திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 4


அறிமுகம் – (4) – பாகவத புராணத்தின் சிறப்பு

ஒருமுறை, தந்தையான வேத வியாஸரும், தனயனான சுகாச்சாரியாரும் ஒரு குளத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே, இளமையான பல பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த வேத வியாஸர் முன்னே சென்றார். அவரைப் பார்த்தவுடன் பெண்கள் வெட்கப்பட்டு ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு, தங்களை மறைத்துக் கொண்டார்கள். வியாஸர் முன்னே சென்று விட்டார். பின்னால் சுகர் வந்தார். அவரைப் பார்த்து பெண்கள் வெட்கமே படவில்லை. தங்களை மறைத்துக் கொள்ளவும் இல்லை.சுகரும் நடந்து முன்னேறினார். சற்று தூரம் சென்ற பிற்பாடு, வியாஸருக்கு ஐயம் ஏற்பட்டது. ‘நானோ வயது முதிர்ந்தவன்; நம்மைப் பார்த்து இளம் பெண்கள் வெட்கப்படுகிறார்கள். ஆனால், என் பிள்ளையோ கட்டிளங்காளை; அவனைப் பார்த்து அவர்கள் வெட்கப்படவே இல்லை. இது என்ன நேர்மாறாக இருக்கிறதே! என்று நினைத்தவர், திரும்பி நடந்து பெண்களிடத்தில் வந்தார்.

பெண்களே! ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? வயது முதிர்ந்த என்னைப் பார்த்து ஏன் வெட்கம்? இளைஞனான என் பிள்ளையைப் பார்த்து ஏன் வெட்கப்படவில்லை? என்று வினவினார்.

பெண்கள் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்கள்:

இந்தக் கேள்வியையும் நீர் வந்து கேட்கிறீரே தவிர, உமது பிள்ளை வந்து கேட்கவில்லையே! நாங்கள் பெண்கள், ஆடையை அவிழ்த்து குளித்துக் கொண்டிருக்கிறோம், அதை எடுத்து மறைத்துக் கொண்டோம் – இது அத்தனையும் உமது கண்ணுக்குப் பட்டதே தவிர, உம்முடைய மகன் கண்ணுக்குப் படவில்லையே! ஏனெனில், அவர் கண்ணுக்கு ஆணோ, பெண்ணோ, மரமோ, சிங்கமோ, ஆறோ எல்லாமே சமம். அவர் உடலைப் பார்ப்பவர் அல்ல. ஆத்மாவை மட்டுமே பார்ப்பவர். ஆனால், வியாஸரே! நீர் நம்மைப் பார்த்தபடியால்தானே புரிந்து கொண்டீர்! என்று கூற, விதிர்த்துப் போனார் வியாஸர்.

ஓ! நம் மகனுக்குத்தான் என்ன வைராக்கியம்! என்ன பற்றற்ற தன்மை! என்று இப்படிப்பட்ட மகனைப் பெற்றதற்கே வியாஸர் சந்தோஷப்பட்டாராம். இது சுகாச்சாரியாருடைய வைபவம்.

பகவானுடைய அவதாரங்களைப் பற்றி இப்புராணம் சொல்லும் என்று சொன்னேன். அது இந்த பாகவத புராணத்துக்கு இருக்கிற முதல் பெருமை.

இரண்டாவது, அதைப் பாடிய வியாஸருக்கும், சுகருக்கும் இருக்கின்ற பெருமை. மூன்றாவது, எந்த ஒரு நூலிலும் ‘என்ன கருத்து உள்ளது? எது பாட்டுடைச் செய்தி? என்பது முக்கியம். கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள்; அவனைப் பற்றிய தர்மம்; நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி; மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள் – இவை அத்தனையும் பாகவத புராணத்தில் இருக்கிறபடியால், அது பெரும் சிறப்பு வாய்ந்த நூல்.

ஆக, நூலின் பயனைப் பார்த்தாலும், நூலின் அமைப்பைப் பார்த்தாலும், நூலை எழுதியவரைப் பார்த்தாலும் – எவ்வகையிலும் சிறப்புடைய நூல், பாகவத புராணம். இந்தப் புராணத்தின் சிறப்புக் கூறும் சில ச்லோகங்கள் உண்டு.

ஸ்ரீமத் பாகவதம் நாம
புராணம் லோக விச்ருதம்
ச்ருணுயாத் ச்ரத்தயா யுக்தா
மம சந்தோஷ காரணம்


இது பகவானே தெரிவிப்பது. “இந்த பாகவத புராணம் இருக்கிறதே, உலகத்திலேயே பெருமை வாய்ந்தது. இதை எவன் எவனெல்லாம் கூறுகிறானோ, பாராயணம் பண்ணுகிறானோ, இதன் பொருளை உணர்ந்து கடைபிடிக்கிறானோ, அத்தனை பேரும் எனக்கு இன்பத்தை அளிக்கிறார்கள் என்று பெருமாளே கூறுகிறார்.

முதலாளிக்கு விருப்பம் ஏற்பட்டு, அவர் சந்தோஷப்பட்டால் நமக்கு எதுதான் கிடைக்காது? பகவானோ அனைவருக்கும் முதலாளி. அவரை சந்தோஷப்படுத்துவதுதானே நமக்குக் கடமை. அதற்கு எளிய வழி உண்டா என்று தேடினால், பாகவத புராணம்தான் அதற்கு எளிய வழி. அதைப் படிக்கப் படிக்க, கண்ணன் திருமுக மண்டலம் மலர்கிறது. மலர்ந்தால், நமக்கு எவையெவை நன்மையோ அனைத்தையும் கொடுக்கப் போகிறார். மற்றொரு ஸ்லோகம்:

யத்ர யத்ர சதுர் வக்த்ர
ஸ்ரீமத் பாகவதம் பவேத்
கச்சாமி தத்ர தத்ராஹம்
கௌர்யதா சுகவத்ஸயா.

இதுவும் பகவானே கூறுவதுதான். ஒரு பசு மாடு, தன் கன்றுக் குட்டியிடம் இருக்கும் விருப்பத்தாலே, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்ந்து செல்லும். அதைப் போல், கண்ணன்தான் பசு மாடு. யாரெல்லாம் பாகவத புராணத்தைச் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கன்றுக் குட்டி. பாகவதத்தைப் படிப்பவனைக் கன்றாகக் கொண்டு, அவன் மேல் இருக்கிற ஆசையாலே, பகவான் எனும் பசு, பின் தொடர்ந்து வருவானாம்.

இப்படி, நம்மைப் பின் தொடர்ந்து கண்ணன் வந்தால், அது எவ்வளவு பெரிய பேறு! மஹா பாக்கியம் அல்லவா? அதை அடைவதற்கு ஒரே வழி பாகவத புராணத்தை வாசிப்பதே!

சரி! மேலும் மேலும் பாகவத புராணம் சிறப்புடையது என்று சொல்கிறோமே! எதனால் அதற்கு இவ்வளவு சிறப்பு ஏற்பட்டது? அது ஒரு சுவையான செய்தி.

கண்ணன் பூவுலகத்தில் பிறந்து, நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருந்து, மறுபடியும் வைகுண்டத்துக்குச் செல்லப் போகிறார். கண்ணனுடைய மிகுந்த பிரியத்திற்குரிய சிஷ்யர், உத்தவர் என்று பெயர் பெற்றவர்; சான்றோர்; மெத்தப் படித்தவர்; பரம பக்தர். உத்தவருக்குக் கண்ணனை விட்டுப் பிரிய மனதில்லை. கண்ணனுடைய திருவடிகளைக் கட்டிக் கொண்டு,

த்வத் வியோகேன தே பக்தா: கதம்
ஸ்தாஸ்யந்தி பூதலே?

– என்று கேட்கிறார். “உன்னை விட்டுப் பிரிந்தால், உன் சீடர்கள், உன் நண்பர்கள், எப்படி உயிர் வாழ்வார்கள்? கண்ணா! திடீரென்று ‘புறப்பட்டுப் போகிறேன் என்று சொல்லாதே! எங்களுக்கு ஒரு வழி காட்டி விட்டுப் போ! என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது, கண்ணன் தெரிவித்தார். “நான் போய்த்தான் தீர வேண்டும். வந்த வேலை முடிந்து விட்டது. ஆனால், உனக்கு ஒரு வழி கூறுகிறேன். நான் பாகவத புராணச் சொற்களில் இனி தங்கி விடுகிறேன். துவாபர யுகம் வரை நான் நானாக இங்கு மக்களிடையே நடமாடினேன். துவாபர யுகத்தின் இறுதியில், வைகுண்டத்தைச் சென்று அடைகிறேன். கலியுகம் முழுவதும், பாகவத புராணச் சொற்களிலேயே நான் வசிக்கப் போகிறேன். யாரெல்லாம் என்னை தரிசிக்க விருப்பம் கொள்கிறார்களோ, என்னை அடைய ஆசைப்படுகிறார்களோ, அவர்கள் எல்லாம் இங்கேயே கலியுகத்தில் பாகவத புராணத்தைப் படித்துக் கொண்டிருக்கட்டும் என்றார்.

கையால், இப்புராணம் ஏதோ சில ச்லோகங்களின் தொகுப்பு அல்ல. ஏதோ சில ச்லோகங்களின் கூட்டம் அல்ல. இவை ‘கண்ணனே! இந்த ஒவ்வொரு ச்லோகமும் ‘கண்ணனே! ஒவ்வொரு சொல்லும் ‘கண்ணனே! இதன் பொருளும் ‘கண்ணனே! அப்படி இருக்கும்போது கண்ணனே நம்மோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் – ஒரே வழி, பாகவத புராணத்தைப் படிப்பதுதான்! அதில் சொன்ன கருத்துகளின்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான்!

யாருக்குத்தான் குழந்தை கண்ணன் தன் வீட்டில் ஓடி ஆட வேண்டும் என்ற ஆசை இருக்காது? பெருமான் கண்ணனே நம் வீட்டுக்கு வந்தால் அது திருப்தி தரும், சந்தோஷத்தைக் கொடுக்கும், நாம் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுக்கும், சாந்தி நிலவும். அதற்கு ஒரே வழி, பாகவத புராணத்தை படிப்பது. ஆக, பாகவதம் என்றால் என்ன என்று பார்த்தோம். அதன் சிறப்பைப் பார்த்தோம். இனி பாத்ம புராணத்தில் பாகவத புராணத்தின் சிறப்பு, இரண்டு முக்கியமான கதைகளால் கூறப்படுகின்றது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக