மிக மிகச் சிறிய கிராமம்.
பாமரர்களான ஆய்க்குலம் சார்ந்தவர்கள். என்ன கேட்க வேண்டும், அதை எப்படிக் கேட்க வேண்டும் என்று கூடத் தெரியாத சிறார்கள்!
ஒரே இடத்திலும் இல்லை. தனித்தனியாக உதிரிப் பூக்களாகச் சிதறிக் கிடக்கிறார்கள்! தங்கள் உரிமை என்ன என்பதே தெரியாத அவர்களுக்கு, 'உரிமைக் குரல்' எழுப்புவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
இவர்களை ஒன்றிணைக்க வேண்டும், போதிக்க வேண்டும்... உதிரிப்பூக்களை ஒன்று சேர்த்து ஒரே நாரில் வரிசையாய்க் கோக்க வேண்டும்!
எதற்கு இவ்வளவு பீடிகை? எல்லாம் ஆண்டாளைப் பற்றி சொல்லத்தான்!
ஆண்டாளை, பூமிப் பிராட்டியின் அவதாரமாகப் பார்த்துப் பரவசிப்பது ஆன்மீக அனுபவம் எனில், நம் முன் இருக்கின்ற ஆதாரப்பூர்வ ஆவணமான "திருப்பாவை"யை நவீன நிர்வாகவியல் நோக்கில் பார்க்கும்போது கிடைக்கின்ற வெளிச்சக் கீற்றுகளோ, வேறுவித அனுபவம்!
நவ யுகத்தின் லௌகீக பாணியில் பார்த்தால் ஆண்டாள் நாச்சியார், பட்டர்பிரான் கோதை - இரு பரிமாணங்களிலும் தொழிற்சங்கத் தலைவியாகவும் சரி; மனிதவள நிர்வாகியாகவும் சரி - மிக அற்புதமாக சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டாள்!
ஆண்டாள் என்ற தலைவி - தன் ஆன்மீக நெடும் பயணத்துக்கு ஆள் சேர்க்கும் அழகும், அவர்களுக்கு 'சுய விழிப்பு' உண்டாக்கும் லாகவமும் மார்கழித் திங்கள் பாசுரத்திலேயே வெளிப்பட்டு விடுகிறது!
ஆண்டாளின் படையில் ஆரம்பநிலையில் சேர்ந்தவர்கள் - சிறுமிகள். அனைவரும் சிறுமிகள்! பால் கறந்து தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுத்து, கூவி விற்று வாழும் ஏழைமை பொருந்திய குடும்பத்துச் சிறுமிகள்! எனவே ஆண்டாள், தன் குழுவினருக்கு 'தாழ்வு மனப்பான்மை' இருக்கவே கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால், நீங்கள் ‘செல்வச் சிறுமீர்காள்!' என்று விளித்து புது நாமகரணம் சூட்டிவிட்டாள்! 'Women's Empowerment' (மகளிர் சுயச்சார்பு) என்று இப்போது பிரமாதமாகப் பேசப்படுவது பற்றி அப்போதே சொன்னவள் அவள்!
அவளது குழுவுக்கு, நாராயணன் என்ற உலக நிர்வாகியைப் போய்ப் பார்க்கமுடியும் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது! அப்படியே பார்த்தாலும் - என்ன கேட்பது, அதை எப்படிக் கேட்பது என்ற தயக்கம்! 'பறை' என்ற கூலி தரச் சொல்லி நாம் கேட்க முடியுமா என்று கலக்கம், தயக்கம்!
ஆண்டாள் நாச்சியார் தன் குழுவுக்கு, தன் ஆன்மீகச் சங்கத்துக்கு உறுப்பினர்களை முதல் கட்டமாகச் சேர்த்து, கம்பீரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் வீதிமுனையில் பிரசாரம் செய்வதைப் பாருங்கள். வீதிமுனைப் பிரசாரம் என்று இப்போது செய்கிறவர்கள் ஆண்டாளைத்தான் காப்பி அடிக்கிறார்கள்! நின்று தன் குழுவுக்கு - நம்பிக்கை அளிக்க - அல்டிமேட் - ஒரு வரி பிரகடனம் செய்தாள்: 'நாராயணனே நமக்கே பறை தருவான்! அது கண்டு இந்த பார் புகழும்!'
ஒரு இயக்கத்துக்கும் ஒரு நிறுவனத்துக்கும் ஒரு 'மிஷன்,' ஒரு 'விஷன்' என்று, இப்போதுதான் பிரபலமாகப் பேசிக்கொண்டிருக்கிறது நவீன நிர்வாக இயல்! தன் இயக்கத்தை - முப்பதே நாளில் நிறுவி, நடத்தி வெற்றிகண்ட இயக்கத்தை, அதன் பேரணியை(!) துவங்கும் முதல் நாளிலேயே பிரகடனம் செய்தாள் ஆண்டாள்: ‘நாராயணனே நமக்கே பறை தருவான்!’
இந்த வரியில் உள்ள ‘Positivism’ ‘நேர்மறை உறுதிப்பாடு’ - பொருந்திய கம்பீரம், ஒரு ஆதர்சத் தலைவியை நம்முன்னே தத்ரூப சித்திரமாகக் காட்டி விடுகின்றதா இல்லையா?
சரி! தன் குழுவினருக்கு சில கட்டுப்பாடுகளை - செய்யக் கூடியது, செய்யக் கூடாதது என்ற நிலையாணைகளை, Bye laws உருவாக்கினாள் இரண்டாம் பாசுரத்தில்! 'நெய் உண்ணோம் பால் உண்ணோம்!' உண்ணாவிரதம் என்ற உத்தியை மகாத்மா காந்தி கண்டுபிடிக்கும் முன்பு கண்டுபிடித்தவள் அவள்! 'உண்ணோம்' என்று உறுதிபடச் சொல்லி, இந்த பரமனிடம் பறை உரிமை கேட்கும் ஆனந்தமான போராட்டத்தில், தானே முதல் பங்கேற்பாளியானாள்! ‘தலைமைப் பண்பு’ என்பதும், 'தலைமைத்துவம்' என்பதும் - ஒட்டு வாசகமாக இருத்தலாகாது. அதை ஒரு தலைவன் தன்னிலிருந்தே நிகழ்த்திக் காண்பிக்க வேண்டும் என்று நவீன நிர்வாகவியல் இப்போது தான் சொல்கிறது!
தன் குழுவினர் - தெருக் கும்பல் ஆகாமல் திருக்கூட்டமாகத் திகழ வேண்டும் என்பது ஆண்டாளின் தலைமைச் சித்தாந்தம்! இதில் எந்த சமரசமும் செய்வதாய் இல்லை ஆண்டாள். உத்தரவிட்டாள்! 'செய்யாதன செய்யோம்! தீக்குறளைச் சென்றோதோம்!'
ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஊழியர்கள், தங்கள் பொழுதுகளை வெற்றுப் பேச்சில் வீண் அரட்டையில் வீணாக்கக் கூடாதுதானே! ஆண்டாள் என்ற அதிசயத் தலைவி, தன் சங்க உறுப்பினர்கள் கட்டுப்பாடு பிசகி நடக்கக் கூடாது என்பதில் எவ்வளவு கண்டிப்பாய் இருந்திருக்கிறாள்!
வழக்கமாக பிறரிடமிருந்து தானே அரித்து அரித்து நன் கொடை வாங்குகிறார்கள். ஆண்டாள் இதிலேயும் வித்தியாசப் பட்டாள்! 'என் சங்க உறுப்பினர்களே! நீங்கள் தான் செல்வச்
சிறுமீர்கள் ஆயிற்றே! ஐயமும் பிச்சையும் நாம் எதற்கு வாங்குவது?., நாம் பிறருக்குக் கொடுப்போம்' என்று ஒரு போடு போட்டாள். Unique leadership!
சரி; செல்வம் வேண்டும். அதை வன்முறையால் பிடுங்கவும் கூடாது. தலைமை எப்படி இருக்க வேண்டும்? பால் சொம்பை எடுத்து நீட்டினவுடன் பால் சொரியும் பசுவைப் போல் இருக்க வேண்டும்! 22 நாளில் தாங்கள் நேரடியாகக் காணப்போகும் தலைவன், எப்படி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களைப் போல் தங்களிடம் இருக்க வேண்டும் என்று தனது சங்கத்தால் எதிர் பார்க்கப்படுகிறது என்பதை, இதைவிட நாசூக்காகக் கோடி காட்டிவிட முடியுமா என்ன?
ஆழி மழைக் கண்ணா பாசுரம் - அதைவிட நாசூக்கு. மழையை மேகம் தருகிறது. ஆனால் மேகம் கடலில் இருந்தல்லவா எடுத்துக் கொள்கிறது? உழைப்பை எடுத்துக்கொண்டு ஊதியம் தராமல் இருந்தால் சரியான பேரம் இல்லையே! ஆகவே, 'எங்கள் நிறுவனத் "தலைவா! நாராயணா - ஆழிமழைக் கண்ணா! சும்மா பெயரில் அடைமொழியில் மட்டும் அடைமழையை வைத்துக்கொண்டால் போதுமா? மழை - உன் கருணை மழை - எங்கள் எல்லோருக்கும் சமபங்கு விநியோகமாக வேண்டும்!' இது ஆண்டாள் என்ற தலைவி, உலக நிர்வாகி நாராயணனுக்கு முன் கூட்டி அனுப்பும் நோட்டீஸ்! (கோரிக்கை மனுவுக்குப் பிறகுதானே பேரணி, உண்ணாவிரதம் எல்லாம்! பேச்சு வார்த்தையிலேயே பிரச்னையை சுமுகமாகத் தீர்த்து விடலாம் என்கிறாள் தலைவி ஆண்டாள்).
தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும்? கோஷத்தை வாயால் மட்டுமே எழுப்பக் கூடாது. ஆழ்மனதில் அதைப் பதியவைக்க வேண்டும். தனது இயக்க உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் தெரியுமா? 'நாம் தூயோமாய் இருப்போம்! நமது இயக்கத்தின் குறிக்கோளை வாயினால் பாடினால் மட்டும் போதாது! மனதினால் சிந்திப்போம்.' தன் உறுப்பினர்களை அவள் தயார் செய்யும் அழகைக் கவனியுங்கள்!
ஒரு இயக்கத்தின் வளர்ச்சி புதுப்புது உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான். அது எளிதா என்ன? சோம்பேறிகளும், வல்லடி வழக்குக்காரர்களும், சந்தேகப்படும் நபர்களும் இருப்பார்களே! அவர்களை உசுப்பிவிட்டு எழுச்சிபெறச் செய்ய வேண்டுமா இல்லையா? ஆண்டாளுக்கும் அந்தச் சோதனைகள் அதிகமாக வந்தன! பத்து தினங்கள் இதே ரோதனை தான்! 'ஈதென்ன பேருறக்கம்? வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணா நீ! ஊமையா? செவிடா? பெருந்துயில் மந்திரப் பட்டீர்களா? கும்பகருணிகளா? கள்ளம் தவிர்த்து இயக்கத்தில் கலந்துவிடாமல் என்ன செய்கிறீர்கள்? வெறும் பேச்சுக்காரிகளா நீங்கள்?' இவையெல்லாம் சங்கத் தமிழ்க் கோதை தன் நெடும் பயணத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு உபயோகித்த கிளர்ச்சி உத்திகள்! கடிகிற விதத்தில் கடிந்து, அணைக்கிற விதத்தில் அணைத்து ஒரு தலைவி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது! கடிதோச்சி மெல்ல எறிகிறாள் தன் கேள்விக் கணைகளை!
நிறைய போராட்டங்களில், தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டமாக நிர்வாகத் தலைவரைப் பார்க்கப் போகும் போது நிர்வாகத்தாரின் தனி உதவியாளர்தான் தடை போடப் பார்ப்பார்! கூட்டம் ஏதாவது செய்துவிடுமோ என்ற நியாயமான அச்சம்.
ஆண்டாளுக்கும், 16ம் நாள் அந்தப் பிரச்னை வந்தது. ஆனால், தான் தன் கூட்டம் நாராயணனைக் காணவந்தது திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு அல்ல! முன்கூட்டியே முறைப்படி சம்பிரதாயம் (Protocol) பிசகாமல், மகாநிர்வாகியான நாராயணனிடம் முதல் நாளே (நென்னலே) சந்திப்புக்கு தேதி வாங்கியாகி விட்டது என்று வாயிற் காப்போனிடம் சொல்லி விட்டு, 'ஆகவே நிறுவனத்துக்கும் தொழிலாளருக்கும் இடையில் மறிக்கிற கதவு நேய நிலைக் கதவம்தான். திறந்து விடு அதை' என்று கம்பிரமாகச் சொல்கிற பண்பாட்டு முத்திரை, ஆண்டாள் என்ற தலைவிக்கு மட்டுமே சாத்தியம்!
பின்பு, நாராயணனுடன் நேரடி பேச்சுவார்த்தை! ஆண்டாள் நடத்துகிற Collective Bargaining! கூட்டுப் பேரம்!
எடுத்த எடுப்பில் இதைத் தா அதைத் தா என்று கேட்டால், நிர்வாகிக்கு எரிச்சல் வருமே! 'போற்றவே வந்தோம்! புகழவே வந்தோம்! நீதான் வள்ளலாயிற்றே! பசுமாடுகள் கூட வள்ளல்களாக கேட்குமுன்னர் பொழிந்து விடுகிறது! நீ தரமாட்டாயா என்ன?' (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப பாசுரம் - 21ம் நாள் பாட்டு!) இப்படி ஒரு தலைவி பேசினால் நிர்வாகி மறுப்பாரா என்ன?
எங்களுக்கு EGO கிடையாது. அபிமான பங்கமாய்த்தான் வந்தோம். நீதான் எங்கள் பிரச்னையை, குறையைப் பார்க்க வேண்டும், தீர்க்க வேண்டும்! - (பாசுரம் 22 - அங்கண்மா ஞாலத்து)
'அது மட்டுமல்ல! நாங்கள் வந்து உன்னிடத்தில் கோரிக்கை மனு கொடுக்க அவசியம் என்ன? நீயே நாங்கள் கூட்டாய் கிளம்பிவர நேர்ந்ததன் அவசியம் மற்றும் காரியம் என்ன என்று ஆராய்ந்து பார். ஆனால் அருள் செய்யத் தவறி விடாதே!' (23ம் நாள் பாசுரம் - மாரி மலை முழைஞ்சில்) என்கிறாள் ஆண்டாள். (நவீன நிர்வாகவியலில், Grievance handling, Redressal of grievance என்றெல்லாம் உள்ள சொற்களுக்கு அப்போதே நடைமுறை நிரூபணம் காட்டியவள் ஆண்டாள்தானே!)
'நாங்கள் உன்னுடனேயே - உனக்குக் கீழேயேதான் இருக்கப் போகிறோம்! என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வோம்!' (பாசுரம் 24)
'நீ எங்கள் குறை தீர். அது போதும். நாங்கள் திருத்தக்க செல்வத்தைப் பாடிப் போற்றுவோம். எங்கள் பல நாட்பட்ட வருத்தத்தை மட்டும் போக்கு.' இது ஆண்டாளின் அடுத்த உத்தி (பாசுரம் 25-ஒருத்தி மகனாய் பிறந்து...)
'பேரணியின் போது உணர்ச்சி வசப்பட்டு அப்படி இப்படி கோஷம் போட்டிருப்போம்! நாங்கள் அறிவில்லாத ஆய்க்குலம்தானே! அதனால் சிறுபேர் கூறி அழைத்திருப்போம். அதை மனதில் வைத்திருக்காதே!' (பாசுரம் 28)
இப்படிப் போகிறது ஆண்டாள் என்ற தலைவியின் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை
தாய்மை மிக்க அந்தத் தலைவி, தனது உறுப்பினர்களுக்குப் பெற்றுத்தரும் பறையை வெறும் 'கூலி உயர்வு' என்ற கொச்சைப் பதத்தில் அடைக்க விரும்பவில்லை! கௌரவமிக்க, சுய மரியாதைமிக்க தலைவியாக ஆண்டாள் திகழ்வதால், அதுவரை 'பறை' என்ற ஜனரஞ்சகமான பதத்தை உபயோகித்தவள் 27ம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்...), அதை 'சன்மானம்' என்று தரம் உயர்த்தியே விட்டாள்! பறை - விருது என்று ஆகிவிட்டது!
ஆண்டாள் நாச்சியார் தனது இந்த நெடும் பயணத்தில் - ஒரு இடத்திலும் 'நான்' என்ற வார்த்தையை உபயோகிக்கவே இல்லை! ‘நாம் நாம்' என்ற Collective Participation (ஒருங்கிணைந்த கூட்டுப் பங்கேற்பு) என்ற தத்துவத்தைப் பின்பற்றி வெற்றியே பெற்று விட்டாள்.
திருப்பாவை பாடியவள், நிர்வாக இயல் கண்ணோட்டத்தில் திருப்பு முனைப்பாவைதானே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - தீபம் அக்டோபர் 2013