சனி, 24 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 322

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்

(விபூதியோகத்தைக் கூறுதல்)

உத்தவர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணா! ஒன்றான பரப்ரஹ்மம் நீயே. ஆதி (முதல்) அந்தம் (முடிவு) இல்லாதவன் ஆகையால் நீயே ஸர்வகாரணன் (எல்லாவற்றிற்கும் காரணம்). உனக்குக் கர்மமாகிற மறைவு கிடையாது. மற்றும், நீ உள்ளும், புறமும் வியாபித்திருப்பவன். ஆகையால், ஸமஸ்த (எல்லா) பதார்த்தங்களுக்கும் (ஜீவர்களுக்கும்) மோக்ஷத்திற்கு வேண்டிய அறிவைக் கொடுத்து, ஆத்ம உஜ்ஜீவனத்தை (ஆத்மாவிற்கு நல்வழியை) விளைப்பவனும், ஸம்ஸாரத்தில் அவ்வவற்றிற்கு வேண்டிய அபேக்ஷிதங்களைக் (விருப்பங்களைக்) கொடுத்து ரக்ஷிப்பவனும், துர்வாஸனையினால் (கெட்ட – அதாவது உலகியல் வாழ்வை மேன்மேலும் வளர்க்கக்கூடிய, ஆழ்ந்த முன் வினைப் பதிவுகளால்) விபரீதங்களைச் செய்து முடியப் பார்க்கிற ஆத்மாக்களுக்கு அந்த விபரீத வாஸனை மாற வேண்டுமென்று ப்ரக்ருதியில் மறைத்து வைக்கையாகிற ப்ரளயத்தை (ஊழியை, அழிவை) நடத்துபவனும், அவ்வாறு அனாதிகாலம் ப்ரக்ருதியில் மழுங்கி அஸத் கல்பராய் (அறிவற்ற ஜடப்பொருள் போல்) கிடக்கிற ஆத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேண்டுமென்னும் திருவுள்ளத்தினால் அவர்களுக்குக் கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களைக் (உடலைக்) கொடுக்கையாகிற ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறவனும் நீயே! (ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்களும் (அழிவு), மோக்ஷமும் (விடுதலையும்) உன்னிடத்தினின்றே உண்டாகின்றன.) மேன்மையும், தாழ்மையும் உள்ள ஸமஸ்த பூதங்களிலும் நீ அமைந்திருக்கின்றாய். ஆயினும், அத்தகைய உன்னை இந்திரியங்களை வெல்ல முடியாத மூடர்கள், வருந்தியும் அறியவல்லராக மாட்டார்கள். 

ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய)! வேதாந்தங்களை அறிந்த பெரியோர்கள், உன்னை உள்ளபடி அறிந்து உபாஸிக்கிறார்கள். உன்னை எந்தெந்த வஸ்துக்களில் உபாஸித்தால் பக்தி வளரப் பெற்று யோக ஸித்தியைப் பெறுவார்களோ, அதை எனக்கு விவரித்துச் சொல்லவேண்டும். 

ஸமஸ்த ப்ராணிகளுடைய ஸத்தையும் (இருப்பும்) உன் அதீனமாய் (உட்பட்டு) இருக்கின்றது. நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவன். நீ ஸமஸ்த பூதங்களிலும் தெரியாமல் மறைந்து வர்த்திக்கின்றாய் (இருக்கிறாய்). நீ எல்லாவற்றையும் ஒரே ஸமயத்தில் ஸாக்ஷாத்கரிக்கின்றாய் (பார்க்கிறாய்). ப்ராணிகள் உன்னுடைய மாயையினால் மதிமயங்கி, உன்னை அறிகிறதில்லை. (நீ மனுஷ்யர்களுக்குள் ஒரு மனுஷ்யன் போல் மறைந்து திரிகின்றாய். ஆகையால், சிலர் உன்னுடைய மாயையினால் மதிமயங்கி, உன்னை அறிகிறதில்லை. இவ்வளவு மாத்ரத்தினால் நீ ஸாதாரண மனுஷ்யனாக மாட்டாய். உன்னுடைய பரமாத்மத்வம் இதனால் மாறாது.) 

அளவற்ற ஐச்வர்யம் உடையவனே! பூமி, ஆகாயம், பாதாளம், திசைகள் இவைகளில் உன்னுடைய அம்சத்தினால் மேன்மை பெறும்படி செய்யப்பட்ட உன் விபூதிகள் (ஆளுமை, சொத்து) எவ்வளவு உண்டோ, அவற்றை எல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும். புண்ய தீர்த்தங்களுக்கெல்லாம் இருப்பிடமான உன் பாதார விந்தங்களை வணங்குகிறேன். எனக்கு அருள் புரிய வேண்டும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- கேள்வி கேட்பவர்களில் சிறந்தவனே! குருக்ஷேத்ரத்தில் சத்ருக்களோடு யுத்தம் செய்ய விரும்புகிற அர்ஜுனன், இதே கேள்வியை இவ்வாறே என்னைக் கேட்டான். அவன் இவ்வாறு கேட்பதற்கு என்ன ப்ரஸக்தி (சூழ்நிலை) என்றால் சொல்லுகிறேன்; கேள். 

அவன் யுத்த பூமியில் யுத்தத்திற்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் தனக்கு பந்துக்களும் (உறவினர்களும்), பூஜ்யர்களுமாய் (வணங்கத் தகுந்தவர்களுமாய்) இருப்பதையும், அவர்களைத் தான் வதிப்பது கேவல ராஜ்யத்திற்காகவே (அரசு உரிமைக்காகவே); ஆகையால் அது தர்மத்தினின்று நழுவினது என்பதையும் ஆனது பற்றியே நிந்தைக்கிடம் என்றும் நினைத்து, நான் அடிக்கிறவன், இவன் அடிபடுகிறவன் என்னும் ப்ராக்ருத (ஸாதாரண) புத்தி உடையவனாகி, அந்த யுத்த முயற்சியினின்று மீண்டு நின்றான். அப்பொழுது, நான் யுத்திகளால் அவனை அறிவு மூட்டி நிலை நிறுத்த, அவன் யுத்த ஆரம்பத்தில் உன்னைப் போலவே, “பகவானே! உன் விபூதிகளை எனக்கு விவரித்துச் சொல்லவேண்டும்” என்று வினவினான். 

உத்தவனே! (அர்ஜுனனைப் போன்ற மதியுள்ளவன் மற்றொருவன் இல்லை. நீயும் அவனைப்போல் வினவினாய்; ஆகையால் நீ கேள்வி கேட்பவர்களில் சிறந்தவனென்பதில் ஸந்தேஹமென்ன? உன் கேள்விக்கு நான் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, மறுமொழி கூறுகிறேன்; கேட்பாயாக) 

நான், இந்தப் பூதங்களுக்கெல்லாம் அந்தராத்மாவாய் (உள் இருந்து நியமிப்பவனாய்) இருப்பவன். இவற்றிற்கு நண்பனும், ப்ரபுவும் நானே. ஆகையால், ஸமஸ்த பூதங்களும் நானே. இவற்றின் ஸ்ருஷ்டி  (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்களை (அழிவு) நடத்துகிறவனும் நானே. சிறந்த கதி உடையவர்களுடைய கதியும் நானே. அனர்த்தங்களை (கேட்டை) விளைப்பவர்களுக்குள் காலன் நான். ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ்) குணங்களின் ஸாம்யாவஸ்தை (ஸம நிலை) நான். குணமுள்ள வஸ்துவின் குணங்களுக்குள் எது ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையான) குணமோ அது நான். ஸத்வாதி குணங்கள் வெளித்தோன்றப் பெற்றவைகளுக்குள் முதன்மையான மஹத் தத்வம் நான். பெருமையுள்ள வஸ்துக்களின் பெருமை என்னும் குணம் நானே. ஸூக்ஷ்ம வஸ்துக்களுக்குள் மிகவும் ஸூக்ஷ்மமான ஜீவாத்மா நான். வருந்தியும் வெல்ல முடியாதவைகளுக்குள் முதன்மையான மனம் நானே. தேவதைகளுக்குள் ப்ரஹ்மதேவன் நான். மந்திரங்களுக்குள் அகார, உகார, மகாரங்கள்  என்னும் மூன்று அக்ஷரங்களையுடைய ப்ரணவம் நான். அக்ஷரங்களுக்குள் அகாரம் நான். சந்தஸ்ஸுக்களுக்குள் (யாப்பு) காயத்ரி என்னும் சந்தஸ்ஸு (யாப்பு) நான். ஸமஸ்த தேவதைகளுக்குள் இந்த்ரன் நான். வஸுக்களுக்குள் ஹவ்யவாஹன் நான். ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு. ருத்ரர்களுக்குள் நான் நீலலோஹிதன். ப்ரஹ்ம ரிஷிகளுக்குள் நான் ப்ருகு. ராஜ ரிஷிகளுக்குள் நான் ஸ்வாயம்புவ மனு. தேவ ரிஷிகளுக்குள் நான் நாரதன். பசுக்களுக்குள் நான் காமதேனு. ஸித்தேச்வரர்களுக்குள் மிகவும் உபாஸிக்கத் தகுந்த கபிலன் நான். பக்ஷிகளுக்குள் சிறந்த கருடன் நான். நவப்ரஜாபதிகளுக்குள் தக்ஷன் நான். பித்ருக்களுக்குள் நான் அர்யமன். 

உத்தவனே! அஸுரர்களுக்குள் ச்ரேஷ்டனாகிய ப்ரஹ்லாதன் நானேயென்று உணர்வாயாக. நக்ஷத்ரங்களுக்கும், ஓஷதிகளுக்கும் ப்ரபுவாகிய ஸோமன், நான். யக்ஷ, ராக்ஷஸர்களுக்குள் குபேரன் நான். கஜேந்த்ரங்களுக்குள் (யானைகளுக்குள்) ஐராவதம் நான். ஜல ஜந்துக்களுக்கு ப்ரபுவாகிய வருணன் நான். ஒளியுடன் விளங்கும் வஸ்துக்களுக்குள் ஸூர்யன் நானே என்று அறி. மனுஷ்யர்களுக்குள் மன்னவன் நான். குதிரைகளுக்குள் உச்சைசிரவஸ் என்னும் குதிரை நான். உலோஹங்களுக்குள் ஸ்வர்ணம் நான். தண்டனை செய்கிறவர்களுக்குள் ப்ரதானனான யமன் நான். ஒருதலைப் பாம்புகளில் தலைமையுள்ள வாஸுகி நான். பல தலைப்பாம்புகளில் சிறந்த ஆதிசேஷன் நான். க்ரூர (கொடிய) ம்ருகங்களுக்குள் ஸிம்ஹம் நான். ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களுக்குள் ஸந்நியாஸாச்ரமம் நான். 

தோஷமற்றவனே! ப்ராஹ்மணாதி வர்ணங்களுக்குள் முதன்மையான ப்ராஹ்மண வர்ணம் நான். ப்ரவஹிக்கும்படியான (பெருக்கெடுக்கும்படியான) புண்ய தீர்த்தங்களுக்குள் கங்கை நான். தேங்கும் ஜலமுள்ள புண்ய தீர்த்தங்களுக்குள் ஸமுத்ரம் நான். ஆயுதங்களுக்குள் தனுஸ்ஸு நான். வில்லாளிகளுக்குள் த்ரிபுர ஸம்ஹாரம் செய்த (அழித்த) ருத்ரன் நான். வாஸஸ்தானங்களுக்குள் (இருப்பிடங்களுக்குள்) சிறந்த மேரு பர்வதம் நான். ப்ரவேசிக்க முடியாத இடங்களுக்குள் சிறந்த ஹிமவத் பர்வதம் (இமய மலை) நான். மரங்களுக்குள் நான் அரச மரம். ஓஷதிகளுக்குள் நான் யவம். புரோஹிதர்களுக்குள் சிறந்த வஸிஷ்ட்டர் நான். வேதார்த்த நிஷ்டர்களுக்குள் சிறந்த ப்ருஹஸ்பதி நான். ஸேனாபதிகளுக்குள் தேவஸேனாபதியாகிய ஸுப்ரஹ்மண்யன் நான். 

ஸன்மார்க்க ப்ரவர்த்தகர்களில் சிறந்த மஹானுபாவனாகிய ப்ரஹ்மதேவன் நான். யஜ்ஞங்களுக்குள் சிறந்த ப்ரஹ்மயஜ்ஞம் நான். வ்ரதங்களுக்குள் அஹிம்ஸை என்னும் வ்ரதம் நான். சுத்தியை விளைக்கும் வஸ்துக்களுக்குள் காற்று, அக்னி, ஸூர்யன், ஜலம், ஆகாசம் ஆகிய இப்பஞ்சபூத ஸ்வரூபனாகிய நானே மிகவும் சுசியானவன் (சுத்தன்).

எட்டு வகையான யோகங்களுக்குள் ஸமாதி என்னும் யோகம் நான். ஜயிக்க விரும்புகிறவர்களுக்கு  ஜய உபாயமாகிய ஆலோசனையென்னும் நீதி நான். விவேகம் முதலிய திறமைகளுக்குள் “இது ஆத்மா, இது ஆத்மாவன்று” என்னும் விவேகத்தை விளைக்கவல்ல ஆன்வீக்ஷிகி என்னும் வித்யை நான். க்யாதி வாதம் செய்யும் தார்க்கிகாதிகளுடைய (விவாதம் செய்பவரது) விகல்பம் (வேறு வேறு வாதங்கள்) நான்.

ஸ்த்ரீகளுக்குள் ஸ்வாயம்புவ மனுவின் பார்யையாகிய சதரூபை நான். புருஷர்களுக்குள் நான் ஸ்வாயம்புவ மனு. முனிவர்களுக்குள் சிறப்புற்று பதரிகாச்ரமத்தில் வாஸம் செய்கிற நாராயணன் நானே. ஜிதேந்தரியர்களுக்குள் தலைமையுள்ள ஸனத்குமாரன் நான். தர்மங்களுக்குள் சிறந்த ஸந்நியாஸ தர்மம் நான். க்ஷேமங்களுக்குள் சிறந்த ஆத்ம ஸ்வரூப அனுஸந்தானம் (ஆத்மாவின் இயற்கைத் தன்மையை த்யானம் செய்தல்) என்னும் க்ஷேமம் நான். 

குஹ்யங்களுக்குள் (ரஹஸ்யங்களுக்குள்) சிறந்த நல்வார்த்தையும், ஒன்றும் பேசாமையாகிற மௌனமும் நானே. இரட்டைகளுக்குள் ஆணும் பெண்ணுமான மிதுனம். ப்ரஜாபதியினுடைய தேஹம் இரண்டு பிரிவாகப் பிரிய, அவற்றினின்று ஆணும், பெண்ணுமான மிதுனம் உண்டாயிற்றாகையால், அவனே முக்யமான மிதுனம் எனப்பட்டான்.) 

முதன்மையான ப்ரஹ்மதேவன் நான். ஊக்கம், தவறுதல் இல்லாதவைகளுக்குள் சிறந்த ஸம்வத்ஸரம் (வருடம்) நான். ருதுக்களுக்குள் சைத்ர (சித்திரை), வைசாகங்கள் (வைகாசி) கூடிய வஸந்தருது (வஸந்த காலம்) நான். மாதங்களுக்குள் மார்க்கசீர்ஷ மாதம் (மார்கழி மாதம்) நான். நக்ஷத்ரங்களுக்குள் அபிஜித் என்கிற நக்ஷத்ரம் நான். யுகங்களுக்குள் நான் க்ருதயுகம். ஸுக, துக்காதிகளைப் பொறுக்கும் தீரர்களுக்குள் சிறந்த அஸிதரும், தேவலரும் நான். வேதங்களைப் பிரித்தவர்களுக்குள் சிறந்த வ்யாஸர் நான். தீர்க்க தர்சிகளுக்குள் ஸூக்ஷ்ம புத்தியுடைய சுக்ராசார்யன் நான். ஜ்ஞானாதி குணங்களுடையவர்களுக்குள் நான் வாஸுதேவன். பகவத் பக்தர்களுக்குள் சிறந்த உத்தவனென்னும் பெயருடைய நீ நானே.

கிம் புருஷர்களுக்குள் நான் ஹனுமான். வித்யாதரர்களுக்குள் நான் ஸுதர்சனன். ரத்னங்களுக்குள் நான் பத்மராகம். அழகிய வஸ்துக்களுக்குள் நான் பத்மகோசம். த்ருண (புல்) ஜாதிகளுக்குள் நான் குசம் (தர்ப்பை). புரோடாசம் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் வெந்த மாவினால் ஆன பண்டம்) முதலிய ஹவிஸ்ஸுக்களுக்குள் நான் பசுவின் நெய். பணம் ஸம்பாதிக்கும் முயற்சியுடையவர்களுக்கு நேருகிற பணம் முதலிய ஸம்பத்து (சொத்து) நானே.

சூதாடுகிறவர்கள் சலம் (மோசம்) செய்து நானே ஜயிப்பேனென்று நடத்தும் ஆக்ரஹம் (பிடிவாதம்) நானே. பொறுமையுள்ளவர்களின் பொறுமை நானே. ஸத்வகுணம் தலையெடுத்தவர்களுடைய ஸத்வ குணம் நானே. இந்திரிய பலமுடையவர்களுடைய இந்திரிய பலமும், தாரண (ஆழ்ந்த உள் உணர்வு) ஸாமர்த்யம் உடையவர்களுடைய தாரண ஸாமர்த்யமும், சரீர பலமுடையவர்களுடைய சரீர பலமும் நானே. 

பாகவதர்கள் அனுஷ்டிக்கிற பாஞ்சராத்ர கர்மங்களெல்லாம் நானே. மத்ஸ்யாவதாரம் முதல் க்ருஷ்ணாவதாரம் வரையிலுள்ள ஒன்பது அவதாரங்களுக்கும் காரணமும், ஸர்வ காரணமுமான யாதொரு மூர்த்தி உண்டோ அம்மூர்த்தி நானே. கந்தர்வர்களுக்குள் நான் வியவாவஸு. அப்ஸர மடந்தையர்களுக்குள் பூர்வ சித்தியென்னும் அப்ஸரமடந்தை நான். பர்வதங்களுக்குள் அசையாமல் நிலை நின்றிருக்கும் தன்மை நான்.

பூமிக்குள்ள கந்த (வாஸனை) குணம் நான். ஜலத்திற்குள்ள ஸர்வரஸ காரணமான ரஸம் (சுவை) என்னும் குணம் நானே. தேஜிஷ்ட (ஒளிரும்) வஸ்துக்களில் சிறந்த அக்னியின் தேஜஸ்ஸு நானே. ஸூர்யன், சந்திரன், நக்ஷத்ரம் இவற்றின் ஒளியும் நானே. ஆகாசத்திற்கு அஸாதாரண குணமான சப்தமும் நானே. (ஆயிரம் சொல்லியென்? இந்த்ரியங்களுக்கு விஷயமானவைகளில் சிறந்தவை எவ்வெவையுண்டோ அவையெல்லாம் நானே.) 

ப்ராஹ்மண குலத்திற்கு நன்மை செய்பவர்களுக்குள் சிறந்த பலி சக்ரவர்த்தி நான். வீரர்களுக்குள் சிறந்த அர்ஜுனன் நான். பூதங்களுடைய ஸ்ருஷ்டி  (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்களெல்லாம் (அழிவு) நானே. பாதம் (கால்), வாக்கு, பாயு (ஆசன வாய்), பாணி, உபஸ்தம் (பிறப்புக் குறி) என்கிற ஐவகையான கர்ம இந்திரியங்களின் வியாபாரங்களாகிய நடை, பேச்சு, மல உத்ஸர்க்கம் (மலம் கழித்தல்), உபாதானம் (எடுத்தல்), ஆநந்தம் (இன்பம்) என்கிற இவை ஐந்தும்; தோல், கண், நாக்கு, காது, மூக்கு என்கிற ஐவகையான ஜ்ஞான இந்திரியங்களின் வியாபாரங்களான ஊறல் (தொடு உனர்ச்சி), பார்வை, சுவை, கேள்வி. மோருதல் ஆகிய இவை ஐந்தும் நானே.

ஸமஸ்த இந்திரியங்களுக்கும் அந்தந்த சக்தியைக் கொடுத்து நடத்துகிறவன் நானே. பூமி, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ்ஸு என்னும் இப்பஞ்ச பூதங்களும் நானே. மற்றும், அஹங்காரம், மஹத்து, அஹங்காரத்தின் விக்ருதிகளாகிய (மாறுதல்களான) பதினொரு இந்திரியங்கள், சேதன ஸமஷ்டி (மொத்த ஜீவர்கள்), அசேதன ஸமஷ்டி (மொத்த ஜடப்பொருட்கள்), அசேதன ஸமஷ்டியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் இவற்றை எல்லாம் கடந்த முக்தாத்ம (மோட்சம் அடைந்த ஜீவனின்) ஸ்வரூபம் இவையெல்லாம் நானே. நான் இத்தத்வங்கள் மாத்ரமே அல்லேன்; 

இவற்றின் ஸங்கையையும் (எண்ணிக்கையையும்), இவற்றை லக்ஷணத்தின்படி (தன்மைப்படி) அறிகையும், இவற்றின் ஸ்வருப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குனங்களை) உள்ளபடி நிச்சயித்து அறிகையும் நானே. ஸமஸ்த வஸ்துக்களுக்கும் உள்ளே புகுந்து நியமித்துக் கொண்டிருப்பவனும், ஜீவ ஸ்வரூபனும் (ஜீவ வடிவானவனும்), ஸத்வாதி குண ஸ்வரூபனும் (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற குன வடிவானவனும்), ஸமஷ்டி, வ்யஷ்டி ரூபமாயும் (மொத்தமாயும், தனித் தனியாயும்), ஸர்வ கார்ய ஸ்வரூபமாயும் உள்ள (உண்டாக்கப்பட்டவைகளான) அசேதனத்ரவ்ய ஸ்வரூபனுமாகிய (ஜடப்பொருள் வடிவானவனும்), என்னை ஒழிய எங்கும் எந்த வஸ்துவுக்கும் ஸத்தையே (இருப்பே) கிடையாது. 

ஸர்வஜ்ஞனும் (எல்லாம் அறிந்தவனும்), கால ஸ்வரூபனுமாகிய (கால வடிவானவனுமாகிய) நான் பூமியிலுள்ள பரமாணுக்களை (சிறிய துகள்களை) எண்ணிலும் எண்ணுவேன். கோடி கோடியாக அண்டங்களைப் படைக்கிற, அவ்வண்டங்களிலுள்ள என் விபூதிகளைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. (நான் படைத்த அண்டங்களுக்கே எண்ணிக்கை இல்லை. அவற்றிலுள்ள விபூதிகளை எவ்வாறு எண்ண முடியும்?) 

தேஜஸ்ஸு (ஸாமர்த்யம்), காந்தி (ஒளி), கீர்த்தி (புகழ்) ஐச்வர்யம் (ஆளுமை, சொத்து), லஜ்ஜை (வெட்கம்),  த்யாகம் (பற்றின்றி விடுதல்), ஸௌந்தர்யம் (அழகு), பாக்யம் (அத்ர்ஷ்டம், தலைவிதி) வீர்யம் (வலிமை), பொறுமை, வஸ்துக்களின் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) உள்ளபடி அறிகை, திருமந்திரம், ஹித (நன்மை), அஹிதங்களை (தீமைகளை) ஆராய்கை, இவை எல்லாமாவது, இவற்றில் சிலவாவது, ஏதேனுமொன்றாவது எவ்விடத்தில் இருக்கிறதோ, அதுவெல்லாம் என்னுடைய அம்சமேயாம். இவ்வாறு என்னுடைய விபூதிகளை எல்லாம் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இப்பதார்த்தங்களெல்லாம் என்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் உண்டானவை என்று வேதங்கள் உள்ளபடி நிரூபித்துச் சொல்லுகின்றன. 

கெட்ட விஷயங்களைப் பேசுவதினின்று வாக்கையும், கெட்ட விஷயங்களை த்யானிப்பதினின்று மனத்தையும் அடக்குவாயாக. கெட்ட ஆஹாரங்களைத் (உணவைத்) துறந்து, சுத்தமான ஆகாரங்களை உட்கொள்வதனாலும், பூரகம் (மூச்சை உள் இழுத்தல்), ரேசகம் (மூச்சை வெளி விடுதல்), கும்பகம் (மூச்சை உள்ளே அடக்குதல்) முதலிய உபாயங்களாலும் ப்ராண வாயுவையும், இந்த்ரியங்களையும் ஸ்வாதீனப்படுத்த வேண்டும். அபாயங்களில் ப்ரவர்த்திக்கல் (செயல்படுதல்) ஆகாதென்னும் அத்யவஸாயத்துடன் (உறுதியுடன்) தன்னைத் தானே அடக்க வேண்டும். 

இவ்வாறு இவற்றை எல்லாம் அடக்கி, விபூதிகளோடு கூடின என்னை உபாஸிப்பாயாயின், மீளவும் ஸம்ஸார மார்க்கத்திற்கு (உலகியல் வாழ்வாகிற பாதைக்கு) நீ ஆளாக மாட்டாய். எல்லாவற்றையும் துறந்த துறவியாயினும், வாக்கையும், மனத்தையும், புத்தியினால் நன்கு நியமித்துக் கொண்டு போகாமல் இருப்பானேயாயின், அவன் செய்யும் வ்ரதம், தவம், தானம் இவையெல்லாம் பச்சை மண் குடத்தில் எடுத்த ஜலம் போல் நழுவிப்போகும். ஆகையால், என்னையே முக்யமாகப்பற்றி, மனம், வாக்கு, ப்ராணன் இவைகளை என்னிடத்தில் பக்தியோடு கூடிய புத்தியினால் அடக்குவானாயின், அவனுக்கு அதனால் மோக்ஷ உபாயம் (மோட்சத்திற்கான வழி) எல்லாம் நிறைவேறினாற் போலவே. 

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக