வியாழன், 17 செப்டம்பர், 2020

திருப்பதி சென்றால், திருப்பம் உருவாகும், விருப்பம் நிறைவேறும்! - திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

கோடிக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் குடும்பங்களில் குதூகலம் நிறையச் செய்யும் வரப்பிரசாத மூர்த்தியாய் திகழ்கின்றார் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி. அதனால் தான் ‘திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா! உன் விருப்பம் கூடுமடா!’ என்று கவிஞர்கள் திருமலையின் புகழைப் போற்றி பாடுகின்றனர். உலகத்தில் விளங்குகின்ற எண்ணற்ற ஆலயங்களில் முதன்மை இடத்தில் முத்திரை பதிக்கிறது திருப்பதி!

ஆண்டுக்கு சுமார் ஐநூறு கோடிக்கும் மேலாக தங்கமாகவும், பணமாகவும் தங்களது காணிக்கைகளை வழங்குகின்றார்கள் பக்தர்கள். தங்களை நல்ல நிலையில் வாழவைத்து, தங்களின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ததற்கு நன்றிக் கடனாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தானே, உண்டியலில் போடும் எண்ணற்ற கோடிகள்! காணிக்கை தொகையே இப்படி உச்சநிலையில் இருந்தால் வணங்கும் பக்தர்களுக்கு பெருமாள் எப்படி வாரிக் கொடுத்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள். ‘ஸ்ரீநிவாசர்’ என்றால் திருமகளான லக்ஷ்மி தேவியை நிரந்தரமாக தன் மார்பில் வசிக்கச் செய்கிறவர் என்று பொருள். அப்படி இருப்பவர் அள்ளிக் கொடுக்காமல் கிள்ளியா கொடுப்பார்?

“அகலகில்லேன் இறையும் என்று     

அலர்மேல் மங்கை உறைமார்பா! 

நிகரில் புகழாய்!”

- என்று போற்றுகிறார் நம்மாழ்வார்.

‘வட வேங்கட மாமலையில் உறைவோனே!

வேண்டியபோது அடியார் வேண்டிய போகம் அது

வேண்ட வெறாது உதவும் பெருமாளே!’

- என்று பிரார்த்தனை ஸ்தலமான திருமலையின் பெருமையை வாக்கிற்கு அருணகிரியார் தான் வழங்கியுள்ள திருப்புகழில் ஏற்றி போற்றிப் பரவுகின்றார். கச்சியப்பர் பாடி அருளிய ஸ்ரீகந்த புராணத்திலும் திருப்பதி பற்றிய குறிப்பு இருக்கிறது. ‘பண்டு தான் வரும் ‘வேங்கடகிரி’யையும் பார்த்தனன்’ என்று கந்தபுராணம் பாடுகின்றது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகின்றார்:-

‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்

ஓங்கு உயர் மலயத்து உச்சி மீமிசை

மின்னும் கோடி உடுத்து, விளங்கு விற்பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்

பகையணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும்

தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி

நலம் கிளர் ஆரம் மார்பிற் பூண்டு

பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’

பழம்பெரும் மலையை, பாலாஜி தரிசனம் தரும் வேங்கட கிரியை ஆழ்வார்கள் திவ்யப்பிரபந்தத்தில் இருநூறு பாடல்களில் வியந்து துதித்துள்ளனர். வைகுந்த வாசனும், பாற்கடலில் பள்ளி கொள்பவனுமாகிய பரந்தாமனை தரிசிக்க வேண்டும் இன்று என்று எண்ணி பிரம்மதேவர் ஒருநாள் வைகுந்தபுரி சென்றாராம். ஆனால் அவரால் அன்று பெருமாளை அங்கு காண முடியவில்லையாம். ‘ஒரு வேளை பாற்கடலில் இருப்பாரோ’ என்று எண்ணி அங்கு சென்றாராம் பிரம்மதேவர். ஆனால் அங்கும் அவரைக் காணவில்லையாம். 

வைகுந்தம், பாற்கடல் இரண்டு இடங்களிலும் தன்னுடைய எட்டுக் கண்களால் தேடியும் பெருமாள் அகப்படவில்லையே என்று எண்ணிய பிரம்மதேவர், ஞானக்கண்ணால் தேடியபோதுதான், பூலோகத்தில் பெருமாள் இருக்கிறார் என்று புரிந்து கொண்டாராம். சேஷ மலை, கருட மலை, வேங்கட மலை, நாராயண மலை, விருஷப மலை, வ்ருஷ மலை, சிம்ம மலை என ஏழு மலைகளுக்கிடையே அர்ச்சாவதார மூர்த்தியாக பெருமாள் எழுந்தருளி இருப்பதை மகிழ்ச்சியுடன் தரிசித்த பிரம்மதேவர் ஆனந்த மிகுதியால் அந்நாளை ஒரு விமரிசையான விழாவாகவே கொண்டாடினாராம். அதுவே புரட்டாசி திருவோண பிரம்மோற்சவமாக இன்றளவும் நடைபெற்று வருகின்றது.

அனுதினமும் கொண்டாட்டமாகவும், கோலாகலமாகவும் விளங்கும் மலையப்பனை இமைப்பொழுதும் மறக்காமல் இனிய தமிழால் துதித்தும், இதயத்தில் பதிந்தும், வேங்கடவனையே பரம பதிவிரதா பக்தியோடு மதித்தும் குலசேகர ஆழ்வார் கும்பிட்டார். குலசேகரரின் வழிபாட்டில் மகிழ்ந்த பெருமாள் ‘ஆழ்வாரே! உம் பக்தியை மெச்சினோம். அளவில்லாத செல்வமும், அரம்பையர்கள் சூழ அரச வாழ்வும், வானம் ஆளும் வரமும் உமக்கு வழங்குகின்றோம், ஏற்பீராக’ என்றார்.

நாமாக இருந்தால் இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போது கிடைக்கும் என்று உடனே ஏற்றுக் கொண்டு விடுவோம்! ஆனால் குலசேகர ஆழ்வாரின் பதில் வேறுவிதமாக இருந்தது. ‘‘பெருமாளே! மண்ணையும் விண்ணையும் ஆளும் மகத்தான பதவியோ, அரம்பையர்கள் நடுவில் சுகபோக வாழ்க்கையோ எனக்கு தவறியும் தந்து விடாதீர்கள். இந்த வேங்கடமலையை விட்டு நான் நீங்குவேனா? திருப்பதியிலேயே ஒரு கல்லாகவோ, புல்லாகவோ, பறவையாகவோ, மீனாகவோ எப்போதும் நான் இருக்க நிலைத்த வரம் ஒன்றை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்,’’ என்றார் அவர்.

உயர்ந்த தமிழ்ச்சுவையும் உள்ளார்ந்த பக்தியும் ஒன்றுகூடி குலசேகர ஆழ்வார் இப்படி ஒரு வேண்டுகோளை வெங்கடாஜலபதியிடம் வைக்கிறார்:

‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண் அரசும் யான்வேண்டேன்

தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!’

கொம்புத் தேனாக இனிக்கிறதல்லவா குலசேகரரின் கவிதை!

ஆழ்வாரின் இந்தப் பாடலில் ஆழ்ந்ததால்தான் அண்மைக்காலக் கவிஞர் ஒருவர் இப்படிப் பாடுகிறார்:

‘மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்! - ஒரு

மரம் ஆனாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன்! - கருங்கல் ஆனாலும் தணிகை மலையில் கல் ஆவேன்!’

குலசேகர ஆழ்வாரின் இதய வேண்டுகோளை மலையப்பன் ஏற்றதனால் தான் இன்றும் திருப்பதி ஆலயத்தின் வாசற்படி ‘குலசேகரப்படி’ என்று கூறப்படுகிறது. அளவில்லாத வரங்களை அன்பர்களுக்கு வழங்கும் திருப்பதிக்குச் செல்ல யாருக்குத்தான் ஆசை இருக்காது? மாற்றுத்திறனாளிகள் நால்வர் ஒரு குழுவாகச் சென்று பாலாஜியைப் பார்க்க ஆசை கொண்டனர். ஒருவர் நிமிர முடியாத உடல் அமைப்பு கொண்டவர்.  இன்னொருவர் பார்க்கும் சக்தியை இழந்தவர். மற்றொருவரோ இரு கைகளும் விளங்காதவர். 

நான்காமவரோ வாய் பேச முடியாதவர். நால்வரும் சேர்ந்து ஏழுமலையில் மெல்ல மெல்ல  ஏறினர். கற் படிகளில் கஷ்டப்பட்டு ஏறி எப்படியாவது பெருமாள் தரிசனப் பேறு பெற்றிட வேண்டும் என்று எண்ணிய அவர்களுக்கு வெங்கடாஜலபதி எப்படி அருளினார் தெரியுமா? அந்த அருட்செய்தியை அருந்தமிழ்ப் புலவர் ஒருவரின் அமுதப் பாடல் மூலமே அறிந்து கொள்வேமே!

கூன் கொண்டு போனவன்

    கூன் நிமிர்ந்து ஓட,

    குருடன் கொம்பில்

‘தேன்’ என்று காட்ட

    முடவன் குடம் கொண்டு

    அத்தேன் பிழிய

தான் நின்ற ஊமை

    தனக்கு என்று கேட்கத்

    தருவர் வரம்

வான் நின்ற சோலை

    வடமலை மேல்

    நின்ற மாயவரே!

மாற்றுத்திறனாளிகளை ஏற்றமான தோற்றத்தோடு மாற்றிய திறனாளியாகத் திகழும் வேங்கடவனைத் தொழுதால் குறை ஒன்றும் இல்லை அல்லவா!

நன்றி - ஆன்மிகம் செப்டம்பர் 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக