திங்கள், 18 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 349

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(இப்புராணத்தில் சொன்ன விஷயங்களின் சுருக்கமும், பாகவத மஹிமையும் முதலியவை)

 ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால் பரம தர்ம ஸ்வரூபனும் (சிறந்த அற வடிவானவனும்), அளவிறந்த மஹிமை உடையவனுமாகிய பரமபுருஷனுக்கு, நமஸ்காரம். தர்ம மர்யாதைகளை உபதேசாதிகளால் நிலை நிறுத்தி நடத்துபவரும், மஹானுபாவருமான பாதராயண முனிவருக்கு நமஸ்காரம். நன்மைக்கு ஹேதுவான பெருமையுடைய பகவத் பக்தி ரூபமான தர்மத்திற்கு நமஸ்காரம். தர்மோபதேசம் செய்பவனான, நான்முகனுக்கு நமஸ்காரம். நாரதர், ஸ்ரீசுகர் முதலிய அந்தணர்களுக்கு நமஸ்காரம் செய்து, பூர்வர்களின் (முன்னோர்களின்) உபதேச பரம்பரையால் இடைவீடின்றி நடைபெற்று வந்தவைகளும், கீழ் இந்த ப்ரபந்தத்தில் நிரூபிக்கப்பட்டவைகளுமான பாகவத தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்; கேட்பீர்களாக. 

அந்தணர்களே! நீங்கள் எதைப்பற்றி என்னை வினவினீர்களோ, எது மனுஷ்ய ஜன்மம் பெற்ற ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் கேட்பது முதலியவைகளால் ஆதரிக்கத் தக்கதோ, அத்தகையதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சரித்ரங்களை எடுத்துரைப்பதும், மிகவும் அற்புதமுமான இந்தப் புராணத்தை உங்களுக்குச் சொன்னேன். இப்புராணத்தில் பாபங்களை எல்லாம் போக்குபவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டை) அறுப்பவனும், இந்த்ரியங்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய அனிஷ்டங்களை (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுபவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன், நேரே நிருபிக்கப்படுகிறான். 

வேதாந்தங்களில் மறைத்துக் கூறப்படுபவனும், ஜகத்தில் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணனும், பரப்ரஹ்மமென்று பெயர் பெற்றவனுமாகிய பரமபுருஷனை இப்புராணம் நன்றாக நேரே நிரூபித்துச் சொல்லுகின்றது. இதில் 

(முதல் ஸ்கந்தத்தில்) ஸாதுக்களாகிய நீங்கள் என்னை இப்புராணத்தைப் பற்றி வினவின உபாக்யானமும் (சரித்ரமும்), ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறிகையாகிற ஜ்ஞானமும், பரமாத்மனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (பெருமை, ஆளுமை, சொத்து) உள்ளபடி அறிகையாகிற விஜ்ஞானமும் கூறப்பட்டன. பிறகு, பக்தியோகமும், அதற்கு அங்கமான வைராக்யமும், பரீக்ஷித்தின் பிறவி முதலிய உபாக்யானமும் (சரித்ரமும்), நாரத மஹர்ஷியின் வ்ருத்தாந்தமும் (சரித்ரமும்), ராஜர்ஷியாகிய பரீக்ஷித்து ப்ராஹ்மண சாபத்தினால் ப்ராயோபவேசம் (இறக்கும் வரை உண்ணா நோன்பு) செய்ததும், 

(இரண்டாவது ஸ்கந்தத்தில்) ப்ராஹ்மணச்ரேஷ்டரான சுகமுனிவருக்குப் பரீக்ஷித்து மன்னவனோடு நடந்த ஸம்வாதமும் (உரையாடலும்), பரீக்ஷித்து மன்னவன் யோக தாரணையால் (த்யானத்தால்) சரீரத்தினின்று கிளம்பி, அர்ச்சிராதி மார்க்கத்தினால் பரமபதத்திற்குப் போதலும், ப்ரஹ்ம தேவனுக்கும் நாரதமஹர்ஷிக்கும் நடந்த ஸம்வாதமும் (உரையாடலும்), அந்த ப்ரஹ்ம - நாரத ஸம்வாத கட்டத்தில் பகவானுடைய அவதாரங்களும், அவதார சரித்ரங்களும், வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்கு (தனித்தனி படைப்புக்கு) முன்பு நடந்த ப்ராக்ருதமான மஹதாதி (மஹத் முதலிய) தத்வ ஸ்ருஷ்டியும், 

(மூன்றாவது ஸ்கந்தத்தில்) விதுரருக்கும், உத்தவருக்கும் நடந்த ஸம்வாதமும், விதுரருக்கும், மைத்ரேயருக்கும் நடந்த ஸம்வாதமும், ஸ்ரீபாகவத புராண ப்ரச்னமும் (கேள்வியும்), ப்ரளயத்தில் மஹா புருஷனான பகவான் ஒருவன் மாத்ரமே மிகுந்திருத்தலும், பிறகு ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் ஸாம்ய அவஸ்தையை (சம நிலையைத்) துறந்து, வைஷம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அடைகையாகிற ப்ராக்ருதிக ஸ்ருஷ்டியும் (மூலப்ரக்ருதியிலிருந்து ஏற்பட்ட படைப்பும்), ப்ரக்ருதியின் விகாரங்களாகிய (மாற்றங்களான) மஹத்து, அஹங்காரம், பஞ்ச பூதங்கள் ஆகிய இவ்வேழு தத்வங்களின் ஸ்ருஷ்டியும் (படைப்பும்), ப்ரக்ருதி விகாரங்களான மஹத்து முதலிய அவ்வேழு தத்வங்களினின்று ப்ரமாண்டம் உண்டாதலும், அதில் ப்ரஹ்மதேவன் பிறத்தலும், பரமாணு முதல் ஸம்வத்ஸரம் (வருடம்) வரையிலுள்ள ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலனாகாத நுட்பமான), ஸ்தூல (கண்ணால் பார்க்கப்படக்கூடிய, பெயர், உருவங்களோடு கூடிய) ரூபங்களோடிருக்கின்ற காலத்தின் கதியும், ஸமஸ்த ப்ராணிகளுடைய உத்பத்தியும் (வ்யஷ்டி ஸ்ருஷ்டியும்), மஹா ஸமுத்ரத்தினின்று பூமியை உத்தரித்தலும் (மேலே எடுத்தலும்), அப்பொழுது பகவான் ஹிரண்யாக்ஷனை வதித்ததும், ஊர்த்வ (மேல்) லோகம், திர்யக் (நடு) லோகம், அதோ (கீழ்) லோகம், இவைகளின் ஸ்ருஷ்டியும் (படைப்பும்), ருத்ர ஸ்ருஷ்டியும், ப்ரஹ்மதேவனுடைய சரீரம் பாதி பெண்ணும் பாதி ஆணுமாய் மாறுதலும், அவற்றில் ஆண்பாதி, ஸ்வாயம்புவ மனுவும், பெண்பாதி ஸ்த்ரீகளில் (பெண்களில்) சிறந்த முதலுருவமான சதரூபையென்னும் பெயர் பூண்ட அம்மனுவின் பத்னியுமாதலும், கர்த்தம ப்ரஜாபதியின் தர்மபத்னியான தேவஹூதியின் ஸந்தானமும், அவளிடத்தில் கபிலரென்னும் பெயர் பூண்ட மஹானுபாவனான பகவானுடைய அவதாரமும், தேவஹூதிக்குச் சிறந்த மதியுடைய கபிலரோடு நடந்த ஸம்வாதமும் கூறப்பட்டன. 

(நான்காவது ஸ்கந்தத்தில்) நவப்ரஜாபதிகளின் உத்பத்தியும், ருத்ரன் தக்ஷ ப்ரஜாபதியின் யஜ்ஞத்தைப் பாழ் செய்த வ்ருத்தாந்தமும், த்ருவனுடைய சரித்ரமும், ப்ருதுவின் சரித்ரமும், ப்ராசீன பர்ஹியின் சரித்ரமும், நாரதருடைய ஸம்வாதமும் கூறப்பட்டன. 

(ஐந்தாவது ஸ்கந்தத்தில்) அந்தணர்களே! ப்ரியவ்ரத உபாக்யானமும், நாபிருஷபன், பரதன் இவர்களுடைய சரித்ரங்களும், த்வீபங்கள், ஸமுத்ரங்கள் இவை முதலியவற்றின் வர்ணனமும், பாரதாதி வர்ஷங்கள், நதிகள் இவற்றின் வர்ணனமும், ஜ்யோதிச்சக்ரத்தின் நிலைமையும், பாதாள நரகங்களின் ஸந்நிவேசமும் (அமைப்பும்) கூறப்பட்டன. 

(ஆறாவது ஸ்கந்தத்தில்) ப்ரசேதஸ்ஸுக்களிடத்தினின்று தக்ஷர் பிறத்தலும், அவருடைய பெண்களின் வரலாறும், அவர்களிடத்தினின்று தேவதைகள், அஸுரர்கள், மனுஷ்யர்கள், திர்யக்குகள், நாகர்கள், பக்ஷிகள் முதலியவற்றின் பிறவியும், வ்ருத்ராஸுரனுடைய ஜன்ம, மரண வ்ருத்தாந்தங்களும் நிரூபிக்கப்பட்டன. 

அந்தணர்களே! (ஏழாவது ஸ்கந்தத்தில்), திதியின் பிள்ளைகளான ஹிரண்யாக்ஷ, ஹிரண்ய கசிபுக்களின் ஜனன (பிறப்பு), மரண வ்ருத்தாந்தங்களும், தைத்யர்களில் சிறந்தவனும் மஹானுபாவனுமாகிய ப்ரஹ்லாதனுடைய சரித்ரமும் கூறப்பட்டன. 

(எட்டாவது ஸ்கந்தத்தில்) மன்வந்தரங்களின் சரித்ரங்களும், கஜேந்த்ர மோக்ஷமும், அந்த மன்வந்தரங்களில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஹயக்ரீவாதி அவதாரங்களும், ஜகத் ரக்ஷகனான அப்பகவானுடைய கூர்மாவதாரமும், மத்ஸ்யாவதாரமும், நரஸிம்ஹ அவதாரமும், வாமனாவதாரமும், தேவதைகளுக்கு அம்ருதம் கொடுப்பதற்காகப் பகவான் ஷீர ஸமுத்ரத்தை (பாற்கடலைக்) கடைந்ததும், தேவாஸுரர்களின் மஹா யுத்தமும் கூறப்பட்டன. 

(ஒன்பதாவது ஸ்கந்தத்தில்) ராஜ வம்சங்களின் வரலாறும், இக்ஷ்வாகுவின் ஜன்மமும், அவனுடைய வம்சத்தில் மஹானுபாவனான ஸுத்யும்னனுடைய ஜன்மமும், இலோபாக்யானமும், தாரோபாக்யானமும், ஸூர்ய வம்சத்தின் வரலாறும், அவ்வம்சத்தில் பிறந்த சசாதன் முதலிய மன்னவர்களின் சரித்ரமும், ஸுகந்யா வ்ருத்தாந்தமும், சர்யாதியின் சரித்ரமும், மிகுந்த மதியுடைய ககுத்ஸ்தனுடைய சரித்ரமும், கட்வாங்கன், மாந்தாதா, ஸௌபரி, ஸகரன் இவர்களுடைய சரித்ரங்களும், கோஸலேந்தரனான ஸ்ரீராமனுடைய புண்ய சரித்ரமும், நிமி அங்கங்களைத் துறந்ததும், ஜனக வம்சத்து அரசர்களின் உத்பத்தியும், பார்க்கவ ச்ரேஷ்டனான பரசுராமன் பூமியில் க்ஷத்ரியர்களே இல்லாதபடி செய்ததும், ஸோம வம்சத்தில் பிறந்த ஐலன், யயாதி, நஹுஷன், துஷ்யந்தனுடைய பிள்ளையாகிய பரதன், சந்தனு, அவனுடைய பிள்ளை ஆகிய இவர்களின் வ்ருத்தாந்தமும், யயாதியின் ஜ்யேஷ்ட (மூத்த) புத்ரனான யதுவின் வம்சமும், அவனுடைய வம்சத்தில் வஸுதேவனுடைய பார்யையாகிய தேவகியிடத்தில் ஜகதீச்வரனான பரமபுருஷன் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்ததும், அவன் கோகுலத்தில் வளர்ந்ததும், கூறப்பட்டன. 

(பத்தாவது ஸ்கந்தத்தில்) அஸுரர்களுக்கு த்வேஷியான (எதிரியான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அற்புத சரித்ரங்களும், அவன் குழந்தையாயிருக்கும் பொழுது பூதனையின் ஸ்தன்யத்தை (மார்பகத்தை) ப்ராணன்களோடு (உயிரோடு) பருகினதும், சகடாஸுரனை முறித்ததும், த்ருணாவர்த்தனை முடித்ததும், பகாஸுரன், வத்ஸாஸரன் இவர்களைக் கொன்றதும், அகாஸுரனுடைய ப்ராணன்களை ஸம்ஹரித்ததும், ப்ரஹ்மதேவனுக்குத் தன் மாயையைக் காட்டினதும், பரிவாரத்தோடு கூடின தேனுகாஸுரனையும், ப்ரலம்பாஸுரனையும் அழித்ததும், சூழ்ந்து வருகின்ற காட்டுத் தீயினின்று கோபர்களைக் காத்ததும், காலிய மஹாஸர்ப்பத்தின் கொழுப்பை அடக்கினதும், நந்தகோபனை வருணனிடத்தினின்று விடுவித்ததும், கோப கன்னிகைகள் நோன்பு நோற்றதும், அதற்கு ஸ்ரீக்ருஷணன் அருள் புரிந்ததும், ப்ராஹ்மண பத்னிகளை அனுக்ரஹித்ததும், ப்ராஹ்மணர்கள் தங்கள் பத்னிகளுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் உண்டான பக்தியையும், தங்களுக்கு அது உண்டாகாமையையும் கண்டு அனுதபித்ததும் (வருந்தியதும்), இந்திரனைப் பரிபவிக்கும் (அவமதிக்கும்) பொருட்டுக் கோவர்த்தனகிரியை எடுத்து மழை தடுத்ததும், இந்திரனும், காமதேனுவும் ஸ்ரீக்ருஷ்ணனைப் பூஜித்தலும், கோவிந்த பட்டாபிஷேகமும், ஸ்ரீக்ருஷ்ணன் இரவுகளில் கோப ஸ்த்ரீகளோடு ராஸ க்ரீடை செய்ததும், துர்ப்புத்தியான சங்கசூடன், அரிஷ்டன், கேசி இவ்வஸுரர்களைக் கொன்றதும், ஸ்ரீராம, க்ருஷ்ணர்களை அழைத்துக் கொண்டு போவதற்காக அக்ரூரன் வருதலும், பிறகு ஸ்ரீராம, க்ருஷ்ணர்கள் கோகுலத்தினின்று மதுரைக்கு ப்ரயாணமாய்ப் போதலும், கோப ஸ்த்ரீகள் ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிய முடியாமல் புலம்புதலும், ஸ்ரீராம, க்ருஷ்ணர்கள் மதுரையைக் காணுதலும், குவலயாபீடமென்னும் யானை, முஷ்டிகன், சாணூரன், கம்ஸன் முதலியவர்களை வதித்தலும், ஆசார்யனான ஸாந்தீபினி நெடுநாளைக்கு முன் மரணம் அடைந்த தன் புத்ரனைத் திருப்பிக்கொண்டு வரவேண்டுமென்று கேட்க, அப்படியே மீட்டுக்கொண்டு வருதலும், அந்தணர்களே! உத்தவரோடும், பலராமனோடும், ஸ்ரீக்ருஷ்ணன் மதுரையில் வஸித்துக் கொண்டிருக்கையில், யாதவர் கூட்டத்திற்கு வேண்டிய ப்ரியத்தைச் செய்ததும், ஜராஸந்தன் பல தடவைகளில் கொண்டுவந்த ஸைன்யங்களை (படைகளை) எல்லாம் அழித்தலும், காலயவனனைக் கொன்றதும், குசஸ்தலியை ஏற்படுத்தினதும், ஸ்வர்க்கத்தினின்று ஸுதர்மையென்னும் தேவேந்திரனுடைய ஸபையையும், பாரிஜாத வ்ருக்ஷத்தையும் கொண்டு வந்ததும், சத்ருக்களை வென்று ருக்மிணியைப் பலாத்காரமாகக் கொண்டு வந்ததும், ருத்ரன், பாணாஸுரனுக்கு உதவி செய்ய வந்து, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பரிபவப்பட்டதும் (அவமானப்பட்டதும்), பாணாஸுரனுடைய புஜங்களை (கைகளைத்) துண்டித்ததும், ப்ராக்ஜ்யோதிஷபுரத்திற்கு நாதனாகிய நரகாஸுரனைக் கொன்று, கன்னிகைகளைக் கொண்டு போனதும், சிசுபாலன், பெளண்ட்ரகன், ஸால்வன், துர்ப்புத்தியாகிய தந்தவக்த்ரன், சம்பரன், த்விவிதன், பீடன், முரன், பஞ்சஜனன் முதலியவர்களின் மாஹாத்மியமும், அவர்களை வதித்தலும், காசீ பட்டணத்தைக் கொளுத்தினதும், பாண்டவர்களை நிமித்தமாகக் கொண்டு பூமியின் பாரத்தைப் போக்கினதும் நிரூபிக்கப்பட்டன. 

(பதினோறாவது ஸ்கந்தத்தில்) ப்ராஹ்மண சாபம் என்னும் வியாஜத்தினால் (சிறு காரணத்தினால்) தன் வம்சத்தை ஸம்ஹரித்ததும், உத்தவனுக்கும் வாஸுதேவனுக்கும் நடந்த அற்புதமான ஸம்வாதமும், அதில் ஆத்ம வித்யையை முழுவதும் நிரூபித்தலும், வர்ணாச்ரம தர்ம நிர்ணயமும், பிறகு ஸ்ரீக்ருஷ்ணன் தனது யோக ப்ரபாவத்தினால் மனுஷ்ய லோகத்தை விட்டுப் போதலும் கூறப்பட்டன.

(பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில்) யுக லக்ஷணங்களும் (அடையாளங்களும்), அவற்றின் நடத்தைகளும், மனுஷ்யர்களுக்குக் கலி தோஷங்களால் நேரிடும் உபத்ரவமும் (தொந்தரவும்), ப்ராக்ருதிகம், நைமித்திகம், ஆத்யந்திகம், நித்யம் என்று நான்கு விதமான ப்ரளயங்களும் (ஊழி), ப்ராக்ருதிகமென்றும், நித்யமென்றும், நைமித்திகமென்றும் மூன்று விதமான உத்பத்தியும் (படைப்பு), மிகுந்த மதியுடையவனும் ராஜர்ஷியுமாகிய பரீக்ஷித்து தேஹத்யாகம் செய்ததும் (உடலை விட்டதும்), வேதத்தின் சாகா (கிளை) விபாகங்களும் (பிரிவுகளும்), மார்க்கண்டேய மஹர்ஷியின் புண்ய சரித்ரமும், மஹா புருஷனுடைய அங்க உப அங்க விந்யாஸமும், ஜகதாத்மகனான ஸூர்யனுடைய கண விபாகமும், கூறப்பட்டன. 

ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களே! நீங்கள் என்னை ஏதேது வினவினீர்களோ, அவையெல்லாம் நிரூபிக்கப் பட்டன. இப்புராணத்தில், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் லீலா ரூபமான அவதார வ்ருத்தாந்தங்கள் எல்லாம்  கூறப்பட்டன. பதிதனாவது (தன் நிலையிலிருந்து வீழ்ந்தவன்), ஸ்கலிதனாவது (நிலையிலிருந்து நழுவியவன்), ஆர்த்தனாவது (ஐச்வர்யத்தை விரும்புபவன்), பரவசனாவது (பிறர்க்கு வசப்பட்டவன்) “ஸ்ரீஹரிக்கு நமஸ்காரம்” என்று சொல்லினும், பிறர் சொல்லக் கேட்கினும், ஸமஸ்த பாபங்களினின்று விடுபடுவான். 

(புணரத் தகாத மாதர்களைப் புணர்தல், போகத் தகாத இடங்களுக்குப் போதல், அணுகத் தகாதவர்களை அணுகுதல், பக்ஷிக்கத் (உண்ணத்) தகாதவைகளைப் பக்ஷித்தல் (உண்ணுதல்), மத்யபானம் செய்தல் (கள் குடித்தல்) முதலியவற்றால் தன்னுடைய வர்ணாச்ரமங்களினின்று நழுவினவன், பதிதனாவான். மேடு, கல் முதலிய இடங்களில் கால் தடுக்கல் பெற்றவன், ஸ்கலிதன். மன வருத்தமுற்றவன், ஆர்த்தன். பிறருக்கு வசப்பட்டவன், பரவசன். அதாவது, ஒருவன் தனக்கு இஷ்டமில்லாமற் போயினும், பிறனுடைய நிர்ப்பந்தத்தினால், “ஸ்ரீஹரிக்கு நமஸ்காரமென்று சொல்லுவானாயின், பாபங்களினின்று விடுபடுவான்”.) 

தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனான பரமபுருஷனுடைய மஹிமையைச் சொல்லினும், பிறர் சொல்லக் கேட்கினும், அவன் அவர்களுடைய நெஞ்சில் புகுந்து, ஸூர்யன் இருட்டைப் போக்குவது போலவும், பெருங்காற்று மேகத்தைப் பறக்கடிப்பது போலவும், அவர்களுடைய துக்கத்தையெல்லாம் போக்குகிறான். இந்திரியங்களால் விளையும் அறிவுக்கு விஷயமாகாத மஹானுபாவனான பரமபுருஷனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), குண, விபூதிகளில் (ஆளுமை) ஏதேனுமொன்றைத் தழுவாத சொற்களெல்லாம் பொய்ச் சொற்களேயல்லாமல், தோஷங்களுக்கும் இடமாயிருக்கும். 

பகவானுடைய குணங்களை உட்கொள்ளாத கதைகளெல்லாம் பாபிஷ்ட (பாவக்) கதைகளே. எதில் பகவத் குணங்களின் ஸம்பந்தம் உள்ளதோ, அந்தப் பேச்சே ஸத்யமானது. அதுவே, மங்களங்களையெல்லாம் விளைப்பது. அதுவே, புண்யங்களை விளைப்பதும். எதில் உத்தம ஸ்லோகனான பகவானுடைய புகழ் பாடப்படுகிறதோ, அதுவே அழகியதாம். அதுவே, புதிது புதிதாகக் கேட்பவர்களுக்கு ருசியை விளைக்கும். அதுவே, அடிக்கடி மனத்திற்கு மஹாநந்தத்தை விளைக்கும். அதுவே, மனுஷ்யர்களின் சோக ஸாகரத்தை (துக்கக் கடலை) உலர்த்த வல்லது. 

எந்த வாக்கு, அழகிய பதங்கள் (சொற்கள்) அமைந்திருப்பினும், ஜகத்தையெல்லாம் பரிசுத்தம் செய்ய வல்லதான பகவானுடைய புகழை எவ்விதத்திலும் எடுத்துரைக்க மாட்டாதோ, அந்த வாக்கு, காக்கைகள் போன்ற காமுகர்களுக்கு மனக்களிப்பை விளைப்பதாமேயன்றி, ஹம்ஸங்கள் (அன்னங்கள்) போல் பரிசுத்தர்களான ஞானிகளுக்கு, அணுகத் தக்கதன்று. தன்னைப் பற்றினவர்களை நழுவவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான பரமபுருஷனை எந்த ப்ரபந்தம் (நூல்) எடுத்துரைக்குமோ, அந்த ப்ரபந்தத்தில் தான் பரிசுத்தமான மனமுடைய பெரியோர்கள் மனக்களிப்புறுவார்கள். 

எதில் ஸ்லோகங்கள் தோறும் அபத்தங்கள் (தவறுகள்) இருப்பினும், அளவற்ற கல்யாண குணங்கள் அமைந்த பரமபுருஷனுடைய புகழை வெளியிடுபவைகளான திருநாமங்கள் (பகவானது பெயர்கள்) திகழ்கின்றனவோ, அந்த ப்ரபந்தம் (நூல்) ஸகல ஜனங்களுடைய பாபத்தையும் போக்க வல்லதாம். பெரியோர்களும் அந்த ப்ரபந்தத்தையே (நூலையே) கேட்பார்கள்; கேட்கிறவர்களுக்கு, தாங்களும் சொல்லுவார்கள். சொல்பவரும், கேட்பவரும் இல்லாத பக்ஷத்தில், தாமே தமக்குள் அந்த ப்ரபந்தத்தைப் பாடியனுபவிப்பார்கள்.

கர்ம பந்தத்தையெல்லாம் போக்குவதும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அடியோடழிப்பதும், பரிசுத்தமுமான ஜ்ஞான யோகமும் தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான பரம புருஷனுடைய குணங்களைக் கேட்பது முதலிய அபிஸந்திகள் (பயிற்சிகள்) அற்றிருக்குமாயின், அது நிலைப்படாமல் நழுவிப் போமாகையால், நன்கு விளங்காது. இப்படியிருக்கையில், எல்லாவற்றிலும் சிறந்த கர்மமாயினும், பரமபுருஷனிடத்தில் அர்ப்பணம் செய்யப் பெறாதாயின், ஸர்வகாலமும் கெடுதிகள் நேரக் கூடுமாகையால் துக்கத்தை விளைப்பதாகி, எவ்வாறு விளங்கும்? 

புகழையும், ஸம்பத்தையும் பெற விரும்பி, வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்தல், தவம் புரிதல், வேதங்களை ஓதுதல் முதலியவற்றில் ஊக்கமுற்றிருத்தல், பெரிய பரிப்ரமமேயாம் (மனக்கலக்கமே). புகழும், ஸம்பத்தும், நச்வரங்கள் (அழியக்கூடியவை) ஆகையால், சிறந்த புருஷார்த்தங்களாக மாட்டாது. ஆனால், அதற்கு எது பலனென்றால், சொல்லுகிறேன். 

வர்ணாச்ரம தர்மாதிகளின் அனுஷ்டானம், பகவானுடைய குணங்களைக் கீர்த்தனம் செய்வது, கேட்பது முதலியவற்றை விளைத்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான (கணவனான) அப்பகவானுடைய பாதார விந்தங்களில் நினைவு மாறாதிருக்கச் செய்யுமாயின், அதுவே அதற்குச் சிறந்த பலனாம். பகவானுடைய பாதாரவிந்தங்களின் நினைவு மாறாதிருக்குமாயின், அது துக்கங்களுக்கு ஹேதுவான பாபங்களையெல்லாம் போக்கும்; ராக (விருப்பு), த்வேஷாதிகளால் (வெறுப்பு) கலக்கமுறாமையாகிற சாந்தியை விளைக்கும்; ரஜஸ், தமஸ்ஸுக்களால் தீண்டப்பெறாத சுத்த ஸத்வத்தை வளர்க்கும், பரமாத்மனிடத்தில் மேலான பக்தியை உண்டாக்கும்; பரமாத்மனுடைய ஸ்வரூபத்தையும், அவனுடைய ப்ரகாரங்களையும் (பல அம்சங்களையும்) உள்ளபடி அறிவித்து, வைராக்யத்தையும் (பற்றின்மையையும்) கொடுக்கும். 

ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களே! நீங்கள் மிகுந்த பாக்யமுடையவர்கள். ஏனென்றால், நீங்கள் பாஹ்ய (வெளி) விஷயங்களின் சிந்தையைத் துறந்து, ஸர்வாந்தராத்மாவும், தன் தேஜஸ்ஸினால் திகழ்பவனும், தனக்கு மேற்பட்ட மற்றொரு தேவதை இல்லாதவனும், ஸர்வநியாமகனுமாகிய (எல்லோரையும் நியமிப்பவனுமான) ஸ்ரீமந்நாராயணனை அவனுடைய குண ச்ரவணம் ( குணங்களைக் கேட்பது) முதலிய உபாயங்களால் ஹ்ருதயத்தில் நிலை நிறுத்திக் கொண்டு, அவனையே பணிகின்றீர்களல்லவா? 

பரீக்ஷித்து மன்னவன் ப்ராயோபவேசம் (இறக்கும் வரை உண்ணா நோன்பு) செய்யும் பொழுது, மஹானுபாவர்களான பல மஹர்ஷிகள் ஸபை கூடி, அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஸ்ரீசுக மஹர்ஷியின் முகத்தினின்று ஆத்ம தத்வத்தை வெளியிடுகிற இந்தப் புராணத்தைக் கேட்டேன். நீங்கள், இப்பொழுது அதை எனக்கு நினைவு மூட்டினீர்கள். நீங்கள், எனக்கு மஹோபகாரம் (பேருதவி) செய்தீர்கள். ஆத்ம தத்வத்தை வெளியிடுகிற இந்தப் புராணத்தை, அனுஸந்திக்கையால் (நினைவிற்கொண்டு கூறியதால்) நானும் க்ருதார்த்தனானேன் (விரும்பியதை அடைந்தவன் ஆனேன்).

பகவானுடைய செயல்கள் அளவற்றவை. அவையெல்லாம் ப்ரீதியுடன் கீர்த்தனம் செய்யத் தகுந்தவை. இத்தகையனும், எங்கும் நிறைந்திருப்பவனாகையால் விஷ்ணுவென்றும், வாஸுதேவனென்றும் பெயர் பெற்றவனுமாகிய பகவானுடைய மஹிமையை வெளியிடுவதாகிய இப்புராணம், கேட்பவர், சொல்லுபவர் ஆகிய இருவர்களுடைய ஸமஸ்த அசுபங்களையும் (கெடுதிகளையும்) போக்கவல்லது. இத்தகையதான இப்புராணத்தை உங்களுக்குச் சொன்னேன். 

இந்தப் புராணத்தை எவன் தினந்தோறும் ஒரு யாம காலமாவது (3 மணி நேரம்) அல்லது ஒரு க்ஷண காலமாவது (நொடி) பிறரைக் கேட்பிக்கிறானோ, எவன் ச்ரத்தையுடன் கேட்கிறானோ, அவ்விருவரும் தம்மைப் புனிதம் செய்வார்கள். இவ்விஷயத்தில் ஸந்தேஹமே இல்லை. 

த்வாதசியினன்றும், ஏகாதசியினன்றும், இப்புராணத்தைக் கேட்பானாயின், அவன் வாழ்நாள் வளரப் பெறுவான். பாதகியாயினும் (பாபம் செய்தவன் ஆகினும்), வேறொரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் மனவூக்கத்துடன் இப்புராணத்தைப் படிப்பானாயின், அவன் அந்தப் பாதகத்தினின்று (பாபத்திலிருந்து) விடுபட்டு, பரிசுத்தனாவான். 

புஷ்கரத்திலும், மதுரையிலும், த்வாரகையிலும் உபவாஸமிருந்து மனவூக்கத்துடன் இப்புராணத்தைப் படிப்பானாயின், பயத்தினின்று விடுபடுவான். இந்தப் புராணத்தில், தேவதைகளும், முனிவர்களும், ஸித்தர்களும், ரிஷிகளும், பித்ருக்களும், மன்னவர்களும், நிரூபிக்கப்படுகிறார்களாகையால், அவர்கள் இதைச் சொல்லுகிறவனுக்கும், கேட்கிறவனுக்கும், விருப்பங்களை எல்லாம் கொடுக்கிறார்கள். 

ப்ராஹ்மணன், ருக்கு, யஜுஸ்ஸு, ஸாமம் ஆகிய மூன்று வேதங்களையும் ஓதுவதனால் எந்தப் பலனை அடைவானோ, தேனாறுகளும், பாலாறுகளும், நெய்யாறுகளும் அமைந்த அன்னதானத்தினால் எந்தப் பலனை அடைவானோ, அந்தப் பலன்களை எல்லாம் இந்தப்புராணத்தைப் படிக்கிறவனும், கேட்கிறவனும் அடைவான். 

ப்ராஹ்மணன் மனவூக்கத்துடன் இந்தப் புராண ஸம்ஹிதையை ஓதுவானாயின், ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனாகிய) ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடையது என்று யாதொரு ஸ்தானம் (இருப்பிடம்) கூறப்பட்டிருக்கின்றதோ, அத்தகைய பரமபதத்தைப் பெறுவான். 

இந்தப் புராணத்தை ப்ராஹ்மணன் ஓதுவானாயின், சிறந்த அறிவையும், க்ஷத்ரியன் ஓதுவானாயின், ஸமுத்ரங்களால் சூழப்பட்ட பூமண்டலத்தையும், வைச்யன் ஓதுவானாயின், ஸம்ருத்திகள் (வளங்கள்) எல்லாம் அமைந்த பெரிய ப்ரபுத்வத்தையும் (தலைமைப் பதவி) பெறுவார்கள். கீழ்ஜாதியினர் கேட்பானாயின், பாதகத்தினின்று (பாபத்திலிருந்து) விடுபடுவான். மற்ற ப்ரபந்தங்களில் கலிகாலத்தினால் விளையும் பாபங்களின் ஸமூஹங்களைப் போக்கும் தன்மையனும், ஸர்வேச்வரனுமாகிய ஸ்ரீஹரி அடிக்கடி நிரூபிக்கப்படுகிறதில்லை. இந்த ப்ரபந்தத்திலோ என்றால், சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஸமஸ்த ப்ரபஞ்சத்தையும் சரீரமாக உடையவனும், ஷாட்குண்ய பரிபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீஹரி தன்னுடைய கதா ப்ரஸங்கங்களால் (சரித்ர நிகழ்வுகளால்) அடிக்கடி நிரூபிக்கப்படுகிறான். (ஆகையால், இந்த ப்ரபந்தத்திற்குச் சொல்லுகிற வைபவங்கள் (பெருமைகள்) எல்லாம் உண்மையே என்றுணர்க). 

இவ்வாறு இந்தப் புராணத்தினால் நன்கு நிரூபிக்கப்பட்ட ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்யமங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (ஆளுமை) உடையவனும், காமத்தினால் (ஆசை, காதல்) விளையும் பிறவி முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்றவனும், தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறைகள்) தீண்டப்பெறாதவனும், ப்ரஹ்மதேவன், இந்த்ரன், ருத்ரன் முதலிய தேவதைகளாலும் கரைகாண முடியாத ஸ்தோத்ரங்களுடையவனும், பரமாத்ம தத்வமுமாகிய அத்தகைய அச்சுதனை, நான் வணங்குகிறேன். 

ஸம்ருத்திகள் அமைந்த காலம், ப்ரக்ருதி, மஹத்து, அஹங்காரம், பஞ்ச பூதங்கள் ஆகிய இவ்வொன்பது சக்திகளால் தன்னிடத்தில் படைக்கப்பட்ட ஜங்கம (அசைவன), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான ப்ரபஞ்சத்தையே ஆதாரமாகவுடையவனும், அஜ்ஞானத்தின் ப்ரஸங்கமேயின்றிய (பேச்சே இல்லாத) கேவல ஜ்ஞானாத்மக தேஜஸ் ஸ்வரூபனும் (அறிவு ஒளி வடிவானவனும்), ஷாட்குணய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) தேவச்ரேஷ்டனும் (தேவர்களில் சிறந்தவனும்), அனாதியுமாகிய (ஆரம்பம் அற்றவனுமான) பரமபுருஷனுக்கு நமஸ்காரம். 

ப்ரஹ்மதேவனும், வருணன், இந்த்ரன், ருத்ரன் இவர்களும், ம்ருத்துக்களும், அங்கங்கள், பதம், க்ரமம், உபநிஷத்துக்கள் இவைகளோடு கூடிய வேதங்களாலும், அவற்றை அனுஸரித்த (பின்பற்றிய) திவ்யமான ஸ்தோத்ரங்களாலும், எவனைத் துதிக்கின்றார்களோ, ஸாம வேதங்களை ஓதுகிறவர்கள் எவனைப் பாடுகிறார்களோ, யோகிகள் த்யானத்தினால் சஞ்சலமற்று அந்த த்யேய வஸ்துவில் (த்யானம் செய்யப்படக்கூடிய பொருள்) நிலை நின்றிருக்கிற மனத்தினால் எவனை ப்ரத்யக்ஷம் செய்கிறார்களோ (நேராகப் பார்க்கிறார்களோ), தேவ கணங்களும், அஸுர கணங்களும் எவனுடைய மஹிமையின் எல்லையை அறியவில்லையோ, அத்தகைய தேவனுக்கு நமஸ்காரம். 

முதுகில் சுழல்கின்ற பெரிய மந்தர பர்வதத்தின் சிலைகளுடைய நுனிகள் உறைவதனால் தினவு (அரிப்பு) சொரியப் பெற்று நித்ரா ஸுகத்தை (உறக்கத்தின் இன்பத்தை) அனுபவிக்கின்ற கூர்ம ரூபியான பகவான், மூச்சுவிடுகையில், அம்மூச்சுக் காற்றுக்கள் பேரலைகள் எழும்படி ஸமுத்ர ஜலத்தை அசைத்துக் கொண்டிருந்தன; அந்த ஸம்ஸ்காரம், இப்பொழுதும் சிறிது தொடர்ந்து வருவது பற்றி ஸமுத்ர ஜலம் இப்பொழுதும் மேலுக்குப் போவதும், திரும்பி உள்ளே வருவதுமாகி, சோம்பலின்றி ஓயாமல் அலைந்து கொண்டே இருக்கின்றது. இதுவே உண்மை. ஜலப்ரவாஹம் (நீர் பெருக்கு), காற்றினால் பேரலைகள் எழுப்பப் பெற்று மேலெழும்புவதும், அடங்குவதுமாயிருப்பது பொய்யே. அத்தகைய கூர்மரூபியான பகவானுடைய மூச்சுக் காற்றுகள் உங்களைப் பாதுகாக்குமாக. 

புராணங்களின் க்ரந்த (ஒரு க்ரந்தம் = 32 எழுத்துக்கள்) ஸங்க்யைகளையும் (எண்ணிக்கை), இப்புராணத்தின் விஷயத்தையும் ப்ரயோஜனத்தையும், இப்புராண ஸ்ரீகோசத்தின் தான (பிறர்க்கு கொடுப்பதன்) மாஹாத்மியத்தையும் (பெருமையையும்), இதைப் படித்தல் முதலியவற்றின் மஹிமையையும் தெரிந்து கொள்வீர்களாக. 

  1. ப்ராஹ்மம் - பதினாயிரம் க்ரந்தங்கள் அடங்கியது. 

  2. பாத்மம் - ஐந்து குறைய அறுபதினாயிரம் க்ரந்தங்கள் அடங்கியது. 

  3. ஸ்ரீவிஷ்ணு புராணம் - இருபத்து மூவாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  4. சைவம் - இருபத்து நாலாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  5. ஸ்ரீபாகவதம் - பதினெண்ணாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  6. நாரத புராணம் - இருபத்தையாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  7. மார்க்கண்டேய புராணம் - ஒன்பதினாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  8. ஆக்னேய புராணம் - பதினையாயிரத்து நானூறு க்ரந்தங்களடங்கியது. 

  9. பவிஷ்ய புராணம் - பதினாலாயிரத்தைந்நூறு க்ரந்தங்களடங்கியது. 

  10. ப்ரஹ்ம வைவர்த்தம் - பத்தாயிரத்தெண்ணூறு க்ரந்தங்கள் அடங்கியது. 

  11. லைங்கம் - பதினோராயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  12. வராஹ புராணம் - இருபத்து நாலாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  13. ஸ்காந்தம் - நூற்றெண்பத்தோராயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  14. வாமன புராணம் - பதினாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  15. கூர்ம புராணம் - பதினோழாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  16. மத்ஸ்ய புராணம் - பதினாலாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  17. கருட புராணம் - பத்தொன்பதினாயிரம் க்ரந்தங்களடங்கியது. 

  18. ப்ரஹ்மாண்ட புராணம் - பன்னிரண்டாயிரம் க்ரந்தங்களடங்கியது.

இவ்வாறு புராணங்கள் முழுவதும் நாலு லக்ஷம் க்ரந்தங்களடங்கியவை என்று கூறப்படுகின்றன. அவற்றில் இப்புராணமே பதினெண்ணாயிரங்கள் அடங்கிய ஸ்ரீபாகவதம் என்று கூறப்படுகின்றது.

பகவான், முன்பு தன்னுடைய நாபீ கமலத்தில் (தொப்புள் தாமரையில்) இருக்கின்ற ப்ரஹ்மதேவன் ஸம்ஸாரத்தினின்று பயந்து வருந்துகையில், அவனிடத்தில் கருணை கூர்ந்து, இப்புராணத்தை வெளியிட்டான். இப்புராணம் ஆதியிலும் (முதலிலும்), மத்யத்திலும் (இடையிலும்), அவஸானத்திலும் (முடிவிலும்), வைராக்யத்தை வெளியிடுகிற பலவகை உபாக்யானங்கள் அடங்கியது. ஆயினும், இது முழுவதும் ஸ்ரீஹரியின் லீலா ரூபமான கதைகளின் தொகுதிகளாகிற அம்ருத ப்ரவாஹங்களால் (பெருக்கால்) ஸத்புருஷர்களையும் (சான்றோர்களையும்), தேவதைகளையும் ஸந்தோஷப்படுத்தவல்லது. ஸமஸ்த வேதங்களிலும் எது ஸாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றதோ, ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவிறந்திருக்கை, சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஸமஸ்த ப்ரபஞ்சத்திலும் உட்புகுந்து தரித்துக்கொண்டிருக்கை ஆகிய இத்தன்மைகளையே எது அஸாதாரண தர்மமாகவுடையதோ, தன்னோடொத்த வஸ்துவில்லாத அத்தகைய பரவஸ்துவே (உயர்ந்த பொருளே) இப்புராணத்தில் முக்யமாக நிரூபிக்கப்படுகிற விஷயமாம்.

அந்த வஸ்துவின் கருணையால் உண்டாகக் கூடிய ப்ரக்ருதி ஸம்பந்தம் (உலகியல் வாழ்வின் தொடர்பு) அற்றிருக்கையாகிற முக்தியே இப்புராணத்தைப் படிப்பது, இப்புராண ஸ்ரீகோசத்தைத் (புத்தகத்தை) தானம் செய்வது முதலியவற்றின் முக்ய ப்ரயோஜனமாம் (பலனாம்). 

தன்னுடைய அந்தராத்மாவான பரமபுருஷனுடைய அனுஸந்தானத்தினால் (நினைத்துக் கொண்டிருப்பதால்) உண்டான ஸந்தோஷம் நிறைந்த மனமுடையவரும், அந்த ஸந்தோஷத்தினால் பகவானை ஒழிந்த மற்ற விஷயங்களில் மனப்பற்றைத் துறந்தவரும், பகவானுடைய லீலைகளால் மனம்பறியுண்டவருமாகிய எவர் அப்பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்யமங்கள விக்ரஹ), குண, விபூதிகளை (ஆளுமை) வெளியிடுவதும், சேதனா சேதனங்களில் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களில்) ஏறிடப்பட்ட ஆகாரங்களை (உருவங்களை) விளக்கிக் காட்டுவதும், பயங்களை எல்லாம் போக்கவல்லதுமாகிய இப்புராணத்தைக் கருணையினால் வெளியிட்டனரோ, அத்தகையரும் வ்யாஸ மஹர்ஷியின் புதல்வருமாகிய ஸ்ரீசுகமுனிவரை வணங்குகிறேன்.

புரட்டாசி மாத பெளர்ணமி திதியில் இந்த ஸ்ரீபாகவத ஸ்ரீகோசத்தை (புத்தகத்தை) ஸ்வர்ணமயமான ஸிம்ஹாஸனத்தில் வைத்து எவன் தானம் செய்கிறானோ, அவன் பரமகதியைப் பெறுவான். அழகியதும் சிறப்புடையதுமாகிய இந்த ஸ்ரீபாகவத புராணம், எது வரையில் நேரே புலப்படாதோ, அதுவரையிலுமே ஸத்புருஷர்களின் கூட்டத்தில் மற்றப் புராணங்கள் விளக்கமுறும். இந்த ஸ்ரீபாகவத புராணம் ஸமஸ்த வேதாந்தங்களின் ஸாரார்த்தங்களையும் (சாரமான அர்த்தங்களையும்) உட்கொண்டிருப்பது. இதன் தாத்பர்யார்த்தங்களாகிற (முக்கிய அர்த்தமாகிற) அம்ருதத்தைப் பருகி, அதனால் த்ருப்தி அடைந்தவனுக்கு, மற்ற எதிலும் மனப்பிடிப்பு உண்டாகாது.

நதிகளுக்குள் கங்கை போலவும், தேவதைகளுக்குள் அச்சுதன் போலவும், விஷ்ணு பக்தர்களுக்குள் ருத்ரன் போலவும், புராணங்களுக்குள் இந்த ஸ்ரீபாகவத புராணம் முக்யமானது. இந்த ஸ்ரீபாகவதம் என்னும் புராணம், பரமபுருஷனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்யமங்கள விக்ரஹ), குண, விபூதிகளை (ஆளுமை) உள்ளபடி நிரூபிக்கையாகிற சோபையும் (அழகும்), செல்வமும், அமையப் பெற்றது; ஆனது பற்றியே மிகவும் பரிசுத்தமானது. 

இப்புராணம், வைஷ்ணவர்களுக்கு ப்ரியமாயிருக்கும். இதில் பரமஹம்ஸர்களுக்கு ப்ராப்யமான (அடையப்படக்கூடியதான) ஜ்ஞான யோகம் முழுவதும் மேலாக நிரூபிக்கப்படுகின்றது. அந்த ஜ்ஞான யோகத்தில் ஆத்ம, பரமாத்ம ஜ்ஞானம், வைராக்யம், பக்தி இவைகளோடு கூடிய நிவ்ருத்தி மார்க்கம் (உலகியல் கட்டிலிருந்து விலகும் வழி) நன்கு வெளியிடப்பட்டது. அதைக் கேட்கிறவனும், படிக்கிறவனும், ஊக்கத்துடன் அதை ஆராய்ந்தறிகிறவனும், பரமபுருஷனிடத்தில் பக்தி உண்டாகப் பெற்று, அதனால் ஸம்ஸாரத்தினின்று விடுபடுவான். 

விளக்கு வெளிச்சம் கொடுப்பது போல், ஜ்ஞானத்தை அளிக்கவல்ல இப்புராணத்தை எவன் தானே ப்ரஹ்ம தேவனுக்கு நேராக உபதேசித்தானோ, மற்றும், எவன் அந்த ப்ரஹ்மதேவ ஸ்வரூபியாயிருந்து நாரதருக்கும், அந்த நாரத ஸ்வரூபியாயிருந்து வேத வ்யாஸருக்கும், அந்த வேதவ்யாஸ ரூபியாயிருந்து சுகமுனிவருக்கும், அந்தச்சுக ஸ்வரூபியாயிருந்து பரீக்ஷித்து மன்னவனுக்கும், கருணையினால் இப்புராணத்தை உபதேசித்தானோ, அத்தகையனும், பரிசுத்தனும், ஸர்வாந்தராத்மாவாய் இருப்பினும் (எல்லோருக்கும் ஆத்மாவாய் உள் இருந்தபோதும்) அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாதவனும், சோகமற்றவனும், மரணமற்றவனும், என்றும் ஒருவாறாயிருப்பவனும், ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனுமாகிய (வேறானவனுமாகிய) பரமபுருஷனை த்யானிப்போமாக. 

எவன் ஸம்ஸாரத்தினின்று விடுபட வேண்டும் என்று விரும்புகிற ப்ரஹ்மதேவனுக்கு இப்புராணத்தைக் கருணையினால் உபதேசித்தானோ, அத்தகையனும், சேதனாசேதன ரூபமான ப்ரபஞ்சத்தில் அமைந்திருப்பவனும், அந்த ப்ரபஞ்சமெல்லாம் தன்னிடத்தில் அமையப் பெற்றவனும், அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப் பெறாமல் திகழ்பவனும், ஸர்வத்தையும் (எல்லாவற்றையும்) ஸாக்ஷாத்கரிப்பவனும் (நேரில் பார்த்து அறிபவனும்), ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அப்பரமபுருஷனுக்கு நமஸ்காரம். 

எவர் ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தினால் கடியுண்ட பரீக்ஷித்து மன்னவனை அவ்விஷக் கடியினின்று விடுவித்தாரோ, அத்தகையரும் யோகிகளில் சிறந்தவரும், பரப்ரஹ்ம ஸ்வரூபியுமாகிய அந்த ஸ்ரீசுகமுனிவர்க்கு நமஸ்காரம். 

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

பன்னிரண்டாவது ஸ்கந்தத்துடன்,

ஸ்ரீபாகவத மஹாபுராணம்  ஸம்பூர்ணம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக