அறிமுகம் (8) – ‘பக்தியும் முக்தியும்’ முன்கதை
“பக்தி
என்று எனக்குப் பெயர். நான் இளமையோடுதான் இருந்தேன். இவர்கள் இருவரும் என்னுடைய பிள்ளைகள்.
வயதானவர்கள் இளம் பெண்ணுக்கு மகன்களாக இருக்க முடியுமா... என்று பார்க்கிறீரா? இவர்களும்
இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். என் கதையைக் கூறுகிறேன் கேளும். பக்தி என்னும் நான்,
திராவிட தேசமாகிய தமிழகத்தில்தான் பிறந்தேன். அடுத்த மாநிலமாகிய கர்நாடகத்தில்தான்
வளர்ந்தேன். அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்தேன். அப்படியே குஜராத் எனப்படும் கூர்ஜர
தேசத்தை அடைந்தேன்”.
‘பக்தி’ என்ற அந்தப் பெண், நாரதரிடம்
கூறிய இந்த கதையைக் கேட்கும்போது, நமக்கெல்லாம் புல்லரிக்கிறது. தமிழகத்துக்குத்தான்
எத்துணை பெருமை! பக்தி பிறந்ததே நம் மாநிலத்தில்தான்! பக்தி தவழ்ந்து, தவழ்ந்து நம்
அனைவரையும் பெருமானை அடைவிக்கப் போகிறாள். அது நம் மாநிலத்துக்கே உண்டான ஏற்றம். மெதுமெதுவே
காலப் போக்கில் ஒவ்வொரு இடமாகச் சென்ற பக்தி, வயதாகிப் போனாள், மூப்படைந்தாள். அவளுடைய
பிள்ளைகள் இருவரும் மூப்படைந்தார்கள். ஒருவன் ஞானம், மற்றொருவன் வைராக்கியம் (பற்றற்ற
தன்மை).
இப்போது இம்மூன்று சொற்களுக்கும் பொருள் கூறுகிறேன். பக்தி, ஞானம்,
வைராக்கியம். பக்தி என்றால் அன்பின் முதிர்ந்த நிலை. நமக்கு ஒரு பொருளைப் பற்றி அறிவு
ஏற்படுமானால், அவ்வறிவே ‘ஞானம்’.
அறிவு மட்டும் இல்லாமல் அப்பொருளினிடத்தில் அன்போடு கூடிய அறிவு ஏற்படுமானால் அதுவேதான்
‘பக்தி’யாக மலருகிறது. உலகத்தில் எந்தப்
பொருளினிடத்திலும் நமக்கு பக்தி ஏற்பட இயலாது. நாம் யாருடைய அருமை, பெருமைகளை நிரம்பத்
தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோமோ, அவரிடத்தில் தானாகவே அன்பு ஏற்படும். அவரைப் பற்றிய
அறிவும், அவரிடத்தில் நமக்கு இருக்கும் அன்பும், மதிப்பும் ஒன்று கூடி உயர்ந்த பக்தியாக
மலருகிறது.
இறைவனைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள முயல்கிறோம். அறிய அறிய, ‘நமக்காக
அவர் எத்தனை செய்திருக்கிறார்! நாம் அவரை அடைய வேண்டும் – ஆனந்தப்பட வேண்டும் – என்பதற்காக,
எத்தனை நன்மைகளைப் புரிந்திருக்கிறார்! என்னைப் படைத்ததும், எனக்கு உடல் கொடுத்ததும்,
அறிவைப் புகட்டியதும், நல்லவற்றைத் தெரிந்து கொள்ள சாஸ்திரங்களைக் கொடுத்ததும், எத்தனையோ
மஹான்களைப் பிறப்பித்து உபதேசிக்க வைத்ததும்... இப்படி எத்தனை நன்மைகளை எனக்கு செய்திருக்கிறார்!
அவருக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?’
என்று நினைத்தால், அவரிடத்தில் அன்பு மிகுந்து விடும். அவரைப் பற்றிய அறிவும், அன்பும்
கலக்குமானால், அதுவே பக்தியாகிறது.
‘ஸ்நேஹ
பூர்வம் அநுத்யானம்
பக்திரிதி அபிதீயதே’
– என்று கூறுவார்கள். அன்புடன் கூடிய தியானம் இருக்குமானால், அது பக்தியாகிறது.
வெறும் அறிவும் பக்தியல்ல; வெறும் நினைவும் பக்தியல்ல. அறிவுக்கு மேலே தியானம். நீடித்த
தியானம். அறிவு என்பது கீழ்நிலை. அன்பு, பக்தி என்பது மேல் நிலை. ஞானம் முதிர்ந்தால்தான்
பக்தியாகிறது. பகவானைப் பற்றிய அறிவும், பக்தியும் ஏற்படுமானால் அவனைத் தவிர்த்த அனைத்துப்
பொருட்களிலேயும், அனைவரிடத்திலேயும் நமக்கு பற்றற்ற தன்மை ஏற்படும்.
பற்றற்ற தன்மையே வைராக்கியம் என்று சொல்லப்படுகிறது. ஆக, பக்தி என்னும்
தாய்க்கு அறிவு, பற்றற்ற தன்மை ஆகிய மகன்கள் இருந்தார்கள். மூவருமே இளமையோடு இருந்தார்கள்.
ஆனால், நாள்பட, நாள்பட அனைவரும் முதுமை அடைந்தார்கள். இறுதியாக, யமுனைக் கரையை அடைந்தார்கள்.
அங்கேயிருந்த பிருந்தாவனம், மதுரா, கோவர்த்தனம் ஆகிய இடங்கள் கண்ணன் விளையாடின இடங்கள்.
அந்தப் புண்ணிய பூமியின் ஸ்பரிசம் ஏற்பட்டவுடன் பக்திக்கு மட்டும் இளமை திரும்பிற்று.
கண்ணனின் இளமை இவளிடம் ஒட்டிக் கொண்டது போலும்!
ஆனால், அறிவும், பற்றற்ற தன்மையும் அப்போதும் இளமையை அடையவில்லை. ஆகையால்தான்
அவர்கள் எழுந்திருக்க இயலாமல் மயங்கிக் கிடந்தார்கள். பக்தி, அவர்களை எழுப்புவதற்கு
முயற்சி செய்து கொண்டிருந்தாள். இதுதான் பக்தி தன்னைப் பற்றி கூறிக் கொண்ட கதை.
இதைக் கேட்ட நாரதர் பதில் கூற முற்பட்டார்: “பெண்ணே! யோசித்துப் பார்த்தாயா?
உன்னையே மீண்டும் இளம் பெண்ணாக மாற்றியிருக்கும் பெருமை, பிருந்தாவனத்தைச் சாரும்.
ப்ருந்தாவனஸ்ய ஸம்யோகாத்
புனஸ்த்வம் தருணீ நவா
தந்யம் ப்ருந்தாவனம் தேந
பக்திர் ந்ருத்யதி யத்ரச
இந்தப் பிருந்தாவனம், பாக்கியம் செய்த பூமி. பக்திச் செழுமை இங்கே நடனமாடுகிறது.
அதனால்தான் நீயே உன் இளமையைத் திரும்பப் பெற்றிருக்கிறாய்” என்றார். இதைக் கேட்ட பக்தி, ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும்
மற்றொரு பக்கத்தில் கவலையோடு, “இறைவன் ஏன் கலியுகத்தைப் படைத்தார்? அந்த யுகத்தின்
வளர்ச்சியால்தானே நான் என்னுடைய இளமையை இழந்து போனேன்! ஏன் பெருமான் இந்தக் கலியுகத்தையே
ஒழித்துவிடக் கூடாது?” என்று கேட்டாள்.
நாரதர் பதில் கூறுகிறார்: “இதற்காக ஏற்கெனவே பரீக்ஷித் ராஜா, கலியுகமே
இல்லாமல் ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்தான். கண்ணன் துவாபர யுகத்தில் வாழ்ந்து,
இவ்வுலகத்தைத் தவிர்த்து, வைகுண்டத்தை அடைந்த உடனே, கலி வந்து சூழ்ந்து கொண்டது. இருள்
மூடிற்று. துவாரகை என்னும் நகரையே கடல் விழுங்கி விட்டது. அன்றிலிருந்தே கலியின் கொடுமை
தொடங்கி விட்டது. ஆனால், வெறுமனே கலியுகத்தின் மீது குற்றம் சுமத்துவதும் நியாயமில்லை.
யத் பலம் நாஸ்தி தபஸா ந யோகேந ஸமாதிநா
தத்பலம் லபதே ஸம்யக் கலௌ கேசவ கீர்த்தனாத்
மற்ற மூன்று யுகங்களிலும் தவம் புரிந்தோ, யோகத்தாலோ, அர்ச்சனம் செய்தோ,
கஷ்டப்பட்ட மார்க்கங்களாலே திருமாலை அடைய வேண்டும். ஆனால், கலியுகத்திலோ கேசவனுடைய
நாம சங்கீர்த்தனத்தினாலேயே – பெருமானுடைய திருநாமங்களைப் பாடுவதினாலேயே – மிக உயர்ந்த
பயனை அடைந்து விடலாம்.
“இப்படி
எளிதான உபாயத்தால், மிக உயர்ந்த பயனைக் கொடுக்கும் கலியுகம் சிறப்பு பெற்றதுதானே? ஆனால்
என் செய்வோம்? அதற்கென்று சில கஷ்டங்கள் உள்ளன. யுகத்தைக் குற்றம் கூறக் கூடாது. ஒவ்வொரு
யுகமும் பெருமானால் சிருஷ்டிக்கப்பட்டவை. ஏன் கலியுகத்தில் நல்லவர்கள் கிடையாதா? மஹான்கள்
இல்லையா? நாம் நல்லபடி வாழ்ந்தோமானால், எந்த யுகமுமே நல்ல யுகம்தான்.
“நம்
உள்ளத்தில் தூய்மை இல்லையானால், கிருதயுகமே தாழ்ந்த யுகம்தான். முதல் யுகமான கிருத
யுகத்தைக் கொண்டாடுகிறோமே, அப்போதுதானே ஹிரண்யகசிபுவும், ஹிரண்யாட்சகனும் பெருமானையே
எதிர்த்தார்கள்!
“திரேதா
யுகத்தை கொண்டாடுகிறோமே! ராவணனும், இந்திரஜித்தும் அப்போதுதானே வாழ்ந்தார்கள்? துவாபர
யுகத்தைக் கொண்டாடினால், அப்போதுதானே கண்ணனை கொல்வதற்கே கம்சன் முயன்றான்.
“ஆக,
எந்த யுகத்திலும் தீயவர்களும் உண்டு, நல்லவர்களும் உண்டு. நான் நல்லவனாக இருக்கிறேனா
என்பதுதான் கேள்வி. ஆகையால் பெண்ணே! கலியுகத்தை நீ குற்றம் சொல்லாதே” என்றார்.
நாரதர் சில வினாடிகளுக்குள் இந்த பக்தியை பற்றின முன் கதையை, தன் யோகப்
பிரபாவத்தாலே தெரிந்து கொண்டார். அவர் கூறுகிறார்: “பெண்ணே! நீ வைகுண்டத்தில் இருந்தாய்.
உன்னை பகவான்தான் பூலோகத்துக்குப் போய் அனைவர் உள்ளத்திலும் பக்தியை விளைத்து, அனைவரையும்
முக்தி அடையச் செய்ய அனுப்பி வைத்தான். உன் கூடவே நிழலைப் போல் முக்தி என்பவளையும்
அனுப்பி வைத்தான். உன் கூட இரண்டு பிள்ளைகளாக (பகவானைப் பற்றிய) அறிவையும், (உலகியல்
விஷயங்களில்) பற் றற்ற தன்மையையும், அதாவது, ஞான வைராக்கியங்களையும் அனுப்பி வைத்தான்.
நீங்கள் நால்வருமாக இந்த பூலோகத்தில் ஆனந்தமாக வளைய வந்தீர்கள்.
“கிருத
யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்... அதுவரை பக்தியும், அவள் கூட நிழல் போன் றிருந்தவளான
முக்தியும் பூலோகத்திலேயேதான் இருந்தார்கள். எல்லோரும் பக்தி அடைந்தார்கள். உடனுக்குடன்
முக்தி பெற்றார்கள். ஆனால், துவாபர யுகத்தின் இறுதியில் முக்திக்கு இடமில்லை என்று
தெரிந்து போக, அவள் பக்தியிடம் கூறினாள் :
“நான் திரும்ப வைகுண்டத்துக்குப் போகிறேன். ஆனால், நீ எப்போது கூப்பிட்டாலும்
வருவேன். கலியுகத்திலும் வருவேன்...’
என்று சொல்லி, திரும்பிச் சென்றாள். கலியுகத்திலும் எவ்வெப்போதெல்லாம் பக்தி அழைக்கிறாளோ,
அப்போதெல்லாம் முக்தி வருவாளாம். இதற்கென்ன பொருள்? நாம் பக்தியோடு இருந்தோமானால்,
அவள் கூப்பிட, முக்தி நம்மை அடையும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”
– ‘இதுதான் உன்னுடைய முன் கதை’ என்ற நாரதர், “உங்களுக்கோ வயதாகிப் போயிற்று. நீங்கள் யமுனைக்
கரையை அடைந்தீர்கள். நீ மட்டும் இளமையைத் திரும்பப் பெற்றாய்.
ந தபோபிர் ந வேதைச்ச ந ஜ்ஞாநே நாபி கர்மணா
ஹரிர் ஹி ஸாத்யதே பக்த்யா ப்ரமாணம் தத்ர கோபிகா:
“தவத்தாலோ,
வேதத்தை ஓதுவதாலோ, வெறும் ஞானத்தாலோ, கர்மங்களைச் செய்வதாலோ பெருமானை அடைந்துவிட முடியாது.
ஹரியை அடைவதற்கு பக்தி ஒன்றே சிறந்த வழி. இதற்கு சாட்சி, பிருந்தாவனத்துக் கோபிகைகள்தான்.
ஆக, பெண்ணே உன் பெருமையைப் புரிந்து கொள்” என்றார் நாரதர்.
அந்தப் பெண்ணும் சந்தோஷப்பட்டாள். ஆனால், அவள் துயரம் தீரவில்லையே!
‘ஞானத்தையும் வைராக்கியத்தையும் எழுப்பிக் கொடும்’ என்று கேட்டாள். நாரதர் முயற்சித்தார். வேதத்தைக் கூறி எழுப்பினார்.
வேதாந்தத்தைப் பாராயணம் செய்து எழுப்பினார். ஏன்? பகவத் கீதை ஸ்லோகங்களைச் சொல்லிக்
கூட, தட்டித் தட்டி எழுப்பினார். என்ன செய்தும் அப்பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை. நாரதர்
கவலையுற்றார். அவரது கவலையைத் தீர்ப்பதற்காக ஆகாயத்தில் அசரீரி வாக்கு ஒன்று ஒலித்தது.
‘ஏததர்தம்
து ஸத்கர்ம ஸுரர்ஷே த்வம் ஸமாசர’
‘நாரதரே!
கவலை வேண்டாம். நீர் ஸத் கர்மத்தைச் செய்யும். நல்ல காரியத்தைச் செய்யும். அப்போதுதான்
இந்த முதியோர்கள் விழித்து எழுவார்கள்’. நாரதருக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாம் இதுகாறும் பகவானின்
நாமத்தைச் சொல்லி, நல்லதுதானே செய்து வருகிறோம். இந்த ஆகாசவாணி, புதியதாக, ‘நல்ல காரியத்தைச்
செய்யும்’ என்று
சொல்வதைப் பார்த்தால், இதுவரை நாம் என்ன செய்து கொண்டு வந்தோம்?’ என்று கவலையுற்றார்.
தேட ஆரம்பித்தார். ஒவ்வொரு புண்ணிய க்ஷேத்ரத்திற்கும், புண்ணிய நதிகளுக்கும்
போய், ‘எது நல்ல காரியம்?’ என்று
விசாரித்தார். அவருக்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை. நல்லவேளை, இறுதியாய் பதரிவனத்துக்குச்
சென்றார். அவ்விடத்தில் ஸனகர், ஸனத்குமாரர், ஸனத் சுஜாதர், ஸனந்தனர் முதலான பிரம்மாவின்
நான்கு மானஸ புத்திரர்கள்... அவர்கள் எப்போதுமே ஐந்தே வயது நிறைந்த யோகிகள்... பற்றற்றவர்கள்!
அவர்களைத் தரிசித்தார்; விழுந்து வணங்கி, தான் செய்ய வேண்டிய நல்ல காரியம் எது? என்று
வினவினார். அப்போது அவர்கள் பதில் கூறினார்கள்.
“நாரதா!
கவலைப்படாதே! உலகத்தில் ஒரே நல்ல காரியம். பாகவத புராணத்தைப் பாராயணம் செய்வதுதான்.
சுகாசாரியாராலே உபதேசிக்கப்பட்டதை, நீங்கள் பாராயணம் செய்தால், அவர்கள் இருவரும் விழித்தெழுவார்கள்” என்று கூறினர்.
நாரதருக்கோ வியப்பு! “கீதையை விட உபநிஷத்துகளை விட, பாகவத புராணத்துக்கு
ஏற்றமா?” என்று வினவினார். நான்கு
குமாரர்களும் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்கள். “பால் ஏற்றமுடையது. பாலுக்குள்
நெய் மறைந்திருக்கிறதே! அந்த நெய்க்குத்தான் இன்னும் ஏற்றம்! கரும்பு இனிப்பானதுதான்!
அந்தக் கரும்புக்குள் சர்க்கரை மறைந்திருக்கிறதே! அது மேலும் இனிப்பானது, அல்லவா?
“அதேபோல்
கீதையும், உபநிஷத்துக்களும் பால் போல, கரும்பு போல! ஆனால், அவற்றுக்குள் இன்னும் மதிப்பானதாகவும்,
இனிப்பானதாகவும் இருக்கக் கூடியதுதான் பாகவத புராணம். ஆனால், வெளியிலிருந்து பார்த்தால்,
அது தெரியாது. உள்நோக்கிப் பார்த்தால்தான் புரியும். “பாகவதத்தைப் பாராயணம் செய்வீராக” என்று அவர்கள் கூற, ‘அதற்கு
எது சிறந்த இடம்?’ என்று நாரதர்
கேட்டார்.
“கங்கா
துவாரத்திலே, கங்கைக் கரையிலே ‘ஆனந்தவனம்’ என்று ஓர் இடம் உள்ளது. அங்கு சென்று பாராயணம் செய்வீராக!’ என்று குமாரர்கள் கூற, நாரதர் புறப்பட்டார்.
நாமும் நாரதரோடு புறப்பட்டு, ஆனந்த வனத்தை அடைந்து ஏழு நாட்களில் பாகவத புராணத்தைக்
கேட்போம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்