எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்
(பகவான் பலிக்கு அருள்புரிந்து அவனை ஸுதலம் என்னும் விவரலோகத்தில் (கீழ் உலகத்தில்) இருத்திப் பலவரங்களைக் கொடுத்துத் தன்னையும் அவனுக்கு த்வாரபாலகனாகச் செய்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பலி இவ்வாறு பகவானால் வஞ்சிக்கப்பட்டு ஸத்யத்தினின்று நழுவும்படி எவ்வளவு முயற்சி செய்யினும் மனவுறுதி மாறப்பெறாமல் சிறிதும் தழதழப்பின்றிக் கம்பீரமாக இவ்வாறு மொழிந்தான்.
பலி சொல்லுகிறான்:- மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளாலும் புகழத்தகுந்த மிக்க புகழுடையவனே! தேவதைகளில் சிறந்தவனே! நீ என் வார்த்தையைப் பொய்யென்று நினைப்பாயாயின், அதை மெய்யாகச் செய்கிறேன். அது வஞ்சனமாக (ஏமாற்றமாக) வேண்டாம். உன் மூன்றாமடியை என் தலைமேல் வைப்பாயாக. நான் நரகத்திற்காவது, ஸ்தானத்தினின்று நழுவினதற்காவது, வருணபாசங்களால் கட்டுண்டமைக்காவது, மஹத்தான துக்கம் நேர்ந்தமைக்காவது, சொத்தையெல்லாம் இழந்தமைக்காவது நீ என்னை நிக்ரஹம் செய்ததற்காவது (தண்டித்ததற்காவது) பயப்படவில்லை. பொய் பேசுவதற்கும் அபகீர்த்திக்குமே (பழிக்குமே) நான் பயப்படுகின்றேன். நான், ப்ராணிகளுக்கு மேன்மையுடையவர்களால் நேர்ந்த தண்டனை புகழத் தகுந்தது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட தண்டனையைத் தாய், தந்தையர்களாவது, உடன் பிறந்தவர்களாவது, நண்பர்களாவது எனக்குச் செய்யமாட்டார்கள். நீ அஸுரர்களான எங்களுக்குக் கண்மறைவிலிருந்து ஹிதம் (நன்மை) செய்யும் குருவாயிருக்கின்றாய். சௌர்யம் (சூரத்தனம்), வீர்யம் (வீரம்) முதலிய பல குணங்களால் ஏற்பட்ட மதங்களால் (கர்வத்தால்) கண் தெரியாதிருக்கின்ற எங்களுக்கு அந்த மதங்களை (கர்வங்களை) எல்லாம் போக்கும்படியான கண்ணைக் கொடுத்தாற் போலிருக்கின்றாய். மற்றும், பல அஸுரர்கள் உன்னிடத்தில் த்வேஷம் (பகைமை) வேரூன்றி மாறாதிருந்து அனன்ய ப்ரயோஜனர்களான (பகவானைத் தவிர்த்து வேறு பலன் எதையும் விரும்பாத) பக்தியோக நிஷ்டர்களுக்கும் கிடைக்க அரிதான ஸித்தியைப் பெற்றார்கள். நீ மஹானுபாவன். உன் செயல்கள் அற்புதமானவை; எண்ணிறைந்தவை. அவற்றை இப்படிப்பட்டவையென்று எவர்க்கும் சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட உன்னால் நான் நிக்ரஹிக்கப்பட்டு (தண்டிக்கப்பட்டு) வருணபாசங்களால் கட்டுண்டும் சிறிதும் லஜ்ஜிக்கவில்லை (வெட்கப்படவில்லை); துக்கிக்கவுமில்லை. நீ என்னை நிக்ரஹித்ததும் (தண்டித்ததும்), கட்டினதும் எனக்குப் புகழே. மற்றும், என் பாட்டனாகிய ப்ரஹ்லாதன் உன் பக்தர்களால் மிகவும் புகழப்பட்டவன். அவனுடைய கீர்த்தி எங்கும் நிறைந்திருக்கின்றது. அவன் தன் தந்தையும் உனக்குச் சத்ருவுமான ஹிரண்யகசிபுவினால் பலவாறு துக்கங்களை மூட்டி ஹிம்ஸிக்கப்பட்டும் உன்னையே ஸகலவித பந்துவாகவும் (உறவாகவும்) மேலான புருஷார்த்தமாகவும் பற்றி, “மரணம் அடையும் தன்மையுள்ள ஜீவனுக்கு இந்தத் தேஹத்தினால் என்ன ப்ரயோஜனம்? ஆயுள் கழிவது மாத்ரமேயன்றி மற்றொன்றுமில்லை. இது எத்தனை காலம் இருந்தாலும் கடைசியில் துறக்கப்போகின்றதே அன்றி, விடாமல் கூடவே இருக்கப் போகின்றதில்லை. பணத்தைப் பங்கிட்டுக்கொண்டு போகின்றவர்களாகையால் திருடர்கள் போன்ற பந்துக்களாலாவது (உறவினர்களாலும்) என்ன ப்ரயோஜனம்? ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்த்துக் கொள்வதற்குக் காரணமான பார்யையால்தான் (மனைவியால்தான்) என்ன ப்ரயோஜனம்? வீடு, வாசல் முதலியவற்றால் தான் என்ன ப்ரயோஜனம்!” என்று நிச்சயித்து மஹா குணமுடையவனும், பேரறிஞனும், பாகவத ச்ரேஷ்டனுமாகிய அந்த ப்ரஹ்லாதன் ஸம்ஸார ஜனங்களுடைய ஸஹவாஸத்தினின்றும் (தொடர்பிலிருந்தும்) பயந்து, நீ அவனது தைத்ய குலத்தையெல்லாம் அழிப்பவனாயினும், எவ்விதத்திலும் பயத்திற்கிடமில்லாத உன் பாதாரவிந்தத்தையே நிலைநின்ற புருஷார்த்தமாக நினைத்து அதையே சரணம் அடைந்தான். அப்படியே நானும் தெய்வாதீனமாய் என் சத்ருவாகிய (எதிரியாகிய) உன் ஸமீபத்திற்கு வரும்படி செய்யப்பட்டேன். மற்றும், இவ்வுலகத்தில் புருஷன் எதனால் மதி (புத்தி) கெட்டுத் தான் யமனுக்கு அருகாமையில் இருக்கின்ற தன் பிழைப்பை நிலையற்றதென்று அறிய முடியாதிருக்கிறானோ, அப்படிப்பட்ட செல்வப் பெருக்கினின்றும் என்னை நீ பலாத்காரமாக நழுவச் செய்தாய். ஆகையால் இவ்வாறு மஹோபகாரம் செய்த உன் பாதார விந்தங்களையே நானும் சரணம் அடைகின்றேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருச்ரேஷ்டனே! அந்தப் பலிசக்ரவர்த்தி இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பகவானிடத்தில் மிகுந்த அன்புடைய ப்ரஹ்லாதன் பூர்ணசந்த்ரன் உதித்தாற்போல அவ்விடம் வந்து சேர்ந்தான். அவன் காந்தியினால் மிகவும் திகழ்வுற்றிருந்தான். அவனுடைய கண்கள் தாமரையின் இதழ்போல மிகவும் அழகாயிருந்தன. அவன் மிக்க உயரமாயிருப்பவன்; பீதாம்பரம் உடுத்திருந்தான். அவனுடைய தேஹகாந்தி மைக்குவியலின் ஒளி போன்றிருந்தது. அவன் புஜங்கள் திரண்டு உருண்டு முழந்தாள் வரையிலும் நீண்டிருந்தன. அவன் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகாயிருந்தான். பலி அத்தகைய ப்ரஹ்லாதனைக் கண்டும் வருண பாசங்களால் கட்டுண்டிருக்கையால் முன்போல (வழக்கம் போல) அர்க்யம் முதலிய உபசாரங்களுடன் பூஜை செய்யவில்லை; வெறுமனே தலையால் வணங்கினான். அப்பால் கண்களில் நீர் தளும்பப்பெற்று வெட்கமுற்று முகத்தைச் சாய்த்துக்கொண்டிருந்தான். அனந்தரம் ஆழ்ந்த மனமுடைய ப்ரஹ்லாதன் ஸத்புருஷர்களுக்கு நாதனும் ஸுனந்தர் முதலிய பாரிஷதர்களால் (பரிசாரகர்களால்) சூழப்பெற்று அவ்விடத்தில் வீற்றிருக்கின்றவனுமான வாமன ரூபியான பகவானைப் பார்த்து மயிர்க் கூச்சங்களாலும், கண்ணீர்களாலும் தழதழத்து அருகில் சென்று பூமியில் விழுந்து நமஸ்கரித்து இவ்வாறு மொழிந்தான்.
ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- இந்தப் பலி விச்வஜித் என்னும் யாகத்தினால் உன்னை ஆராதித்தான். அதனால் நீயே இவனுக்கு இந்த்ரபதம் கொடுத்தாய். அதை நீயே இப்பொழுது பறித்தாய். அவ்வாறு நீ செய்தது அழகாகத்தான் இருக்கின்றது. மதியை (புத்தியை) மயக்குகின்ற செல்வப்பெருக்கினின்றும் இவனை நீ நழுவச் செய்தமை பெரிய அனுக்ரஹமென்று எனக்குத் தோன்றுகின்றது. இல்லையாயின், இவன் செல்வக்கொழுப்பினால் ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றின அறிவு சிறிதுமின்றி முதலே அழிந்து போய் விடுவான். ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை உணர்ந்த வித்வான் மனவூக்கத்தோடிருப்பினும் செல்வப் பெருக்கினால் மதி (புத்தி) மயங்குவான். அப்பால் அவன் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி எவ்வாறு அறிவான்?
ஆகையால் அனர்த்தத்திற்கு (கேட்டிற்கு) இடமான ஐச்வர்யத்தினின்றும் இவனை நீ நழுவச்செய்தது அனுக்ரஹமே. இவ்வாறு மஹோபகாரம் (பேருதவி) செய்த உனக்கு நமஸ்காரம். நீ ஜகத்திற்கெல்லாம் ஈச்வரன், எல்லாமறிந்தவன்; நாராயணன். ஸமஸ்த கர்மங்களையும் நீ ஸாக்ஷாத்கரிக்கின்றாய். உனக்கு நமஸ்காரம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! ப்ரஹ்லாதன் கைகூப்பிக் கேட்டுக்கொண்டிருக்கையில் மஹானுபாவனாகிய ப்ரஹ்மதேவன் மதுஸூதனனைப் பார்த்து இவ்வாறு மொழியத் தொடங்கினான். அப்பொழுதே பதிவ்ரதையான விந்த்யாவளியும் தன் கணவன் கட்டுண்டிருப்பது கண்டு பயத்தினால் தழதழத்து நமஸ்கரித்துக் கைகளைக் குவித்துக் கண்ணும் கண்ணீருமாக உபேந்த்ரனை நோக்கி இவ்வாறு மொழிந்தாள்.
விந்த்யாவளி சொல்லுகிறாள்:- நீ உன் விளையாட்டிற்காக இந்த ஜகத்தையெல்லாம் படைத்தாய். அப்படிப்பட்ட இந்த ஜகத்தைச் சில துர்ப்புத்திகள் (நல்லறிவில்லாதவர்கள்) தங்களுடையதென்று அபிமானிக்கிறார்கள். அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) தங்கள் நினைவு தவறு என்று அறியாமல் வெட்கமற்றிருக்கின்ற அவர்கள் “நாம் ஸ்வதந்த்ர ப்ரபுக்கள். இந்த ஜகத்தெல்லாம் நம்முடையதே” என்று வாயால் பேசுவார்கள். ஆனால், உண்மை அதுவன்று. அந்தராத்மாவாகிய நீ அவர்களுடைய அந்த வாய்ப்பேச்சையும் ஒழித்து விடுகின்றாய். இவ்வுலகங்களையெல்லாம் படைப்பவனும், பாதுகாப்பவனும், அழிப்பவனுமாகிய உனக்கு அவர்கள் தங்களுடையதென்று எதைக் கொடுப்பார்கள்? உனக்கு என்ன கெடுதியைத் தான் செய்வார்கள்? உனக்கு ஒருகாலும் ஒரு குறையுமில்லை.
{ஆகையால் “நான் மூன்று லோகங்களையும் கொடுத்தேன். மூன்றாமடிக்கு என் தேஹத்தைக் (உடலைக்) கொடுத்து ப்ரதிஜ்ஞையை (கொடுத்த வாக்கை) நிறைவேற்றிக் கொள்கிறேன்” என்று தேஹாதிகளைத் (உடல் முதலியவற்றைத்) தன்னுடையதென்று தான் அபிமானித்திருப்பதை வெளியிடுகிற இந்தப் பலி துர்ப்புத்தி (நல்லறிவற்றவன்). வெட்கமற்றவன். நீயே எல்லாவற்றிற்கும் உடையவன். ஆகையால் மந்த புத்தியாகிய இவனைப் பந்தனத்தினின்றும் (கட்டிலிருந்து) விடுவித்துப் பாதுகாப்பாயாக.}
ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- பூதங்களைப் படைப்பவனே! பூதங்களுக்கு அந்தராத்மாவாகி அவற்றைப் பாதுகாப்பவனே! ஸம்ஹாரத்தை நடத்துகிற ருத்ரன் முதலிய தேவர்களுக்கும் தேவனே! ஜகத்தையெல்லாம் சரீரமாகவுடையவனே! சொத்தெல்லாம் பறியுண்டிருக்கின்ற இந்தப் பலியை விடுவாயாக. இவன் நிக்ரஹத்திற்கு (தண்டனைக்கு) உரியவனன்று. இவன் தான் ஆண்டு வந்த பூலோகத்தை முழுவதும் கொடுத்தான். மற்றும் தான் கர்மத்தினால் ஸம்பாதித்த ஸ்வர்க்காதி லோகங்களையும் கொடுத்தான். இவ்வாறு தன்னுடைய சொத்தையெல்லாம் உனக்குக் கொடுத்துவிட்டான். அன்றியும், புத்தியில் சிறிதும் தழதழப்பின்றித் தன் தேஹத்தையும் உனக்குக் கொடுத்தான். ஆகையால் இவன் நிக்ரஹிக்கத் (தண்டிக்கத்) தகுந்தவனல்லன். ஒருவன் உன் பாதாரவிந்தங்களில் கபடமின்றிப் (ஏமாற்றும் எண்ணம் இன்றி, உண்மையாகவே) புத்தி நிலை நிற்கப்பெற்று அவற்றிற்கு அர்க்ய ஜலம் கொடுத்து, அறுகம் புற்களாலாவது பூஜை செய்வானாயின், அவன் உத்தமகதியான மோக்ஷத்தையும் பெறுவான். இந்தப் பலி மனவுறுதியுடன் மூன்று லோகங்களையும் உனக்குக் கொடுத்திருக்கிறான். இவன் எவ்வாறு மனவருத்தம் அடையக்கூடும்? ஆகையால் இவனை விடுவாயாக.
ஸ்ரீவாமன பகவான் சொல்லுகிறான்:- ப்ரஹ்மதேவனே! நான் எவனை அனுக்ரஹிக்க விரும்புகிறேனோ, அவனுடைய தனங்களைப் பறித்துவிடுவேன். பணம் இருக்குமாயின், புருஷன் அதனால் மதித்துக் கர்வமுற்று விவேகமற்று உலகத்தையும் என்னையும் அவமதிப்பான். அதனால் அழிந்து போவான். ஆகையால் அனர்த்தத்திற்கிடமான (கேட்டிற்கு இடமான) பணத்தைப் பறிப்பதே நான் முதலில் செய்யும் அனுக்ரஹம். ஜீவாத்மா தான்செய்த கர்மங்களால் இவ்வுலகத்தில் பல யோனிகளில் பிறப்பதும் சாவதுமாய் இருக்கையில் ஒருகால் யாத்ருச்சிக (எதிர்பாராத விதமான) ஸுக்ருதத்தினால் (நற்செயலால்) மனிதப் பிறவியைப் பெறுவான். அந்த மனிதப் பிறவியில் ஜன்மம், செயல், வயது, உருவம், வித்யை, ஐச்வர்யம், தனம் இவை முதலியவற்றால் இந்த ஜீவாத்மாவுக்கு மதம் (கர்வம்) உண்டாகாதிருக்குமாயின், அவனிடத்தில் அதை என்னுடைய அனுக்ரஹமென்று அறியவேண்டும். கர்வம், அவிவேகம் (பகுத்தறிவு இன்மை) இவற்றிற்குக் காரணமாயிருப்பவைகளும், ஸமஸ்த நன்மைகளையும் தடுத்துப் பல அனர்த்தங்களுக்கிடமாய் (கெடுதிகளுக்கு இடமாய்) இருப்பவைகளுமான ஜன்மம் முதலிய விசேஷங்கள் உண்டாயிருப்பினும், என்னிடத்தில் மனவூக்கமுடையவன் அவற்றால் மதி (புத்தி) மயங்கப் பெறமாட்டான். தானவர்களுக்கும், தைத்யர்களுக்கும் ப்ரபுவும் அவர்களுக்குப் புகழை வளர்ப்பவனுமாகிய இந்தப்பலி ஒருவராலும் வெல்ல முடியாத என் மாயையை இனி வெல்லுவான்; எப்படிப்பட்ட ஸங்கடத்திலும் (கஷ்டத்திலும்) மதி (புத்தி) மயங்கப்பெறமாட்டான். இவன் தன் தனத்தையெல்லாம் இழந்தான்; ஐச்வர்யத்தினின்றும் நழுவினான்; சத்ருக்களால் (எதிரிகளால்) அவமதிக்கப்பட்டான்; வருண பாசங்களால் கட்டுண்டான்; பந்துக்களால் கைவிடப்பட்டான்; பெருந்துயரத்தை அடைந்தான்; குருவாகிய சுக்ராசார்யரால் விரட்டிச் சபிக்கப்பட்டான்; ஆயினும் மனவுறுதி மாறாமல் ஸத்யத்தைக் கைவிடவில்லை.
நான் கபடமாகத் தர்மம் சொல்லுகையில், அப்பொழுதும் இவன் பொய் பேசாமல் தர்மத்தைக் கைவிடாதிருந்தான். இவன் என்னுடைய அனுக்ரஹத்தினால் தேஹத்தின் முடிவில் தேவதைகளுக்கும் பெற முடியாத என் லோகத்தை அடையப்போகிறான். இவன் ஸாவர்ணி மனுவின் அந்தரத்தில் இந்த்ரபதம் பெற்று என்னையே அவலம்பித்திருக்கப் போகிறான். இப்பொழுது இவன் விச்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட ஸுதலமென்னும் விவரலோகத்தில் (கீழ் உலகத்தில்) சென்று அதை ஆண்டு வருவானாக. அங்கு வாஸம் செய்பவர்களுக்கு மனோவ்யாதிகள், சரீரவ்யாதிகள், வாட்டம் (வருத்தம்), அனவதானம் (கவனமின்மை), குளிர், வெயில் முதலியவற்றால் விளையும் வருத்தங்களும் இன்னும் இவைபோன்ற பல வருத்தங்களும் உண்டாக மாட்டாது.
ஓ பலி மஹாராஜனே! உனக்கு க்ஷேமம் உண்டாகுக. நீ ஜ்ஞாதிகளுடன் (உன் கூட்டத்தினருடன்) கூடி ஸ்வர்க்கவாஸிகளும் ஆசைப்படத் தகுந்த பெருமையுடைய ஸுதலமென்னும் விவரலோகம் போய்ச் சேருவாயாக. அங்கு நீ என் அனுக்ரஹத்தினால் ஸுகமாயிருப்பாய். அங்கு வாஸம் செய்கின்ற உன்னை லோகபாலர்களான இந்த்ராதிகளும் பரிபவிக்கமாட்டார்கள் (வெற்றிகொள்ள மாட்டார்கள்). இனி மற்றவர்களைச் சொல்லவேண்டுமோ? தைத்யர்களில் (அஸுரர்களில்) எவரேனும் உன் கட்டளையைக் கடப்பார்களாயின், அவர்களை என் சக்ரம் வதிக்கும். பரிஜனங்களோடும் (சுற்றத்தோடும்) பரிச்சதங்களோடும் (செல்வங்களோடும்) கூடின உன்னை எல்லா உபத்ரவங்களினின்றும் நான் பாதுகாக்கிறேன். ஓ வீரனே! அவ்விடத்தில் நான் எப்பொழுதும் உன் க்ருஹத்வாரத்தில் வஸித்திருக்கக் காண்பாய். மற்றும், அவ்விடத்தில் தைத்யர்களோடும் (திதியின் பிள்ளைகளான அஸுரர்களோடும்), தானவர்களோடும் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) உனக்கு உண்டாகும் அஸுர ஸ்வபாவம் என்னுடைய ஸன்னிதானத்தினால் பயன்படாமல் உடனே மறைந்து போகும்.
இருபத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.