ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 23


முதல் ஸ்கந்தம் – பதினெட்டாம் அத்தியாயம்

முனிகுமாரன் இட்ட சாபம்

பௌராணிகர் கூறுகிறார்: “கங்கைக் கரையில் பரீக்ஷித் தன் உடலை விடுத்தான். அந்தக் கதை கேட்கக் கேட்க மனதை உருக்க வல்லது. பாவத்தையெல்லாம் போக்கி, பக்தி பேரின்பத்தைக் கொடுக்கக் கூடியது. பாரம்பரியப் பெருமையும், அறிவுக்கூர்மையும் மிக்க பரீக்ஷித், கலியை அடக்கினானேயன்றிக் கொன்றொழித்து விடவில்லை. ஏனெனில், கலிக்கென்று சில பெருமைகளும் உள்ளன.

நாநுத்வேஷ்டி கலிம் ஸம்ராட்
ஸாரங்க இவ ஸாரபுக்
குசலான்யாசு ஸித்யந்தி
நேதராணி க்ருதாணி யத்

ஒருவன் எந்த ஒரு விஷயத்திலும் இருக்கக் கூடிய நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தீமைகளைத் தள்ளி விட வேண்டும். கலியுகத்திலும் சில நன்மைகள் உண்டு. கிருத யுகம், த்ரேதா யுகம் முதலானவற்றில் கடினமான முயற்சிகளால்தான் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும். ஆனால், கலியுகத்திலோ, நம் நல்ல எண்ணங்களினாலேயே புண்ணியத்தை சம்பாதித்து விடலாம். மேலும், க்ருத யுகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் செய்து செய்து சாதிக்க வேண்டியதை, கலியுகத்தில் குறுகிய காலத்திலேயே சாதித்து விடலாம். ஆகையால்தான், கலியைக் கொன்று விடாமலும், அதே சமயம் அவனைப் பரவச் செய்யாமலும் தடுத்தான் மன்னன் பரீக்ஷித். கலி காலம், கோழைகளிடத்தில்தான் தன் சூரத்தனத்தைக் காட்டும். ஆனால், எவன் ஒருவன் பக்தியோடு பகவானிடத்தில் மனதை வைத்து இருக்கிறானோ, அவனுக்கு கலி ஒரு துன்பமும் கொடுக்காது. கலி நம்மை துன்பப்படுத்தாமல் இருக்க வேண்டுமானால், பகவானுடைய கதைகளை விடாமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவனுடைய குணங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ரிஷிகளெல்லாம், பௌராணிகரிடத்தே கேட்டார்கள்: “நாங்கள் செய்யும் யாக, யக்ஞங்கள் பலத்தை கொடுக்குமோ, அல்லவோ யாம் அறியோம்! ஆனால், உம்மோடு எமக்கு ஏற்பட்ட சேர்த்தி, தாங்கள் சொல்லக் கூடிய பகவத் கதைகள் ஆகியவற்றால் எமது பாவங்கள் தொலைந்து, பகவானின் பாதக் கமலங்கள் கிடைக்கக் கூடியது உறுதி. பரீக்ஷித், பரம பவித்ரமான பாகவத புராணத்தை ஆர்வத்துடன் கேட்டானே! மோட்சத்தையே கொடுக்க வல்லதும், கண்ணனுடைய வடிவமாகவே இருப்பதும், இவ்வுலகத்திலும் கேட்க கேட்க பக்தி பேரின்பம் கொடுக்கக் கூடியதுமான அந்த பாகவத புராணத்தைத் தாங்கள் எமக்கு உரைக்க வேண்டும் என்று கோரினர்.

பௌராணிகர் கூறினார்: “தங்களைப் போன்ற சான்றோர்கள் முன்னே உயர்ந்தவன் அல்லேன் அடியேன்! ஆனால், உங்களுடைய சேர்க்கையாலும், நீங்கள் அபிமானித்தபடியாலும் நான் உயர்த்தப்பட்டேன். எம்பெருமான் அனைத்து நற்குணங்களுக்கும் கொள்கலனாய், எல்லையற்றவனாக இருக்கிறபடியால் ‘பகவான் என்று கொண்டாடப்படுகிறான். (வைகுண்டமாகிய முக்தியைக் கொடுக்கக் கூடிய முகுந்தனே, பகவான்! நாம் நா படைத்த பயனுக்காக அவன் புகழ் பாட வேண்டும். எளியவர்கள் பாடினால் கூட, அவர்களது அருகிலே இருந்து, அவர்களுடைய தோத்திரத்தை எம்பெருமான் உகந்து ஏற்றுக் கொள்கிறான். அதே சமயம் ப்ரஹ்மா போன்ற உயர்ந்தவர்கள் புகழ்ந்தாலும், அவர்கள் அளவுக்கு உயர்ந்து நின்று தோத்திரத்தை ஏற்றுக் கொள்கிறான். நம்மாழ்வார் ஒரு பாடலில் –

செலக்காண்கிற்பார் காணுமளவும்
செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி!

என்று போற்றுகிறார்.)

அடியவர்கள் தமது உள்ளத்திலும், நாக்கிலும் எத்துணை வலிமை உண்டோ, அந்த அளவுக்கு பெருமானைப் பாடுகிறார்கள். அவனும் அந்த அளவுக்கு நின்று அவற்றை மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறான். ஆனால், யாராலும் அவனை எட்டிப் பிடித்து விட முடியாது. சரி! இனி பரீக்ஷித்தின் கதையைக் கூறுகிறேன். கேளுங்கள். “அவன் அரசாண்டு வந்தபோது, ஒருநாள் தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேட்டைக்காக காட்டுக்குச் சென்றான். வெகு தூரம் அலைந்த படியால் பசியாலும், தாகத்தாலும் துவண்டான். அப்போது ச்ருங்கி என்னும் முனிவருடைய ஆச்ரமத்துக்குள் நுழைந்தான். அவரோ, ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அரசன் வந்ததைக் கவனிக்கவில்லை. அரசனுக்கோ பசி, தாகம், மயக்கம்! முனிவர் அவமானப்படுத்தி விட்டாரோ என்கிற ஐயத்தால் எழுந்த கோபத்தில், ஆச்ரமத்தை விட்டு வெளியேறும்போது, கீழே கிடந்த ஓர் உயிரற்ற பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து, ரிஷியின் கழுத்தில் இட்டுவிட்டு வெளியேறினான்.



அரசன் சென்ற பிற்பாடு, விளையாடிக் கொண்டிருந்த ரிஷியினுடைய புத்திரன் அங்கு வந்தான். தன் தந்தையின் கழுத்தில் இருந்த செத்த பாம்பைக் கண்டான். கோபப்பட்டு, ‘இப்படியா ஓர் அரசன் தன் பிரஜையை அவமதிப்பான்? கண்ணன் இவ்வுலகத்தை விட்டுப் புறப்பட்டுப் போன பிற்பாடு, அரசர்களுக்கெல்லாம் நேர்மை மாறிற்று போலும்! இப்படி தன் நெறியை மீறிய அரசன், இன்றிலிருந்து ஏழாவது நாளில் தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டு உயிர் இறப்பான் என்று முனி குமாரன் சபித்தான்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்துப் பார்த்த ரிஷி, நடந்ததை உணர்ந்து, தன் பிள்ளையும் சினத்தால் தவறு இழைத்ததைப் புரிந்து கொண்டார். ‘அரசன், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சம். அப்படி இருக்கும்போது, அவனை நீ சபிக்கலாமா? மேலும் அரசன் இல்லாவிடில் பிரஜைகள் எல்லாம் துன்பத்திற்கு உள்ளாவார்கள். கள்வர்களுடைய அராஜகம் வளர்ந்து போகும். ஆகையாலும், நாம் அரசனைச் சபிக்கக் கூடாது. மேலும் அரசன் அப்போது பசி, தாகத்தில் இருந்திருக்கிறான். உண்மை புரியாமல் நடந்து கொண்டான். முனிவர்களாய், ப்ரஹ்ம ஞானிகளாய் இருக்கும் நமக்கல்லவோ பொறுமை இருக்க வேண்டும்! பிள்ளாய்! நீ தவறாக நினைத்து விட்டாய்! இந்த செத்த பாம்பு என் கழுத்தில் இருப்பதைக் கண்டு கோபமுற்றாயே! நம் உடல் கூட ஒரு பாம்பு போன்றதுதானே! செத்த பாம்பைத் தூக்கிப் போட்டு விட்டால் விஷயம் முடிந்து போயிற்று! என்று அலட்சியமாக முடித்து விட்டார்.

மெய்ஞானிகள் எவரும் தங்களைத் துன்பப்படுத்தியவனையோ, ஏசியவனையோ, ஏமாற்றியவனையோ, ஏன், கொல்பவனைக் கூடக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். குற்றம் செய்தவன்பால் பொறுமையோடும், கருணையோடும் இருப்பார்கள். ஏனெனில், ஆத்மாவுக்கும், இன்ப துன்பங்களுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. இந்த உடலுக்குத்தான் அத்தொடர்பு என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் முனிவர் உரைப்பதற்கு முன்னமேயே, முனிகுமாரன் சாபம் இட்டு விட்டானே! அது பொய்க்குமா? இனி பரீக்ஷித்தின் நிலை என்ன? அவன் எப்படி பாகவதம் கேட்டான்? – என்று பார்ப்போம்.


முதல் ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
பரீக்ஷித் முன் எழுந்தருளிய சுகர்


பகவானின் பிரதிநிதி அரசன். அரசனாகிய பரீக்ஷித் ஏதோ பசியாலும், தாகத்தாலும் குற்றம் புரிந்திருந்தாலும், அதை மன்னித்திருக்க வேண்டியது முனிவர்களாகிய நம் கடமை...! அதை மறந்து, அவரைச் சபித்து விட்டாயே! இது கூடுமா? நீ செய்தது தவறு என்று முனிவர், தன் மகனைக் கடிந்து கொண்டார். இப்படி முனிவர் ஒருபுறம் நினைக்க, மறுபுறம் அரசனாகிய பரீக்ஷித் தன் குற்றத்தை நினைத்து வருந்தினான். ‘எப்போதும் பகவானை நினைத்துக் கொண்டிருக்கும் முனிவரிடத்தில், நான் எக்காரணம் கொண்டும் அபசாரப்பட்டிருக்கக் கூடாது. இறைவனிடத்தில் தவறு இழைத்தாலும், அதை எளிதில் போக்கிக் கொள்ளலாம். ஆனால், இறை அடியவரிடத்தில் தவறு செய்து விட்டால், அதற்குப் பிராயச்சித்தம் தேடுவது கடினம். பகவானிடத்தில் அபசாரப்பட்டால், அவனிடத்திலேயே மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஆனால், ஒரு பாகவதனிடத்தில் அபசாரப்பட்டால், அதற்கு இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்க முடியாது; மாறாக, அதே பக்தனிடத்தில்தான் மன்னிப்புக் கோர வேண்டும். அரசனும் சபிக்கப்பட்ட தன் குற்றத்துக்காக வருந்தி, தன் பாபத்தை எப்படிப் போக்கிக் கொள்ளலாம் என்று சிந்தித்தான்.

வைணவ ஆசார்யரான ஸ்ரீ வேதாந்த தேசிகன், ‘ஒருவன் தான் செய்யும் பாவங்களை எப்படி கழித்துக் கொள்ள வேண்டும் – என்று வழி கூறுகிறார். இவ்வழி நான்கு படிகளாக உள்ளன.

முதலாவது – செய்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டு, அக்குற்றத்துக்கு வருத்தப்பட வேண்டும்.

இரண்டாவது – இனி ஒருகாலும் அந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது – அக்குற்றத்துக்கு சாஸ்த்ர விதிப்படியுள்ள பிராயச்சித்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

நான்காவது – அந்தப் பிராயச்சித்தத்தைச் செய்து, பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கில் எது குறைந்தாலும், பாபம் தொலையாது. இதிலிருந்து நாம் ஒன்று புரிந்து கொள்கிறோம். அடிக்கடி அதே பாவத்தைச் செய்து விட்டு, மன்னிப்புக் கோருவது சாஸ்திரத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. மேலும், இந்த ஸம்ஸாரத்தில் நாம் வாழும்போது அறியாத் தனத்தாலே சில பாவங்கள் செய்யலாம். அதற்காக மனப்பூர்வமாக வருந்தி விட்டோமானால், மறுபடியும் அதே பாவத்தைச் செய்யாமல் இருந்தோமானால் இறைவன் மன்னிக்கிறான். பாவங்களைத் தெரிந்தே செய்து விட்டு, அதற்கு வருத்தப்படாமலும் இருந்தால், அவற்றுக்கு ஏது மன்னிப்பு? அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

பரீக்ஷித் தன் குற்றத்தை நினைத்து வருந்தி, ‘இனி நாம் ஆட்சியில் தொடருவது நியாயம் இல்லை. முனி குமாரனின் சாபத்தின்படி, நாம் பாம்பால் கடியுண்டு இறந்து போவோம். அதற்கு முன் நல்ல காரியத்தில் ஈடுபடுவோம் என்று தீர்க்கமாக ஆலோசித்து, தன் மகனான ஜனமே ஜயனுக்கு அரசுப் பட்டத்தைக் கட்டி வைத்தான். தான் கங்கைக் கரையை அடைந்தான். கங்கையில், தெற்குப் புறத்தில், கிழக்கு முகமாக தர்ப்பத்தை பரப்பி, வடக்கு முகமாக கைகூப்பி அமர்ந்து கொண்டான். அரசன் நினைக்கிறான்: ‘பகவானின் திருவடியால் தோன்றிய இந்த கங்கைக்குத்தான் எத்தனை மஹிமை! இதில் நீராடி, பகவத் ஸ்மரணையுடன் பட்டினி கிடந்து என் உடலை இதன் கரையிலேயே ‘பிராயோபவேசம் என்று சொல்லப்படும் முறையில் துறக்கப் போகிறேன்!

பரமாத்மாவான பகவானைப் பற்றி நினைத்துக் கொண்டு, கங்கைக் கரையில் உடலைத் துறந்தால், இறைவனடி சேர்வது திண்ணம். கங்கா, கோவிந்த, காயத்ரி... (பகவத்) கீதா ஆகியவை பகவத் ஸம்பந்தமுள்ள பவித்ரமான திருநாமங்கள். கங்கை என்றோ, கோவிந்தன் என்றோ, காயத்ரி என்றோ, கீதா என்றோ – இவற்றைக் கூறுவோமானால்,

சதுர்க்கார சம்யுக்தே புனர்ஜன்ம நவித்யதே

– என்று கூறுவார்கள். (‘க என்ற எழுத்தில் தொடங்கும் இந்நான்கு சொற்களை உணர்வில் கொண்டோருக்கு மறுபிறவி இல்லை.) பெரியாழ்வார் கங்கையின் பெருமையைப் பற்றி பாடும் போதும் –

சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில்
சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முகமணி கொண்டு இழிபுனல் கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே!
(பெரியாழ்வார் திருமொழி 4-7-11)

– என்று தேவப் பிரயாகையைப் பற்றிப் பாடுகிறார். நாம் பதரிகாசிரம யாத்திரை செல்லும்போது, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகியவற்றைத் தாண்டிய பின்னர் தேவப் பிரயாக் என்னும் இடம் வரும். அங்கே, அலகநந்தா, பாகீரதி – ஆகிய கங்கையின் இரண்டு கிளைகள் சங்கமிக்கின்றன. பிரயாகை என்றாலே, சங்கமம் என்று பொருள். சதுர் முகனான பிரம்மனின் கரத்தோடு தொடர்புடையவள் கங்கை. சதுர்புஜனான திருமாலின் திருவடியோடு தொடர்புடையவள் கங்கை. சங்கரனாகிய ருத்திரனாரின் திருமுடியோடு தொடர்புடையவள் கங்கை. ஆக, இந்த மும்மூர்த்திகளுடைய தொடர்புள்ள இவளுக்குத்தான் எத்தனை பெருமை!

ஆகவே, நாம் இந்த கங்கைத் தாயின் மடியிலேயே கண்ணன் கழலைணை அடைவோம்! – என்ற முடிவிற்கு வந்தான் அரசன். ‘இப்படி ஓர் உயர்ந்த லட்சியத்தோடே உயிர் துறக்கிறானாமே! அவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருக்க வேண்டும்! அவன் உயர்ந்த கதியை அடைவதை நாம் பார்க்க வேண்டும் என்று கங்கைக் கரைக்கு எல்லா முனிவர்களும் வந்து சேர்ந்தார்கள். அத்ரி, வஸிஷ்டர், ச்யவனர், பிருகு, ஆங்கிரஸ், பராசரர், விச்வாமித்திரர், அகஸ்தியர், வியாஸர், நாரதர் – இன்னும் பலரும் அங்கு வந்து கூடினார்கள். வந்த அனைவரையும் குறித்து, மன்னன் வணங்கி, தழுதழுத்த குரலோடு பேசுகிறான்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை