ஶ்ரீமத் பாகவதம் - 337

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முப்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ண நிர்யாணமும் (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்தலும்), வஸுதேவாதிகள் பரலோகம் போதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, (தாருகன் போன பின்பு) ப்ரஹ்மதேவனும், பத்னியாகிய பார்வதியோடு ருத்ரனும், மஹேந்த்ரன் முதலிய தேவதைகளும், மரீசி முதலிய ப்ரஜாபதிகளோடு கூடிய முனிவர்களும், பித்ரு தேவதைகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், மஹோரகர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், கின்னரர்களும், அப்ஸரஸ்த்ரீகளும், கருடலோகத்திலுள்ள பக்ஷிகளும், மைத்ரேயர் முதலிய ப்ராஹ்மணர்களும், பகவானுடைய நிர்யாணத்தை (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்தலைப்) பார்க்க விரும்பி, மிகுந்த ஆவலுடையவர்களாகி, அவனுடைய செயல்களையும், பிறவிகளையும் பாடுவதும், பிதற்றுவதுமாகி, அவ்விடம் வந்தார்கள். அவர்கள் விமானங்களின் வரிசைகளால் ஆகாயத்தை நிரம்பச் செய்து மிகுந்த பக்தியுடன் பூமழைகளைப் பொழிந்தார்கள். 

ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானும் தன் விபூதிகளாகிய (சொத்துக்களாகிய) ப்ரஹ்மாதிகளைப் பார்த்துத் தன்னுடைய அவதாரத்திற்குக் காரணமாகிய தன்னிடத்தில் தன்னை ஒருமித்ததாக த்யானித்துத் தாமரையிதழ் போன்ற தன் கண்களை மூடினான். அம்மஹானுபாவன், தாரணைக்கும், த்யானத்திற்கும் சுபாச்ரயமும் (நன்மை செய்வதும் த்யானத்திற்கு ஏற்றதும்), உலகங்கட்கெல்லாம் அழகியதுமான தன் திருமேனியை அக்னி ஸந்துக்ஷணம் செய்வதான (அக்கினியை வளர்த்தி எரியச் செய்வதான) யோகதாரணையால் தஹிக்காமல், அத்திருமேனியோடு கூடவே தன் வாஸஸ்தானமாகிய வைகுண்ட லோகத்திற்கு ஸுகமாக எழுந்தருளினான். அப்பொழுது ஆகாயத்தில் தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின. ஆகாயத்தினின்று பூமழைகளும் பொழிந்தன. ஸத்யம், தர்மம், தைர்யம், புகழ், செல்வம் இவையெல்லாம் பூமியை விட்டு அத்திருமேனியைத் தொடர்ந்து சென்றன. 

பிறரால் அறிய முடியாத கதியையுடைய ஸ்ரீக்ருஷண பகவான், அவ்வாறு தன்னுலகத்திற்குப் போகையில், ப்ரஹ்மதேவனை முன்னிட்டுக் கொண்டிருக்கிற தேவாதிகள் அனைவரும் அவன் போன விதம் காணப்பெறாமல் வியப்புற்றார்கள். ஆகாயத்தில் மேக மண்டலத்தில் மின்னல் மின்னி அது அம்மேக மண்டலத்தினின்று மறையும்பொழுது, “அது இன்னவிதமாகப் போயிற்று” என்று அதன் போக்கு எவ்வாறு மனுஷ்யர்களுக்குத் தெரிகிறதில்லையோ, அவ்வாறே அந்த ஸ்ரீக்ருஷ்ணன் போன போக்கு தேவதைகளுக்குத் தெரியவில்லை. 

மன்னவனே! அந்த ப்ரஹ்ம, ருத்ராதிகள், ஸ்ரீக்ருஷ்ணன் யோக மஹிமையால் பூமியைத் துறந்து போனதைக் கண்டு வியப்புற்று, அவனைப்புகழ்ந்து கொண்டே தங்கள் தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். ராஜனே! பரமபுருஷன் யாதவாதி குலங்களில் இதர ப்ராணிகளைப் போல் ஜனிப்பது (பிறப்பது), மரிப்பது (இறப்பது) முதலிய சேஷ்டைகள் செய்வதெல்லாம் அனுகரணமே (நடிப்பே) ஒழிய உண்மையன்று. கூத்தாடுகிற நடன் ராமாதிகளின் வேஷம் பூண்டு, அவர்களின் சரித்ரங்களை அபிநயிப்பானாயின் (நடிப்பானாயின்), அது அவன் ஏற்றுக் கொண்டதேயன்றி உண்மையாகாதல்லவா? இப்பரமபுருஷன், சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இவ்வுலகத்தை எல்லாம் படைத்து, அதற்குள் புகுந்து தரித்துக் கொண்டு, வெளியில் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து, கடைசியில் ஜகத்தை எல்லாம் ஸம்ஹரித்து, அளவிறந்த ஜ்ஞானானந்த மயமான தன் ஸ்வரூபத்தைத் தானே அனுபவிக்கையாகிற பெருமையில் இழிந்து, ஜகத் ஸ்ருஷ்டி (உலகைப் படைத்தல்) முதலிய வியாபாரங்களெல்லாம் ஒழியப் பெற்று, வெறுமெனே இருக்கின்றான். (இவ்வாறு அளவற்றதாகிய அவனுடைய மஹிமஸமுத்ரத்தில் பிறர்க்குத் தெரியாதபடி இவன் தன்னுலகம் சேர்ந்தான் என்கிற இது ஒரு திவலையேயாம் (சிறு துளி) அன்றி வேறொன்றும் அன்று.) 

இந்த ஸ்ரீக்ருஷ்ணன், யமலோகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட குரு புத்ரனை (ஆசார்யனான ஸாந்தீபினியின் பிள்ளையை) அம்மனுஷ்ய தேஹத்தோடு கூடவே திருப்பிக் கொண்டு வந்தான். மற்றும், இவன் தன்னைச் சரணம் அடைந்த உன் மாதாவுக்கு அபயம் கொடுத்து, அச்வத்தாமாவின் ப்ரஹ்மாஸ்த்ரத்தினால் தஹிக்கப்பட்ட உன்னைக் காப்பாற்றினான். அன்றியே, மிருத்யுவுக்கும் (யமனுக்கும்) மிருத்யுவாகிய ருத்ரனை இவன் பாணாஸுர யுத்தத்தில் ஜயித்தான். அன்றியே வேடனுக்குச் சரீரத்தோடு கூடவே ஸ்வர்க்கம் போகும்படி அனுக்ரஹம் செய்தான். அத்தகைய பகவான் பிறர்க்குத் தெரியாமல் தன்னுலகம் போகையில் அஸமர்த்தன் (திறமை அற்றவன்) ஆவானோ? (ஆனால், “இவ்வாறு பலவகை விசித்ர சக்திகள் அமைந்த பகவான், அழகியதான தன் திருமேனியை இவ்விடத்திலேயே ஏன் நிலையாக வைக்கவில்லை?” என்றால், சொல்லுகிறேன்; கேள்.) 

இப்பகவான் எல்லாச் சக்திகளும் அமைந்தவனே. ப்ரபஞ்சத்தை எல்லாம் காப்பது, படைப்பது, முடிப்பது இவைகளில் மற்றொன்றையும் எதிர்பாராமல் தானே நடத்தும் திறமையுடையவன். ஆயினும், “மனுஷ்ய சரீரம் எத்தனை காலம் இருப்பினும், கடைசியில் மரணம் அடையும் தன்மையதே. அபார மஹிமையுள்ள ஸ்ரீக்ருஷ்ணனும் கூட மரணம் அடைந்தான். ஆகையால், மனுஷ்ய சரீரத்தை நிலையென்று நம்பலாகாது. அதனால் என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை” என்று யோகிகளின் புத்தியை ஜனங்களின் நெஞ்சில் படுத்துவதற்காகவே தன் திருமேனியை இங்கு நிலையாக நிறுத்தி வைக்கத் திருவுள்ளம் பற்றாமல், அத்தோடு கூடவே எழுந்தருளினன் அன்றி வேறில்லை. 

ஸ்ரீக்ருஷ்ண பகவான் திருநாட்டுக்கு எழுந்தருளின விலக்ஷணமான (சிறந்த) இந்த வ்ருத்தாந்தத்தை எவன் பரிசுத்தனாகி பக்தியுடன் ஸங்கீர்த்தனம் செய்கிறானோ, அவன் அந்த ஸங்கீர்த்தன மஹிமையால், கதிகளில் சிறந்த வைகுண்டலோக கதியையே பெறுவான். தாருகன், இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்து வருத்தத்துடன் த்வாரகைக்குச் சென்று, வஸுதேவ, உக்ரஸேனர்களின் முன்னிலையில் விழுந்து, அவர்களுடைய பாதங்களைக் கண்ணீர்களால் நனைத்தான். அவன், (மெல்ல மெல்ல மனத்தை அடக்கிக் கொண்டு) மன்னவனே! வ்ருஷணிகள் அனைவரும் மரணம் அடைந்த வ்ருத்தாந்தத்தை மொழிந்தான். 

அங்குள்ளவர்கள் அதைக் கேட்டு, மனம் பயந்தவர்களாகி, சோகத்தினால் மூர்ச்சித்தார்கள். அவர்கள் ஸ்ரீக்ருஷ்ண விரஹத்தினால் (பிரிவினால்) வருந்தி, தம் பந்துக்கள் ஒருவரையொருவர் அடித்து ப்ராணன்களை இழந்து, எவ்விடத்தில் விழுந்திருக்கிறார்களோ, அவ்விடத்திற்கு விரைவுடன் சென்றார்கள். தேவகி, ரோஹிணி, வஸுதேவன், ஆஹ்கன் இவர்கள் ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களைக் காணாமையால், சோக ஸாகரத்தில் மூழ்கி, வருந்தி, ப்ரஜ்ஞையை (நினைவைத்) துறந்தார்கள். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்தமையால் வருந்தி, அவர்கள் ப்ராணன்களை (உயிர்களைத்) துறந்தார்கள். மற்றுமுள்ள அந்தந்த மடந்தையர்களும் தம்தம் கணவர்களை அணைத்துக் கொண்டு, சிதைகளில் ஏறினார்கள். (அனுமரணஞ் செய்தார்கள் – கூடவே இறந்தார்கள்).

பலராமனுடைய பத்னிகள், அந்த பலராமனுடைய தேஹத்தையும், வஸுதேவனுடைய பத்னிகள், அவ்வஸுதேவனுடைய தேஹத்தையும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய நாட்டுப் பெண்கள் (மருமகள்கள்), ப்ரத்யும்னன் முதலிய தம்தம் கணவர்களின் தேஹங்களையும் அணைத்துக் கொண்டு, அக்னி ப்ரவேசம் செய்தார்கள். ருக்மிணி முதலிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நிலைகின்ற மனமுடையவர்களாகையால், அவனைப் பிரிந்திருக்கப் பொறாமல், அக்னி ப்ரவேசம் செய்தார்கள். 

அர்ஜுனன், மிகவும் அன்புள்ள நண்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய விரஹத்தினால் (பிரிவினால்) வருந்தியும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய கீதோபதேசங்களாலும், பெரியோர்களுடைய நல்லுரைகளாலும், தன் மனத்தைத் தானே ஸமாதானப்படுத்திக் கொண்டான். ஸந்ததி முழுவதும் அழியப் பெற்றவர்களும், ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டவர்களுமான பந்துக்களுக்கு அவ்வர்ஜுனன் ஜலதர்ப்பணம் (நீர்க்கடன்), பிண்டப்ரதானம் (அன்னம் தருதல்) முதலிய கர்மங்களை விதிப்படி முறையே நடப்பித்தான். 

மஹானுபாவனே! ஸமுத்ரராஜன் ஸ்ரீக்ருஷ்ணன் துறந்த த்வாரகாபுரியை அழகிய ஸ்ரீக்ருஷ்ணன் திருமாளிகை தவிர முழுவதும் தன் ப்ரவாஹத்தில் ஒரு க்ஷணத்திற்குள் முழுக்கி விட்டான். தன்னை நினைத்த மாத்ரத்தில் ஸமஸ்த பாபங்களையும் போக்கும் திறமையுடையவனும், ஸமஸ்த மங்களங்களுக்கும் மங்களனும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) மதுசூதனன், அந்தத் திருமாளிகையில் எப்பொழுதும் ஸந்நிதி கொண்டிருக்கிறான் ஆகையால், அந்தத் திருமாளிகையைத் தவிர மற்ற த்வாரகாபுரி முழுவதையும் ஸமுத்ரராஜன் அமிழ்த்தி விட்டான்.

அர்ஜுனன், அக்னி ப்ரவேசம் செய்தவர் தவிர குமரிகளும், கிழவிகளுமான மற்ற பெண்டிர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு இந்த்ரப்ரஸ்தம் சென்று, அவ்விடத்தில் பகவானுடைய ஸங்கல்பத்தினால் மிகுத்தப்பட்ட வஜ்ரனென்னும் பெயருள்ள ஒரு யாதவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான். ராஜனே! உன் பாட்டனாகிய யுதிஷ்டிரன், அர்ஜுனன் முகமாய் நண்பர்களான யாதவர்கள் அனைவரும் மாண்டதைக் கேட்டு, உன்னை வம்ச ப்ரவர்த்தகனாக (குலத்தை வளர்ப்பவனாக) ஏற்படுத்தி, எல்லாருடனும் மஹாப்ரஸ்தானம் (கடைசி யாத்திரை) செய்தான். 

தேவதேவனும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய செயல்களையும், பிறவியையும், உட்கொண்ட இந்த வ்ருத்தாந்தத்தை எவன் ச்ரத்தையுடன் கீர்த்தனம் செய்கிறானோ, அவன் ஸமஸ்த பாபங்களாலும் விடுபடுவான். ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) தன்னை நினைப்பவர்களின் பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பரமபுருஷன் இவ்வாறு அழகியதான இந்த ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் செய்த வீரச்செயல்களையும், மிகவும் மங்களமான பால்ய சரிதங்களையும், பௌகண்ட (5 வயதிலிருந்து 16 வயது வரை), யௌவன (இளம் பருவ) சரிதங்களையும் (கதைகளையும்), இந்த புராண மூலமாகவும், இதர புராண மூலமாகவும் கேட்டு, அவைகளைக் கீர்த்தனம் செய்வானாயின், பரமஹம்ஸர்களுக்கு (சிறந்த துறவிகளுக்குப்) பரமகதியாகிய அப்பரமபுருஷனிடத்தில் மேலான பக்தி உண்டாகப் பெறுவான். 

முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தமும் முற்றுப்பெற்றது.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை