வியாழன், 2 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 19 - கண்ணன் ரங்காச்சாரி

17


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் 
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய் 
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் 
செம்பொற் கழல் அடி செல்வா பலதேவா 
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்


ஒரே திரளாய் உள்ளே நுழைய, நந்தகோபனின் திரு மாளிகைக் காவலர்கள், கதவுகளின் கரும் தாள்களைத் திறந்து விடுகிறார்கள்.


கண்ணனுடைய அருளைப் பெறுகைக்கு காத்திருக்கும் கோபியர் குழாம், ஏற்கனவே பெற்றனுபவித்துக் கொண்டிருக்கும் நந்தகோபனார் தொடங்கி, வரிசையாக ஒவ்வொருவராய் எழுப்புகிறார்கள். வைணவத்தில் குரு பரம்பரையை சேவித்தல் ஸ்ரேஷ்டமானது. 'முறை தப்பாமே குரு பரம்பரை வழியே பற்றுகை' என்பதாக.


திருவாசல் காப்பாளர்களின் அனுமதி கொண்டு உள்ளே வந்த பெண்கள், உறங்கிக் கிடக்கும் கிருஷ்ணனையே நோக்கிப் பார்த்துக் கிடக்கும் நந்தகோபரை, பெருமாளாகப் பாவித்து துயிலெழுப்புகிறார்கள்.


'ஸாக்க்ஷான் மன்மத மன்மத:' என்ற மன்மதனான கண்ணனைக் கண்டால் விடார்கள் கோபியர்கள், என்பதனால் அவனையே பார்த்துக் கிடக்கும் நந்தகோபனைச் சென்று பற்றினார்கள்.
இந்தப் பாடல் ப்ராதான்யமாக கண்ணனைப் பெற்ற நந்தகோபனைப் போற்றிடும் விசேஷம்.


'அம்பரமே, தண்ணீரே, சோறே' - வானமே, தண்ணீரே, என்று எல்லையற்றுத் தருகிற வஸ்துக்களோடு, சோறே, வஸ்திரங்களே என்ற என்றுமே நமக்குத் தேவைப்படும் நித்ய அத்யாவசியங்கள், கொடுத்தருளும், எங்கள் பெருமானே என்று நந்தகோபனைத் துதிக்கிறார்கள்.


கிருஷ்ணனைப் பெற்றுத் தருகிற ஸ்வாமித்வத்தால் நந்தகோபர் எம்பெருமான் ஆனார். இந்த உடம்பின் அத்யாவசியங்களான வானமும், தண்ணீரும், சோறும், வஸ்திரங்களையும் தருவதில் தயக்கம் இல்லாத தயாளனே, எங்கள் மனத்துக்கு ஆதாரமான கண்ணனை நாங்கள் கண்டருள தயை செய்யுங்கள்.


'அறம்செய்யும்' - கொடை மற்றுமன்று, கர்த்தவ்யம் என்னும் தர்மத்தையும் விடாத மன்னனே. 'ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ' - உலகத்திலே உள்ள எல்லா லாபங்களுக்குள்ளும் பிரதம லாபமான கண்ணனை எங்களுக்கு அருள வல்ல பெரும் கொடை வள்ளலே.


'நந்த கோபாலா துயிலெழாய்' - உள்ளே நுழைந்த ஆய்ச்சிகள், கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் உறங்கும் யசோதா பிராட்டியை முதலில் எழுப்பிடாமல், கட்டிலின் வெளிப்புறத்தில் வேலும் கூர்வாளோடும் 'கூர் வேல் கொடுந் தொழிலனான நந்தகோபன்' தன்னை எழுப்பிடுவது எதனால்.


ஆய்ச்சி மார்கள் அறிந்தோ அறியாமலோ 'த்வய நிஷ்டர்கள்' - அதாவது பிராட்டியையும், அவள் மூலமாக எம்பெருமானையும் ஆஸ்ரயித்து நிற்கும் பக்தைகள். யசோதை பிராட்டி வாத்சல்யத்தோடு கண்ணனை ஒரு புறத்திலும், நந்தகோபனை மற்றொரு புறத்திலும் அணைத்துக் கிடக்கிறாள், எப்படி பிராட்டி பரமாத்மனை ஒரு புறத்திலும், விபூதி எனப்படும் உலகப் பிரஜைகளை இன்னொரு புறத்திலும் அணைத்துக் கிடப்பதைப் போல.


'கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குல விளக்கே' - யசோதா பிராட்டியைப் பற்றிய உரைகள் இவை. வஞ்சிக் கொம்பு போல வளர்ந்து கிடக்கும் ஆயர் குல குமரிப் பெண்களின் உயர்ந்த தலைவியே. 


கொழுந்தே - கொழுந்தினைப் போன்ற ஆயர் சிறுமியர்கள் வேதனை பட்டால் துயருறும், முகம் மாறிடும் பெரும் பெண்ணரசியே.


அடியேன் சற்றே மாறுபட்டு, கொம்பனார் எனப்படும் கொம்புகள் கொண்ட ஆவினங்களுக்கு உணவு செய்வித்து அவைகளைப் ப்ரீதியோடு பராமரித்திடும் அன்னையே என்று யோசித்ததுண்டு.


'எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்' - நாங்களாகவே மனதினால் சுவீகரித்துக் கொண்டக் கண்ணனைப் பெற்ற எம்பெருமாட்டியே!, அன்னையே!. எம்பெருமான் நந்தகோபன் ஆனதால் யசோதா எம்பெருமாட்டியானாள்.


ஊர் முழுவதும் திரிந்து, அழிவு செய்து, மூலையில் இருப்பனான கண்ணனின் அன்பு ஒன்றையே பெரிதாகக் கொண்டு, ஊரே திரண்டு வந்து அவன் மேல் பழி சொன்னாலும், வெறும் கண்டிப்பாய், 'செய்தாயா' என்று மட்டும் கேட்டு விட்டு, ஒருவிதத்தில் கண்ணனின் குறும்புகளுக்குத் துணை போன யசோதையே, நாங்கள் வந்துக் காத்துக் கிடைப்பதையோ எங்கள் குறைகளையோ அறிய மாட்டாயோ?


'அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த' - தேவர்களையும் ஜகத்தையும் தீய சக்திகளிடமிருந்து காத்திட, ஆகாசத்தையே அறுத்துக் கொண்டு வளர்ந்து, உறங்கிடும் குழந்தையை அணைத்துக் கிடக்கும் தாயைப் போலவும், தலையில் எண்ணையை ஊற வைத்துக் குளிர்விப்பதான திருவடிகளை ஜகத்தின் மேல் வைத்து உலகத்தை அளந்த திரு விக்ரமனே.


'உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்' - தேவர்களின் தலைவனே நீ உறங்கியது போதும். ரக்ஷகர்களுக்கு தூக்கம் சரியோ?, 'சதா பஸ்யந்தி', என்னும் வகையில் இமை கொட்டாமல் இறுதி நிலையில் உடல் கிடக்கும், உத்தமர்களின் கண்களுக்கு ஸ்பர்சித்து மூடச் செய்திடும், உத்தமனே. எங்களுக்கு முகம் காட்டாமல் தூங்கி இருந்து, எங்களையும் கண்கள் மூடச் செய்திடாதே. சம்ஸார தூக்கத்தில் ஆழ்த்தி விடாதே.


'செம்பொன் கழலடி செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்' - இளைய பெருமாள் கண்ணனுக்கு முன் பிறந்த பலராமனே. அவனுக்கு முன்னாலேயே 'பிள்ளை பிறக்கைக்கு பொற்கால் பொலியப் பிறந்த சீமானே', நீயும் உன் தம்பியும், ஒருவரைப் பிரியாமல் இன்னொருவர் கட்டிக் கொண்டு கிடக்கும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டீர்களோ?. அவனையும் எழுப்பி நீயும் எழுந்திடுவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக