த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - முதல் அத்தியாயம்
(மேல் வரப்போகிற ஸோம வம்ச பரம்பரையைக் கூறுதல்.)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- யது வம்சத்திற்கு அலங்காரமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸ்ரீவைகுண்ட லோகம் போகையில், கீழ்ச் சொன்ன யது வம்ச ராஜர்களுக்குள் யாருடைய வம்ச பரம்பரையாக வந்ததோ, மாமுனியே! அதை எனக்குச் சொல்வீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பூருவின் வம்சத்தில் உபரிசரவஸுவும், அவன் பிள்ளை ப்ருஹத்ரதனும், அவன் பிள்ளை ஜராஸந்தனும், அவன் பிள்ளை ஸஹதேவனும், அவன் பிள்ளை மார்ஜாரியும், அவனுக்கு ச்ருதச்ரவன் முதலாகப் புரஞ்ஜயனீறாக இருபது பிள்ளைகளும் பிறக்கப் போகிறார்கள் என்று முன்னமே (ஒன்பதாவது ஸ்கந்தத்தில்) மொழிந்தேன்.
அந்த ப்ருஹத்ரதனுடைய வம்சத்தில் புரஞ்சயன் என்பவன் கடைசியில் பிறக்கப் போகிறான். அவனுடைய மந்திரியாகிய சுனகனென்பவன் தன் ப்ரபுவாகிய புரஞ்சயனைக் கொன்று, அவனது புதல்வனான ப்ரத்யோதனென்பவனை அரசனாக்கப் போகிறான். அவன் பிள்ளை அலகனென்பவன். அவன் பிள்ளை விசாகயூபன். அவன் பிள்ளை ராஜகன். அவன் பிள்ளை நந்திவர்த்தனன். அவனுக்கு ப்ரத்யோதனர் என்னும் பெயருடைய ஐந்து பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். இம்மன்னவர்கள் நூற்று முப்பத்தெட்டு ஸம்வத்ஸரங்கள் பூமியைப் பாதுகாக்கப் போகிறார்கள். அவர் பிள்ளை சிசுநாகன். அவன் பிள்ளை காகவாணன். அவன் பிள்ளை க்ஷேமதாமன். அவன் பிள்ளை க்ஷேத்ரஜ்ஞன். அவன் பிள்ளை விதிஸாரன். அவன் பிள்ளை அஜாதசத்ரு. அவன் பிள்ளை தர்ப்பகன். அவன் பிள்ளைஅஜயன். அவன் பிள்ளை நந்திவர்த்தனன். அவன் பிள்ளை மஹாநந்தி.
கௌரவ மன்னவர்களில் சிறந்தவனே! சிசுநாகன் முதலிய இம்மன்னவர்கள் கலியுகத்தில் முன்னூற்று அறுபது ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். மஹாநந்தியின் பிள்ளை மஹாபத்மபதி. அவன் சூத்ர ஸ்த்ரீ (பெண்) கர்ப்பத்தில் பிறந்தவன்; மஹாபலமுடையவன்; மிகவும் ப்ரஸித்தி பெற்றவன். அவனுக்கு நந்தனென்று மற்றொரு பெயரும் உண்டு. அவன் க்ஷத்ரிய குலத்தை எல்லாம் பாழாக்கப் போகிறான். (க்ஷத்ரிய குலம் முழுவதும் அவனோடு அற்றுப் போய் விடப் போகிறது)
அந்த மஹாபத்மபதி என்னும் நந்தன், யாவராலும் தாண்டப்படாத சாஸனம் (ஆளுமை) உடையவனாகி, இரண்டாவது பரசுராமன் போல் ஏகச் சத்ராதிபத்யத்துடன் (தன்னெதிரில் குடை நிழலில் வருகிறவன் மற்றொருவனும் இல்லாதபடி) பூமண்டலத்தை ஆளப் போகிறான்.
அவனுக்கு ஸுமால்யன் முதலிய எட்டுப் பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். இவர்கள் மன்னவர்களாய் நூறு ஸம்வத்ஸரங்கள் இப்பூமியை ஆளப் போகிறார்கள். அவர்கள் நந்தர்கள் என்று ப்ரஸித்தி பெறுவார்கள். நந்தனது பிள்ளைகளான ஸுமால்யன் முதலிய ஒன்பதின்மர்களும் ஒரு ப்ராஹ்மணனை நம்பியிருக்கையில், விச்வாஸ காதகனான (நம்பிக்கை த்ரோகியான) அவ்வந்தணன், தன்னை நம்பியிருக்கிற அந்த நவநந்தர்களையும் அவர்களது தகப்பனையும் நாசம் செய்யப் போகிறான். அவர்கள் முடிகையில், கலியில் மௌர்யர் என்னும் பெயருடைய சில மன்னவர்கள் பூமியை ஆளப் போகிறார்கள். அந்த ப்ராஹ்மணனே முதலில் நந்தர்களை முடித்து, மௌர்யர்களில் முதன்மையான சந்திரகுப்தன் என்பவனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப் போகிறான். அவன் பிள்ளை வாரிஸாரன். அவன் பிள்ளை அசோகவர்த்தனன். அவன் பிள்ளை ஸுயசன். அவன் பிள்ளை ஸங்கதன். அவன் பிள்ளை சாலிசூகன். அவன் பிள்ளை ஸோமசர்மன். அவன் பிள்ளை சததன்வன். அவன் பிள்ளை ப்ருஹத்ரதன்.
கௌரவ ச்ரேஷ்டனே! இப்பதின்மரும் மெளர்யர் என்று ப்ரஸித்தி பெற்றவர்கள். இவர்கள் கலியில் நூற்று முப்பத்தேழு ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். மௌர்யர்களில் கடைசியான ப்ருஹத்ரதனுடைய ஸேனாபதியாகிய புஷ்யமித்ரனென்பவன், தன் ப்ரபுவாகிய ப்ருஹத்ரதனைக் கொன்று, ராஜ்யம் ஆளப் போகிறான். அவன் பிள்ளை அக்னிமித்ரன். அவன் பிள்ளை ஸுஜ்யேஷ்டன். அவன் பிள்ளை ஸுமித்ரன். அவன் பிள்ளை பத்ரகன். அவன் பிள்ளை புலிந்தன். அவன் பிள்ளை கோஷன். அவன் பிள்ளை வஜ்ரமித்ரன். அவன் பிள்ளை பாகவதன். அவன் பிள்ளை தேவபூதி. குருகுலாலங்காரனே! இப்பதின்மரும் சுங்கர் என்னும் பெயருடையவர்கள். இவர்கள் இருநூற்றுப்பன்னிரண்டு வர்ஷங்கள் பூமியை ஆளப் போகிறார்கள்.
மன்னவனே! பிறகு இந்த பூமி குண ஹீனர்களான (நற்குணம் அற்றவர்களான) காண்வர் என்னும் மன்னவர்களை அடையப் போகின்றது. அதெப்படி என்றால், சொல்லுகிறேன்.
சுங்கர்களில் கடைசியான தேவபூதி, ஸ்த்ரீலோலனாக (பெண் பித்து பிடித்தவனாக) இருக்கையில், அவனுடைய மந்திரியும் காண்வனுமாகிய வஸுதேவன் என்பவன் அவனைக் கொன்று, மிகுந்த மதியுடைய அவ்வஸுதேவன், தானே ராஜ்யம் செய்யப் போகிறான். அவன் பிள்ளை பூமித்ரன். அவன் பிள்ளை நாராயணன். அவன் பிள்ளை ஸுசர்மன். இந்த வஸுதேவாதிகள் காண்வர் என்றும், காண்வாயனர் என்றும் ப்ரஸித்தி பெற்றவர்கள். இவர்கள் கலியுகத்தில் முந்நூற்று நாற்பத்தைந்து ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். காண்வர்களில் கடைசியான ஸுசர்மனை அவன் ப்ருத்யனாகிய பலீகனென்னும் சூத்ரன் கொன்று, சில காலம் பூமியை ஆளப் போகிறான். அவன் அந்த்ய ஜாதியில் பிறந்தவன்; துர்ப்புத்திகளில் (கெட்ட புத்தி கொண்டவர்களில்) முதன்மையானவன். பிறகு, அவன் ப்ராதாவான க்ருஷ்ணன் என்பவன் பூமியை ஆளப் போகிறான். அவன் பிள்ளை ஸ்ரீசாந்தகர்ணன். அவன் பிள்ளை பெளர்ணமாஸன். அவன் பிள்ளை லம்போதரன்.
மன்னவனே! அவன் பிள்ளை சிவிலகன். அவன் பிள்ளை மேகஸ்வாதி. அவன் பிள்ளை அடமானன். அவன் பிள்ளை அனிஷ்டகர்மன். அவன் பிள்ளை ஹாலேயன். அவன் பிள்ளை தலகன். அவன் பிள்ளை புரீஷபானு. அவன் பிள்ளை ஸுநந்தனன். அவன் பிள்ளை சகோரன்.
சத்ருக்களை அடக்குந்திறமை உடையவனே! அவன் பிள்ளை சிவஸ்வாதி. அவனுக்குக் கோமதியும், அவனுக்குப் புரீமானும், அவனுக்கு மேதசிரனும், அவனுக்கு சிவஸ்கந்தனும், அவனுக்கு யஜ்ஞஸ்ரீயும், அவனுக்கு விஜயனும், அவனுக்குச் சந்த்ரவிஜ்ஞனும், அவனுக்கு ஸலோமதியும் பிறக்கப்போகிறார்கள்.
குருகுலாலங்காரனே! வலீகர் என்று ப்ரஸித்தர்களான இவ்விருபத்தைந்து மன்னவர்களும் நாநூற்றெண்பத்தாறு ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். ஆபீர ஜாதியில் பிறந்த ஆவப்ருத்யர் என்கிற ஏழு மன்னவர்களும், குர்த்தபிகள் என்கிற பத்து மன்னவர்களும், கங்கர்கள் என்கிற பதினாறு மன்னவர்களும் பூமியை ஆளப் போகிறார்கள். இவர்கள் காமத்தில் (பெண்ணாசையில்) கண் வைத்திருப்பார்கள். பிறகு யவனர்களில் எட்டு மன்னவர்களும், துலுக்கர்களில் பதினான்கு மன்னவர்களும், முருண்டரென்று ப்ரஸித்தி பெற்ற பதின்மூன்று மன்னவர்களும், மௌனர்கள் என்கிற பதினொரு மன்னவர்களும் பூமியை ஆளப் போகிறார்கள்.
மௌனர் தவிர மற்ற இம்மன்னவர்கள் ஆயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். மௌனர்கள் பதினொருவரும் முன்னூறு ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். அவர்கள் மரணம் அடைகையில், பிறகு கிலிங்கிலை என்னும் பட்டணத்தில் பூதநந்தன், யவம்ஹரன், சிசுநந்தன், அவன் ப்ராதாவான யசோநந்தி ப்ரவீரகன் (ப்ரநீரகன் என்று பாடாந்தரம்.) என்னும் இம்மன்னவர்கள் நூற்றாறு ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். அந்த பூதநந்தன் முதலியவர்க்கு பாஹ்லிகர் என்னும் பெயருடைய பதின்மூன்று பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். பிறகு புஷ்யமித்ரன் என்பவன் ராஜனாகப் போகிறான். இவன் பிள்ளை துர்மித்ரன். அந்த்ர தேசாதிபதிகள் எழுவரும், கோஸல தேசாதிபதிகள் எழுவரும், வைதூர தேசாதிபதிகள் சிலரும், நிஷத தேசாதிபதிகள் சிலரும், அந்த பாஹ்லிகரிடத்தினின்றுமே பிறக்கப் போகிறார்கள்.
இவர்கள் எல்லாரும் ஒரேகாலத்தில் அந்தராதி தேசங்களை ஆளப் போகிறார்கள். பிறகு, மாகத தேசங்களுக்கு விஸ்வஸ்பூர்ஜி என்பவன் ராஜனாகப் போகிறான். அவன் முன் சொன்ன புரஞ்சயனைக் காட்டிலும் மிகவும் ப்ரஸித்தனாகி, ப்ராஹ்மணாதி வர்ணங்களைப் புலிந்தர், யதுக்கள், மத்ரகர் என்னும் பெயர் பெறும்படி செய்து, ம்லேச்ச ப்ராயர்களாக்கப் போகிறான்.
மஹாவீர்யமுடைய அம்மன்னவன் க்ஷத்ரிய வர்ணத்தை வேறோடறுத்து, பத்மவதி என்னும் பட்டணத்தில் வாஸம் செய்து கொண்டு, கங்கா த்வாரம் முதல் ப்ரயாகம் வரையிலுள்ள பூமியை ஆளப் போகிறான். ஸௌராஷ்ட்ரம், அவந்தி, அபீரம், அர்ப்புதம், மாளவம் என்னும் இத்தேசங்களிலுள்ள ப்ராஹ்மணர்கள் உபநயனாதி ஸம்ஸ்காரங்களின்றி, சூத்ர ப்ராயர்களாக இருக்கப் போகிறார்கள்.
மன்னவனே! பெரும்பாலும் கீழ் ஜாதியினரே அரசர்களாக இருப்பார்கள். ஸிந்து நதிக்கரையிலுள்ள தேசங்களையும், சந்த்ரபாகா நதிக்கரையிலுள்ள தேசங்களையும், குந்தி தேசங்களையும், காஷ்மீர மண்டலத்தையும், அவர்களும், ம்லேச்சர்களுமே ஆளப் போகிறார்கள். அங்குள்ள ப்ராஹ்மணர்கள் உபநயனாதி ஸம்ஸ்காரங்களின்றி, ப்ரஹ்ம தேஜஸ்ஸென்பது சிறிதும் இல்லாமல், கேவலமாக இருக்கப் போகிறார்கள்.
ராஜனே! ம்லேச்ச ப்ராயர்களான இம்மன்னவர்கள் அனைவரும், ஒரே காலத்தில் பூமியை ஆளப் போகிறார்கள். இவர்கள் அதர்மத்திலும், பொய் பேசுவதிலும் நிலை நின்றிருப்பார்கள்; கொடுப்பது கொஞ்சமாயினும் பெரும் கோபம் செய்வார்கள்; ஸ்த்ரீகளையும், இளைஞர்களையும், ப்ராஹ்மணாதி மூன்று வர்ணத்தவர்களையும், வதிக்கும் தன்மையராயிருப்பார்கள்; பிறருடைய தாரங்களையும் (மனைவியையும்), தனங்களையும் (செல்வத்தையும்), மிக்க ஆவலுடன் பறிப்பார்கள்;
க்ஷணம் ஸந்தோஷமும், க்ஷணம் கோபமுமாயிருப்பார்கள்; அல்ப (குறைந்த) பலர்களும் (பலம் உள்ளவர்களாயும்) அல்ப ஆயுஸ்ஸுக்களும் (குறைந்த வாழ்நாள் உடையவர்களாயும்) ஆகி இருப்பார்கள். மற்றும், இவர்கள் கர்ப்பாதானாதி (கருத்தரிப்பதற்காக செய்யப்படும் சுத்தி சடங்கு) ஸம்ஸ்காரங்கள் இன்றி நன்னடைத்தையும் இன்றி, ரஜோ குணமும், தமோ குணமும் நிரம்பப் பெற்று மிலேச்சர்களாக இருக்கச் செய்தேயும், சிறந்த ராஜர்களைப் போல் வேஷம் பூண்டு, ப்ரஜைகளை (மக்களைப்) பீடித்துத் (துன்புறுத்திக்) கொண்டிருப்பார்கள். அந்த ம்லேச்சர்களின் ஆள்கைக்கு உட்பட்ட அத்தேசங்களிலுள்ளவர் அவர்களுடைய ஸ்வபாவமும், ஆசாரமும், பேச்சும் உடையவர்களாகி, ஒருவரையொருவர் பீடித்து, ராஜர்களாலும் பீடிக்கப்பட்டு, நாசம் அடையப் போகிறார்கள்.
முதல் அத்தியாயம் முற்றிற்று.