செவ்வாய், 1 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 24

முதல் ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம் (தொடர்ச்சி)

பரீக்ஷித் முன் எழுந்தருளிய சுகர்

‘இன்று புனிதமான நன்னாள். என் வாழ்க்கையில் இதற்கு முன் கிட்டாத பாக்கியத்தை இன்று அடைந்தேன். நீங்கள் அனைவரும் எந்த ஒரு பயனுக்காகவும், எந்த இடத்திற்கும் செல்பவர்கள் அல்லர். அப்படிப்பட்ட உங்கள் அனைவரையும் ஒருசேர இங்கு சேவிக்கும் பாக்கியத்தை இன்று பெற்றேன். இது சுலபத்தில் கிட்டுமா? இப்போது உங்களது திருவடி பட்டபடியால் இந்த இடமே புனிதமாயிற்று. என் பாபங்களும் நீங்கின’ என்றான் பரீக்ஷித். 

மஹான்களுடைய திருவடி பட்டால், எந்தக் குறைதான் நீங்காது? இங்கு ஒரு கருத்து உற்று நோக்கத்தக்கது. நம் வீட்டிலும் பகவான் உள்ளான். உள்ளத்திலும் உள்ளான். அங்கேயே இறைவனைத் தொழுது கொள்ளலாம். ஆனால், எதற்காக கோவில்களுக்குப் போகிறோம்? அதுவும், புராதனக் கோவில்கள், பாடல் பெற்ற கோவில்கள் – என்று இவற்றை எதற்கு தேடித் தேடிப் போகிறோம்? இதன் பின்னணியில் முக்கியமான கருத்து ஒன்று உண்டு. பல ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் கோவிலுக்கு எத்தனை மஹான்கள் எழுந்தருளி இருப்பார்கள்! அவர்களுடைய திருவடிகள் எல்லாம் பதிந்திருக்கும் இடமன்றோ அது! அவர்களாலே இந்தப் பெருமான் எத்தனை பொங்கும் பரிவோடு வணங்கப்பட்டிருப்பார்! அவர்கள் பக்தியோடு தங்கள் தாமரைக் கண்களால் பகவானைப் பார்த்திருப்பார்கள் அல்லவா? மேலும் எத்தனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இந்தக் கோவிலுக்கு வந்திருப்பார்கள்! இவர்கள் அனைவருடைய பெருமை, பாததூளி, அருள் ஆகிய அனைத்தும் புராதனக் கோவில்களில் இருக்குமே! நாம் அந்தப் பெருமானை தரிசிக்கச் செல்லும்போது, அவர்களது மன உருக்கத்தை நாமும் பெறலாமே! இது தனிமையில் இருக்கும் நம் வீட்டில் கிட்டுமா? அதற்காகத்தான் கோவில்களைத் தேடித் தேடிப் போகிறோம். இப்போது பரீக்ஷித்தும் தன்னை மஹான்கள் கண் குளிர நோக்கும் பாக்கியத்தைப் பெற்றான். 

மேலும், பரீக்ஷித் நினைக்கிறான்: ‘அரசாள்வதிலும், ஸம்ஸாரத்தில் சுகபோகங்களை அனுபவிப்பதிலும் இத்தனை நாட்களைக் கழித்து விட்டேன். கண்ணன்தான் என் பேரில் எத்தனை அருள் கொண்டவன்! இந்த இல்லற சுகத்தில் விரக்தி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, முனி குமாரனை வைத்துச் சாபம் இட்டார் போலும்! இனியாவது, நான் புரிந்து கொண்டு, உடலைத் துறந்து, அவன் திருவடிகளை அடைய வேண்டும்’. 

இந்த முடிவோடு கைகளை கூப்பிக் கொண்டு மன்னன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை தியானிக்க ஆரம்பித்தான். அப்போது ஆகாயத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிந்தார்கள். இவன் உயர்ந்த கதியை அடைவதைப் பார்க்க வேண்டும் என்று ரிஷிகள் ஆசை கொண்டார்கள். அந்த சமயத்தில் மன்னனுக்கோ, பகவானுடைய கதைகளைக் கேட்க வேண்டும் – என்ற ஆசை ஏற்பட்டது. 

அதனால், ரிஷிகளைப் பார்த்து வேண்டுகிறான். “ப்ரஹ்மாவினுடைய ஸத்ய லோகத்தில் வேதங்கள் எல்லாம் உருவத்தோடே எழுந்தருளியிருப்பதுண்டு என்பர். அதே போல, வேத வித்துக்களான நீங்கள் அந்த வேதங்களே இவ்வுலகில் உருவெடுத்தாற் போல் அடியேன் முன்னே இருக்கிறீர்கள். மரிக்கும் தருவாயில் இருக்கும் ஒருத்தன் என்ன செய்ய வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? – என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவற்றை நீங்கள் என்பால் அன்பு கொண்டு கூற வேண்டும்!” என வேண்டினான். மன்னனின் வேண்டுதலைக் கேட்டு ரிஷிகள் பேசத் தொடங்கும்போதே, அங்கே மின்னல் வெட்டினாற் போல சுகாசாரியர் தோன்றினார். 

பதினாறு வயது நிரம்பியவர் அவர்! எங்கும் சுற்றித் திரிந்து பகவத் கதையை மட்டுமே பேசுபவர். மற்ற எதிலும் விருப்பம் இல்லாதவர். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவர். அவதூதக் கோலத்துடனும், அழகிய திருக்கண்கள், பரந்து விரிந்திருக்கும் தோள்கள், சுருண்டு இருக்கிற முடி, நீண்டு விளங்கும் திருக்கைகள், அழகான திருமுக மண்டலம், நீண்ட கழுத்து – இவை அனைத்தோடும் கூட சுகாசாரியர் அங்கு எழுந்தருளினார். அவரைக் கண்ட மாத்திரத்தில் அனைவரும் வணங்கினார்கள். சுகர் நடுவிலே வீற்றிருக்க, அவரைச் சுற்றி ரிஷிகள் எல்லாம் அமர்ந்திருந்தது, ஆகாயத்தில் நடுவில் சந்திரன், அதனைச் சுற்றி சுக்கிரன் முதலான கிரகங்கள், பலப் பல நக்ஷத்திரங்கள் விளங்குவது போல இருந்ததாம் அக்காட்சி! எப்போதும் இறைவனை சிந்தித்துக் கொண்டேயிருப்பதால் ஒளி படைத்த முகத்தோடும், தழுதழுத்த நாக்கோடும், கண்ணீர் மிளிரும் கண்களோடும், அருட்பார்வையோடும் சுகாசாரியர் விளங்குகிறார்.

பரீக்ஷித் அவரை வணங்கி, கைகளைக் கூப்பிக் கொண்டு கூறலுற்றான்: “சுகாசாரியரே! இன்று அடியேன் புனிதத் தன்மையை அடைந்தேன். எளியேன் செய்த பாவங்கள் அனைத்தும் விலகுவதை உணர்கிறேன். பாகவதர்களாகிய உங்களுடைய தொடர்பாலே எல்லா நன்மைகளும் ஏற்படும். தீமைகள் எல்லாம் விலகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அருள் இருக்கிறபடியால்தான் இன்று அடியேன் உம்மை தரிசிக்கப் பெற்றேன். உம்முடைய பாதம் இங்கு பட்டதே அவனது திருவுள்ளத்தால்தான்! பகவானைக் கண்டால் அசுரர்கள் எப்படி பயந்து ஓடுவார்களோ, அதே போல், உம்மைக் கண்டவுடன் என் பாவங்களும் விலகி ஓடின. என்னுடைய பாட்டனார்கள் மஹாபாரதப் பெரும் போரில் ஜெயித்ததும், இன்று நீங்கள் என் இல்லத்தை நோக்கி வந்ததும் அனைத்தும் கண்ணனுடைய கருணையால்தான்!” என்றான். 

பகவான்தானே நமக்கு ஆச்சார்யனை பெற்றுக் கொடுக்கிறார்! ஆச்சார்யனைக் கொடுப்பவன் பகவான். பகவானைக் காட்டிக் கொடுப்பவன் ஆச்சார்யன். இருவரில் யார் உயர்ந்தவர்கள்? பகவான் வெள்ளியைப் போலே. ஆச்சாரியன் தங்கத்தைப் போலே. வெள்ளியைக் காட்டிலும் தங்கத்துக்குத்தானே மதிப்பு அதிகம்! மற்றொரு கோணத்தில் இருந்து நோக்கினால், வெள்ளியை ஒருத்தன் நமக்கு தானமாகக் கொடுக்கிறான். தங்கத்தை மற்றொருவன் தானமாகக் கொடுக்கிறான். இந்த இருவரில் யார் உயர்ந்தவர்கள்? தங்கத்தை தானமாகக் கொடுத்தவன்தானே உயர்ந்தவன்? வெள்ளி, பகவான். தங்கம், ஆச்சார்யன். வெள்ளியான பகவானை, ஆச்சார்யன் நமக்குக் கொடுக்கிறார். தங்கமான ஆச்சார்யனை பெருமான் நமக்குக் கொடுக்கிறார். இப்படிப் பார்த்தால் யாருக்கு மதிப்பு அதிகம்? ஆச்சார்யனையே பெற்றுக் கொடுத்த பகவானுக்குத்தானே! 

ஆக, ஒரு கோணத்தில் நம் குருவுக்கு ஏற்றம். மற்றொரு கோணத்தில் பகவானுக்கு ஏற்றம். இப்படியாக ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் காக்கிறார்கள். ஆழ்வார் இவ்விடத்தில் ஒரு கருத்தைக் கூறுகிறார். ‘ஒரு தாமரை மலர வேண்டுமானால், அது எப்போதும் ஆகாயத்தில் வெகு தூரத்தில் இருக்கும் சூரியனைத்தான் எதிர்பார்க்கும். நாம் ஒரு சட்டியில் அக்னியைக் கொண்டு போய் அருகில் வைத்தால், அதன் ஒளியாலோ, வெப்பத்தாலோ தாமரை மலராது, நேர்மாறாக உலர்ந்துதான் போகும். 

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்!’
(பெருமாள் திருமொழி : 5-6) 

– என்கிறார் குலசேகர ஆழ்வார்! அதே சமயம் இந்தத் தாமரை மலரை குளத்து நீரிலிருந்து பிரித்து, நிலத்தில் இட்டு, சூரியனின் கதிர்கள் படும்படி வைத்தாலும், அந்த சூரியன், தாமரையை மலர்த்த மாட்டார், உலர்த்தி விடுவார். ஆக, இங்கே இரண்டு விதிகள் புலப்படுகின்றன. ஒன்று – எங்கோ இருக்கும் சூரியன்தான் தாமரையை மலர்த்த வேண்டும். மற்றொன்று - அந்தத் தாமரைக்குத் தண்ணீர் தொடர்பு இருந்தால்தான் சூரியன் மலர்த்துவார். இந்த இரண்டு விதிகளில் எது இல்லையானாலும் தாமரை மலராது. சருகாகக் கருகிப் போகும். 

இந்தக் கருத்து என்ன தெரிவிக்கிறது? தாமரை மலருவது என்பது, ஒரு ஜீவாத்மாவின் ஞானம் மலருவது போன்றது. ஒரு ஜீவனின் ஞானம் மலர, எங்கோ இருக்கும் பெருமானின் அருள்தான் உதவுகிறது. ஆனால், ஜீவாத்மா ஆச்சார்ய சம்பந்தம். அதாவது, குருவுடன் தொடர்பு என்கிற தண்ணீரில் இருக்க வேண்டும். தண்ணீரின் தொடர்பு இருந்தால்தானே தாமரையை சூரியன் மலர்த்துவார்! ஒரு ஜீவனுக்கு ஆச்சார்யனுடைய உபதேசத் தொடர்பு, அவருக்கு இவனுடைய தொண்டு – ஆகியன இருந்தால்தான் பெருமான், இவன் அறிவை மலர்த்துவார். எவ்வளவு அழகான கருத்து இது! 

“ஆகவே, சுகாசாரியரே! தாங்கள் இன்று எனக்கு அருளப் போவது கண்ணபிரானுடைய திவ்ய ஸங்கல்பத்தாலே! எனக்கோர் ஆசை உண்டு. நானோ ஏழு நாட்களில் மரிக்கப் போகிறேன். மரணமடைய வேண்டியவன் எதைக் கேட்க வேண்டும்? எதை ஜபிக்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்? எதைத் தியானிக்க வேண்டும்? எப்படி உபாஸனம் செய்ய வேண்டும்? எதை எதைக் கைவிட வேண்டும்? – என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆவலோடு உள்ளேன்.

யச்ச்ரோதவ்யமதோ ஜப்யம் 
யத்கர்தவ்யம் ந்ருபி: பிரபோ
ஸ்மர்தவ்யம் பஜநீயம் வா 
ப்ரூஹி யத் வா விபர்யயம்‘
(ஸ்ரீ பாக.1-19-38) 

– என்றான் பரீக்ஷித்.

இப்படி கேட்கப்பட்ட சுகாசாரியர் புன்சிரிப்பு மாறாமல் இருந்தார். பரீக்ஷித் வேண்டினான். “தேவரீர் எதையும் எதிர்பாராதவர். ஒரு வீட்டில் பிட்சை எடுக்க நின்றாலும் கூட, ஒரு மாட்டின் மடியில் ஒரு காம்பிலிருந்து ஒருமுறை பால் கறக்க எவ்வளவு வினாடிகள் எடுக்குமோ, அவ்வளவு நேரம்தான் வீட்டு வாசலில் காத்திருப்பீர்! அதற்குள் பிட்சை இடுபவர்கள் இட வேண்டும். ஒருவேளை அவர்கள் நேரம் தாழ்த்தினால், இன்று உணவே வேண்டாம் என்று பட்டினி கிடந்து விடுவீர்! இப்படி எதையும் எதிர்பார்க்காத தாங்கள், இங்கு நிலையாகத் தங்கியிருந்து, அடியேனது உய்வுக்கான அனைத்தையும் உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, மேகம் இடித்தாற்போலே உயர்ந்த குரலிலே சுகாசாரியர் பேசத் தொடங்குகிறார். இங்கிருந்து நாம் இப்போது, இரண்டாவது ஸ்கந்தத்தை அடைகிறோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக