தனியன்கள்
(பட்டர் அருளியது)
நீளா துங்க ஸ்தன கிரி தடீ சூப்த முத் போத்ய கிருஷ்ணம்
- நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைச் சாரலிலே கண்ணுறங்கும் கிருஷ்ணனை,
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிசத சிரஸ் ஸித்த மத்யா பயந்தி
- நூற்றுக்கணக்கான வேதாந்த நூல்களிலே விளக்கப்பட்ட மற்ற அசேதனங்களிலிருந்து மாறுபட்டு, ஆனால் அவற்றை இயக்கும், அவன் சிறப்பை ஓதி உணர்த்தி, (பாரதந்தர்யம்*)
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்த்தே
- அவனை திருப்பள்ளி எழுப்பி, தான் சூடிக் களைந்த மாலையால், கண்ணனை அன்போடு விலங்கிட்டு,
கோதா தஸ்யை தம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:
- தனக்குள்ளேயே இன்பம் அனுபவிக்கும், கோதைப் பிராட்டிக்கே (எங்கள்) வணக்கங்கள் ஆகட்டும்!
பாரதந்தர்யம் - வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு - உள்ளத்தில் வைப்பவர்கள் மனதினிலேயே படிந்து விடுபவன். தானே அவ்வகை அசேதனர்களின் (திருமால் அன்றி மற்ற எல்லாமும். எல்லாரும்) தேவைகளை, மேலே வீழ்ந்து நிறைவேற்றுபவன். யசோதை தாம்புக் கயிற்றினால் கட்டினால் கட்டுப்பட்டவன், கோதை தான் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு உகந்ததால் தன்னோடு அவளை ஐக்கியமாக்கியவன், நாமும் உள்ளம் உருகி வணங்கினால் தானே கட்டுப்படுவான், எப்பொழுதுமே விலகிட மாட்டான்.
(உய்யக் கொண்டார் அருளிய தனியன்கள்)
1. அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு,
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
உடையவர், ஆளவந்தார் போன்ற மஹானுபாவர்கள், அன்னப் பறவை போன்றவர்கள். பாலையும் நீரையும் (நல்லவற்றையும், தீமைகளையும்) தனித் தனியாய்ப் பிரியச் செய்யும் வித்தை அறிந்தவர்கள். இன்னொரு கோணத்தில், பக்தி வயலில் ஞானப் பயிர் வளர்க்கும் உன்னத உழவர்கள். ஆச்சார்ய ஆழ்வாராதிகள் புழங்கிய பக்தி என்னும் வயலில், ஒரு புதிய பெண் பறவை பிறந்து, வயலையே புதுவையாய் ஆக்கியது.
இந்தப் புதிய பெண் பறவை அன்னமல்ல. அவளோர் இன்னிசைக் குயில். குழலோசையால் உலகை மயங்கிடச் செய்யும் முரளீதரனுக்கு இன்னிசைப் பாமாலை சூட்டியவள், இவள் சூட்டிய திருப்பாவை என்ற அந்த திவ்ய புஷ்ப மாலைக்கு, என்ன கைம்மாறு செய்ய முடியும் கண்ணனால்.
அகம்பாவம் என்பது சிறு கீற்றேனும் இல்லாத அரங்கன், தன் தந்தை கட்டி வைத்த மாலையை, தன் கழுத்தில் அணிந்து கொண்டு பரவசப்படும் சிறு குழந்தையாய் மாறி, தினமும், அவள் சூடிக் களைந்த மாலைகளை தான் அணிந்து மகிழ்ந்து, அவளை இன்னும் தனிமைப் படுத்தி உருக்கி எடுப்பது தகாது என்றெண்ணி, ஓர் நாள், அன்னவளையே மாலையாகச் சூட்டிக்கொண்டு, தன் திண் தோள்கள் மற்றும் விரிந்த மார்புகளில் தவழ விட்டுக் கொண்டான்.
2. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதியென்ற இம்மாறு
நாம் கடவா வண்ணமே நல்கு.
சொர்ணமயமான மாலனுக்கு, தான் அணிந்த பூ மாலையையும், பாடி அனுபவித்த 'தொல் பாவைப்' பதிகங்களையும் மாலையாகச் சூட்டியதால், இவளும் அவன் மேல் பரவிப் படர்ந்த தங்கக் கொடியாகி (சுடர்க் கொடி) விட்டாள்.
தொன்மையான வேதங்களின் சாரங்களைப் பிழிந்து முப்பது பாசுரங்களில் அளித்ததால், அவள் பாடி அருளியவை 'தொல் பாவை' ஆனது.
ஒவ்வொரு பாவைப் பாட்டும் ஒவ்வொரு அழகு வளையாய், அவள் கையில் ஜொலிக்கிறது (பல் வளையாய்).
'நான் பிறந்ததே அரங்கனாயும், வேங்கடவனாயும் இருக்கும் ஒரே பரமார்த்திக்குத் தான்' என்னும் விதிக் கங்கணமும் நினைவு தெரிந்த நாள் முதலாய் ஏற்றுக் கொண்டு அவனோடு இணைந்தாள்.
அடியோங்கள், அல்ப மனிதப் புழுக்கள். எங்களுக்கு ஞானமோ, விதிக் கங்கணம் அணிந்து கொள்ளும் பக்குவமோ, வேதப் பாடல்கள் புனையும் வல்லமையோ கிடையாது. எங்களுக்கும் ஏற்ற வண்ணம் 'அவனுடன் நீ இணைந்த வழி முறையை, சிறிதாவதுக் காட்டி அருள்வாய் அன்னையே'.