மாப்பிள்ளையின் பதற்றம் - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல். 


'கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி 
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள 
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் 
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்' 


என்பது ஆண்டாள் வர்ணிக்கும் மாப்பிள்ளை அழைப்புப் பாடல்.


ஒரு கவிதை படிக்கும்பொழுது அதன் சுவை தெரிய வேண்டும். அதிலிருந்து கற்பனை விரிய வேண்டும். பாடலுக்கு நயம் மட்டும் சொன்னால் போதாது. அந்த நயத்துக்குப் பொருத்தமும் சொல்ல வேண்டும். உலகியல் உண்மைகளும் உளவியல் உண்மைகளும் அந்த உரையில் துலங்க வேண்டும்.


ஆண்டாள் இதில் அற்புதமான சித்திரத்தைக் காட்டுகின்றாள். ஒரு திருமண மண்டபம். நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. பெண் ஆவலோடு அமர்ந்திருக்கின்றாள். மணமகன் என்ன சாதாரணமானவனா?

நினைவுகளில் முகம் வந்து வந்து மறைகிறது. இப்போது நேரில் வரப்போகிறான். இதோ கொஞ்ச நேரம். பிறகு கொஞ்சும் நேரம். வெட்கம் தலையைத் தாழ்த்தச் சொல்ல, ஆசையோ வதனத்தில் உள்ள விழிச்சுடரை வாசல் பக்கம் திருப்புகிறது.


அதுவும் தான் விரும்பிய மாப்பிள்ளை கிடைத்து விட்டால் பெண்ணுக்கு அதிக உற்சாகம். மிகுந்த எதிர்பார்ப்பு. எப்பொழுது மாப்பிள்ளை வருவார் என்று மேடையிலே காத்திருக்கின்றாள். இந்த மன நிலையோடு இந்தப் பாசுரத்தில் லயிக்க வேண்டும்.


பெண் வீட்டுக்காரர்கள் யாரோ சொல்கிறார்கள். ''அம்மா... மாப்பிள்ளை இதோ சற்று நேரத்தில் மண்டப வாசலுக்கு வந்து விடுவார். மங்கையர்கள் எல்லாம் வரவேற்கத் தயாராகுங்கள்.” மங்கையர்கள் தயாராகிவிட்டார்கள்.


அழகான தீபங்களை ஏந்திக்கொண்டு மங்கலமாக மாப்பிள்ளையை வரவேற்க வாசலுக்குச் செல்லுகின்றார்கள். எல்லோருடைய பார்வையும் வாசலிலே இருக்கிறது. பெண்ணின் பார்வையும் வாசலிலே இருக்கிறது. மிகுந்த ஆர்வமாக எப்பொழுது மாப்பிள்ளை வருவார் என்று காத்துக்கொண்டிருக்கிறாள். இவளுடைய உள்ளம், 'தடக் படக்'கென்று அதிர்ந்து கொண்டிருக்கிறது.


இதோ மாப்பிள்ளை வந்து விட்டார். இதுவரை ஒழுங்காக நடந்து வந்த மாப்பிள்ளைக்கு ஏன் இத்தனை பதற்றம்? அவன் தடதடவென்று நடந்து வரும்போது இடையில் அங்கங்கே சில நாற்காலிகள் சரிந்து விடுகின்றன. 'எங்கும் அதிர புகுந்தான்' என்கிற வரியை இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.


ஆண்டாள் தன் உள்ளத்தின் அதிர்வைச் சொல்லுகின்றாளா அல்லது மாப்பிள்ளையின் அதிர்வைச் சொல்லுகின்றாளா... அல்லது எங்கும் என்றதால் இருவரின் அதிர்வுகளையும் இணைத்துச் சொல்கின்றாளா?


சரி. இங்கு அதைவிட முக்கியமான கேள்வி... இந்த அதிர்வு ஏன் வந்தது?


இவன் (கண்ணன்) அவளைப் (ஆண்டாள்) பார்க்க ஏங்கி, சூழ்நிலையை மறந்து ஆவலில் தடதடவென வந்தானாம் என்று காட்சிப்படுத்துகின்றாள் ஆண்டாள்.


ஆர்வம், பதற்றம், அதிர்வுக்கு - இதுதான் காரணம். அடுத்து, இது ஒரு காதல் திருமணம். இதிலே ஒரு சிக்கல் என்னவென்று சொன்னால் பெண் பெரியாழ்வாராகிய அந்தணரின் பெண். இவன் ஆயர் குலத்தில் அவதரித்த கண்ணன். பட்டரின் மனம் புரிந்த அளவுக்கு தன் மாமனாராகிய அவர் மரபு புரியவில்லை.


பழக்க வழக்கம் மாறுகிறது. தட்டு வேட்டி கட்டிய இடையில் பஞ்சகச்சம் ஏறுகிறது. அதனால் நடக்கத் தடுமாறுவது போல நடந்தான் கண்ணன். புது இடம்... புது உறவு... புது பழக்கம்... புது ஆடை. புதிதாகப் பழகும் போது ஏற்படும் பதற்றம்... அதிர்வு.


அவன் அதிர வந்தது எப்படி இருந்தது என்றால் முற்காலத்தில் மகாபலியிடம், வாமனன் மூன்றடி மண் கேட்டு அவனுடைய யாக பூமியிலே வந்தது போல் இருந்தது என்று ஒரு உவமையோடு உரை செய்தார்கள்.


உவமை சொல்லும் போது எச்சரிக்கை வேண்டும். வாமனன் நடக்க ஏன் பூமி அதிர வேண்டும் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள்.


என்ன விடை சொல்வது? வாமனன் சிறு பிள்ளையாக இருந்தாலும், சர்வேஸ்வரன். அதனால் அவன் பாதம் பட்டு கடலோடு சேர்ந்த பூமி நெளிந்தது என்று உரை சொன்னார்கள். இது ஏற்புடைய உரையாக பலருக்கும் தெரியவில்லை.


நஞ்சீயர் என்கிற உரையாசிரியருக்கும் இவ்வுரையில் திருப்தி இல்லை. ஆகையினாலே, தன் ஆசிரியரான பராசரபட்டர் என்கிற மேதையிடம் இக்கேள்வியை நஞ்சீயர் எழுப்பினார்.


அதற்கு அவர் அழகான பதில் சொன்னார்., 'இதுவரை பகவான் யாரிடமும் யாசகம் கேட்டதில்லை. இப்பொழுதுதான் இந்திரனுக்காக மகாபலியிடம் யாசகம் கேட்கிறார். எல்லோருக்கும் கொடுத்துப் பழக்கப்பட்டவன் ஏதோ ஒரு நிலையில் வாங்கும்பொழுது கூச்சப்படுவான். அப்போது அவருக்குப் பேச்சு வராது. நடை தடுமாறும். அதனால் வாமனன் பதற்றத்தோடு வந்தான்' என்றார் பட்டர்.


மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கே இந்த பதற்றம் என்றால், மகாபெரியவரான பெரியாழ்வாரின் பெண்ணை அடைய எத்தனை பதற்றம் கண்ணனுக்கு இருக்கும்? அந்தப் பதற்றத்தால் ஏற்பட்ட அதிர்வுதான் இது.


வாமனனுக்கு ஒரு பதற்றம். கண்ணனுக்கு ஒரு பதற்றம். ஆண்டாளுக்கு கண்ணன் வந்த அந்த காட்சியில் கொண்டாட்டம். இக்கொண்டாட்டம்தான் அப்பாசுரத்திலே பரிபூர்ணமாக இருக்கிறது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - தீபம் பிப்ரவரி 2019
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை