திங்கள், 14 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 187

 எட்டாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(பகவான் மூன்றடி பூமி வேண்டுதலும், பலி கொடுப்பதாக ஒப்புக்கொள்ளச் சுக்ரன் வேண்டாமென்று தடைசெய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தர்மம் அமைந்து உண்மையும் மதுரமுமாக மொழிந்த பலிசக்ரவர்த்தியின் வசனத்தைக் கேட்டுப் பகவான் ஸந்தோஷம் அடைந்து அவனைப் புகழ்ந்து இதை மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ மன்னவனே! உன் வசனம் உண்மையும் ப்ரியமுமாயிருக்கின்றது. மற்றும், இது உன் குலத்தின் பெருமைக்குப் பொருந்தித் தர்மம் அமைந்து புகழையும் விளைக்கவற்றாய் இருக்கின்றது. நீ பரலோக ஸாதனமான தர்மத்தின் நிர்ணயத்திற்காக உன் பாட்டனும் உன் குலத்தில் வயது முதிர்ந்தவனும் மிக்க சாந்தனுமாகிய ப்ரஹ்லாதனையே ப்ரமாணமாகக் கொண்டிருக்கின்றாய். ப்ரஹ்லாதனுடைய ஆசாரத்தினாலேயே (நடத்தையாலேயே) அவனுடைய வம்சத்தில் பிறந்த உன்னுடைய ஆசாரமும் (நடத்தையும்) நன்றாயிருக்குமென்று தெரிகின்றது. இந்த உன் வம்சத்தில் யாசிக்கும் ப்ராஹ்மணனுக்கு இல்லையென்று சொல்லுகிற நிஸ்ஸத்வனாவது (ஸத்வ குணம் நிரம்பப் பெறாதவனாவது) கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து (வாக்குக் கொடுத்து) கொடாதிருக்கிற க்ருபணனாவது (மட்டமான கஞ்சனாவது) இதுவரையில் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. இப்பொழுது பிறந்திருக்கிறானென்பதும் இல்லை. மன்னவனே! தானம் செய்ய வேண்டிய காலத்தில் யாசகன் கேட்ட பின்பு கொடுக்கிறவனும் யுத்தத்தில் பின் வாங்குகிறவனும் ஸ்வதந்த்ரமில்லாதவர்களும் (தன் விருப்பப்படி செய்ய வல்லமை இல்லாதவர்களும்) இந்த வம்சத்தில் மூன்று தலைமுறையாகக் கிடையாது. ஆகாயத்தில் சந்திரன் போல், இந்த வம்சத்தில் ப்ரஹ்லாதன் மிக்க புகழுடன் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறானல்லவா? 

இந்த வம்சத்தில் பிறந்த ஹிரண்யாக்ஷன் தானொருவனே கதையை ஆயுதமாகக் கொண்டு திக்விஜயத்திற்காக இந்தப் பூமியெல்லாம் திரிந்தும் தன்னோடு எதிர்த்துச் சண்டை செய்யும் வீரன் எவனும் கிடைக்கப்பெறவில்லை. மஹாஜலத்தில் பூமியை மேலுக்கெடுப்பதற்காக வராஹ உருவம்கொண்ட மஹாவிஷ்ணு அவனை மிகவும் ப்ரயாஸப்பட்டுக் (முயற்சி செய்து) கொன்று தான் ஜயித்ததாக நினைத்தான். ஆகையால் அந்த ஹிரண்யாக்ஷனுடைய வீர்யம் அளவற்றதென்று அறிவாயாக. இவ்வாறு இந்த வம்சத்தில் பிறந்தவர்கள் யுத்த வீரர்களாகி ப்ராண ஆபத்திலும் (உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதும்) பின் வாங்கமாட்டார்கள். அந்த ஹிரண்யாக்ஷனுடைய வதத்தைக் கேட்டு அவனுடைய ப்ராதாவாகிய (உடன் பிறந்தவனாகிய) ஹிரண்யகசிபு முன்பு கோபாவேசம் கொண்டு தன் ப்ராதாவைக் (உடன் பிறந்தவனைக்) கொன்ற விஷ்ணுவை வதிக்கும் பொருட்டு அவ்விஷ்ணுவின் ஸ்தானத்திற்குச் சென்றான். அம்மஹாவிஷ்ணுவும் சூலத்தைக் கையிலேந்தி ம்ருத்யுவைப் (எமனைப் / மரணத்தைப்) போல் வருகின்ற அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டு இவனை வெல்ல முடியாதென்று நினைத்து மாயாவிகளில் சிறந்தவனும் அந்தந்த ஸமயங்களுக்குத் தகுந்த ப்ரயோஜனங்களை அறிந்தவனுமாகிய அவ்விஷ்ணு “நான் எங்கெங்குப் போகிறேனோ அங்கங்கெல்லாம் இந்த ஹிரண்யகசிபு ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் (எமனைப் / மரணத்தைப்) போன்று வந்து நிற்கின்றான். ஆகையால் இப்பொழுது வெளியில் புலப்படுகிற நான் இவனுடைய ஹ்ருதயத்தில் ப்ரவேசிக்கிறேன்” என்று சிந்தித்தான். 

அஸுரச்ரேஷ்டனே! அவ்விஷ்ணு இவ்வாறு நிச்சயித்துக்கொண்டு அதற்காக அங்கு ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிற ஹிரண்யகசிபுவின் சரீரத்தில் ப்ரவேசித்தான். அதிலும் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தால் நம்மை இவன் தெரிந்து கொள்வானென்று நிச்சயித்து அவனுடைய மூச்சுக்காற்றில் மறைந்து ஸூக்ஷ்ம சரீரமுடையவனாகி மனநடுக்கமுற்று மூக்கு ரந்தரத்தில் (த்வாரத்தில்) உள்ளும், புறமும் உலாவிக்கொண்டிருக்கிற காற்றோடு காற்றாயிருந்தான். அப்பால் தைத்யராஜனாகிய அந்த ஹிரண்யகசிபு சூன்யமாயிருக்கிற அந்தப் பகவானுடைய க்ருஹம் முழுவதும் தேடியும் அவனைக் காணாமல் கோபித்து நான் ஜயித்தேனென்று ஸிம்ஹநாதம் செய்தான். மீளவும் அவ்வீரன் பூமியிலும், ஸ்வர்க்கத்திலும், திசைகளிலும் அந்தரிக்ஷத்திலும் (ஆகாசத்திலும்) அதலம் முதலிய விவரங்களிலும் (கீழ் லோகங்களிலும்) ஸமுத்ரங்களிலும் விஷ்ணுவைத் தேடியும் காணவில்லை. இவ்வாறு காணப்பெறாத அவ்வஸுரராஜன் “உலகமெல்லாம் தேடினேன். என் ப்ராதாவைக் கொன்றவன் எங்கும் புலப்படவில்லை. எங்கு போனவர் மீண்டு வருகிறதில்லையோ, அவ்விடத்திற்கே அவன் போனான். மரணம் அடைந்தான். இது நிச்சயம். இவ்வுலகத்தில் ப்ராணிகளுக்கு ஒருவர்க்கொருவர் த்வேஷம் (பகைமை) உண்டாயிருக்குமாயின், அது மரணம் வரையில் தொடர்ந்து வருமேயன்றி அதற்கு மேல் தொடராது. ஏனென்றால், கோபம் தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறியாமையால் உண்டாகின்றது. தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தினால்) வெளியாகின்றது. தேஹம் தொலைந்த பின்பு கோபமும் தொலைந்து போகின்றது. ஆகையால் அதை உபேக்ஷிக்க (விட்டு விட) வேண்டுமேயன்றி இனித் தொடரலாகாது” என்று அவன் நிச்சயித்துக் கோபத்தை மாற்றிக்கொண்டிருந்தான். ப்ரஹ்லாதனுடைய பிள்ளையும் உன் தந்தையுமாகிய விரோசனன் தந்தை பாட்டன்மார்களுடைய நடத்தையை அறிந்து ப்ராஹ்மணர்களிடத்தில் ப்ரீதியுடையவனாய் இருந்தான். அவன் ப்ராஹ்மண வேஷம் தரித்து யாசகர்களாய் வந்த தேவதைகளுக்குத் தன் ஆயுஸ்ஸை மனவிருப்பத்துடன் கொடுத்தான். நீ, க்ருஹஸ்தர்களான ப்ருகுக்கள் முதலிய ப்ராஹ்மணர்களும், உன் குலத்தில் பிறந்த பெரியோர்களான விரோசனன் முதலியவர்களும் பெரும்புகழுடையவர்களும், சூரர்களுமான மற்றவர்களும் அனுஷ்டித்து வந்த தர்மங்களை அனுஷ்டிக்கின்றாய். 

தைத்ய ச்ரேஷ்டனே! அப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்து தர்மிஷ்டனுமாகிய உன்னிடத்தில் நான் என் காலால் அளக்கப்பட்ட மூன்றடி அளவுள்ள சிறிது பூமியை வேண்டுகிறேன். நீ விரும்பின வரங்களைக் கொடுப்பவர்களில் சிறந்தவன். ஆகையால் உனக்கு இது ஒரு பொருளன்று. ராஜனே! நீ உலகங்களுக்கெல்லாம் ப்ரபுவாயிருக்கின்றாய் மற்றும் தாராளமாய்க் கொடுக்குந் தன்மையும் அமையப்பெற்றிருக்கின்றாய். ஆயினும் உன்னிடத்தினின்று நான் இவ்வளவு மாத்ரமே விரும்புகிறேனன்றி, மற்றொன்றும் விரும்பவில்லை. புண்ய, பாபங்களின் ஸ்வரூபத்தை அறிந்த அறிஞன் தனக்கு எவ்வளவு பொருள் வேண்டுமோ அவ்வளவு மாத்ரமே விரும்புவானாயின் அவன் அதனால் பாபத்தை அடையமாட்டான். அதற்கு மேல் விரும்புவானாயின், பாபிஷ்டனாவான்.

பலி சொல்லுகிறான்:- ஓ ப்ராஹ்மண குமாரனே! உன் வார்த்தைகள் வ்ருத்தர்களாலும் (பெரியோர்களாலும்) புகழத் தகுந்தவைகளாய் இருக்கின்றன. ஆயினும் நீ பாலனாயிருக்கின்றாய். உன் புத்தி ஒன்றுமறியாத மூடர்களின் புத்தியைப் போன்றிருக்கின்றது. ஆகையால் உன் ப்ரயோஜனத்தை நீ உள்ளபடி அறியமாட்டாதிருக்கின்றாய். உலகங்களுக்கெல்லாம் தனியாளனாகிய என்னைப் பெரியோர்களும் புகழும்படியான வார்த்தைகளால் அருள்புரிவித்து மிகவும் சிறியதான உன் பாதத்தினால் மூன்றடி அளவுள்ள பூமியை வேண்டுகின்றாய். ஜம்பூத்வீபம் முதலிய த்வீபத்தையும் கொடுக்கவல்ல என் பெருமையை அறியாமல் இவ்வாறு வேண்டுகின்றாயாகையால் நீ மூடபுத்தியன் (அறிவி அற்றவன்) என்று தோன்றுகிறது. என்னிடம் வந்து யாசித்த புருஷன் மீளவும் மற்றொருவனிடம் ஒன்று யாசிக்க உரியவனல்லன். ஓ மாணியே! (சிறுவனே!) ஆகையால் உன்னிஷ்டப்படி பெரிய ஜீவனத்தை விளைக்கும்படியான பூமியை என்னிடத்தினின்று பெற்றுக்கொள்வாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மன்னவனே! மூன்று லோகங்களிலும் எவ்வளவு தேசங்கள் இருக்கின்றனவோ, அவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளினும், அவையும் இந்திரியங்களை (புலன்களை) வெல்ல முடியாத மூடர்களை நிரம்பினவர்களாகச் செய்ய வல்லவையாக மாட்டாது. மூன்று அடிகளால் ஸந்தோஷப்படாத மனிதன் ஒன்பது கண்டங்கள் அமைந்த ஜம்பூத்வீபத்தைப் பெற்ற பின்பும், சிறப்புடையவைகளான ஏழு த்வீபங்களும் வேண்டுமென்னும் விருப்பம் உண்டாகப்பெற்று அவ்வளவில் த்ருப்தி அடையமாட்டான். ப்ருது, கயன் முதலிய மன்னவர்கள் ஏழு த்வீபங்களுக்கு ப்ரபுக்களாயிருந்தும் அர்த்த காமங்களில் மேன்மேலும் ஆசை உண்டாகப் பெற்று அவ்வாசைக்கு முடிவு நேரப் பெறாமலே இருந்தார்களென்று எங்களுக்குக் கேள்வி. 

தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருப்பவன் ஸுகமாயிருப்பான். இந்தரியங்களை வெல்ல முடியாமையால் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் அடையாமல் மேன்மேலும் விரும்புகிறவன் மூன்று லோகங்களைப் பெற்றாலும் ஸுகமாயிருக்கமாட்டான். அர்த்த (பொருள்) காமங்களில் (இன்பம்) தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாதிருப்பானாயின், அந்த அதிருப்தி அவனுக்கு மேன்மேலும் ஸம்ஸார பந்தத்திற்கு ஹேதுவாம் (காரணமாகும்). தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்திருப்பானாயின், அது மோக்ஷத்திற்கு ஹேதுவாம் (காரணமாகும்). இவ்வாறு பெரியோர்கள் சொல்லுகிறார்கள். ப்ராஹ்மணன் தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்திருப்பானாயின், அவனுக்குத் தேஜஸ்ஸு வளர்ந்து வரும். அவ்வாறு திருப்தி அடையாமல் மேன்மேலும் ஆசைப்படுவானாயின், ஜலத்தினால் அக்னி அணைவதுபோல அவனுக்கு உள்ள தேஜஸ்ஸும் நசித்துப்போகும். 

வரம் கொடுப்பவர்களில் சிறந்தவனே! ஆகையால் மூன்று அடி அளவுள்ள பூமியையே நான் வேண்டுகிறேன். நான் இவ்வளவில் ப்ரயோஜனம் கைகூடப்  பெறுகிறேன். எந்த வஸ்துவும் தன் ப்ரயோஜனத்திற்குப் போதுமானவளவாய் இருந்தால்தான் ஸுகத்தைக் கொடுக்கும்; அதிகமாயிருந்தால் துக்கத்திற்கிடமாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லப்பட்ட பலி சிரித்துக்கொண்டே “ஆனால் உனக்கு இஷ்டமான அளவு பெற்றுக்கொள்வாயாக” என்று மொழிந்து வாமனனுக்குப் பூமியைக் கொடுக்க ஜல பாத்ரத்தை (நீர் உள்ள பாத்திரத்தை) எடுத்தான். அப்பொழுது வாமனனுக்குப் பூமியைக் கொடுக்க முயன்றிருக்கிற சிஷ்யனாகிய அஸுர ச்ரேஷ்டனைக் கண்டு விஷ்ணுவின் அபிப்ராயத்தை அறிந்த சுக்ரன் மூன்று காலங்களையும் அறிந்தவர்களில் சிறந்தவனாகையால் இவ்வாறு மொழிந்தான்.

சுக்ரன் சொல்லுகிறான்:- விரோசன் புத்ரனே! இவ்வாமனன் ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) அழிவற்றவனுமாகிய ஒன்றான விஷ்ணுவே. தேவதைகளின் கார்யத்தை நிறைவேற்றும் பொருட்டு அவ்விஷ்ணுவே கச்யபரிடத்தினின்று இவ்வாறு வாமனனாய் அவதரித்தான். இவன் மூன்றடிகள் என்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால்) மூன்று லோகங்களையும் வாங்கி தேவதைகளுக்குக் கொடுக்கப்போகிறான். இத்தகையனாகிய இவ்வாமனனுக்கு நீ உனக்கு வரப்போகிற கெடுதியை அறியாமல் மூன்றடி பூமி கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்தாய் (வாக்குக் கொடுத்தாய்). இது எனக்கு யுக்தமாய்த் (ஸரியாகத்) தோன்றவில்லை. இதனால் தைத்யர்களுக்குப் பெரிய அநீதி வந்துவிட்டது. மாயையினால் ப்ரஹ்மசாரியின் உருவம் தரித்திருக்கிற இவ்வாமனன் உன்னுடைய ஸ்தானம், ஐச்வர்யம், ஸம்பத்து, தேஜஸ்ஸு எங்கும் நிறைந்திருக்கின்ற புகழ் ஆகிய இவற்றையெல்லாம் உன்னிடத்தினின்று பிடுங்கி இந்திரனுக்குக் கொடுக்கப்போகிறான். இவன் விச்வரூபனாகி மூன்றடிகளால் மூன்று லோகங்களையும் அளக்கப்போகிறான். அளந்து கொண்டு போகட்டுமே என்கிறாயோ? மூடா! சொத்தையெல்லாம் விஷ்ணுவுக்குக் கொடுத்துவிட்டு நீ எப்படி இருக்கப்போகிறாய்? ஆயினும் ப்ரதிஜ்ஞையை (கொடுத்த வாக்கை) நிறைவேற்ற வேண்டுமே என்கிறாயோ? 

ஓரடியினால் பூமியையும், மற்றோரடியினால் த்யுலோகத்தையும் அளந்து பெரிய சரீரத்தினால் அந்தரிக்ஷத்தையெல்லாம் (ஆகாசத்தை எல்லாம்) வியாபிக்கப்போகிற இந்தப் பகவானுடைய மூன்றாவது அடிக்கு என்ன கதி; மூன்றாவது அடிக்கு இடமில்லாமையால் நீ கொடுத்தும் உன் ப்ரதிஜ்ஞை (வாக்கு) நிறைவேறாது. ப்ரதிஜ்ஞை செய்ததைக் (வாக்குக் கொடுத்ததைக்) கொடுக்க முடியாத உனக்கு நரகமே கதி என்று எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் சொத்தையெல்லாம் கொடுத்ததனால் எனக்குக் கீர்த்தி உண்டாகுமென்கிறாயோ? எந்த தானத்தினால் தன்னுடைய ஜீவனமே அழிந்து போகுமோ, அப்படிப்பட்ட தானத்தைப் பெரியோர்கள் புகழமாட்டார்கள். ஜீவனமுடைய புருஷன் செய்யும் தானம், யஜ்ஞம், தவம் மற்றுமுள்ள நற்செயல் இவையெல்லாம் தர்மாதிகளுக்கு ஹேதுவாமேயன்றி (காரணமாகுமே அன்றி), ஜீவனமில்லாதவன் செய்கிற தானாதிகளெல்லாம் தர்மாதிகளுக்கு ஹேது (காரணம்) ஆகமாட்டாது. 

அறிஞனே! ஆகையால் பணத்தை, தர்மம் யசஸ்ஸு, அர்த்தம், காமம், பந்துக்கள் ஆகிய ஐந்து ப்ரயோஜனங்களையும் குறித்து ஐந்து வகையாகப் பிரித்து உபயோகப்படுத்தும் புருஷனே இஹலோகத்திலும் (இவ்வுலகிலும்), பரலோகத்திலும் (ஸ்வர்க்கம் முதலிய மற்ற உலகங்களிலும்) ஸந்தோஷமுற்றிருப்பான். ஆனால் ப்ரதிஜ்ஞை செய்த (வாக்குக் கொடுத்த) பின்பு இல்லையென்று எவ்வாறு பொய்சொல்வேனென்று சங்கிப்பாயாயின் (ஸந்தேஹப்படுவாயாயின்), இன்னது பொய்யென்றும் இன்னது மெய்யென்றும் பஹ்வ்ருசர்கள் (ரிக் வேத மந்த்ரங்களைக் கண்ட ரிஷிகள்) நிச்சயித்திருக்கிறார்கள். அஸுரச்ரேஷ்டனே! அதைச் சொல்லுகிறேன்; கேள். 

ஆகட்டுமென்று அங்கீகாரத்துடன் சொல்லும் வார்த்தையே மெய்யாம். முதலே ஒப்புக்கொள்ளாமல் இல்லையென்று சொல்லும் வார்த்தையே பொய்யாம். தேஹமாகிற வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு) அந்த மெய்யென்பது புஷ்பம், பலம் இவைகளைப் போன்றிருக்குமென்று உணர வேண்டும். இவ்வாறு ச்ருதி சொல்லுகின்றது. அந்த தேஹமாகிற வ்ருக்ஷம் (மரம்) ஜீவித்திராத பக்ஷத்தில் மெய்யாகிற புஷ்ப பலங்கள் உண்டாகமாட்டாது. தேஹமாகிற அந்த வ்ருஷத்திற்குப் (மரத்திற்குப்) பொய்யே வேர் போன்றிருக்கும். பொய்யில்லாமல் ஜீவித்திருக்க முடியாது. வேரைப் பிடுங்கினால் வ்ருக்ஷம் (மரம்) உலர்ந்து சீக்ரத்தில் கீழே விழுந்து போகின்றது. இவ்வாறே பொய்யே பேசாதிருக்கும் தேஹம் உடனே உலர்ந்து போகும்; ஜீவிக்கமாட்டாது. இவ்விஷயத்தில் ஸந்தேஹமில்லை. ஆகட்டுமென்று அங்கீகரித்து எல்லாவற்றையும் கொடுக்கிறேனென்று ஒப்புக்கொண்டதற்குச் சிறிது கொடுக்கிறேன் என்பது கருத்தாக வேண்டும். சொத்தையெல்லாம் கொடுப்பானாயின், ஜீவனமே இல்லாமற் போமாகையால் தேஹம் நசித்துக் கொடுக்கிறவனுக்கு ஆபத்து நேரிடும். ஆகையால் தானம் பயன்படாமற்போகும். ஆகட்டுமென்று அங்கீகரித்ததற்கு எல்லாவற்றையும் கொடுக்கிறேன் என்பதாகக் கருத்து கொள்ளலாகாது. கொஞ்சம் கொடுக்கிறேனென்பது கருத்து என்று கொண்டால்தான் கொடுக்கிறவன் மிகுவான். யாசகனுக்குத் தன் சொத்தையெல்லாம் கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்வானாயின் (வக்குக் கொடுப்பானயின்), எல்லாவற்றையும் கொடுத்துத் தான் ஜீவித்திருக்க வல்லனாகமாட்டான். ஆகையால் தன் ஜீவனத்தை அழித்துக்கொள்ளாமல் சிறிது மாத்ரமே கொடுக்க வேண்டும். ஒன்றுமேயில்லையென்னும் வார்த்தை முழுப்பொய்யாம். அதனால் பிறனுடைய சொத்தையும் தான் பறித்துக் கொள்வான். ஆனால் அதை அம்ருதம் போல் ஸர்வகாலமும் உபயோகப்படுத்தலாமே என்றால், அது கூடாது. ஒன்றுமேயில்லையென்று சொல்லுகிறவன் அபகீர்த்தியைப் (பழியைப்) பெறுவான். ஒன்றுமேயில்லை என்கிறவன் பிழைத்திருந்தும் செத்தவனைப் போன்றவன். ஆகையால் கொஞ்சம் கொடுக்க வேண்டும். ஸ்த்ரீகளை உத்ஸாஹப்படுத்தும் காலத்திலும், பரிஹாஸத்திலும் (கேலி, கிண்டல் வார்த்தைகளிலும்), விவாஹத்திலும், ஜீவனத்திற்காகவும் ப்ராண ஸங்கடத்திலும் (உயிர்ருக்கு ஆபத்து எற்பட்ட ஸமயத்திலும்), பசுக்கள், ப்ராஹ்மணர் இவர்களின் ஹிதத்திற்காகவும் (நன்மைக்காகவும்) ஒருவனுக்கு ப்ராண ஆபத்து (உயிருக்கு ஆபத்து) நேரும் பொழுதும் பொய் பேசுவது நிந்தைக்கு (பழிக்கு) இடமாகாது. ஆகையால் நீ ப்ரதிஜ்ஞை செய்த போதிலும் (வாக்குக் கொடுத்த போதிலும்) ஜீவனத்திற்காகப் பொய் பேசுவது பிசகாகாது (தவறாகாது). 

பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக