ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 26

இரண்டாவது ஸ்கந்தம் – இரண்டாம் அத்தியாயம் 

பற்றற்ற மனத்துடன் பகவானிடம் அன்பு வைத்தல் 

“நான்முகக் கடவுளான பிரஹ்மா மேலே சொன்னபடி பகவானை தியானித்தே, ‘உலகத்தைப் படைக்கக் கூடிய சிருஷ்டி சக்தியைப் பெற்றார்” என்றார் ஸ்ரீ சுகர். 

ஒரு மனிதன் எப்போது தியானத்துக்கு வருவான்? ஓடி ஆடி பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை, வயிற்றுப் பசிக்குப் பாடுபட வேண்டிய தேவை – இவை இருந்தால், யாரும் பகவானைப் பற்றி சிந்திக்கவோ, தியானத்துக்கோ வர மாட்டார்கள். அவர்களது வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண்டோமானால் பலரும் வரலாம். அதற்காகத்தான் ஆங்காங்கு அன்னதானக் கூடங்களும், கோவில்களில் அன்னதானங்களும் முற்காலங்களில் ஏற்படுத்தப்பட்டன. மேன்மேலும் எவ்வளவுதான் தனம் சம்பாதிப்போம்? ப்ரஹ்ம ஞானத்தைச் சம்பாதித்தால் மகிழ்ச்சி வளரும். பணத்தை மட்டுமே சம்பாதிப்பதில் குறியாய் இருந்தால், துன்பமும், பொறாமையும்தான் வளரும். 

சுகர் கூறுகிறார் : “விசாலமான பூமி இருக்கும்போது, ஏன் கட்டிலைத் தேடிப் போக வேண்டும்? குவிந்திருக்கும் இரண்டு கைகள் உண்ண உதவும்போது, எதற்குப் பாத்திரத்தைத் தேட வேண்டும்? எங்கும் நதி – குளம் – கிணறு போன்ற நீர் நிலைகள் இருக்கும்போது, வேறு தண்ணீர் எதற்கு? பிறர்க்கென்றே வாழும் மரங்கள், தமது இனிய கனிகளைக் கொடுக்கும்போது, செயற்கை உணவு எதற்கு? பஞ்சிழைகளும், மரப்பட்டைகளும் ஆடைகளாக இருக்கும்போது, பட்டாடை எதற்கு? ஆங்காங்கு தங்குமிடமாக குகைகள் இருக்கும்போது, மாடி வீடு எதற்கு? இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோமானால் நம் தேஹமும், மனமும் இறையுணர்வில் ஒன்றி, ஆரோக்கியத்தோடே இருக்கும்.” இப்படியாய் தியானத்தைப் பற்றியும், அதற்குத் தேவையான பற்றற்ற தன்மையைப் பற்றியும் சுகர் கூறினார். 

பரீக்ஷித்தும் விராட் சொரூபத்தை தியானிக்கப் பார்த்தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. தியானம் இரு வகைப்படும். பிரபஞ்சத்தையே தன் திருமேனியாகக் கொண்ட பெருமானை தியானித்தல் ஒரு வகை. அது மனமும், புலன்களும் முழுவதும் அடங்கியவர்களாலேயே முடியும். மற்றொரு வகையில் – சங்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டு, அழகிய கிரீடத்துடனும் தாமரைக் கண்களோடும் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்ட, பெருமானுடைய இனிய திருமேனியை தியானித்தல். இது நம் போன்றோர்களுக்கு இயலும். திருமங்கையாழ்வார் கூறுகிறார்:

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்துமுன் 
இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலனடக்கி அன்பு அவர்
கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் 
சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
மெய்மையைக் காண்கிற்பாரே!
(திருக்குறுந்தாண்டகம் – 18) 

இங்கு, தியானம் செய்ய வேண்டிய முறையை ஆழ்வார் விளக்குகிறார். மூச்சை அடக்கி, உரிய ஆசனத்தில் அமர்ந்து, புருவங்களுக்கு நடுவிலே கண்ணை நிறுத்தி, ஐம்புலன்களையும் அடக்கி பெருமானிடத்தில் அன்பு செலுத்தத் தொடங்க வேண்டும். விளக்குப் போன்று சுடரொளி வீசும் பகவானை மனக் கண்ணால் காண வேண்டும். ஆனால், அது எளிது அல்ல. அதைவிட, அழகிய திருமேனியோடே, நாம் அறிந்த நான்கு திருக்கைகளோடே நம் உள்ளத்துக்குள்ளும், எத்தனையோ கோயில்களிலும் பெருமான் காட்சி கொடுக்கிறார் அல்லவா! அவரை தியானிப்பது மிக எளிது. ஆகவே, சுகாசாரியர், பரீக்ஷித்துக்கு இரண்டாவது முறையான தியானத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

பெருமானுடைய ஓரோர் அங்கமாக தியானிக்க வேண்டும். நம் உள்ளத்தில் பக்தி ஏற்பட்டு கனியும் வரை, நிதானமாக அந்தந்த அவயவத்தை தியானிக்க வேண்டும். திருப்பாணாழ்வார், திருவரங்கம் பெரிய பெருமாள் திருமேனியை ஒவ்வொரு பாட்டினாலும் கண்டு மனம் ஒன்றினார். 

காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி 
தேட்டரும் உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து 
பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே! 

– என்பது அவரைப் போற்றும் பாடல். ஒவ்வோர் அவயவமாகப் பாடிக் கொண்டே வந்தவர்! ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று கூறி அவன் திருவடியில் கலந்தார். பெருமானுடைய திருமேனியின் தியானம், தாழ்ந்த உள்ளத்தில் கூட பக்தியை உண்டாக்கியே தீரும். சரீரத்தை விட வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவன் பிரணாயாமம் செய்து மனதையும், மற்ற புலன்களையும் பெருமானிடத்திலேயே செலுத்த வேண்டும். இவ்வுலகிலிருந்து உடலை விடுத்துப் புறப்படுபவன், இரண்டு வழிகளில் பயணித்து இரண்டு வெவ்வேறு இடங்களை அடைகிறான். 

ஒரு மார்க்கத்துக்கு ‘தூமாதி மார்க்கம்’ என்று பெயர். அதன் மூலம் தன் கர்ம வினைக்கேற்ற உலகங்களை அடைகிறான். ஆனால், புண்ணிய பாபங்கள் தீர்ந்த பிற்பாடு மீண்டும் பூலோகத்தில் வந்து பிறப்பான். மற்றொரு மார்க்கத்துக்கு ‘அர்ச்சிராதி மார்க்கம்’ என்று பெயர். இடைவிடாமல் பகவானை உபாஸனம் செய்து, பாவ புண்ணியங்கள் அனைத்தையும் துறந்து அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறான். அவன் பிறவிச் சுழலுக்குள் திரும்ப வருவதே இல்லை. 

ஏதாம் கதிம் பாகவதீம் கதோ ய:
ஸவை புநர் நேஹ விஷஜ்ஜதே (அ)ங்க
(ஸ்ரீ பாகவதம் : 2-2-31) 

– என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ சுகர். சாந்தோக்ய உபநிஷத், 

‘ந ச புநராவர்த்ததே, 
ந ச புநராவர்த்ததே’

– (மீண்டும் பிறவி அடைவதில்லை, மீண்டும் பிறவி அடைவதில்லை) என்று ஒன்றுக்கு இருமுறை சபதமிட்டுச் சொல்லியபடி, வைகுண்டத்தை அடைந்தவன் திரும்ப வருவதே இல்லை. உபாஸனம், பக்தி, தியானம் – ஆகிய இச்சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைத்தான் குறிக்கும். இது ஒன்றுதான், பெருமானை அடைவதற்கு ஒரே வழி. சாஸ்திரங்கள், 

ந அன்ய பந்தா: அயனாய வித்யதே 

பெருமானை அடைவதற்கு பக்தியைத் தவிர, வேறு வழி கிடையாது என்று தெளிவுபடுத்துகின்றன. ஆகவே, அவனைப் பற்றி நிறையக் கேட்டு, அவன் புகழையே கீர்த்தனம் செய்து, அவனது திவ்ய திருமேனியையே இடைவிடாமல் நினைத்தால் மனிதன் மேம்படுகிறான். எவ்வளவு உண்மை! 

நாம் எதை எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டு, மனதை அழுக்காக்கிக் கொள்வதை விட, புனிதமான பெருமானுடைய திருமேனியை நினைத்து, மனதை மாசற்றதாக ஆக்கிக் கொள்ளலாமே! மாசற்ற மனதுதான் எவ்வளவு ஆனந்தப்படுகிறது! அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். தங்கள் காதுகளாகிற பாத்திரத்தால் வாஸுதேவனுடைய கதையாகிற அமுதத்தை யாரெல்லாம் பருகுகிறார்களோ, அவர்களால் உலகமே வாழ்ந்து போகிறது. இறுதியில், அவர்களும் பெருமானுடைய திருவடிகளை அடைகிறார்கள். இப்படியாய், தியானத்துடைய இரண்டு முறைகளை சுகாசாரியர் பரீக்ஷித்துக்கு விளக்கினார். இதில் எளிதான இரண்டாவது முறையை நாம் ஒவ்வொருவரும் பின் பற்றிப் பார்க்கலாம் அல்லவா! 

(தொடரும்)

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை