செவ்வாய், 1 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 25

இரண்டாவது ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்
பகவானை தியானம் செய்யும் முறை

ஸ்ரீ சுகாசாரியர் கூறுகிறார்: “பரீக்ஷித் மன்னா! நல்ல கேள்வி கேட்டாய். மரிக்கும் தருவாயில் இருப்பவன் எதைத் தெரிந்து கொண்டு, எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீ கேட்டதால், உனக்குக் கிடைக்கும் ஞானம் பல பேருக்கு நன்மை பயக்கப் போகிறது. மனிதர்கள் தங்கள் பிறவியின் பயனைத் தெரிந்து கொள்ளாமலேயே, நாட்களைப் பழுதே போக்குகிறார்கள். தூக்கத்தில் இரவுப் பொழுதையும், பதட்டத்தோடே பணம் சம்பாதிப்பதில் பகல் பொழுதையும், குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதில் அனைத்துப் பொழுதையும் மக்கள் கழிக்கிறார்கள்” என்றார் ஸ்ரீசுகர். 

வாள்களாகி நாள்கள் செல்ல 
நோய்மை குன்றி மூப்பெய்தி 
மாளுநாளதாதலால் வணங்கி 
வாழ்த்து என் நெஞ்சமே! 
(திருச்சந்த விருத்தம் - 112) 

– என்று திருமழிசையாழ்வார் நாள்கள் நாமறியாமலேயே அறுபட்டுப் போவதை ஓர் எடுத்துக்காட்டுடன் அறிவுறுத்துகிறார். நாம் காட்டுப் பக்கம் சென்றால், பெரிய மரங்கள் அறுக்கப்படும். பெரிய ரம்பத்தோடே ஓர் ஆள் இப்புறத்திலும், மற்றோர் ஆள் அப்புறத்திலும் நின்று அறுத்துக் கொண்டிருப்பர். இடதுபுறமும், வலதுபுறமும் வாள் போய் வருவதை நாம் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், சிறிது நேரத்தில் மரம் அறுபட்டுப் போவதை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்? அதே போல், காலையில் சூரியன் உதிக்கிறான். மாலையில் அஸ்தமிக்கிறான். சூரியன் உதிக்கும்போது, வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கப் போகிறோம் என்று மக்கள் விரைந்தோடுகிறார்கள். சூரியன் அஸ்தமித்தவுடன் சம்பாதித்ததைக் கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், இதற்கிடையில் ‘ப்ரஹ்ம ஞானத்தைப் பெறாமல் ஒருநாள் வீணாகக் கழிந்து விட்டதே!’ என்று எவரும் துன்பப்படுவது இல்லை. காலம் பொன் போன்றது. எதைத் தொலைத்தாலும் மீட்கலாம். காலத்தைத் தொலைத்தால் மீட்க இயலுமா? ஸீதை கர்ப்பம் தரித்திருந்தபோது, ராமர் அவள் அருகில் நின்று கொண்டு ஆசையோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 

‘ஸீதே! நான் தொலைத்த அனைத்தையும் மீட்டு விட்டேன். இழந்த அரசையும், உன்னையும் திரும்பப் பெற்றேன். ஆனால் எனக்கு ஒரு வருத்தம். உன்னோடு கூடி இராமல் பத்து மாதங்கள் பிரிந்திருந்தேனே! அந்தப் பிரிவின்போது, வீணான ஒரு நிமிடத்தைக் கூட என்னால் மீட்பதற்கு இயலாதே!’ என வருந்தினார். என்ன ஆச்சரியம்! பரம் பொருளான ராமரே கழிந்த காலத்தை மீட்க இயலாது என்று கூறினால், நம்மால் இயலுமா? காலத்தை எவ்வளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்!

பழுதே பலபகலும் போயின
என்று அஞ்சி அழுதேன். 
(முதல் திருவந்தாதி - 16) 

– என பொய்கையாழ்வார் நமக்காகவே புலம்புகிறார். கால தத்துவம் எப்படிப் பறக்கிறது என்று வெளித் தெரியாமலேயே செலவழிந்து போகும். இப்படி, ஒரு நாளா, இரண்டு நாளா கழித்திருக்கிறோம்? இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் ப்ரஹ்ம ஞானத்தைப் பெறுவதில் முயற்சியோடு இருக்க வேண்டும் – என்பதே! சுகாசாரியர் பரீக்ஷித்துக்கு மேலும் உபதேசிக்கத் தொடங்குகிறார்:

“கட்வாங்கன் என்னும் ஓர் அரசன் இருந்தான். பரீக்ஷித்தே! உனக்காவது ஏழு நாட்கள் வாழ்க்கை உள்ளது. ஆனால், அந்த அரசனின் நிலையைப் பார்! அந்த அரசன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு உதவினான். வெற்றி பெற்றுக் கொடுத்தான். பதிலுக்கு தேவர்கள் ‘என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றனர். கட்வாங்கன், ‘என்னுடைய ஆயுட்காலம் எவ்வளவு?’ என்று கேட்டான். அதிர்ச்சி தரும் பதிலைப் பெற்றான். ‘இன்னும் ஒரு முகூர்த்தம்தான் நீ வாழப் போகிறாய்?’ என்றனர் தேவர்கள். 

இதைக் கேட்ட அவன், மனம் தளராமல், உடனடியாக பூலோகத்துக்கு வந்து, செய்ய வேண்டிய அனைத்தையும் செவ்வனே செய்து, பரம்பொருளை தியானித்துக் கொண்டே உயர்ந்த கதியை அடைந்தான். ஆக, முயற்சியும் மனமும் இருக்குமானால், ஒரு மணிநேரத்தில் கூட நாம் செய்ய வேண்டியவைகள் அனைத்தையும் செய்து விடலாம். அது இல்லாவிடில், எத்தனை ஆண்டு காலமானாலும் வீணாகவே கழிப்போம். ஒருவன் முக்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவன் புலன்களை அடக்கி, மனத்தை பரம்பொருள் மீது வைத்து ஒருமுகப்படுத்தி, ‘ஓம்’ என்னும் பிரணவத்தை முறைப்படி ஸ்வரத்துடன் தியானிக்க வேண்டும். மூன்று எழுத்துக்களைக் கொண்டது பிரணவம். ‘அ’ என்னும் எழுத்து திருமாலையும், ‘ம’ என்னும் எழுத்து ஜீவனையும் குறிக்கும். திருமாலுக்கு, ஜீவாத்மா ஆட்பட்டவன். ‘அவனுக்கு இவன் அடிமை’ என்றே பிரணவத்துக்குப் பொருள். மூன்று மாத்திரைகளுடன் கூடிய இப்பிரணவத்தை உச்சரித்துக் கொண்டு தனிமையான, சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு, மனதை திருமாலுடைய இனிமையான திருமேனியில் செலுத்த வேண்டும். அவனுடைய திருமேனியின் ஒவ்வொரு அவயவமாக மெதுவே உள்வாங்கி நினைக்க வேண்டும். அவனுடைய திருமேனியை நினைக்க நினைக்க நம் ரஜோ குணமும், தமோ குணமும் அகன்று விடும். ஸத்வ குணம் வளரும். அதோடு தியானமும் வளரும்” என்றார் ஸ்ரீ சுகர். 

அப்போது பரீக்ஷித் கேட்டான்: “நாம் தியானம் செய்ய வேண்டியது எப்படி? அதன் வழிமுறைகளைக் கூற வேண்டும்” என்று வேண்டினான் பரீக்ஷித். சுகாசாரியர் பதில் கூறுகிறார்: “உலகத்தையே தன் திருமேனியாகக் கொண்ட பெருமானை தியானிக்க வேண்டும். இதற்கு ‘விராட் சொரூப தியானம்’ என்று பெயர். அண்ட கடாகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்ட எம்பெருமான் ‘வைராஜன்’ என்று வழங்கப்படுகிறான். 

ஜிதாஸநோ: ஜிதச்வாஸோ ஜிதஸங்கோ ஜிதேந்த்ரிய:
ஸ்தூலே பகவதோ ரூபே மன: ஸந்தாரயேத் தியா
(ஸ்ரீபாகவதம் : 2-1-23) 

சரியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மூச்சை அடக்கி, பற்றுதல்களை ஒழித்து, புலன்களை அடக்கி, நம் மனத்தை பெருமானுடைய திருவுருவத்தில் செலுத்த வேண்டும். நாம் கண்ணால் காணும் இத்தனை பொருட்களுமே, அவனுடைய திருவுருவமாகவே உள்ளன. ஈரேழு பதினான்கு லோகங்கள் கொண்டது ஒரு அண்டம். அதில் கீழ் லோகத்திலிருந்து தொடங்கி, இறுதியான மேல் லோகமான பிரஹ்மாவின் ஸத்ய லோகம் வரை பெருமானுடைய திருமேனியின் ஓரோர் அவயவமாகத் தியானிக்க வேண்டும். வேதனம், தியானம், மனனம், நிதித்யாஸனம் – என்று தியானத்தின் பல நிலைகள். முதலில் அவனைப் பற்றி அறிய வேண்டும். பின்னர் சிந்திக்க வேண்டும். அடுத்து, இடைவிடாது அதில் ஒன்ற வேண்டும். இறுதியாய், இந்தச் சிந்தனையில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும். இதுவே, உபாஸனம் என்றும், தியானம் என்றும் சொல்லப்படுகிறது. 

“பெருமானுடைய திருமேனியை இப்படி நாம் தியானிக்க வேண்டும். அதாவது, பாதாளத்தைத் திருவடியாகவும், ரஸாதல லோகத்தை அவன் புறங்கால்களாகவும், மஹாதலத்தை பாதங்களின் இரு பக்கங்களாகவும், தலா தலத்தை கணைக் கால்களாகவும், ஸுதலத்தை இரு முழங்கால்களாகவும், விதலம், அதலம் ஆகிய இவற்றை இரண்டு தொடைகளாகவும், பூதலத்தை இடையாகவும், ஆகாயத்தை நாபியாகவும், சொர்க்கத்தை மார்பாகவும், மஹர் லோகத்தைக் கழுத்தாகவும், ஜன லோகத்தை முகமாகவும், தபோ லோகத்தை நெற்றியாகவும், ஸத்ய லோகத்தைத் தலையாகவும் தியானிக்க வேண்டும். 

இந்திரன் முதலான தேவர்களே எம்பெருமானுக்குக் கைகள். திக்குகளே அவனுடைய காதுகள். அச்வினி தேவர்கள் அவனுடைய இரு நாசித் துவாரங்கள். சூரியனே கண் என்னும் புலன். இரவும் பகலும் இரண்டு இமைகள். வேதங்களே அவனுக்கு சிரஸாக இருக்கின்றன. யமனே கோரைப் பற்கள். பற்றுடமையே பற்கள். மக்களை மயங்கச் செய்யும் மாயையே அவருடைய புன்சிரிப்பு. காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் பகவான் உடுத்தும் ஆடைகளாக இருக்கின்றன. சந்திரனே அவருக்கு மனது. இப்படி நாம் அறிந்திருக்கும் அனைத்தையுமே பெருமானுடைய திருமேனியாக தியானித்தால், நாம் யோகியாகி மோட்சம் அடைவது திண்ணம். ஸத்வ குணம் வளர்ந்து முக்தி பெற விரும்புபவன் எவன்தான் பெருமானின் திருமேனியை தியானிக்க மாட்டான்?” என்றுரைத்தவர் மேலும் தொடர்கிறார்: 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக