக் காவந்து பண்ணித்தருபவன் நமக்குத் தலைவன் ஆச்சாரியன். ஆச்சாரியன் ஆசியோடும் தான் கடவுளை நாம் கிட்ட வேண்டும்.


பாபியான சத்ரபந்துவும் புண்யவானான புண்டரீகனும் மோட்சம் பெற்றது ஆச்சாரியனின் கருணையினால். பாபம் மோட்சத்துக்குத் தடையில்லை. புண்யம் மோட்சத்துக்கு வழியும் இல்லை. ஆச்சாரியனே மோட்சத்துக்கு வழி [இது எப்படி இருக்கு?]


உயிரில்லாத கதவு கூட மயக்குவதாக இருக்கிறது நந்தகோபன் மாளிகையில். தூரத்திலிருந்து வருத்தத்துடன் வரும் பெண்களுக்கு வழி காட்டவென்றே கொடி பறக்கிறது. ஜீவனில்லாத பொருட்கள் இவ்வளவு உபகாரம் செய்யும்போது ஜீவனுள்ள காவல்காப்போன் எவ்வளவு பரிவோடு இருக்கவேண்டும்? இந்தப் பெண்கள் வருவது பற்றி ஏதாவது சூசக உத்தரவும் கண்ணபிரானால் கொடுக்கப் பட்டிருக்குமோ? ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு பெண்கள் நுழைகிறார்கள்.


பயமுள்ள தேசத்தில் நடுநிசியில் வந்து அழைக்கக் காரணமென்ன?' என்று கேட்டான் காவலாளி. 'அச்சம்தவிர்ப்பானிருக்கும் இடத்தில் பயப்பட அவசியமென்ன' என்றார்கள். 'நன்றாய்த்தான் சொன்னீர்கள். யுகம் திரேதாயுகமாய், காலம் நல்லடிக் காலமாய், தகப்பனார் சம்பிராந்தகராய், பிள்ளைகள் தாங்களும் ஆண்புலிகளாய், அவர்கள் தாமும் தம் வழியே போய் அதே வழியில் வருபவராய், ஊரும் திருவயோத்தியாய் இருந்து வாழ்கிறதா? அஞ்ச வேண்டாமல் பாலிலே உண்டு பனியிலே கிடக்கிறதா? காலம் கலிக்குத் தோள்தீண்டியான துவாபரமாய், தகப்பனார் பசும்புல் சாவ மிதியாத பரமசாதுவாய், பிள்ளைகள் சிறுவராய். அதிலும் தீம்பரின் தலைவராய், இருப்பிடம் இடைச்சேரியாய், அதுவும் தான் கம்சனுக்குப் பகையாய், எழும்பூண்டெல்லாம் அசுரமயமாயிருக்க அச்சமின்றி எப்படியிருக்கலாகும்? என்றான் காவல்காரன். 'ஐயோ, நாங்கள் பெண்கள்' என்றனர் 'பெண்களையும் நம்ப மாட்டோம்.. சூர்ப்பணகை பெண் தானே?' என்றான். 'அவள் அரக்கி நாங்கள் இடைச்சிகள்' என்றார்கள் 'பூதனை இடைச்சி தானே' என்றான். 'பூதனை ஆய்ச்சி நாங்கள் சிறுமிகள்' என்று பரிதாபமாகப் பதிலிறுத்தார்கள்.


பூதனையைப் போல தனித்து வராமல் பஞ்சலட்சம் பெண்கள் கூடி வந்திருக்கிறோம். எங்கள் வயதைப் பார்த்தால் நம்பிக்கை வரவில்லையா உனக்கு என்று கேட்டு அறைபறை என்று தொடங்கினார்கள். மேளம் தானே? கண்ணன் எழுந்ததும் விண்ணப்பம் செய்து வாங்கி எடுத்து வைக்கிறேன் பிறகு வந்து எடுத்துக் கொள்ளுங்கள். என்றான் காவலாளி. நீ இனிமேல் கேட்டு வாங்கி வைக்கவேண்டிய அவசியமின்றி கண்ணபிரான் நேற்றே எங்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறான். அவன் மாயன். அதாவது உனக்கு மரியாதைப்பட்ட கண்ணன் எங்களுக்கு மிக நெருங்கினவன். பல முறை எங்களோடு விளையாடினவன். எங்களுக்கு மறக்கமுடியாதபடிக்கு வடிவழகும் உடையவன். ஆனாலும் நாங்கள் அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறவர்களல்ல. எங்கள் ரட்சணத்துக்கு அவனே பொறுப்பு என்று நினைக்கிற தூய்மையை உடையவர்களாய் அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிப் போற்றுவதையே நோக்கமாகக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.


'மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்' என்றதும் வாசல் காப்பவனுக்கு உருகி விட்டது. அவன் கண்ணில் தெரிந்த கனிவைப் பார்த்த பெண்கள் இன்னொரு முறை காலில் விழுந்தார்கள் 'வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ' என்று வணக்கத்துடன் இறைஞ்சினார்கள். ஒரு முடிவுடன் வந்திருக்கிறவர்கள் இவர்கள். ஒரு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது இவர்கள் வருகையில் என்பதைக் கோடி காட்டும் வகையில் 'எடுத்த எடுப்பில் தடை செய்து எங்கள் பலனைக் கெடுத்து விடாதே அப்பா நீ' என்று கேட்டுக் கொண்டார்கள். கதவைத் தள்ளிக் கொண்டு போகும்படிக்கு அனுமதி பண்ணினான் காவலாளி. ஆனால் பெண்கள் 'இந்தக் கதவு உன்னைவிட நேயத்துடன் கண்ணனைக் காவல் காக்கிறது. எங்களால் தள்ளமுடியவில்லை. நீயே கொஞ்சம் திறந்து கொடு' என்று வணங்கிக் கேட்டார்கள். அவனும் அப்படியே செய்தான். பெண்கள் உள்ளே புகுந்தார்கள்.


அடிபணிபவனும் அருள் தருபவனும் இருக்க மத்தியில் எதற்கு ஒரு தரகன்?


கருணையுள்ளவனாயிருந்தும் பகவான் எப்போதும் நியாயம் நீதி பார்ப்பவனாகையாலே 'அளவற்ற குற்றங்களைக் குறைவற்றுச் செய்து விட்டு இன்று காலில் விழுகிறானே பாவி' என்று நினைத்துச் சீறுவான். அப்போது அவன் அங்கனம் சீறவொண்ணாதபடிக்கு அவனால் மறுக்கவொண்ணாத மனிச்சரையிட்டு பொறுப்பிக்க வேண்டும்.அதுவே குருவின் கடமை.


குரு ஞானம், பக்தி, நியமம் மூன்றுமே பொருந்தியவனாக இருக்கவேண்டும். இந்தப் பாடலில் நந்தகோபன் குரு. வாயில் காப்பான் குரு. கோயில் காப்பானும் குரு. உயிருக்கு மோட்சம் சித்திக்க முதல் படி குரு.


சரீரப்பிறவி அவனுக்கு உண்டாவது பெற்றோரால். ஞானப் பிறவி அவனுக்கு உண்டாவது குருவால். 'அன்று நான் பொஇறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்' என்று ஞானம் தோன்றுமுன்னேயிருந்த தன்னைப் பிறந்ததாகவே நினைக்கவில்லை திருமழிசைப்பிரான்.


தண்ணீர் சம்பந்தம் பெற்ற தாமரையை சூரியன் மலர்த்துகிறான். தண்ணீரை நீங்கிய தாமரையை அதே சூரியன் உலர்த்துகிறான். அதேபோல ஆச்சாரிய சம்பந்தமுள்ள ஜீவனுக்கே பகவான் கருணையைச் செய்கிறான்.


திருநாராயணபுரம் என்று ஒரு ஊர். [மைசூர் மேலக்கோட்டை] அங்கு சோமயாஜுலு என்ற பாடகர் மிக நன்றாகப் பாடுவார். அவர் பாட்டுக்கு அந்த ஊர் திருநாராயணப் பெருமாள் [செலுவேநாராயணன்] தானே வந்து ஆடுவான். வெகு நாள் பாட்டும் ஆட்டமுமாய்க் கழிந்தது. அந்திமத்தில் பாகவதர் பெருமாளைக் கேட்டார் தனக்கு மோட்சம் உண்டா? என்று. திருநாராயணன் கேட்டான் 'உன் குரு யார்?' என்று. உன் பரிச்சயம் எனக்குப் பிரயோசனமில்லையா? என்று பாகவதர் கதற 'இவ்வூரில் ராமானுஜரைக் கேளும். நீர் பாடியதற்கும் நான் ஆடியதற்கும் சரியாகிவிட்டது' என்றான் பெருமாள்.


குரு சம்பந்தம் என்பது நம் நடைமுறையில் 'through proper channel' என்று சொல்லி process செய்கிறோமல்லவா? அது தான் என்று எனக்குப் படுகிறது. தேவனின் சாம்ராஜ்யம் மிகப் பெரியது. அவன் தவறே நேரக்கூடாது என்று விரும்புகிறவன். முறைப்படி வராத விஷயங்களைப் பரிசீலனை செய்வதிலும் dispose செய்வதிலும் blunders நேராமலிருக்க இப்படிப்பட்ட checks தேவை தானே!


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக