ஶ்ரீமத் பாகவதம் - 339

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீசுகர் பரீக்ஷித்து மன்னவனுக்குக் கலியுக ப்ராதுர்பாவத்தின் (தோன்றுவதின்) அடையாளங்களைக் கூறுதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! பிறகு, பலிஷ்டமான (சக்தி வாய்ந்த) காலத்தினால், தர்மம், ஸத்யம், சௌசம் (தூய்மை), பொறுமை, தயை, ஆயுள், பலம், நினைவு இவை நாளுக்கு நாள் க்ஷீணிக்க (குறையப், அழியப்) போகின்றன. கலியில், பணமே மனுஷ்யர்களுக்கு ஆபிஜாத்யம் (நற்குலப் பிறப்பு), ஆசாரம், குணம் இவற்றிற்குக் காரணமாம். 

தர்ம வ்யவஸ்தைக்கும், ந்யாய வ்யவஸ்தைக்கும் (அறம், நேர்மை இவற்றிற்கு) தன பலமே காரணமாம். தம்பதிகளாயிருக்கைக்குக் காரணம் அவரவர்களின் அபிருசியே (விருப்பமே) அன்றி, ஆபிஜாத்யாதிகள் (நற்குலப் பிறப்பு) காரணமாக மாட்டாது. க்ரய, விக்ரய (விற்பது, வாங்குவது) வ்யவஹாரத்தில் (செயல்களில்), வஞ்சனையே முக்யமாயிருக்கும் அன்றி, நிஷ்கபடமென்பது (சூது, வாது இன்மை) சிறிதும் புலப்படாது. ஆண்மை, பெண்மைகளின் மேன்மைக்குக் கலியின் திறமையே காரணமாயிருக்குமன்றி, ஆண்மை, பெண்மைகளுக்கு முக்யமான மற்ற குணங்கள் காரணமாக மாட்டாது. 

ப்ராஹ்மண்யத்திற்கு, நூல் மாத்ரமே (யஜ்ஞோப வீதமே) அடையாளமாயிருக்குமன்றி, உபநயனாதி ஸம்ஸ்காரங்களும், மற்ற வித்யாதிகளும் புலப்படவே மாட்டாது. ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களுக்கு, தண்டம், அஜினம் (மான் தோல்) முதலியவைகளே அடையாளமாக இருக்குமன்றி, ஆசார விசேஷம் (நன்னடத்தை) புலப்படாது. ஒரு ஆச்ரமத்தினின்று ஆச்ரமாந்தர (மற்ற ஆச்ரமத்தை) ப்ராப்திக்கும் (அடைவதற்கும்), ஒரு வர்ணத்தினின்று வர்ணாந்தர (வேறு ஜாதியை) ப்ராப்திக்கும் (அடைவதற்கும்), நீச, உத்தம பாவ ப்ராப்திக்கும் (தாழ்ந்த, உயர்ந்த நிலை அடைவதற்கும்), வேஷமே அடையாளமாக  இருக்குமன்றி, ஆசார விசேஷம் (நன்னடத்தை) அடையாளமாகாது. 

தாரித்ரியத்தினால் (ஏழ்மையால்) நியாயம் தோற்றுப் போகும். பலபடப் பேசுகையே (வெட்டிப் பேச்சே) பாண்டித்யத்திற்கு (அறிவுடைமைக்கு) அடையாளமாம். பணமில்லாமையே அஸாது (நல்லவன் அன்று) என்பதற்குக் காரணமாம். ஸாதுவாயிருக்கைக்கு தம்பமே (வீண் பெருமை) காரணமாம். விவாஹத்திற்கு, ஸ்த்ரீ, புருஷர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்கை விதியாசமன்றி, சாஸ்த்ர விதி சிறிதும் புலப்படாது. கேவலம் உடம்பழுக்குப் போகக் குளிக்கையே ஸ்னானமாமன்றி, புண்ய தீர்த்த ஸ்னானமாவது, மந்த்ரானு ஸந்தானமாவது (மந்த்ரம் சொல்வதாவது), தேவதாத்யானமாவது (தேவதைகளை த்யானிப்பதாவது) புலப்படாது. தூரத்திலிருக்கும் ஜலம் தேங்கும் இடமே புண்ய தீர்த்தமாமன்றி, கங்காதிகள் புண்ய தீர்த்தமாக மாட்டாது. 

மயிர்களைச் சுரைக்காமல் (சரைக்காமல்) தரித்துக் கொண்டிருக்கை லாவண்யத்திற்கு (அழகிற்கு) இடமென்று நினைத்து, சாஸ்த்ரங்களில் விதித்தபடி மயிர்களைச் சரைக்க மாட்டார்கள், வயிறு வளர்க்கையே எல்லாப் புருஷார்த்தங்களுமாம். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தைர்யமாக இருப்பவன், ஸத்யவாதி (உண்மை விளம்பி) என்று பெயர் பெறுவானன்றி, பொய் பேசாதவன் ஸத்யவாதி (உண்மை விளம்பி) என்று பெயர் பெற மாட்டான்.

குடும்பத்தைப் போஷிக்கையே ஸாமர்த்யமாகும் அன்றி, தர்மாதி புருஷார்த்தங்களை (மனிதன் விரும்பிப் பெறுபவை) பெறுகை ஸாமர்த்யம் (திறமை) ஆக மாட்டாது. தர்மத்தை அனுஷ்டிக்கை புகழுக்காகவே அன்றி, பரலோகத்திற்காக அன்று. பூமண்டலம் முழுவதிலும் இவ்வாறு ப்ரஜைகள் வழியைத் தவிர்ந்து கெட்டுப் போகையில், நான்கு வர்ணத்தில் எவன் ஸமர்த்தனோ, அவனே மன்னவனாவான். ப்ரஜைகள், அர்த்த, காமங்களில் கண் வைத்த லுப்தர்களும் (பேராசை பிடித்தவர்கள்), மன இரக்கமற்றவர்களும், திருடர், புலி இவற்றின் செயலுடையவர்களுமான மன்னவர்களால் பெண்டிர்களும், பணங்களும் பறியுண்டு, பர்வத வனங்களுக்குப் போய்ச் சேருவார்கள். அங்கு கீரை, கிழங்கு, மாம்ஸம், தேன், பழம், பூ, விதை இவைகளைப் புசித்துக் கொண்டு, மழை இல்லாமையால் அவையும் கிடைக்காமல், துர்ப்பிக்ஷத்தினாலும் (வறட்சி, பஞ்சம்) கப்பம் கொடுக்க முடியாமையாலும் வருந்துவார்கள். மற்றும், குளிர், காற்று, வெய்யில், மழை, பனி இவைகளாலும், பசி தாஹங்களாலும், வியாதிகளாலும், ஆத்யாத்மிகாதி ஸந்தாபங்களாலும் 

  1. ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  

  2. ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), 

  3. ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களாலும்}, 

சிந்தையினாலும் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் பீடித்து (துன்புறுத்தி) நசித்துப் போவார்கள். கலியுகத்தில் இவ்வாறு பீடிக்கப்படுகின்ற அம்மனிதர்களுக்கு, இருபது முப்பது வருஷங்களே உத்தமமான ஆயுஸ்ஸாய் (வயது) இருக்கப் போகின்றது. ப்ராணிகளுடைய தேஹங்கள், கலி தோஷத்தினால் நாளுக்கு நாள் க்ஷீணிக்க (குறையப், அழியப்) போகின்றன. வர்ணாச்ரம ஆசாரங்களுக்குரிய மனிதர்கள், வேத மார்க்கத்தையும், அவற்றில் சொன்ன தர்மத்தையும் அனுஷ்டிக்காமையால், அவை அழியப்போகின்றன. 

தர்மமெல்லாம் பாஷண்ட ப்ராயமாய் (வேதத்தில் விதித்தவைகட்கு நேர் எதிரிடையாய்) விடப் போகின்றது. (அதாவது - கேவலம் ஜம்பத்திற்கு வைதிக வேஷம் பூண்டிருக்கையும், சாஸ்த்ர மர்யாதைகளைக் கடந்து, ஆபாஸ தர்மங்களை அனுஷ்டிக்கையுமே). ராஜர்கள் பெரும்பாலும் திருடர்களாகவே இருப்பார்கள். ப்ரஜைகளும், ராஜர்களைத் தொடர்ந்து, திருடுதல், பொய் பேசுதல், வீணுக்குப் பிறரை ஹிம்ஸித்தல் முதலிய பல பாவச் செயல்களை நடத்துவார்கள். ப்ராஹ்மணாதி வர்ணங்களும் சூத்ர ப்ராயமாகவே இருக்கும். பசுக்கள், உருவத்திலும், பால் கொடுப்பதிலும், ஆடுகளைப் போன்றிருக்கும். மற்ற ஆச்ரமங்களும், க்ருஹஸ்தாச்ரம தர்மமான மைதுன தர்மத்தையே (ஆண் பெண் சேர்க்கையையே) முக்யமாகக் கொண்டிருக்கும். யோனி ஸம்பந்தம் உடையவர்களே பந்துக்களாவார்களன்றி, மற்றவர் பந்துக்களாக மாட்டார்கள். (அதாவது ஜனங்கள் பார்யையைச் சேர்ந்தவர்களையே பந்துக்களாக எடுத்துக் கொள்வார்களன்றி, மற்றவர்களைப் பந்துக்களாகவே நினைக்கமாட்டார்கள்). 

தான்யங்கள் எல்லாம் அதி ஸுக்ஷ்மங்களாயிருக்கும் (சிறிய அளவு உடையவை). வ்ருக்ஷங்கள், உருவத்திலும், நிழலிலும், பலத்திலும், சமீ வ்ருக்ஷங்களை (சிறியனவாக) ஒத்திருக்கும். மேகங்கள், மின்னல் நிறைந்திருக்கும். வீடுகள் சூன்யமாயிருக்கும். (ஜனங்கள் பார்யையைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களை அண்ட ஒட்டார்களாகையால், மற்ற பந்துக்கள் கிடைக்க மாட்டார்கள். தான தர்மங்கள் செய்யார்களாகையால், அதிதிகளும் (விருந்தாளிகளும்), ஆகந்துகர்களும் (வீட்டிற்கு வருபவர்கள்) தலை காட்ட வழியில்லை. இவ்வாறு வருவார், செல்வார் எவரும் இல்லாமையால், வீடுகள் ஜன ஸஞ்சாரமின்றி (மனித நடமாட்டமின்றி) சூன்யமாயிருக்கும். அதர்மம் பலிஷ்டமாக இருக்கையால், ஸந்ததியும் விளங்காது. 

ஒருவர் இருவர் இருப்பினும், வீடுகள் களகளவென்று இராமல், சூன்யமாயிருக்கும் என்பதற்குத் தடையில்லை. இவ்வாறு ஜனங்கள் விஷயத்தில் பொறுக்க முடியாத செயலுடைய கலியுகம், பெரும்பாலும் கடந்து செல்கையில், ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், தர்மத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, சுத்த ஸத்வ மயமான திருமேனியுடன் அவதரிக்கப் போகிறான். 

பரமபுருஷன் மேன்மை உள்ள ப்ரஹ்மாதிகளுக்கும், தாழ்மையான மற்றவர்களுக்கும், ஹிதோபதேசம் செய்பவன் (நன்மையை உபதேசிப்பவன்); சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஸமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாய்த் தரித்து, நியமித்துக் கொண்டிருப்பவன்; ஆனது பற்றியே விஷ்ணு என்னும் பெயர் பெற்றவன், அத்தகையனான அப்பரம புருஷனுடைய பிறவி, ஸாதுக்களின் தர்மத்தைக் காப்பதற்கும், மோக்ஷத்திற்குத் தடையான அவர்களுடைய பாப கர்மங்களைப் போக்குவதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்குமே. 

அப்பகவான், சம்பல க்ராமத்தில் தலைவராகிய விஷ்ணு யசஸ்ஸென்னும் ப்ராஹ்மணருடைய க்ருஹத்தில் கல்கியென்னும் பெயருடன் அவதரிக்கப் போகிறான் . ஜகந்நாதனாகிய அந்தக் கல்கி பகவான், மிகவும் வேகமுள்ள தேவதத்தமென்னும் குதிரையின் மேல் ஏறி, கத்தியினால் துஷ்டர்களை அழிக்க முயன்று, அணிமாதி அஷ்டைச்வர்யங்களும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் – அவையாவன:- 

  1. அணிமா-சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா-பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா-லேசாகச் செய்தல் 

  4. கரிமா-கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம்-எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம்-எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி-நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம்-நினைத்தவிடம் செல்லும் வல்லமை), 

வீர்ய தைர்யாதி குணங்களும் திகழப்பெற்று, நிகரற்ற ஒளி உடையவனாகி, மஹா வேகமுடைய அக்குதிரையினால் பூமி எங்கும் திரிந்து, ராஜ வேஷத்தினால் மறைந்திருக்கிற திருடர்களைக் கோடி கோடியாகக் கொல்லப்போகிறான். இவ்வாறு கல்கி பகவானால் திருடர்களெல்லாரும் வதிக்கப்பட்டு முடிகையில், அக்காலத்திலுள்ள நகரத்து ஜனங்களும், நாட்டு ஜனங்களும் வாஸுதேவனுடைய (ஸமஸ்த வஸ்துக்களிலும் நிறைந்து, அவற்றின் தன்மைகள் சிறிதும் தன்மேல் தீண்டப்பெறாமல் திகழுந்தன்மையனான பரம புருஷனுடைய) அவதாரமான கல்கி பகவானுடைய அங்கராகத்தின் (நறுமணப் பூச்சின்) சிறந்த புண்யகந்தத்தை (நல்ல வாசனையை) உட்கொண்ட நற்காற்று மேல் வீசப் பெறுகையில், அவர்களுடைய மனங்கள் பரிசுத்தங்களாகப் போகின்றன. 

இவ்வாறு மனம் தெளியப் பெற்ற அந்த ப்ரஜைகளின் புத்ர, பௌத்ராதி ரூபமான ப்ரபஞ்சம் (உலகம்) முழுவதும் மிகவும் தர்மிஷ்டமாகி (அறநெறியில்) நீண்டு வளரப்போகின்றது. சுத்த ஸத்வமயமான திருமேனியை உடைய கல்கி ரூபனான வாஸுதேவன் குடிகொண்டிருக்கப் பெற்ற அந்த ப்ரஜைகளின் மனம், ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்றிருக்கும். பாபங்களைப் போக்கும் தன்மையனும், தர்ம ரக்ஷகனுமாகிய (தர்மத்தைக் காப்பவனுமான) கல்கிபகவான் எப்பொழுது அவதரிக்கப் போகிறானோ, அப்பொழுது மீளவும் க்ருதயுகம் ஆரம்பிக்கப் போகின்றது. அப்பொழுது பிறக்கும் ப்ரஜைகள் எல்லாம் ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்றிருக்கும். 

ப்ருஹஸ்பதி புஷ்ய நக்ஷத்ரத்தில் இருக்கும் பொழுது, சந்த்ர, ஸூர்யர்கள் இருவரும் எப்பொழுது ஒரு ராசியில் ப்ரவேசிக்கிறார்களோ, அப்பொழுது க்ருதயுகம் துடங்கும். சந்திர வம்சத்திலும், ஸூர்யவம்சத்திலும், எந்தெந்த ராஜர்கள் உண்டானார்களோ, எவரெவர் இப்பொழுது இருக்கின்றார்களோ, எவரெவர் உண்டாகப் போகிறார்களோ, அவர்கள் எல்லோரையும் உனக்குத் தொகுத்துச் சொன்னேன். 

மன்னவனே! நீ பிறந்தது முதல் நந்தாபிஷேகம் வரையில் இடையிலுள்ள காலம் ஆயிரத்து நூற்றுப் பதினைந்து வருஷங்களாம். (இந்த ஸங்க்யை ஒரு உத்தேசத்தைப் பற்றியது. உண்மையை ஆராய்கையில், பரீக்ஷித்துக்கும், நந்தனுக்கும் இடையிலுள்ள காலம் ஆயிரத்து நானூற்றுத்தொண்ணூற்று எட்டு வருஷங்களாகிறது. ஏனென்றால், பரீக்ஷித்துக்கு ஸமகாலத்திலுள்ள மாகதனான (ஒரு வம்சம்) மார்ஜாரி மன்னவன் முதல் ரிபுஞ்சய மன்னவன் வரையில் இருபது மன்னவர்கள் ஆயிரம் வர்ஷங்கள் பூமியை ஆளப்போகிறார்கள் என்று ஒன்பதாவது ஸ்கந்தத்தில் கூறப்பட்டது. பிறகு, ப்ரத்யோதன மன்னவர்கள் நூற்று முப்பத்தெட்டு வர்ஷங்களும், சிசுநாகர்கள் முன்னூற்றறுபது வர்ஷங்களும் பூமியை ஆளப்போகிறார்கள் என்று இந்த த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆகையால், ஆயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றெட்டு வருஷங்களென்பதே உண்மையாம்.) ஆனால், கலியுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள். 

ஆகாயத்தில் கிழக்கு முகமாக விடப்பட்ட வண்டி போல் சேர்ந்திருக்கின்ற ஏழு நக்ஷத்ரங்கள் ஸப்தரிஷி மண்டலமென்று கூறப்படுகின்றது. வண்டி போன்ற அந்த ஸப்தரிஷி மண்டலத்தில், கொஞ்சம் உயர்ந்த ஏர்க்கால் நுனியின் ஸ்தானத்தில் இருப்பவர் மரீசி. அதற்கு மேல் கொஞ்சம் வளைந்த நுகத்தடி நாட்டும் ஸ்தானத்தில் இருப்பவர் பார்யையாகிய (மனைவியாகிய) அருந்ததியோடு கூடின வஸிஷ்டர். அதற்கு மேல் கொஞ்சம் உயர்ந்த ஏர்க்காலின் அடி ஸ்தானத்தில் இருப்பவர், அங்கிரஸ்ஸு. அதற்கு மேல் நான்கு மூலையில் நான்கு நக்ஷத்ரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஈசான்ய மூலையில் (வட கிழக்கு) இருப்பவர் அத்ரி. அவர்க்கு நேராகத் தென் மூலையில் இருப்பவர், புலஸ்த்யர். அவர்க்கு நேராக மேற்கு மூலையில் இருப்பவர் புலஹர். அவர்க்கு நேராக வடக்கு மூலையில் இருப்பவர், க்ரது). இவ்வாறு ஆகாயத்தில் இருக்கின்ற ஸப்த ரிஷிகள் உதிக்கும் பொழுது, புலஹரென்றும், க்ரது என்றும் ப்ரஸித்தங்களான இரண்டு நக்ஷத்ரங்கள், முதலில் உதிக்கின்றன. அவ்விரண்டு நக்ஷத்ரங்களின் இடையில், அச்வினி முதலிய நக்ஷத்ரங்களில் ஏதேனும் ஒன்று அவற்றோடு கூடவே ராத்ரியில் உதித்துப் புலப்பட்டுக் கொண்டிருக்கும். ஸப்தரிஷி நக்ஷத்ரங்கள் அந்த அச்வினீ முதலிய நக்ஷத்ரங்களில் ஒவ்வொன்றோடு மனுஷ்யக் கணக்கில் நூறு வருஷங்கள் கூடவே இருப்பது வழக்கம். 

உன்னுடைய காலமாகிய இப்பொழுது, அந்த ஸப்தரிஷி நக்ஷத்ரங்கள், மகா நக்ஷத்ரத்தோடு சேர்ந்திருக்கின்றன. (ஸப்தரிஷி நக்ஷத்ரங்களில் முதலில் உதிக்கின்ற புலஹா-க்ரது நக்ஷத்ரங்களோடு மகாநக்ஷத்ரம் எப்பொழுது கலந்து உதிக்க ஆரம்பித்ததோ, அதுவே கலியுகத்தின் ஆரம்ப காலம் என்று உணர்வாயாக). ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸர்வாந்தராத்மாவுமாகிய பரம புருஷனுடைய சுத்த ஸத்வமயமாய் விளங்குகின்ற ஸ்ரீக்ருஷ்ணன் என்னும் திருமேனி, இப்பூலோகத்தை விட்டு எப்பொழுது வைகுண்ட லோகத்தை அடைந்ததோ, அப்பொழுது கலிபுருஷன் இவ்வுலகத்தில் ப்ரவேசித்தான். அதனால், இவ்வுலகத்தில் உள்ள ஜனமெல்லாம் பாபத்தில் மிகவும் விருப்பமுற்றிருக்கின்றது. 

ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனாகிய (கணவனாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், தன்னுடைய பாதார விந்தங்களால் பூமியை எதுவரையில் ஸ்பர்சித்துக் கொண்டிருந்தானோ, அதுவரையில் கலிபுருஷன் பூலோகத்தைப் பரிபவிக்க (துன்புறுத்த) வல்லனாக இல்லை. (யுகஸந்தியிலன்றோ (இரண்டு யுகங்கள் சந்திக்கும் சமயம்) ஸ்ரீக்ருஷ்ணனுடைய அவதாரம். கலியுகம் துடங்கின பின்பும், அந்தப் பகவான் வைகுண்டலோகத்திற்கு எழுந்தருளும் வரை, கலிபுருஷன் தன் சக்தியை வெளியிட வல்லமை அற்றிருந்தான்). 

எப்பொழுது ஆகாசத்தில் ஸப்தரிஷி நக்ஷத்ரங்கள் மகா நக்ஷத்ரத்தோடு கூட ஸஞ்சரிக்கத் தொடங்கினவோ, தேவமானத்தினால் (தேவர்களின் கணக்குப்படி) ஸந்த்யா- ஸந்த்யாம்சங்களுடன் ஆயிரத்து இருநூறு வருஷக் கணக்கு உடைய கலியுகம், அப்பொழுது ஆரம்பித்தது. எப்பொழுது ஸப்தரிஷி நக்ஷத்ரங்கள் மகா நக்ஷத்ரத்தை விட்டுப் பூராட நக்ஷத்ரத்துடன் கலந்து ஸஞ்சரிக்கப் போகின்றனவோ, அப்பொழுது நந்த ராஜ்யம் தொடங்கப் போகின்றது. அதுமுதல் கலியுகம் வ்ருத்தி அடையப் போகின்றது. (கலி தர்மங்கள் வளரப் போகின்றன). என்றைய தினம் ஸ்ரீக்ருஷ்ணன் தன் வைகுண்டலோகத்திற்கு எழுந்தருளினானோ, அன்றைய தினம் அப்பொழுதே கலியுகம் தன் சக்தியை வெளியிடத் தொடங்கிற்று என்று பூர்வ வ்ருத்தாந்தங்களை (முன் சரித்ரங்களை) அறிந்த பெரியோர்கள் சொல்லுகிறார்கள். 

நான்காவதான கலியுகத்தில், தேவமானத்தினால் (தேவர்களின் கணக்குப்படி) ஆயிரம் வர்ஷங்கள் செல்ல, அதன் முடிவில், மீளவும் க்ருத யுகம் தொடங்கப் போகின்றது. அதற்கு என்ன அடையாளம்  என்றால், அப்பொழுது மனுஷ்யர்களின் மனம், ஆத்ம ஸ்வரூபத்தை (ஜீவாத்ம, பரமாத்ம தத்வங்களை) ஆராய்ந்தறிவதில் திறமையுள்ளதாக இருக்கும். இந்த வைவஸ்வத மனுவின் வம்சம், ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான நிலைமையுடன் இருப்பதை இவ்வாறு விவரித்துச் சொன்னேன் அல்லவா? 

இவ்வாறே வைச்யர், சூத்ரர், ப்ராஹ்மணர் ஆகிய இம்மூன்று வர்ணத்தவர்களின் வம்சங்களும், அந்தந்த யுகங்களில் அந்தந்த நிலைமையுடன் இருப்பதை  ஊஹித்து அறிய வேண்டும். இத்தகைய நாம, ரூபங்களை உடையவர்களும், மஹானுபாவர்களுமான பூர்வ புருஷர்கள் அனைவரும், இப்பொழுது கதை மாத்ரத்தினால் மிகுந்திருக்கிறார்கள் அன்றி, அவர்கள் உருவத்துடன் இருப்பதில்லை. ஆயின், அவர்களுடைய கீர்த்தி மாத்ரம் பூமண்டலத்தில் நிலை நின்று இருக்கின்றது. ஆகையால், எவ்வளவு மேன்மையோடு இருப்பினும், இவ்வுலக வாழ்வு நிலையன்று. இதை நிலையானது என்று ப்ரமிக்கலாகாது (மயங்கக் கூடாது). இதில் ஸுகபுத்தி (இன்பம் தர வல்லது என்று) கொண்டு, இதில் மனந்தாழலும் (ஈடுபாடு கொள்வது) ஆகாது. ஆனால், இருக்கும் வரை நல்ல புகழை விளைத்துக் கொள்ள வேண்டும். அப்படியாயின், அவர்கள் போன பின்பும், அவர்களுடைய புகழ் மாறாது விளங்கிக் கொண்டிருக்கும். 

இம்மன்னவர்களில் பலரும், பகவத் பக்தர்களாகையால், அவர்களுடைய சரித்ரங்களைச் சொல்லுவதும், கேட்பதும் புண்யமாம். ஆகையால், இச்சரித்ரங்களில் வீணாக ஏன் பொழுது போக்க வேண்டும் என்று நினைக்கலாகாது. சந்தனுவின் ப்ராதாவாகிய (சகோதரனான) தேவாபியென்கிற சந்த்ர வம்சத்தரசனும், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த மருவென்கிற ஸூர்ய வம்சத்தரசனும் ஆகிய இவ்விருவரும் மிகுந்த யோக பலத்துடன் கூடி, இப்பொழுது கலாபமென்னும் க்ராமத்தில் வஸித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கலியுகம் முடிந்த பின்பு, க்ருதயுகத்தின் ஆரம்பத்தில் அம்மன்னவர்கள் இருவரும் வாஸுதேவனால் வர்ணாச்ரம தர்மங்களெல்லாம் உபதேசிக்கப் பெற்று, இவ்வுலகத்தில் வந்து, வர்ணாச்ரம தர்மத்தை முன் போல் நடத்தப் போகிறார்கள். க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் இப்புவியில் (இவ்வுலகில்) ப்ராணிகளிடத்தில் இவ்வண்ணமாகவே இருக்குமன்றி, இந்நிலைமைக்கு மாறுபாடில்லை. (இப்பொழுது க்ருத, த்ரேதாதி சதுர்யுகத்தின் (நான்கு யுகங்களின்) தர்ம நிலைமை எவ்வாறு  இருக்கும் என்று நீ கேட்டு உணர்ந்தனையோ, மேல் வரப்போகிற ஒவ்வொரு சதுர்யுகத்தின் (நான்கு யுகங்களின்) தர்ம நிலைமையும் இவ்வாறே இருக்குமென்று உணர்வாயாக). (த்ரேதா, த்வாராயுகங்களின் நிலைமையை இங்கு நிரூபிக்கவில்லை ஆகையால், இவ்வாறே க்ருத, த்ரேதாதி சதுர்யுகத்தின் (நான்கு யுகங்களின்) நிலைமையும் இருக்கும் என்பது சரியன்று. ஆயினும், ஆத்யந்த (முதல் மற்றும் முடிவு) யுகங்களின் நிலைமை நிரூபித்தமையால், இடையிலுள்ள மற்ற இரண்டு யுகங்களின் நிலைமையும் நிரூபிக்கப்பட்டாற் போலவே என்னும் அபிப்ராயத்தினால் இவ்வாறு கூறப்பட்டது). 

ராஜனே! இப்பொழுது நான் நிரூபித்துச் சொன்ன மன்னவர்களும், மற்றவர்களும், இந்தப் பூமியிடத்தில் மமதா புத்தியை (என்னுடையது என்னும் அபிமானத்தைப்) பண்ணி, கடைசியில் (அந்தப் பூமியின் அனுபவத்திற்கு ஹேதுவான (காரணமான) புண்யத்தின் முடிவில், அந்த மமதையோடு கூடவே) மரணம் அடைந்தார்கள். ராஜனென்னும் பேருடைய சரீரத்திற்கும், கடைசியில் புழுவென்றாவது, விஷ்டை (மலம்) என்றாவது, பஸ்மம் (சாம்பல்) என்றாவது, ஏதேனும் ஒரு பெயர் உண்டாகும். (ராஜனாயிருப்பவன் மரணம் அடைகையில், அந்த ராஜ சரீரத்தை அக்னி ஸம்ஸ்காராதிகள் செய்யாமல் பூமியில் எறிந்து விடுவார்களாயின், நரி முதலிய ஜந்துக்களும் பக்ஷிக்காது விடுமாயின், அது புழுத்துப்போம். அப்பொழுது ராஜனென்னும் பெயர் பெற்றிருந்த அந்தச் சரீரமே, புழு என்னும் பெயர் பெறும். 

நரி, கழுகு முதலிய ஜந்துக்கள் பக்ஷிக்குமாயின், அப்பொழுது விஷ்டை (மலம்) என்னும் பெயர் பெறும். அக்னி ஸம்ஸ்காரம் செய்வார்களாயின், பஸ்மம் (சாம்பல்) என்னும் பெயர் பெறும். ஆகையால், ராஜ சரீரத்திற்கும், புழு, விஷ்டை(மலம்), பஸ்மம் (சாம்பல்) என்னும் பெயர்களில் ஏதேனும் ஒரு பெயர் நேருமேயன்றி, நேராமற் போகாது) அத்தகைய தேஹத்திற்காக நரகத்திற்கு இடமான பூத த்ரோஹத்தை (பிராணிகளுக்குக் கெடுதியை) நடத்துகிற அம்மன்னவன், தனக்கு ஹிதமான (நன்மையான) புருஷார்த்தம் இன்னது என்பதை எவ்வாறு அறிந்தவனாவான்? (அவன் தனக்கு ஹிதம் இன்னதென்று தெரிந்து கொண்டிருப்பானாயின், அவ்வாறு ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்வானா? செய்ய மாட்டான். த்ரோஹஞ் செய்கிறவன், ஹிதத்தை  (நன்மையைச்) சிறிதும் அறிந்தவனல்லன் என்பதில் ஸந்தேஹமே இல்லை.) 

“இந்தப் பூமண்டலம் முழுவதும் என்னுடைய பூர்வ புருஷர்களின் ஆதீனத்தில் (ஆளுகைக்கு உட்பட்டு) இருந்தது. அவ்வாறே இப்பொழுது என்னுடைய ஆதீனத்தில் இருக்கின்றது. இது என் பிள்ளைக்கும், என் பேரனுக்கும், மற்றும் என் வம்சத்தில் பிறந்த மற்றவர்களுக்குமே எப்படி அதீனமாயிருக்கும்? அதற்கு நான் என்ன உபாயம் (முயற்சி)  செய்யவேண்டும்? என்ன உபாயம் செய்தால் இந்தப் பூமி என் வம்சத்தவர்களை விட்டு எப்பொழுதும் மாறாதிருக்கும்?” என்று இதில் மமதா (எனது என்ற) புத்தியை நெடுந்தூரம் வளர்த்திக் கொள்கிறான். “ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவன்” என்னும் அறிவில்லாத மூடர்கள் பலரும், அக்னி, ஜலம், பூமி இவை முதலிய பஞ்ச பூதங்களின் பரிணாமமான தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து (மயங்கி), பூமியை என்னுடையது என்று அபிமானித்து (நினைத்து), நானென்று (ஆத்மாவென்று) பாவித்த தேஹத்தையும், என்னுடையது என்று ப்ரமித்த (மயங்கிய) பூமியையும் ஆகிய அவ்விரண்டையும் துறந்து, கடைசியில் (ப்ராரப்த கர்மாவஸானத்தில் – இப்பொழுது பலன் தர ஆரம்பித்த புண்ய, பாப வினைகளின் முடிவில்) மரணம் அடைந்தார்கள். 

ராஜனே! எந்தெந்த ராஜர்கள் இப்பூமியைப் பௌருஷத்துடன் (ஆண்மையுடன்) ஆண்டு வந்தார்களோ, அவர்கள் எல்லோரும் காலத்தினால் முடிக்கப் பட்டார்கள்; கதைகளில், தாங்கள் நடையாடும்படி கதையே உருவமாக இருக்கப் பெற்றவர்களாகவும் செய்யப்பட்டார்கள். 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை