வெள்ளி, 11 அக்டோபர், 2019

மற்றை நம் காமங்கள் மாற்று - ஸ்ரீ.உப.D.ராமஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி

சொல்லின் செல்வியான ஆண்டாள், அவள் இன்னிசையால் பாடிக் கொடுத்த நற்பாமாலையாம் திருப்பாவையில், பல பல அருமையான கருத்துக்களை அமைத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்ற சொற்றொடரில் பொதிந்துள்ள அழகான அருமையான அர்த்த விசேஷம். ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திலேயே அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்காக வகுப்பப்பட்ட புருஷார்த்தங்களுக்குள் இன்பம் எனப்படும் காமபுருஷார்த்தமே மேம்பட்டது. காமம் என்றவுடன் சிற்றின்பந்தான் முதன்முதலாக நினைவுக்கு வருவது சகஜம். அது அறவே அகற்றிவைக்கவேண்டிய தொன்று என்பதை நன்கு தெளியவேண்டும் முதல் முன்னம்.
'முந்துற உரைக்கேன் வீரைக்குழல் மடவார் கலவியை விடு' என்பது புலன் படிந்துண்ணும் போகமே பெருக்கிப் பொழுதினை ஒரு காலத்தில் வாளா போக்கின கலிகன்றி, எம்பெருமானால் மயர்வற மதிநலமருளப்பெற்று அவன் பக்கல் ஸர்வார்த்தக்ரஹணம் செய்த பிறகு நமக்கு அருளிச்செய்து போந்த நல்லுபதேசம். காமம் என்ற சொல் கேட்டவுடன் மந்தமதிகள் கலங்கிப் போய்விடுவார்களே என்ற பயத்தினால் நம்மிராமாநுசன் மிகுந்த கருணையோடு சீரிய நற்காமம்' என்று பகவத் காமத்துக்குப் பேரிட்டு 'கண்ணனுக்கேயாமது காமம்' என்றும் அறம் பொருள் வீடு இதற்கு (சீரிய நற்காமத்துக்கு) என்றும் உபதேசித்துப் போந்தார். இது திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரமூலம் நாம் தெரிந்து கொள்ளும் உயர்ந்த பொருள். சீரிய காமமாதலால் சிற்றின்பத்துக்குச் சேராதது, நற்காமமாகையால் ஆத்மஹானி விளைவிக்காது. ஆத்மக்ஷேமத்தை யளிக்கவல்லது என்று பொருள் கொள்ளக்கிடக்கிறது.

'அன்பிலன்றி ஆழியானை யாவர்காணவல்லரே' என்பதுதான் பொதுவாக எல்லா ஆழ்வார்களுடைய சித்தாந்தமும். ஆயினும் அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தவள் ஆண்டாள் ஒருவளே. மற்ற ஆழ்வார்கள் தங்களது பக்தியைச் சிங்காரவடிவில் மாற்றிப் பாடவேண்டியவர்களானார்கள், ஆடவர்களாகப் பிறந்தபடியாலே. ஆண்டாளுக்கோ திருமாலிடம் அவள் கொண்ட திருமாலே (காதலே) பக்தியாயமைந்தது. ஆதலால் அவள் 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்று பாடும்போது அதில் விசேஷார்த்தமிருக்கவேண்டும்.

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்' என்று உறுதியையும் தெளிவையும் தெரிவிக்கும் அழகிய சொற்கள்கொண்டு தன் முழு ஆசையையும் பேசி, அடுத்தபடியாக 'மற்றைநம் காமங்கள் மாற்று' என்று வேண்டுகிறாள். மற்றை நம் காமங்கள் என்ற சொற்களால் கீழ்ச் சொன்ன விருப்பத்தைத் தவிர மற்றைவிருப்பங்கள் என்று பொருள் கொள்ளக் கிடக்கிறது. அவற்றைப் போக்கிவை' என்று பாடாது மாற்று என்று பாடியிருக்கிறாள், 'எனது இதர மனோரதங்கள்' நசிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை.

அப்படிப் பிரார்த்தித்தவர் ஆளவந்தார் 'ப்ரசாந்தநிச்சேஷமநோர தாந்தர:' என்பது அவர் பாசுரம். எம்பெருமானுடைய பக்தர்களுள் முதன்மை ஸ்தானம் வஹிக்கும் ப்ரஹ்லாதாழ்வான் ஆண்டாளுக்கு வழி காட்டியாயிருந்து 'மாற்று' என்று அவளைப் பாடவைத்திருக்கவேண்டுமென்று நினைக்க இடமிருக்கிறது. அவர் சிங்கப்பிரானிடத்தில் செய்துகொண்ட வேண்டுகோள் பின்வருமாறு.

யாப்ரீதி: அவிவேகாநாம் விஷயேஷு அநபாயிநீ |
த்வாம் அநுஸ்ஸ்மரத: ஸா மே ஹ்ருதயாத் மாsபஸர்ப்பது ||

அவிவேகிகளான ஸம்ஸாரிகள் விஷயஸுகங்களில் அழியாத எந்த ஆசையை வைத்திருக்கிறார்களோ, அந்த ஆசையனைத்தும் உன்னையே இடைவிடாது தியானம் செய்யும் என்னுடைய மனதிலிருந்து அகலாதிருக்கவேண்டும்' இத்தால் ஸம்ஸாரிகளுடைய விஷய ஆசையெல்லாம் எனக்கு ஏற்பட்டு அவையனைத்தும் உன் திறத்து ஆசையாக மாறவேண்டும் என்று பிரார்த்தித்தாராயிற்று பிரஹ்லாதாழ்வான். அதே அபிப்பிராயம் தோற்ற மற்றை நம் காமங்களையெல்லாம் உன் திறத்துக் காமமாக மாற்றிக்கொடுக்கவேண்டும். அவைகளை அழித்து விடாதே. அவைகளின் லக்ஷ்யத்தை மட்டும் மாற்றி விஷயகாமமல்லாது பகவத் விஷயகாமமாக மாற்றிக்கொடு என்று பொருள் கொள்வது உசிதம். இது அளவில்லா ஆசையைப் பரமபுருஷனிடத்தில் வைத்த ஆண்டாள் திருவாக்காகையால் ஆண் பிள்ளையான திவ்யகவியாம் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரேஎன்பாச நெஞ்சை மடைமாறி உன் சேவடிக்கே வரவைத்தருளேஎன்று பாடிருக்கிறாரே! ஆண்டாள் பாடுவதற்குக் கேட்கவேண்டுமா!

நன்றி - ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா 1966

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக