சனி, 19 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 191

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(பலி ஸுதலம் (பூமிக்குக் கீழ் இருக்கும் உலகம்) போய்ச் சேருதலும், இந்த்ரன் ஸ்வர்க்கம் சேர்ந்து ஸந்தோஷமுற்றிருத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய பலி ஸமஸ்த ஸாதுக்களாலும் புகழப்பட்டு, பக்தி தலையெடுத்து, ஆநந்த நீர்களால் கண்கள் கலங்கவும் உரை தழதழக்கவும் பெற்று இவ்வாறு மொழிந்த புராண புருஷனாகிய பகவானை நோக்கி மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- ஆ! என்ன ஆச்சர்யம்! உன்னை வணங்குவதற்காகச் செய்யும் முயற்சியே உன் பக்தர்கள் விரும்பும் ப்ரயோஜனத்தை நிறைவேற்றுவதில் தவறாதிருக்கின்றது. நான் உன்னை வணங்க முயன்ற மாத்ரத்தில் ஸத்வகுணம் தலையெடுத்த லோகபாலர்களான இந்த்ரன் முதலிய தேவதைகளுக்கும்கூட இதுவரையில் ஒருகாலும் கிடைக்காத உன் அநுக்ரஹம் அஸுரனும், நீசனுமாகிய (தாழ்ந்தவனுமான) எனக்கு நேர்ந்தது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாபலி இவ்வாறு மொழிந்து பகவானை நமஸ்கரித்து ப்ரஹ்மதேவனையும், ருத்ரனையும் வணங்கி வருண பாசங்களினின்றும் விடுபட்டு மனக்களிப்புற்றுத் தன் பரிவாரங்களோடு ஸுதலலோகம் (பூமிக்குக் கீழ் இருக்கும் உலகம்) போக முயன்றான். பகவான் இவ்வாறு பலியிடத்தினின்றும் ஸ்வர்க்கத்தை மீட்டு இந்தரனுக்குக் கொடுத்து அதிதியின் விருப்பத்தை நிறைவேற்றி இந்திரனுக்குத் தம்பியாகையால் உபேந்தரனென்று பெயர் பெற்று ஜகத்தையெல்லாம் பாதுகாத்து வந்தான். அப்பொழுது, ப்ரஹ்லாதன் தன் வம்சத்தை வளரச் செய்பவனும், தன் பேரனுமாகிய பலி பகவானுடைய அனுக்ரஹம் பெற்றுப் பாசங்களினின்றும் விடுபட்டுத் திகழ்வதைக் கண்டு பக்தியினால் வணக்கமுற்றுப் பகவானை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- நாதனே! நீ எங்களுக்குச் செய்த இந்த அநுக்ரஹத்தை ப்ரஹ்மதேவன், ஸ்ரீமஹாலக்ஷ்மி, ருத்ரன் இவர்களில் ஒருவரும் பெறவில்லையென்றால் மற்றவர்கள் பெறவில்லை என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஸமஸ்த லோகங்களாலும் பூஜிக்கப்பட்ட ப்ரஹ்மாதிகளும் உன் பாதார விந்தங்களை வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட நீ கொடுந்தொழிலுடைய அஸுர ஜாதியில் பிறந்த எங்களையும் துக்கத்தினின்று பாதுகாக்கின்றாய்; உன்னருளின் பெருமையை என்னென்று சொல்லுவேன்? சரணம் கொடுப்பவனே! ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகள் உன் பாதார விந்தங்களின் மகரந்தத்தைப் (தூள்களைப்) பணிந்து (தேன் அதைப் பணிகையாவது – அனுபவிக்கை) ஸ்ருஷ்டி முதலிய அதிகாரங்களை நடத்துகையாகிற ஐச்வர்யங்களைப் பெறுகின்றார்கள். அப்படிப்பட்ட நீ கெடுமதிகளும் (கெட்ட புத்தியும்) கொடுஞ்சாதியர்களுமான (கொடுமையான கூட்டத்தினருமான) எங்களையும் கருணை நிறைந்த உன் கடைக்கண்ணோக்கத்திற்கு விஷயமாகச் செய்தாய். இதற்குக்காரணம் என்னவோ தெரியவில்லை. நிக்ரஹம் (தண்டனை), அனுக்ரஹம் (அருள்) முதலிய உன் செயல்களெல்லாம் ஆச்சர்யமானவை. கர்மவச்யரான ஜீவாத்மாக்களின் செயல்களைப் போன்றவையல்ல. அளவிறந்த சக்திகள் அமைந்த உன் ஸங்கல்ப ரூபஜ்ஞானத்தினால் அனாயாஸமாகவே நீ உலகங்களையெல்லாம் படைக்கின்றாய். நீ அந்தப் படைப்பு முதலிய கார்யங்களுக்கு வேண்டிய ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்களெல்லாம் அமைந்தவன். ஸமஸ்த சேதனா சேதனங்களுக்கும் (ஜீவர்களுக்கும், ஜடப்பொருட்களுக்கும்) நீ அந்தராத்மாவாயிருப்பவன். ஆனது பற்றியே உனக்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை), மன இரக்கமில்லாமை முதலிய தோஷங்கள் எவையும் கிடையாது. நீ எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையன். நீ உன் பக்தர்களுக்கு அன்பனாயிருப்பது பக்ஷபாதத்தில் (ஓரவஞ்சனையில்) சேராது. கல்பவ்ருக்ஷம் தன்னைப் பணிகிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றது. அவ்வளவால் அதற்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) என்று சொல்லக்கூடுமோ? அவ்வாறே நீ உன் பக்தர்களுக்கு அருள்புரிவதும் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) ஆகாது. நீ கல்பவ்ருக்ஷத்தின் ஸ்வபாவமுடையவன்:

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- குழந்தாய்! ப்ரஹ்லாதனே! உனக்கு க்ஷேமம் உண்டாகுக. ஸுதலமென்னும் பிலஸ்தானத்திற்குப் (குஹைக்குப்) போவாயாக. அங்கு உன் பேரனாகிய பலியுடன் களிப்புற்று ஜ்ஞாதிகளுக்கும் களிப்பை விளைத்துக்கொண்டிருப்பாயாக. அந்த ஸுதலலோகத்தில் நான் என்றும் கதா பாணியாயிருக்கக் (கையில் கதையுடன் இருக்கக்) காண்பாய். நீ என்னைக் காண்பதனால் மஹானநந்தம் (பெருமகிழ்ச்சி) அடைந்து கர்மபந்தங்களெல்லாம் அழியப்பெறுவாய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பரிசுத்தமான அறிவையுடைய ப்ரஹ்லாதன் இத்தகையதான பகவானுடைய ஆஜ்ஞையை அப்படியேயென்று சிரஸாவஹித்துத் தன் பேரனான பலியுடன் கைகுவித்து பகவானை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து ஸமஸ்தமான அஸுர ஸைன்யங்களுக்கும் ப்ரபுவாகி அந்தப் பகவானிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஸுதலலோகம் போய்ச் சேர்ந்தான். ராஜனே! அப்பொழுது நாராயணன் ஸபையில் அருகாமையில் ப்ரஹ்மவாதிகளான ருத்விக்குக்களின் இடையில் உட்கார்ந்திருக்கின்ற சுக்ரனைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டனே! யாகம் செய்பவனும், உன் சிஷ்யனுமாகிய பலியின் யஜ்ஞகர்மங்களில் நேர்ந்த குறையை நீக்கி வேதத்தில் சொல்லிய விதியின்படி செய்து நிறைவேறச் செய்வாயாக; ஏனெனில், யாகம் முதலிய கர்மங்களில் ஏற்படும் குறைகள் ப்ரஹ்மவித்துக்களின் கருணையான பார்வையால் குறைவற்றதாக ஆகிவிடும்.

சுக்ரன் சொல்லுகிறான்:- இந்தப் பலியின் யஜ்ஞத்தில் (யாகத்தில்) கர்ம வைகுண்யம் (குறைவு) எந்தக் காரணத்தினால் உண்டாகும்? பலி மனோ, வாக், காயங்களென்கிற (மனது, சொல், செயல்) மூன்று கரணங்களாலும் ஸர்வகர்மங்களுக்கும் ப்ரபுவும் யஜ்ஞபுருஷனுமாகிய உன்னை ஆராதித்தான். ஆகையால் அவனுடைய யஜ்ஞ (யாக) கர்மங்களில் வைகுண்யத்திற்கு (குறைவு நேர) ப்ரஸக்தியேயில்லை (வாய்ப்பே இல்லை). மந்த்ரம், தந்திரம், தேசம், காலம், யாகத்திற்கு வேண்டிய வஸ்துக்கள் ஆகிய இவற்றுள் எதற்கு எவ்விதமான குறைவு நேரினும், அவற்றையெல்லாம் உன்னுடைய நாம ஸங்கீர்த்தனமே நிறைவேற்றி விடுகின்றது. இனி உன்னையே நேரில் பூஜித்தவனுடைய கர்மங்களில் வைகுண்யத்திற்கு (குறைவிற்கு) என்ன ப்ரஸக்தி (வாய்ப்பு) உண்டு? மஹானுபாவனே! ஆயினும், சொல்லுகின்ற உன்னுடைய கட்டளைப்படி செய்கிறேன். உன் கட்டளைப்படி நடப்பதே ஸமஸ்த புருஷர்களுக்கும் சிறந்த நன்மையாமல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த சுக்ரன் இவ்வாறு பகவானுடைய ஆஜ்ஞையைப் புகழ்ந்து பலியினுடைய யாகத்தில் நேர்ந்த கெடுதிக்கு ப்ரஹ்மரிஷிகளுடன் கலந்து பரிஹாரம் செய்தான். மஹாராஜனே! வாமன பகவான் சத்ருக்களால் பறிக்கப்பட்ட ஸ்வர்க்கத்தை இவ்வாறு பலியிடத்தினின்று யாசித்துத் (வேண்டிப் பெற்றுத்) தன் ப்ராதாவான இந்திரனுக்குக் கொடுத்தான். அப்பொழுது ப்ரஜாபதிகளுக்கெல்லாம் ப்ரபுவாகிய ப்ரஹ்மதேவன் தேவதைகளோடும், ரிஷிகளோடும், பித்ருக்களோடும், மனுக்களோடும், மனுபுத்ரர்களான மன்னவர்களோடும், தக்ஷர், ப்ருகு, அங்கிரஸ்ஸு முதலியவர்களோடும் ஸுப்ரஹ்மண்யனோடும், ருத்ரனோடும், கூடிக் கச்யபர், அதிதி இவர்களுக்கு ப்ரீதியை விளைக்கும் பொருட்டும் ஸமஸ்த லோகங்களின் யோக க்ஷேமங்களின் பொருட்டும் வாமனனை லோகங்களுக்கும் லோகபாலர்களுக்கும் ப்ரபுவாகச் செய்தான். 

வேதங்களையும், ஸமஸ்த தேவதைகளையும், தர்மத்தையும், தவத்தையும், செல்வத்தையும், மங்களமான வ்ரதங்களையும், ஸ்வர்க்க மோக்ஷங்களையும், பாதுகாக்க வல்லவனாகிய அந்த உபேந்த்ரனை ப்ரஹ்மதேவன் ஸமஸ்த பூதங்களின் க்ஷேமத்தின் பொருட்டு நாதனாக ஏற்படுத்தினான். அதனால் ஸமஸ்த பூதங்களும் மிகுந்த ஸந்தோஷம் அடைந்தன. அப்பால் தேவேந்திரன் ப்ரஹ்மதேவனால் தூண்டப்பட்டு லோகபாலர்களுடன் வாமனன் பகவானைத் தெய்வ விமானத்தில் ஏற்றி ஸ்வர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். பிறகு இந்த்ரன் உபேந்தரனுடைய புஜபலத்தினால் பாதுகாக்கப்பட்ட மூன்று லோகங்களையும் பெற்றுப் பயம் தீர்ந்து பெருஞ்செல்வம் நிரம்பப் பெற்றுப் பேரானந்தமுற்றிருந்தான். ப்ரஹ்மதேவன், ருத்ரன், குமரன், ப்ருகு முதலிய ரிஷிகள், பித்ருக்கள், ஸித்தர்கள் ஆகிய இவர்களும் விமானங்களில் திரியும் மற்றவர்களும் ஸமஸ்த பூதங்களும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மிக அற்புதமான அப்பெருஞ் செயலைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அதிதியையும் புகழ்ந்து தத்தம் இருப்பிடம் சென்றார்கள். 

குருதலாலங்காரனே! த்ரிவிக்ரமாவதாரம் செய்த பகவானுடைய வ்ருத்தாந்தத்தையெல்லாம் உனக்கு இவ்வாறு மொழிந்தேன். இதைக் கேட்கிறவர்களுடைய பாபங்களெல்லாம் பறந்துபோகும் எவன் த்ரிவிக்ரமாவதாரம் செய்த பகவானுடைய மஹிமையின் எல்லையைப் பேசுகிறானோ அவன் இப்பூமியின் தூட்களையெல்லாம் எண்ணுவான். (பூமியின் தூட்களை எண்ண முடியாதது போல அப்பகவானுடைய மஹிமையின் எல்லையைப் பேசமுடியாது. புத்தியுள்ளவன் பூமியின் தூட்களை நெடுங்காலமாக எண்ணி முடிப்பானாயினும் அப்பகவானுடைய மஹிமையின் எல்லையைப் பேசமுடியாது). “த்ரிவிக்ரமனுடைய மஹிமையின் கரையை அறிந்தவன் இதுவரையில் பிறந்ததுமில்லை; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனிப் பிறக்கப்போகிறதுமில்லை. பிறந்தவனாவது, பிறக்கிறவனாவது பிறக்கப்போகிறவனாவது அந்தப் பகவானுடைய மஹிமையின் அக்கரையை அடைவானோ? அடையமாட்டான்” என்று மந்திரங்களை ஸாக்ஷாத்கரிக்கவல்ல வஸிஷ்டாதி ரிஷிகள் சொல்லுகிறார்கள். அற்புதச் செயலுடையவனும் ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனுமாகிய ஸ்ரீஹரியினுடைய இந்த வாமனாவதார வருத்தாந்தத்தைக் கேட்கிறவன் பரமகதியான மோக்ஷத்தைப் பெறுவான். தேவர், மனுஷ்யர், பித்ருக்கள் இவர்களைப் பற்றின எந்தக் கார்யத்திலாவது இந்த வாமனாவதார வ்ருத்தாந்தத்தை வாசிப்பார்களாயின், அவர்களுடைய அக்கார்யம் நன்கு பயன்பெறுமென்று இதன் மஹிமையை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள். 

இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக