ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 6


அறிமுகம் – (6) - ஸப்தாஹ விதி



பரீக்ஷித் வளர்ந்தான்; அரசனானான். ஒருமுறை, அவன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடும்போது, பசி தாகத்தைத் தீர்த்துக் கொள்ள, ஒரு ரிஷியினுடைய ஆச்ரமத்தை அடைந்தான். அவரோ, யோகத்தில் இருந்தார். அரசன் வந்ததை அவர் உணரவில்லை. பசிக் கோபத்தாலே அரசன், அவருக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணி, கீழே கிடந்த செத்த பாம்பை, தன் வில்லின் நுனியாலே எடுத்து, அவருடைய கழுத்தில் இட்டான். அவரை அவமரியாதைப் படுத்தி விட்டதாக நினைத்து, திருப்தியோடு அங்கிருந்து வெளியேறினான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ரிஷியினுடைய பிள்ளை, ஓடோடி வந்தான். தந்தையின் கழுத்திலே செத்த பாம்பு இருப்பதைக் கண்டான். உடனே கோபக்கனல் மூள வெகுண்டு எழுந்தான். அப்போது ஏற்பட்ட ஆவேசத்தில், ‘இந்த ஒரு நிலைமை என் தந்தைக்கு யாரால் வந்ததோ, அவன் எவனாக இருந்தாலும், இன்றிலிருந்து ஏழாவது நாள் – தக்ஷகன் என்னும் பாம்பால் கடிக்கப்பட்டு, மரணம் அடைவான் என்று அந்த முனிகுமாரன் சாபம் இட்டான்.

இது ஒருபுறம் இருக்க, நாட்டை அடைந்த பரீக்ஷித், நிதானமாக யோசித்தான். ‘நாம் செய்தது சரியில்லை போலிருக்கிறதே! யாரோ ஒரு முனிவர், யோகத்தில் இருந்தார். நம்மைப் பார்க்கவில்லை என்பதற்காக அவரைப் போய் எப்படி அவமானப்படுத்தலாம்? அவர் பிரஹ்ம ஞானி ஆயிற்றே! - என்று, தான் தவறு புரிந்ததை எண்ணி நொந்தான். உயிர் துறக்க வேண்டும் என்று முடிவு எடுத்து, பட்டினி கிடந்து உயிர் துறப்போம் என்று தர்ப்பத்தைப் பரப்பி, அமர்ந்து கொண்டான்.

ஒருபுறத்தில் ரிஷி குமாரன், மன்னவன் மாள சாபம் இட்டுவிட, மறுபுறத்தில் தன் உயிரை விட அம்மன்னவனும் ஆயத்தமாகி விட்டான். இந்நேரத்தில், ரிஷி கண் விழித்து ஞானத்ருஷ்டியால் நடந்ததை அறிந்தார். ‘பிள்ளாய்! என்ன காரியம் செய்தாய்? அரசன் என்பவன் பகவானுடைய பிரதிநிதி அல்லவா? அவனோ, க்ஷத்ரியன். அவன் கோபமுறுவது என்பது இயல்புதானே! நாமோ அந்தணர்கள், ரிஷிகள். நாமன்றோ கோபத்தை அடக்கியிருக்க வேண்டும்! நீ சாபம் இட்டதே தவறு. நாடாள்பவன் ஏதோ செய்தால், அதை அப்படியேவா நாமும் செய்வது? என்று ரிஷி தன் மகனிடத்தில் கடிந்து கொண்டார்.

இங்கு ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் கழுத்தில் பாம்பு இருக்கிறது என்று கோபித்தோமானால், நம் உடலே ஒரு பாம்புதானே? பகவானை அடைய விடாமல், அது எவ்வளவு தடுக்கிறது? எத்தனை மனிதர்கள் நெஞ்சுக்குள்ளும், உடலுக்குள்ளும் விஷத்தை வைத்திருக்கிறார்கள்? பாம்பு, நேரே விஷமுடையது என்று அறிவோம். தேளுக்கு விஷமுண்டு என்று அறிவோம்.

ஆனால், நாம் அறியா வண்ணம் மனிதர்களிடத்தில் எத்தனை விதமான விஷங்கள்! ஏமாற்றுதல்கள்! பொய்கள்! இது அத்தனையும் மனிதனிடத்தில்தானே காணப்படுகின்றன. நம்முடைய உடலே, ஒரு விஷப்பாம்பு போன்றது. அந்த உடலிலே ஒரு விஷப் பாம்பு கிடந்ததால், என்ன ஆகிவிடப் போகிறது?

ஒரு சிறுகதை கூறுகிறேன். அனந்தாழ்வான் என்று ராமானுஜருடைய சிஷ்யர் ஒருவர் இருந்தார். அவர் திருமலை திருப்பதியில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் - வேங்கடேச பெருமாளுக்காக தோட்டம் அமைத்து, பூக்களை வளர்த்து, கொய்து, மலர் தொடுத்து, புஷ்பத்தை மாலையாக சமர்ப்பித்து வந்தார். தோட்டத்தில் ஒருநாள் கருநாகப் பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. உடனே சீடர்கள் வைத்தியம் பண்ண வேண்டும் என்று துடித்தார்கள்.

அப்போது அனந்தாழ்வான் தெரிவிக்கிறார்:

இதோ என்னைக் கடித்த பாம்பு ஓடுகிறது. என் உடலோ கடிபட்ட பாம்பு. இப்போது கடித்த பாம்புக்கும், கடிபட்ட பாம்புக்கும் போட்டி நடக்கிறது. இரண்டுமே விஷமுடையவை. அதற்குப் பல்லில் விஷம்; இதற்கு உடல் முழுவதும் விஷம். இரண்டு பாம்புகளில் எது ஜெயிக்கிறது என்று பார்ப்போம். கடித்த பாம்பு வெற்றி பெறுமானால், நான் உயிரிழப்பேன்; அப்போது, உடனே வைகுந்தத்தை அடைந்து விரஜை நதியிலே குளித்து, வைகுந்த நாதனுக்குத் தொண்டு புரியும் பேறு பெறுவேன். அப்படியின்றி கடிபட்ட பாம்பாகிய அடியேன் வலியவனானால், உயிர் பிரியாது; இதோ வராஹப் பெருமானுடைய அருகிலே இருக்கும் கோனேரியில் குளித்து, திருவேங்கடவனுடைய திருவடிகளுக்கு மலர்களைத் தூவி அர்ச்சனை செய்து தொண்டு புரிவேன். கடித்த பாம்பு வலியதா? கடியுண்ட பாம்பு வலியதா? என்று போட்டி வைத்துப் பார்ப்போம். முடிவுக்குக் காத்திருப்போம் என்று அனந்தாழ்வான் கூறினார்.

பற்றற்ற தன்மை என்பது இதுவே! நம் உடலின் மீது நமக்குப் பற்று அறுமானால், மிக உயர்ந்ததான பெருமானுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் – என்ற இந்த உண்மையை இக்கதை நமக்கு வெளிப்படுத்துகிறது. பரீக்ஷித்தோ தன் உயிரை விடுவதற்குத் துணிந்து கங்கைக் கரையில் தவநெறியில் அமர்ந்தான். அதே சமயத்தில், சுகாச்சாரியார் அங்கு வந்தார். அவர் யாரிடத்தும் எளிதில் தாமாகவே வலியச் சென்று பழகாதவர். இறையுணர்விலேயே திளைத்திருப்பவர். அத்தகைய ஞானியான அவரைக் கண்டு வணங்கினான் பரீக்ஷித் மஹாராஜன்.

அவரிடம், “தாங்களோ... பிரஹ்ம தேஜஸ்ஸுடன் கூடியவர். வேத வியாஸரின் திருக்குமாரர். அடியேன் இப்போது தங்களிடம் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். வெகு நாட்களாக நல்லது எதையும் தெரிந்து கொள்ளாமல் கழித்து விட்டேன். அடியேனுக்கு இப்போது பெரு விருப்பம் ஒன்று உண்டாகியுள்ளது. எதைக் கேட்டு விட்டால் உலகில் கேட்காததெல்லாம் கேட்கப்பட்டதாகிறதோ – எதைக் கண்டால், காணாததெல்லாம் காணப்பட்டதாகிறதோ – எதை அறிந்தால், அறியாததெல்லாம் அறியப்பட்டதாகிறதோ – அதை தேவரீர் எனக்குச் சொல்ல வேண்டும் என்றான்.

நான் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கை ஏழு நாட்களில் முடியப் போகிறது. ஆதலால், அதற்குள் நீர் எனக்கு உரைக்க வேண்டும் – என்று வேண்டினான்.

சுகாச்சாரியார் புன்னகைத்தார்.

‘அரசனே! கவலைப்படாதே! ஏழு நாட்கள்....! நிரம்ப நேரம் இருக்கிறது. ஒரே மணி நேரத்தில் அறிய வேண்டியதை அறிந்து முக்தி அடைந்தவர்கள் உண்டு. உனக்கோ ஏழு நாட்கள் இருக்கிறது. கவலை வேண்டாம்... என்று பாகவத புராணத்தை உபதேசிக்கத் தொடங்கினார். ஏழே நாட்களில் சொல்லி முடித்தார். அதனால் பரீக்ஷித் உயர்ந்த கதியை அடைந்தான். ஆகையால்தான் பாகவத புராணத்தை ஏழு நாட்களில் கேட்பது என்ற வழக்கம் வெகு நாட்களாக நடைமுறையில் உள்ளது.

ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் எதிலிருந்து தொடங்கி, எது வரை படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

முதல் நாள் : முதல் அத்தியாயத்திலிருந்து, மூன்றாவது ஸ்கந்தத்தில் வருகிற மனு கர்தமப் பிரஜாபதி ஆகியோரிடையேயான பேச்சு வரையிலும்,

இரண்டாவது நாள் : அங்கிருந்து தொடங்கி, ஐந்தாவது ஸ்கந்தத்தில் வருகிற ஜடபரதருடைய உபாக்கியானம் வரையிலும்,

மூன்றாவது நாள் : அதிலிருந்து தொடங்கி, நரஸிம்ஹ அவதாரத்தைச் சொல்லி, ஏழாவது ஸ்கந்தம் முடியும் வரையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

நான்காவது நாள் : எட்டாவது ஸ்கந்தத்தில் தொடங்கி, ஒன்பதாவது ஸ்கந்தத்தை முழுமையாகவும், பத்தாவது ஸ்கந்தம் தொடக்கத்தில் கூறப்படுகிற எம்பெருமான் கண்ணன் பிறப்பு – அதாவது கிருஷ்ண அவதாரம் வரையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

ஐந்தாவது நாள் : அங்கிருந்து தொடங்கி, ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் வரை... அதாவது பத்தாவது ஸ்கந்தத்தில் உள்ள அந்த வைபவம் வரையிலும்,

ஆறாவது நாள் : ருக்மிணி கல்யாணம் முடிந்ததிலிருந்து தொடங்கி, பகவான் ஹம்ஸாவதாரம் பண்ணி, பதினோராவது ஸ்கந்தத்தில் வருகிற, உபதேசம் வரையிலும்,

கடைசியாக, ஏழாவது நாள் : பதினோராவது ஸ்கந்தம் முழுமையாகவும், பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் கடைசியான பதிமூன்றாம் அத்தியாயம் வரையிலும் சொல்லி, பாராயணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுவே ‘ஸப்தாஹ விதி என்று கொண்டாடப்படுகிறது.

இதன்படி செய்தோமானால், கிட்டாத இன்பம் இல்லை. இவ்வுலக இன்பமோ, ஐச்வர்யமோ, ஆரோக்கியமோ, நீண்ட ஆயுளோ, மன சாந்தியோ..., ஏன், அனைத்து நற்பேறுகளுமே கிட்டும்.

இவை மட்டும்தானா? எல்லாவற்றுக்கும் மேலான கண்ணனுடைய திருவடித் தாமரைகளே கிட்டும்....! இப்படி, என்றோ பரீக்ஷித் மன்னன் ஒருவனுக்காக சுகர் உபதேசித்ததை இன்றளவும் நாம் அனைவரும் பெறும்படியான பாக்யம் பெற்றிருக்கிறோம்!

இனிமேல், பாகவத புராணத்தின் மஹாத்மியம் என்ன என்பது பற்றி பாத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளதை, விவரமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை