அறிமுகம் (7) – நாம் அனைவரும் ஸமமானவர்கள்
பதினெட்டு புராணங்களுள், பாத்ம புராணத்தில் ஸ்ரீமத் பாகவத புராணத்தினுடைய
சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. முதலில், பாகவத புராணத்தை பரீக்ஷித்துக்கு உபதேசித்த சுகாச்சாரியாரை
வணங்கும் ச்லோகம் இது :
யம் ப்ரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம்
த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவந
புத்ரேதி தன்மயதயா தரவோண்பி நேதுஸ்தம் ஸர்வபூத ஹ்ருதயம்
முநிமாநதோண்ஸ்மிநந
‘சுகாச்சாரியாரை
வணங்குகின்றோம். அனைத்து ஜீவராசிகளும் ஆத்மாவைப் பற்றி அறிந்து, பரமாத்மாவை உணர்ந்து,
இவ்வுலகத்தில் ஆனந்தமாகவும், பிற்பாடு அவ்வுலகத்தையும் அடைய வேண்டும் என்று எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருந்த ஆச்சார்யர் சுகர். சுகாச்சாரியாருடைய தந்தை வேத வியாஸர்.
சுகர் ப்ரஹ்மத்தைத் தேடுவதன் பொருட்டு, தன் தந்தையையும் துறந்து காடு நோக்கிச் செல்கிறார்.
அப்போது வியாஸர், தன் மகனின் பிரிவைத் தாங்க முடியாமல், அவரைக் கூப்பிடுகிறார். ‘மகனே!
என்னை விட்டுப் பிரிந்து போகாதே. திரும்ப வா...’
என்று அழைத்தார். ஆனால், சுகர், இது எதையும் காதில் கொள்ளாமல், பகவானையே தியானித்துக்
கொண்டு, அவனைத் தேடிப் புறப்பட்டார்.
சுகாச்சாரியார், தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும் – அவர்கள் மக்களோ,
மாக்களோ அல்லது மரம், செடி, கொடிகளோ – அனைத்தையும் தமக்கு ஸமமாகவே நினைத்தார். ஆத்மாக்கள்
அனைவரும் – அவர்கள் எத்தனை கோடி பேர்களாக இருந்தாலும் – ஸமமானவர்கள். கண்ணன் கீதையில்,
‘ப்ருஹ்ம தரிசனம், ஸம தரிசனம்’
என்று இதையே கூறுகிறார். நாம் அனைவரும் உடலால் வேறுபட்டவர்களே ஒழிய, நம் அனைவருடைய
ஆத்மாவும் ஸமமானவை.
ஒருத்தரைப் பார்ப்பதில் இரண்டு விதமான கோணங்கள் உண்டு. ஒன்றை ‘விசிஷ்ட
வேஷம்’ என்றும், மற்றொன்றை ‘நிஷ்கிருஷ்ட
வேஷம்’ என்றும் கூறுவார்கள்.
முதலாவது, உடலோடு சேர்ந்து ஆத்மாவைப் பார்த்தல், மற்றது உடலைப் பிரித்து
ஆத்மாவை மட்டும் பார்த்தல்.
உடலோடு சேர்ந்து பார்த்தோமானால், உலகம் முழுதும் வேறுபாடுகள்தான் தோன்றும்.
உடலைப் பிரிந்து ஆத்மாவை மட்டும் பார்த்தோமானால், ஆத்மாக்கள் அனைவரும் ஸமம்; அனைவரும்
ஞானமே உருவானவர்கள்; அனைவரும் ஆனந்தப்படுவதற்காகவே இருப்பவர்கள் என்கிற உண்மை புரியும்.
இந்த உண்மை சுகருக்குப் புரிந்திருந்தபடியால்தான், அனைத்து ஜீவராசிகளையும்
மரம், செடி, கொடிகளைக் கூட, தனக்கு ஸமமாகவே நினைத்திருந்தார். நாம் அனைவரும் ஸமமானவர்கள்;
ஒரே அடையாளம் உள்ளவர்கள். என் பெயர் வேறு. இதைப் படிக்கும் ஒவ்வொருவருடைய பெயரும் வேறு.
ஆனால், ‘நம் அனைவருக்கும் ஒரே அடையாளம் கூறு’ என்று சொன்னால், ‘ஞானமே உருவானவர்கள்; மகிழ்ச்சியே வடிவானவர்கள்;
திருமாலுடைய அடியார்கள்’
என்பதே பதில்!
இந்தத் தத்துவத்தினுள் உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் பொருந்தி
விடும். நாட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது என்பதற்காக அரசாங்கம் எத்தனை எத்தனையோ முயற்சிகளை
மேற்கொள்கிறது. ஆனால், அவையெல்லாம் சிறிது பயனைத்தான் கொடுக்கின்றன. மாநிலத்துக்கு
மாநிலம் வேற்றுமை; மொழிக்கு மொழி வேற்றுமை; அதில் உயர்ந்தவர் யார்? தாழ்ந்தவர் யார்?
என்று சண்டை பூசல். இவை அனைத்தையும் போக்க ஒரே வழி – ‘ஆத்மாவைப் பற்றிய கல்வியைக் கற்றல்’. உடலைப் பிரித்து ஆத்மாவைப்
பார்க்கத் தெரிந்து கொண்டு விட்டோமானால், அனைவரும் ஸமம் என்பது புரியும். அப்போது,
மொழியாலோ, இனத்தாலோ, மாநிலத்தாலோ, நாட்டாலோ எதனாலும் நாம் வேறுபடாதவர்கள்; அனைவருமே
பகவானுடைய தொண்டர்கள்... என்கிற உண்மை புரிந்து, சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோம்.
சுகாச்சாரியார், தந்தை கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காமல் வேகமாக
நடந்தார். ஆனால், வியாஸர் வியக்கும் அளவுக்கு அங்கிருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம்,
‘தந்தையே! எங்களைக் கூப்பிட்டீரா?’
என்று கேட்டன. சுகரைக் கூப்பிட்டால் மரம் பதில் கூறுகிறதே! ஏன்? வியாஸருக்குப் புரிந்து
போயிற்று. ‘சுகர், தமக்கு ஸமமாகத்தான் மரத்தையும் நினைத்தார்; விலங்கையும் நினைத்தார்.
ஆகையால்தான் அவரைக் கூப்பிட்ட குரலுக்கு, மரங்கள் பதில் கூறுகின்றன போலும்! ‘இதுவன்றோ
ஸமதர்சனம்!
நாம், ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று கூறுவோம். ஆனால் ஆன்மிக ரீதியில் சொன்னால், ‘ஜாதி ஒன்றே!
ஆத்மா என்னும் ஒரே ஜாதி! இந்த ஜாதியர் அனைவரும் சேர்ந்து, பரமாத்மாவுக்குத் தொண்டர்கள்.
இது புரிந்த சுகாச்சாரியார், தன் வீடு என்னும் கூட்டுக்குள் அடைபடாமல் காடு நோக்கி
புறப்பட்டுப் போகிறார். அவரை முதற்கண் வணங்குவோம். குருவை வணங்கினால்தான், அவரால் உபதேசிக்கப்பட்ட
அனைத்தும் நமக்குப் புரியும்; தேவையான நேரத்துக்கு நமக்கு ஞாபகத்துக்கு வரும்; நம்
வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இயலும். இனி நம்முடைய கதை ‘நைமிசாரண்யம்’ என்னும் திவ்ய க்ஷேத்திரத்திற்குச்
செல்கிறது.
அவ்விடத்தில் ஸூதர் என்னும் புராணம் கூறும் ரிஷி, மரத்தடியில் அமர்ந்துள்ளார்.
அவரைச் சுற்றி சௌனகர் முதலான ரிஷிகள், சீடர்களாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த க்ஷேத்திரத்திற்கே
தனிச் சிறப்பு உண்டு. வைணவத் திருத்தலங்கள் 108-க்குள் நைமிசாரண்யம், வடநாட்டுத் திருத்தலத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திவ்ய க்ஷேத்திரத்திலே பகவான் காடு வடிவத்திலே எழுந்தருளியுள்ளார்.
‘ஆரண்யம்’ என்றால் காடு. ‘நைமிசாரண்யம்’ என்றால், ஒரு வகையான தருப்பைப்
புல் நிரம்பி வளர்ந்திருக்கும் காடு. அல்லது ‘நிமிஷம்’ என்றால் கண்ணிமைக்கும் பொழுது. ‘நைமிசாரண்யம்’ என்றால், கண்ணிமைக்கும் பொழுதுக்குள்,
அசுரர்களை பகவான் விரட்டி அடித்து, மஹரிஷிகளைக் காப்பாற்றிக் கொடுத்த இடம். இப்படிப்பட்ட
திவ்ய க்ஷேத்திரத்தில்தான் புராணம் கூறும் ஸூதர் அமர்ந்திருக்கிறார். இவர் வேறு யாரும்
அல்லர். பிரம்மாவுக்கு மயிர்க் கூச்செறிதல் உண்டானபோது, ரோமஹர்ஷணர் என்னும் ரிஷி பிறந்தார்.
வியாஸருக்கு சீடரான ரோமஹர்ஷணர், புராணங்களை எல்லாம் உலகத்தில் பிரவசனம் செய்து கொண்டு
வந்தார். அவருடைய காலத்திற்குப் பிறகு, அவர் மகனான ஸூதபௌராணிகர், அவர் விட்டுச் சென்ற
திருப்பணியை மேற்கொண்டு, தானும் புராணக் கதைகளைக் கூறி வந்தார். இவற்றைச் சொல்வதற்கென்று
அவர்களுக்குத் தனி வல்லமை உண்டு.
சூழ்ந்திருந்த சீடர்கள் எல்லாம் தங்கள் ஆசானை நோக்கி, சில கேள்விகளை
எழுப்பினார்கள். “இது கலியுகமாக இருக்கிறதே! இதில் நாம் எத்தனையோ துன்பப்படுகிறோம்.
இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு, பூரண ஆனந்தம் எய்துவதற்கு வழி யாது? சாஸ்த்திரங்களில்
தேடினோமானால், அவை – பக்தியும், ஞானமும், வைராக்கியமும் இருந்தால், உலகப் பற்றற்று
இருந்து ஆனந்தம் அடையலாம் - என்கின்றன. ஆனால், “கலியுகத்தில் ஞானமும், வைராக்கியமும்
எளிதில் கிட்டி விடுகிறதா? வயிற்றுப்பாட்டைப் பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக,
எது எதையோ விட்டுக் கொடுத்தன்றோ வாழ வேண்டியிருக்கிறது. இப்படியிருக்கும் போது, பெருமானை
அடைவதற்கு – கண்ணன் திருவடிகளை அடைவதற்கு – ஏதேனும் எளிதான வழி உண்டா?” என்று கேட்டனர்.
அப்போது, ஸூதபௌராணிகர் அவர்களுக்குப் பதில் கூறுகிறார்: “ஒரே ஒரு வழிதான்
உள்ளது! இந்தக் கோரமான கலியுகத்தில் கண்ணனை அடைவதற்கு ஸ்ரீமத் பாகவதப் புராணம் ஒன்றேதான்
அந்த வழி. அதை சிரத்தையுடன் – முழு ஈடுபாட்டுடன் – சொன்னோமானால் அவசியம் கண்ணன் நம்
கைவசப்படுகிறான். அவன் திருவடிகளை நாம் எளிதாக அடையலாம்” என்று கூறினார்.
இவ்விடத்தில் கேள்வி-பதிலைப் பற்றி ஒன்று கூற விழைகிறேன். எப்போதும்
கேள்வி, பொதுவில் இருக்க வேண்டும். பதில், சிறப்புற்றதாக இருக்க வேண்டும். கேள்வியையே
சிறப்பாகக் கேட்டுவிட்டால், பதிலில் உண்மை வெளி வராது போகலாம். ‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு
ஒருவன் போனானா?’ என்பதைத் தெரிந்து
கொள்ள, அவனிடம் அந்த இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு கேள்வியைக் கேட்கக் கூடாது. ‘நீ
எங்கு போயிருந்தாய்?’ என்று பொதுவான
முறையில் கேள்வி அமைய வேண்டும்.
‘நான்
இவ்விடத்திற்குச் சென்றேன்’
என்று அவனாக பதில் கூற வேண்டும். அதை விடுத்து, ‘நீ சென்னைக்குப் போனாய் அல்லவா?’ என்று கேட்டால், கேட்பவனின் உள்ளத்தைப்
புரிந்து கொண்டு, பதில் கூறுபவன், அவனுக்குப் பிடித்த பதிலைக் கூற வேண்டும் என்பதற்காக,
‘ஆம்!’ சென்னைக்குச் சென்றேன்’ என்று கூறுவான். இதையே, கேட்பவர்
கேள்வியை சற்றே மாற்றி, ‘நீ அன்றைக்குச் சென்னைக்குச் செல்லவில்லை அல்லவா?’ என்று கேட்டால், ‘ஓ! நான் சென்னைக்குப்
போனது இவருக்குப் பிடிக்காது போலிருக்கிறது என்று புரிந்து கொண்டு, ‘நான் செல்லவே இல்லை’ என்று, பதிலளிப்பவன், மறுத்து
விடுவான். அப்போது உண்மை வெளியே வராது.
ஆகையால், கேள்வி பொதுவில் இருக்க வேண்டும். பதில் விசேஷித்திருக்க வேண்டும்.
இப்படித்தான் உரையாடல் பயன் பெறுகிறது. இந்த முறையில் இரண்டு மஹான்கள் பேசிக் கொண்டால்,
அதுவே நமக்கு சிறந்த காவியம்! அதிலிருந்து சிறந்த உபதேசங்கள் கிட்டும். பகவான் கண்ணனும்,
அர்ஜுனனும் பேசிக் கொண்டார்கள். அப்போதுதான் நமக்கு பகவத் கீதையே கிடைத்தது. பீஷ்மாச்சாரியாரும்,
பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரரும் பேசிக் கொண்டார்கள். அப்போதுதான் விஷ்ணு ஸஹஸ்ர
நாமங்கள் நமக்குக் கிடைத்தன. வைசம்பாயன ரிஷியும், ஜனமேஜயனும் பேசிக் கொண்டார்கள். அப்போதுதான்
மஹாபாரதமே உலகுக்குக் கிடைத்தது. திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார் புளிய மரத்தடியிலே
எழுந்தருளியிருக்க, மதுரகவி ஆழ்வார் அவரிடம் கேள்வி கேட்டுப் பேசலுற்றார். அப்போதுதான்
இவ்வுலகத்திற்கு திருவாய்மொழி எனும் பிரபந்தமே கிடைத்தது.
ஆக, மஹான்கள் பேசும்போது உயர்ந்த கருத்துகளை, வாழ்க்கைக்கு விளக்கேற்றி
வைக்கும் நெறிகளை – நாம் பெறுகிறோம். ஸூதபௌராணிகர், சௌனகர் முதலானவர்களுக்குக் கதை
கூறும்போது, ஒரு அழகான சரித்திரத்தைத் தெரிவிக்கிறார். சுகாச்சாரியார், பரீக்ஷித்துக்கு
உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் எல்லாம் பாகவத புராணத்தின் பெருமையை
உணர்ந்து, அவ்விடத்துக்கு வந்து பரீக்ஷித்துக்கு ஆசை காட்டினார்கள். “அமுதக் குடத்தை
உன்னிடத்தில் கொடுக்கிறோம். அதற்கு பதில், எங்களுக்கு பாகவத புராணத்தைக் கொடுத்து விடுகிறாயா?” என்றனர்.
அதற்கு பரீக்ஷித் பதில் கூறினான்: “எனக்கு ஓட்டாஞ்சில்லுக்கும், முத்துச்
சிப்பிக்கும், வெள்ளிக்கும் வித்தியாசம் தெரியும். கண்ணாடிக் கல்லுக்கும், ரத்தினக்
கல்லுக்கும் வேறுபாடு புரியும். நீங்கள் கண்ணாடிக் கல் போன்ற அமுதக் குடத்தைக் கொடுத்து,
உயர்ந்த ரத்தினத்தைப் போன்ற பாகவதத்தைப் பெற எதிர்பார்க்கிறீர்கள். நான் கொடுக்க மாட்டேன்.
அதன் பெருமை எனக்குத் தெரியும்”
என்று கூறி விட்டான்.
‘ஒருமுறை மோக்ஷத்தை அடைவிக்கக் கூடிய வழிமுறைகளில் எது மிகவும் சிறந்தது?
எது மிக எளிமையானது?’ என்று நான்முகக்
கடவுள் தராசுத் தட்டில் அனைத்து உபாயங்களையும் வழிமுறைகளையும் வைத்து எடை போட்டுப்
பார்த்தார். அதிலே தராசு மற்ற எல்லா வழிமுறைகளையும் தள்ளிவிட்டு, பாகவத புராணத்தையே
முக்தி அடைவிக்கும் சிறந்த வழியாக ஏற்றுக் கொண்டது.
‘மேநிரே
பகவத்ரூபம் சாஸ்த்ரம்
பாகவதம் கலௌ’
– என்று கூறுகிறார்கள். கலியுகத்தில் பாகவத புராணமாகிற சாஸ்திரமே பகவான்
கண்ணனாகவே கொண்டாடப்படுகிறது. இந்த பாகவத புராணத்தை நாரத பகவான் ஏழு நாட்களில் பாராயணம்
செய்தார். அதனால் பல நன்மைகள் விளைந்தன. நாரதர் ஏழு நாட்கள் பாராயணம் செய்த கதையைக்
கேட்போமா? கலியுகத்தில் கண்ணபிரான், பாகவதத்தின் உருவமாகவே இருக்கிறான். இப்புராணத்தை
படித்தாலோ, கேட்டாலோ, அதன்படி நடந்தாலோ எளிதாக வைகுண்டத்தைப் பெற்று விடலாம். இப்புராணத்தின்
சிறப்பு பாத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில், ‘பக்தி’
என்னும் தத்துவத்தின் முன் கதையைப் பார்ப்போம்.
ஒருமுறை விசாலா என்னும் நகரத்தில் நான்கு ரிஷிகள் ஒன்று கூடி ப்ருஹ்மத்தைப்
பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கவலை தோய்ந்த முகத்தோடு தேவ ரிஷியான நாரதர்
அங்கு வந்தார். அவர் எதையோ தேடிக் கொண்டு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். அதைக் கண்ட
ரிஷிகள் வியந்து, “உலகத்தில் சாமான்யர்களுக்குத்தானே கவலை! நீரோ பிரம்மஞானி! உமக்கு
ஏன் கவலை? என்ன நிகழ்ந்தது?” என்று
வினவினார்கள். அப்போது நாரதர் கலியுகத்தின் கொடுமையைக் கூறத் தொடங்கினார்.
“நான்
உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றேன். புஷ்கரம், பிரயாகம், காசி, கோதாவரி, ஹரிக்ஷேத்ரம்,
குருக்ஷேத்ரம், ஸ்ரீரங்கம், சேதுக்கரை... இப்படிப் பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச்
சென்றேன். எங்கேயுமே மனத்தை ஆனந்தப்படுத்தும் தர்மத்தை நான் காணவில்லை. கலியுகம் வளர்ந்து
விட்டபடியால் உண்மை, தவம், தூய்மை, கருணை, வள்ளன்மை ஆகிய எதுவுமே காணப்படவில்லை. மனிதர்கள்
எல்லோரும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்காக எந்தக்
குற்றத்தையும் புரிகிறார்கள். கலியுகத்தில் அவர்களுடைய ஆயுளும், புத்தியும், பாக்கியமும்,
ஆரோக்கியமும் அனைத்துமே குறைந்திருக்கிறது.
“இது
கண்டு வருத்தத்தோடே மதுரா நகரம், பிருந்தாவனம், யமுனை இவை இருக்கும் இடத்திற்கு வந்து
சேர்ந்தேன். இங்குதான் கண்ணன் துவாபர யுகத்தில் விளையாடிய இடங்கள் உள்ளன. இவ்விடத்தில்
யமுனைக் கரையில் ஒரு வியத்தகு காட்சியைக் கண்டேன். “அங்கே ஒரு இளம் பெண் கவலையோடு அமர்ந்திருக்க,
அவளுக்கு அருகில் வயதான இரண்டு ஆண் மக்கள் மயக்கமாகக் கிடந்தார்கள். இளம் பெண் அவர்களை
எழுப்ப முயன்று தோற்றுப் போகிறாள். அவர்கள் எழுந்திருக்கிறார்கள். மறுபடியும் மயங்குகிறார்கள்.
என்னைக் கண்டவுடன் அப்பெண், என்னை அழைத்தாள்.
“நாரதரே! உம்முடைய தரிசனம் கிடைப்பதே அரிதினும் அரிது. எனக்கு அது கிடைத்துள்ளது.
என் கவலையை தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்” என்று வேண்டினாள். “சடக்கென்று அவளைப் புரிந்து கொள்ளாமல்
நானும், ‘பெண்ணே! ஏன் வருத்தத்தோடு இருக்கிறாய்? இங்கு ஏன் வந்தாய்? எதற்காகக் காத்திருக்கிறாய்?
இவர்கள் யார்?’ ” என்று கேட்டேன்.
அப்போது அந்தப் பெண், பதில் கூறத் தொடங்கினாள்:
நன்றி - துக்ளக்