ஞாயிறு, 15 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 1 - கண்ணன் ரங்காச்சாரி


திருப்பாவை அவதார வியாக்கியானம் - பெரியவாச்சான் பிள்ளை அருளிய மூவாயிரப்படியைத் தழுவியது.   

தன் உடலையும் உயிருக்குமே முக்கியத்துவம் தரும் பல கோடி மனிதர்களுக்கு இடையிலும், 'நான் யார்' என்ற ஆத்ம தரிசனம் அடைந்த பல்லாயிர ரிஷி, முனிகளுக்கு இடையிலும், நெடிதாய் உயர்ந்து விரிந்த மலைகளாகவும், பிரிக்கவே முடியாத சிறிய அணுக்கள் பற்றித் தெளிவாய் ஆராய்ந்து அறிந்த மேதாவிகளுக்கு இடையிலும், பெரியாழ்வார், மற்றும் இதர ஆழ்வாராதிகளுக்கு இடையிலும், ஆண்டாளாய் அவதரித்த  கோதைப் பிராட்டியின் சிறப்பு.

மேற்சொன்ன மகா புருஷர்கள், 'அநாதி மாயயா' என்னும் சம்சார மாயையில் அகப்பட்டு மயங்கிக் கிடந்தவர்களை, அந்தப் பரமார்த்தி தானே அருள் செய்து தட்டி எழுப்பித் தன்னை யாரென்று அவர்களுக்குக் காட்டிக் கொண்டான். ஆண்டாளோ, பைந்நாகப் படுக்கையிலே அயர்ந்து கிடந்தவனைத் தட்டி எழுப்பி, தன் அபிலாக்ஷைகளைத் தெரிவித்துக் கொண்டாள். நமக்குத் தானே வந்து சேரும் ஐஸ்வர்யங்களினும், நாம் தேடிச்  சேர்ப்பவை, எளியதாய் இருந்தாலும் மிகச் சிறப்பானவை, என்பதைப் போலே. 
இதர ஆழ்வாராதிகளும் திவ்ய புருஷர்களும், ஆண்களாய் அவதரித்து, நாயகி பாவம் கொண்டு திருமாலை மோகித்தார்கள், பெண்ணாகவே அவதரித்ததாலும், பால்ய பருவம் முதலே அவனைச் சிலாகித்துக் காதல் செய்தவள் என்பதாலும்,  நாச்சியாருக்கு இன்னும் சிறப்பு.

பிறப்பு முதலே இவளுக்குள் இருந்த பக்தி வேட்கை, 'பதி சம்யோக சுலபம்' என்னும் வகையிலே, யவ்வனம் அடைந்த போதில் பெருகி, 'ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும்' என்ற கொள்கையோடு, 'கோல் தேடி ஓடும், கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்' ஆகி, இவள் மனிதர்க்கு பிறவாமல் தானே ஸ்வயம்புவாய் அவதரித்ததால், மனித ஆண்  மேல் விருப்பு ஏற்படாமல் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்', என்ற விரதம் கொண்டாள்.

வட பத்ர சாயனுக்குத் தன்னை முழுதாய் பரிமாற வேண்டும் என்றவள் கோரிக்கைக்கு, எளிதாய் மாலவன் செவி சாய்க்கவில்லை. தன்  போலவே உருகி, இவனுக்குத் தம்மை பரிமாறியவர்கள் இது வரை எங்குமுண்டோ என ஆராய்ந்து பார்த்தாள். 

அவன் அவதரித்த காலத்திலே 'அவன் உலாவிப் போன அரிச்சுவடும், அவனும் பெண்களுமாய்த் திளைத்த யமுனையும், அவனெடுத்த கோவர்த்தனமும், கிடந்ததாகில் அவற்றைக் கண்டேனும் தரிப்போம்’, என்று எண்ணினாள். கண்ணன் பிறந்த காலத்துக்கோ, யமுனைக் கரைக்கோ யார் கூட்டிக் கொண்டு போவார்கள் ஆண்டாளை?

ஜனக ராஜன் மகளை, மாலன் அடையும் வகையில் 'வில் உடைக்கும்' சம்பவம் காரணமாக அமைந்தது.  யசோதையின் தம்பி கும்பனின் மகள் நப்பின்னையை அடைய,  கும்பன் ரிஷபங்கள் என்று எண்ணி வளர்த்த, ஏழு அரக்கர்களை, சிறுவனாக உள்ள போதே, அடக்கி வதைத்தது காரணமானது. தனக்கும் கண்ணனை அடைய அப்படி காரணங்கள் ஏதும் இல்லாதது ஆண்டாளுக்கு பெரும் துயர் ஆனது.  

ஆண்டாளிடம், சிலர் சொன்னார்கள். திருவாய்ப்பாடியிலே நன்னீராடும் கோபிகைளோடு களித்திருந்த கண்ணன், இன்ப ரசத்திலிருந்து வேடிக்கையாய் மாற்றம் செய்வதற்காக, எங்கோ ஒளிந்து கொண்டு, கோபியரை, துயருக்குள்ளாக்கினான். அவர்களும் உரிமையோடும் கோபத்தோடும் 'நீ ஓர் அரக்கன்' என்று கண்ணனை விளித்தார்கள்.

கோபியர்களைப் பற்றி கேள்வியுற்ற ஆண்டாளுக்கு ஒரு எண்ணம் வந்தது. வில்லிபுத்தூரை, ஆய்ப்பாடியாக்கி, வடபத்ர கோவிலை நந்த கோபன் அரண்மனையாக்கி,  உள்ளே நின்றவனை கிருஷ்ணனாக்கி, திருவாய்ப்பாடியிலே வசிக்கத் துவங்கினாள்.

கண்ணன் யவ்வன பருவத்தினனாகி, சேர்ந்து விளையாடிய கோபிகைகளும் யவ்வனர்களாகி கண்ணனையே எண்ணிக் கிடந்ததால், பெண்களின் பெற்றோர்கள் கோபம் கொண்டு, இனியும் கண்ணனை சந்திக்கக் கூடாது, அவன் கொடியவன் என்று மிரட்டி,  அவர்களை வீட்டிற்குள்ளேயே சிறை அடைத்தார்கள். 

பெற்றோர்களின் இந்தக் கடும்  செயல், ஆயர்பாடியில் மழை பொய்க்கக் காரணமானது. மழையின்றி மனிதரும் பசுக்களும் தவித்திருக்க, ஆயர் சிறுமியர்கள் நோன்பிருத்தலே ஒரே உபாயம் என்று முடிவு கொண்டு, கண்ணனே எல்லா விதத்திலும் இதற்கு தகுதியானவன் என்பதால் அவனை அதற்கு 'வழி நடந்துவாய்'; என்று பணிக்கிறார்கள்.

கண்ணனும் கோபிகைகளோடு இணைந்திருக்க, நல்லதொரு சாதனமாகக் இதைக் கொண்டு, அவர்களிடம் சொல்லுகிறான். 'முன்னிரவில் ஆயாசம் போகத்  தூங்கி, பின்னிரவில் எழுப்பிடுங்கள் என்னை, நீராடிப் பின் நோன்பிருக்கலாம்' என்று விளித்தான்.

நோன்பை எண்ணித்  தூங்கிடாமல் விழித்துக் கொண்டிருந்த கோபிகைகளும், சிறு உறக்கம் முடித்து கண் விழித்த கோபியர்களும், கண்ணனின் லீலா விநோதங்களில் ஆழ்ந்து உறங்கிப் போனவர்களையும், மற்றவர்கள் துயிலெழுப்பி, நப்பின்னையோடு அயர்ந்திருக்கும் கண்ணனை துயில் எழுப்ப நந்தகோபனின் திருமாளிகைக்கு ஏகினார்கள். பரதாழ்வான் மற்றும் அருச்சுனன் போன்று, கண்ணன் துயில் விழிக்க அவன் பள்ளியறை வாசலில் சிரம் தாழ்த்திக் கிடந்தார்கள்.

ஆய்பாடியர்கள், நெய்யுண்ணாது பாலுண்ணாது நோற்பது கண்ணனுக்கு விடும் ஒரு சங்கேதம். மஹாராணி உஞ்சவிருத்தி செய்துக் கிடந்தால், ராஜனுக்கு அவமானகமாகக் கூடுவது போல், இவர்கள் பசியோடு நோற்கும் நோன்பும் கண்ணனை விசனப்படுத்தி, அவன் அருள் பொழியக் கட்டாயம் ஆவது  தான், இவர்கள் நோன்பின் முக்கியக் குறிக்கோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக