த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்
(பூமி கீதங்களால் ராஜ்ய தோஷாதிகளையும், தோஷ (குறைபாடு, கெடுதி) பூயிஷ்டமான (அதிகமான) கலியில் தோஷங்களைப் போக்குவது ஸ்ரீஹரி நமஸ்காரமே என்பதையும் கூறுதல்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பூமி, தன்னைப் பிறர் இடத்தினின்று ஜயித்து, ஸ்வாதீனப்படுத்தி (தன் வசப் படுத்திக்) கொள்வதில் முயற்சியுடைய மன்னவர்களை நோக்கி, தனக்குள் பரிஹஸிக்கின்றது (சிரிக்கிறது). ம்ருத்யுவுக்கு (யமனுக்கு) விளையாட்டு பொம்மைகள் போன்ற இம்மன்னவர்கள், என்னைப் பிறர் வசத்தில் போகாதபடி வென்று, ஸ்வாதீன (தன்வசப்)படுத்திக் கொண்டு பூஜிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள் தந்தை மரணம் அடைந்ததைக் கண்டவர்களாகையால், அவனைப் போல் தாமும் மரணம் அடைவது நிச்சயமென்பதை அறிந்தவர்களாயினும் இம்மன்னவர்கள், இவ்வாறு விரும்புவது வீணே. இவர்கள் இவ்விருப்பத்தினால் நீர்க்குமிழி போல் நிலையற்றதாகிய சரீரத்தில், “இது நிலை நின்றிருப்பது” என்னும் பெரிய விச்வாஸம் (நம்பிக்கை) உண்டாகப் பெறுகிறார்கள். (இப்பூமி, தமக்கே நிலைநின்றிருக்க வேண்டும் என்னும் வீண் விருப்பத்தினால், சரீரம் நீர்க்குமிழி போல் நிலையற்றது என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
இந்த்ரிய ஸுகங்களில் மன விருப்பமுற்று இருப்பானாயின், ராஜ்ய ப்ராப்தி (அரசு கிடைப்பது) நேராதாகையால், முதலில் ஆறு இந்த்ரியங்களையும் ஜயித்து, (அவ்வழியால் தேவதைகளின் அனுக்ரஹத்தைப் பெற்று), கண்டகங்கள் (முள் செடிகள்) போன்ற ராஜன், மந்திரி, மற்றுமுள்ள ஸஹாயர்கள் (துணையாய் இருப்பவர்), பட்டணத்து ஜனங்கள், அவர்களுக்கு ஆப்தர்கள் (நண்பர்கள்), யானைப் பாகர்கள் இவர்களை எல்லாம் ஜயித்து, இவ்வாறு க்ரமமாக (முறையாக) ஸமுத்ரங்களை அரைநாண் மாலையாகவுடைய (ஸமுத்ரங்களால் சூழப்பட்ட) பூமண்டலம் முழுவதையும் ஜயிக்க வேண்டும் என்று மனத்தில் பேராசை கொண்டு, ஸமீபித்திருக்கின்ற ம்ருத்யுவையும் (மரணத்தையும்) ஆலோசிக்கிறதில்லை.
இவ்வாறு ஸமுத்ரங்களால் சூழப்பட்ட பூமண்டலத்தை ஜயித்து, பிறகு ஸமுத்ரத்தினிடையிலுள்ள த்வீபங்களையும் ஜயிக்க விரும்புகிறார்கள். பூமண்டலத்தையும், த்வீபாந்தரங்களையும் ஜயிப்பது, இந்த்ரிய ஜயத்திற்கு (புலன்களை வெல்வதற்கு) எவ்வளவு பயன்? இது நச்வரம் (அழியக்கூடியது) ஆகையால், இந்த்ரிய ஜயத்திற்கு இதைப் பயனாக நினைக்கவும் கூடாது. ஆனால், அதற்குப் பலன் யாதெனில், இந்த்ரிய ஜயத்திற்கு மோக்ஷம் பெறுகையே பயனாம்.
குருகுலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனே! மனுக்களும், மனுபுத்ரர்களும் (தர்ம மார்க்கத்தில் நிலைநின்று, ஒரு மயிரிழையும் (சிறிதும்) பிசகாமல்) என்னை ஆண்டு வந்தும், கடைசியில் என்னை விட்டு, மரணம் அடைந்தார்களே அன்றி, என்னையும் தம்மோடு கூடக் கட்டிக் கொண்டு போகவில்லை. இப்பொழுதும் அவர்களே நிலையாயிருந்து ஆள்கின்றார்களென்பதும் இல்லை. புத்தியில்லாத இம்மூடர்கள், அப்படிப்பட்ட என்னை யுத்தத்தினால் ஸ்வாதீன (தன் வசப்)படுத்திக் கொள்ளப் போகிறார்களாம். இவர்களும் அவர்களைப் போலவே என்னை விட்டுத் தனியே போகப் போகிறார்களன்றி, என்னையும் தம்மோடு கூடக் கொண்டு போகப் போகிறதும் இல்லை; இங்கேயே நிலையாயிருந்து என்னை ஆளப்போகிறதும் இல்லை. இவர்களது விருப்பமெல்லாம் வீணேயன்றி, சிறிதும் உண்மையன்று.
துர்ப்புத்திகள் (கெட்ட புத்தி உடையவர்கள்), ராஜ்யத்தில் மமதா (எனது) அபிமானத்தினால் (என்ற எண்ணத்தால்) மனம் கட்டுண்டு, என்னைத் தாங்களே ஆள வேண்டும் என்று பிள்ளைகளோடும், தந்தைகளோடும் சண்டை செய்கிறார்கள். மன்னவர்கள், இந்தப் பூமி எல்லாம் என்னுடையதே உனக்குக் கிடையாது என்று சொல்லிக்கொண்டு எனக்காக ஒருவர் மேல் ஒருவர் பொறாமையுற்று, ஒருவரையொருவர் வதிக்கின்றார்கள்; கடைசியில் அந்த அபிமானத்துடனே (எண்ணத்துடனே) மரணம் அடைகின்றார்கள் அன்றித் தங்கள் விருப்பம் நிறைவேறப் பெறுகிறதில்லை.
ப்ருது, புரூரவன், காதி, நஹுஷன், பரதன், அர்ஜுனன், மாந்தாதா, ஸகரன், ராமன், கட்வாங்கன், துந்துமாரன், ரகு, த்ருணபிந்து, யயாதி, சர்யாதி, சந்தனு, கயன், பகீரதன், குவலயாச்வன், ககுத்ஸ்தன், நைஷதன் (நளன்), ந்ருகன், ஹிரண்யகசிபு, வ்ருத்ரன், உலகங்களை அழும்படி செய்துகொண்டிருந்த ராவணன், நமுசி, சம்பரன், பெளமன், ஹிரண்யாக்ஷன், தாரகன் இவர்களும், மற்றும் பல அஸுரர்களும், அரசர்களும், பூமண்டலத்தை ஆண்டு வந்தார்கள். அவர்கள் எல்லோரும், எல்லோரையும் ஜயித்தவர்களும், ஒருவராலும் ஜயிக்கப் படாதவர்களுமாயிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் என்னிடத்தில், “இப் பூமண்டலமெல்லாம் என்னுடையது” என்னும் பெரிய மமகாரத்தை (எனது என்ற எண்ணம்) ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மனுஷ்யர்களுக்கு மரணம் அடைகை பொதுவான தர்மமாகையால், அது தமக்கும் உள்ளதாயினும், அதை நினையாமல், தாங்கள் ஸ்திரமாய் (நிலையாய்) இருப்பதாகவும், பூமண்டலத்தையெல்லாம் தாமே ஆள்வதாகவும் அபிமானித்து, சிலகாலம் இப்பூமண்டலத்தை ஆண்டு வந்தார்கள்.
ப்ரபூ! அவர்களும் தங்கள் போக அபிலாஷம் (அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம்) நிறைவேறப் பெறாமலே, காலத்தினால் கதா சேஷர்களாக (கதையே மிகுந்திருக்கும்படி) செய்யப்பட்டார்கள். (“ப்ருது இருந்தான். புரூரவன் இருந்தான். ஸகரன் இருந்தான். பகீரதன் இருந்தான்” என்று கதை சொல்லுகிறோமன்றி, அவர்கள் இப்பொழுது இல்லை அல்லவா?)
திறமையுள்ளவனே! உலகங்களில் புகழைப் பரப்பி, பரலோகம் அடைந்த மஹானுபாவர்களான பெரியோர்களின் இக்கதைகளை, விஷயங்கள் அஸாரங்கள் (ஸாரம் அற்றவை) என்று அறிந்து, அவற்றில் வைராக்யம் (பற்றின்மை) உண்டாகும் பொருட்டு, உனக்கு மொழிந்தேன். இவ்விஷயங்கள் எல்லாம் பேசும் திறமையுடையவர்கள் தங்கள் திறமைக்குப் போக்கு வீடாகப் பேசுபவைகளே அன்றி, பரம புருஷார்த்தத்திற்கு (மோட்சத்திற்கு) உபாயங்கள் ஆக மாட்டாது. (ஆனால், பரம புருஷார்த்தத்திற்கு (மோட்சத்திற்கு) உபாயம் எதுவென்றால், சொல்லுகிறேன்; கேட்பாயாக)
வேதம் முதலியவைகளில் சொன்ன உத்தம ச்லோகனான பகவானுடைய குணங்களை அனுவதித்து (மீண்டும் மீண்டும் சொல்லி), பெரியோர்கள் ஸர்வகாலமும் பாடுவார்கள். அப்பாட்டு, ஸம்ஸாரத்திற்கு ஹேதுவான (காரணமான) பாபங்களைப் போக்கும். ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பரிசுத்தமான பக்தியை விரும்புவானாயின், அப்பெரியோர்கள் பாடுகிற பகவத்குணங்களை தினந்தோறும் ஓயாமல் கேட்கவேண்டும்.
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பகவத் குணங்களை மனனம் செய்யும் மஹானுபாவரே! கலியுகத்திலுள்ள ஜனங்கள் மேன்மேலும் வளர்ந்திருக்கின்ற கலிதோஷங்களை எந்த உபாயத்தினால் நசிப்பித்து (அழித்து) கரையேற முடியுமோ, அந்த உபாயத்தை எனக்கு உள்ளபடி விவரித்துச் சொல்லவேண்டும். மற்றும், யுகங்களையும், யுகதர்மங்களையும், ப்ரளயம் (ஊழி, அழிவு), ஸ்ருஷ்டி (படைப்பு) இவைகளின் பிரிவினைகளையும், ஸர்வாந்தராத்மாவும் (எல்லோரிடத்தும் ஆத்மாவாக உள் இருப்பவனும்), ஸர்வ நியாமகனும் (எல்லோரையும் நியமிப்பவனும்), மஹானுபாவனுமான ஈச்வரனுக்கு சரீரமான காலத்தின் கதியையும், எனக்கு மொழிவீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- க்ருதயுகத்தில், தர்மம் அந்த யுகத்து ஜனங்களால் அனுஷ்டிக்கப்பட்டு, நான்கு பாதங்களுடன் நடையாடி வருகின்றது.
மன்னவனே! பரிபூர்ணமான தர்மத்திற்கு, ஸத்யம் (உண்மை), தயை (கருணை), தவம், தானம் என்னும் இந்நான்கும், நான்கு பாதங்கள்.
க்ருத யுகத்து ஜனங்கள், தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு, ஸந்தோஷம் உற்றிருப்பார்கள்; மற்றும், பிறர் துக்கம் பொறாமல் வருந்தி, அதைப் போக்க வேண்டுமென்னும் விருப்பம் உடையவர்களாய் இருப்பார்கள்; ஸமஸ்த பூதங்களிடத்திலும் மைத்ரி (ஸ்னேஹம், நட்பு) உண்டாகப் பெற்றிருப்பார்கள்; உள்ளிந்த்ரியமான மனத்தையும், வெளியிந்த்ரியங்களான கண், காது, முதலியவைகளையும் அடக்கி ஆள்வார்கள்; குளிர், வெய்யில், ஸுகம், துக்கம் முதலிய த்வந்தவங்களை (இரட்டைகளைப்) பொருள் செய்யாமல் பொறுத்திருப்பார்கள்; ஆத்மானுபவத்தினால் (பரமாத்ம த்யானத்தில்) களித்திருப்பார்கள்; ஜாதி, குணம் முதலிய தாரதம்யங்களை (ஏற்றத்தாழ்வுகளைப்) பாராமல், எல்லாம் பரமாத்ம ஸ்வரூபமே (பகவானது வடிவமே) என்று நினைத்திருப்பார்கள்; பெரும்பாலும் தவம் முதலியவற்றால் சரீரத்தை வருத்துவார்களன்றி, சரீர போகங்களை எதிர்பார்க்க மாட்டார்கள். எல்லோரும் இப்படி இருப்பார்களாயின், மோக்ஷம் பெற்று விடுவார்களாகையால், மற்ற யுகங்களுக்கு ப்ரஸக்தியே (வாய்ப்பே) நேரிடாதே என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். பெரும்பாலும் அப்படியிருப்பார்களன்றி, எல்லோரும் அப்படியே இருப்பார்களென்று சொல்ல முடியாது.
ஆகையால், எல்லாரும் மோக்ஷம் அடைகைக்கு ப்ரஸக்தி (வாய்ப்பு) இல்லாமையால், மற்ற யுகங்களுக்கு ப்ரஸக்தி இல்லையே என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) இடமில்லை. மற்ற யுகங்களைப் போலல்லாமல், க்ருத யுகத்தில் ப்ரஜைகள் பெரும்பாலும் தர்மிஷ்டர்களாய் (அற நெறியில் நிலை பெற்று) இருப்பார்கள்.
பொய் பேசுகை
பிறரை ஹிம்ஸிக்கை
எவ்வளவு பெறினும் ஸந்தோஷம் கொள்ளாமை
நிஷ்காரணமாக (காரணமின்றி) ப்ராணிகளோடு விரோதிக்கை
ஆகிய இந்நான்கும் அதர்மத்தின் பாதங்கள்.
த்ரேதாயுகத்தில், இந்த அதர்மத்தின் பாதங்களால் (கால்களால்) தர்மத்தின் பாதங்களில் ஒவ்வொன்றிலும் நான்கில் ஒரு பாகம் மெல்ல மெல்ல க்ஷீணிக்கின்றது( அழிகிறது). அந்த த்ரேதாயுகத்து ஜனங்கள், கர்மானுஷ்டானத்திலும், தவத்திலும் நிலை நின்றிருப்பார்கள்; பெரும்பாலும் ப்ராணி ஹிம்ஸையில் ஊக்கமுற்று இருக்கமாட்டார்கள்; சப்தாதி விஷயங்களிலும் அவ்வளவாக விருப்பம் கொள்ள மாட்டார்கள்; தர்ம, அர்த்த, காமங்களில் பெரும்பாலும் ஊக்கமுற்றிருப்பார்கள். வைதிக தர்மங்களை இடைவீடின்றி அனுஷ்டிக்கையால், முதிர்ந்திருப்பார்கள். மன்னவனே! ப்ராஹ்மணாதி நான்கு வர்ணங்களிலும், ப்ராஹ்மண வர்ணமே தலையெடுத்து இருக்கும்.
த்வாபரயுகத்தில், பிறரை ஹிம்ஸிக்கை, எவ்வளவு பெறினும் ஸந்துஷ்டி (திருப்தி) இல்லாமை, பொய் பேசுகை, ப்ராணி த்வேஷம் என்னும் அதர்ம லக்ஷணங்களால் (அடையாளங்களால்) தவம், ஸத்யம், தயை, தானம் என்கிற தர்மத்தின் பாதங்களில் ஒவ்வொன்றிலும் பாதி குறைகின்றது. (பொய் பேசுகையால் ஸத்யமும், ஹிம்ஸையினால் தயையும், அஸந்துஷ்டியால் (திருப்தி இன்மையால்) தவமும், ப்ராணி த்வேஷத்தினால் தானமும் குறைகின்றன). அந்த த்வாபர யுகத்து ஜனங்கள் பெரும் புகழுடையவர்களும், பஞ்ச மஹாயஜ்ஞங்களை அனுஷ்டிப்பவர்களும், வேதமோதுவதில் ஊக்கமுற்றவர்களும், பணக்காரர்களும், குடும்பிகளும் (இல்லறத்தில் இருப்பவர்கள்), கர்வமுற்றவர்களுமாய் இருப்பார்கள். மற்ற வர்ணங்களைக் காட்டிலும் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வர்ணங்களிரண்டும் ப்ரதானமாயிருக்கும்.
கலியுகத்தில், தர்மத்தின் பாதங்களாகிய ஸத்யம், தயை, தவம், தானம் என்னும் இவைகளில் ஒவ்வொன்றிலும் நான்கில் ஒரு பாகமே மிகுந்திருக்கும். அதுவும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற அதர்ம லக்ஷணங்களான ஹிம்ஸாதிகளால் க்ஷீணித்து (குறைந்து), கடைசியில் அடியோடு அழிந்து விடும். அந்தக் கலியுகத்தில் ஜனங்கள், லோபமே (பேராசையே) தலையெடுத்திருப்பார்கள். துராசாரம் (கெட்ட நடத்தை) தலை கொண்டிருக்கும். தயையென்கிற பேச்சும் புலப்படாது. ஜனங்கள் நிஷ்காரணமாக (காரணமின்றி) ஒருவரோடொருவர் விரோதித்துக் கொள்வார்கள்; மற்றும், பாக்ய ஹீனர்களாய் (பாக்கியம் அற்று) இருப்பார்கள் . அவர்களுக்கு அர்த்த, காமங்களில் விருப்பம் அளவற்றிருக்கும். சூத்ரர்களும், செம்படவர் முதலிய மற்ற ஹீன (தாழ்ந்த) ஜாதியர்களுமே தலையெடுத்திருப்பார்கள். (யுகங்கள் இப்படி விஷமங்களாய் (வேறு வேறாய்) இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், சொல்லுகிறேன்; கேள்).
ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் குணங்கள் புருஷனிடத்தில் புலப்படுகின்றன. அவை காலத்தினால் தூண்டப்பட்டு, புருஷனுடைய மனத்தில் ஒருகால் வளர்வதும், ஒருகால் குறைவதுமாயிருக்கின்றன. எப்பொழுது மனமும் அதைத் தொடர்ந்த புத்தியும், இந்திரியங்களும், ஸத்வகுணம் தலையெடுத்திருக்குமோ, அப்பொழுது க்ருதயுகமென்று அறிய வேண்டும். அப்பொழுது, ஜனங்களுக்கு ஜ்ஞானத்திலும், தவத்திலும், ருசி உண்டாயிருக்கும்.
சிறந்த மதி உடையவனே! எப்பொழுது காம்ய கர்மங்களில் (பலனை விரும்பிச் செய்யும் கார்யங்களில்) ப்ரஜைகளுக்கு மிகவும் ப்ரீதி உண்டாகின்றதோ, அப்பொழுது ரஜோ குணம் தலையெடுக்கப் பெற்ற த்ரேதாயுகம் என்று தெரிந்து கொள்வாயாக. எப்பொழுது லோபம், அஸந்துஷ்டி (ஸந்தோஷமில்லாமை) கர்வம், தம்பம் (வேண் பெருமை), மத்ஸரம் (பிறருடைய நன்மையில் த்வேஷம்), காம்ய கர்மங்களில் ப்ரீதி இவை ப்ரஜைகளுக்கு உண்டாகின்றனவோ, அப்பொழுது ரஜஸ், தமோ குணங்களின் கார்யங்கள் முக்யமாயிருக்கப் பெற்ற த்வாபரயுகமென்று தெரிந்து கொள்வாயாக.
எப்பொழுது கபடம், பொய் பேசுகை, சோம்பல், நித்ரை, ஹிம்ஸை, மனவருத்தம், கண்ணீர் பெருக்குதல் முதலியவற்றிற்கிடமான சோகம், மோஹம், பயம், தைன்யம் (தாழ்ந்த நிலை) இவை ப்ரஜைகளுக்குத் தலையெடுத்திருக்குமோ, அப்பொழுது தமோ குணத்தையே முக்யமாகவுடைய கலியுகமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
கலியுகத்தில், ஜனங்கள், மந்த மதிகளும் (புத்தி குறைவு), மந்தபாக்யர்களும் (பாக்கியம் இன்மை), மிதமின்றிப் புசிப்பவர்களும், சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் தலையெடுத்தவர்களும், பணமற்றவர்களுமாயிருப்பார்கள். ஸ்த்ரீகள் (பெண்கள்), பரபுருஷனைப் புணரும் தன்மையர்களும், மற்றும் பல கெடு நடத்தைகளுடையவர்களுமாய் இருப்பார்கள்.
கலியுகத்தில் தேசங்களெல்லாம் திருடர்களால் பீடிக்கப்பட்டிருக்கும். வேதங்கள், பாஷண்டர்களால் தூஷிக்க (கெடுக்கப்) பட்டிருக்கும். (பாஷண்டிகள், வேதங்களுக்கு விபரீதமான பொருள்களைக் கூறி, அவற்றைப் பாழ் செய்பவர்கள்). அரசர்கள், ப்ரஜைகளை (மக்களைப்) பீடிப்பதில் (துன்புறுத்துவதில்) கண் வைத்திருப்பார்களன்றி, பாதுகாப்பதில் சிறிதும் கண் வைக்கமாட்டார்கள்.
ப்ராஹ்மணர்கள், சிச்ன உதர போஷணத்தில் ஊக்கமுற்றிருப்பார்கள் (வயிறு நிரம்பப் புசிப்பதும், பெண்களைப் புணர்வதுமாய் இருப்பார்களன்றி, தமக்கு ஏற்பட்ட கடமைகளைச் சிறிதும் அனுஷ்டிக்க மாட்டார்கள்).
வடுக்கள் (ப்ரஹ்மசர்யாச்ரமத்திலிருக்கும் பிள்ளைகள்) தங்கள் ஆச்ரமத்திற்கு ஏற்பட்ட வ்ரதங்களைச் சிறிதும் பாராட்டாமல், சௌச ஹீனர்களுமாய் (தூய்மை அற்றவராய்) இருப்பார்கள். க்ருஹஸ்தர்கள், பிச்சைக்குப் போவார்களன்றி, பிறர்க்குப் பிச்சை இட மாட்டார்கள்.
வான ப்ரஸ்தர்கள், வனத்தைவிட்டு க்ராமத்திலேயே நியதவாஸம் செய்வார்கள் (எப்போதும் வஸிப்பார்கள்). ஸந்யாஸிகள், பணத்தாசை பிடித்து, தவிப்பார்கள். ஸ்த்ரீகள், சரீரம் (உடல்) குள்ளமாயிருக்கப் பெற்று, அமிதமாகப் புசிப்பவர்களும், பல பிள்ளைகள் பெற்றவர்களும், சிறிதும் வெட்கமின்றி எப்பொழுதும் கடோரமாக (கொடுமையாகப்) பேசும் தன்மையர்களும், திருட்டுத்தனம், கபடம் (சூது), பெரிய ஸாஹஸங்கள் இவை உடையவர்களாய் இருப்பார்கள்.
வர்த்தகர்கள் அல்பத்தனமுடையவர்களும், தரித்ரர்களுமாகி, கபடத்தையே முன்னிட்டுக் கொண்டு வியாபாரம் செய்வார்கள். ஜனங்கள், ஆபத்தில்லாத காலத்திலும், வட்டி வாங்கிப் பிழைப்பது முதலிய நிந்தைக்கிடமான வைச்ய வ்ருத்தியை (வைச்ய குல நடத்தையை) நல்லதென்று நினைப்பார்கள்.
ப்ரபு பணமற்றிருப்பானாயின், மற்ற விதங்களில் எல்லோரிலும் மேன்மையுற்றிருப்பினும், வேலைக்காரர்கள் அவனைத் துறந்துவிடுவார்கள். ப்ரபுக்களும், ரோகாதிகளால் (வியாதிகளால்) கார்யம் செய்ய வல்லமை அற்ற வேலைக்காரனைத் துறப்பார்களன்றி, அவனைப் போஷிக்க (காப்பாற்ற) மாட்டார்கள். ஜனங்கள், குல பரம்பரையாக வந்த பாகவத தர்மத்தையும், நெடுநாள் பால் கறந்து முதிர்ந்தமையால் பால் கறவாதிருக்கின்ற பசுக்களையும் துறப்பார்களன்றி, பாதுகாக்க மாட்டார்கள்.
ஜனங்கள், தந்தை, உடன் பிறந்தவர், நண்பர், ஜ்ஞாதிகள் (பங்காளிகள்) இவர்களைத் துறந்து, ஸுரதநிமித்தமான (ஸுரதம் - ஆணும் பெண்ணுமாய்க் கலக்கும் கலவி) ஸ்னேஹத்தையே (நட்பையே) முக்யமாகக் கொண்டிருப்பார்கள். மைத்துனி, மைத்துனன் இவர்களோடு கலந்து ஆலோசிப்பார்களன்றி, தந்தை, உடன் பிறந்தவர் முதலியவர்களோடு கலந்து ஆலோசிக்க மாட்டார்கள். எவ்வளவு இருப்பினும், தம் வயிற்றை நிறைப்பதொழிய, பிறர்க்குச் சிறிதும் இட மனங்கொள்ள மாட்டார்கள். ஸ்த்ரீகளுக்கு உட்பட்டு நடப்பார்களன்றி, தந்தை முதலியவர்களுக்கு உட்பட மாட்டார்கள்.
கலியுகத்து ஜனங்கள் இத்தகையர்களாய் இருப்பார்கள். சூத்ரர்கள், தவம், வித்யை இவைகளால் ஜீவிப்பவர்களாகி, ப்ரதிக்ரஹஞ் செய்வார்கள் (தானம் வாங்குவார்கள்.) தாங்கள் தர்மத்தை உணராதவர்களாயினும், உத்தம ஆஸனத்தின் (உயர்ந்த மேடையின்) மேல் ஏறிக்கொண்டு, தெரிந்தவர்கள் போல் தர்மத்தை உபதேசிப்பார்கள். (தர்மம் தெரியாதவர்கள் தர்மத்தை எப்படி உபதேசிப்பார்களென்றால், தர்மோபதேசம் செய்வது போல் ஏதேனுமொன்றைப் பிதற்றிக் கொண்டிருப்பார்களன்றி, வேறில்லை.) ஜனங்கள் எதிலும் மனம் நிலை நிற்கப் பெறமாட்டார்கள்; ஏதேனுமொன்றைக் குறித்து என்றும் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
மன்னவனே! பூமியில் எவ்வித ஆதாரமும் கிடைக்கப் பெறாமல், துர்ப்பிக்ஷத்தினாலும் (பஞ்சம்), கப்பங் கொடுப்பதினாலும், பீடிக்கப்பட்டிருப்பார்கள்; மற்றும், மழை பெய்யாமையால், “நாம் எப்படி ஜீவிப்போம்?” என்று பயந்து வருந்துவார்கள். கலியுகத்தில் ப்ரஜைகள், ஆடை, ஆஹாரம், பானம், படுக்கை, ஸ்த்ரீ ஸம்போகம் (பெண்களைப் புணருதல்), ஸ்னானம், ஆபரணம் இவையின்றிப் பிசாசம் போன்றிருப்பார்கள்.
கலியில், ஒரு பலகரை மாத்ரத்திற்காகவும் (சிறு காசுக்காகவும்) ஒருவரோடொருவர் விரோதித்துக் கொண்டு, ஸ்னேஹத்தை (நட்பைத்) துறந்து, ப்ரியமான ப்ராணன்களையும் (உயிரையும்) இழப்பார்கள்; ஸ்வல்பத்திற்காக (சிறு சிறு விஷயத்திற்காக) பந்துக்களையும் வதிப்பார்கள். மனுஷ்யர்கள் வ்ருத்தர்களான (வயது முதிர்ந்த தாய் தந்தைகளையும், எல்லா விஷயங்களிலும் ஸமர்த்தர்களான பிள்ளைகளையும், திறமையுள்ள மனைவியையும்) ரக்ஷிக்க மாட்டார்கள்; அற்பத் தனமுடையவர்களாகி, சிச்னம், உதரம் இவற்றின் திருப்தியையே நிறைவேற்றிக் கொள்ள முயல்வார்கள்.
ராஜனே! கலியில் ஜனங்கள் பாஷண்டர்களால் (வேதத்திற்குப் புறம்பான நடத்தை உடையவர்கள்) மனம் கலங்கப் பெற்று, உலகங்களுக்கு மேலான குருவும், மூன்று உலகங்களுக்கும் நாதனான ப்ரஹ்மதேவனால் வணங்கப்பட்ட பாதார விந்தங்களுடையவனும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாதவனுமாகிய, பரம புருஷனைப் பெரும்பாலும் பூஜிக்க மாட்டார்கள்.
மரணம் அடைகிறவனும், ரோகாதிகளால் பீடிக்கப்பட்டவனும், பதிதனும் (தன் நிலையிலிருந்து வீழ்ந்தவனும்), தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களினின்று நழுவினவனும், புத்தி ஸ்வாதீனம் அற்றிருக்கும் தசையிலும் (பித்துப் பிடித்த நிலையிலும்) எவனுடைய நாமதேயத்தை (பெயரை) உச்சரிப்பானாயின், கர்மங்களாகிற ப்ரதிபந்தகங்களெல்லாம் (தடைகள் எல்லாம்) விடுபட்டுச் சிறந்த கதியைப் பெறுவானோ, அத்தகைய பரம புருஷனைக் கலியுகத்து ஜனங்கள் ஆராதிக்க மாட்டார்கள் .
த்யானத்தினால் ஹ்ருதயத்தில் நிறுத்தப்பட்ட ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) புருஷோத்தமன், நிஷித்த (விலக்கப்பட்ட) வஸ்துக்களாலும், நிஷித்த தேசத்தினாலும், சப்தாதி விஷயங்களில் (உலகியல் விஷயங்களில்) தாழ்ந்த மனத்தினாலும், புருஷர்களுக்கு விளைகின்ற கலி தோஷங்களை எல்லாம் போக்கி விடுவான். (அப்பரம புருஷனை எப்படி ஹ்ருதயத்தில் நிலைநிறுத்த முடியும் என்றால், சொல்லுகிறேன்).
பெரியோர்கள் பகவானுடைய ஸ்ரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி), குண, விபூதிகளை (சொத்து, ஆளுமை) நிரூபிக்கும் பொழுது ப்ரீதியுடன் கேட்பது, வாயால் அவனைக் கீர்த்தனம் செய்வது, மனத்தில் தியானிப்பது, பூஜிப்பது, அவனை ஆதரிப்பது, இவைகளால் அப்பரம புருஷனை ஹ்ருதயத்தில் நிலைப்படுத்த வேண்டும். அவ்வாறு நிலைநின்ற அப்பரம புருஷன், பதினாயிரம் ஜன்மங்களால் ஸம்பாதித்த பாபங்களை எல்லாம் போக்கி விடுவான்.
ஸ்வர்ணத்தை அக்னியில் காய்ச்சினால், அதில் ஸம்பந்தித்த (தொடர்பு கொண்ட) அவ்வக்னி, தாம்ரம் முதலிய இதர லோஹங்களின் ஸம்பந்தத்தினால் உண்டான அந்த ஸ்வர்ணத்தின் துர்வர்ணமாகிற (நிறக்குறைவு) தோஷங்களை எல்லாம் போக்குவது போல, எங்கும் நிறைந்த பரம புருஷன், த்யானம் செய்கிறவர்களுடைய மனத்தில் நிலை கொண்டு, அம்மனத்தின் மலங்களை (அழுக்குகளை) எல்லாம் போக்கி விடுவான்.
பரம புருஷன், தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறைகள்) அற்றவனாயினும், உபாஸகர்களை (த்யானம் செய்பவர்களை) அனுக்ரஹிக்கும் (அருளும்) பொருட்டு அவர்களுடைய ஹ்ருதயத்தில் அமைந்திருக்கையில், அவர்களுடைய மனம் எத்தகைய பரிசுத்தியை அடையுமோ, சாஸ்த்ரங்களை ஓதுகையாகிற வித்யாப்யாஸம் (கற்றல்), தவம், ப்ராணாயாமம், அஹிம்ஸை, புண்ய தீர்த்த ஸ்னானம், ஏகாதசி உபவாஸம் முதலிய வ்ரதங்கள், தானம், மந்தர ஜபம் இவைகளால் அத்தகைய பரிசுத்தியை அடையாது. (த்யானத்தினால் ஹ்ருதயத்தில் நிலை கொண்ட பரமபுருஷன், மன மலங்களைப் போக்குவதுபோல, வித்யை முதலியவை எல்லாம் ஒன்று சேரினும், மன மலங்களைப் போக்க வல்லவை ஆக மாட்டாது). ஹ்ருதயத்தில் பரம புருஷனை நிலை பெறச் செய்வதனால், மரணம் அடையும் பொழுது, அவனிடத்தில் நிலை நின்ற மனமுடையவனாகி, (அனாயாஸமாகவே (எளிதாகவே) தேஹத்தை (உடலைத்) துறந்து) அப் பரமபுருஷனைப் பெறுவான்.
ராஜனே! ஆகையால், ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கு நாதனும், சிறந்தழகிய குழற் கற்றை உடையவனுமாகிய பரமபுருஷனை, எல்லா விதத்தினாலும் ஹ்ருதயத்தில் நிலைபெறும்படி செய்வாயாக. ப்ராணிகள் அனைவரும் மரணம் அடையும் தன்மையர்களாகையால், “நிலையாயிருந்து இஹலோக (இந்த உலக) போகங்களையே அனுபவித்துக் கொண்டிருப்போம். நமக்குப் பரமபுருஷ த்யானத்தினால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை” என்று நிச்சிந்தையாய் (கவலை அற்று) இருக்க முடியாது. சப்தாதி விஷயங்களும் நிலையற்றவை. தேஹமும் நிலையற்றது. அந்த விஷய அனுபவத்திற்கும், அவனையே வேண்டியாக வேண்டும். ஆகையால், அனைவரும் நச்வரமான (அழியக்கூடிய) தேஹத்திலும், சப்தாதி விஷயங்களிலும் (உலகியல் விஷயங்களிலும்) விருப்பத்தைத் துறந்து, பரமபுருஷனை த்யானாதிகளால் ஹ்ருதயத்தில் நிலை பெறும்படி செய்யவேண்டும்.
அவன் ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸு ஆகிய ஆறு குணங்கள் அமைந்தவன்); ஈச்வரர்களென்று அபிமானித்துக் கொண்டிருக்கிற ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கும் மேலான ஈச்வரன். அவனுக்கு மேற்பட்ட ஈச்வரன் எவனும் கிடையாது. அவன் ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் (ஹ்ருதயத்தில் ஆத்மாவாய்) இருப்பவன்; அனைவர்க்கும் ஆச்ரயிக்கத் தகுந்தவன். (அவனைப் பற்றவேண்டும் என்றால் இடம் தேடிக் கொண்டு போக வேண்டியது இல்லை).
மன்னவனே! அவன் தன்னை த்யானிப்பவர்களுக்குத் தன்னுடைய ஸாரூப்யத்தை (ஒத்த வடிவத்தைக்) கொடுக்கின்றான். ராஜனே! கலியுகம் பற்பல தோஷங்களுக்கு விளை நிலமாயினும், அதற்கு ஓர் பெரிய குணம் உண்டு. என்ன என்றால், சொல்லுகிறேன்; கேள்.
ஸ்ரீக்ருஷ்ணனை வாயால் சொன்ன மாத்ரத்தில், பற்றெல்லாம் விடப் பெற்று, அப்பரமனைப் பெறுவான். க்ருத யுகத்தில் எங்கும் நிறைந்த மஹானுபாவனாகிய அப்பரம புருஷனை த்யானிப்பவர்களுக்கு எந்தப் புருஷார்த்தம் (மனிதன் விரும்பி அடையும் பொருள்) கை கூடுமோ, த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களால் அவனை ஆராதிப்பவர்க்கு எந்தப் புருஷார்த்தம் (மனிதன் விரும்பி அடையும் பொருள்) கைகூடுமோ, த்வாபர யுகத்தில் புஷ்பாதிகளால் (மலர்களால்) அவனைப் பூஜிப்பவர்களுக்கு எந்தப் புருஷார்த்தம் (மனிதன் விரும்பி அடையும் பொருள்) கைகூடுமோ, அந்தப் புருஷார்த்தம் (மனிதன் விரும்பி அடையும் பொருள்) கலி யுகத்தில் அவனை வாயால் சொன்ன மாத்ரத்தினால், கை கூடும். அவன், தன்னை வாயால் சொன்ன மாத்ரத்தில், அவர்களுடைய பாபங்களைப் போக்கி விடுவான். மற்ற யுகங்களுக்குக் கிடைக்க அரிதான இம்மஹா குணம் கலியுகம் ஒன்றுக்கு மாத்ரமே உள்ளது.
மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.