செவ்வாய், 15 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 188

 எட்டாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(பலி விஷ்ணுவின் கபடத்தை (சூதை, ஏமாற்றுவதை) அறிந்தும் பொய் பேசப் பயந்து ப்ரதிஜ்ஞை செய்தபடி கொடுக்கையும், பகவான் வளர்ந்து உலகங்களை அளத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! யாகம் செய்கின்ற பலி தன் குல ஆசார்யனாகிய சுக்ரனால் இவ்வாறு சொல்லப்பெற்று க்ஷணகாலம் ஒன்றும் பேசாதிருந்து தான் செய்ய நினைத்ததையே நிச்சயித்துக்கொண்டு சுக்ராசார்யனை நோக்கி மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- நீர் சொன்னது வாஸ்தவமே (உண்மையே). இது க்ருஹஸ்தர்களின் (இல்லறத்தில் இருப்பவர்களின்) தர்மம்தான். இது க்ருஹஸ்தர்களின் (இல்லறத்தில் இருப்பவர்களின்) அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), புகழ், ஜீவனம் இவைகளை எவ்விதத்திலும் அழிக்காது. பாதுகாத்துக் கொடுக்கும். நானும் க்ருஹஸ்தனே (இல்லறத்தனே). ஆயினும் ப்ரஹ்லாதனுடைய பேரனாகிய நான் கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து (வாக்குக் கொடுத்து) இப்பொழுது பொருளாசையால் வஞ்சகனைப் போல ப்ராஹ்மணனை எப்படி நிராகரிப்பேன்? இந்தப் பூமிதேவி “அஸத்யத்தைக் (பொய்யைக்) காட்டிலும் வேறு அதர்மம் கிடையாது” என்று மொழிந்தாள். “பொய் பேசும் புருஷனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் தரிப்பேன்” என்று நினைத்தாள். “மேரு மந்தராதி பர்வதங்களைத் தாங்குவதுங்கூட எனக்கு வருத்தமன்று. பொய்பேசும் புருஷனைத் தரிப்பது எனக்குப் பொறுக்க முடியவில்லை” என்பது பூமியின் கருத்து. ஆகையால் நான் எப்படிப் பொய் சொல்லுவேன்? மற்றும், நான், நரகம், ஏழ்மை, ஸமுத்ரம் போல் கடக்க முடியாத பெருந்துயரம், ஸ்தானத்தினின்று நழுவுதல், மரணம் ஆகிய இவற்றுள் எதனின்றும் பயப்படவில்லை. ப்ராஹ்மணனை ஏமாற்றுகையாகிற இம்மஹாபாபத்தினின்றுமே நான் பயப்படுகிறேன். 

பூமி முதலிய எல்லாப் பொருள்களும், புருஷன் மரணம் அடைந்த பின்பு அவனை இவ்வுலகத்திலேயே துறக்கப்போகின்றனவல்லவா? அத்தகைய பொருள்களைப் புருஷன் தான் ஜீவித்திருக்கும் பொழுதே ஏன் கொடுக்கலாகாது. எதைக் கொடுத்தால் ப்ராஹ்மணன் ஸந்தோஷம் அடையமாட்டானோ, அப்படிப்பட்ட வஸ்துவைக் கொடுப்பதனால் என்ன உபயோகம்? அவன் ஒன்று கேட்க, நாம் மற்றொன்றைக் கொடுத்தால் அவனுக்கு எப்படி ஸந்தோஷம் உண்டாகும்? அவன் ஸந்தோஷம் அடையவில்லையாயின், அந்தக் கொடை வீண். ததீசர், சிபி முதலிய பெரியோர்கள் துறக்க முடியாத ப்ராணன்களாலும் ப்ராணிகளுக்கு நன்மையைச் செய்தர்கள். இனி பூமி முதலிய மற்ற வஸ்துக்களைப் பற்றி விசாரிக்க வேண்டுமோ. 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! அஸுர ச்ரேஷ்டர்களான எங்கள் முப்பாட்டன் முதலியவர்கள் யுத்தத்தில் பின்வாங்காத மஹாவீரர்களாயிருந்து இப்பூமியை ஆண்டு வந்தார்கள். அவர்களுடைய போகங்களை (ஐச்வர்யம், அனுபவம் இவற்றை) மாத்திரம் காலமானது பாழ்செய்துவிட்டதேயன்றி, அவர்கள் புகழைப் பாழ்செய்யவில்லை. அது இப்பொழுதும் தொடர்ந்து வருகின்றது. ப்ரஹ்மர்ஷீ! யுத்தத்தில் பின்வாங்காமல் தேஹத்தைத் (உடலைத்) துறப்பவர்கள் பலரும் ஸுலபமாகக் கிடைக்கக்கூடியவர்கள் தான். அத்தகையர் பலர் உண்டாயிருந்தார்கள். ஆனால், ஸத்பாத்ரம் (தானம் பெறத் தகுதியுடைய நல்லவர்) நேரும்பொழுது தம்முடைய சொத்தையெல்லாம் ச்ரத்தையுடன் கொடுத்தவர்கள் எவருமே இல்லை. இது ஒருவராலும் செய்ய முடியாத கார்யம். ஆகையால் இதை நான் அவச்யம் செய்ய வேண்டும். யாசகர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதனால் ஏழ்மை உண்டாகுமாயின் விவேகியும் (பகுத்தறிவு உடையவனும்) மன இரக்கமுடையவனுமாகிய ஸாதாரண புருஷனுக்கும் அது க்ஷேமந்தான். ப்ரஹ்ம வித்துக்களான (பர தத்வத்தை அறிந்த) உம்மைப் போன்றவர்களுக்கு அது க்ஷேமமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

ஆகையால் இந்த ப்ரஹ்மசாரியின் விருப்பத்தைக் கொடுப்பது எனக்கு யுக்தமே (ஏற்றதே). வேதங்களில் விதிக்கப்பட்ட யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை அனுஷ்டிப்பதில் ஸமர்த்தர்களான உம்மைப் போன்ற பெரியோர்கள் ஸோம யாகங்களாலும் (ஸோம ரஸத்துடன் கூடிய யாகங்களாலும்) ஸோமம் அல்லாத யாகங்களாலும் (ஸோம ரஸம் இல்லாத யாகங்களாலும்) எவனை மிக்க ஆதரவுடன் ஆராதிக்கிறார்களோ, அப்படிப்பட்ட ஒன்றான பகவான் தானே இவ்வாறு ப்ரஹ்மசாரி வேஷம் பூண்டு வந்திருப்பின், அவன் எனக்கு இப்பொழுது வரங்கொடுப்பவனாயினும் ஆகட்டும்; அல்லது சத்ருவாயினும் (எதிரியாயினும்) ஆகட்டும். முனிவரே! நான் இவன் விரும்பும் பூமியை இவனுக்குத் தடையின்றிக் கொடுக்கப் போகிறேன். “மூன்றாமடிக்கு இடமில்லாமையால் உன்னை இவன் பந்தனம் செய்வானே (கட்டுப்படுத்துவானே)” என்றால், சொத்தையெல்லாம் கொடுத்து நிரபராதியான என்னை இவன் அதர்மத்தினால் பந்தனம் செய்தாலும் (கட்டுப்படுத்தினாலும்) செய்யட்டும். அது எனக்குப் பொருளன்று. அதற்காக நான் ப்ராஹ்மண உருவம் கொண்ட இவனை வதிக்கமாட்டேன். ஒருகால் இவன் உத்தமச்லோகனாகிய விஷ்ணுவாயிருப்பானாயின், என் சொத்தையெல்லாம் பெற்றுக்கொண்டு என்னைப் பந்தனம் செய்கையாகிற (கட்டுப்படுத்துகையாகிய) பாபகர்மத்தினால் தன் புகழைப் பாழ் செய்ய விரும்பமாட்டான். ஆனால் என்ன செய்வானென்றால், என்னை யுத்தத்தில் வதித்து இந்தப் பூமியைப் பறித்துக்கொண்டு போவான். என்னை வதிக்கவல்லமை அற்றிருப்பானாயின், என்னால் அடியுண்டு பூமியில் சயனிப்பான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சுக்ரன் தன் சிஷ்யனாகிய பலி இவ்வாறு தன் கட்டளையில் ச்ரத்தையின்றி (நம்பிக்கை இன்றி) அதை ஏற்றுக்கொள்ளாதிருக்கையில், தெய்வத்தினால் தூண்டப்பெற்று, ஸத்யம் தவறலாகாதென்னும் மனவுறுதியுடையவனும் விவேகியுமாகிய (பகுத்தறிவு உடைய) அந்தப்பலியைச் சபித்தான்.

சுக்ரன் சொல்லுகிறான்:- நீ தன்னைத்தானே பண்டிதனாகப் பாவித்துக் கொண்டிருக்கின்றாய். இது நிச்சயம்  உண்மையில் நீ ஒன்றும் தெரியாத மூடன். ஆகையால்தான் சொத்தெல்லாம் அழிந்து போகும்படியான ஸமயத்திலும் திறமையற்றிருக்கின்றாய். நீ உன் குருவாகிய என்னை உபேக்ஷித்து (பொருட்படுத்தாது) என் கட்டளையைக் கடந்தனையாகையால் சீக்ரத்திலேயே மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாயிருக்கிற ஐச்வர்யத்தினின்றும் நழுவப் போகின்றாய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் குருவினால் சபிக்கப்பெற்றும் ஸத்யத்தினின்று தவறாமல் தன் ஸங்கல்பம் உறுதியாயிருக்கப் பெற்ற மஹானுபாவனாகிய பலி வாமனனைப் பூஜித்து உதகதாரா பூர்வகமாக (நீர் வார்த்து) அவனுக்கு இப்பூமியைக் கொடுத்தான். முத்துக்களால் இயற்றின ஆபரணம் அணிந்த விந்த்யாவளியென்னும் பேருடைய பலியின் பார்யை அப்பொழுது பாதப்ரக்ஷாளனத்திற்காக (வாமனனின் பாதங்களைக் கழுவ) ஜலம் நிறைந்த பொற்குடம் கொண்டு வந்தாள். அப்பால் யஜமானனாகிய பலி மனக்களிப்புடன் அந்தப் பகவானுடைய அழகான பாதங்களைக் கழுவி உலகங்களையெல்லாம் புனிதம் செய்யவல்ல அந்த ஜலத்தைத் தன் தலையில் தரித்தான். அப்பொழுது தேவதைகளும், கந்தர்வர், வித்யாதரர், ஸித்தர், சாரணர் முதலியவர்களும் நிர்பயமாக (பயமின்றி) ஆகாயத்தில் நின்று மனக்களிப்புடன் அவன் செய்யும் தானத்தைப் புகழ்ந்து அஸுர ச்ரேஷ்டனாகிய அவன்மேல் ப்ரீதியுடன் பூமழை பொழிந்தார்கள். அனேகமாயிரம் துந்துபி வாத்யங்கள் அடிக்கடி முழங்கின. கந்தர்வர்களும், கிம்புருஷர்களும், கின்னரர்களும் “ஆழ்ந்த மனமுடைய இந்தப் பலி செய்யும் கார்யம் மற்ற எவராலும் செய்ய முடியாதது. இவன் தெரிந்தும் த்ரிவிக்ரமனான பகவானுக்கு மூன்று லோகங்களையும் கொடுத்தான்” என்று அவன் செயலைப் பற்றிப் பாடினார்கள். அப்பொழுது அவ்வாமனனுடைய உருவம் வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்த பகவானுடைய அவ்வுருவம் ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற முக்குணங்களின் பரிணாமமான இவ்வுலகமெல்லாம் தன்னில் அடங்கப் பெற்றிருந்தது. மற்றும் பூமி, ஆகாயம், ஸ்வர்க்கம், திசைகள், அதலம் முதலிய அதோலோகங்கள் (கீழ் உலகங்கள்), ஸமுத்ரங்கள், திர்யக்குகள் (விலங்குகள்), மனுஷ்யர், தேவர், முனிவர் ஆகிய எல்லாரும் அவ்வுருவத்தில் இருந்தன.

அப்பொழுது ருத்விக்குகள், ஆசார்யர்கள், ஸபிகர்கள் இவர்களோடு கூடிய பலி அளவிறந்த ஐச்வர்யமுடைய அந்தப் பகவானுடைய ஜகத்திற்கெல்லாம் ஆதாரமான அவ்வுருவத்தில் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் பரிணாமமும் பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், சப்தாதி விஷயங்கள், அந்தக்கரணம், ஜீவாத்மாக்கள் ஆகிய இவற்றோடு கூடின ப்ரபஞ்சத்தையெல்லாம் கண்டான். பலி, ஜகத்தெல்லாம் தனக்குச் சரீரமாகப் பெற்றவனும் மஹாபுருஷனுமாகிய அந்தப் பகவானுடைய உள்ளங்காலில் அதோ (கீழ்) லோகத்தையும், பாதங்களில் பூலோகத்தையும், கணைக்கால்களில் பர்வதங்களையும் (மலைகளையும்), முழங்கால்களில் பக்ஷிகளையும் (பறவைகளையும்), துடைகளில் காற்றுத் தொகுதியையும் கண்டான். மற்றும், அவன், எங்கும் நிறைந்திருப்பவனான அந்தப் பகவானுடைய வஸ்த்ரத்தில் ஸந்த்யாகாலத்தையும், மறைவிடத்தில் ஏழு ப்ரஜாபதிகளையும், இடுப்பின் பின்புறம் தன்னை முதலாகவுடைய அஸுரர்களையும், நாபியில் அந்தரிக்ஷத்தையும், வயிற்றில் ஏழு ஸமுத்ரங்களையும், மார்பில் நக்ஷத்ரங்களின் வரிசையையும் கண்டான். 

ஓ மன்னவனே! மற்றும், அந்தப் பகவானுடைய ஹ்ருதயத்தில் தர்மத்தையும், ஸ்தனங்களில் ஸத்யத்தையும், மனத்தில் சந்த்ரனையும், வக்ஷஸ்தலத்தில் கையில் தாமரை மலரேந்தின ஸ்ரீமஹாலக்ஷ்மியையும், கண்டத்தில் ஸாமவேதங்களையும் மற்றுமுள்ள ஸமஸ்த சப்தங்களையும், புஜங்களில் இந்த்ரன் முதலிய தேவதைகளையும், காதுகளில் திசைகளையும், சிரஸ்ஸில் த்யுலோகத்தையும், தலைமயிர்களில் மேகங்களையும், மூக்கில் ப்ராண வாயுவையும், கண்களில் ஸூர்யனையும், முகத்தில் அக்னியையும், வாக்கில் வேதங்களையும், நாக்கில் வருணனையும், புருவங்களில் செய்ய வேண்டியது, செய்ய வேண்டாதது என்கிற சாஸ்த்ரங்களையும், இமை மயிர்களில் பகல் இரவுகளையும், நெற்றியில் கோபத்தையும், கீழுதட்டில் பேராசையையும், தோல் இந்த்ரியத்தில் காமத்தையும், ரேதஸ்ஸில் (விந்துவில்) ஜலத்தையும், முதுகில் அதர்மத்தையும், அடிவைப்புக்களில் யஜ்ஞத்தையும், நிழலில் ம்ருத்யுவையும் (மரணத்தையும்), சிரிப்பில் மாயையையும், ரோமங்களில் ஓஷதி (மூலிகை) வகைகளையும், நரம்புகளில் நதிகளையும், நகங்களில் கற்களையும், புத்தியில் ப்ரஹ்மதேவனையும், இந்திரியங்களில் தேவதைகளையும் ரிஷிகளையும் கண்டான். 

ஆயிரம் சொல்லியென்ன? அந்தப் பகவானுடைய சரீரத்தில் ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களும் (வேறானவைகளும்) ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபங்களுமான ஸமஸ்த பூதங்களையும் கண்டான். ஸமஸ்த லோகங்களுக்கும் ஆதாரனான பகவானிடத்தில் இவ்வாறு உலகத்தையெல்லாம் கண்ட அஸுரர்கள் அனைவரும் இது என்னவென்று வியப்புற்றார்கள். பிறரால் பொறுக்க முடியாத ஒளியுடைய ஸுதர்சன சக்ரமும், மேகத்தின் கர்ஜனம் போன்ற கோஷமுடைய (ஒலி உடைய) சார்ங்கமென்னும் வில்லும், மேகத்தின் கோஷமுடைய பாஞ்சஜன்யமென்னும் சங்கமும், மிகுந்த பலமுடைய கௌமோதகியென்னும் கதையும், வித்யைக்கு ஆதாரமாய் வித்யாதரமென்றும், நந்தகமென்னும் பேருடைய கத்தியும், சந்திரன் போன்ற பல மண்டலங்கள் நிறைந்த கேடயமும், அழியாத பாணங்களையுடைய சிறந்த இரண்டு அம்பறாத்தூணிகளும், ஸுநந்தர் முதலிய பாரிஷதர்களும், லோகபாலர்களும் அந்தப் பகவானுக்கருகில் தங்கள் தங்கள் இடங்களில் இருந்தார்கள். 

மன்னவனே! மூன்றடிகளால் உலகங்களையெல்லாம் அளக்க முயன்ற அந்தப் பகவான், திகழ்கின்ற கிரீடம், தோள்வளை, மகர குண்டலம், ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளம், ரத்னங்களில் சிறந்த கௌஸ்துபம், அரைநாண்மாலை, பீதாம்பாம், வண்டினங்கள் நிறைந்த வனமாலை ஆகிய இவைகளால் அலங்காரமுற்று விளங்கினான் அவன், பலி ஆண்டு வருகின்ற பூலோகத்தை ஒரு பாதத்தினாலும், அந்தரிக்ஷலோகத்தைச் (ஆகாசத்தை) சரீரத்தினாலும், திசைகளைப் புஜங்களாலும் (கைகளாலும்) ஆக்ரமித்தான். இரண்டாவது பாதத்தினால் த்யுலோகத்தை ஆக்ரமித்தான். அந்தப் பகவானுடைய மூன்றாவது அடிக்குப் பலியினுடைய பொருள் ஒரு அணுமாத்ரமும் மிகுந்திருக்கவில்லை. அப்பால் அந்த த்ரிவிக்ரமனுடைய இரண்டாம் பாதம் த்யுலோகத்தைக் கடந்து மேன்மேலும் சென்று மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம் ஆகிய இவ்வுலகங்களுக்கெல்லாம் அப்புறத்திலிருக்கின்ற ஸத்யலோகம் போய்ச் சேர்ந்தது. 

இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக