அமுக்தமால்யதா - ஜி.மகேஷ்

“கிருஷ்ண தேவராயா விழி திறப்பாய்” கம்பீரமாக ஒலித்தது அந்தக் குரல். அந்தக் குரல் கிருஷ்ண தேவராயரின் செவியில் தேன்போல பாய்ந்தது. நொடியில் உறக்கம் விட்டு எழுந்தார் அந்த மாமன்னர். தன்னை இப்படி மரியாதை இல்லாமல் அழைக்க யாருக்கும் இதுவரை துணிவு வந்தது கிடையாது. மற்ற நேரமாய் இருந்திருந்தால் மன்னன் ஆவேசத்தில் பொங்கி இருப்பான்.


ஆனால், அந்தக் குரல் அமுதத்தை விட இனிமையாக இருக்கவே அவன் தன்னை மறந்து குரல் வந்த திக்கை நோக்கினான். அங்கே நின்றிருந்த உருவத்தின் கருநீல வண்ணமும் அதன் ஒளியும் மேகத்தையே நாணச் செய்தது. அந்த உருவத்தின் கண்களைக் கண்டு தாமரைகள் வெட்கி, தலை குனிந்தது. அவனது பீதாம்பரத்தின் காந்தி கருடனின் சுவர்ண நிற சிறகைப் பழித்தது.


மார்பில் இருந்த கவுஸ்துப மணி உதிக்கும் சூரியனின் ஒளியை மழுங்கச் செய்தது. ஒரு கையால் தாமரைக் கொடி போல பொலிவுடன் விளங்கும் திருமகளின் கரத்தை பற்றிய படி கோவிந்தன் நின்றிருந்த விதமே மனதை மயக்கியது. கை நழுவிய பொருள் போல் விழுந்து சேவித்தான் மன்னன்.  பிறகு கை குவித்து பய பக்தியோடு அருகில் மாதவன், சொல்வதை கேட்க சித்தமாக நின்று கொண்டான். மாதவன் வாய் மலர்ந்து பேச ஆரம்பித்தான்.


“உலகம் உன் வீரத்தையும், புவியாளும் திறனையும் போற்றுகிறது. ஆனால் என்னை அதிகம் கவர்ந்தது உன் பக்தியும், நீ அழகாக பாடும் தெலுங்கு பிரபந்தங்களும் தான். சத்ய பாமாவின் கதையை எத்தனை அழகாகக் பாடினாய்.  அப்பப்பா அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் ஆயர்பாடி வெண்ணெயை மிஞ்சி விட்டது. அற்புதம் அபாரம்.” என்று மொழிந்தபடியே தன் கருநீல விழிகளை உருட்டி கிருஷ்ண தேவ ராயனை நோக்கினான் கண்ணன்.


“இவை அனைத்தும் தங்கள் பிரசாதம் சுவாமி என்று நொடியில் ஒரு பதில் தந்து விட்டு, மீண்டும் விழுந்து சேவித்தான் மன்னன். கண்ணன் தொடர்ந்தான்.


‘‘உன் பாமாலையால் என்னை பாடியது போதும். அந்த புகழ்ச்சி எனக்கு புளித்து விட்டது. இனி நீ என்னைப் பாடினால் நான் செவி கொடுத்துக் கேளேன்.“ மாதவன் இவ்வாறு மொழிந்ததும் தான் செய்த தவறு என்ன என்று விளங்காமல் நா தழுதழுக்க “சுவாமி மன்னித்தருளுங்கள்…"  என்று எதையோ சொல்ல வந்தார் மன்னர். அவரை தன் உள்ளங்கையை உயர்த்திக் காண்பித்து தடுத்தான் கோவிந்தன். அவரும் கட்டுப்பட்டார். மாதவன் தொடர்ந்தான்.


“நீ பாடத்தான் வேண்டும் ஆனால் என்னை இல்லை. இதோ இந்தக் கோதையை! சூடிக் கொடுத்த சுடர்க் கொடியை! பக்தியால் என்னை ஆண்ட ஆண்டாளை! மண்ணில் கிடைத்த மாணிக்கத்தை! சுந்தரத் தெலுங்கில் என் சுந்தரியைப் பாடு!”அருகில் நின்றிருந்த தனது தேவியை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டிய படியே கண்ணன் மொழிந்தான். அந்தக் குரலில் தான் எத்தனை பெருமை. ஆஹா! அவனது பெருமையை பேசும் போது கூட அவன் இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டான்.


“சுவாமி! சுந்தரத் தமிழ்க் கொடியை தமிழில் பாடினால் அல்லவா சிறப்பாக இருக்கும். எனக்கோ தமிழில் புலமை இல்லையே! இது என்ன சுவாமி சோதனை!” கை கட்டி வாய் பொத்திய படியே சொன்னார் மன்னர். கண்ணன் அதைக் கண்டு மெல்ல குறு நகை பூத்தான். அதில் மன்னன் மயங்கினான். அவனை மேலும் கிரங்கடிக்க அமுதமான குரலில் பேசினான் கண்ணன்.


“தெலுங்கில் தான் நீபாட வேண்டும். நீ கன்னட தேசத்து மன்னன். கோதை தமிழ் மாலை தொடுத்து பக்தியின் சிகரமேறினாள். உன்னை எழுச் சொன்ன நான் ஆந்திர மாநிலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஆந்திர விஷ்ணு. ஆக நீ நான் சொன்னதை செய்தால், தமிழ் தெலுங்கு கன்னடம் என்ற மூன்று தேசமும் ஒன்று படும்.


மேலும், பக்திக்கு ஏதடா காலமும் தேசமும். அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்! ஆகவே கோதையைப் பாடு! அவள் சரிதத்தை பாடு! இது என் ஆணை! நீ கோதையை பாடினால் குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல நீ பிரகாசிப்பாய். ஆசிகள்!”  தனது அபய ஹஸ்தத்தை காட்டி ஆதரவு அளித்தான். மன்னன், ‘‘நிச்சயம் பாடுவேன் சுவாமி நிச்சயம் பாடுவேன்.’’ என்ற படி மீண்டும் சேவித்தான்.


எழுந்து பார்த்தான் எதிரில் கண்ணன் இல்லை. ஆம் கண் திறந்து பார்த்தான் கண்ணன் அங்கு இல்லை. மெல்ல மன்னனுக்கு உரைத்தது அவன் கண்டது கனவு என்பது. நேரத்தை அறிய சேவகனை அழைத்தான். அவன் “சுபமான பிரம்ம முகூர்த்தம் பிரபோ” என்றான். இந்த நேரத்தில் கண்ட கனவு நிச்சயம் பலிக்கும் என்று அவன் குருநாதர் சொன்னது மனதில் நிழலாடியது. பொழுது விடிய காத்திருந்தான். நேரம் அவனை வெகுவாக வஞ்சித்தது.


ஆம் அது நகரவே இல்லை. கஷ்டப் பட்டு அதை ஓட்டினான். பொழுது விடிந்ததும் அரசவையைக் கூட்டினான். அவனுடைய மந்திரி திம்மரசு, அரசவையில் முதல் ஆளாக அமர்திருந்தார். அவன் தேடி தேடிக் குவித்த அறிவாளிகள் எட்டுப் பேர், அஷ்ட திக்கஜங்கள் என்று அவர்களுக்கு பெயர். அந்த எட்டு அறிவாளிகளும் வந்திருந்தார்கள். அவர்களில் நாம் அறிந்த தென்னாலி ராமனும் இருந்தார்.


அனைவரும் மன்னர் வரவும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். அவர்கள் அனைவரையும் அமரும் படி விழியால் கட்டளை இட்டுவிட்டு, அவன் அமர்ந்தான். மெல்ல குரலை கனைத்துக் கொண்டான். பிறகு தான் கண்ட அற்புதக் கனவை இம்மியும் பிசகாமல் நடந்ததை நடந்தவாறு சொல்லி முடித்தான்.


“உங்கள் அபிப்ராயம் என்ன! அறிவில் சிறந்த நீங்கள் அனைவரும் எனக்கு வழி காட்ட வேண்டும்!” என்று கை குவித்து வேண்டினான். “வேதங்கள் தேடியும் காணாத பரம் பொருள் அந்த மாயவன்! உங்கள் அளவில்லா பக்தி அவனை குளிர வைத்து விட்டதை இந்தக் கனவு குறிக்கிறது மன்னா” எழுந்து நின்று தனது கருத்தை சொன்னார் அல்லசனி பெத்தண்ணா.  கிருஷ்ண தேவராயர் தேடித் தேடி சேர்த்த எட்டு அறிவாளிகளின் ஒருவர் அவர்.


“அது மட்டுமில்லை மன்னா! கனவில் வந்த இறைவன் உங்களை கவி பாடச் சொல்லி இருக்கிறார். இது, உங்களது கவிதை, அந்த பரம்பொருளையே  ஈர்த்து விட்டதை குறிக்கிறது!” அய்யால ராஜு என்ற அடுத்த ஞானி சொன்னார். “அந்த மஹா லட்சுமியும், கோதை நாச்சியாரும் தங்களுக்கு தரிசனம் தந்தது, உங்களது செல்வம் உயரப் போவதை குறிக்கிறது.” திம்மன்னா என்ற அடுத்த ஞானி சொன்னார்.


துர்ஜதி, மல்லன்னா, ராமபத்ருடு, ராமராஜபூஷனுடு என்ற மற்ற அமைச்சர்களும் தங்கள் கருத்தை சொல்லி மன்னனின் கனவை விளக்கினார்கள். ஆனால், தெனாலி ராமன் எதையோ யோசித்த படி அமர்திருந்தான். அவன் மீது மன்னனின் பார்வை போனது. அவன் எதையோ யோசிப்பதை நொடியில் உணர்ந்த மன்னன், “ ராமா! உன் கருத்து என்ன? அதையும் சொல்லிவிடு” என்று கட்டளை இட்டான்.


ராமன் எழுந்தான். அடக்கமாக அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தான். “நீங்கள் தேடி தேடி சேர்த்த அறிவாளி அமைச்சர்கள் எழு பேரும் சொன்னது முற்றிலும் சரி மன்னா! ஆனால் இவர்கள் யாரும் நீங்கள், உடன் கோதை நாச்சியார் புகழைப் பாடும் அற்புத காவியம் படைக்க வேண்டும் என்ற மாதவன் கட்டளையை பற்றிப் பேசவே இல்லை.


மாதவன் கட்டளையை மீற நாம் யார் மன்னா!? உலகை ஆளும் பரமன் அல்லவா அவன்.? இன்றே பாடத் தொடங்குங்கள், கோதையின் பக்திப் பாதையை. உங்கள் அற்புதக் கவியால் அன்னையை அலங்கரியுங்கள். குழந்தைகளான நமது புண் மொழியையும், அவள் பொன் மொழியாகக் கொள்வாள்.  எனில் தங்களது அற்புதக் கவிதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா!?”

   

தெனாலிராமன் தனது கருத்தை சொல்லி முடித்தான். அனைவரும் கை தட்டி அதை வரவேற்றனர். இது நமக்கு தோன்றாமல் போனதே, என்று வருத்தமும் அடைந்தார்கள் சிலர். பலர் தெனாலி ராமனுக்கு ஜெய்..... ராஜா கிருஷ்ண தேவ ராயருக்கு..... ஜெய்..... சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கு..... ஜெய்.... என்று ஜெய கோஷம் இட்டார்கள்.

 

இப்படி மன்னன் கிருஷ்ண தேவராயன் எழுதியதுதான், “அமுக்தமால்யதா” என்ற அற்புதக் காவியம். தெலுங்கு காவிய உலகில் சிகரம் தொட்ட அற்புத நூல். கவி நயமும், வார்த்தை நயமும், பொருள் நயமும் பொதிந்த அற்புத நூல். அதிலும் இவர் இந்த நூலின் ஒரு பகுதியில் கோதையின் திரு உருவத்தை, உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணித்து இருக்கிறார்.


ஆதி சங்கரரின் சவுந்தர்ய லஹரிக்கு போட்டியாகத் திகழ்கிறது அந்த அற்புத பாமாலை. கோதையையும், அவளது தமிழையும், நேசிக்கும் ஒவ்வொரு வைஷ்ணவனும் படித்துப் படித்து இன்புற வேண்டிய நன் நூல். அமுக்த மால்யதா என்றால் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்று பொருள்.

நன்றி - குங்குமம் ஆன்மிகம்


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை