வெள்ளி, 11 அக்டோபர், 2019

மத்ஸ்ய அவதாரம் - ஏ.கே.கோபி

ஆழ்வார்கள் அர்ச்சாவதார திவ்யதேசத்து எம்பெருமான்களை அனுபவிக்கையில் மயங்கி உகக்கும் அளவிற்கு எம்பெருமான் தம்முடைய அவதாரங்களையும் மற்ற திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் ஒரே அர்ச்சாவதாரத்திலே காட்டியருளி, ஆழ்வார்களுக்கு பேரின்பம் அருள, அவ்வனுபவத்தினை பாசுரங்களிலே அருளிச் செய்துள்ளனர் ஆழ்வார்கள்.

உயிரளிக்கும் வித்து:

"பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த் 
தானேழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே 
மீனா யுயிரளிக்கும் வித்து

நான்முகன் திருவந்தாதி - 22 

நவீன அறிவியலின் பரிணாமக் கொள்கை உயிரினங்கள் நீரிலேதான் முதன்முதலில் உருவாகின என நிறுவுகிறது. ஸ்ரீமந்நாராயணன் உலகினை படைக்கத் துவங்குகையில் நான்முகனுக்கு வேதங்களையும், உயிரினங்களின் மூலவித்துக்களையும் மச்ச அவதாரம் எடுத்து காத்தருளியதை திருமழிசையாழ்வார் மீனாய் உயிரளிக்கும் வித்து என மச்ச அவதாரத்தினை அனு பவித்தருள்கிறார்.

பிரளயம்:

கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்டகாலம் 
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால் 
எழுந்தினிது விளையாடு மீசனெந்தை

பெரிய திருமொழி 6-6-2

திருநறையூரில் சேவை சாதித்தருளும் ஸ்ரீனிவாசன் திருமங்கையாழ்வாருக்கு மச்சாவதாரத்தினை காட்டியருள்கிறான். பிரளயம் அண்டசராசரங்களை மூழ்கடித்த தருணத்தில் மச்சாவதார எம்பெருமான் படகிலே மூல வித்துக்களை சுமந்து கொண்டு மலைகளின் மீது நீந்தியும் பெருவெள்ளம் அண்டத்திற்கப்பாலும் சென்ற போதும் அது வரையிலும் சென்று விளையாடி காத்தருளியதையும் காட்டியருள்கிறான்.

வானோரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் 
வலியுருவின் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட

பெரிய திருமொழி 8.8.1 

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளை சேவிக்கும்போது மச்ச அவதாரத்தின் பிரம்மாண்டத்தை (வலியுருவில்) காட்டுகிறான் எம்பெருமான். அதாவது பிரளயப் பெருவெள்ளமானது மீனின் ஒரு செதிளுக்குள்ளே அடங்குமாறு மிகப் பெரிய மச்ச அவதாரம் எடுக்கப்பட்டதாய் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் அருளுகிறார்.

வாதை வந்தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப 
மீது கொண்டுகளும் மீனுருவாகி விரிபுனல் வரிய கட்டொளித்தோன்

பெரிய திருமொழி 9.1.3 

திருக்கண்ணங்குடியுள் சேவை சாதித்தருளும் லோகநாதப் பெருமாள் மச்ச அவதாரத்தில் செதிலிடையே அடக்கிய பெருவெள்ளத்தால் கடல் வெறும் தரையாகியும் (விரிபுனல் வரிய கட்டொளித்தோன்) மறுபடியும் கடல்நீரினை வெளியில் விட பெருவெள்ளம் தோன்றிய அதிசயத்தினையும் மலைகளோடு பூமியும் ஆகாயமும் பெரு வெள்ளத்தில் மூழ்கிக் குளித்த பிரம்மாண்டத்தையும் காட்டி திருமங்கையாழ்வாரை பாசுரமிடச் செய்தருள்கிறான்

பல அவதாரங்கள்:

ஒரு திவ்ய தேசத்து எம்பெருமான் பல அவதாரங்களை தம்முடைய திருமேனியிலே காட்டியருளும் அற்புதத்தை ஆழ்வார்கள் பாசுரங்களிலே அனுபவித்து மகிழ்கிறார்கள்.

"அன்னமும்மீனு மாமையு மரியுமாய எம்மாயனே!”

பெரிய திருமொழி 2.7.10

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலுமரியும் மாவும்

பெரிய திருமொழி 4.5.6 

"ஏன மீனாமையோடு அரியும்சிறு குறளுமாய் 
தானுமாய தரணித் தலைவனிடம்

பெரிய திருமொழி 5.4.8 

"அன்னமும் கேழலும் மீனுமாய 
ஆதியை நாகை யழகியாரை

பெரிய திருமொழி 9.2.10 

வேதங்களை மீட்டு பிரமனுக்கு அருளும் அன்ன பட்சி மற்றும் மச்ச அவதாரங்கள், தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்வதற்கான ஆமை அவதாரம், பூமிப்பிராட்டியினை மீட்க எடுத்த வராக அவதாரம், பக்தப் பிரகலாதனுக்காக எடுத்த நரசிம்ம அவதாரம், இந்திரனுக்கு உதவுவதற்கான வாமன அவதாரம் இவற்றையெல்லாம் திருமங்கையாழ்வாருக்கு திருவிடவெந்தை லக்ஷ்மி வராகப் பெருமாள், திருமணிக்கூடத்து வரதராஜப் பெருமாள், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர், திருநாகை நீலமேகப் பெருமாள் தங்களுடைய அர்ச்சாவதார நிலைகளிலே காட்டியருளுவதை மேற்கண்ட பெரிய திருமொழி பாசுரங்களிலே அனுபவித்து மகிழலாம்

திவ்யதேசம் :

"முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள் 
அந்நீரை மீனாயமைத்த பெருமானை 
தென்னாலி மேய திருமாலை எம்மானை 
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே.'

பெரிய திருமொழி 6.8.2 

திருநறையூரில் சேவை தந்தருளும் ஸ்ரீநிவாசன் மேற்கண்ட பாசுரத்தில் தம்முடைய அர்ச்சாவதாரத் திருமேனியில் கடலினைக் கடைந்த ஆமை அவதாரத்தினையும் கடலினுள் தோன்றிய மச்ச அவதாரத்தினையும் காட்சிப்படுத்தும் அதே தருணத்தில் திருவாலி திவ்ய தேசத்தின் வயலாலி மணவாளன் அர்ச்சாவதாரத்தினையும் திருமங்கையாழ்வாருக்கு ஒருங்கே காட்சி கொடுப்பது பேரதிசயமன்றோ !!

உபதேசம்

"நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் 
உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெமக்கோர் சரணில்லை
என்ன அரணாவனென்னு மருளால் 
அலைகடல் நீர்குழம்ப அகடாடவோடி
அகல்வானுரிஞ்ச முதுகில் 
மலைகளைமீது கொண்டுவரு மீனை மாலை 
மறவாது இறைஞ் சென்மனனே!”

பெரிய திருமொழி 11.4.1 

ஊழிப் பெருவெள்ளம் பெரும் வேதத்தோடு பெருகி நிற்க, இடமில்லாமலும் நேரமில்லாமலும் இந்திர லோகம் வரை சென்று மூழ்கடிக்க எத்தனிக்கையில் இந்திராதி தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணமடைந்து காப்பாற்றியருளுமாறு வேண்டினர். எம்பெருமான் மச்ச அவதாரம் எடுத்து அவர்களுக்காக குலமலை முதலான மலைகளை தம் முதுகிலே தாங்கி வந்து தேவர்கள் தங்குவதற்கு உதவினார். அத்தகைய ஆபத்பாந்தவனான எம்பெருமானை தம்முடைய மனம் மறவாமல் பிரார்த்தனை செய்தபடி இருக்க வேண்டுமென மனதிற்கு உபதேசம் செய்தருள்கிறார் திருமங்கையாழ்வார்.

கருணை:

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் 
குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க் 
கற்கியாய் முடிப்பான் கோயில்

பெரியாழ்வார் திருமொழி 4.9.9 

எம்பெருமான் பாகவதோத்தமர்களை காத்தருள்வதற்காக மச்ச அவதாரம் முதல் கண்ணன் அவதாரம் வரை எடுத்து கடைசியாக கற்கி அவதாரம் எடுக்கப் போவதை பெரியாழ்வார் மேற்கண்ட பாசுரத்தில் அருளுகிறார். மூவுரு ராமன் (பரசுராமர், ராமர், பலராமர்)

மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய் 
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே

திருவாய்மொழி 5.1.10

பிரபன்னஜனகூடஸ்தரான நம்மாழ்வார் ஒரு படி மேலே சென்று நீருண்ட கார்மேகமானது மழையினை அனைத்து இடங்களிலும் பெய்த பிறகு மறுபடியும் வறட்சி நிலங்களுக்கு மேலும் பெய்வதற்கு நகருவது போல எம்பெருமானும் மச்சம் முதல் கற்கி வரை அவதாரங்களை எடுத்த போதிலும் பாகவதோத்தமர்களை காப்பதற்காக மேலும் பல அவதாரங்களை எடுப்பதற்கு சித்தமாய் இருப்பதையேஇன்னங் கார்வண்ணனேஎன்று நம்மாழ்வார் மேற்கண்ட திருவாய்மொழிப் பாசுரத்தில் அருளுவதாக வியாக்கியானங்கள் அருளுகின்றன.

புருஷார்த்தம்

மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த் 
தானாய் பின்னுமிராமனுமாய்த் தாமோதரனாய்க் கற்கியும் 
ஆனான்றன்னை கண்ணபுரத்தடியன் கலியனொலிசெய்த 
தேனாரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம்நில்லாவே

பெரிய திருமொழி 8.8.10 

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் மச்சாவதாரம் முதல் கற்கி அவதாரம் வரை தம்முடைய திருமேனியிலே காட்டியருள திருமங்கையாழ்வார் மிகவும் பக்திப் பரவசமானவராய் இத்தகைய பரம காருணிகனான எம்பெருமானை சேவித்தால் பக்தர்களின் அனைத்து பாவங்களும் நில்லாமல் விலகியோடி ஸ்ரீவைகுண்டப்பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கும் என அறுதியிடுகிறார்.

நவக்கிரகங்களை விஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புபடுத்தும் தசாவதார ஸ்தோத்திரம் மச்ச அவதாரத்தினை கேது கிரகத்தோடு தொடர்புபடுத்துகிறது. அதன்படி நவதிருப்பதி எனும்படியான திவ்ய தேசங்களை நவகிரகங்களோடு தொடர்புபடுத்தும் போது ராகு கேது ஸ்தலமாக திருத்தொலைவில்லி மங்களம் எனும் இரட்டைத் திருப்பதி இருப்பதால் அரவிந்த லோசனன் மச்ச அவதாரத்திற்கான திவ்ய தேச எம்பெருமானாக விளங்கியருள்கிறார். மேலும் மச்ச அவதாரத்திற்கான திவ்ய தேசமாக சாளக்கிராமத்தினை பூர்வர்கள் கொண்டாடுகின்றனர்.

பெருமாள் அனுக்கிரகிக்கும் எண்ணிறந்த திருக்கல்யாண குணங்களில் மச்ச அவதாரம் வெளிப்படுத் துவது "ஈஷணத்வம்எனப்படும் கடாக்ஷத்தால் இரட்சிப்பவன் எனும் குணமாகும். திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் எனுமிடத்தில் வேதங்களை காத்தருளியவன் எனும் படி வேதநாராயணன் எனும் திருநாமத்தோடு மச்ச அவதாரத்தில் மூலவர் எம்பெருமான் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எம்பெருமானின் திருவடிகள் மீனின் வால் போன்றே காட்சியளிப்பது வேறெங்கும் காண இயலாதது

"ஓம் சமுத்ரராஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்"
- மத்ஸ்ய காயத்ரி

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

நன்றி - சப்தகிரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக