எட்டாவது ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்
(பகவான் மூன்றாவது அடிக்கு இடமில்லாமையால் பலியைப் பந்தனம் செய்தல் [கட்டுப்படுத்துதல்])
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் பகவானுடைய பாதம் தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸத்யலோகத்தில் வந்திருப்பதைக் கண்டு அந்தப் பாதத்திலுள்ள சந்த்ரன் போன்ற நகங்களின் காந்திகளால் தன் வாஸஸ்தானமெல்லாம் (இருப்பிடமெல்லாம்) ஒளிமழுங்கப்பெற்று ஆதரவுடன் எதிர்கொண்டு சென்றான். அவ்வாறே மிகப்பெரிய வ்ரதங்களை அனுஷ்டித்தவர்களான மரீசி முதலிய ரிஷிகளும் ப்ரஹ்ம நிஷ்டர்களான ஸனந்தனர் முதலிய யோகிகளும் அந்த பகவானுடைய பாதத்தை எதிர்கொண்டார்கள். ருக்கு, யஜுஸ்ஸு முதலிய வேதங்கள் ஆயுர்வேதம் முதலிய உபவேதங்கள் நியமங்கள் மீமாம்ஸா, ந்யாயங்கள், தர்க்கம், ராமாயணாதி இதிஹாஸங்கள், சிக்ஷை முதலிய அங்கங்கள், புராணங்கள், பஞ்சராத்ராதி ஸம்ஹிதைகள் ஆகிய இவற்றின் அபிமானி தேவதைகளும், யோகமாகிற காற்றினால் வீசப்பெற்றுக் கிளர்ந்தெரிகின்ற ஜ்ஞானமாகிற அக்னியினால் புண்ய, பாப கர்மங்களாகிற கல்மஷங்களையெல்லாம் (மலங்களை) பஸ்மம் செய்து விளங்குகின்றவர்களும் அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானித்த மஹிமையால் ஜ்ஞானயோக ப்ரசுரமான (ஜ்ஞானயோகம் நிறைந்து இருக்கும்) ஸத்யலோகம் சென்று அங்கு வாஸம் செய்பவர்களுமான மற்றவர்களும் அந்தத் த்ரிவிக்ரமனுடைய பாதத்தை வணங்கினார்கள்.
அப்பால் பெரும்புகழனாகிய ப்ரஹ்மதேவன் தான் எவனுடைய நாபிகமலத்தினின்று உண்டானானோ, அப்படிப்பட்ட ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதம் வெகுதூரம் உயரக் கிளம்பி வந்திருப்பதைக்கண்டு அதற்கு அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்களைச் செய்து நன்றாகப் பூஜித்துப் பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தான். மன்னவனே! அப்பொழுது ப்ரஹமாவின் கமண்டலு ஜலம் அந்தப் பகவானுடைய பாதத்தை அலம்புவதற்காக விடப்பட்டு அப்பாதத்தின் ஸம்பந்தத்தினால் பரிசுத்தமாகி ஸ்வர்க்க நதியாயிற்று. அந்த நதியே கங்கையென்று கூறப்படுகின்றது. அந்நதி பகவானுடைய கீர்த்தியைப் போல நிர்மலமாகி ஆகாயத்தில் த்ருவமண்டலத்தில் விழுந்து அங்கிருந்து கீழே பெருகி வந்து மூன்று லோகங்களையும் பவித்ரம் செய்கின்றது. அப்பால் அம்மஹாபுருஷன் தன் தேஹ விஸ்தாரத்தைக் (உடலின் நீளத்தைக்) குறுக்கிக் கொண்டான். பின்பு முன்போலவே வாமன ரூபியாயிருக்கின்ற தங்கள் நாதனாகிய பகவானுக்கு லோகநாதர்களான (உலகின் தலைவர்களான) ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் அவர்களைத் தொடர்ந்த மற்றவர்களும் ஜலங்களால் அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து வாஸனையுள்ள சிறந்த பூமாலைகளாலும் திவ்ய சந்தனப்பூச்சுக்களாலும் பரிமளமுள்ள மேலான தூபங்களாலும், தீபங்களாலும், பொரிகளாலும், அக்ஷதைகளாலும், சிறந்த பழங்களாலும் அவனுடைய வீர்யமஹிமை அமைந்த ஸ்தோத்ரங்களாலும் அத்தகைய ஜய சப்தங்களாலும் (மங்கள வார்த்தைகளாலும்) ஆடல், பாடல்களாலும் சங்கம், துந்துபி முதலிய பலவகை வாத்யகோஷங்களாலும் பூஜை செய்தார்கள்.
அப்பொழுது கரடிகளுக்கு ராஜனாகிய ஜாம்பவான் மனோவேகத்துடன் வந்து பேரி வாத்யங்களை முழக்கி எல்லாத் திசைகளிலும் பகவானுடைய ஜயத்தை விளங்கும்படி கோஷிப்பித்தான். அது மஹோத்ஸவமாயிருந்தது. மூன்றடிகள் வேண்டுமென்று கபடமாக யாசித்து யாகத்தில் தீக்ஷித்துக் கொண்டிருக்கிற தங்கள் ப்ரபுவான பலியின் பூமியையெல்லாம் பகவான் பறித்துக் கொண்டதைக் கண்டு அஸுரர்கள் அனைவரும் பெருங்கோபாவேசமுற்று இவ்வாறு மொழிந்தார்கள்.
தைத்யர்கள் சொல்லுகிறார்கள்:- ப்ராஹ்மண அதமனாகிய இவ்வாமனன் ஸாதாரணனன்று; மாயாவிகளில் சிறந்த ஒன்றான மஹாவிஷ்ணுவே. ப்ராஹ்மண வேஷத்தினால் மறைந்து வந்து தேவதைகளின் கார்யத்தைச் செய்ய விரும்புகிறான். நம் ப்ரபுவாகிய பலி யாகத்தில் தீக்ஷித்துக்கொண்டு (விரதம் மேற்கொண்டு) துஷ்டர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் துறந்திருக்கையில், ஸமயம் பார்த்துச் சத்ருவாகிய மஹாவிஷ்ணு இவ்வாறு வடுவாமன (வடுவாமனன் ப்ரஹ்மசாரிவாமனன்) வேஷம் பூண்டு மறைந்து வந்து கபடமாக யாசித்து நம் ப்ரபுவின் சொத்தையெல்லாம் பறித்துக்கொண்டான். நம் ப்ரபு எப்பொழுதுமே ஸத்யத்தினின்றும் தவறாதவன். மற்றும், இப்பொழுது யாகத்தில் தீக்ஷித்துக் கொண்டிருக்கிறான் (விரதம் மேற்கொண்டிருக்கிறான்); ப்ராஹ்மணர்களிடத்தில் பக்ஷபாதமுடையவன்; அவர்கள் சொல்லை என்றும் மறுக்கமாட்டான்; மிக்க மன இரக்கமுடையவன். ஆகையால் அவன் பொய் பேச இடமில்லை. ஆதலால் அவன் சொத்தை இழக்க வேண்டியதாய் வந்தது. அவன்மேல் தவறில்லை. வாமனனே தப்பு செய்தவன். இவனைக் கொல்லுவதே ந்யாயம். அதுவே நாம் நம் ப்ரபுவுக்குச் செய்யத் தகுந்த மேலான சுச்ரூஷையாம் (பணிவிடையாகும்).
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலியின் ப்ருத்யர்களான அஸுரர்கள் இவ்வாறு மொழிந்து கொண்டு ஆயுதங்களை எடுத்தார்கள். சூலம், பட்டயம் முதலியவற்றைக் கையிலேந்தின அவ்வஸுரர்கள் அனைவரும் கோபம் தலையெடுக்கப்பெற்றுப் பலியின் ஆஜ்ஞையையும் (கட்டளையையும்) எதிர்பாராமல் வாமனனை அடிக்க எதிர்த்தோடினார்கள். மன்னவனே! அவ்வாறு அஸுரர்கள் வாமனன்மேல் எதிர்த்து வருவதைக்கண்டு நந்தன் முதலிய பகவானுடைய பரிசாரகர்கள் ஆயுதங்களையேந்தி நகைத்து அவர்களைத் தடுத்தார்கள். நந்தன், ஸுனந்தன், ஜயன், விஜயன், ப்ரபலன், உத்பலன், குமுதன், குமுதாக்ஷன், விஷ்வக்ஸேனன், கருத்மான், ஜயந்தன், ச்ருததேவன், புஷ்பதந்தன், ஸாத்வதன் ஆகிய பகவானுடைய பரிசாரகர்கள் அனைவரும் பதினாயிரம் யானை பலமுடையவர்கள். அவர்கள் எல்லோரும் மஹாபலமுடைய அஸுர ஸைன்யங்களை அடித்தார்கள். பலியும் பரமபுருஷனுடைய பாரிஷதர்களால் (பரிசாரகர்களால்) தன் ப்ருத்யர்களான (சேவகர்களான) தைத்யர்கள் (திதியின் புத்ரர்களான அஸுரர்கள்) அடியுண்டதைக் கண்டு சுக்ரனுடைய சாபத்தையும் நினைத்து மிகவும் கோபமுற்றிருக்கின்ற தைத்யர்களைத் தடுத்தான்.
பலி சொல்லுகிறான்:- ஓ விப்ரசித்தீ! ராஹு, ஹேதீ! என் வார்த்தையைக் கேட்பீர்களாக. நீங்கள் சண்டை செய்யவேண்டாம். திரும்பி வருவீர்களாக. நமக்கு இது ப்ரயோஜனத்தைக் (பலனைக்) கை கூட்டுவிக்கும் காலமன்று. ஓ தைத்யர்களே! காலரூபியான பகவானே ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஸுகதுக்கங்களை விளைக்கிறான். எத்தகைய புருஷனும் அவனைத் தன் பல பராக்ரமாதிகளால் கடக்கமாட்டான். காலரூபியான அந்தப் பகவானே முன்பு நமக்கு ஸுகத்தை விளைத்துக்கொண்டிருந்தான். அவனே இப்பொழுது அதற்கு விபரீதமாக நமக்குத் துக்கத்தை விளைத்துக்கொண்டு தேவதைகளுக்கு ஸுகத்தை விளைக்கிறான். ஆகையால் எப்படிப்பட்ட ஜந்துவும் (பிராணியும்) தேஹ (உடல்) பலம், ஸஹாய (உதவி) பலம், புத்தி (அறிவு) பலம், துர்க்க (கோட்டை) பலம், மந்த்ர பலம் ஒளஷத (மூலிகைகள்) பலம் மற்றும் பலவகைப் பலங்கள் ஸாமம் முதலிய உபாயங்கள் ஆகிய எவற்றினாலும் காலரூபியான பகவானைக் கடக்க முடியாது. தெய்வபலம் தலையெடுத்துக் கொழுத்திருந்த நீங்கள் அந்தப் பகவானுடைய அனுசரர்களான (கட்டளையைப் பின்பற்றுகின்ற) தேவதைகளைப் பெரும்பாலும் ஜயித்திருக்கிறீர்கள். அவர்களே இப்பொழுது யுத்தத்தில் ஜயித்து ஸிம்ஹநாதம் செய்கிறார்கள். நமக்குத் தெய்வம் அனுகூலமாயிருக்குமாயின், நாம் அவர்களை ஜயிப்போம். எப்பொழுது நம் ப்ரயோஜனம் (பலன்) கைகூடுமோ அப்படிப்பட்ட காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தைத்யக் கூட்டங்களிலும், தானவக் கூட்டங்களிலும் சிறந்த அவ்வீரர்கள் அனைவரும் தங்கள் ப்ரபுவான பலியின் வார்த்தையைக் கேட்டு விஷ்ணுவின் பாரிஷதர்களால் (சேவகர்களால்) பீடிக்கப்பட்டுப் பாதாளத்திற்குள் ப்ரவேசித்தார்கள். அப்பால் ஜயலக்ஷ்மியால் பேரொளியுடன் திகழ்கின்ற கருடன் வாமன ரூபியான பகவானுடைய அபிப்ராயத்தை அறிந்து யாகத்தில் ஸுத்யையென்னும் கர்மம் நடக்கும் தினத்தினன்று வருணபாசங்களால் பலியைப் பந்தனம் செய்தான் (கட்டிப் போட்டான்). ஸர்வ சக்தியான மஹாவிஷ்ணு தைத்யர்களுக்குப் பதியான பலியைப் பிடித்துப் பந்தனம் செய்கையில் (கட்டுகையில்), ஆகாயத்திலும், பூமியிலும் மற்ற எல்லா திசைகளிலும் பெரிய ஹாஹாகாரம் ( ஹா, ஹா என்ற சப்தம்) உண்டாயிற்று. பிறகு வாமன பகவான் வருணபாசங்களால் கட்டுண்டு ஐச்வர்யத்தை இழந்தும் மனவுறுதி மாறாமல் விவேகியும் (பகுத்தறிவு உடையவனும்) பெரும் புகழனுமாய்த் திகழ்கின்ற அந்தப் பலியைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.
வாமன பகவான் சொல்லுகிறான்:- ஓ அஸுரனே! எனக்கு நீ இந்த பூமியில் மூன்றடிகள் கொடுப்பதாக ப்ரதிஜ்ஞை செய்தாய் (வாக்குக் கொடுத்தாய்). இரண்டடிகளால் த்யுலோகம் முதலிய ஸமஸ்த லோகங்களோடு கூடிய பூமியையெல்லாம் அளந்து பெற்றுக்கொண்டேன். மூன்றாமடிக்கு இடம் கொடுப்பாயாக. இந்த ஸூர்யன் எதுவரையில் தன் கிரணங்களால் விளங்கச் செய்கிறானோ, சந்தரன் நக்ஷத்ரங்களோடு கூடி தான் எதுவரையில் விளங்கச் செய்கிறானோ, அக்னியும், மேகமும் எதுவரையில் இருக்கின்றனவோ, அதுவரையிலுமே இந்தப் பூமி உன் அதிகாரத்திற்குட்பட்டது. அப்படிப்பட்ட இப்பூலோகத்தையெல்லாம் நான் ஒரே அடியினால் அளந்தேன். ஆகாயமும், திசைகளும் சரீரத்தினால் ஆக்ரமிக்கப்பட்டன. என்னுடையதான ஸ்வர்க்கலோகத்தை இரண்டாம் அடியினால் அளந்தேன். இஃதெல்லாம் நீ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நடந்ததேயன்றி மறைவில் நடக்கவில்லை. ப்ரதிஜ்ஞைசெய்த (வாக்குக் கொடுத்த) மூன்றாமடியைக் கொடாத நீ நரகத்தில் தான் வஸிக்க வேண்டியதாயிருக்கிறது. உன் ஆசார்யனாகிய சுக்ரனும் இதை முன்னமே ஒப்புக்கொண்டிருக்கிறான். ஆகையால் நீ நரகம் போய்ச் சேருவாயாக. எவன் ஒருவனுக்கு ஒன்று கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து (வக்குக் கொடுத்து) அதைக் கொடுக்க வல்லமையற்றிருக்கிறானோ அவனுடைய மனவிருப்பம் வீணேயாம். அவனுக்கு ஸ்வர்க்கம் வெகுதூரத்தில் இருக்குமேயன்றி எப்பொழுதும் கிட்டாது. அவன் அதோகதியான (கீழான) நரகத்தையே அடைவான். நீ உன்னை மிகவும் நிறைவாளனாகப் பாவித்துக்கொண்டு இப்பொழுது எனக்குக் கொடுக்கிறேனென்று சொல்லி என்னை வஞ்சித்தாய். ஆகையால் அந்தப் பொய்யின் பலனாகச் சில வர்ஷங்கள் நரகத்தை அனுபவிப்பாயாக.
இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.