திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 5


அறிமுகம் (5) – பரீக்ஷித்தின் பிறப்பு


 ஸாத்விக புராணமான பாகவத புராணத்தை, ஏழு நாட்களில் பாராயணம் செய்வது என்று ஒரு வழக்கம் உண்டு. ஸ்ரீ ராமாயணத்தை ஒன்பது நாட்களில் உபன்யாஸம் செய்து, ‘நவாஹத்தில் பூர்த்தி செய்தோம் என்று சொல்வதுண்டு. ராமாயணம் என்றால் ஒன்பது நாட்கள் என்பதும், பாகவத புராணம் என்றால் ஏழு நாட்கள் என்பதும் பெரியோர்களால் கடைப்பிடிக்கப் பெற்ற வழக்கம். ‘ஏழு என்ற எண் ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸப்த என்று குறிப்பிடப்படுகிறது. ஸப்த கன்னிகைகள்; ஸப்த ரிஷிகள்; ஸப்த த்வீபங்கள் (கண்டங்கள்); ஸப்த பர்வதங்கள்; ஸப்த ஸமுத்திரங்கள் என்று எத்தனையோ சிறப்புற்ற ஏழுகள் உண்டு! ‘ஏழு என்ற எண்ணிக்கைக்கே ஒரு தனிச் சிறப்பு உண்டு. ‘ஏழு நாள் பாராயணம் செய்ய வேண்டிய விதியான பாகவதத்துக்கும் அச்சிறப்பே.

அபிமன்யுவிற்கும், உத்தரைக்கும் கல்யாணம் நடந்தது. உத்தரா தேவி கர்ப்பம் தரித்தாள். அச்சமயத்தில், மஹாபாரதப் போர் முடிந்து, துரியோதனன் மாண்டு போனான். அவனுடைய செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமென்று விரும்பினான் துரோணாச்சாரியாருடைய புதல்வன் அச்வத்தாமா. அதனால் மஹாபாரத யுத்த முடிவில் இரவோடு இரவாக, கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் வாரிசுகளையெல்லாம் கொன்று விட்டு, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் வளர்ந்து வரும் கருவையும் அழிப்பதற்காக அபாண்டவாஸ்தரம் என்னும் அஸ்திரப் பிரயோகத்தைச் செய்தான். பாண்டவர்களுடைய பரம்பரையே அத்துடன் முடிய வேண்டும் என்பதற்காக எய்ததால், அந்த அஸ்திரத்திற்கு ‘அபாண்டவ அஸ்திரம் என்று பெயர். அதனை உத்தரை கர்ப்பத்தை நோக்கி ஏவினான். அது, உத்தரையினுடைய கர்ப்பத்துக்குள் புகுந்து, அந்தச் சிறு கர்ப்பத்தையும் அழிக்க முற்பட்டது.

அந்தச் சமயத்தில், உத்தரையும், திரௌபதியும் கண்ணனுடைய திருவடிகளிலே சரணாகதி செய்தார்கள். ‘ஹே! துவாரகையில் நிலை கொண்டிருக்கும் அச்சுதனே! புண்டரீகாக்ஷனே! நீதான் எஞ்சியிருக்கும் பாண்டவர்களுடைய ஒரே வாரிசான இந்த கர்ப்பத்தைக் காத்துக் கொடுக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினர்.

கண்ணனும் மனம் இரங்கினான். அடியார்கள் வேண்டினால் – சரணாகதி செய்தால் – கண்ணன் எதைத்தான் செய்ய மாட்டான்? உடனே கண்ணன், உத்தரையினுடைய கர்ப்பத்துக்குள் புகுந்து, சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு, சுற்றிச் சுற்றி வந்து, கர்ப்பத்தைக் காத்தான். கர்ப்பமும், உரிய காலம் கனிந்ததும் பிறந்தது. ஆனால், அது ஒரு கரிக்கட்டையைப் போல் கருகியதாய் - அஸ்திரத் தாக்குதலுக்கு முதலில் உட்பட நேர்ந்ததால், உயிரற்ற ஒரு பிண்டம் போலக் கிடந்தது.

மறுபடியும் திரௌபதியும், உத்தரையும் கண்ணனிடத்தே வேண்டினார்கள். கண்ணன் திருவுள்ளம் இரங்கி, தன்னுடைய திருவடிக் கட்டை விரலாலே, பிண்டமாகக் கிடந்த அந்தக் கர்ப்பத்தைத் தீண்டினான். அப்போது கண்ணன், ஒரு சத்தியப் பிரதிக்ஞை செய்தே பிண்டத்தைத் தீண்டுகிறான்.

யதிமே ப்ரஹ்மச்சர்யம் ஸ்யாத்
ஸத்யம் ச அவ்யாஹதம் மயி
தேன ஜீவது பாலக:

அதாவது, ‘நான் பிரம்மச்சாரி என்பது உண்மையாக இருக்குமானால், நான் பொய்யே சொல்லாதவன் என்பது மெய்யாக இருக்குமானால், இப்போது நான் என் காலால் தீண்ட, இந்தக் குழந்தை உயிர் பெற்று எழட்டும், என்கிறான்.

நாம் எல்லாரும் வெகுநாட்களாக கண்ணன் பொய்யன்; திருடன்; கண்ணன் பல பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் என்று உறுதியாக ஒன்றை நம்புகிறோம். ஆனால், நம்முடைய அந்தத் தவறான நம்பிக்கை, இந்த சத்தியப் பிரதிக்ஞையால் தவிடு பொடியாகிறது. ஏனெனில், கண்ணன் இந்தப் பிரதிக்ஞையைச் செய்து, அந்தக் குழந்தையைத் தீண்டியவுடன் அந்தக் கரிக்கட்டை உயிர் பெற்று எழுந்தது. அவன்தான் பரீக்ஷித்தாக உருவெடுக்கிறான். சிறந்த அரசனாக இருந்தான் அவன். அந்தப் பரீக்ஷித் மன்னனே, சுகாச்சாரியாரிடத்தே ஏழு நாட்களில் பாகவதத்தை உபதேசமாகப் பெற்றான்.

நமக்கெல்லாம் வியப்பு! கண்ணனா பொய் சொல்லாதவன்? கண்ணனா பிரம்மச்சாரி? ஆம்! சுகாச்சாரியார், பாகவத புராணத்தில் இதைச் சிறப்புற விளக்குகிறார். பொய் சொல்லுதல், திருடுதல், பல பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளுதல் – இது போன்ற குற்றங்கள் பகவானை அறவே தீண்டாது. கண்ணன் கீதையில் சொல்லும்போது,

ந மாம் கர்மாணி லிம்பந்தி
ந மே கர்மபலே ஸ்ப்ருஹா

– என்கிறார். அதாவது, ‘என்னைக் கர்மங்கள் தீண்டாது. கர்மங்களுடைய பலனை நான் அனுபவிப்பது இல்லை.

ஆக, கர்மங்கள் எப்போது தீண்டாதோ, அப்போது திருடுதல், பொய் கூறுதல் முதலான குற்றங்களும் பகவான் கண்ணனுக்கு இல்லை. பகவான் தன்னுடைய சொத்தைத் தானே எடுத்துக் கொள்வது எப்படித் திருடுதல் ஆகும்? அவர் ஒரு பேச்சு பேசினார் என்றால், அதுவே உலகத்தில் மெய்யாகப் போகிறதே! பின் எப்படி அவர் பொய் பேசுவார்? அவருக்கும், எந்தப் பெண்ணுக்கும் உடல் ரீதியான தொடர்பு கிடையாது.

ஆத்மாராமன் என்று பகவானுக்குத் திருநாமம். ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவுடன் சேர்ந்து களிப்பதுதான் பிரம்மானுபவம். தன்னைச் சரணடைந்த ஒவ்வொரு ஜீவனையும் பகவான் திருக்கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து ஆத்மாக்களுமே பெண்ணுக்கு சமமானவர்கள். பகவான் ஒருத்தனே புருஷோத்தமன். பக்குவமடைந்த ஒவ்வொரு ஜீவனும் பெருமாளையே கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறான். நிரந்தரமாக அவன் திருவடி நிழலிலேயே பூரண ஆனந்தம் எய்துகிறான்! இது எவ்வளவு சிறந்த செய்தி!

ஆக, உடல் ரீதியான ஆண் - பெண்ணுக்கு உண்டான தொடர்பு, கண்ணனுக்கும், எந்தப் பெண்களுக்கும் இல்லை. நாம் என்னென்ன தவறாக நம்பிக் கொண்டிருக்கிறோமோ, அது அத்தனையையும் மாற்றி, உண்மையான கருத்தை சுகாச்சாரியார் இவ்விடத்தில் உபதேசிக்கிறார். இல்லையென்றால், கண்ணன் சத்தியப் பிரதிக்ஞை பண்ணித் தீண்டினவுடன், கரிக்கட்டை உயிர் பெற்று எழுமா? இந்தச் சரித்திரத்தால், கண்ணன் பிரம்மச்சாரி என்றும், கண்ணன் பொய்யே கூறாதவன் என்றும், தெரிந்து கொள்கிறோம்.

ராமன் பொய் கூறாதவன் என்றால், அனைவரும் நம்புவார்கள். கண்ணனைப் பற்றி, ஆண்டாள் ஒரு பாடலில்,

மாலாய் பிறந்த நம்பியை!
மாலே செய்யும் மணாளனை!
ஏலாப் பொய்களுரைப்பானை!
இங்கே போதக் கண்டீரே!

– என்று பாடுகிறாள். ஆண்டாளே, கண்ணனைப் பொய்யன் என்று கூறுகிறாள். ஆனால் அவன் பொய் சொன்னது, நம்முடைய ஆனந்த அனுபவத்திற்காக! கண்ணன் ஒருமுறை, திரௌபதியிடத்தில் பிரதிக்ஞை செய்கிறான்.

த்யௌ: பதேத் ப்ருத்வி சீர்யேத்
ஹிமவான் சகிலீ பவேத்
சுஷ்யேத் தோய நிதி: க்ருஷ்ணே !
நமே மோகம் வசோபவேத்!
அதாவது, “ஏ! கிருஷ்ணே - கரிய நிறத்தவளான திரௌபதியே! என் வார்த்தை ஒரு நாளும் பொய்யாகாது. ஆகாயம் இடிந்து விழாது. விழுந்தாலும், பூமி பிளக்காது. பிளந்தாலும், இமயமலை பிளக்காது; பொடிப் பொடியாகாது. பொடிப் பொடியானாலும், கடல் வற்றாது. இவையெல்லாம் உலகத்தில் நடக்காதவை. ஒருக்கால் இவை எல்லாம் நடந்தாலும், என்னுடைய பேச்சு ஒருநாளும் பொய்யாகாது என்கிறான். ஆக, பகவான் மெய்யன்; பகவான் பிரம்மச்சாரி - என்ற இந்த உண்மைகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பெருமானுடைய சத்திய ப்ரதிக்ஞையினால்தான் குழந்தை உயிர் பெற்று எழுந்தது.

அந்தக் குழந்தைதான் பரீக்ஷித் மஹாராஜன்.

 (தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக